Saturday, April 23, 2016

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்
அழகிய முகமும் சாந்த வடிவும்,அன்பும் கருணையும் நிறைந்தவர்.சித்த ரகசியமெல்லாம் உடைத்தெறிந்தவர்,.மனிதர்களுக்காக தம் நிலை இறங்கிவந்து தாம் பெற்ற நுணுக்கங்கள் ஆற்றல் நுட்பம் அறிவு கொண்டு பேருதவி செய்தவர்.இரக்க குணம் உடைய தயாளன்! எல்லையில்லா கருணை நிறைந்த சித்தர் ஸ்ரீ கோரக்கர் சித்தர் ! ஸ்ரீ கோரக்க மஹாசித்தர்.! இன்றும் திருப்புவனம் கோரக்கநாதர் கோவிலில் இருந்துகொண்டு அருள்ஆசிகள் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் !!!

கோரக்கர் ஒரே நேரத்தில் பல இடங்களில் ஜீவசமாதியாகி இருக்கிறார்கள்.அப்படி ஒரு இடம் தான் இந்த திருப்புவனம் .இங்கே உள்ள ஆதி கோரக்கநாதர் ஆலயம்.மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் அதாவது மதுரையிலிருந்து 20 km லில்  உள்ளது திருபுவனம் .செவிவழி நிறைய தகவல் கிடைகின்றது.இங்குள்ள ஸ்ரீ புஷ்பவனேஷ்வரரை சந்திக்க வந்த கோரக்கர், சிவனை சந்தித்து  இறைஅலையில் மூழ்கி,அருகிலேயே ஒரு ஆஷ்ரமம் அமைத்து சிவஅருள் தொண்டு செய்துவந்திருகின்றார்கள் என்கிறார்கள்.


மச்சேந்திரர் எனும் மாபெரும் முனிவர் இறைவழியே தம் வாழ்கையை செலுத்தி,தொடர்ந்து கால்நடையாக பல திவ்விய தேசங்களுக்கு சென்று அங்குள்ள இறைவனை தரிசித்து ,பிச்சைஎடுத்து பிழைத்து நாட்களை  கழித்திருக்கின்றார்கள்.அப்படி தாம் செல்லும் வழியில் வந்த ஒரு இடம் தான் கோரக்பூர்.அங்கே உள்ள ஒரு வர்த்தகன் வீட்டுக்கு சென்று " இச்சையற்றவனுக்கு பிச்சை போடு " என்றார்கள்.அந்த வர்த்தகன் மனைவி அன்னங்கொண்டுவந்து அவருக்கு கொடுக்க.அவர் திருமேனியை பார்த்தவுடன் ,இவரோ திருநீறு பூசிய மேனியுடன் ஜொலிக்க,இவர் கண்டிப்பாக ஒரு மகானாக இருக்கவேண்டும் என எண்ணி, "அய்யா ! சாது சிகாமணியே ! தேவரீர் !எங்கிருந்து எங்கு செல்கிறீர்கள்! யாம் செய்தபுண்ணியத்தால் இன்று தங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது என வணங்கி நின்றால்.
"அம்மணி ! நான் ஓர் பரதேசி எமக்கென்று ஓர் இடம் கிடையாது.தீர்த்த யாத்திரை செய்கின்றேன்.ஆசை இல்லேன் "என்றார்.


அந்த வர்த்தகன் மனைவி மகாத்மா ! எங்களுக்கு ஏராளமான செல்வங்கள் இருந்தும் புத்திரபாக்கியம்  இல்லாதபடியால்,சந்திரன் இல்ல வானம் போல் பொலிவற்று கிடக்கின்றது,ஆகையால் எனக்கு புத்திரபாக்கியம் உண்டாகும் படி அனுக்கிரகம் செயாவேண்டுமென வேண்டினால்.

மச்சேந்திரர் அவள் மேற்கிருபை கூர்ந்து ஒரு சிட்டிகை விபூதியை அவள் கரத்தில் இட்டு ,இதனை வாயில் போட்டுக்கொள்,உனக்கு விஷ்ணுவை போல ஒரு புத்திரன் பிறப்பான் என கூறி மச்சேந்திரர் அவர் தம் வழியே சென்றுவிட்டார்கள்.

ஆனால் அந்த வர்த்தகன் மனைவி அந்த விபூதியை உடனே வாயில் போட்டுகொள்ளாமல் ,தனக்கு தெரிந்த பெண்களிடம் இது பற்றி கூற,அவர்களோ பெண்ணே பேதமை குணத்தால் சன்னியாசிகளை நம்மகூடாது,சொக்குபொடி போட்டு,மனிதரை மயக்கி வசப்படுத்திவிடுவார்கள் என்று சொல்ல,வர்த்தகன் மனைவி அந்த வார்த்தைகளை உண்மை என நம்பி அடுப்பிலே போட்டுவிட்டால்.பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு   மச்சேந்திரர் மீண்டும்  அந்த வர்த்தகன் வீட்டுக்கு சென்று " இச்சையற்றவனுக்கு பிச்சை போடு " என்றார்கள்.,அவளும் அன்னங்கொண்டுவந்து கொடுத்தாள்.அப்போது  அந்த புண்ணிய புருஷர் "நான் தந்த விபூதியால் பிறந்த புத்திரனை காண விளைகிறேன் " என கேட்க  ,அபோது அவள் அந்த விபூதி பற்றி பேசினால் சபிப்பார் என எண்ணி,மறுமொழி கூறாதிருந்தாள்.

உடனே மச்சேந்திரர் மாதர்கரசி ! நீ அஞ்சற்க! விபூதியை என்ன செய்தாய்! உண்மையை சொல் ? என்றார்.மகாத்மா ! எம் மதியீனத்தால் நான் அதனை உட்கொள்ளாமல் அடுப்பில் எறிந்தேன் என்றாள்,அது கேட்ட மச்சேந்திரர்,அது குறித்து கவலைபடாமல் அம்மணி ! அந்த அடுப்பு சாம்பலை எங்கு கொட்டி வைத்தாய் என கேட்க ? அவளும் தான் கொட்டிவைத்த குப்பைமேட்டை காண்பித்தாள்.அப்போது அந்த மாமுனிவர் குப்பைமேட்டின் மேல் நின்று ! ஒ! பற்றற்ற  பரமயோகி! என அழைத்தார்.உடனே அக்குப்பைகுள் இருந்து குருநாதர் "வந்தேன்!! வந்தேன் !! என்று திருவாக்கு பிறந்தது..மச்சேந்திரர் அவ்வூராரை அழைத்து அந்த குப்பைமேட்டை கிளறியபோது, பன்னிரெண்டுவயதுடைய பருவத்தினராய்,திவ்விய திருமேனிப்பொலிவுடையவனராய் அழகெல்லாம் திரண்டு உருண்ட முகமுடையவனராய் வீற்றிருந்த ஒரு சிறுவன் தோன்றினார்.அவரை கண்டோர் அனைவரும் அதிசயத்தார்கள்.

மச்சேந்திரர் தமது கரத்தை அவர் சிரசிற் சேர்த்து பொறுமையோடு உற்றுணர்க என்று சொல்ல,அச்சிறுவன் எழுந்து மச்சேந்திர முனிவருக்கு ஸாஸ்டாங்க வந்தனம் செய்தார்.மச்சேந்திரர் அந்த சிறுவனுக்கு அருள் புரிந்து  பன்னிரெண்டு ஆண்டு பூமாதேவியின் கர்ப்பத்தில் காக்கப்பட்டிதிருந்ததனால் "கோரக்கிநாதர்" என நாமம் சூட்டி,அவரை கைப்பற்றிகொண்டு நடந்தார்.

உடனே அங்கிருந்த வர்த்தகன் ஸ்வாமி !  தேவரீருடைய திருபிரசாதத்தை , நம்ப வகையறியாமல், விலையில்லா மாணிக்கத்தை ,வீணடித்துவிட்டோம்! தயைகூர்ந்து இந்த ஏழைக்கு இறங்கவேண்டும் அய்யனே ! என பிரார்த்திக்க,மச்சேந்திரரும் ,பயம்வேண்டாம்! இறைவன் கருணையினால் உங்களுக்கு புத்திரன் பிறப்பான் என அனுக்கிரகித்து கோரக்கரை மச்சேந்திரர் தம்முடன் அழைத்துசென்றுவிட்டார்.

கோரக்கரும் குருநாதா ! பிறவிவலையிற்பட்டவனாகிய எனக்கு ஸ்ரீதாரகமந்திரத்தை உபதேசித்துதருள்க என கேட்க ,அவரும்
 ஒ ! வத்ஸா ! சிறிதுகாலம் சென்றவுடன் உனக்கு பரிபக்குவ காலம் வரும் .அப்போது நீ ஸ்ரீதாரகமந்திரத்திற்கு அதிகாரியாவாய் ! எனக்கூற,கோரக்கரும் அப்படியே செய்தருள்க என மச்சேந்திரர் பின்தொடர்ந்தார்.

காசியிலிருந்து கோரக்கநாதர் யாத்திரை செய்தபோது பட்டாணிபிச்சை ராவுத்தர் கோரக்கரை சந்தித்திருக்கின்றார்கள்.கோரக்கர் காசியாத்திரை முடித்துக்கொண்டு ,திருபுவனம் வந்து கோரக்கர் ஆசிரமம் அமைத்து சகலசௌபாக்கியங்களும்  இங்கே அருளிக்கொண்டிருக்கிறார்கள்.


மிக அமைதியான கருவறை! விநாயகரை ஜீவசமாதியின் மீது பிரதிஸ்டை செய்துள்ளார்கள்.கருவறை இறைஆற்றல் மிகுந்து அருள் பிரகாசத்தோடு உள்ளது.ஒளிபிழம்பு போல  அய்யாவின் அருள் சக்தி கருவறையிலிருந்து விரிந்தவண்ணம் உள்ளது.அருகில் சென்று கண்களை மூடி ,தியானிக்க , வெற்றுடம்பில் ஆற்றல் மிக்க நுண் துகள் போன்ற ஒளி அலைகள் ,கொஞ்சம் கொஞ்சமாக சூழ்ந்து , சூட்சும உடலெங்கும் நன்கு வியாபித்துகொள்கிறது.ஒரு நெருப்பு ஒன்று கருவறையின் மையத்தில் எரிந்தால் எப்படி அருகிலே ஒரு தணல் வருமோ  ,அது போல இறை வெப்பம் அங்கிருந்து வந்த வண்ணம் இருக்கிறது.சிறியதாய் இதன் அலைபிடித்து ,அதன் வழியே உட்செல்ல , நெஞ்சம் நிறைகிறது.உள்ளம் அமைதிபெறுகிறது.இறைவன் வாழும் இடம்  மனம் அல்லவா ?  இப்போது துள்ளும் இறை அலைகள் கண்டவுடன் அது மீண்டும் தமது பொலிவுபெற்று,மாசு அகன்று ,தூய்மையான அலைகளால் மிளிர்கிறது.கண்ணாடி போன்ற  transparent ,விருப்பு, வெறுப்பற்ற தன்மை,அன்பின் அலைகளால்  அன்பின் மடியில் தவழ்கிறது.எதுவும் அற்று எங்கும் பறந்து விரிந்து கேட்பாரற்று கிடக்கின்றது.கருணையின் வடிவம் சித்தர்கள்.கோரக்கர் ,கோ-இரக்கர் ,கோ என்றால் பசு இரக்கர் என்றால் இரக்க குணம் உடையவன்.கருணை நிறைய பெற்றவன்.கருணை கடல் போல் உள்ளது.ஒரு படி இரங்கி அன்பால் அய்யாவை வணங்க உள்ளமெங்கும் உடனே தம் கருணைஅலைகளை நிரப்பிவிடுகிறார்கள்! ஜீவ அமிர்தம் போன்ற இறைஅலைகளால் நெஞ்சம் நிரம்பி வழிகிறது.ஆனந்தம் கொள்கிறது.அன்பால் உருகவைக்கிறது.இது ஆனந்த நிலை.இது போன்ற  Mind Refresh அடிக்கடி தேவைபடுகிறது .சித்தர்களும் மகான்களும் அள்ளி அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.வாங்குவதற்குதான் ஆட்கள் போதவில்லை!ஜீவசமாதிக்கு அருகிலே ஒரு புளியமரம் இருக்கிறது.இந்த புளியமரம் நன்கு பருத்து,கொளுத்து,பெரிதாய்,சோடையின்றி மிகுந்த ஆரோக்கியமாக ,இத்தனை கோடையிலும் செழிப்புடன் உள்ளது.அதனுள்ளே பட்டாணிபிச்சை ராவுத்தர் அய்யாவின் ஜீவசமாதி உள்ளது.இது ஒரு அழகான புளியமரம். பட்டாணிபிச்சை ராவுத்தர் அய்யாவின் ஆசிகளை காற்றாக வீசிக்கொண்டிருக்கிறது.

மதுரைக்கு செல்லும் வாய்ப்பு உள்ளபோது இங்கே வந்துசெல்லுங்கள்,அய்யாவின் அருள் அலைகளை உள்வாங்கி கர்மவினை தாக்கம் குறைத்து இறைஅருள் பெருக்குவோம் !!!
மீண்டும் ஒரு கட்டுரையில் அகத்திய உள்ளங்களை சந்திக்கின்றோம்.

ஒம் அகத்தீஸ்வராய நமஹா!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா!