ஸ்ரீ மச்சமுனி சித்தர் அய்யா - திருப்பரங்குன்றம்-II




சித்தன் அழைத்தால் தான் சித்தனை பற்றிய அருள் அலைகளை உணரமுடியும்.என்னதான் மனம் விரும்பி வலுகட்டாயமாக சென்றாலும் சித்தன் அழைக்கவில்லை எனில் சித்தரின் தரிசனம் கிடைக்காது.அதிகாலை நேரம் ஒரு கனவு. அதில் ஒரு பெரிய மரம் அதன் அருகே ஒரு மூலிகை செடி அருகே ஒரு பெரிய மலைபாறை ,அதில் அழகிய சித்தர் உருவம் படமாக மிக அழகாக வரையப்பட்டுள்ளது.சித்தரின் பெயர் தெரியவில்லை.அருகிலேயே இருக்கும் மூலிகை அற்புதமான நறுமணம் கமழ்கிறது.சட்டென எழுந்துவிட்டோம் .இன்று ஏதோ ஒரு சித்தரின் அல்லது மகானின் தரிசனம் கிடைக்க போகிறது என்பது மட்டும் தெரிந்தது.

ஏதேனும் ஒரு கோவிலுக்கு செல்லலாம் என முடிவுஎடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல ஆயத்தமாகி கிட்டதட்ட ஒரு  மாலை நான்கு மணிக்கு மெதுவாக மலை அடிவாரம் வந்தோம் .சரியான கூட்டம் ,ஏன் என விசாரித்த  போது ,இன்று சஷ்டி ஆரம்பம் ,இன்று முதல் நாள்  ஆதலால் இதோ  இங்கே தெரிகிறதே சரவணபொய்கை அங்கே குளித்து முருகனை தரிசித்து காப்பு காட்டி விரதம் அனுஷ்டிப்பார்கள் என்றனர்.மெதுவாக கடந்து மேல் செல்ல ஆயத்தமானோம்.மலை எங்கும் அதிக அளவில் பாறைகள் தென்பட்டாலும் ஆங்காங்கே இருக்கும் செடிகொடிகள்,மரங்கள் ,பச்சைபசேலென வளர்ந்த புற்கள் மிக அழகாக பார்க்கவே மிக ரம்மியமாக இருந்தது.நகரஎல்லை வரை மாசுகாற்றை சுவாசித்துவிட்டு ,இதோ இங்கே வீசும் மூலிகை கலந்த காற்றை சுவாசிக்கும் போதே வித்தியாசம் உணரமுடிகிறது.தெள்ளிய மெல்லிய அடர்வு லேசான மாசற்ற காற்று, நன்கு இழுத்து சுவாசிப்பதே ஒரு சுகம். ஒரு ஆரோக்கியம்.மனசும் லேசாகிறது.என்னதான் படி ஏறி மேல் செல்வது கடினமாக இருந்தாலும் ,இந்த தென்றல் ,ஆரோக்கியமான காற்று ,எல்லாத்தையும் மிக சுலபமாக்கிவிடுகிறது,




ஒரு வழியாக மேலே வந்து காசி விஸ்வநாதர் தரிசனம்,கூட்டமே இல்லை இங்கே .அருகிலேயே ஒரு சுனை,சுனையின் அருகிலேயே அய்யாவின்  பக்தர்கள் ,மீனாக  சுனையின் உள்ளே வாழ்ந்துகொண்டிருக்கும் ஸ்ரீ மச்சமுனி அய்யாவை காண சுனையின் அருகிலேயே அமர்ந்து தியானத்தில் இருக்கிறார்கள்,,இரண்டு மூன்று பெரிய மீன்கள் ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நீரை விட்டு மேலே வருவதும் செல்வதுமாக இருக்கிறது.
வாங்கி வந்த பிஸ்கட் எடுத்து தண்ணீரில் போட மிக அழகாக வந்து சாப்பிடுகிறது.நல்ல பெரிய தாடையும் மீசையும் உள்ள இரண்டு மூன்று மீன்கள் வருவதும் செல்வதுமாக இருக்கிறது.இவற்றுள் சுத்தவெண்மையான நிறம் கொண்ட ஒரு பெரியமீன் இருக்கிறது .அதுவே  ஸ்ரீ மச்சமுனி சித்தர் அய்யா என்கிறார்கள்.







அங்கே ஒரு அன்பர் மஞ்சள் நிறவேஷ்டியுடன் வந்தார் ,கொஞ்சம் தாடிவைத்திருக்கிறார்.நல்ல அன்புள்ளம் நிறைந்தவர் ,அவரையும் எல்லோரும் சாமி என்றழைக்கிறார்கள்.வந்தார் ஒரு வாளி நிறைய தண்ணீர் சுனையிலிருந்து மோந்துவந்து வெளியே வைத்து குளிக்கிறார்.சென்றமுறை வந்தபோது குளிக்கஇயவில்லை.இந்த முறையாவது குளித்தால் நன்றாக இருக்கும் ஆனால் துண்டு எதுவும் எடுத்து வரவில்லையே என எண்ணிக்கொண்டிருக்கும் போதே அந்த சாமி சொல்கிறார்.சும்மா நீங்களும் குளியுங்கள் .துண்டு இல்லையே என கவலைவேண்டாம்.நீங்கள் இங்கிருந்து கீழே செல்வதற்குள் காய்ந்துவிடும் என்றார்,உடனே யாமும்  அங்குள்ள வாளியில் அந்த காசிக்கு நிகரான தீர்த்தத்தை எடுத்து தலையில் ஊற்ற ,மிக அற்புதமாக இருந்தது.

பிறகு அந்த சாமி தாம் வாங்கிவந்த பால்கோவாவை ,சுனை நீரை ஒரு வட்ட மிட்டு அதிலே வைக்க ,பெரிய பெரிய மீன்கள் மேல் சொன்னது போல் இருக்கும் பெரிய நீண்ட மீசைஉள்ள  மீன்கள் ,மிக அழகாக வாங்கி சாப்பிடுகிறது.இவை யாவற்றையும் வீடியோ எடுத்தோம் ஆனால் அவை பதிவாகவில்லை .ஏன் என தெரியவில்லை .மீனை பார்க்கும் ஆர்வத்தில் ஒழுங்காக பதிவுசெய்யாமலும் இருந்திருக்களாம்.

அந்த சாமி அருகிலேயே இருக்கும் சுனையின் மேல் உள்ள பாறையில் அமர்ந்து தியானத்தில் அமர்ந்துவிட்டார்.சிறிது நேரத்தில் அந்த அழகான வெண்மையான  நிறம் உள்ள பெரிய மீன் வந்து வட்டமிட,அங்கே உள்ள யாவரும் ஒம் நமசிவாய எனும் மந்திரம் உச்சரிக்க ,ஒரு வித பரவசநிலை தென்பட்டது.ஸ்ரீ மச்சமுனி அய்யாவே இங்கே மீனாக இருக்கிறார் .ஆக
ஸ்ரீ மச்சமுனி அய்யா தரிசனம் கிடைத்ததால் ஒரு உள்ளம் பூரிப்பு.அற்புதமான காசிக்கு நிகரான கங்கை தீர்த்தம் .இங்குள்ள லிங்கத்தை வழிபட்டாலே அது காசிலிங்கத்தை வழிபட்டதற்கு சமம் என்கிறார்கள்.இந்த தீர்த்தம் பார்க்க பச்சைநிறத்தில் இருக்கிறது.ஆனால் அதன் சுவை மிக அற்புதமாக உள்ளது.மலை பாறையும் ,மூலிகை காற்றும் ,கங்கை தீர்த்தமும்,
அய்யாவின் அருள் அலைகளும் இருப்பதால் இடமே மிக அற்புதமாக இருக்கிறது.நேரம் செல்வதே தெரியவில்லை.அந்த அய்யா சொன்னார் நேற்று அமாவாசை இந்த  இடம் முழுவதும் நல்ல சாம்பிராணி வாசம் வந்தது என்றார். அங்கே அந்த அய்யாவுடன் அருகிலேயே அமர்ந்து ஸ்ரீ லலிதாசகஸ்ரநாமம் பாராயணம் மனதிற்குள்ளே சொல்லிக்கொண்டிருந்தோம் .



நேரம் மாலை ஆறு மணி ஆக அங்கிருந்து அனைவரும் மெதுவாக கீழே இறங்க ஆயத்தமானோம்.அந்த அய்யாவும் கைகளில் ஒரு சில சாக்கு பைகளில் உள்ள காரட்டை அங்குள்ள குரங்குகளுக்கு அள்ளி கொடுத்துக்கொண்டேவந்தார்.கூட்டம் கூட்டமாக குரங்குகள் ,அய்யாவிடம் காரட்டை வாங்கி அழகாக கடித்து உண்ணுகிறது.அய்யாவுடன் யாமும் மெதுவாக கீழே ஒவ்வொரு படியாக இறங்கிக்கொண்டே,"இப்படி ஒரு எண்ணம் எப்படி உங்களுக்கு உதித்தது அய்யா " என கேட்க,

 "இங்கு அடிக்கடி வரும் போது இந்த குரங்குகள் ,வருவோர் செல்வோர் என அனைவரிடமும் ,உணவிற்காக ,பக்தர்கள் கொண்டுவரும் யாவற்றையும் பறிக்கும் செயலில் ஈடுபட்டு ,வருபவர்களுக்கு சிரமத்தை உண்டுபண்ணுகிறது.அதனால் என்ன செய்யலாம் என யோசிக்கும் போது ,ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் இங்கு வரும் ஒரு பக்தர் ,நிறைய காரட் கொண்டுவந்து ,இங்கிருக்கும் குரங்குகளுக்கெல்லாம் கொடுத்தார், அது போல நாமும் தினந்தோறும் செய்தால் என்ன என்று தோணியது ,அன்று எடுத்த மூடிவு .இன்று வரை கிட்டதட்ட நூறு நாட்களுக்கு மேல் ,செய்கிறேன்.அய்யாவின் அருளால் தொடர்ந்துசெய்கிறேன்.அன்றைய மார்க்கெட்டில் என்ன கிடைக்கிறதோ,காரட்,வெள்ளரி,உருளைகிழங்கு என ,ஒவ்வொரு நாளும் நாற்பது கிலோவுக்கு மேல் கொண்டுவந்து ,இங்குள்ள குரங்குகளுக்கெல்லாம் கொடுக்கிறேன்.இதோ இங்கே என்னுடன் வருகிறார்களே ,இவர்கள் கீழேயிருந்து மேல் வரை எம்முடனே வந்து ,இந்த சாக்குபைகளை சுமந்து ,உதவிசெய்கிறார்கள்.ஒரு சில நாளில் நாற்பது கிலோவும் நானே சுமந்து செல்வேன் .எல்லாம் அய்யாவின் அருளாலே ,நாற்பது கிலோவை இவ்வளவு தூரம் அதுவும் மலை உச்சிவரை சுமந்து செல்வது சாதரண விசயமில்லையே.." என்றார்.

தமது சொந்த செலவில் இதை செய்கிறார். இதற்காக யாரிடமும்வசூல் செய்வதில்லை இது ஒரு மிகபெரிய சேவை இது.எம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.எல்லாருக்கும் இது போன்ற எண்ணம் வருவதில்லை.வந்தாலும் அதை செயல்படுத்துவதில் இருக்கும் சிரமத்தில் விட்டுவிடுகிறோம்.கருணையும் அன்பும் இருக்கும் உள்ளத்தில் மட்டுமே ,இது போன்ற சேவை நிகழ்கிறது.இவர்களுக்கு சித்தர் அருள் ஆசிகள் எவ்வாறு கிடைக்காமல் இருக்கும்.தன்னலமற்ற சேவை,வாழ்கவளமுடன் .இறைஅருள் துணை நிற்கட்டும் என்று  மனதார வாழ்த்தி விட்டோம்.


இந்த அய்யாவோடு பேசிக்கொண்டே கீழ்நோக்கி இறங்கிக்கொண்டிருக்கிறோம்.இருட்டு சூழ்ந்துகொண்டிருக்கிறது.இறங்கி வரும் ஒரு இடத்தில் ஜவ்வாது வாசம் வந்தது .இது எம்முடன் வரும் அய்யா ஏதேனும் இது  போன்ற நறுமமண திரவியத்தை பூசிஇருப்பார் என விட்டுவிட்டோம்.மீண்டும் கொஞ்சம் படி இறங்க மறுபடியும் ஜவ்வாது வாசம்," அய்யா நீங்கள் எதுவும் ஜவ்வாது பூசிஇருக்கிறீர்களா என கேட்க, .." நீங்கள் தான் நான் சுனையில் குளித்து அய்யாவின் அருகில் தியானம் செய்ததை பார்த்தீர்களே ,எந்த வாசனை திரவியமும் பயன்படுத்தவில்லை.மேலும் தொடர்ந்தார் இங்கு சித்தர் அய்யா வரும் பொழுது ,இது போன்ற ஜவ்வாது ,விபூதி,மூலிகை போன்ற பல நறுமண வாசம் மாறி மாறி வரும் என்பதை பல முறை இங்கே உணர்ந்திருக்கிறேன்.இன்று நீங்களும் உணர்கிறீர்கள் .." என்றார்.அப்படியே பேசிக்கொண்டே  .இந்த மலை முழுவதும் ஆங்காங்கே சித்தர்கள் உலாவருவார்கள் .அவர்கள் வருவதால் ஒரு வித நறுமணம் மேல் சொன்னது போல ,ஜவ்வாது,மூலிகை,துளசி,நறுமணம் மிகுந்த விபூதி போன்றவை மாறி மாறி வரும். என்றார். ஒரு  சதுரமான பரப்பு வந்ததும் ,இங்கு தான் பைரவபெருமான் எமக்கு காட்சி கொடுத்தார் ,என அங்குள்ள பாறையோடு பாறையில் அழகாக பைரவ பெருமானின் நாய் வாகனம் ,இயற்கையிலே இரு காதுகளோடு பாறையிலே இருக்கிறது என்பதை எங்களுக்கு காண்பித்தார்.மேலும் இங்கே ஒரு பத்துநிமிடம் கண்ணை மூடி தியானம் செய்ய ஒரு முனிவர் வந்து ஆசீர்வாதம் செய்வார் என்றார்.இது  இங்கு வரும் நிறைய அன்பர்களுக்கு தெரியவாய்ப்பில்லை.யாரேனும் ஒருவர் விளக்கினால் மட்டுமே எளிதில் உணரமுடியும்.



இருள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைய ஆக்கிரமிக்க ,இன்னும் கொஞ்சம் கீழே இறங்க ஒரு இடம் வந்ததும் ,எம்முடன் வந்த அய்யா அருகில் அமர்ந்து ,இது அம்பாள் சன்னதி .இங்கு அம்பாள் இருக்கிறாள்.இதோ இதன் எதிரில் அங்கே இருப்பது சப்தகன்னியர் சன்னதி .அம்பாளின் நேர் பின்புறம் துர்க்கை அம்மன் சன்னதி என சொல்லிவிட்டு ,அய்யா தியானத்தில் ஆழ்ந்தார்.எம்முடன் வந்த ஒரு அன்பர்\ ,நீங்கள்  மச்சமுனி அய்யாவின் சுனையில் என்ன மந்திரம் சொன்னிர்கள் என ,கேட்க ,யாமும் ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமம் பாராயணம் சுருக்கமாக ,விளக்கிக் கொண்டிருந்தேன்..அப்போது ஒரு அற்புத நறுமணம் வீச தொடங்கியது.சுத்தமான பசுவின் நெய் உருக்கினால் என்ன நறுமணம் வருமோ ,அதைவிட நறுமணம் மிகுந்து அம்பாள் இருக்கிறாள் என்று சொன்னாரே அந்த இடம் முழுவதும் ஆக்கிரமித்தது.மச்ச முனி அய்யாவே இங்கே இருக்கிறார் என்பதை யூகிக்க முடிகிறது ..இங்கு தான் இருக்கிறார் அனால் ஸ்தூல கண்களால் காணஇயலவில்லை.அதுவும் அம்பாளின் சன்னதி அருகே,அய்யா வந்து இந்த நறுமணமிக்க நெய்கொண்டு அம்பாளை வழிபாடுசெய்கிறார் என்பது போலவே தோணியது.




இது நாள் வரை சித்தர் அய்யா வந்தால் ஒரு வித நறுமணம் வரும் என்று செவிவழியே கேள்விப்பட்டிருக்கிறோம்.ஆனால் ஸ்தூலத்தால் உணர்ந்து அறிந்தது இதுவே முதல் முறை. அதுவும் அம்பாளின் முன்னே .மிக அற்புதமாக இருந்தது.இந்த நறுமணமும் அம்பாளின் அருள் அலையும் ,சித்தர் அய்யாவின் வருகையும் ,எம்மை எம் உள்ளதை வெகு இலவாக இலவம் பஞ்சைவிட மிக மெல்லியதாக நொடியில் மாற்றியது.எப்படிப்பட்ட நிலையில் மனம் இருந்தாலும் ,இங்கே எல்லாம் தவிடுபொடியாகிவிடுகிறது,அன்பும் கருணையும் நிறைந்திருப்பதால் அதன் வழியே வருவோர்' செல்வோர்' அனைவருக்கும் அதன் தன்மை கிடைக்கிறது.சித்தனின் ஆசி கடல் போல ,யாவருக்கும் பொதுவாய் ,எத்தகைய கடின கரடு முரடான கர்மவினை உடையவரின் மனதினையும் ,அன்பால் ஈர்த்து,ஒரு அற்புதமான அரவணைப்பு தருகிறது.ஒரு சுகம் .ஒரு தெளிவு மனதில், ஒரு அமைதி,ஒரு நிறைவு  ஒரு முழுமை என சொல்ல இயலாத ஒரு சில ஆற்றலை மனது அது தானாகவே பெறுகிறது.இவை யாவும்  இங்குள்ள சித்தனின் நொடிபொழுதில் மாற்றும் ஒரு அற்புதம்.சித்தர் இங்கு தான் இருக்கிறார் .அதனால் ஒரு நறுமணம் என என்னும் போதே நொடியில் மனம் இறை நோக்கிசெல்கிறது.எல்லாம் நொடியிலேயே இருக்கிறது.இது போன்ற நொடிகளில் அப்படியே வாழ்ந்துவிடவேண்டும்.இது போன்று தருணம் இனி என்று வருமோ ,என எண்ணி கண்கள் மூட ,நெஞ்சம் நிறைந்த அன்பு,ஆனந்தம் ஊற்றெடுக்கிறது.எல்லாம் இறையின் செயல் .எல்லாம் இறைவனின் ஆட்சிபுலத்தில் .இதை இந்த மனம் அடிக்கடி மறந்து ,அகங்காரம் சூழ்ந்து ,தனிமையில் சிக்கிக்கொள்கிறது.இது போன்ற தருணங்களில் அது மீண்டும் தமது நீண்ட நெடிய தொடர்பை பெற்றவுடன் துள்ளிகுதித்து ஆனந்தத்தில் திளைக்கிறது.

அய்யா தியானம் முடித்து எழுந்து "இங்கு வந்த சுத்தமான நெய்யின் நறுமணம் நீங்கள் யாவரும் உணர்ந்திருப்பீர்கள் .அய்யாவே நம்முடன் வருகிறார் .மேலும் இது  அம்பாள் வாசம் செய்யும் இடம்.எல்லாம் இங்கே சக்தியின் ஆட்சியே மலை முழுவதும் நடக்கிறது. ஒரு அமாவாசை அன்று நிகழ்ந்த அன்னதானத்திற்கு பிறகு ,ஒரு சில அன்பர்கள் மேலே உள்ள சுனை நீரில் பாத்திரங்களை கழுவிவிட்டார்கள்.அதனால் சுனை நீர் முழுவதும் கலங்கி தன்மை மாறிவிட்டது .இப்படி மாறிவிட்டதே என அய்யாவிடம் வேண்ட,அய்யா அதனை மூன்றே நாளில் சுனை நீர் முழுவதையும் அற்புதமாக மீண்டும் பழைய நிலைக்கு மாற்றிவிட்டார்கள்.,நீங்கள் எல்லாம் மதுரையில் வரலாறு காணாத வெள்ளம் என செய்திகேள்விப்பட்டிருப்பீர்கள் ஒரு சில வாரங்களுக்கு முன்பு, அந்த மலை வெளுத்து வாங்கியதன் முதற்காரணம் இதுவே,அம்பாளின் அருளால் அய்யா சுத்தமாக மாற்றிவிட்டார்  சுனை நீரை" என்றார்.
பிறகு மெதுவாக படியிறங்கி கீழே வந்துவிட்டோம்.அங்கே கடைசி படியின் அருகே ,நுழைபாதையின் அருகில் ஒரு அய்யா அதுவும் இந்த இருளில் ,வெள்ளை வேஷ்டி கொஞ்சம் தாடிஉடன் அமர்ந்திருந்தார்.எம்மோடு வந்த அய்யா ,அவரை பார்த்து " ..சாமி போயிட்டு வர்றேன்...என இரண்டு மூன்று முறை சொல்ல ,அவர் இதை கவனிக்காமல் சிந்தனை வேறு எங்கோ உள்ளவர் போல் இருந்தார்.மீண்டும் இவர் சாமி போயிட்டு வரேன் ..என்று சொல்ல ,கடைசியில் .." ம்ம்ம் .." என்றார்.

அய்யா இவர் யார் என விசாரிக்க "...,சாமி இங்கிருக்கும் சாமி .." என சுருக்கமாக முடித்துக்கொண்டார் .பிறகு அங்கிருந்து விடை பெற்று சென்றுவிட்டார்.ஏற்கனவே நிறைய நிகழ்வுகள் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு ,இறை அலைகள் ,இறை தந்த மாற்றங்கள் ,சித்தர் பெருமானின் அற்புதங்கள் ,அம்பாளின் அருள் அலைகள் என ,உள்ளம் நிறைந்ததால் ,இங்கு உட்காந்திருக்கும் அய்யா பற்றி எண்ணம் இல்லை.

மச்சமுனி சித்தர் அய்யாவின் ஆசி அலைகளோடும் ,அம்பாளின் அருள் அலைகளோடும் ,அகத்திய உள்ளங்களை வேறு ஒரு நிகழ்வில் சந்திக்கிறோம்.

ஒம் அகத்தீஸ்வராய நமஹா ..!!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா ...!!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா ...!!!



Comments

  1. அருமை ஓம் அகதீஸ்வராய நமஹ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

சூட்சுமங்கள் நிறைந்த ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் !!!