Tuesday, February 24, 2015

சிவ தரிசனம்...!!!
சிவம் எதற்கும் ஒரு மூலம் இவன். எதுவும் இவனுள் அடங்கும் .எங்கும் இவன் இருப்பான் .எவையும் இவனிடமிருந்தே பெறப்பட்டது.மாபெரும் பிரபஞ்ச ஆற்றல் இவனே .இவனே கூனி குறுகி ,தம் எல்லா ஆற்றலையும் ஒரு சிறு புள்ளியில் வைத்து,பிறகு அதே அச்சிறு புள்ளி தம்மை ,விரிவாக்கி அண்ட சராசரமாக விஸ்வரூபம் எடுத்து  தம்மை எங்குமாக வியாபிக்கும் தன்மையும் இவனே .இவனே மாற்றம். ஒன்றதை மற்றொன்டாக மாற்றிக்கொண்டே எதற்கும் ஒரு நிலையை நிரந்தரமாக தர மாட்டான் .இவன் ஒருவனே நிலையானவன்.இவனே அகம் .இவனே பிரம்மன்.இவனே விஷ்ணு. இவனுள் இருந்துதான் மற்ற அனைத்து தெய்வங்களும்.இவனை இவனுள் உணரும் ஒரு பயணத்தில் ஒரு கட்டம்(phase) தான் நாம் காணும் எந்த ஒரு ஜடமும் எந்த ஒரு உயிரும்.இவனை இவனே உணர்வது தான் முழுமை. இவன் தந்த மனதால் ,இவன் நாமம் புகழ் பாடி, இவன் நாமம் உணர்ந்து,நெகிழ்ந்து, இவனை இவனுள் உணர ,உருவாகும் ஒரு பேரானந்தம்.முழுமை ,தெளிவு,அமைதி,வார்த்தைகளுக்கு அகப்படாத ஒரு பேரின்பநிலை.

இவனை உணர இவன் தந்த ஒரு மிகச்சிறந்த ஒரு கருவி இந்த மனம் .இந்த மனம் இவனை உணராத ஒரு நாளும் வீணே.எங்கும் பெருக்கெடுத்து வியாபிக்கும் தன்மை கொண்ட மனம்.எதுவாகவும் தம்மை அதனுள் வியாபித்துக்கொள்ளமுடியும் இவன் தந்த இந்த மனதால்.சர்வவல்லமையும் பெறஇயலும்,சர்வ துவம்சமும் செய்ய இயலும் இம்மனதால், இவனின் பயணத்தில் இவனை உணரவில்லை எனில் அது ஒரு மாபெரும் இழப்பு அன்றைய நாள். அதே போல இவனை இந்த மனத்தால் நன்கு ஆழ்ந்து உணர உணர ,ஒரு காட்டாற்று வெள்ளம் போல் பீரிட்டு எழும் ஒரு பேரின்பம் ,சொல்வதறியா ஒரு சுகம்.கோடிக்கனக்கான ஆத்மாக்கள் தம் நிலைமறந்து, செய்வதறியாது, இவனுள் மூழ்கி தெவிட்டாத பேரின்ப நிலையில் இன்றும்  ஆழ்ந்து  கிடக்கும் ஒரு அற்புதம்.மெய்ஞான புலம்பலும் இங்கே தான்,கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலரும் இங்கே தான்.யாரும் இவனை இவ்வாறு தான் என்று வரையறுத்துக் கூறஇயலாது.இவனின் முதலும் தெரியாது ,முடிவும் தெரியாது..சதுராட்ட காய்கலை போல பூமி போன்ற கோள்களையும் ,உயிர்களையும்,நகர்த்துவான்,இடம் மாற்றுவான், தூக்கி எறிவான், அரவணைப்பான். இவை எல்லாம் இவன் செய்யும் புரிய இயலா ஒரு விந்தை.இவனை புரிய முற்படுதல் என்பது ஒரு எறும்பு எவ்வாறு இந்த உலகத்தை அறிவால், கணிக்க முடியுமோ அது போல தான். சதா சர்வமும் இவனே.......சர்வகோடி சர்வமும் இவனே..!!

நமச்சிவாய வாழ்க ...!! நாதன் தாள் ..!!!வாழ்க ...!!!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க...!!

