Friday, October 23, 2015

ஒம் நம சிவாய !!! மனிதனின் மனோ நிலை எந்த அளவுக்கு பக்குவம் அடைகிறதோ,எந்த அளவுக்கு ஞானம் பெறுகிறதோ அந்த அளவிற்குதான் அவனை  பொறுத்தவரை இந்த உலகமும் வாழ்கையும் உயர்வாக தெரியும். மனம் தான் வாழ்க்கை மனம் தான் உலகம்  என்பதை மனிதன் புரிந்துகொள்ளவேண்டும்  என்பது தந்தையின் வேதவாக்கு .பலகீனமான மனம் எதற்கும் ஒத்துவராது.அதை வைத்துகொண்டு எதையும் சாதிக்க இயலாது.ஆக மனம் வலுப்பெறவேண்டும்,மனதின் ஆற்றல் நன்கு தெரிந்து உணரவேண்டும்.எது வரினும் அதனை முதலில் எதிர்கொள்ளுதல், தாங்குதல் இந்த மனம்.இது ஒரு நிலையில் இல்லை எனில் எதையும் எதிர்கொள்ளல் இயலாது. இந்த' மனம் நமது உடலில் உண்டான ஜீவகாந்த ஆற்றலின் அடுத்த நிலை அடுத்த கட்டம்.இவை செலவாகிகொண்டேயிருக்கும் ,அவ்வாறு இது வரை பழக்கப்டுத்திக்கொண்டுவிட்டோம்.அது வந்தவழி திரும்பி உள்நோக்கி பார்க்க அமைதிபெற்று ஆற்றல் தம்முள் சேர்த்துக்கொள்கிறது.

எந்த ஒன்று கிடைத்தால் அல்லது அதை உணர்ந்தால் இந்த மனம்  அது நிம்மதி பெரும்,அமைதி பெரும்,இன்றைய காலகட்டங்களுக்கு தகுந்தார் போல நமது வாழ்வியல் நிகழ்வுகள் சீராக இயங்க  ஒத்துழைப்பும் ,யாருமே தர இயலாத ஒரு தீர்வும் தரும்? பிரம்மத்தில் மனதினை வைத்தல் ஆனந்தம்.பிரம்மமாகவே இருத்தல் அதைவிட ஆனந்தம். இருக்கும் வேலை,செய்யவேண்டிய வேலை,கமிட்மென்ட்,வாட்ஸ்அப் ,கைபேசி அழைப்பு etc ,இவை எல்லாவற்றையும் சற்றே நிறுத்திவிட்டு ,இவைகளின் தொடர்புகள் சற்றும் நம்மை சீண்டாமல் துண்டித்துவிட்டு, ஒரே ஒரு ஒரு மணிநேரம் கண்களை மூடி ,உள்நோக்கி மனதை அதன் சாதரணஅலை ஓட்டத்திலிருந்து சற்று கீழ் இறங்கி,மனதை அதன் வழியே ,மெல்ல மெல்ல அதன் அலைசுழல் குறைத்து ,சிவத்தைநோக்கி ,அன்பின் அலைகளை நோக்கி செலுத்த, ஒரு சிறிய அமைதி தென்படும்.அவ்வாறே அதன் மூலம் நோக்கி செல்ல செல்ல ஒரு காட்டாறு வெள்ளம் போல் உருத்திரண்ட சக்தி ஒன்று அழைத்துச்செல்லும்.அந்த உருத்திரண்ட சக்தியை நன்கு உள்வாங்கி ,அப்படியே நம்முள் நிலைத்திருக்க பழக பேரானந்தம் கவ்விக்கொள்ளும்.

எங்கெங்கும் விரியும் பிரபஞ்ச நாயகனின் ஆற்றல்,அன்பின் அலைகள் நிறைந்த செறிவு,ஈர்ப்பு எனும் ஆற்றல் ,காரிருள் கட்டுக்கடங்கா ஆற்றல்,இவனுள் உள்ள அன்பே இத்தனை ஈர்ப்பிற்கும் காரணம்.இந்த ஈர்ப்பு அலைகளை தினந்தோறும் உணரவில்லையெனில் ஏதோ ஒன்றை இழந்தது போன்ற ஒரு ஏக்கம் ,ஏனெனில் அந்த அளவுக்கு இவன் நம்முள்  பிண்ணிப்பிணைந்துள்ளான் இவன் இல்லை எனில் பஞ்ச பூதங்கள் இல்லை,பஞ்ச பூதங்கள் இல்லை எனில் நாம் இல்லை. சூட்சுமமாகிய சிவத்தில்   மூழ்க,மூழ்க தம் நிலை கரைந்து ஒன்றுமில்லாமல் போகிறது.


அன்பின் அலைகளை தேடித்தேடி, நாள் தோறும், நொடி தோறும், உணர ,பழக பழக, நம்மை அதனோடு இணைக்கும் ஒரு ஜீவ அன்புஅலை  தொடர்பு உருவாகிறது.வெட்டவெளி ஒன்றுமிலா ஒன்று அதற்குதான் எத்தனை மாபெரும் ஆற்றல்,கொஞ்சநேரம் இந்த ஒன்றுமிலா ஒன்றைபற்றி அது என்ன தான் என அறியமுற்படும்போதே ,ஒரு விதசக்தி ஈர்க்கிறதே ...! இவனைபற்றி எண்ண நினைக்கும்போதே இத்தனை அன்புஅலைகளா  ! யாம்பரிசிப்பது ..எத்தனை சுகம் இறைவா...!!எம்முள் நிந்தன்அன்பு கலந்தஅலைகள் ..மெல்லமெல்ல  கரைந்து எம்மைஆட்கொள்கிறதே... இறைவா .!!மாபெரும் பிரபஞ்ச ஆற்றலே ..!! அணுவிலும் சிறியோனே...!!!  கற்பனைக்கும் அப்பாலும் விரிந்துகொண்டேஇருக்கும் ஆழ்ந்து அகண்ட பிரபஞ்சமே!!!காரிருள்  சூழ்ந்த பேரருளே...!! ..வெட்டவெளியே !! சங்கினும் தூய வெண்மைநிறமுடையோனே..!!பேரொளியே!!!எங்கும் நீக்கமறநிறைந்தோனே..!!எம்நாயகனே !!எம்முள் என்றும் உம் திவ்ய தரிசனம் காண வழிவகை செய்யுங்கள் இறைவனே !!!ஒம் நமசிவாய சொன்னால் சித்தர் தரிசனம் கிடைக்கும்.காலை மாலை இருவேளை ஒம் நமசிவாய சொல்ல  சொல்ல சொல்ல  நாற்றுக்கிடையே களை பறித்து எரியப்படுவது போல் ,தூய ஆத்மாவின் உன்னத தன்மையை மாசுபடுத்தும் கர்மவினை பதிவுகள்  ஒவ்வொன்றாக பிடுங்கி  ஏறியப்படுகின்றன இந்த சிவ மந்திரத்தால், என்பது முற்றிலும் உண்மை.ஒம் நமசிவாய எனும் எழுத்துக்கள் ஒரு சாதரண எழுத்துக்கள் அல்ல.ஈடுபாடு கொண்டு தொடர்ந்து உச்சரிக்க நல்ல அதிர்வுள்ள அலைகளை உச்சரிப்பவர் உடல் முழுவதும், உள்ளம் முழுவதும் சுழலசெய்கிறது.முதலில் ஒரு ஆர்வம்  ஒரு ஈடுபாடு  வரவேண்டும் இது  நாம் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் பொருந்தும் .ஆர்வம் ஈடுபாடு இல்லைஎனில் எல்லாவற்றையும் மூடிவைத்துவிடவேண்டியதுதான்.யாரொருவர் தொடர்ந்து ஈடுபாடுடன் சிவ மந்திரத்தை உச்சரிகிறார்களோ அவர்கள் கர்மவினை பதிவுகள்  அன்றுமுதல் வேரறுக்கப்படுகின்றன .இதனை கூறுவதற்கு முதலில் நம்மில் எத்தனை பேர் ஆயத்தமாக இருப்பீர்கள் என்றால் கண்டிப்பாக விரல்விட்டு எண்ணிவிடாலம்.ஏனெனில் நம்மைசுற்றி எப்பொழுதும் இந்த மந்திரம் ஒரு அதிர்வுஅலைகளை தந்துகொண்டேயிருக்கும்,இது போல் நல்ல அதிர்வுள்ள அலைகள் இருக்கும் மனிதர்கள் வெகுஅரிது.ஒம் நம சிவாய எனும் சிவ மந்திரம் யாம் அறிந்தோ அறியாமலோ எம்முள் ஒரு நாள் முழுவதும் சுழன்றுகொண்டிருந்தது,அப்போது ஒரு ஜீவ சமாதிக்கு செல்லும் வழிதென்பட்டது.இறைஅலைகள் சூழ்ந்தவுடன் மாயை அலைகள் விலகுவது போல்,தடை அகன்று ஜீவசமாதி செல்லும் வழியை மிக அழகாக எம்முள் உணர்த்தியது.இங்குள்ள மகான் எம்மை அழைத்தாரோ அல்லது சிவ மந்திரம் எம்மை இங்கு அழைத்துவந்ததா ? ! இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது போல்,அங்கே எவர் அந்த அலைஇயக்கத்தில் வருகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்த தரிசனம் பெறுகிறார்கள். மனதின் அதிர்வு அலை குறைந்தவுடன் அதற்கு ஒத்த அலைநீளத்தில் உள்ள அத்தனையும் தொடர்புகொள்ளும் அதிசயம்.நிகழ்கிறது. மிக அமைதியாக சிவ மந்திர நாம ஒலியோடு இருந்தது மகானின் ஜீவசமாதி.மகானின் ஆற்றல் அந்த இடம் முழுவதும் நிரம்பியிருக்கிறது.
அங்குள்ள அமைதியில் ஆழ்ந்து தவத்தில் செல்ல ,அமைதி நம்மை சூழ்கிறது.அமைதிவிரிகிறது.மகான் எமது சூட்சும தேகத்தோடு சும்மா புகுந்து விளையாடுகிறார்கள்.சூட்சும  தேகம் வா என்றால்  வருவதும்,செல் என்றால் செல்வதும் பிரமிப்பாக உள்ளது. எமது முற்பிறவி நிகழ்வுகளை எமக்குள் விளக்குகிறார்கள்.தலையணையை விட்டு அதன் உறையை கழட்டுவதுபோல ,எம்முள்ளிருந்து சூட்சும தேகத்தை பிரித்து ,எம்முள்  ஏற்கனவே பதிந்துள்ள முற்கால நிகழ்வுகளை  விரித்து காண்பிக்கிறார்கள், என்றோ யாம் வாழ்ந்த வீடு,அங்குள்ள உறவினர்,அவருக்கும் எமக்கும் உள்ள தொடர்பு,நிகழ்வுகள் எல்லாம் விரிகிறது.எல்லாம் பாச அலைகள் பிண்ணி பிணைந்துள்ளது ,அவற்றிற்கும் எமக்கும் உள்ள தொடர்பு இன்னும் தொடர்கிறது,அதை விட்டு சட்டென வரஇயலவில்லை பிறகு மீண்டும் எம்முள்ளே எம்மை சூட்சும தேகத்தை சேர்க்கிறார்கள்.இது தான் நீ என்றும் இது போன்ற பதிவுகள் தாம் இன்று நீ தாங்கிவந்துகொண்டிருக்கிறாய்,இவையின் சாராம்சமே இன்று உமது தன்மை,உமது மனதின், உயிரின் சாராம்சம், என்றும் ,இந்த பிறவிப்பற்றுநீங்க சிவத்தை தொடர்ந்து சொல் என சொல்லாமல் எம்முள் நிகழ்த்தி காண்பித்துவிட்டார்கள்  அய்யா அவர்கள். இந்த நிகழ்வோ ஒரு இனம் புரியாத பாச நிகழ்வாக தெரிகிறது.அப்பப்பா போதும் எடுத்த பிறவிகள் என்றே தோன்றுகிறது.இறையோடு மீண்டும் மீண்டும் உழன்று ,அதன் தன்மையிலேயே ஊறி,அதுவாகவே மெல்ல மெல்ல உணர்ந்து,எப்படியாவது இந்த ஜென்ம கர்மவினை கழித்து,இந்த பிறவியை இனிமேலும் தொடரவேண்டாம்  என்றே  எண்ணத்தோண்றுகிறது.இங்குள்ள மகான் பெயர் தாடிகார சுவாமிகள். சென்னையில் உள்ள ஆலந்தூரில்  உள்ளது.வாய்ப்பு கிட்டும்போது ஐயாவின் ஜீவசமாதி சென்று அருள்ஆசிகளை பெற்றுவாருங்கள்.எந்த ஒரு ஜீவசமாதி சென்றாலும் அங்கேயுள்ள மகான்கள் யாவரும் அன்பின் கருணையால் அருள் அலைகளை அள்ளித்தந்த வண்ணம் உள்ளார்கள்.விரும்பி ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ,உணர்ந்து கொள்ளும் பக்குவம், கண்டிப்பாக நம்மை நமக்குள் அவைகளை உணரும் தன்மையை எற்படுத்திக்கொள்ளுதல் மிக அவசியமாகிறது.இந்த அலை உணரும்  பக்குவத்தை  மனதிற்கு வாரி வழங்கும்  யாம்  அனுபவத்தில் கண்ட இரு மந்திரங்கள் ஒன்று ஸ்ரீ பைரவர் காயத்ரி மற்றொன்று இந்த சிவ மந்திரம் . அதன் தாத்பரியத்தை நன்கு உணர்ந்து வாழ்வில் எல்லாநன்மைகளையும் பெறவேண்டும் என அகத்திய உள்ளங்களை வாழ்த்தி  வணங்கி ,மீண்டும் வேறொரு நிகழ்வில் விரைவில் சந்திக்கிறோம்


ஒம் அகத்தீஸ்வராய நமஹ !!!