கருணை மிளிரட்டும் !!!

 


பிரம்மிக்கவைக்கும்  இறைவனின்  பிரபஞ்சம் .ஒவ்வொரு  படைப்பும்  அற்புதம் அதிஅற்புதம் .இந்த ஸ்ருஷ்டியில்  எதுவும்  தேவையில்லாமல்  படைக்கப்படவில்லை.இறையே  நாம். நம் போன்ற  உள்ளங்கள்.ஒவ்வொரு உயிரையும்  மதிக்க வேண்டியது  நம்  தலைசிறந்த  பண்பாகிறது .இறையின்  ஒவ்வொரு  அசைவும்  அதன் நுணுக்கமும்  ஆழ்ந்து  சிந்திக்க  சிந்திக்க  மனதை  எங்கோ  கொண்டு செல்கிறது .ஒவ்வொரு  உயிரும்  ஒவ்வொரு  பொருளும்  அசைவு  எனும்  ரகசிய  நுணுக்கம்  கொண்டு  ஒன்றோடு  ஒன்று  பேசிக்கொள்கிறது .இயற்கையில் நிகழும்  இந்த  நுணுக்கத்தை  அறிந்து கொள்பவன் மாபெரும்  மனிதனாகிறான்  மகான் என்று அழைக்கப்படுகிறான்.மரம்  பேசுகிறது செடிகள்  பேசுகிறது கொடிகள்பேசுகிறது  எவ்வாறு  ? அசைவு எனும்  நுட்பம்  அதில் ஒளிந்திருக்கின்றது .இந்த  அசைவினை  ஆழ்ந்து  கவனிக்க  அதன்  நுணுக்கம்  மேலும்  மேலும்  புலப்படுகின்றது .பறவைகள் ,நாய்  போன்றவை   எங்கோ நிகழும்  இயற்கையின்  அழிவினை,இயற்கை  சீற்றங்களை , பிரளயங்களை  முன்கூட்டியே  அறிந்து கொண்டு  ஓரிடம்  விட்டு  வேறிடம்  செல்கிறது  எவ்வாறு   ? அசைவின்  அதிர்வலைகள்  கொண்டு.இந்த  பிரபஞ்சத்தின் முதல்  அணு  அது அசைந்து  அசைந்து  ,ஒன்றோடு  ஒன்று  சேர்ந்து  ,ஒன்று மற்றொண்டாய்  மாறி  மாறி ,இந்த  பிரபஞ்சத்தை  உருவாக்கி கொண்டேயிருக்கின்றது . 

 .
"இறைவெளியே தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல்
இதன்திணிவு மடிப்புவிழச் சுழலும்நுண் விண்ணாம்.
நிறைவெளியில் விண்சுழல நெருக்குகின்ற உரசல்,
நிலைவெளியில் எழுப்புகின்ற நேரலைகள் காந்தமாம்.
மறைபொருளாம் காந்தம்தன் மாத்திரைகள் ஐவகை.
மலைக்காதீர் விண்கூட்டம் மாபூதம் ஐந்துமாம்.
முறையாய்அக் காந்தஅலை மனமாம்உயிர் உடல்களில்.
மதிஉயர்ந்திவ் வுண்மைபெற மாபிரம்ம ஞானமாம் !"

                                                    -- வேதாத்திரி மகரிஷி. 

 என்ன  ஒரு அற்புதமான  பாடல்  .ஒவ்வொரு  வரியையும்   உள்வாங்கி ஆழ்ந்து  சிந்தியுங்கள்  .உங்களை  இறையாகவே  ஆக்கிவிடும்  அதன் தன்மையை  உணர்ந்துகொள்ளவைக்கும் இந்த பாடல் . இறை  என்பது  என்றுமே கட்டுங்கடங்காத   ஒரு அளவிடமுடியா  ஆற்றல் அது தன்னை  தானே  சுருக்கிக்கொண்டு  ,தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலலால் ,கொஞ்சம்  கொஞ்சமாக  ,அணு முதல்   ,ஐம் பெரும் பூதம் ,பிரபஞ்சம்  உயிர்கள் ,மானுடம்  என   படைத்துக்கொண்டேஇருக்கின்றது .இறை  என்றால்  என்ன ?எப்படி  அதை  நமது  அறிவிற்கு  ஏற்றார்  போல  உணர்ந்துகொள்வது    என்பதற்கு  ஒரு அற்புதமான  formula ,அருள் தந்தை  ஏற்கனவே   கொடுத்துவிட்டார்கள்.

 







 சதுரகிரி மலை ஒரு அற்புதமான மலை.இதை பற்றி நிறைய எழுதியிருக்கின்றேன் அகத்தியத்தில் மீண்டும் படித்து பயன்பெறுங்கள்.ஏதோ  போகிற  போக்கில்  சதுரகிரி  மலை ஏறுவது என்பதெல்லாம் ஒரு சாதாரண விசயமில்லை இந்த நகர வாழ்வில் தம்மை ஈடுபடுத்தியவர்களுக்கு. அதே சமயம் கிராமத்து வேலை செய்யும் மக்கள் மிக அழகாக எந்தத் சிரமும் இன்றி மிக நேர்த்தியாக மலை ஏறி சுந்தர மகாலிங்கத்தை தரிசனம் செய்து கீழே இறங்குகிறார்கள்.அந்த அளவிற்கு வேலை செய்து உடலினை தகுதியாக வைத்திருக்கின்றார்கள்.மூலிகை  காற்றும்  அங்கிருக்கும்  தட்பவெப்பமும் ,ஆர்ப்பரித்து  ஓடிவரும்  மூலிகை  கலந்த  நீரும் ,சுத்தமான  ஆக்ஸிஜன்  நிறைந்த  காற்றும் ,மனதை  வருடி  இழுத்து  அரவணைக்கும்  பசுமை  போர்த்திய மலைகளும்  ,அதன் அழகும்  சும்மா  அப்படியே  பார்த்துகொண்டேயிருக்கலாம் .மனம்  அப்படியே  floating ஆ இருக்கும்  .அந்த அளவிற்கு ஒரு சாதாரண  மனிதனையும்  சிந்தனை  செய்யாத  மனிதனையும்  ஆழ்ந்து  சிந்திக்க  வைக்கும்  அதிசயம்  நிறைந்தது .எல்லாவற்றையும்  விட தந்தை  அகத்தியர்  வழிபட்ட  அற்புத  சுயம்பு  சுந்தர மகாலிங்கத்தின்  அருள்  நிறைந்திருக்கின்றது .


மலை ஏறியவர்கள் யாவரும் சித்தர்களை பார்த்துவிட்டுத்தான் இறங்குகிறார்களா ?  எந்த கோரிக்கையும் இல்லாமல்  யாராவது ஏறுகிறார்களா?   எந்த எண்ண ஓட்டமும் இன்றிதான் யாரேனும் மனிதர் ஒருவர் ஏற இயலுமா ? ஒரு லட்சத்தில் ஒருத்தர் கோரிக்கை இன்றி ,எந்தவித மன சலனமும் இன்றி   ஏறினால் அது மிகப்பெரிய ஒரு மாமனிதராகவே இருக்கமுடியும்.யாமும் ஒரு முறை மலை ஏறியபோது ,எல்லா  மன ஓட்டங்களையும்  குப்பைகளையும் தூக்கி எறிந்துவிட்டுதான் ஏறவேண்டும் என்ற மனநிலையில் தான் ஒவ்வொரு முறையும் ஏறுகின்றேன். ஆனால் ஏறி இறங்கும் அந்த நடைமுறையில் (practical) எல்லாவற்றையும் துவம்சம் செய்துவிடுகிறேன்.ஒரு முறை மலை ஏறும் போது கிட்டத்தட்ட ஒரு அறுபது வயது மதிக்க தக்க ஒரு பெரியவர் மலை ஏறுகிறார் எப்படி ஏறுகிறார் தெரியுமா ? தலையிலே ஒரு இருபத்தியந்து கிலோ எடையுள்ள ஒரு அரிசிமூட்டை ,அவர் இதற்கு பழக்கம் இல்லாதவர் போலே தான் தெரிகிறார்.ஆனாலும் அந்த அரிசி மூட்டையினை சுமந்து கொண்டுதான் அடிமேல் அடி எடுத்து வைக்கிறார்.அத்தனை செங்குத்தான கரடு முரடான பாதையெல்லாம் மிக பொறுமையாக ,இந்த மூட்டையினை சுமந்துகொண்டு தான் மலை ஏறுகிறார்.நானும் அவரை பின்தொடர்ந்து அங்குமிங்கும் தொடர்ந்துகொண்டு தான் கொஞ்சநேரம்  மலையை ஏறிக்கொண்டிருந்தேன்.கோரக்கர் குகை வந்ததும் தலையில் உள்ள மூட்டையினை அங்குள்ள ஒரு கல்லில் வைத்துவிட்டு ,மனிதர் சும்மா நிம்மதியாக அங்கு ஓடும் ஓடையில் பரமானந்தமாக குளியல் போடுகிறார்.குளித்து கோரக்கர் குகையில் இருக்கும் கோரக்க சித்தர் அய்யாவை வணங்கி ஒரு பெரிய பட்டையை விபூதியால் இட்டு பிறகு மீண்டும் சுந்தர மகாலிங்கத்தை நோக்கி தம் பயணத்தினை தொடர்ந்துவிட்டார்.எமக்கு ஒரே ஆச்சர்யம் எம்மை விட வயதில் அதிகம் எத்தனை கிலோ எடையுள்ள மூட்டையினை எவ்வளவு  உற்சாகத்தோடு தூக்கிசெல்கிறார் பெரியவர்.இப்படி தம் நலம் கருதாது பிறர்  தம் பசியாற வேண்டும் என்கிற அவர் முன்னே இறைவன் காட்சிதருவானா இல்லை ஏறுவதற்கே சிரமப்பட்டு கோரிக்கையோடு சுயநலத்திற்காக செல்லும் அன்பர்களுக்கு  முன் இறைவன் காட்சி தருவானா ? பலமுறை நான் மலை ஏறி இறங்கி எந்தவித இறை தரிசனும் இன்றி கீழே இறங்கியிருக்கின்றேன் .காரணம் நான் , எம் அகந்தையை  எம்முள்  வைத்துக்கொண்டு  ,என்னால் என் உடல் கொண்டு  மலை ஏறுகிறேன் ,  நானே  மலை  ஏறுகிறேன்  என்ற  திமிரு  ,நான்  மலை ஏறுவதற்கு  இறைஅருள் வேண்டுமல்லவா  ? இறை அருள் இல்லாமல்  எப்படி மலை ஏறுவது  ? இறை அருள் இல்லை என்றால்  அங்கு எங்கேனும்  வழுக்கி  விழுந்திருக்கலாம்  அல்லது  அங்குள்ள  மரம் விழுந்திருக்கலாம்  அல்லது ஏதேனும்  இயற்கை  சீற்றம் வந்திருக்கலாம்  அல்லது  ஏதேனும்  விலங்கினால்  இன்னல்  வந்திருக்கலாம்.மலை ஏறி  இறங்குகிற  வரை  என்னை எந்தவித  இன்னலும்  இன்றி  எமக்கு  பாதுகாப்பு  தந்தவர்   இறைவன் அல்லவா  .இதை  ஏன் இந்த மனம்  உணர,  புரிந்துகொள்ள  மறுக்கிறது ?.காரணம் அகந்தை  அகங்காரம்  மட்டுமே .இதை தூக்கி  எரிந்துவிட  ,இறை  மிளிரும்  கொஞ்சம்  கொஞ்சமாக .இதை உணர்ந்துகொண்டு  செல்பவன்  பயணம்  மிக எளிதாகிறது  இறை  துணைபோகிறது  இரண்டும்  முரண்பாடில்லாமல்  மிக எளிதாக  எந்த செயலும் நடந்தேறுகிறது .ஆக இறைவனின்  கருணை  இல்லை எனில்  எதுவுமே  சாத்தியம்  இல்லை  இந்த உலகில் .


இந்த வயதான  காலத்திலும்   இது போன்று  சும்மா ஏறுவதற்கே  சிரமப்படும்  இந்த மலையில்  , பெரும் முட்டையினை சுமந்து செல்லும்  இந்த  ஐயாவின் செயல்கள் எம் மனதினை மேம்படுத்தியது .எமக்கு  பாடங்கள்  புகத்தியது  .இரண்டுமுறை  அந்த ஐயாவினை  மிக அருகில் பார்த்தேன் ,பளிச்சிடும்  முகம் ,இறைபக்தி  கண்கள்  முழுவதும் ,நரைத்துப்போன  தாடி   ,ஒரே ஒரு காவி வேட்டி மட்டும் மேல் சட்டையில்லை ,ஒரு பெரும் மேடு வரும் பொழுது  ஏதெனும்  உதவிக்கு  கூப்பிடுவார்  என்று நினைத்தேன்  ஆனால்  அவர் மிக லாவகமாக  மேலே  மேலே கொண்டு செல்கிறார்கள் .அடுத்த முறை வருகிறபொழுது ,நம்மால் முடிந்த வரை ஏதேனும் இது போன்று பிறர் பயன்பட எடுத்துசெல்லவேண்டும் என்று எமக்குள்  நானே  ஒரு முடிவு  எடுத்துக்கொண்டேன். காலம் சுழன்றது .மீண்டும் ஒரு வாய்ப்பு எமக்கு கிட்டியது .இந்த முறை ஒரு ஐந்து கிலோ அரிசி மூட்டை எடுத்துக்கொண்டேன் ,மலையேறுகிற போதே நிறைய அன்பு  உள்ளங்கள் அன்னதானம் செய்கிறார்கள் .அதை எல்லாம் மறுத்துவிட்டேன் .ஏனெனில் வயிற்றில்  உணவோடு மலை ஏறுவது  ,சரிபட்டுவராது .இது போன்ற  திட உணவு  எடுத்துக்கொண்டால்  ,சரிப்பட்டு வராது .ஒருவித பயமும் வருகிறது உணவு எடுக்கவில்லை என்றால் உடலுக்கு தேவையான ஆற்றல் எங்கு வரும் ,தலை சுற்றி பசியால்   வாடினால் என்னசெய்வது ? மிக சிறிய அளவு உணவினை ஒரு பொட்டலமாக கட்டி ஒரு பையில் வைத்துக்கொண்டேன்.ஆனாலும் ஒரு முடிவு எடுத்துக்கொண்டேன் இதை முடிந்தவரை உண்ணக்கூடாது என்று ..மலையில் ஓடுகின்ற தெளிந்த நீரிலே அதீத ஆற்றல் இருக்கின்றது என்பது  சூட்சும  ரகசியம் .அது ஒன்று மட்டும் போதும் இந்த மலை ஏற.




எந்தவித உணவும் யாரிடமும் பெறாமல் ,வெறும் வயிற்றில் ஏறினேன்.எண்ணங்கள் எல்லாம் வந்துதான் செல்கிறது.மெல்ல மெல்ல ஊர்ந்து ஊர்ந்து மலை உச்சி ஏறினேன் .பொட்டலமாக  கட்டிக்கொண்ட  உணவினை  மிகுந்த  சிரமப்பட்டு ஏறியவந்த  ஒரு நாய்க்கு  அந்த உணவினை  கொடுத்துவிட்டேன் .ஆனால்  ஒரு பெரிய பசியோ  அல்லது சோர்வோ  இல்லை எமக்கு . அங்கே உள்ள அன்னதான மடத்திலே இந்த அரிசி மூட்டையினை கொடுத்துவிட்டு ,நேரடியாக சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு வந்துவிட்டேன்.சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தேன் .எதுவும் எமதல்ல எல்லாம் நினது செயலே .ஆக்குபவனும் நீயே அழிப்பவனும் நீயே ! நின் பொற்பாதங்களில் சரணம் சரணம் என்று சரணாகதி அடைந்து ,கற்பூர ஆரத்தியை கன்னத்தில் ஒத்திக்கொண்டு ,விபூதியால் ஒரு பட்டை போட்டுவிட்டு ,வெளியே வந்து 
சுந்தரமகாலிங்க சன்னதிக்கு  நேர் பின்புறம் வந்து  அப்படியே உட்கார்ந்துவிட்டேன்.





