Saturday, December 12, 2009

இது அன்பின் ஆழம் ...!
சமீபத்தில் யாம் சதுரகிரி எனும் ஒரு புனித மலைக்கு சென்றோம் எமது நண்பர்களுடன் .இயற்கை எழில் கொஞ்சும் இந்த சதுரகிரிமலை ,தூய்மையான மூலிகை காற்று ,அழகான நீரோடை,தர்பை புல் படர்ந்த மலை ,பனி போர்த்திய மலை ,என்றுமே  கட்டி தழுவி முத்தமிடும் மேகம்,ஓங்கி உயர்ந்த மரங்கள், இயற்கையின் மூலிகைகள் ,என பல்வேறு  இயற்கை அதிசயங்களால் நிறைந்துள்ளது .மலையின் அடியிலிருந்து உச்சி செல்ல கிட்டதட்ட நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஆகும்.சித்தர்களை யாரையாவது பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணமே எனக்கு மேலோங்கி இருந்தது.உடல் சோர்வு ,பசி ,தாகம் என பல உபாதைகள்.

மலையின் அழகையும்  ,சில் வண்டுகளின் ரீங்காரம் ,நிழல்தரும் மரங்களின் 
அழகையும் ரசித்தவாறே சென்றோம் .மனம் எண்ணிய சித்தர் யாரும் கண்ணில் தென்படவில்லை . 
பல மணி நேர பயனதிருக்கு பிறகு மலை உச்சி அடைந்தோம் ...
சுந்தர மகாலிங்கம் சன்னதி சென்று வணங்கினோம் ..ஒரே மகிழ்ச்சி ..!!சுந்தர மகாலிங்கம் சன்னதி என்றுமே மனதுக்கு நிம்மதி ..! ஆனால் எனக்கு ஒரே ஆதங்கம் சுவாமியிடம் .. மகாலிங்கமே யாராவது ஒரு சித்தர காட்டலாம் மில்ல ..கொஞ்சம் பார்த்து பண்ணுங்க ஸ்வாமியே  ..! என்று சொல்லிவிட்டு ..படி இறங்கி வந்தேன்

என்னிடம் வேறு எந்த கோரிக்கையும் இல்லை  .கோவில் பிரகாரம் தாண்டி வந்தேன் .கொஞ்சம் பசி எனவே உணவு  தேடி ,படிக்கட்டுகளில் ஒவ்வொன்றாக இறங்கி வந்துகொண்டு இருந்தேன்.அப்போது  ஒரு ஒல்லியான உயரமான , ஓரளவுக்கு நீண்ட தலைமுடியுடன் ,சற்றே நீண்ட அடர்ந்த  தாடி , மற்றும் வெண்மையான பைஜாமா உடை அணிந்து  அதில்  ஆங்காங்கே கொஞ்சம் அழுக்கு,ஆனால் நல்ல தெளிவு நிறைந்த முகம்  இப்படி   ஒருவர் என்  முன் சென்றார்.அவர் என்னை பார்த்தார்...நானும் அவரை பார்த்தேன்...அவ்வளவு தான்.என் மனதிற்குள் ".இவர் ஒரு நல்ல இளமையான சாதுவாக தோற்றம் அளிக்கிறார்.இந்த வயதில் இவ்வளவு ஆன்மீக  நாட்டம் கொண்டு இந்த புனித மலையில் தவம் செய்யும் ஒரு இளமையான புனிதமான சாதுவாக தோற்றம் அளிக்கிறார்", வாழ்க வளமுடன்  என்று வாழ்த்திவிட்டு படி இறங்கி வந்து கொண்டிருந்தேன் .

 அப்போது  எனது நண்பன் என்னை கூவி  அழைத்தான் "சீக்கிரம் படியேறி மேலே வாப்பா .இந்த சுவாமி உன்னை  கூப்புடுகிறார் " நானும் யாராக இருக்கும் என்று  எண்ணி மேல் சென்றேன் .மனதிலே சிறிது அதிர்ச்சி.அட இவர் சற்று முன் நான் பார்த்த அந்த இளம் சாது. என்ன நடக்கிறது என்று கணிக்க முடியவில்லை .

சுந்தர மகாலிங்க சன்னதிக்கு அருகே உள்ள ஒரு சிறிய மடம் அது .அங்கே ஒரு சிறு திண்ணை ,அதில் அந்த சாது அமர்ந்திருந்தார் . அருகிலே ஒரு சிறிய சிவலிங்கம் மற்றும் ஒரு சிறிய அகல்விளக்கு அழகாக சுடர் விட்டு அந்த அறையை  தன் ஒளியால் நிரப்பி கொண்டிருந்தது.

நான் மற்றும் எனது நண்பன் ,தம்பி எல்லாம் நின்று கொண்டிருந்தோம்.அவர் அந்த திண்ணையில் அமர்ந்து எங்களை பார்த்தார்.

"எண்ண ஓட்டத்தை பார்த்தேன் ..அதனால் உன்னை இங்கே அழைத்தேன் " என்று ஆரம்பித்து பேச ஆரம்பித்தார்.
முதல்  கேள்வி " சித்தர்கள் வாழும் இடத்தில் பித்தர்களுக்கு
என்ன வேலை  இங்கே ?  "முதல் கேள்வியே என்னை சிந்திக்க வைத்தது .
என்னை இழுத்து  ஒரு அறை அறைந்தது போன்று இருந்தது .மனம் சிந்திக்க தொடங்கியது.
அவர் மேலும் தொடர்ந்தார்
."சித்தர்கள் உலக மக்கள் நன்மைக்காகவும் மற்றும் வேறு சில காரணங்களுக்காவும் பலவேறு வேலைகளை இங்கு செய்கின்றனர்.இது அவர்கள் வாழும் இடம் .இங்கு வருவதால் அவர்கள் செய்யும் வேலையில் இடையூரு ஏற்படுகிறது."


"உன்னை உணர்ந்து உன்னுள் இருக்கும் இறைவனை பார் .
உன்னுள்ளே  அனைத்து ஆற்றல்களும்  இருக்கிறது .உன்னை
ஒரு சித்தனாக உயர்த்தும் அளவுக்கும்  ஏன் அதற்கும் மேல்  உள்ளன.
உடல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் உள்ளம் எப்பொழுதுமே தூய்மையாக இருக்க வேண்டும் ..உடலால் என்ன செய்தாலும் உள்ளம் தெளிவாகவும் தூய்மையாகவும் இருக்கவேண்டும் ..."
நிறைய சொன்னார் ..என்னால் அனைத்தையும் கிரகித்து மனதில் வாங்கிக்கொள்ள  முடியவில்லை .


உடல் சோர்வு ஒரு பக்கம்  ,பசி ஒரு பக்கம்,மலையேறி
 நடந்த கால் வலி ஒரு பக்கம் .மேலும் சித்தர்களை பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
அவர்கள் காற்றிலே உலாவுபர் ,அகத்தியர் இன்று இங்கு வருவார் என்றார்.
"அகத்தியரை நான் பார்க்க வேண்டும்  ?அவரை எவ்வாறு சந்திப்பது ?
அவரை பார்க்க நீங்கள் உதவி செய்ய இயலுமா ? "என்று நான் கேட்டேன் .

ஆனால் அவர் நான் கூறும் எதற்கும் பதில் சொல்லவில்லை.நான் சொல்லுவதை அவர் கொஞ்சம்  கூட கவனிக்க வில்லை .அவர் தன்  நெஞ்சிலே கை வைத்து சொல்லும் போதெல்லாம் என்னால் எதையுமே மறுக்க முடியவில்லை.எல்லாம் ஆணித்தனமாக இருந்தது.
மிக சரியாக இருந்தது.இன்று  இரவு இங்கு தங்குங்கள்.நான் பிறகு சொல்லுகிறேன் என்று கிளம்பிவிட்டார் .நான் ஒரு வேட்டி மற்றும் மேல் சட்டை இல்லாமல் ஒரு துண்டு உடன் மட்டுமே மலை ஏறி வந்தேன் .எதுவானாலும் சரி இன்று  இரவு தங்கலாம் என்று முடிவு எடுத்தேன் .ஆனால் என் தம்பியோ உன்னை நம்பி நான் என் வேலைஎல்லாம் விட்டுவிட்டு சாமிகும்பிட்டு உடனே திரும்பிடுவோம் என்று வந்தேன் .என் வேலை எல்லாம் போய்விடும் .உடனே கிளம்புற வேலையை பாரு  என்று பல வேறு காரணங்களை சொல்லி என்னையும் வர சொல்லி வற்புறுத்தினான்.என் மனதும் கிளம்பினால் என்ன என்று மாற நினைத்தது ? ஆனால் சித்தரை காண வேண்டும் என்ற என் மனமே கடைசியில் வென்றது .என் நண்பனும் நானும் அவனை ஒரு வழியாக இரவு தங்க சமாதானம் செய்து உணவு அருந்த சென்றோம்.

பிறகு குமாரிடம் நீ எப்படி அவரை சந்தித்தாய் ?என்றேன் . அதற்கு அவன் மகாலிங்கம் தரிசனம் முடித்து வரும் பொழுது  தீடிரென்று என்னை பார்த்து  " உனக்கு அறிவு இருக்கா ?இப்படி காலனியோடு புனிதமான மலைக்கு வரலாமா
மேலும் " எங்கே அவன் ? அவனை இங்கே அழைத்து வா ? ' என்று அந்த சாமி சொன்னதாக கூறினான் .

மாலை 6 மணிக்கு மேல் மீண்டும் அதே இடத்திற்கு வந்தார் .எங்கள் மூவரின் பிறந்த நேரம் வாங்கிக்கொண்டார்.அகத்தியர் அருள்வாக்கு என்று தன் பேச்சை  தொடங்கினார்.மீண்டும் தன்  நெஞ்சிலே கை வைத்து,"நீ ஒரு தூய்மையான ஆத்மா.தனிமையை விரும்பும் ஆத்மா.உனது போன பிறவியை பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை .ஏனென்றால் அது தூய்மையான ஆன்மா.இப்பிறவி உனக்கு பொருள் சேர்ப்பதற்காக  அல்ல.பொருள் ஒரு முதல் நோக்கம் அல்ல .தினந்தோறும் இறைவனை நினைந்து வழிபடு  !இறைவன்  அருள்கிட்டும் விரைவில்" என்றார்.

  ஆனால் எனக்கு நிறைய கேள்விகள் எதையுமே கேட்க  முடியவில்லை.அவர் அதற்கு பதில் கூறுவதாகவும் இல்லை. நான் இதுவரை பழகிவந்த மரபிற்கு  மாறாக இருந்தது .ஏனென்றால் அவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல.அவர் சொல்லுவதை மட்டுமே கேட்க முடிந்தது.நான் கேட்கும் கேள்விக்கெல்லாம் அவர் பதில் சொல்ல அவருக்கு அவசியம் இல்லை. என்னை போன்று அவர் ஒரு சாதாரண மனிதர் இல்லை.

அவர் பிறகு நண்பனை பார்த்து உன் உடம்பிலிருந்து ஒரு நாக ஒளி ஒன்று வருகிறது .ஒரு நாக தோஷம் உள்ளது.நீ ஒரு பிராமணன் .உன் முற்பிறவியில் ஒரு பாம்பை அடித்திருக்கிறாய் .ஒரு பிராமணன் அதுவும் சாதுவான குணம் கொண்ட ஒரு  பாம்பை அடிக்கலாமா?அது  இரவிலே உன் தூக்கத்தை தொந்தரவு செய்யும்.உன் தூக்கத்தில்  உடம்பிலே ஒரு வெண்டுதல் (முறையற்ற  அதிர்வு)   ஏற்படும் .மேலும் முற்பிறவி ,இப்பிறவி என்று அனைத்து  உண்மையும்  வெட்டவெளிச்சமாக்கினார். அவனுக்கு ஒரு  பரிகாரமும்  சொன்னார்.
மேலும் தொடர்ந்தார்.நான் சொல்ல போவதை கவனமா கேளுங்கள். இதை செய்து சித்தர் தரிசனம் பெறுங்கள் .

  கோவிலுக்கு செல்ல வேண்டாம் ..!.
 எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்க கூடாது ..!
முடிந்த வரை உதவி செய்யுங்கள்...!
    மேலும் சிலவற்றை சொன்னார்.(என் ஞாபகமறதி ...மன்னிக்கவும் !)

கோயிலுக்கு வந்த ஒருவரை தீடிரென்று அழைத்து வந்து தான் இருந்த திண்ணையில் படுக்க வைத்து ..வயிற்று பகுதியில் தன கைவிரல்களால் அழுத்தி ஏதோ செய்தார் .அடுத்த வினாடி அவன் கொறட்டை விட்டு தூங்க ஆரம்பித்தான்.மீண்டும் எங்களை நோக்கி பேச ஆரம்பித்தார்.இரவு வந்தது.உணவு அருந்தி தூங்க சென்றோம் .பிறகு நண்பரை மற்றும் நீ இங்கே வா என்று அழைத்து ,பேச ஆரம்பித்தார்.

