Sunday, August 4, 2013

ஸ்ரீ ராம தேவர் சொரூப சமாதி

அன்புள்ளம் கொண்ட அகத்திய நெஞ்சங்களை நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும்  சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். கால  தாமதத்திற்கு வருந்துகிறேன்.ஸ்ரீ மஹா பைரவர்  கட்டுரையில்  வரும்  பைரவ மந்திரம் சக்தி மிகுந்த நல்ல அதிர்வு அலைகளை தரக்கூடியது. சூட்சும சக்தியை பெருக்கக்கூடியது. நம் சூட்சும உடம்பிலே ஒரு polish  ,இறை சக்தியால் ,பைரவ சக்தியால் மெருகேற்றப்படுகிறது. எப்பொழுதும் நம்மை தொட்டுக்கொண்டே,எங்கெங்கு சென்றாலும் நம்முடனேயே வருவது நம்  சூட்சும உடல்.நல்ல  அதிர்வு  அலைகள்  நமக்கு  எப்பொழுதும்  நல்ல எண்ணங்களை  தரவல்லது .  இந்த சூட்சும உடல்    எந்த அளவுக்கு ஒருவருக்கு செறிவுள்ளதோ அந்த அளவுக்கு, மனம் நன்கு  வலிமை பெரும் ,நல்ல  திடம் பெறும் ,நல்ல நிறைவு  பெறும்.நல்ல திடமான ,அலைபாயாத நல்ல ஆரோக்கியமான மனதில் தான்,ஒரு தீர்க்க மான முடிவு  எடுக்க முடியும்.நல்ல சரியான முடிவு  எடுக்க தெரிந்தவர்கள் தான் வாழ்க்கையின் உயர்நிலையில் .இன்றைய உலகத்திற்கு மிக மிக  அவசியமானது,இந்த  மிக சரியான  முடிவு எடுத்தல் என்பது. குப்பையான  எண்ணங்களை வேரறுத்து மன விரயத்தை பாதுகாக்க வல்லது பைரவ சூட்சும அதிர்வு அலைகள் .மனம் விரயம் இல்லை எனில் உயிர் சக்தி நன்கு சேமிக்கப்படும்.இவ்வாறு சேமிக்கப்படும் உயிர் சக்தி மற்றும் சூட்சும சக்தி மேலும் நம்மை வலிமை படுத்தி ,செய்யும் செயலுக்கும், உழைக்கும்  உழைப்பிற்கும் உறுதுணையாக இருக்கும்.உழைப்பின்றி எதுவும் கிடைக்காது இந்த உலகில்.எந்த நல்ல செயலாயினும் வேலையாயினும் அதன் உச்சம் தொடும் வரை  செல்ல உதவி செய்யும் .இது ஒரு வழி,இது போல் எத்தனையோ வழிகள் உள்ளது. அகத்திய உள்ளங்கள்  எவ்விதமேனும்  நல்ல அதிர்வு மிக்க அலைகளை உணர்ந்து வாழ்வில் வெற்றிபெற ஸ்ரீ மஹா பைரவரையும் ,தந்தையையும்   வணங்கி  கட்டுரையை தொடங்குகிறேன் .ஆழ்ந்து  அகன்று விரிந்த  இப்பிரபஞ்சம்.கற்பனை செய்ய இயலாத அளவிற்கு விரிந்துகொண்டே இருக்கும் இப்பிரபஞ்சம்.என்ன  தான் இங்கே இருக்கிறது ? இப்படி விரிந்து கொண்டே அனைத்தையும் உள்ளடக்கி கொண்டு,சென்றுகொண்டே இருக்கிறது .முதலும் இல்லாமல் முடிவும் இல்லாமல் இப்படி சென்று கொண்டேயிருக்கும் ஒரு விந்தை.சில கோள்களை அப்படியே விழுங்கிக் கொண்டும் மேலும் சில புதிய கோள்களை உருவாக்கிக்கொண்டும் ,சத்தமில்லாமல் அனைத்து பிறப்பு இறப்பு செயல்களை நிகழ்திக்கொண்டிருகிறது .எல்லையற்ற பிரபஞ்ச பேராற்றல் ,இறைஆற்றல் ,வெட்டவெளி,ஏதுமற்ற  ஆனால் எல்லாம் ஆன தூய வெற்றிடம் (a holy powerful space,vaccum),வார்த்தைகளாலும்  வர்ணிக்க முடியாத ,ஒரு அளவிற்குமேல் என்னவென்று  உணர இயலாத ஒரு மாபெரும் சக்தி .ஒரு  ஈர்ப்பு சக்தி . இந்த அன்பு கலந்த ஈர்ப்பு சக்தி ஒன்றே  இந்த உலகத்தை ,இப்பிரபஞ்சத்தை ஆள்கிறது.இந்த அன்பெனும் ஈர்ப்பு அலைகள் தன்னுள்ளே உள்ள அனைத்து திடப்பொருள்களையும் பல கோடி உயிர்களையும் ஈர்த்துப் பிடித்து அன்பால் அரவணைத்துள்ளது.இந்த அன்பெனும் ஈர்ப்பு சக்தி இல்லாத இடமே இல்லை ,இல்லாத உயிரும் இல்லை.இங்கே ஒரு துளி அன்பின் ஈர்ப்பு அலைகளே இந்த அகத்திய இதழ் வாசிக்கும் அன்புள்ளங்களையும் எம்மையும் இணைக்கிறது .தூய பிரபஞ்ச அன்பெனும் அலையை உணர்ந்து பாருங்கள் ,பிறகு எது செய்தாலும் ஒரு முழுமையை உணரமுடியும் .எதை பார்த்தாலும் அது உங்களுக்கு பிடிக்கும் .ஒரு அன்பு ஈர்ப்பு இருக்கும் .என்ன தேவையோ அவை அன்பால் வழங்கப்படும்.

தந்தை அருளிய அன்பெனும் ஞானம் பல முறை எம்மை அனைத்தையும் ஒரு அன்புப்பார்வையாக பார்க்க உதவிசெய்கிறது .அன்புப்பார்வையில் ஒவ்வொரு நொடியும் பேரின்பமாகும் .ஒவ்வொரு செயலும் ரசித்து செய்யமுடியும்.முடிந்தவர்கள் இங்கே  மனத்தால் ஒரு space travel செய்து வாழ்வின் உண்மையை உணர்ந்தனர்.ஒரு சிலர் தொட்டும் தொடாமலும் உணர்ந்து இங்கே இதனை இசையாக மாற்றினர்,இங்கிருந்துதான் அத்தனை இதயம் வருடும் மெட்டுகளும்.இங்கிருந்துதான்  அத்தனை அமைதியும் ,அத்தனை ஆனந்தமும் ,இங்கிருந்துதான்.ஒரு சிலர் இந்த அமைதியில் ஆழ்ந்து இதனோடு எப்பொழுதும்  ஒரு இணைப்பு எற்படுத்திக்கொண்டனர் இவர்கள் மகான்கள் என்று அழைக்கப்பட்டனர்.

ஆழ்ந்து விரிந்து அகண்ட இப்பிரபஞ்சவெளிபோல் விரியும் மனம். தானே அதுவாக ( இறைநிலையாக) மாறும்  மனம். இறைநிலைக்கு என்ன சக்தி உள்ளதோ அந்த அளவுக்கு ,தானே விரிந்து தானும் இறைநிலையும் ஒன்றாக  உணர்ந்து , தானே இறைநிலை ,இறைநிலையே தாம் என்று  " தத்துவம் அசி... " ,"..அகம் பிரம்மாஸ்மி.. "  என உணரும்  மனம்.

சித்தர்கள்,மகான்கள்  இந்த உலகத்திற்கு வாரிவழங்கிய வள்ளல் பெருமான்கள் .சூன்யமான இறைநிலையில் உள்ள சக்தியில் தம்மையே மூழ்க வைத்து ,இயற்கை இரகசியங்கள் அறிந்து மானுட வாழ்விற்கு உதவி செய்த வள்ளல் பெருமான்கள் .சித்தர்கள் போட்ட பிச்சையே இன்றும் மனிதகுலத்தினை மேம்பட வைக்கிறது.தம்மை நாடி வருபவர்க்கெல்லாம் தாம் இறைநிலையில் நுணுகி நுணுகி கற்ற வித்தையால் என்றும் கொடுத்துக்கொண்டே இருப்பவர்கள் .முன்னொரு காலத்தில் ஸ்தூல உடம்பால் நேரடியாக அருளினார்கள் ,இப்பொழுது சூட்சும உடம்பால் மறைமுகமாய் அருளாசிகளை வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள் .எவ்வாறு முடிந்தவரையில் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் எனும் எண்ணம் வாழ்க்கையை  மிக உயர்த்திவிடுகிறது .ஆக்க துறையிலேயே மனதினை செலுத்தவேண்டும் என்ற எண்ணம் ,ஆன்மாவிற்கு இப்பிரபஞ்ச சக்தியுடன் ஒரு  இணைப்பை ஏற்படுத்திவிடுகிறது .உடலாலோ ,உழைப்பாலோ,எண்ணத்தாலோ ,அறிவாலோ , ஏதேனும் பலருக்கு நன்மை தரும் விதத்தில் கொடுப்பவர்கள் என்றும் உயர்ந்தவர்கள்.போற்றி புகழப்படவேண்டியவர்கள்.

வாட்டி வதைக்கும் கோடை வெயிலால் என்ன நன்மை ? எப்படி இதனை நன்மை தருவனவாக நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் ? கோரக்கர் சித்தர் ஒரு உபாயம் சொல்கிறார் .இது போன்று அக்னி நட்சத்திர காலங்களில் பழனி ஸ்ரீ முருகபெருமான் ஆலயம் சென்று அங்கேயே ஓரிடத்தில் அமர்ந்தோ ,மலையை சுற்றி கிரிவலம் வந்தோ அங்குள்ள காற்றினை நன்கு சுவாசிக்க வேண்டுமாம் .அதன் அலைகள் நம் உடம்போடு படுமாறு செய்யவேண்டுமாம் அவ்வாறு செய்யும் போது , நவபாசாணங்களால் செய்யப்பட்ட சிலையிலிருந்து, வெளியில் ஏற்படும் வெப்பமாற்றத்திற்கேற்ப ,நவபாசாணஆற்றல்கள் காற்றோடு கலந்து ,சிலை இருக்குமிடத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பரவுமாம்.அப்போது யாரெல்லாம் அதனை சுவாசிக்கிறார்களோ அல்லது உடலில் வாங்கிக்கொள்கிறார்களோ அவர்கள் யாவரும் அதன் தன்மைக்கேற்ப பிணியின்றி தேக ஆரோக்கியம் பெற்று வாழும் ஒரு ரகசியம் உள்ளது என்கிறார்.ஒரு முறை சென்று அனுபவித்து பாருங்கள்.

அலையை பிரித்து உணரவேண்டும்.இனி வரும் காலங்களில் இது மிக முக்கிய பங்கு வகிக்கபோகிறது. அலை பிரித்துணரும் தன்மையை அறியும் ஞானம் மிக அவசியமானது .ஜீவ சமாதியிலிருந்து வரும் ஒரு மெல்லிய அலையின் ஒரு நுனியை பிடித்தாலே ,உணர்ந்தாலே ,உடனே ஜிவ்வென்று உள்ளம் நிறைவு பெரும் ,மனம்  அமைதிபெறும் முழுமை  பெரும் ,எதையும் எதிர்கொள்ளும் ஒரு கம்பீரம் பெரும் .எல்லாவற்றையும் சமநேர்நோக்கில் பார்க்கும் தெளிவு பெரும் .ஒரு கட்டத்தில் பேரமைதியை நோக்கி சென்றுவிடும்.

"சக்தியை இழப்பதே இன்பம்.." என்கிறது இன்றைய அன்றாட வாழ்க்கை நியதி .உண்பதால் ,பார்ப்பதால் ,கேட்பதால் ,தொடுவதால் என அனைத்தும் அளவு முறை மீற   துன்பமே .ஆற்றல் இழப்பே ! நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் வரை ஏதோ ஒரு பொருளுக்காகவோ (materalistic  world )அல்லது வேறு ஏதேனும் நிறைவேறாத ஆசை குப்பைக்காகவோ பிச்சை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறது மனம்.அதற்கு மாறாக இங்கே ஜீவ சமாதியிலோ எப்பொழுதும் அமைதி குடிகொண்டுள்ளது.எப்பொழுதும் நிறைவுடன் உள்ளது .சூட்சுமம்  இறைநிலை நோக்கி என்றுமே ஒரு வற்றாத அருள் அலைகள்.தன்னருகே தேடி  வரும் அன்பர்களுக்கு வாரி வாரி வழங்கும் கருணை உள்ளம் கொண்டவர்கள் .வெயிலுக்கு இளைப்பாற  நிழல் தருபவர்கள் .

அமைதியால் ஆனது தானே`இந்த கவர்ந்திழுக்கும்  ஈர்ப்பு ஆற்றல்  நிறைந்த அன்பு .அன்பினால் தானே இந்த பிரபஞ்சமே  ஒன்றோடொன்று ஈர்த்து பிடித்துள்ளது.ஒவ்வொரு உயிருள்ளும் நீக்கமற நிறைந்திருப்பது அன்பு  தானே .எந்த ஒரு உயிரையும் மற்ற உயிருடன் உறவாட வைப்பதும் அன்பு தானே .அன்பு தானே எல்லாம் .அன்பு தானே அனைத்துள்ளும் நிறைந்துள்ளது .எவனொருவன் இந்த உலக உலகத்தை அன்பினால் பார்க்கிறானோ அவன்  மாபெரும் மனிதனாகிறான்.சாதாரண மனிதனிலிருந்து வேறுபடுகிறான் .எப்படி ? தான் அன்பாக மாறும் பொழுது ,தன் மனதின் அதிர்வு குறைகிறது ,ஆக மனம் மிக நுண்ணிய அலை நோக்கி செல்கிறது.இயற்கையின் ரகசியங்களெல்லாம் இந்த அதிர்வு குறைந்த மிக நுண்ணிய அலைநீளத்தில் .ஆக இந்த பிரபஞ்ச அலையை நிறைய கிரகித்துக்கொள்ளும் தன்மை.தூய அன்பால் பார்க்கும் செடி,கொடி ,பறவை ,ஊர்வன ,விலங்குகள் ,மனிதன் என அனைத்துள்ளும் நீக்கமற நிறைந்துள்ள அன்பை பார்க்கிறான் .அன்பு என்பது ஒரு பசைபோன்ற ஸ்தூல பொருளா ? இல்லையே .மிக நுண்ணிய அலை .கடவுளின் அலைகள் .அமைதி தரும் அலைகள் .ஆனந்தம் தரும் அலைகள் ,அன்பின் அலைகளால்  அனைத்தையும் ஆட்கொண்டுள்ளது .


எந்த ஒரு physical செயலுக்கும் மூல காரணம் அதன் எண்ணங்களே .எண்ணங்களே செயல்களாக மாறுகிறது .எண்ணங்கள் என்பது அலைகளே .ஆக அலைகளே இந்த உலகத்தை ஆள்கிறது .அலைகள் எங்கிருந்து உருவாகிறது .யார் இதன் மூல காரணம் ? அதன் ஒரு நுனி பிடித்து சென்றால் ,பிடிப்பது கொஞ்சம் சிரமம் ,ஆனால் செல்ல செல்ல அமைதியையும் ,பேரின்பத்தையும் நோக்கி சென்றுவிடும்.ஜீவ சமாதியில் உள்ள சித்தர்கள் பேசுகிறார்களா !? ஜீவ சமாதிக்கும் மற்ற சாதாரண  இடத்திற்கும் வேறுபாடு உள்ளதல்லவா !? ஜீவ சமாதி இருக்கும் இடம் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறதல்லவா !?இந்த  ஈர்ப்பு  எதனால் வருகிறது ?இந்த ஈர்ப்பு எவ்வளவு நிறைவானது தெரியுமா ?

ஒரு முறை யாம் அமெரிக்காவில் இருந்தபோது ,என்னை ஆன்மீக இந்தியாவின் இரு இடங்கள் மிக ஈர்த்தது .ஒன்று திருவண்ணாமலை  மற்றொன்று சதுரகிரி .இவை இரண்டையும் விட்டுவிட்டு இப்படி வந்துவிட்டோமே என்று பலமுறை ஏங்கிஇருக்கிறேன்.பிறகு காலம் செல்ல மீண்டும் ஆன்மீக தாய்நாடு வந்தேன் .எம் நெஞ்சம் ஈர்த்த இடம் சென்றேன் .எங்கிருந்து இந்த அலைகள் வருகிறது ?ஏன் இவை கண்டம்விட்டு கண்டம் ஈர்க்கிறது ? இந்த ஈர்க்கும் அலைகளின் மூல இடம்தான் எங்கே ? திருவண்ணாமலையின் மலைஉச்சி முதல் ,பல இடங்கள் சென்றேன்.எம்மையும்  ஈர்த்த அலைகள்  எங்கே... ? எங்கே.. ?  எங்கே  அதன் மூலம் ...என்று தேடினேன். கடைசியில் அண்ணாமலையாரின் கருவறை நோக்கி சென்றேன் .கருவறை நோக்கி செல்ல செல்ல ஈர்ப்பும் ,அலைகளின் மிதமிஞ்சிய ஆற்றல்களும் அதிகமாகிக்கொண்டேயிருந்தன.ஒரு இனம் புரியாத பாசம் ,ஒரு இனம் புரியாத ஆழ்ந்த  ஏக்கம் ,ஒரு இனம் புரியாத ஈர்ப்பு எம்மை சூழ்ந்துகொண்டது . எப்படியாவது இங்கே கொஞ்ச நேரமாவது அமரவேண்டும் என்று முடிவெடுத்தேன் .அனால் அங்கே கருவறையின் சன்னதியிலோ 10 நொடிகளுக்கு மேல் யாரையும் இருக்கவிடுவதில்லை .ஏனென்றால் அவ்வளவு  கூட்டம் .எல்லாம் இறைவன் சித்தம்.

அங்கேயுள்ள கோவில் அர்ச்சகர் ஒருவரிடம் விளக்கி கூறினேன் .அவரும் சரி என்று சொல்ல ,கருவறையிலே அமர்ந்தேன் .அமர்ந்தேன்...சிறிதே கண்களை மூடினேன் .காந்த செறிவுள்ள பல ஆயிரம் மடங்கு சக்தியுள்ள அலைகள் .இடைக்காடர் இங்குதான் உள்ளாறோ !? எத்தனை ஆதி  சித்தர்கள் ,அவர்களின் ஜீவ சமாதி இங்குதான் உள்ளதோ !? மனம் ஆழ்ந்து செல்ல செல்ல சித்தர்கள் அலைகள் ...! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் மிக பழமையான கருவறை .ஒரு பதினைந்து நிமிடம் சென்றிருக்கும் ,அதற்கு மேல் அங்கு என்னால் இருக்க இயலவில்லை .அவ்வளவு வெப்பம் .வெப்பம் என்றால் இது physical வெப்பம் அல்ல.உடம்பை தொட்டு பார்த்தால் ஒன்றும் இல்லை .ஆனால் சூட்சும உடம்பின் வெப்பம் அதிகம் .நன்கு செறிவுள்ள காந்தஉடல் .புடம் போடுவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறோமல்லவா அது போல் எம்மை` மொத்தமாக புடம் போட்ட இடம் .இது நாள் வரை சேர்த்துவைத்த மனதின் குப்பைகளை நொடிப்பொழுதில் பொசுக்கி சாம்பலாக்கிய   இடம் .மின்னும் நுண்ணுடல் தங்கம் போல் தக தக வென  மின்னும் நுண்ணுடல்.இவை எம்முடையவை தானா ? என்று பிரம்மித்துபோய்விட்டேன். யார் உணருவார் இங்கு நடக்கும் அற்புதங்களை ! ஒரு கட்டிலடங்கா சக்தி குடியிருக்கும் இடம்!

இங்கே மறைமுகமாக பல சூட்சும இரகசியங்கள் நிறைவேறுகிறது.அண்ணாமலையாரை தரிசிக்க வரும் பல ஆயிரம் மக்களின் சூட்சும உடலை 10 நொடிகளில் parts by parts ஆக கழட்டி ,இடைவெளி ,மாறுபட்ட அலை,மன பிணக்கு,போன்ற ஏற்ற தாழ்வுகளை நொடியில் சரிசெய்து அனுப்புகிறார்கள்.யார் !? எல்லாம் அலைகளே ! அலைகளின் மூல காரணம்? இடைக்காடர் !?ஆதி சக்தியான அண்ணாமலையார்!?. ஏதோ ஒரு கட்டிலடங்கா சக்தி உள்ளது .சக்திமிக்க இடம் .அருள் அலைகள் நிரம்பி வழியும் இடம் .

மற்றொன்று எம் நெஞ்சம் ஈர்த்த சதுரகிரி

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சன்னதி ஒரு மிக சிறந்த அருள் அலை நிறைந்த இடம் .வெறும் கண்ணால் பார்ப்பதற்கு ஒன்றும் புலப்படவில்லை.ஆனால் இங்கே மிக பெரிய செயல் நடந்து கொண்டிருக்கிறது.இந்த உலகத்திற்கே தேவையான அனைத்து ஆற்றல்கள்,இங்கிருந்து தான் உருவாக்கபடுகிறதோ  என்னமோ !? உலகத்தின் இடர் சரியாக  இங்கு தான் அதற்குரிய நிர்ணயம் செய்ய படுகிறதோ !?எங்கு எதனை  எவ்வாறு இயக்க வேண்டும் என்பதற்கான   மூல ஆற்றல் அது இங்கிருந்துதான் வெளிகிளம்புகிறதோ ?! அனைத்திற்கும் ஒரு தொடர்புஇருக்கிறது இங்கிருந்து.ஏதோ ஒரு மிக அவசியமான ,மிக தேவையான  அதிர்வு அலைகள்  இந்த உலகத்திற்காக  இங்கிருந்துதான் வழங்கபடுகிறது என்று உணருகிறோம் யாம் .


ஒரு மெல்லிய குளுமையான வெண்பனி போன்ற ஒரு அலை சுந்தர மகாலிங்கம் கோவில் மற்றும் அதை சார்ந்த இடம் முழுவதும் எப்பொழுதுமே நிரம்பி உள்ளது.ஒரு முறை சென்று தரிசனம் செய்தோம், அது கிட்ட தட்ட மூன்று நாட்கள் ,அந்த அருள் அலை எம்முடனேயே  இருந்தது .அப்படி ஒரு அலை இயக்கம் எம்  மனதினுள் !ஒரே அமைதி ! நிசப்தம் ! எதுவுமே தேவையில்லை ! எல்லாம் நடப்பது சரியே..என்பது  போலவே  எம் எண்ணம் ,நடக்கும் செயல்கள், எல்லாம் .இந்த அலையை விட்டு பிரிய  மனம் இல்லை எமக்கு . பேசாமல் கண்ணை மூடிக்கொண்டு , அன்றைய நாட்பொழுதில் என்ன கிடைத்ததோ அதனை உட்கொண்டு ,இறைநிலையிலேயே  இருந்தோம் பல மணி நேரம். அப்படி    ஒரு அலை இயக்கம் .உணர்ந்து பார்த்தால் தான்  தெரியும் .


அன்பர் ஒருவர் ஸ்ரீ  ராம தேவர் சித்தர் இருக்கும்  இடத்திற்கு  எதேச்சையாக தாம் செல்ல நேர்ந்ததாகவும் ,அங்கே உள்ள ஒரு மரத்திலிருந்து விழுந்த ஒரு சிறிய காய்கள்  கொஞ்சம்எடுத்து வந்தாகவும் என்னிடம் கொடுத்தார்.இது யாகத்தில் போடும் காய் எனவும் ,இதனுள்ளே இருக்கும் பருப்பினை உடைத்து உண்ணலாம் என்றும்  கொடுத்தார் .கொஞ்சம் உடைத்து பார்த்தேன் ,வெண்ணிநிறமான பருப்பு .மிகவும் சுவையாக இருந்தது .கொஞ்சம் காய்கள் எடுத்து வெயிலில் உலர்த்தி யாகத்தில் சேர்க்க ஆயத்தமானேன்.யாகத்தில் ,அக்னிகுண்டத்தில் இந்த காய்களை வழக்கமான பைரவ மந்திரங்களுடன் ,அக்னியில் இட்டேன் .நல்ல தொரு அதிர்வு அலை சூழ்ந்தது.இதோடு ஒரு மெல்லிய அலை ஒன்றும் சேர்ந்தது .வேறு படுத்தி அறியும் அலை.பைரவ அலைகள் அதிர்வு வேறு.இது  மிக சாத்வீகமான அலை.யாருடையது என்று தெரியவில்லை .ஆனால் மிக மென்மையானது.சாத்வீக அலை ஆதலால் யாமும் எந்த மறுப்பும் சொல்லவில்லை.என் உள்ளத்திலே வெகு நாட்கள் இருந்தது .இது அரங்கேறும் காலம் ஒரு நாள் வரும் என்று விட்டுவிட்டோம் .காலமும் நெருங்கிவர சாத்வீக அலை செயல்பட ஆரம்பித்தது .தானாக வேறொரு அலையுடன்  தொடர்புகொண்டு செயலுக்கு தயாரானது.பறந்து விரிந்து ஒரு மையம் நோக்கி செல்ல ஆரம்பித்தது .தான் எங்கிருந்து வந்ததோ அங்கே எம்மை இழுத்துச்சென்றது.இழுத்து சென்ற இடமோ ஒரு மாபெரும் மகானின் இடம் யாவற்றையும் ஈர்த்து பிடித்து இழுத்திருந்தது அந்த இடம் .அமைதி குடியிருக்கும் இடம்.

நல்ல கருமையான தலைமுடியை அள்ளிப்பிடித்து கொண்டைபோட்ட உருவம் .கருமையான தாடி .பளிச்சிடும் முகம் .மெல்லிய   தேகம் .மனித எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட சிந்தனை ,குத்தவைத்து உட்கார்ந்து இறை பற்றிய சிந்தனை .காலம் கடந்த ஞானம். இறைநிலையே எப்பொழுதும் நினைத்ததால் அருகில் யார் வந்தாலும் சென்றாலும் அசட்டை செய்யாத ஒரு பாவம்.எத்தனை கோடி மைல்களுக்கப்பாலும் உள்ளது பற்றி அறியும் ஒரு ஞானம் .மலைக்குறவர் போல வேடம் .ஒரு சுத்த பரப்பிரம்மம் .தம்மை சுற்றி ஒரு கவர்ந்திழுக்கும் சூட்சும அலைகள் .ஆழ்ந்து விரிந்த இறைஆற்றல் நிரம்பிய ஒரு மிகப்பெரும் ஒளி வெள்ளம்.வந்தவர் ,இருந்தவர் ,சென்றவர் என அனைவரின் சூட்சும உடம்பிலும் மகானின் அருள் அலைகள் நிரம்பி வழியும் ஒரு மாபெரும் சக்தியின்  ஜாலம் .மழலை மொழி போல் கொஞ்சி பேசி  ஒட்டி உறவாடும் ஜீவ அலைகள் .இப்படியே இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் என்ன என்று எண்ணி எண்ணி , பல மணி நேரமும் நொடிப்பொழுதாகும்  ஒரு மாயம் .அப்படி ஒரு அலைஇயக்கம் அங்கே.


அழகர் கோவில்  நூபுர கங்கை தீர்த்தம் அனைவருக்கும் மிக பரிட்சயமான ஒன்று .மிக தூய்மையான மூலிகை தண்ணீர் .வற்றாத மலை நீருற்று .இயற்கையின் மினரல் வாட்டர் .ஒரு முறை சென்று நீராடி ,வேண்டிய அளவு நீர் பருகிவர உடலில் உள்ள வெப்பம் குறைந்து ,உள்ளமும் துள்ளிக்குதிக்கும்.
அதே போல் அழகர்மலையின் மற்றொரு பக்கம் இதே போன்று ஒரு அருவி உள்ளது .மக்கள் கூட்டமின்றி மிக அமைதியாக  உள்ளது .காரணம் இன்னும் நிறைய அன்பர்களுக்கு தெரியவில்லை ,மற்றும் செல்லும் வழி இன்னும் புதிப்பிக்கபட வேண்டியுள்ளது .ஒரு வண்டிப்பாதைபோல் தான் செல்கிறது.பிறிதொரு காலத்தில் நல்ல பாதை அமையும் என நம்புகிறேன் .

 அறிமுக மற்ற நண்பர் ஒருவர் அறிமுகமானார்.தாம் ஸ்ரீ ராமதேவர் தவம் செய்த இடம்  மற்றும் அங்குள்ள ஸ்ரீ ராமதேவர் சொரூப சமாதிக்கு ஏற்கனவே சென்றுவந்ததாகவும் ,அங்கே செல்லும் வழி தமக்கு தெரியும் எனவும் எங்களுடன் பயணிக்க ஆரம்பித்தார் .நண்பர்கள் சூழ ஸ்ரீ ராம தேவர் சமாதி இருக்கும் இடம் நோக்கி பயணித்தோம்.

 மதுரை மாவட்டம் மேலூர் வழியாகவோ  அல்லது மதுரையிலிருந்து ( 20km ) அழகர்கோவில் வழியாகவோ  கிடாரிப்பட்டி வரவேண்டும்.பிறகு அங்கிருந்து அழகர் மலையின் பின்புறம் ,மலைநோக்கி கிட்டத்தட்ட ஐந்து 5km செல்லவேண்டும் .ஒரு 2km முன்பே மலை ஆரம்பிக்கும் இடத்தில் மிக தூரத்திலே அங்கே ஒரு பசுமை தென்படும் .மற்ற இடமெல்லாம் ஒரு வறட்சி தென்பட்டாலும் ,வெகு தூரத்தில் ஒரு பசுமை தென்படும் ,அதனை நோக்கி செல்லவேண்டும் .கொஞ்சம் மன அலைகளை கூர்ந்து கவனிக்க ,அது மிக அழகாக அங்கே ஈர்க்கும் அந்த  பசுமை நோக்கி  நமக்கு முன்னர் ,நம்முடைய , சூட்சும தேகத்தை அழைத்துச்சென்றுவிடும் .


இரு மலைகள் சந்திக்கும் இடம் ,ஒரு கணவாய் போல ,மலை ஆரம்பிக்கிறது.ஒரு வயதான மாமரம் துவண்டு ,படர்ந்து நிழல் பரப்பும் சேவை செய்துவருகிறது .அருகிலே ஒரு சிறிய தாமரை தடாகம் .சுற்றிலும் பிரம்பு செடிகள் .யாரும் மிக எளிதாக இந்த பிரம்பு செடியை கடந்து சென்றுவிடமுடியாது விலங்குகள் உட்பட ,அப்படியொரு இயற்கை பாதுகாப்பு.
கோடை காலத்திலே எங்கெங்கு பார்த்தாலும் ஒரே வறட்சி நிலவினாலும் ,இங்கே ஒரு பசுமையும் ,குளுமையும் உள்ளது .மரங்கள் சூழ பசுமையாக காட்சியளிக்கிறது .அங்கே ஸ்ரீ ராம தேவரின் சூட்சும சமாதி உள்ளது .ஜீவ சமாதியை சுற்றி பிரம்பு செடியால் சூழப்பட்டுள்ளது .அங்கே ஒரு அழகிய நீருற்று உள்ளது .ஜீவ சமாதியை சுற்றி பிரம்பு செடிகளால் சூழப்பட்டுள்ளது . இந்த பிரம்பு எப்பொழுதும் தன்னைசுற்றி ஒரு குளுமையை நிலைநாட்டிக்கொண்டே இருக்கும் .நல்ல நீர் வளமுள்ள இடத்தில்  தான் பிரம்பு வளரும் என்பார்கள் .மகான்கள் வாழும் இடமல்லவா ஆக நீர் வளம் குறைபாடில்லாமல் ,பசுமையும் குளுமையும் நிறைந்துள்ளது .இங்கே ஸ்ரீ ராமதேவர் சொரூபமாக இருக்கிறார் .ஒரு வயதான மாமரம் துவண்டு ,படர்ந்து சமாதியை சுற்றி நிழல் பரப்ப ,அதனோடு யாக கொட்டை மரமும் மரம் கைசேர்ந்து எப்பொழுதும் நிழலையும் தூய காற்றையும் அள்ளி வீசிக் கொண்டிருக்கிறது.  இந்த இடத்தினை சுற்றி பிரம்பு அடர்ந்து சுற்றி வளைத்துள்ளது.
இதோ இந்த மரமே எமது யாகத்திற்கு உதவி செய்தது . யாகத்தில் இடப்பட்ட இம்மரத்தின் கொட்டைகளால்  நல்ல அதிர்வு அலை சூழ்ந்தது .தூய அன்பும் கருணையும்  நிறைந்த அலைகளால் இம்மரம்  எம்மை நேரடியாக இங்கே இழுத்துவந்துவிட்டது.

சமாதிக்கு மிக அருகில் ஒரு தெள்ளிய அருவி சலசலவென்று ஓடுகிறது .மிக திடமான தூய்மையான நீர் .இங்கே இதனருகே உள்ள கிராம மக்கள் எல்லாரும் கொடுத்துவைத்தவர்கள்.அழகர் மலையின் மூலிகை வேர்களெல்லாம் தொட்டுத் தடவி ,தூய்மையான நீராக இங்கே அய்யாவின் சமாதியருகில் நீர் வீழ்ச்சியாக செல்கிறது .அருகே ஒரு சிறிய தாமரை தடாகம்.கோடையிலே வெப்பம் தனிய  இது போன்ற இயற்கை தரும்  தெவிட்டாத அமுதத்தினை நல்ல முறையில் அனுபவிக்கவேண்டும்.வேண்டியளவு நீர் பருகினேன் ,மிதமான சுகமான அருவி குளியல்.நீண்ட நாட்களுக்கு பிறகு மூலிகை நீரில் போதும் ,போதும் என்று சொல்லும் அளவுக்கு ஒரு குளியல் .பிறகு  அங்கே ஒரு சிறிய  கூடாரம் ,ஒட்டினால் மேயப்பட்ட கூரை.கிராமத்து மக்கள்  ஸ்ரீ ராம தேவர் சித்தர்  அய்யா அவர்களின் அடையாளமாக இரும்பினால் ஆன வேல்களையும் சூலாயதங்களையும் அந்த கூடாரத்தின் மைய பகுதியிலே நட்டு வைத்துள்ளனர் . அங்குள்ள திருநீரை அப்படியே  எடுத்து நெற்றியில் இட்டேன் . ஸ்ரீ ராமதேவர் சொருப சமாதியில் அமர்ந்தேன்.சிறிதே கண்களை  மூடி தியானித்தேன் .நீரோடையின் சப்தத்தை தவிர வேறொரு சப்தமில்லை. சப்தம்  நேரம் செல்ல  செல்ல நிசப்தமாகிறது .அய்யாவின் சமாதியிலிருந்து ஒரு மெல்லிய வெப்பம் , ஒரு வகையான அலை சுற்றிலும் பரவிக்கொண்டேஇருக்கிறது .அமைதியாகிறது...அமைதி ..ஆனந்தமாகிறது . மனமெங்கும்  சூழ்ந்துகொள்கிறது ...மகான்களின்  அருள் அலைகள் ..தெய்வீகம் நிறைந்தது .ஸ்தூல உடம்பில் வாழ்ந்ததோ ஏதோ ஒரு காலம் .ஆனால் இங்கே சூட்சும உடம்போடு காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .யாம் எதுவும் இங்கே கொடுக்கவில்லை. அய்யாவின் காலம் கடந்து  தொன்று தொட்டு வரும் கருணையால் இங்கே வருபவர்களுக்கெல்லாம் அமைதியும் நெஞ்சம் நிறையும் ஆனந்தமும் எப்பொழுதும் வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள் ,மனிதர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் .கொடுப்பவர்கள் என்றும் உயர்ந்தவர்கள் .அதுவும் இது போன்ற ஆத்ம திருப்தியை காலம் காலமாக கொடுத்துக்கொண்டேயிருப்பவர்கள் போற்றிப்புகழப்படவேண்டியவர்கள்.சிறிதே தொடர்ந்தேன் ...நிறைவோடு எழுந்தேன் ..இப்போது இது போதும் இந்த உலகத்தினை எதிர்கொள்ள .சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து விடைபெற்றேன்
அங்கே ஒரே  ஒரு குரங்கு மட்டும் இடைமறித்தது .வருகிறேன் ஸ்ரீ ராமதேவர் அய்யா என்று வணங்கி விடைபெற்றேன்.மிக நிறைவான ஒரு பயணம் .கொஞ்சி பேசும் அலைகள் எம்முடனே வந்து எம்மை வழியனுப்பி வைத்தது.
இந்த நிறைவான அலைகளை முடிந்த வரையில் இங்கே வார்த்தைகளாக பிடித்து  திணித்து வைத்துள்ளோம்.இந்த கொஞ்சி பேசும் குழந்தை அலைகள் அகத்தியம் இதழ் வாசிக்கும் அனைத்து உள்ளங்களையும் மகிழ்விக்கட்டும்  என அய்யாவை வணங்கி மீண்டும் அகத்திய உள்ளங்களை அடுத்த கட்டுரையில் வெகு விரைவில் சந்திக்கிறேன்.ஒம் அகத்தீஸ்வராய நமஹ!