Sunday, December 14, 2014

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரால் ஜீவ சமாதி.!!அன்பின் வழி வந்தவர்கள்,அன்போடு இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள், இவர்கள் அருகில் இருந்தாலோ அல்லது அவர்கள் அருகில் நாம் சென்றாலோ அந்த கருணை அலைகள் நம்மையும் சூழ்ந்துகொள்ளும்.எங்கெங்கும் ஒரு வித அமைதி அலைகள் மொத்தமாக ஆக்கிரமிப்பு செய்துகொள்ளும்.அன்பு ஒரு கட்டத்திற்கு மேல் எல்லை இல்லாமல் செல்லும் போது இறைநிலை ஆகிறது.எல்லை இல்லா அன்பு இறைநிலை.அன்பில்  மட்டுமே அனைத்தும் தம் நிலை இழந்து கரைந்துவிடுகிறது.இருக்கும் இடம் தெரியாது  போய்விடுகிறது.எங்கெல்லாம் அன்பின் அலை தவழ்கிறதோ அங்கெல்லாம், இறை நிலை உள்ளது.தந்தை ஸ்ரீ அகத்திய மகான்  " அன்பு  என்றால் என்ன  ?  அதன் ஆழம் என்ன ..? "  என்று  எமக்கு சூட்சுமமாக உணர்த்திய பிறகே, ஒரு அலைகளின் அன்பு பசை எம்முள், எம் சூட்சும தேகத்தில் திணித்த பிறகே பல் வேறு மாற்றங்களை உணர்ந்தோம்.அன்பின் ஆற்றல் கண்டு வியந்தோம் பல முறை.((இது அன்பின் ஆழம்.... கட்டுரை வாசிக்கவும் )அன்பெனும் அதிர்வு குறைந்த மன நிலையில் இருக்க, பார்க்கும் எதுவும், கேட்கும் எதுவும், நடக்கும் நிகழ்வு எதுவும், ஒரு சுகமான ஆனந்தமே.!

எமது வாழ்வில்  அன்புநிறைந்த பல்வேறு ஆத்மாக்களை சந்தித்திருக்கின்றேன், அதில் ஓர் ஆத்மா மெல்லிய தேகத்துடன்,வெண்ணிற தாடியுடன், இறைஅலை சூழ்ந்த கண்ணால் எமை பார்க்க பளிச்சென்று எம் எண்ணத்தில் உதித்தது, அதன் விளைவே இக்கட்டுரை. சாதாரண மன அலைசுழலுக்கு சற்று கீழே ஒரு layer கீழே இறங்கி, அன்போடு இருக்க பழக அலைகள் சிறிது சிறிதாக சூழ்ந்து, பிறகு முற்றிலும் அன்பாக மாற்றிவிடும்.இருக்கும் இடம்முழுவதும்ஆனந்த அலைகள் சூழ்ந்து விடும்.


நகர வாழ்வில் தம்மை இனைத்துக்கொண்டவர்களுக்கு ஒரு நீண்ட தூர பயணம் ஒரு சில மாற்றங்களை தரும் என்பது  உண்மையே. அதுவும்  அமைதி தேடி சித்தர்களையும்  மாகான்களையும் தேடிய பயணம் ஒரு நிறைவை தரும் என்பதும், கர்ம வினையின் தாக்கங்களை வேரறுக்க உதவும் என்பதும் உண்மையே.

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரால் அவர்களுக்கு இளமையிலேயே இறைநாட்டம் அதிகம் இருந்திருக்கிறது .ஒரு முறை தம் மனதால் இறைநிலையை நினைத்தால் அவருக்கு நூறுமடங்கு  இறைசக்தியைஈர்க்கும் தன்மை இயற்கையிலேயே இருந்திருக்கிறது.ஏனெனில் மகான் அவர்களின் பிறப்பு மிக புனிதமானது. அய்யாவின் பெற்றோர்கள் கோடி முறைக்கு மேல் ஸ்ரீராமநாமம் சொல்லி, அருந்தவத்தால், இறைவன் அருளிய  இந்த திருக்குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார்கள்.மகான் அவர்களின் வரலாறு படிக்கும் போது ஒருவித தெய்வீகமும் ,ஈர்ப்பும் நம்மை கவர்கிறது.

  • வேத சாஸ்திரங்கள் பயின்று, இளமையிலேயே ஞானம் ஒளிர்விட, இவரை யாரும் வெல்ல இயலவில்லை." ஊர் வாயை எல்லாம் அடக்குகிற நீ உன் வாய்க்கு எப்போது பூட்டுப் போடுவாய்? ..." என்ற குருவின் ஆனைக்கிணங்க ,அடுத்த கணமே ,மௌனமாய், பரப்பிரம்மாக தம்மை மறந்து  பல காலம் ,இறைநிலையை எண்ணி ,அதில் மூழ்கி சுற்றித்திரிந்திருக்கிறார்கள்.

  • இறை நிலையிலேயே இருந்ததால் ,எப்பொழுதுமே ஆடைகளின்றி சதா பிரம்மத்தை எண்ணியே உலாவருவார்கள்.மாபெரும் மாளிகையும் ஒன்றுதான் மண்குடிசையும் ஒன்றுதான் .எல்லாம் இறையே ,எல்லாம் பிரம்மமே ! தாம்  செல்லும் வழியில் எதேச்சையாக  ,ஒரு மன்னனின் அவையில் நுழைய , அவனோ எப்படி இவ்வாறு ஆடையின்றி இங்கு வரலாம் என  அந்த மன்னன் இவர் கைகளை தம் வாளால் வெட்டிவீழ்த்த ,சிறு சப்தமுமின்றி,ஏதும் நிகழாதது போல அவர் தாம் போக்கில் செல்ல,மன்னனோ தம் அறியாமையை எண்ணி மகானின் கைகளை சுமந்துகொண்டு வெகு தூரம் சென்ற, மகானின் கால்களில் வணங்கி ,தம் பிழையை மன்னியுங்கள் என்று மன்றாட ,அப்பொழுதும் ஒன்றும் நிகழாதது போல கைகளை லேசாக தடவ ,அது மீண்டும் பழையநிலைமைக்கு மாறியிருக்கிறது.

