Saturday, December 31, 2016

திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்
எங்கும் சிவம் ,எதிலும் சிவம் .சிவமின்றி எதுவும் இல்லை .எல்லாம் சிவமே.எதை பிடித்து அதன் மூலம் நோக்கினும் சிவமே முடிவாய் வருகிறது.எம் தந்தையின் முகம் நோக்கினும் சிவமே,அன்பால் கசிந்து எவை நோக்கினும் சிவமே.சிவத்தோடு இருந்த காலம் ,வாழ்வின் அர்த்தமுள்ள முறையில் நேரங்களை  செலவழிக்கப்பட்ட ஒரு  பொற்காலம்,சிவமாய் இனி இருக்க போகும்  காலமும் பொன்னான காலமே ,சிவம் பற்றிய அலைகள் நினைத்தாலே,உலகின் எந்த மூலையில் எங்கு இருந்தாலும் ,எந்த நிலையில் இருந்தாலும் , ஆற்றல் மிக்க ,அதிர்வு மிக்க அலைகளை நொடிப்பொழுதில்  உணரவைத்து ,இருக்கும் ஆன்மாவின் நிலையினை மேலும் மேலும் அதீத உயரத்திற்கு இழுத்துச்செல்லும் அற்புதம் நிகழ்கிறது.
 சிவம் பற்றிய சிந்தனை ,சிவம் பற்றிய கனவுகள்,சிவம் பற்றிய நிகழ்வுகள் ,சிவம் பற்றிய தொண்டு,சிவனுக்கு ஆலயம் அமைத்தல், போன்ற சிந்தனை, செயல் ,இவை யாவுமே ஏதோ சும்மாவருவதில்லை .அதற்குரிய ப்ராப்தம் (கொடுப்பினை) இருந்தால் மட்டுமே நிகழ்கிறது.இதுவே பழமை,இதுவே புதுமை,பழைமைக்கும் பழைமை, புதுமைக்கும் புதுமை.சிவனை நினைத்தால் சிவன் முக்தியை நோக்கி மட்டுமே செல்ல வைப்பான்,அதன் காரணமாக கர்மவினை தாக்கம் அதிகம் ஏற்பட்டு இன்னல் அதிகம் வரும் ,எனும் தவறான எண்ணம் கொண்ட கருத்து நிலவுகிறது.கர்மவினை என்பது சிவனை வணங்கினாலும் வணங்காவிட்டாலும் அது முற்றிலும் நீங்கும் வரை வந்தே தீரும்,அதற்கான விளைவுகளை இன்பமோ துன்பமோ தந்தே தீரும்.சிவனின் அற்புத அலைகள் அதற்கு தீர்வு சொல்லும்.கர்மவினை தாக்கங்களை குறைக்க வழிவகை செய்யும்.வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்ற உதவும்.புத்தியை கூர்மையாக மாற்றும்.நெஞ்சத்துள் ஒரு தெளிவினை ஏற்படுத்தும்.தெளிவான மனமே ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும்,தீர்க்கமான முடிவே வாழ்வை அதன் முன்னேற்ற பாதையில் அடுத்தகட்ட நிகழ்வை நோக்கி செலுத்தி , இந்த உலகவாழ்வியல் நிகழ்விற்கு தேவையான  ,பொன்,பொருள்,செல்வம் எனஅனைத்து தேவைகளையும் பெற வழிவகை செய்யும்.திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் ,மிக பழமையான ஒரு கோவில்.கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுக்கு மேல் பழமைவாய்ந்தது என்கிறார்கள்.பிரம்மா அருள் புரியும் இடம்.பிரம்மாவின் சாபம் நீங்கிய இடம்.சர்வேஸ்வரரின் ஆணைக்கிணங்க வரும் யாவருக்கும்,எந்தவித பாரபட்சமின்றி கர்மவினையால் துன்பப்படும் யாவருக்கும் ,அவர் தம் தலைஎழுத்தை மங்களகரமாக மீண்டும் ஒரு முறை மாற்றியமைக்கிறார் பிரம்மா.ஈஸ்வரன்  பிரம்மாவுடைய அகங்காரத்தை இங்கே  இந்த திருக்கோவில் இருக்கும் இடத்தில் அழித்து, பிரம்மா இழந்த  சக்தியையும், படைப்பாற்றலையும் மீண்டும் வழங்கி, மேலும் 'இங்கு வந்து பிரம்மாவை  வணங்கி வழிபாடு செய்பவர்களுக்கு, மீண்டும் ஒரு முறை வணங்குபவரின்  தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக' என்று வரமளித்து 'விதியிருப்பின் விதி கூட்டி அருள்க' என்றும் வரம் வழங்கினாராம். ஆகவே அன்பால் நிறைந்த உள்ளங்களுக்கு திருப்பங்கள் அதிவிரைவில்  ஏற்படும் இடம்.தலைஎழுத்தை மீண்டும் ஒரு முறை மங்களகரமாக மாற்றும் இடம் .பிரம்மா அருள் ஆட்சி செய்யும் இடம்.அன்பால் உள்ளம் உருகி பிரம்மாவின் அருள் ஆசியை வேண்ட ,தலைஎழுத்தை மாற்றும் அற்புத அலைகளை உணரலாம்.எத்தன்மை அலைஇயக்கத்தோடு இங்கே வந்தாலும் ,இங்குள்ள அருள் அலைகளின் தாக்கத்தால் ,அது அதன் வலுவிழந்து ,சர்வேஸ்வரின்  அலைகளும்,பிரம்மபுரீஸ்வரரின் அலைகளும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்துவிடுகிறது.முடிவில்உள்ளம் நிறைந்த அலைகளோடு வெளிவரலாம்.ஒரு சாதாரண கோவிலிருந்து சற்றே வித்தியாசம் காணமுடிகிறது