நான் அயர்ந்து தூங்கி விட்டேன் .என்ன  நடந்தது என்று தெரிய வில்லை.காலையில் ஒரு நான்கு மணிக்கு விழித்து எழுந்தேன்.மலையோ சரியான குளிர்.கதவை திறந்து வானவெளி பார்த்தேன்.என்ன அதிசயம்   வானத்தில் உள்ள வின்மீன்கள் (மிலிடரி சிம்பல் ....கோபுர வடிவ நட்சத்திரம்  மற்றும்  சில  வின்மீன்கள்) தன் இடம் விட்டு மிக அருகில் சுந்தர மகாலிங்கம் கோவிலை மையமாக வைத்து,மிக அருகிலே  இருந்து தன் சுடர் ஒளியை வீசிக்கொண்டிருந்தது .என்மனதை முற்றிலுமாக கவர்ந்தது.ஆஹா...  ..குமார் "இங்கே பாரு ? இந்த நட்சத்திரம்  நாம தினந்தோறும் பார்க்கும் அதே நட்சத்திரம் இவ்வளவு அருகில் ..மிக ரம்யமாக ஒளிருகிறது பார்"

"நல்லவேலை நீ  நட்சத்திரம் என்று சொன்ன உடனே தான்    ஞாபகம் வருது .இதே இடத்தில் அகத்தியரை ஒரு  நட்சத்திரமாக பார்த்தோம்.அந்த இளம் சாது என்னை வெளியே அழைத்து,அதோ பார் ஒரு நட்சத்திரம் சரியாக சுந்தர மகாலிங்க சன்னதிக்கு நேர் மேலே.
 இது அகத்தியர்,இன்னும் சில விநாடி மட்டுமே அவர் இங்கு  இருப்பார் .பிறகு அவர் இமயமலை நோக்கி சென்றுவிடுவார்  என்றார் .அதே போல் ஒரு சில வினாடிகளில் அது சதுரகிரி விட்டு நகர்ந்து சென்று விட்டது" என்றான் .

"அட என்னப்பா என்னை தூக்கத்திலிருந்து எழுப்பி இதை காட்டிஇருக்க கூடாது ? "என்றேன் .
"சாமி  தான் சொன்னார் நான் அந்த ஆத்மாவை நன்றாக தூங்கவைத்திருக்கிறேன் .நீங்கள் அவரை  எழுப்ப முடியாது என்று  ?"

அட போப்பா ..! கொஞ்சம் என்னை எழுப்பி காட்டிஇருக்கலாம் என்று கடிந்து கொண்டேன் .
ம்ம்ம்...அகத்தியரை பார்க்க கொடுப்பினை  இல்லை என்று   மனதால் எண்ணிக்கொண்டு மலை இறங்க முடிவு செய்தேன்.

அந்த இளம் சாது யார் ? அவர் பெயர் என்ன ? அவர் எங்கு இருந்து இங்கு வந்திருக்கிறார் ? என்றெல்லாம் விசாரிக்க தொடங்கினோம்.அங்கு உள்ளவர்கள் அவரை பற்றி சரியாக சொல்லவில்லை .அவர் பெயர் செகுட்டு சித்தர் அடிக்கடி அமாவாசை நேரத்தில் இங்கு வருவார் .கொஞ்ச நாள் தங்கிவிட்டு பிறகு சென்றுவிடுவார் என்றனர்.

அந்த மடத்தில் உள்ள ஒரு அன்பரிடம் பேச்சு கொடுத்தேன் .ஒரு கிராமத்து இளைஞன் ,சட்டை இன்றி  ஒரு காவி வேட்டி, இடுப்பிலே ஒரு துண்டு."இந்த கோவிலில் சித்தரெல்லாம் வருவார்கள் என்று சொல்லுகிறார்களே  ..நீங்கள் யாராவது சித்தரை பார்த்து இருக்கிறீர்களா" ? என்றேன்.அதற்கு அந்த இளைஞன் "சித்தரை பார்த்தது இல்லை .ஆனால் அவர்கள் இங்கு வந்து இந்த சுந்தர மகாலிங்கத்தை வழிபடும் போது ..ஒரு சில ஒலி கேட்டுஇருக்கிறேன்"  என்றான்."அது என்ன ஒலி" என்றேன் ..?"அகிலி,பிகிலி ,யகிலி,சகிலி,ருகிலி..... "..என்று மிக வேகமாக சொன்னான் .இது வரையில் நானும் அதனை கேட்டதில்லை.ஏதோ அது ஒரு புது உணர்வாகவே இருந்தது.

இந்த  முறை நாங்கள் வந்த பயணம் மிக சிறப்பாகவே இருந்தது .ஒரு  நல்ல சாதுவை அடையாளம் காட்டினார் சுந்தர மகாலிங்கம்.மிக பணிவாகவும்,ஒரு நல்ல அன்பு உள்ளம் கொண்ட ஆன்மாவாகவும்,அகத்தியரிடம் அடிக்கடி தன் மார்பில் இரு கைவிரல்களை கோர்த்து பேசும் ஒரு மனிதராகவும் ,அடக்கம்,பணிவு,முகத்தில் ஒரு நல்ல ஓளி,அமைதியான தமிழ் பேச்சு,மிக அன்பான கருணை பார்வை உள்ளவராகவும் இருந்தார் .இவரை சந்தித்தது ஒரு பூர்வ ஜென்ம புண்ணியம்  என்று சுந்தர மகாலிங்கத்துக்கு நன்றி கூறி சதுரகிரி மலையை விட்டு மெதுவாக கீழேஇறங்கினோம்.

பிறகு என் விடுப்பு நாட்கள் முடித்து நான் அமெரிக்கா சென்றேன்.கிட்டதட்ட ஒரு  மாதம்  சென்றிருக்கும் , நண்பர்  எனக்காக என் வேலை காரணமாக  அவன் நண்பன் வீட்டிற்கு சென்று, பிறகு வீடு  திரும்புவதற்காக ,சென்னையிலே மேற்குமாம்பலம் அருகே ஒரு பஸ் ஸ்டாப்பில் காத்துகொண்டிருந்தான் .அவனது இரு கண்ணையும் திடீரென்று ஒருவர் இறுக்கமாக மூட ,கொஞ்ச நேரம் சென்று இவன் திரும்பி பார்க்க அந்த இளம் சாது மறுபடியும் தரிசனம் .குமாருக்கு ஒரே இன்ப அதிர்ச்சி..!அந்த    பஸ்ஸ்டாப்பில் எத்தனையோ மனிதர்கள்,ஆனால் யாருமே இவர்களை பார்க்கவில்லை.என்ன அதிசயம் இது...! இங்கே என் நண்பன் செந்தில் கொடுத்த வேலை  விசயமாக வந்தேன் என்று
அந்த கவரை திறந்து  விரிவாக சொல்லலாம் என்று எடுக்க .உடனே  அதனை திருப்பி உள்ளே  அவர் வைத்து விட்டார் ."பாண்டி...ஒரு மாதம் ஆகட்டும்....அவரை  இன்னும் இரண்டு வாரங்களில் சந்திக்கிறேன்"
சாமி அவர்  Losangel 'ல் இருக்கார்  "  "புன்னகையோடு .Losangel ? அவரை இரண்டு வாரங்களில் சந்திக்கிறேன்..."

அவருடன் இரண்டு நண்பர்கள் ..நல்ல மங்களகரமான முகம் ,  சந்தனம்,பொட்டு,வெள்ளை வேட்டிஉடன் ,  குமாரை பார்த்து ஒரு புன்னகை.கொஞ்ச  நேரத்தில் ஒரு Innovo car வர அதில் ஏறி சென்று விட்டார் அந்த சாது .இதனை நான் தொலைபேசியில் கேட்டு  தெரிந்து கொண்டேன் .அவர் எப்படி இங்கு வர முடியும் .வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று நானும் என் வேலையை தொடர்ந்தேன் .வாரங்கள்  சென்றன .இந்த சாதுவை பற்றிய எண்ணமெல்லாம் எனக்கு கொஞ்சம் கூட இல்லை என் வேலை பளு காரணமாக.

ஒருநாள் இரவுஉணவு அருந்த சென்றேன் .கொஞ்சமான உணவே எடுத்துக்கொண்டேன் .கொஞ்சம் தயிர் சாதம் ,ஒரு ஆப்பிள் பழம்.சிறிது அயர்ந்து தூங்கி விட்டேன்.ஏதோ ஒரு உணர்வு என் காந்த உடல் மேல்கிளம்புவது போன்று.இந்த இளம் சாது புன்னகையுடன் என்னிடம் எதோ பேசுகிறார்.என்னால் சரியாக ஞாபகபடுத்தி எழுத முடியவில்லை.ஆனால் ஒன்று மற்றும் புரிந்தது எதுவுமே என்னுடைய கட்டுபாட்டில் இல்லை என்று.எல்லாமே மிக தெளிவாக ஒரு நல்ல அலை இயக்கத்தில் இயங்குவது கண்டேன் .நானும் அந்த அலை இயக்கத்தில் இருந்தேன் .யாருமே தவறு செய்யமுடியாது.சரியானவற்றை மட்டுமே செய்யமுடியும் அந்த அலை இயக்கத்தில்.அப்படி  ஒரு அலை  இயக்கம் .

 ஒரு வழியாக முயற்சி செய்து எழுந்துவிட்டேன் .ஏனென்றால் இரவு பத்துமணிக்கு என்  வேலை கொஞ்சம் முடிக்கவேண்டும் .வேலை செய்யலாம் என்று மெயில் பார்த்தேன் .ஆனால் என் Client ,அந்த வேலையை சற்று முன் cancel செய்து விட்டனர்.மீண்டும் தூங்க முயற்சி செய்தேன் .ஆனால் ஒரு தூக்க மற்ற நிலை.மீண்டும் சூக்கும உடம்பு வேறுஒருவர் கட்டுபாட்டில் இருப்பது உணர்ந்தேன் .மீண்டும் அந்த  இளம் சாது.ஏதோ ஒரு அடர்ந்த சதுரகிரி வனம்.
மிக அழகான மரங்கள்,மலைகள் ,ஒரு மரத்தின் அடி மரத்தின் அருகே இளம் சாது ,நான் அருகில்.அவர் நிறைய பேசுகிறார் ,அப்பொழுது அது எல்லாம்  சரி என்று எனக்கு புரிகிறது . "உங்கள் ஆன்மா தூய்மையானது அதனை சில நேரம் நான் பயன்படுத்தவேண்டும் ?"
"சாமி இதெல்லாம்  நீங்க என்னிடம்  கேட்களாமா ? நீங்க எப்ப வேணுமோ அப்போ எடுத்துக்கோங்க ? "என்றேன்."நான் அகத்தியரை பார்க்க வேண்டும் .நீங்க அதுக்கு உதவி செய்வீங்களா ?".அதற்கு அவர் "நான் உங்களை அகத்தியர் இருக்கும் இடத்துக்கு அழைத்து செல்கிறேன் ? ஆனால் அய்யா..... எப்போ உங்களை பார்ப்பார்  என்று எனக்கு தெரியாது"


"நான் அகத்தியரை பார்த்தே தீர வேண்டும் தயவுசெய்து என்னை அங்கு அழைத்து செல்லுங்கள்" என்றேன். என்னை ஒரு பஞ்சு மூட்டை போல அவர் தன் இடுப்பிலே அமர்த்திகொண்டு சென்றார் .எங்கு செல்கிறோம்,இது எந்த வழி என்று எனக்கு தெரியவில்லை,சிறிது தூர பயணத்திற்கு பிறகு .ஒரு குகை போன்ற நுழைவாயில் அடைந்தோம் .என்னை அங்கு இறக்கி விட்டு அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

அந்த இடத்திற்கு நான் அவர் மூலமாக அழைத்து வரப்பட்டதால் எனக்கு ஒரு வரவேற்பு.தம்பி (இளம் சாது) ரொம்ப நல்லவர் ,அவர் ஒருவரை இங்கு அழைத்து வருகிறார் என்றால் கண்டிப்பாக அவரும் நற்குணம் உடையவராகவே  இருப்பார் ,
இந்த இடத்திற்கு வர தகுதியானவரே  " என்று அங்கு நான் உணர்கிறேன் .

அங்கு யாரோ ஒரு பெரியவர் அமர்ந்திருக்கிறார். ஓரளவுக்கு சற்றே குறைவான  உயரம் இருக்கும் .தன் இரு கால்களையும் நீட்டி கைகளை சிறிது  பின்புறமாக வைத்து அமர்ந்து இருந்தார்.அவர் ஒரு காவி வேட்டி ,மேல் சட்டை எதுவும் அணியவில்லை.கொஞ்சம் தாடி நரைத்து உள்ளது .நல்ல தலைமுடியும்  நரைத்து இருக்கிறது. நான் அவர் அருகே சென்று அமர்கிறேன் .ஆனால் அவர் எதிரே முகம் நோக்கி அமரவில்லை.அவரின் பக்கத்தில் அமர்கிறேன்.என் நினைப்பு எல்லாம் அகத்தியரை காணவேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே.

அந்த பெரியவர் மெதுவாக என்னிடம் " தம்பி ....என்ன பண்ணுறீங்க "?
"அய்யா...நான் அமெரிக்காவில் வேலை செய்கிறேன் " என்றேன்  .
அவர் "ஒ..அப்படியா,நல்லது .நான் இந்த கட்டிட வேலை கோல வடிவமாக நீண்ட கோபுரம் செய்யும்  தொழில் தெரியும் .அங்கு இது போல் வேலை கிடைக்குமா ?" என்றார்.
அய்யா .."கண்டிப்பாக அமெரிக்கர்களுக்கு அந்த மாதிரி கோல வடிவம் ரொம்ப பிடிக்கும் .உங்களுக்கு விசா எதுவும் இருக்கா ?"
" ஜப்பான் நாட்டு விசா வைத்திருக்கிறேன் ..."
அப்படியா  அய்யா "சந்தோசம் அப்போ உங்களுக்கு நான் அமெரிக்காவில் வேலை ஏற்பாடு செய்கிறேன் " என்றேன் .

அந்த இடம் ஏதோ ஒரு பெரிய இடம் போல ,பல மக்களின் பிரச்சினைகளை சரிசெய்யும் இடமாகவும் உணர்கிறேன்.

"இவர் ஒரு  வேளை அகத்தியராக இருப்பாரோ... !?  அப்படி அகத்தியராக இருந்தால் அவரே சொல்லட்டுமே  அல்லது இவர் தான் அகத்தியர் என்று யாராவது சொல்லட்டும் ...." என்று ஆணவம் நிறைந்த என் மனம்  சொல்லுகிறது .

அகத்தியர் எப்பொழுது வருவார் என்றே காத்துகொண்டிருந்தேன்.அந்த பெரியவருக்கும் எனக்கும் ஒரு 2  அடி தூரமே .நேரம் செல்கிறது .ஒரே எண்ணம் "அகத்தியம் மட்டுமே "அந்த பெரியவரைநான்  நேராக பார்க்கவில்லை.ஏனென்றால் அகத்தியரை பார்ப்பதே என் முதல் எண்ணமாக,முதல் நோக்கமாக இருந்தது .ஆயினும் என் மனம் அவரை பற்றி எண்ணத்தோண்றுகிறது.
அட இங்கே பாரு ,இந்த பெரியவரின் உள்ளம் எவ்வளவு கருணை மிகுந்து உள்ளது .ஒரு கள்ளம் கபடம் அற்ற உள்ளம்.அனைத்துமே சரியாக தன் நினைவால் கூட ஒரு அணு அளவேனும் தீங்கு நினைக்காத,கருணை மட்டுமே நினைக்கும் எண்ணம்.என்ன ஒரு  அமைதியான....  மிக ஆழ்ந்த பார்வை .
எனக்கு ரொம்ப பிடித்திருந்தது என்மனமும் ஆழ்ந்து  நெகிழ்ந்து குளிர்ந்து  தன்னை லேசாக மறக்க தொடங்கியது .
எந்த எதிபார்ப்பும் இன்றி  மேலே வானத்தை  நோக்கி அவர் கருணை கண்கள் ,குழந்தை  போல் பார்த்துக்கொண்டிருந்தது

 எனக்கும் அவரின் சூட்சும ஆற்றலுக்கும் ,ஒரு தொடர்பு ஏற்பட்டது ,பார்க்காமலே தொடாமலே ஒரு தொடர்பு .என் உடம்பு சிலிர்த்தது ,ஏதோ ஒரு உலகையே அரவணைக்கும் அன்பின் ஆழத்தில் நானும் ஈர்க்கப்பட்டேன் .

 மனமே.....என்ன இது ? இவ்வளவு அமைதி ? கண்களில் நீர் தாரை தாரையாக...? அனைத்தையும் மறந்தேன் .அவர் பால் ஆட்கொள்ளபட்டேன். ஒரு  நல்ல அலை இயக்கத்துக்கு தள்ளப்பட்டேன்.எதையும் படிக்காமலே பாடம் எனக்கு கற்பிக்கபடுகிறது. அது ஒரு அன்பு சார்ந்த பாடம்.ஒரு கன நொடிபொழுதில் எவ்வளவோ உணர்கிறேன் .உணர்த்தப்படுகிறேன்.அனைத்திற்கும் அன்பின் தொடர்பு இருப்பது தெரிகிறது.எதை  பார்த்தாலும்   நாம் நமது அன்பின் அதிர்வு அலை  உணர்ந்தால்,அன்பின்  நிலைக்கு மாறினால்,எந்த பொருளானாலும் சரி ,எந்த புத்தகமானாலும் சரி  அல்லது எது ஆனாலும்  சரி அதனதன் உள்ளடக்கிய  அறிவை , அன்பினால் விரித்து அள்ளி,அள்ளி  வாரி வழங்குகிறது.ஓரிரு  வினாடிக்குள் உண்மை உணர்த்தப்படுகிறது என்பதை  உணர்கிறேன்.

அன்பு என்பது  என்ன ?
ஒரு தாய் தன் குழைந்தைகளிடம் வைப்பது ,ஒரு கணவன் தன் மனைவியிடம் வைப்பது ,தந்தை தன்  மகனிடம் வைப்பது , ஒரு காதலன் தன் காதலியிடம் வைப்பது, இது மட்டும் தான் அன்பா ?இல்லை ... இல்லை... இவை எல்லாம் அன்பின் ஒரு வெளிப்பாடு அல்லது அன்பின் ஒரு மேற்புறம் .அன்பின் ஒரு அங்கம் மட்டுமே .

அன்பு என்பது ஒரு ஆழமான சூட்சும ஆற்றலை நோக்கி செல்வது .அந்த சூட்சும ஆற்றலின் மூலமாக இருப்பது . அந்த  சூட்சும ஆற்றலை நோக்கி செல்ல  செல்ல,மனம் சில்லென்று குளிர்ந்து ,குழந்தை போன்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ,ஒரு மாதிரியான அழுகை ,ஒரு மாதிரியான ஒரு ஏக்கமுடன்  ,ஒரு ஆழ்ந்த  அதிர்வு குறைந்த அலை நோக்கி தள்ளபடுகிறது.மனம் ஆழ்நிலைக்கு தள்ளப்படுகிறது.

 யாரெல்லாம்  அன்பு  என்ற  சூட்சும ஆற்றலை  நோக்கி சென்றாலோ அல்லது அதன் அருகில் சென்றாலோ .அவர்கள் எது வேண்டுமானாலும் பெறலாம் .எதுவும் சாத்தியமே .
அந்த அன்பின் ஆழம் உணர்ந்தாலே ...சமாதியில் உள்ள மகான்கள் எழுந்து வந்து உம்மை கட்டியணைத்துகொள்ளுவர்.
அந்த அன்பின் அதிர்வு அலையை உணர்ந்தால் கோடிகணக்கான உள்ளங்கள் உம்மை அனைத்து அரவனைத்துகொள்ளும்.

அன்பு என்னும் ஆழ்ந்த இடம் சென்றால் அகிலம் தான் கட்டி வைத்துள்ள கோடிக்கணக்கான சூட்சுமங்களை .. அவிழ்த்து ..தனது உளம் மகிழ்ந்து ..வாரி வாரி ..வழங்கும் ..

இப்படி  பல பாடங்களை கற்றேன் .எப்படி  என் தூக்கம் விட்டு எழுந்தேன் என்று தெரியவில்லை .எழுந்து மணி பார்த்தேன் அதிகாலை 4 மணி  .என் ஆபீஸ் நண்பர்கள் எல்லாம் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள்.இப்படி ஒரு பெரிய நிகழ்வு நடந்தது .அதற்கும் இங்கே உள்ள இவர்கள் இருக்கும் இடத்திற்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை என்று எண்ணிக்கொண்டு எழுந்து  ஒரு கோப்பை நீரை பருகி,இது வரை நடந்த  நிகழ்வுகளை அசைபோட தொடங்கி மீண்டும் நித்திரையில் ஆழ்ந்தேன் .

இது ஒரு கனவோ அல்லது ஒரு சூக்கும பயணமோ என்று தெரியவில்லை .
ஆனால் என் நண்பனிடம் அந்த இளம் சாது சொன்ன "இன்னும்  இரண்டு வாரங்களில் அவரை சந்திக்கிறேன்"  மற்றும்  அன்று நான் சதுரகிரியில் அவரிடம்  கேட்ட  " அகத்தியரை நான் பார்க்க வேண்டும் ?அவரை நான் பார்க்க உதவி செய்வீரா ?" என்ற கேள்விகளுக்கு  பதிலாகவும், இந்த நிகழ்வு மூலமாக எனக்கு அவர்  நன்கு உணர்த்திவிட்டார். இதை எண்ணி எண்ணி வியந்து வியந்து மகிழ்ந்தேன் பலமுறை.
 இன்று வரை நான்  எப்பொழுதெல்லாம் அகத்தியர் என்ற வார்த்தை கேட்கின்றோனோ அப்போதெல்லாம் என் மனம் "இந்த அன்பின் ஆழம் நோக்கி  ..இந்த நடந்த நிகழ்வுகளை நோக்கி,மெல்ல அசை போட தொடங்கி ,ஒரு இனிமையான ,அமைதியான  சூழலை உருவாக்கி மனதினை இன்பவெள்ளத்தில் ஆழ்த்துகிறது"

இதுவரை தொடர்ந்து என் தமிழ்  பிழை  பொருத்து, இறுதி வரை படித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கூறி ,அனைவரும் அன்பின் ஆழம் உணர்ந்து... மெய் சிலிர்த்து......அகத்தியர் அருள் பெற்று நீடுடி வாழ்க..!! வாழ்க..!!என்று உங்களை வாழ்த்தி  மீண்டும் உங்கள் அனைவரையும்  அடுத்து ஒரு கட்டுரையில் விரைவில் சந்திக்கிறேன்...

வாழ்க வளமுடன் !! வாழ்க வளமுடன் !!

அன்புடன்
 செந்தில்மாணிக்கம்

Wednesday, December 9, 2009

அன்புள்ளம் கொண்ட நெஞ்சங்களே..!


நான் செல்லும் ஆன்மீக பயணத்தில் எனக்கு கிடைத்த அனுபவங்களை இங்கே என்னால் முடிந்தவரை, நான் உணர்ந்ததை தர முயற்சி செய்கிறேன்.
விரைவில் ...