  • ஒரு முறை விறகு வெட்டும் மூடர்கள், சும்மாதானே இவன் சுற்றிதிரிகிறான்  என்று மகானின் தலையில் ஒரு கட்டு விறகை தலையில் சுமக்க வைக்க ,மகானும் சுமந்து வந்து அவர்கள் சொன்ன இடத்தில் போட ,போட்ட உடனே அந்த விறகுமண்டலமே தீப்பற்றி விட்டதாம்.

  • தாம் செல்லும் இறைபயணத்தில் தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் அமைய  காரணமான,அங்குள்ள ஒரு புற்றினை அடையாளம் காட்டி,அங்கே அம்பாள் எழுந்தருளியிருப்பதை மன்னனுக்கும்,மக்களுக்கும் அடையாளம் காட்டியவரும் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரால் அவர்களே. 

  • சதா பிரம்மத்தை எப்பொழுதும் நினைவுகொண்டு வெகுகாலம் தம்மை மறந்து  ஓரிடத்தில் தவமிருக்க, பிறகு ஒரு காலத்தில் காவேரி பெருக்கெடுத்து கரைபுரண்டு மண்ணால்,  தாம் தவமிருந்த இடத்தையும் தம்மையும் மூட, அதன்பிறகு ஒரு சில ஆண்டுகழித்து ,ஆற்றில் மணல் எடுக்க வந்தவர்கள் ஓரிடத்தில் மண்வெட்ட, அங்கே ரத்தம் பீரிட்டு எழ, பதறிபோய் உள்ளே மெதுவாக தோண்டி எடுக்க, தவகோலத்தில் மகான் கண்டு அனைவரும் பிரமிக்க,ஆனால் மகானோ நினைவு வந்து ,எதுவும் நிகழாதது போல சட்டென எழுந்து நடந்துவிட்டார்களாம்.

  • அங்கு விளையாடிய சிறுவர்கள் கோரிக்கைக்கினங்க, கரூரிலிருந்து மதுரைக்கு அவர்கள் யாவரையும் நொடிப்பொழுதில்  வானவெளியில்அழைத்துசென்று, திருவிழாவை காணவைத்து,இனிப்பு மிட்டாய்ய எல்லாம் வாங்கிகொடுத்து, மீண்டும் அவர்களை கரூரில் இறக்கிவிட்டிருக்கிறார்கள்.

  • திருப்பதி வேங்கடாஜலபதிக்கு சமமான தரிசனம் பெற கரூரிலே, தான்தோன்றி மலையப்பர் எனும் கோவிலை தேர்ந்தெடுத்து, அங்கே ஜனஆகர்ஷன சக்கரம் ஒன்றினை பிரதிஸ்டை செய்துள்ளார்கள்.இன்றும் மக்கள் திருப்பதி செல்ல இயலாதவர்கள் இங்கு சென்று தரிசனம் செய்து பயன்பெறுகிறார்கள்.ஒரு மிக சிறிய பாறையில் பெருமாளின் தரிசனம், இன்றும் அந்த ஆகர்ஷன சக்கர இறைஅலைகளை உணரலாம்.

  • பிரம்மம் ஒன்றே எனும் நினைவு,சதா சர்வ காலமும் இறைஅலைகளிலே மூழ்கியதால்,பல சித்துகளும் பெற்று,தம்மை நாடி வரும் அன்பர்களுக்கு பல்வேறு குறைகளை , பல மக்களின் நோய்களை ,தம் பார்வையாலே குணப்படுத்தியிருக்கிறார்கள்.பல்வேறு ஸ்லோகங்களை உருவாக்கிகொடுத்திருக்கிறார்கள்.இப்படி அய்யாவின் வாழ்கை வரலாறு பிரமிக்கவைக்கும் வகையில் விரிகிறது.நன்கு விரிவாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.


காவேரி ஆறு சென்ற இடமெல்லாம் செழுமையாக இருக்கிறது.திருச்சியிலிருந்து  கரூர் இரண்டுமணிநேர பயணம், பிறகு அங்கிருந்து  20  நிமிட பயணம் நெரூர். ஒரு சிறிய கிராமமே. கிராமத்தின் எல்லையில் இருக்கும் ஜீவசமாதியை நோக்கி பயணிக்க, வெகு தொலைவிலே ஒரு இனம் புரியாத ஈர்ப்பு அலைகள் நம்மை சூழ்ந்துகொள்ளும். ஆஹா இந்த இடம் எவ்வளவு அமைதியாக உள்ளது ? இந்த குளுமைக்கும் செழுமைக்கும் காரணம் என்ன ?  எவ்வாறு இங்குமட்டும் தாவரங்களும் மரங்களும் செழித்து, கொழித்து,  வளர்ந்து ,இருக்கும் இடமெங்கும் நல்ல நிழல் பரப்பி அமைதியை நிலை நாட்டுகிறது...? என சிந்திக்க உண்மை புலப்படும்.மகான்கள் இருக்கும் இடமெங்கும் நல்ல நீரோட்டத்திற்கும்,செழுமைக்கும் குறைவிருக்காது அல்லவா .வெகு அருகிலே காவேரி ஆறு  ஓடுகிறது.ஆக இயற்கை எழில் சூழ அமைத்துள்ளது ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரால் ஜீவ சமாதி.