  

பிரம்மாவை வணங்கி வெளிவர ,அவருக்கு மிக அருகிலே பதஞ்சலி முனிவர் சிவத்தோடு சிவமாக  இருந்த இடம் ,அதாவது ஐக்கியமான இடம்.அங்கே ஒரு சிவலிங்கம் பிரதிஸ்டை செய்யப்பட்டு  ,அருகிலே அய்யா பதஞ்சலி முனிவரின் உருவம் புகைப்படமாக வைக்கப்பட்டுள்ளது .ஒரு அற்புதமான தியான மண்டபம் .சற்றே ஆழ்ந்து உட்செல்ல,,மூச்சுக்காற்றினை இங்குள்ள அலைகளே சரிசெய்து,எங்கோ இழுத்துச்செல்கிறது.தியானம் செய்பவர்கள் அவர் தம் வழியில் அதிவிரைவில் முன்னேற்றம் அடைந்து,மேன்மை அடையவைக்கும்  அய்யாவின் அருள் அலைகள் இங்கே நிரம்பிக்கிடக்கிறது.
கோவில் அருகே பிரம்ம தீர்த்தம் உள்ளது.காசிக்கு நிகரானது என்கிறார்கள்.இந்த கோவிலின் ஸ்தல விருட்சம் மகிழமரம் .மிக அழகாக நிழல் பரப்பி ,இதமான தென்றலை வீசுகிறது.தற்பொழுது இங்கே இந்த மரத்தின் அழகும்,பசுமையானஇலைகளும்,அதன் பருத்த உருவமும்,அது வீசும் தென்றலும் எம்மை ஈர்க்க அதன் அருகிலே அமர்ந்துவிட்டோம்.இந்த மரமும் அதன் அழகிய தென்றலும் நீண்டநேரம் எம்முள் சுழன்று இறுதியில் அமைதியில் ஆழ்த்தியது.இந்த மரத்தையும் அதன் வயதையும் கணிக்க முற்படும் போதே ஒரு அழகான அலைசூழலுக்கு இழுத்துச்செல்கிறது.
இந்த மரமும் அருகே உள்ள சிவலிங்கங்களும் அதன் மீது உலாவும் காற்றும் ,சற்றே கண்மூடி உள்செல்ல ,பல ஆயிரம் வருடம் பின்னோக்கி இழுத்துச்செல்கிறது.மென்மையான ஈதர் அதிகம் நிறைந்த சூழல். நச்சுப்புகை வீசும் வாகனமோ அல்லது எந்த ஒரு அதிர்வு தரும் சப்தம் இல்லாமல் , வெறும் வெளி மிக அற்புதமாக உள்ளது .மக்கள் மனித மனங்களின் அடர்ந்த  செறிவு இல்லாத ,எந்தவித குழப்பம் ஏற்படுத்தும்  எண்ண அலைகள் இல்லாத சூழல்,மிதமாக உலாவும் காற்றை வெறுமனே கவனிப்பதே மிக அற்புதமாக உள்ளது.அங்கே இறை சக்தி, காற்றோடு காற்றாக இருக்கிறது .ஆனால் காற்று அல்ல.மிதமான இதமான ஒரு மெல்லிய ஒளிருடும் நுண் அணுக்கள் மற்றும் அதன் அலைகள் எங்கும் இருக்கிறது .எங்கெங்கும் இருக்கிறது .இந்த அலைகளை உள்வாங்க சூட்சும தேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெறவைக்கிறது. ஆனந்தமாக உள்ளது. யார் அறிவார் சிவனின் சூட்சும ஆற்றலை.விரிந்து விரிந்து உட்செல்ல அழகாய் மிக அழகாய் ஈர்க்கும் அற்புதம்,ஈர்ப்பு இங்கே அன்பாக மாறுகிறது.காற்றாய் மெல்லிய காற்றாய் இதம் தரும் மிக மெல்லிய காற்று எங்கிருந்தோ சில்லென அடிக்கிறது.


மிகபழமையான ஒரு லிங்கம் எம்மை முற்றிலும் ஈர்க்கிறது .ஈர்த்து எம்மைஅதன் அருகே வரச்செய்கிறது.எங்கேயோயிருந்து வந்த,இந்த வா எனும் ஒரே ஒரு  எண்ணம், இந்த ஒரே ஒரு ஈர்ப்பு, பரந்த உள்ளம் கொண்டோனின் தன்மையை அதன்  ஒரு துளியை எம் உள்ளத்துள்ளே செலுத்தி ,எம்மை அமைதி கடலில் திளைக்கவைக்கிறது.பேரமைதியில் மூழ்கடித்துவிடுகிறது.எமது ஜீவனும், ஜீவனுள்ள உடம்பும் ,உள்ளமும் ,எம்முள் எழும் சப்தமும் ,முற்றிலுமாக ஜீவனற்று போல அடங்கி ,ஆழ்ந்து  அழுது,ஏங்கி,உறங்கி,எதுவும்அற்றுபோய்,பிறகு ஒரு பேரமைதியை நோக்கி,ஒரு வெற்றிடத்தை நோக்கி ,ஒரு பெரோளியினை நோக்கி,அது தாமாகவே அழைத்துச்செல்லப்டுகிறது.அடர்ந்து பரந்த வெளி ,எல்லை அற்று,கேட்பாரற்று அனாதையாக எங்கெங்கும்,நிசப்தமாக விரிந்து கடல் போல கொட்டிக்கிடக்கிறது.எல்லையே இல்லாதவன் .எது வேண்டுமோ அது அனைத்தும் இங்கே பெறலாம்,யாவும் வெற்றிடஅலையாக தவழ்கிறது ,ஆனால் இந்த நிலையில் வேண்டியது எதுவுமே இல்லை.எது வேண்டுமோ அது  இவனின் பல்வேறு பரிணாமமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு வேண்டிய பொருளாக ,விரும்பிய உயிராக,பிறகு மீண்டும் வெட்டவெளியாக,புரிய இயலா புதிராக ,சிவமாக சிவத்துள் சிவமாக மூழ்கிகிடக்கிறது.சாந்தம் மிக நுண்ணிய மென்மை போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் இங்கேயிருந்து தான் ,இவனின் இந்த நிலையிலிருந்து தான் உதயமாகிறது என்பது உணர்ந்துகொள்ளமுடிகிறது.அமைதியின்விளிம்பில் சிவனின் லிங்கம் அதன் அருகே ஒரு கல்லோடு சாய்ந்துள்ளது.ஏதோ ஒன்றை செவிசாய்த்து அதற்கு தேவையான ஆற்றல்களை வழங்குபவது போலே தெரிகிறது.அதன் சாய்ந்த தன்மையும் அதற்கு அருகே அதன் மேலே  எங்கிருந்தோ மெல்லிய கண்ணாடி போன்ற மென்மையான தண்ணீர் வந்துகொண்டேஇருக்கிறது,வந்து லிங்கத்தின் மேல் அபிஷேகமாக லிங்கம் முழுவதும் படர்ந்து ,சிவலிங்கத்தை ஆரத்தழுவி ஒரு கண்கொள்ளா காட்சியாக தரிசனம் தருகிறது.அதில் யாம் அருகே சென்று தேன் ஊற்றுகிறோம்.நிகழ்வு மிகவும் அற்புதமாக உள்ளது

திருச்சியிலிருந்து சென்னை செல்லும் நேஷனல் ஹைவேஸ் லிருந்து ,கிட்டத்தட்ட  இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது  சிருகனூர். பிறகு அங்கிருந்து  ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்.ஒரு முறை சென்றுவாருங்கள்.வந்து இங்குள்ள அமைதியை உணரமுற்படுவோம்.பிறகு அது ஏற்படுத்தும் மாற்றத்தினை மெல்ல மெல்ல உணர்ந்து வாழ்வை பயனுள்ளதாக  ஆக்கிக்கொள்வோம்

இந்த மிகசிறிய ஒரு நிகழ்வோடுஇக்கட்டுரையை நிறைவு செய்து ,அகத்திய உள்ளங்களுக்கு  வரும் புத்தாண்டு அமைதியையும் ஆனந்தத்தையும் நிறைவாக கொடுத்து,இன்னல் நீக்கி, இறை சிந்தனை மேலோங்கி ,சிவஆற்றலை நெஞ்சத்துள் நீக்கமற என்றென்றும் உணரும் தன்மையை வழங்க அருள் செய்யவேண்டுமென தந்தை மகாஅகத்தியர் ஐயாவையும்,சர்வேஸ்வரரையும் வணங்கி ,எமது உள்ளம் நிறைந்த வாழ்த்துகளை, தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒம் அகத்தீஸ்வராய நமஹா !
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !