Sunday, June 21, 2015

ஸ்ரீ பைரவம்...!!!


காலம் என்றும் சுழன்றுகொண்டே இருக்கும் ஒரு முடிவற்ற நிகழ்வு.ஆயிரமாயிரம் யுகங்களாய் இந்த காலம் சுழன்று கொண்டேஇருக்கிறது,இன்னும் சுழன்றுகொண்டேதான் இருக்கப்போகிறது.ஜனனம் எடுத்தவர் மரணம் ஆகுவதும்,மரணம் எடுத்தவர் மீண்டும் ஜனனம் ஆவதும்  சென்றுகொண்டேஇருக்கிறது.இந்த சுழற்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு சக்தி இவை அனைத்தையும் கவனித்துக்கொண்டு,யுகம் யுகமாய் ,கம்பீரமாய்,பிரம்மாண்டமாய் ,ஒளிப்பிளம்பாய் வலம் வந்துகொண்டிருக்கிறது.அந்த சக்தியின் அதிர்வு மிகமிக அதிகம் .தாம் பார்க்கும் எத்தனை ஆயிரம் உயிர்களுக்கும் நொடிப்பொழுதில் இருக்கும் அலையியக்கத்தை  மாற்றி அமைத்து,இறைவெளிப்பாதையில் உட்செலுத்தி ,பேரொளியினை நிரப்பி,ஜீவமுக்தி அளித்துவிடும் சக்திபெற்றது.அப்படிப்பட்ட ஒரு மாபெரும்  மிக அதீத அதிர்வு உணர்வு கொண்ட சக்தி, ஒருபேராற்றல்,ஒரு கரிய நிறமுள்ள ,கட்டுகடங்காத அலைகளின்ஆற்றல் கொண்டுள்ள சக்திதான் பைரவம் , பைரவர் ,வயிரவர் ,காலபைரவர்  என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.இவர் காலத்தையும் வெல்வார்.காலனையும் வெல்வார்.தொடக்கம் முடிவு  ஆகிய எதுவும் அறிய இயலாத  சிவத்திலிருந்து பிறந்து சிவத்தின் ஒரு அங்கமாக இன்றும் என்றும் சுழன்றுகொண்டு காவல்காக்கும் தொழில்புரியும்  ஒரு மகாதெய்வம்  காலபைரவர்.

மகாபைரவர்  தாள் பணிந்து ,வணங்கி இவர் அருள் பெற அது பல்வேறு நிலைகளை தாண்டி வெகு விரைவில் ,வணங்குபவர் தம்மின் நிலையை தூக்கிவிடுகிறது.எமது அனுபவம் எல்லாம் இங்கு ஒன்றுமில்லை,தூசியைவிட மிக மிக சிறியது.ஏனெனில் யாம் உணர்ந்த அந்த சக்தி நினைக்கும் போதே,உடல் செல் மயிர்கூச்சம் பெற்று,சொல்வதறியாது ,விளக்க இயலாதாய் உள்ளது .மிகபிரம்மிப்பாய் உள்ளது.ஒவ்வொருவருக்கும் கர்மவினை என்பது தனித்தனி.நமது கர்மவினையை, நாமே ,நாம் மட்டுமே அனுபவித்து அதற்கேற்ப பலன்களை பெறமுடியும்.இதை எண்ணி செயல்ஆற்றும் போதே , இந்த அடுத்தவரை பார்த்து பொறாமை படுதல்,தகுதிக்குமீறிய ஒரு சில எண்ணங்கள் எல்லாம் அடியோடு ,அந்த எண்ணம் செயலற்றுவிடும்.ஒவ்வொருவரும் அவர் தாமே பல நல்ல செயல்கள் செய்து புண்ணியம் செய்து,இறை உணர்ந்தே அவர் தம் கர்மவினையை குறைக்க இயலும்.கர்மவினை  தாக்கம் குறைய ஒரு மிகப்பெரிய இறைசக்திதுணை தேவைப்படுகிறதல்லவா ?! .இல்லையெனில் இதன் தாக்கம் தாங்கஇயலாமல் தாம் இருந்த நிலையிலேயே சுழன்றுகொண்டு மீழ்வதறியாமல் ,இன்னலில் அகப்பட்டு, மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கவேண்டியதாகிறது.