 பொதுவாக  அருள் அலை நிறைந்த இடங்களுக்கு செல்லும் போது தேவையானால் கால்வயிறு உணவு, அப்படி இயலாதவர்கள் அரைவயிறு உணவுடன் மட்டுமே செல்வது சிறந்தது. வயிறு முட்ட உணவு உண்டு செல்வதற்கு பதில் பேசாமல் வீட்டிலேயே இருந்துவிடலாம். ஆக்கத்துறையிலேயே எண்ணத்தை செலுத்துபவனுக்கும், மனதை வீணே சிதறடிக்காமல், முடிந்தவரை தேவைஇல்லாத கற்பனையும் தவிர்ப்பவனுக்கும், மனதில், எண்ணத்தில் ஆற்றல் மேலும் மேலும் சேமிக்கப்படுகிறது.இந்த சேமிப்பு மனதிற்கு ஒரு நல்ல ஸ்திரத்தன்மையை கொடுக்கிறது.ஒரு சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு தானே ,இந்த வயல்வெளிகளில் தானே ,சதாசிவ பிரம்மம்  என்றும் தம்மை இறையோடு இணைத்துக்கொண்டு,ஸ்தூல உடம்போடு  ,எதுவும் அற்று ,இறை நிலை ஒன்றே மட்டும் நினைவில் வைத்து ,இதோ இந்த  இடங்களில் தானே,வளம்வந்திருப்பார்கள்.ஆண்டுகள் பல நூறு கடந்தாலும் ,சதாசிவ பிரம்ம எண்ணம்,இதோ இந்த வெளியில்,இங்குள்ள பல நூறு ஆண்டு வயதுள்ள ,கல்லில் ,மண்ணில் ,மரத்தில், அய்யா அவர்களின் ஆற்றல் பதிந்திருக்குமல்லவா....அதிர்வு குறைந்த மன நிலையில் சென்றால் இவைகளை உணரமுடியுமல்லவா ...? ஆம் உண்மை.காவிவண்ணத்தில் வண்ணம் தீட்டப்பட்ட ஆலயம்.நாவல் மரம் ,அரசமரம்,தென்னைமரம்,ஆலமரம்,நாகலிங்க மரம் ,வில்வமரம்  போன்ற பல மரங்கள்  நிழல் சூழ கோவில் அமைந்துள்ளது.கோவிலின் நுழைவாயிலில் ஒரு சிறிய கிணறு .கையை எட்டி நீர் எடுக்கும் அளவுக்கு நீர் வளம் நிறைந்துள்ளது.ஒரு சிவன் கோவில் அதில் காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு லிங்கம்  பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது,அதற்கு அருகிலே ஒரு பத்தடி தூரத்தில் அய்யாவின்  ஜீவசமாதி. அதன் மேல் ஒரு வில்வமரம் ,மிக வயது முதிர்ந்த மரம்.கிட்டதட்ட குறைந்தது ஒரு 200 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் அதன் வயது, ஆகவே இப்பொழுது அதன் அடி பாகம் மட்டுமே இருக்கிறது.அதனை சுற்றிலும் ஒரு திண்டு போன்று கட்டியுள்ளார்கள்.சாதரணமாகவே கோவில் ஒரு  வித அமைதியிலே இருக்கிறது.இங்கே ஜீவ சமாதியிலே இன்னும் ஆழ்ந்த அமைதி தென்படுகிறது. அருகினில் செல்லும் போதே பேசாமல் வாயை மூடி இருக்கவே தோன்றுகிறது.கருமையான  வண்ணத்தில் ஐயாவின் தேகத்தை ஒரு குத்துமதிப்பாக  அருகில் உள்ள சுவரிலே வரைந்துள்ளார்கள்.அமைதியில் மனம் திளைக்கிறது.ஆழ்ந்த அமைதி நோக்கி இழுக்கிறது .பேரமைதி நோக்கியே செல்கிறது.கிட்டத்தட்ட ஒரு இரண்டு மணிநேரம் இருந்திருக்கும் ,என்ன நடந்தது என்றே தெரியவில்லை.உயிரில் என்ன மாற்றம் நடந்தது ,சற்று முன்னர் தான் அமர்ந்தது போல இருந்தது.இவ்வளவு மணிநேரம் எப்படி சென்றது என தெரியவில்லை.

மிகப்பெரும் ஒரு ஜீவ காந்தபுயல்  ,எம்மை எமது உயிரை,எமது சூட்சும உடலை  எங்கோ இழுத்துச்செல்கிறது.ஒரு ஆரம்பமும் முடிவும் இல்லையெனில் ,நடுவில் நடப்பதை எப்படி கணிக்க முடியும் ,எவ்வாறு ஆரம்பித்தது என்று தெரிந்தால் தானே அதனை பற்றிய நிகழ்வுகளை ,மாற்றங்களை உணரமுடியும்.எங்கோ ஆழ்ந்த அமைதி ,எங்கு இருக்கிறோம்,இனி என்ன செய்யபோகிறோம் எதுவும் கணிப்பதர்க்கில்லை.ஏதோ ஒன்று,கருமை சூழ்ந்த ,அல்லது எதுவும் அற்ற  வெளி, அந்தரம் என்று  சொல்ல இயலுமோ ?! ,எங்கோ ஏதோ ஒன்றின் பயணத்தில் எம்மை இணைத்தது போல தான்  இருந்தது.அங்கே எதுவும் தேவை இல்லை .யாரும் தம்மை இணைத்துக்கொள்ளலாம்.ஒரு முறை இணைத்துவிட்டால் எத்தனை காலம் ,நேரம் சென்றாலும்,இருந்த நிலை மாறாது அப்படியே இருக்க இயலும்..இங்கு மட்டும் தான் மாற்றம்  என்பதே கிடையாது.மாற்றம் இருந்தால் தானே  இன்பம் ,துன்பம்,ஆசை, தேவை போன்றதெல்லாம்.எந்த தேவையும் இல்லை.அமைதியின் விளிம்பு.சும்மா இருப்பது  எத்தனை சுகம் என்பது இங்கே தான்.வாழும் இந்த பூமி ஏதோ ஒரு சிறிய புள்ளிபோல இந்த பிரபஞ்சத்தில் சுழல்கிறது.ஆனால்இந்த பிரபஞ்சமோ எதுவும் இன்றி ,இங்குள்ள எதுவும் அற்ற வெளியில் மூழ்கி இருக்கும் சுவடு தெரியாது கரைந்துவிடுகிறது.


இங்கே சும்மா இருத்தல் எத்தனை ஆற்றல் உள்ளது. எடை அற்ற உயிர் எவ்வளவு ஆற்றலை இழுத்துக்கொள்கிறது தெரியுமா ?இங்கே இருக்க இருக்க ஒரு ஜீவ ஒளி ஒன்று சூழ்கிறது.இறைஅலைகளால் உயிர் நிறைகிறது.விளைவு ,அதனோடு தொடர்பு கொண்ட மனம் , ஒரு நிறைவோடு இருக்க விளைகிறது.சாந்தம் ,தெளிவு ,அமைதி,கருணை இவை எல்லாம் இங்கே தான் பிறக்கிறது. இம்மி அளவும் அசைவில்லாது , இறை அலைகளால் அடித்து போட்டது போன்ற ஒரு பயணம். ஒரு காரிருள் கொண்டஇறைவெளி பயணம் ,தந்தை ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரால் அய்யா அவர்களின் கருணையால் கிடைத்தது.அன்புள்ளம் கொண்ட மகான் ,சும்மா இருத்தல் எத்தனை சுகம் என்பதை  எமக்கும் உணர்த்திய மகான்.இதயம் நிறைந்த நன்றி அலைகளுடன்,கண்ணீர்மல்கி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து,ஒருவாறு எழுந்து சிறிது தூரம் நடந்தேன். உடல் விடைபெற்று கோவில்வெளியே வந்தாலும் .உள்ளம் மட்டும் அய்யாவின் கருணையை, ஆற்றல்களை பிரமிப்பூட்டும் அந்த பயணத்தை, அது எம்முள் ஏற்படுத்திய ஜீவ உயிர்மாற்ற நிகழ்வுகளை  எண்ணிக்கொண்டேஇருந்தது  வெகுநேரம்.

பௌர்ணமி நாட்களில்  வெகு சிறப்பாக  பூஜை நடைபெறுகிறது .மக்கள் அதிகம் வருகிறார்கள்.மற்ற நாட்கள் கூட்டமின்றி உள்ளது.ஒரு முறை வாய்ப்புகிடைக்கும் போது சென்றுவாருங்கள்.மகானின் அருள்ஆசி பெறுங்கள்.அகத்திய உள்ளங்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டு,வரும் காலம்  இறைஅலைகளும் மகான்கள் அருள்அலைகளும்  அகத்திய  உள்ளங்களை  என்றென்றும் நிரப்பட்டும் என வாழ்த்தி, காலம் வழிவிட விரைவில் மற்றுமொரு நிகழ்வில் மீண்டும் சந்திக்கின்றேன்...

ஒம் அகத்தீஸ்வராய நமக !
ஒம் அகத்தீஸ்வராய நமக !
ஒம் அகத்தீஸ்வராய நமக !


Friday, November 14, 2014

செல்வவளம் அருளும் திருமகள் போற்றி !
நீண்ட இடைவெளிக்குபிறகு  அகத்திய உள்ளங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.அப்பப்பா....!காலம் சுழன்று கொண்டே பல்வேறு மாற்றங்களை உருவாக்கி கொண்டு  ஓடிக்கொண்டேயிருக்கிறது.எமது ஒரு கட்டுரைக்கும் அடுத்த கட்டுரைக்கும் இடையே பிரமிக்க வைக்கும் மாற்றங்கள்.இறை உணர்வோடு செயல்களை செய்தாலும் சரி,இல்லை  வேறு வழியில் சிற்றறிவிற்கு எட்டிய வரை செயல்கள் செய்தாலும்,அனைத்தும்,தக்க விளைவுகளை கொடுத்துக்கொண்டே, காலம்  தம் பயணத்தினை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.மாதம் மூன்று லட்சம் சம்பளம் வாங்கியவருக்கும்,முப்பது ஆயிரம் சம்பளம் வாங்கியவருக்கும் கர்மவினை என்ற ஒன்று ஆட்டிப்படைத்துக்கொண்டுதான் இருக்கிறது அதனதன் பதிவிர்கேற்ப.என்ன செய்தோம் இந்த உயிர் அறிவை உணர ?எவ்வாறு  இங்கே கொட்டிகிடக்கும் சூட்சும அலைகளை உணர, நமக்கு கிடைத்த இக்காலகட்டத்தை பயன்படுத்திக்கொண்டோம்? எந்த அளவுக்கு இறைநிலையிலேயே இருக்க பழகிக்கொண்டோம் ? என்ற கேள்விகளுக்கு பெரும்பாலும் இல்லை என்ற பதில் தான் எம்மையும் சேர்த்து.


இறைஅலைகளோடு இல்லாத எமது நாட்கள் எல்லாம், பிச்சை எடுப்பதற்கு சமமாக இருந்திருக்கின்றது  என்பதை பல முறை உணர்ந்திருக்கின்றேன்.விட்டதை பிடித்து மீண்டும் இருக்கும் பழைய நிலையை அடைய எம்மை தயார் படுத்திக்கொண்டு, எம்மை சரிசெய்து மீண்டும் இறைஉலகத்தில் எம்மை செலுத்துவது என்பது ஒரு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது.காலமே வென்று போகட்டும்  கடைசியில், ஆனால் முயற்சிகள் தொடரவேண்டுமல்லவா ? .ஊற்றை சடலத்தை வைத்துகொண்டு, ஒன்றுக்கும் ஆகாமல் கடைசியில் சாம்பலாகும்  சரீரம் வளர்க்க,
இருக்கும் பொன்னான காலத்தை  நன்மை தாராமல்  பயன்படுத்தல் எங்கனம் ஞாயமாகும்?

Be energetic always  என்பதற்கு நிறைய  வழிகள் இருக்கின்றன  என்பது நாம் அனைவருக்கும் மிக பரீட்சயமான ஒன்று.அதை சற்று ஞாபகபடுத்துவதே இதன் நோக்கம்.ஒரு சில ஸ்லோகங்கள், அங்கே மிக  அதீத சக்தி அதிர்வு அலைகள் பொதிந்து கிடக்கிறது. இவை சரியான முறையில் பயன்படுத்த ,நம்மை சுற்றி,நம் செய்யும் செயல்கள் யாவற்றிலும், நல்ல  energetic field ஜ உருவாக்கிக்கொண்டேயிருக்கிறது.எந்த வார்த்தை எந்த   அதிர்வு அலையை மனதில் எழுப்பி  ,எவ்வாறு ஆத்மாவின் ஜீவ அலையை fine  tune செய்து, ஆக்கசக்தியாக, வளம் தரும் சக்தியாக  மாற்றும் தன்மை  உண்டு, என்பதை நன்கு பிரித்து உணர தெரிந்தவன் ஞானி.ஏனையோர்  இங்கே எம்மை போன்று கத்துக்குட்டிகளே. இதற்கு இதுபோன்ற பயன்கள் என  நிறைய சொல்லஇயலும்.இப்படி சொல்வதை விட நேரடியாக இதை பயன்படுத்தி என்னென்ன நன்மைகள்  ஏற்படுகிறது என்பதை  செயல்படுத்தி உணர்ந்து பார்ப்பதே சாலச்சிறந்தது.

ஒரு செயலைவெற்றியோடு முடிக்க அதன் தொடக்கத்திற்கும் முடிவுக்கும் இடையே எத்தனைதடைகள் உள்ளதோ,அதனை ஒவ்வொன்றாக சரிசெய்து  போராடி இறுதியில் வெற்றியினை அடைவது என்பது ஒரு சாதாரண approach.ஆனால் இங்கே  இந்தஜீவ இறைஅலைகள் தொடர்போடு   எந்த ஒரு செயலையும் எதிர்கொள்ள, அஞ்ஞானம்  ( பொருள் ,செயல் தன்மை பற்றிய அறியாமை) அகன்று ,உண்மை நிலை தானாக அறியப்பட்டு, இனிவரப்போகும் நிகழ்வு செயல் பற்றிய விழிப்பு நிலையினை முன்கூட்டிய கணிக்கும் அறிவு பெறப்பட்டு, வெற்றியை  அடைவது, என்பது இந்த energetic approach. முயன்று பார்ப்பதில் என்ன தவறு ? இழப்பு ஒன்றுமில்லையே.முயன்று பாருங்கள் !


நண்பர் ஒருவர் சமஸ்கிருத மொழியில்  ஒரு சில ஸ்லோகங்களை விளக்கிக்கொண்டிருந்தார். உண்மையாக அதன் அர்த்தம் எம்மால் உணரஇயலவில்லை .ஆனால் நண்பர் பேசும் பேச்சில், தொனியில்,அங்கிருந்து வெளிக்கிளம்பிய அலையில் ,ஏதோ ஒரு ஆற்றல் இருப்பது  மற்றும் தெரிந்தது. அபப்டி ஆழ்ந்து கவனிக்க ,நண்பர் விளக்கிய ஸ்லோகம் ,ஒரு விதஇறைஆற்றலை உள்ளடக்கியது  என்பதை மெதுவாக உணரமுடிந்தது.இதை யாவருக்கும் தெரிந்த ஒன்று தான்என்றாலும் , செயல் முறைபடுத்தாமல் இருக்கும் சோம்பேறித்தனத்தை நீக்க  வழி வகை செய்தல் வேண்டும்  என எண்ணத்தோன்றியது.

ஆதிசங்கரர் எழுதிய ஸ்ரீகனகதாரா ஸ்தோத்ரம், மிக பிரசித்திபெற்ற  சக்திவாய்ந்த  ஸ்தோத்ரங்களுள்  ஒன்று. எந்த அளவுக்கு இறைநிலையில் ஒன்றுகலந்து ,ஒரு மெல்லிய அலைநீளம் பிடித்து, தாயவள் அருள்அலைகளை தொடும் வண்ணம், இதனை அழகான வார்த்தைகளால் கோர்வையாக்கி,ஒரு தெய்வீக அருள் மனம் கமழும் அழகிய மாலையாக,ஸ்தோத்ரமமாக உருவாக்கியுள்ளார்கள்.இதற்காகவே காலமெல்லாம் ஆதிசங்கரரின் திருவடிதொழவேண்டும் என எண்ணத்தோன்றுகிறது.சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் இருக்கும் இடம்  தரும் அலை, ஒரு தனி ஆன்மீக சுகம்.அதே போல் திருவண்ணாமலைகோவில் கருவறை தரும் சுகம் ஒரு தெய்வீக சுகம்,சூட்சுமத்தை திறப்பது போன்று ஒரு சுகம்.இவை யாவும் அங்கே நேரே சென்று உணரவேண்டிய அலைகள்.ஆனால் இங்கே ஆதிசங்கரர்  தாம் உணர்ந்த இறை அலைகளை ,இங்குள்ள வார்த்தைகளால் பிடித்து யாவரும் உணரும் வண்ணம் வைத்துள்ளார்கள்.எந்தஅளவுக்கு ஒரு உயிர் ஈர்ப்பு காதல் இங்கே  ? காதலே தெய்வீகமாக மாறுகிறது.இமைப்பொழுதும் பிரியாத தீவிர அன்பு இங்கே.சர்வமங்களமும் நிறைந்த ஒரு அழகிய திருமுகம் ,இமைமாறாது பரந்தாமன்  அழகிலே மயங்கி,மருடி,அதனால் உண்டான பிரேமத்தால்,தம்மையே மறந்து ,தமக்கும் இறைவனுக்கும் இடையே  யாருமே பிரிக்க இயலாத ஒரு நுண்ணிய  தெய்வீக காதல் கொண்டு ,அன்பு அலைகளால் வியாபித்து,பரமானந்தத்தில் திளைக்கும் ஒரு தெய்வீக மகள்,திருமகள்.இத்திருமகள்  பார்வை படுமிடமெல்லாம் கோடி கோடி புண்ணியமாம்.நினைத்து பார்க்க இயலாத, அளவிடமுடியாத செல்வ வளம் பெருகுமாம் .மாங்கல்யதாஸ்து மம மங்கள தேவதயா !

துஷ்கர்ம கர்ம மபநீய சிராய தூரம்,சூரிய ஒளி பட்டால் பணிவிலகுவது போல,தாயவள் அருள் பார்வை பட,நம்மை பிடிந்திருந்த கர்மம் ஓடிவிடும்.வறுமை  விலகிவிடும். நல்ல செழுமைநோக்கிய அலைகலை உருவாக்கும்.எந்த ஒரு வறுமைக்கும் அவர்தம் கர்மவினைதானே காரணம்? அவைகளை விரட்டியடிக்கும் தாயவள் திருஅருள் பார்வை.எங்கு தாயவள் அருள் இருக்கிறதோ ,அங்கே சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்திருக்கிறதாம்.மான் விழி போல மருண்ட பார்வையில்,என்றும் அண்ணலின் மீது இடைவிடாத இவள் கொண்டுள்ள காதல் ,அதற்கு ஆதிசங்கரர் தரும் உவமை,இவை யாவும் படிக்கவே பிரமிப்பாக உள்ளது.இந்த உலகத்தில் உட்சென்று ,அர்த்தங்களை புரிய முற்படும் போதே ,ஒரு வித அலை சூழ்வது போன்ற ஒரு பிரம்மை .ஆம் அது ஒரு ஜீவ அலை,செல்வ வளம் தரும் அலை.சகல ஐஸ்வர்யங்களையும் பெற வைக்கும் அலை என்பது யாம் ஒரு துளி உணர்ந்த சத்தியமான உண்மை.மீண்டும் மீண்டும் இடைவிடாது இந்த அலைகளை உணர முயற்சிசெய்வது என்றும் நம்மை செல்வவளத்தில் வைத்திருக்கும் என்பதும் உண்மை.
 இதனுள் ஓரிரு முறை முயன்று உச்சரித்து முடிந்த வரை தினந்தோறும் சொல்ல முயற்சி செய்யுங்கள் .இதனை எவ்வாறு உச்சரிப்பது இதன்  சரியான பொருள்,விளக்கம் முதல் mp3 வரை எல்லாம் இந்த வலைஉலகத்தில் கொட்டிக்கிடக்கின்றது.தேடி நன்கு இதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.இதிலே செல்வவளமை அளிக்கும் ஒருவித சூட்சும அலை பொதிந்துள்ளது.அன்பால் உருகி தாயவள் ஸ்ரீமகாலட்சுமியின் அருள்பார்வை பெற்றிடுங்கள்.

ஒம் அகத்தீஸ்வராய நமக... !


ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்ரம் அங்கம்ஹரே: புலகபூஷணமாஸ்ரயந்தீ
ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம்
அங்கீக்ராதாகில விபூதிரபாங்கலீலா
மாங்கல்யதாஸ்து மம (என்னுடைய) மங்களதேவதாய:மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தரும் தமால  மரத்தைப் பொன்வண்டு மொய்த்துக் கொண்டு இருப்பதைப் போல, பரந்தாமனின் அழகிய மார்பை உள்ளம் மகிழ மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவியின் அருட்கண்கள் சகல மக்களுக்கும் சகல செல்வங்களையும் வழங்குமாறு வேண்டுகிறேன்.

முக்தாமுஹுர்விதததி வதநே முராரே:
பிரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி
மாலா த்ருஸோர் மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாயா:

ஸ்ரீ லட்சுமி தேவியின் கண்களைப் பார்க்கும் போது நீலோத்பல மலரில் தேனை உண்ண வரும் பொன்வண்டுகளே நினைவிற்கு வருகின்றன. பெரிய நீலோத்பல மலர் போல காட்சியளிக்கும் பகவானின் திருமுகத்தை நோக்கி தேவியினுடைய கண்கள் ஆசையோடு செல்வதும், வெட்கத்துடன் திரும்புவதுமாக இருக்கின்றன. பாற்கடலில் தோன்றிய அன்னை ஸ்ரீலட்சுமிதேவி ஸ்ரீமஹாவிஷ்ணுவையே பார்த்துக் கொண்டிருக்கும் அருட்கண்கள் என்னையும்பார்க்கட்டும். எனக்கு செல்வத்தை வாரி வழங்கட்டும்.

 
ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்
ஆநந்தகந்தமநிமேஷமநங்க தந்த்ரம்
ஆகேகரச்திதகநீநிகபக்ஷ்மநேத்ரம்
பூத்யை பவேந் மம புஜங்க ஸயாங்கநாயா:


ஆதிசேஷன் மீது படுத்து பாற்கடலில் எப்போது யோக நித்திரையில் இருந்துவரும் ஸ்ரீமஹாமிஷ்ணுவின் மீது விழுகின்ற ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை என்மீது பட்டு எனக்கு அளவில்லாமல் செல்வத்தை அள்ளித்தருவதற்கு துணைபுரியட்டும்.


பாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி
காமப்ரதா பகவதோ(அ)பி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா:

மது என்றழைக்கப்படும் அரக்கனை ஜெயித்ததில் அடையாளமாக நீலநிற மணிமாலையுடன் காட்சி கொடுக்கும் பகவானுடைய மார்பில் இனைந்து கிடக்கும் போது ஸ்ரீ மஹாலட்சுமியின் கண்கள் பகவான் மார்பில் கிடக்கும் நீலநிறக் கற்கள் போன்று பிரகாசிக்கின்றன. அந்த அருட்பார்வை எனக்கு எல்லாவித மங்களகளையும் உண்டாக்கட்டும்.

காலாம்புதாலி லலிதொரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதி யா தடிதங்கநேவ
மாது ஸமஸ்தஜகதாம் மஹநீயமூர்த்தி:
பத்ராணி மே திஸது பார்க்கவ நந்தநாயா:

மிகக் கொடிய அரக்கனான கைடபனை வதைத்த பகவானின் மார்பில் இணைந்த தேவியின் கண்கள் மழை மேகத்தில் தோன்றிய மின்னலைப் போன்று காட்சி தருகின்றன. ஸ்ரீலட்சுமியின் இந்த மின்னொளிக் கண்கள் எனக்கு செல்வத்தை அளிப்பதாக.

ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்யபாஜி மதுமாதிநி மந்மதேந
மய்யாபதேத் ததிஹ மந்த்ரமீக்ஷணார்த்தம்
மந்தாலஸம் ஸ மகராலய கந்யகாயா:

ஸ்ரீ பெருமாளிடத்தில் மன்மதனின் ஆதிக்கம் உண்டாகக் காரணமாக இருந்த கண்கள் எதுவோ அந்த தேவியின் கண்கள் எனக்கு செல்வத்தை வழங்கட்டும்.

விஷ்வாமரேந்த்ரபத விப்ரமதாநதக்ஷம்
ஆநந்தஹேதுரதிகம் முரவித்விஷோ(அ)பி
ஈஷந்நிஷீதது மயி க்ஷணமீக்ஷணார்த்த
மிந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா:


அரக்கர்கள் பலரை அழித்த மஹாவிஷ்ணுவின் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியூட்டும் ஆற்றல் கொண்ட மஹாலட்சுமியின் திருக்கண்கள் எனக்கு செல்வத்தை அள்ளி வழங்கட்டும்.

இஷ்டாவிஷிஷ்டமதயோபி யாயா தயார்த்த
ஸ்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் சுலபம் லபந்தே
திருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதர தீப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா:


எல்லாவித யாகங்களும் பெருந்தவங்களும் செய்தால் மட்டும் அடையக்கூடிய சொர்க்க பதவியை அன்னை ஸ்ரீமஹாலட்சுமி தேவியின் அருட்பார்வையினால் மட்டுமே அடைய முடியும். அந்தத் தேவியின் திருப்பார்வை எனது வேண்டுதலை நடத்தி வைக்கப்படும்.

 
தத்யாத் தயாநுவபநோ த்ரவிணாம்பு தாரா
மஸ்மிந்நகிஞ்சந விஹங்கஸிஸௌ விஷண்ணே
துஷ்கர்ம கர்ம மபநீய சிராய தூரம்
நாராயண ப்ரணயிநி நயநாம்புவாஹ:


எவ்வாறு கார் மேகமானது காற்றினால் திரண்டு மழையாகப் பொழிகிறதோ, அது போன்று ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பிரியத்திற்குரிய ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை பட்டவுடன் என்னைப் பிடித்திருந்த வறுமை ஒழிந்து செல்வந்தனானேன்.

கீர்தேவதேதி கருடத்வஜ ஸுந்தரீதி
ஸாகம்பரீதி ஸஸிஸேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதி ப்ரளயகேளிஷு ஸம்ஸ்திதா யா
தஸ்யை நமஸ்த்ரிபுவநைக குரோஸ்தருண்யை


திரிகாலம் என்று சொல்லப்படுபவைகளான சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் இவற்றில் முதலும் முடிவுமான சிருஷ்டி காலங்களிலும், சம்ஹார காலங்களிலும் வாணியாகவும், லட்சுமியாகவும், ஈஸ்வரியாகவும் தோன்றுகிற ஸ்ரீமஹாலட்சுமியே உன்னை வணங்குகிறேன்.


ஸ்ருத்யை நமோஸ்து ஸுபகர்மபலப்ரஸுத்யை
ரத்யை நமோஸ்து ரமணீய குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து சதபத்ரநிகேதநாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை


நல்ல ஒப்பற்ற பேரழகுள்ளவளும், அருட்குணம் கொண்டவளும், மகாசக்தியுள்ளவளும், பகவானின் பிரியத்தையுடையவளும், எல்லாவித சுபகர்மங்களுக்கும் பயனளிக்கிற கருணைக் கடலுமாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவி எனக்கு அருள வேண்டும்.

நமோஸ்து நாளீகநிபாநநாயை
நமோஸ்து துக்தோததி ஜந்ம பூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை

பாற்கடலில் யோகநித்திரையில் பள்ளிக்கொண்டிருக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அன்பிற்குரிய நாயகியே எனக்கு அருள்புரிய வேண்டும்.


நமோஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
நமோஸ்து பூமண்டலநாயிகாயை
நமோஸ்து தேவாதிதயாபராயை
நமோஸ்து ஸார்ங்காயுதவல்லபாயை


முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு தன் கருணை வெள்ளத்தைப் பொழிந்தும், பரந்த இவ்வுலகமாகிய பூமிக்கு நாயகியாக விளங்கும் ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.

நமோஸ்து தேவ்யை ப்ருகுநந்தநாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்தியயை
நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதரவல்லபாயை


சிவந்த தாமரைப் பூவில் வசிப்பவளும் சகல வுயிர்களின் நன்மை தீமைகளையும் கவனித்தபடி இருப்பவளுமான ஸ்ரீமந்நாராயணனின் பிரியத்திற்குரிய நாயகியே! உன்னை வணங்குகிறேன்.

நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவநப்ரஸூத்யை
நமோஸ்து தேவாதிபி ரர்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜவல்லபாயை


சகல ஐஸ்வர்யங்கள், எல்லாவித செல்வங்கள் ஆகியவற்றின் இருப்பிடமாகவும், எல்லா உலகங்களையும் படைத்தவளாகிய ஸ்ரீலட்சுமிதேவியே உனக்கு நமஸ்காரம்.

சம்பத்கராணி சகலேந்த்ரிய நந்தநாதி
சாம்ராஜ்யதாநவிபவாநி ஸரோருஹாக்ஷி
த்வத்வந்தநாதி துரிதாஹரணோத்யதாநி
மாமேவ மாதரநிஸம் கலயந்து மாந்யே

எல்லாவகைச் செல்வங்களைத் தரக்கூடியவளும், உலகத்து உயிரினங்கள் அனைத்திற்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடியவளும், பக்தர்களாகிய அடியார்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தருபவளுமாகிய ஸ்ரீமஹாலட்சுமியாகிய உன்னை வணங்குகிறேன்.

யத்கடாக்ஷஸமுபாஸநாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்தஸம்பத:
ஸந்தநோதி வசநாங்க மாநஸை:
த்வாம் முராரிஹ்ருதயேஸ்வரீம் பஜே


தனது கடைக்கண் பார்வையால் கருணையை தன்னை வழிபடும் பக்தர்கள் மீது பொழிந்து அவர்களுக்கு எல்லாவித செல்வங்களையும் அள்ளித் தருகிற ஸ்ரீலட்சுமிதேவியை மிகவும் அடிபணிந்து வணங்குகிறேன்.

ஸரஸிஜநிலயே ஸரோஜஹஸ்தே
தவள தமாம்ஸுக கந்தமால்யஸோபே
பகவதி ஹரிவல்லபே மநோக்ஞே
த்ரிபுவநபூதிகரி ப்ரஸீத மஹ்யம்


சகல உலகங்களுக்கும் செல்வங்களை அளவின்றிக் கொடுப்பவளும், ஸ்ரீமந்நாராயணனின் அன்புக்குரிய நாயகியாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை அடிபணிந்து வணங்குகிறேன்.

திக்கஸ்திபி: கனககும்பமுகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹிநீ விமலசாரு ஜலாப்லுதாங்கீம்
ப்ராதர்நமாமி ஜகதாம் ஜநநீ மஸேஷ
லோகாதிநாத க்ருஹிணீ மம்ருதாதிபுத்ரீம்


பாற்கடலை தேவர்கள் கடைந்த போது கிடைத்ததற்கரிய அமிர்தம் உண்டாகியது. அந்தப் பெருமை பொருந்திய பாற்கடலின் மகளானவளும், உலகத்திற்கெல்லாம் நாயகனான ஸ்ரீமஹாமிஷ்ணுவின் நாயகியுமான ஸ்ரீலட்சுமிதேவியே! உன்னை
வணங்கிப் போற்றுகிறேன்.

கமலே கமலாக்ஷவல்லபே த்வம்
கருணாபுர தரங்கிதைரபாங்கை:
அவலோகய மாமகிஞ்சநாநாம்
ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா:

எப்போதும் கருணைவெள்ளம் ததும்பி ஓடும் உனது கடைக் கண்களால், வறியவர்களில் முதல் நிலையிலிருக்கிற உனது பக்தன் பிழைக்கும் வழியைக் காட்டியருள வேண்டும்.

 
ஸ்துவந்தி யே ஸ்துதிபிரமீபிரந்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவநமாதரம் ரமாம்
குணாதிகா குருதரபாக்யபாகிந:
பவந்தி தே புவி புதபாவிதாஸயா:
 

மூவலகங்களுக்கும் தாயாகவும், வேதங்களின் உருவ மாகவும், கருணைவெள்ளம் கொண்டவளும் ஆகத் திகழும் ஸ்ரீ மஹாலட்சுமியை மேற்கூறிய 'கனகதாரா ஸ்தோத்திரத்தினால்', நாள்தோறும் 108 முறை போற்றி செய்து வழிபடுவோர் மிகச் சிறந்த குணம்பெற்றவர்களாகவும், குறையாத செல்வம் உள்ள செல்வந்தர்களாகவும், உலக வாழ்வில் எல்லா ஐஸ்வர்யர்களையும் அடைத்து பூரண நலத்துடன் வாழ்ந்து விளங்குவார்கள்..