அங்குள்ள மலையையும் இயற்கை அழகையும் ,ஓடை நீர்ஓடிவரும் சத்தத்தையும் ,ஓங்கி உயர்ந்த மலையின் அழகையும் இரசித்துகொண்டே ,கொஞ்சம் கொஞ்சமாக  எம்மை மறந்துகொண்டிருந்தேன்.ஒரு சாயங்கால  பொழுது , கூட்டம்  அதிகமின்றியிருந்த  நாள் அன்று  ,கண்களை  மூடினால்  அங்கு ஓடும்  நீரோடை  சத்தம்  மட்டுமே,  சலசலவென  ஒருவித இரைச்சலோடு  ரம்மியமாக  கேட்கிறது .மக்கள்  அதிகமில்லை  ஆக மக்களின்  எண்ணங்கள்  ,கூச்சல் ,குழப்பம்  ,எண்ணஓட்டம்  என எதுவுமே இல்லாத  medium . இருக்கும்  சூழல்  முழுவதும் மிக எளிதாகஇருந்தது .கொஞ்சநேரத்தில்  இழந்த  ஆற்றல்  பெற்றுவிடலாம் அந்த அளவிற்கு இருக்கும்  சூழலே ,அங்கிருக்கும்  காற்றே உதவிசெய்கிறது .ஆற்றல்  நிறைகிறது  .எண்ணம்  மெல்ல மெல்ல  கரைகிறது . மனம்  கொஞ்சம்  கொஞ்சமாக  அதுவும்  கரைகிறது  .இங்குதான்  விழிப்பு நிலை  தேவைப்படுகிறது .விழிப்பு இல்லை  எனில்  தூக்கமாகிவிடுகிறது .அருவமும்  உருவமும்  ஒன்றோடு  ஒன்று  மாறி மாறி  சுந்தரமாகலிங்க கருவறை மீது  எம் நினைவுகள்  மாறி மாறி  செல்கிறது .



சுந்தர மகாலிங்கம் சன்னதி தெரிகிறது.இது  மாபெரும் அகத்தியர் சித்தரால் ஆகமம் செய்யப்பட்டது என்பதை செவிவழியில் கேள்விபட்டிருக்கின்றேன்.அந்த நினைவலைகள் வந்துசெல்கிறது.அங்குள்ள சன்னதியும் அந்த அழகிய சுந்தர மகாலிங்கமும் அதன் தலையில் இருக்கும் ஒரு சிறிய பிளவும் இதனோடு எம் நினைவுகள் பின்னி பிணைகிறது.இங்கு தான் ஒரு பெரியவரை தரிசனம் செய்கின்றேன் .அவர் உருவமா அருபமா என தெரியவில்லை .நல்ல ஒரு ஆறடி உயரம் ,முகம் தெளிவாக தெரியவில்லை.நீண்டு வளர்ந்த தாடி  ,நல்ல வயதான தோற்றம் ,அந்த அய்யாவின் உருவம் மறைகிறது .உருவம் பார்க்கிற போது அருபமாக மறைகிறது.அங்கே ஏற்கனவே யாம் பார்த்த அழகிய சுந்தரமகாலிங்கம் எம் எண்ணத்தில் ஏற்கனவே பதிந்த லிங்கம் தெரிகிறது.
இங்கே இருக்கும் இந்த சுந்தரமகாலிங்கத்தின் கருவறையில் எமக்கு யாம் சற்று முன் கண்ட ஒரு பெரியவர் வருவதும் மறைவதும் அருள் ஆசிகள் செய்வதும் எம்முள் ஓடிக்கொண்டேயிருக்கின்றது.யாம் ஸ்தூல கண்களால் பார்த்தது அழகிய சுந்தரமகாலிங்கத்தைதான் ஆனால் எமக்குள் யாம் கண்ட  காட்சி பிரம்மிக்கவைக்கின்றது . ஒரு பெரியவர் என்றால் ஒரு மாபெரும் ஆற்றல் நிறைந்த  சக்தி நிறைந்த ஒரு பெரியவர் ,சுத்தமாக தன்னை பற்றி கொஞ்சம்கூட  நினைவில்லாதவர் ,எல்லாம் கொடுத்து கொடுத்து கொடுக்கும் தன்மையே நிறைவாக பெற்றவர்.கருணை நிறைந்தவர் .உள்ளமெங்கும் ஒரே சிவமயம்.அந்த அய்யாவின் சூட்சும  தேகத்தை  தரிசித்ததை  நினைத்தாலே  கண்ணீர் வருகிறது  அந்த அளவிற்கு  கருணை  ததும்பி  வழிகிறது .ஒரு வார்த்தை கூட அந்த அய்யா   பேசவில்லை .எல்லாம் ஒரு வித அலை பரிமாற்றமே நிகழ்கிறது .என்றும்  துளி அளவில் கூட இறை கட்டளையை மீறாமல்  அவரின் ஆற்றல் பரிமாற்றம் பிரம்மிக்கவைக்கின்றது. கருணை ததும்பி வழிகிறது .அங்கு வரும் மக்களுக்கெல்லாம் வாரி வழங்கிகொண்டேயிருகின்றார்கள்.இந்த காட்சிகளை எம்முள் கண்டபொழுது  ஆற்றல் நிரம்பி எம் உள்ளமும் கருணையோடு இருந்தது வெகு நேரம்.

இந்த பெரியவரின் காட்சி எம்முள் ஒரு மிகப்பெரிய மன மாற்றத்தினை ஏற்படுத்தியது .எவ்வளவு  கருணை மிகுந்த உள்ளம்.ஒரு துளி அளவு கூட ,நினைவில் கூட எதுவும் எம்முடையது என்ற எண்ணம்  இல்லாதவர்.எல்லாம் இங்கே இறைதாண்டா நடடுத்துகிறது என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள் எம்முள் .எல்லாம் இறையே.... என்கிற நிலைக்கு வருகிற போதே ,அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கு வருகிற பொழுது ,ஒரு அலை ,ஒரு ஜீவ அலை வந்து சும்மா அப்படியே நெஞ்சினை கவ்விக்கொள்கிறது.
வாடா மகனே என்று வாரி அணைத்துக்கொள்கிறது.நெஞ்சம் நிறைகிறது .மனம் இல்லாமல் போகிறது..கருணை பிறக்கின்றது.இந்த பெரியவர்  எம்முள்  சொல்லாமல்  சொல்லி  உணர்த்தியவை  ஏராளம் .




கருணை  என்கிற  உணர்வோடு  எதையும்  பார்த்து  பழகிக்கொள் இறை  மிளிரும் , கர்மவினை  தாக்கம்  குறையும் .ஒவ்வொரு  நொடியும்  மனித மனம்  பல கண்டம் விட்டு கண்டம்  தாண்டும் , அப்படி தாண்டித்தாண்டி,  இருக்கும்  ஆற்றலை  எல்லாம் துவம்செய்துவிட்டு  ,ஒரு வித படபப்பு  ஒருவித  வெற்றிடத்திலேயே  பெரும்பாலும் , பெரும்பாலான  உள்ளங்களை இருக்கவைக்கிறது.ஒரு நிமிடம்  எந்த எண்ணமும்  இன்றி  உங்களால்  இருக்க முடியுமா  ? உங்கள் வெற்றியின்  முதல்  படி இரகசியம்  இது.நிறை  ஆற்றலோடு  எப்பொழுதும்   இருக்க பழகிக்கொள்ளவேண்டும் .எப்பொழுதுமே  ஆற்றல்  நிறைவாக  இருக்க  வேண்டும்  .மனம்  கண்டபடி  இங்குமங்கும்  செல்வதால்  உங்கள் ஆற்றல்  இழப்பு  ஏற்படுகிறது.மன சோர்வு ஏற்படுகிறது .இது போன்ற  பிரச்சினை  எல்லாம்  நொடியில்  தீர்த்துவிட  இந்த அய்யா  சொல்லாமல்  சொல்லி உணர்த்திய  இந்த கருணை பார்வை  சரிசெய்துவிடும் .இந்த கருணை  நம் அனைவரிடமே  நம் பிறப்பிலே  இறைவன்   ஓட்டி வைத்துள்ளான் .இந்த அகங்காரம்  தடுப்பதால்  கருணை  வெளிப்படுவதில்லை .கருணையோடு  ஒரு பார்வை  பார்த்தால்  தான்  என்ன  ? ஏதேனும்  குறைந்து விடுமா  ? கருணையோடு  பார்த்து   பழகுங்கள்  .அன்றைய  நாள்  எவ்வளவு  சுகமாக  நகலும்  தெரியுமா.முயற்சி செய்து  பாருங்கள்  .
 
இந்த பெரியவர்  அதிக  சக்தி நிறைந்தவர்  ஆனால்  சிறிதளவுகூட  கர்வமின்றி  ஒரு அகங்காரம்  என்கிற  வார்த்தைகூட  மிரண்டு  ஓடிவிடும்  இந்த அய்யாவின்  கருணை  அலைகள்  இருந்தால்  அந்தஅளவிற்கு  எதையும்  ,யாரையும்  ,வரும் எவரையும்  ,கருணையோடே  பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள் .நீ எவ்வளவு  பெரிய ஆளாக  இருந்தாலும்  தாம் பார்க்கும்  பார்வையில்  துளி கூட  மாற்றமில்லை என்பதுபோல, எல்லாம்  ஒரே மாறியாக  சமச்சீராக  ஒரே நேர்கோட்டில்  அலை செல்கிறது .சாந்தம்  கருணை  அன்பு  இறை  இவை எல்லாம்  ஒன்று சேர்ந்த ஒரு மாபெரும்  அரூப  உருவம்  இந்த அய்யா. சும்மா  ஈர்க்கின்றார் யாவரையும்  . கருணை  கடல்  .எந்த ஒரு வார்த்தையும்  பேசவில்லை  பேசும்  அளவிற்கு  எமக்கு  தகுதியும்  இல்லை .ஒரு சிறு பளிச்சிடும்  வெண்மைபோன்ற    இறை அலை  .அவ்வளவு தான்  அது மெல்ல புகுந்து  எம் உள்ளத்தில்  இருக்கும்  சித்தாகோசத்தோடு  நிறைந்துவிட்டது .அவ்வளவு தான்  எமக்கு  கேட்பதற்கு என்று எதுவுமில்லை  .சும்மா  துள்ளிக்குதிக்கின்றது  மனம்  .ஆர்ப்பரிக்கும்  அருவி  போல  துள்ளலும்  துடிப்புமாக  நிறைந்த ஆற்றலுடன்  மாறிவிட்டேன்  .எல்லாம் சரியே  எனும்  நிறைவுத் தன்மை  பெறுகிறேன்  .
 
கருணை  என்பது  நம்மோடு  பின்னி பிணைந்துள்ளது  .இது இறைவன்  நமக்கு  கொடுத்த  ஒரு அற்புத  சக்தி.ஒரு அற்புத வரம்.  நாம்  பார்க்கும்  யாருக்குவேண்டுமானாலும்  நாம்  ஒரு அலையாக  ஒரு உணர்வாக  கொடுக்கமுடியும் .கருணையை  எங்கு  சென்றும்  யாரிடமும்  வாங்க முடியாது .நம்முள்ளே  இருக்கின்றது .இறைவன்  படைக்கின்றபோதே  கருணையையும்  சேர்த்து படைத்துவிட்டார் .இந்த கருணை  எனும்  ஒரு பார்வை  அதனால்  ஏற்படும்  ஒரு உணர்வு  உள்ளத்தை  பூரிக்கச்செய்யும்  யார் உள்ளத்தை   ? நாம்   யார் மீது  பார்க்கின்றோமோ  அவர்கள்  உள்ளத்தையும்  .அவர்கள்  அறியாமலேயே  கருணை அலை  உள்சென்று   இறைவனுக்கு இறைவன்  ஒரு நன்றி  சொல்வது  போல  ஒரு அலை எழுந்து  ,ஒரு சுமுகத்தினை  ஒரு வித  ஈர்ப்பினை  பார்க்கும்  கொடுக்கும்  உள்ளங்களுக்கு  இடையே  ஒருவித  அலை  பரிமாற்றம்  ஏற்படுத்துகிறது .அன்றாட  வாழ்வில்  குறைந்தது  ஒருவரையாவது  நாம்  சந்தித்து தான்  ஆகவேண்டும்  அவர்கள் தரும்  அலைஇயக்கத்தினை  கடந்துதான்  செல்லவேண்டும் .நமக்கான  வேலைகளை  அவர்கள்  போன்ற ஒருவரால்  தான்  செய்துமுடிக்கவேண்டும்  வேறு வழியே  இல்லை .இது போன்ற  கர்மவினை  யாரால்  எங்கு  கர்மா  நிகழ்த்தவேண்டுமோ  அது அங்கே  நிகழ்ந்துகொண்டு தான்  இருக்கின்றது  துளி கூட  மாற்றமின்றி . கருணையோடு  வாழ்வை  வாழ பழகிக்கொள்ள  பெரும்  இழப்பு   குறைக்கப்படுகிறது .
 
கருணையோடு  செய்யும்  தான  தர்மங்கள்  மனதிற்கு  நிம்மதியை  தருகிறது  .புண்ணியம்  அது தாமாகவே  ஒரு அலை போல  சூட்சுமத்தில் பதிகிறது .இறைவனின்  ஆசி அலைகளை  பெற்று தருகிறது .கருணையோடு  செய்தல் இறைவனை  ஈர்க்கின்றது .பிறஉயிர்களுக்கு  வாழும்  ஜீவராசிகளுக்கு  உணவிடுதல்  என்பது  ஒரு மிகச்சிறந்த பண்பு .கிட்டத்தட்ட  இறையின்  குணம் .உணவினை  படைத்தவன்  இறைவன்  தானே .தாம் படைத்த  அணைத்து  உயிர்களுக்கும்  அமுதினை  படைத்தவன்  இறைவன்  தானே .இடையிலே நீர்க்குமிழி  போல வந்துசெல்லும்  வாழ்வில், எங்கே  உரிமை  கொண்டாடுவது ? முடிந்தவரை  தர்மம்  செய்யுங்கள்  அதுவும்  கருணையோடு  ,"இறையே ..!! எல்லாம்  எமதல்ல  ,எல்லாம்  நீயே  ! இதோ இன்று    எம்மால்  முடிந்த  உணவினை  தருகின்றேன் .ஏற்றுக்கொள்  ..!!" என்று  குறைந்த பட்சம் முடிந்தது  ஒருவருக்கோ  அல்லது  இருவருக்கோ  தினந்தோறும் அன்னதானம் செய்யுங்கள்  ,பெரும் மூட்டை  கர்மவினை  ,பாடாய்  படுத்தும்  கர்மவினை  தாக்கம்  குறையும் ,பெரிய கடன்சுமை  பிடுங்கல்  தீர்வுக்கு  வரும் ,ஒருசில  நாள்பட்ட  தீர்க்க முடியாத உடல்  உபாதைகள்  தீரும் ,புண்ணியக்கணக்கு  மேலும் மேலும்  ஏறிக்கொண்டேயிருக்கும் ,தொடர்ந்து செய்ய  ஒரு கட்டத்தில்  இறை திரும்பி  பன்மடங்கு  கொடுத்தே  தீரும்  ,வாழ்வு  வளமாய்  மாறும்.வெகு விரைவில்  மாற்றங்களை  பார்க்கலாம் .வெகு விரைவில் அதிகாலை  வேளையில்  எழுந்துவிட முடியும் ,வெகு விரைவில்  எழுவதற்கெல்லாம்  முதலில்  கர்மவினை  ஒத்துழைக்கவேண்டும்  இல்லையெனில்  அதிகாலை  பிரம்மமூர்த்தத்தில்  எழ இயலாது ,அதிகாலை  எழுந்து  பிராணாயாமம்  செய்தல்   உடலுக்கு நல்ல காற்றினை  உள்செலுத்த  உதவும் ,ஆன்மீக  முன்னேற்றம்  ஏற்படும் ,வாழ்வை  நீட்டிக்க  உதவி செய்யும் .அதிகாலை  எழுந்தவர்களின்  வாழும்  ஆயுட்காலம்  நீண்டுகொண்டே இருக்கும் .காலம்  காலமாய்  அன்னமிட்டவர்கள்  பட்டியல்  ஆயிரம்  ஆயிரம்  .இதில்  எத்தனையோ  மகான்களும் , சித்தர்களும்  முன் உதாரணம்  அதில்   இன்றும் அவர்கள்  ஜீவசமாதியில்  வரும் அன்பர்களுக்கெல்லாம்  அன்னம்  வழங்குகிறார்கள்.


 பசிக்கும்  உயிர்க்கு  அன்னமிடல்  இறைவனின்  பண்பு ,அதுவும்  கருணையோடு  அன்னமிடல்  , அங்கே இறை உங்களை தேடி வரும்  ,உங்களுக்காக  !!கருணை மிளிரட்டும் ..!!இறை  மிளிரட்டும்  !!
 
வாழ்க  வளமுடன்

ஓம் அகத்தீஸ்வராய நமஹா !
ஓம் அகத்தீஸ்வராய நமஹா !
ஓம் அகத்தீஸ்வராய நமஹா !

Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்