கர்மவினையின் தாக்கத்தை அதன் அடி வேர்நுனி வரை சென்று ,அதன் வேரறுத்து ,வெகுவிரைவில் இறைநோக்கிய பயணத்தை ,அதன் தடைகளை உடைத்தெறிந்து ,இறை அருகில் அழைத்துசெல்லும் ஒரு உன்னத சக்தி,இந்த பைரவ சக்தி மற்றும் அதன் அற்புதமான அலைகள்.இப்பிறவியில் பைரவரை தொடர்ந்து வழிபாடுசெய்பவர்கள்   எல்லாம்,போன பிறவியில் சித்தர்களின் தொடர்புடையவர்கள் எனவும் ,சித்தர்களின் சீடர்கள் எனவும் சொல்கிறார்கள்.எந்த பைரவ மந்திரங்களாயினும் சரி ,ஸ்லோகங்கலாயினும் சரி ,அவை சொல்லும் அன்பர் தம் சூட்சுமதேகத்துள் சென்று, அவரை படிப்படியாக உயர்த்துகிறது .அங்குள்ள மாசுகளை நீக்கி,மாயையைஅழித்து,நல்ல வளமுள்ள ஒரு அற்புதமான ஆத்மாவாக மாற்றுகிறது.வாழ்வில் எப்படியாவது ஒரு சித்தரை பார்த்து,அவர் தம் ஆசி பெற்று,தமது நிலையை எவ்விதமேனும் உயர்வுபடுத்திக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் உண்டு அல்லவா ?.இவை நிறைவுபெற ஒன்று புண்ணியம் வைத்திருக்கவேண்டும் இல்லையெனில் இப்பொழுதாவது அதற்குரிய தகுதியை வளர்த்துக்கொள்ளவேண்டும்,இதற்குரிய தகுதிபெற கடின உழைப்பு ஆன்மீகத்தில் தேவைப்படுகிறது.இப்பிறவியில் இயலவில்லை எனில் கண்டிப்பாக வரும் பிறவி ,இன்னும் தெளிவுபெற்று அதற்குரிய தகுதிவந்துவிடும்.ஒவ்வொரு வினாடியும் செலவழிந்துகொண்டே போய்க்கொண்டிருகிறது,இங்கே எவ்வாறு அதனை, இனிவரும் காலங்களுக்கும்,இனிவரும் பிறவிகளுக்கும் , நன்மை தரும் விதமாக இந்த சூட்சுமதேகத்துள் சேர்த்துவைப்பது ,அதன் தாத்பரியத்தை எவ்வாறு புரிந்து பயன்படுத்திக்கொள்வது, என்பதெற்கெல்லாம் அருள் புரியும்  ஒரு அற்புதசக்தி தான் இந்த பைரவமந்திரம் ,பைரவ சக்தி.(இதற்குரிய யாகம் எவ்வாறு செய்வது என்பதை ஏற்கனவே ஸ்ரீமஹாபைரவர் கட்டுரையில் எழுதிஉள்ளோம் ,மீண்டும் படிக்கவும்)
பைரவ காயத்ரி ஒரு நல்ல அலையியக்கத்தை உருவாக்கி ,கர்மவினை தாக்கத்தை வேரறுத்து,சூட்சும தேகம் பற்றியஅனைத்து விழிப்புணர்களையும் வரவழைத்து,சூட்சும தேகம் வலுப்பெற நன்கு உதவும் ஒரு அற்புத மந்திரம்.ஒரு சில நிபந்தனை என்னவெனில் ,சுத்தமாக இருக்கவேண்டும், எந்தவகையிலும் சுத்தம் இல்லையெனில் சும்மா இருப்பது நல்லது.இல்லையெனில் விளைவு தாறுமாறாக வந்துவிடும்.அவ்வளவு சக்திவாய்ந்த அட்சரங்களின் தொகுப்பு இவை. முடிந்தவரை  நன்கு தெளிவாக உச்சரித்து இதில் உள்ள அதிர்வு உணரவேண்டும் (vibrations).அவ்வாறு கொஞ்சம்கொஞ்சமாக உணரஉணர ,சூட்சுமதேகம் நன்கு வலுப்பெறும்.இவை வலுப்பெற,வலுப்பெற பிறகு அதற்குரிய தன்மைகள் வந்துவிடும்.உதாரணமாக ஒரு ஜீவசமாதி சென்றால் அங்குள்ள மகானின் சூட்சும அலைகளை மெல்ல மெல்ல உணரும் தகுதிவரும்.ஒரு கோவிலுக்கு சென்றால் அங்குள்ள அதீத ஆற்றல் கொஞ்சம்கொஞ்சமாக புலப்படும்.இன்னும் பைரவசக்தி உணர உணர ,அவர் தம் அன்றாட வேலைகள் எளிதாய் நடந்தேறும்.இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.இவை எல்லாம் எடுத்த எடுப்பிலேயே வராது.கொஞ்சம் சாதனை பண்ணவேண்டும்.இதன்பிறகு அன்றாட நடக்கும் அவர் தாம்  செய்யும்  செயல்கள் ,நிகழ்வுகள் ஆழ்ந்துகவனிக்க வேறுபாடு நன்கு புலப்படும்.நன்கு பயன்படுத்தி தங்களுக்கு தெரிந்த அனைத்து உள்ளங்களுக்கும் சொல்லிக்கொடுங்கள் அவர் தம் வாழ்வு இனிமையாகும்.

பைரவ காயத்ரி: 
ஸ்வாநத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய
தீமஹி தன்னோ பைரவ ப்ரசோதயாத் ஸ்வாஹா

நாள் தவறாது பைரவமந்திரத்தைசொல்வதும் நன்மையே.உடலது ஒரு மெல்லிய வெதுவெதுப்பான உஷ்ணத்துடன்,ஒருவித விழிப்புநிலையும் சேர்ந்து ,வேறு எந்தசெயல்களிலும்,நாட்டமில்லாது ,பைரவஅதிர்வு அலைகளை  மட்டுமே மனதில் நன்கு உள்வாங்கிய வண்ணம் இருக்கும்.இப்படி இருப்பதும் மிக நன்மையே.வெளியில் எங்கும் செல்லாமல் இருக்கும் போது ,இதன்  ஆற்றல் அதீதமாக இருக்கும் போதும் ,மேலும் செலவு செய்யாமல் இருப்பதாலும் ,உயிர்சக்தி நன்கு வலுப்படும்,ஒரு ஸ்திரத்தன்மை கிடைக்கும்.மேலும் இது தொடர ஏதாவது  அசாதாரணமான ஒன்றை செய்யத்தோன்றும் .ஒரு சிலநாட்களில் கனவில் தம்கட்டிதாவுவது போலவும்,இங்கிருந்து இன்னொரு இடத்திற்குசெல்ல ,மெதுவாக நடந்து சென்று அடையாமல், ஒரேமூச்சில் சிறிது நீண்டு தாவுவது போலவும்,,பறந்துசென்று இடத்தை அடைவது போலவும்,பறப்பதுபோலவும்,   வருவதெல்லாம் ,உடலில்தேங்கியுள்ள மிகஅதீத ஆற்றலால்தான்.ஆக இவ்வாறு கிடைக்கும் ஆற்றலை ,கனவில் வீனடிக்காமல் ,நன்கு இந்த உலகத்தையோ,நமக்கு தெரிந்த உற்றார் உறவினர்,நண்பர் ,அன்றாட நம்முடைய வாழ்வில் பங்குகொள்பவர்கள் இவர்களை ,முடிந்த வரை போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு , வாழ்கவளமுடன் என்று வாழ்த்தியோ அல்லது அன்பால் கருணையால் இறையருள் அவர் தம் துயர் நீக்கி எல்லா வளங்களையும் அளிக்கட்டும் என அந்த அதீத ஆற்றலை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.இப்படி செய்தால் ஆற்றல் சேமிப்பு இரு வகையில் பயன்அளித்து அது மீண்டும் இரட்டிப்பாக நம்மிடமே வந்துசேரும்.பைரவ அதிர்வு அலை என்பது ,நேரடியாக சூட்சுமத்தோடு தொடர்புடையது .சூட்சும உடலோடு தொடர்புடையது.நாம் தூங்கினாலும் இந்த சூட்சும உடல் என்றும் தூங்குவதில்லை.காலகாலத்திற்கும்  தூங்காமல் விழிப்புநிலையில் என்றும் நம்மோடு வரும்.இந்த உடலில் ஒரு சிறு பைரவ அதிர்வு அல்லது ஏதேனும் ஒரு நல்ல அதிர்வு அலைகளை ஏற்றிவிட்டால் அவை நாள் முழுவதும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.ஒரு சிறு துளி பைரவ அதிர்வு உணர்தல் என்பது அது சூட்சும உடலில் வெகு நேரம் தொடர்கிறது.இப்படி இருப்பது ஒரு சுகமே.இப்படி இருக்கும் காலமெல்லாம்  அது வாழ்வில் ஒரு பொன்னான காலமாகும்,பொன்னான நாளாகும்.மீண்டும் இது போல் வருமா என்றெல்லாம் தெரியாது.ஆக வாய்ப்பு கிடைக்கும் போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு இந்த அதீத சக்தியோடு இருக்க பழகிக்கொள்ளுதல் மிக நன்மை பயக்கும்.ஒருவரின் ஆளுமைதிறம், அந்த  உடம்பில் உயிரில் ,மனதில் உள்ள ஒரு சக்தியை சார்ந்தது ,அந்த சக்தி என்பது சூட்சுமதிலிருந்து பெறுவது ,ஆக சூட்சுமம் திடம் பெற,அங்கு ஸ்திரம்பெற மனிதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துசெல்கிறது.ஒரு முறை  தேய்பிறை அஷ்டமியில் பைரவர் யாகம் செய்துகொண்டிருந்த பொழுது ,கிட்டத்தட்ட  யாகம் முடிவடையும் நேரம், ஆயிரம் முறைக்குமேல் உச்சரித்து ,கிட்டதட்ட  எமது உடல் கருவிகளெல்லாம் தளர்வடையும் நேரம், எண்ணம் உச்சரிக்கும் மந்திரம் எல்லாம் இந்த பைரவசக்தியில் திளைத்திருந்தது,வீரியமிக்க அதிர்வலைகள் கொண்ட சக்தி,இவை எம் உள்ளத்தோடு பிண்ணிப்பிணைந்திருந்தது.ஒரு கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு கரியநிறமுள்ள ஒரு உருவம் ,கரிய நிறமென்றால் ஒரு அதிர்வுள்ள,காந்ததன்மையுள்ள , ஈர்க்கும் தன்மையுள்ள,உடலெங்கும் கட்டுகடங்கா அதிர்வுஅலைகள் சுழன்றுகொண்டிருக்கும், கரிய தேகம் ஒன்று யாககுண்டத்திலிருந்து முன்னோக்கி  ஜல் ஜல் ஜல் என ராஜகம்பீரநடையுடன் முன்புறமாக சென்றுகொண்டிருந்தது,யாமோ அதனை பின்புறமாகவே பார்க்கமுடிந்தது.எல்லாம் நொடிக்கும் குறைவான நேரம்.நடை என்றால் அப்பப்பா என்ன ஒரு நடை ,ஒரு இரண்டடி எடுத்துவைத்தது மட்டுமே யாம் உணரமுடிந்தது.பிரமிக்கவைக்கிறது,சிலிர்க்கவைக்கிறது.எதற்கும் அஞ்சாத நடை,எந்த  ஒரு சக்தியையும் எதிர்கொள்ளும் திறம்,கோடிஉயிர்களின் ஆத்மாக்களை அரவணைக்கும் தகுதி,பாரபட்சமே இல்லாத எல்லாவற்றையும் சமமாக பார்க்கும் கருணையும் உக்கிரஅதிர்வும் கொண்ட தன்மை நிரம்பிய நடை,இன்னும் வர்ணிக்க இயலாத ,உணரமட்டுமே முடிந்த அலைகள் நிரம்பியிருந்தது. எம்மை எவர் அழைத்தாலும் வருவோம் என்றும்
இன்றைய நிகழ்வு அதிஉத்தமம் என்றும் எம்முள் சொல்லாமல் சொல்லி கம்பீரமாக சென்றுவிட்டது.


எமது குருவின் வாக்கிற்கிணங்க  ஒரு நாள் இரவு பதினோரு மணிக்கு மேல் அன்பின் அலைகொண்டு ,தூய அன்பால் பைரவர் படத்தின் முன் ,உள்ள அன்போடு பைரவனை அழைத்துபார் என்றார் ,யாமும் அவ்வாறு ஒரு நாள் அழைக்க ,யாம் வைத்திருந்த பைரவ படத்தினை சுற்றி ஒரு ஒளி பளிச்சிடும் ஒளி ஒன்று வட்டமாக சுற்றிவந்தது.அன்று யாம் உணர்ந்த அந்தஒளி,எம்முள் பைரவம் பற்றி  பைரவசக்தி பற்றி இன்னும் ஆர்வம் அதிகமாக ஈர்ப்புகொள்ள செய்தது,அந்த சக்தி பின்னர்கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ,ஒரு குறிப்பிட்ட  வருடங்களுக்கு பிறகு கரிய உருவமாய் வந்தது.இன்னும் இவை எம்முள் தொடரும் என்றே உணர்கிறோம்.மதுரையில் தெப்பக்குளம் அருகே ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது.அதன் அருகே ஒருகாலபைரவர் கோவில் உள்ளது .மிகுந்த சக்திவாய்ந்த கோவில்.இங்குள்ள பைரவர் அதிக உக்கிரம் வாய்ந்தவர்.எப்பொழுதும் அதீதசக்தி ஒன்று சரியாக ராகுகாலத்தில் இந்தகோவிலில் வந்துசெல்கிறது.
ஒரு கருப்புவெள்ளை நிறம்கொண்ட நாய் ஒன்று இங்கு இருக்கும்.அது அங்குள்ள பைரவ சக்தியோடு தொடர்புடையது.மதுரையை சுற்றிபார்க்க செல்பவர்கள் இங்குள்ள  காலபைரவர் கோவிலையும் ,ராகுகாலத்தில் வந்து தரிசித்து செல்லுங்கள்.உடம்பில் உள்ள துஷ்டசக்தியை விரட்டியடியுங்கள்

காலபைரவர் எவர் அழைத்தாலும் வருவார்.இவர் எங்குவந்தாலும் அந்த இடம் மிகுந்தபாதுகாப்பாக திகழும் .தீயசக்திகள் இருக்கும் இடம்தெரியாமல் சென்றுவிடும்.தீயவை அகன்றுவிடின் செய்யும் செயல்யாவும் முழுமையான விளைவுகளை ஈட்டும்.வாழ்வில் நன்மை பயக்கும்,இந்த பைரவ அலைகளோடு அகத்திய உள்ளங்களை வாழ்த்தி வேறு ஒரு நிகழ்வில் சந்திக்கிறோம் !

ஒம் அகத்தீஸ்வராய நமக !!!
ஒம் அகத்தீஸ்வராய நமக !!!
ஒம் அகத்தீஸ்வராய நமக !!!