இப்பொழுது புரிகிறதா..எந்த அளவுக்கு மாணிக்கவாசக  பெருமான் ..இறைவன்  தாள் பணிந்து,இவனை உணர்ந்து....இவன் பெருமையினை போற்றி புகழ்ந்திருக்கிறார்கள் என்று.... கண்ணிமைக்கும் இமை பொழுது கூட   இவனை விட்டு பிரிய மனமில்லை ..!! தூயஇறை அன்பின் அலை உணர்ந்து
எழுதப்பட்ட பாடல் ..காலம் சென்றாலும்  நம் நினைவில்  என்றும் நீங்காமல் நிற்கும் பாடல்கள் இவை..!!அற்புதம் ..!!!


நெஞ்சமெனும் ஆலயம் இவன் வாழும் கோவில். ஒவ்வொரு உயிருள்ளும் ஜீவ அலையாக ,அன்பெனும் அலையாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு அற்புதம் .இக்கோவிலுக்கு நாள்தோறும் தூய்மை தேவைப்படுகிறது.ஒருவனுக்கு வலிமை கொடுப்பதும் .ஒருவனுக்கு ஒரு personalityயை கொடுப்பதும் ,ஒருவனுக்கு ஒரு சிறந்த ஆளுமை திறம் கொடுப்பதும், ஒருவர் மற்றொருவரை  பார்க்கும் பொழுது அவர் தம் நிலையை அறிவதும் ,ஒவ்வொரு நெஞ்சினுள்ளும் உறைந்துகிடக்கும் ஒரு அதீத தெய்வீக சக்தியாகிய.,யாவற்றையும் ஈர்க்கும் அன்பு அலையாகிய, இந்த சிவனே ..இந்த சிவனின் ஆற்றலே..!!துய அன்பெனும் அலையே......அதன் மறு நுனியாகிய மனமே. இங்குள்ள அனு அளவேனும் உள்ள இறைசக்தியே ! இறை சக்தியே மனம் .மனமே இறை சக்தி !!

நெஞ்சம் எந்தவகையிலும் பாதிக்காதவாறு அன்றைய நிகழ்வுகளை ,வாழ்கையை வாழ இயலுமா? என்ன அன்பர்களே......? கேள்வி உங்களுக்கு தான்....?  ஏனெனில் இங்கே தான் வாழ்வின் ரகசியம் புதைந்துகிடக்கிறது.அன்றைய நாள் தொடங்கியதிலிருந்து இரவு நித்திரைகொள்ளும் வரை ,நெஞ்சம் எனும் கோவிலை எந்த இழப்பும் ஆகவிடாமல்,இங்கு வாழும் சிவத்தை ,இங்கு வாழும் தூய இறைஅலைகளை  அன்போடு பாதுகாக்க முடியுமா?  எவர் எம்மை இகழ்ந்தாலும் ,எவர் எம்மை புகழ்ந்தாலும் ,எம் நெஞ்சில் வாழும் அன்பு அலைகளை என்றும் அதன் தன்மையிலிருந்து துளி கூட மாறவிடமாட்டேன், என்று எவர் ஒருவர் சபதம் கொள்கிறாரோ அவர் விரைவில் இறைவனின் ஆசிகள் பெறுவார். மகான்கள் தேடிவருவார்கள்.!!

கர்ம வினைக்கேற்ப, பொருள் தேடும் உலகத்தில்,வந்த வழி மறந்து இடையில் உள்ள நிகழ்வில் சிக்கல்களை உருவாக்கி ,குழப்பம் முதல் பிணக்கு வரை யாவற்றையும் வரவளைத்து அதற்குள் நன்கு சிக்கி ,மீண்டும் எழ முடியாதபடி மாட்டவைத்து செய்வதறியாது திகைத்து நிற்கும் ஒரு நிலைமை எம்மை போன்ற ஒரு உள்ளங்களுக்கு. குடும்பத்தையும் விட இயலாது அதே சமயம் இறைஉணரும் தன்மையும் விடஇயலாது. ஒன்றோடு ஒன்று மோதும் ஒரு போட்டி ,எது dominate செய்கிறதோ அது வெற்றிபெறுகிறது. இறை உணர்ந்தவனுக்கு இவை எல்லாம் ஒரு பெரிய விசயமில்லை. விளைவு எதுவானாலும் அது இறைவனின் ஆணை என எடுத்துகொள்பவன் ஞானி. எம்மை போன்ற ஏனையோர்கள் அந்த பக்குவத்திற்கு இன்னும் வரவியலவில்லை என்பதே பொருள்.


பக்குவம் ஏற்படுவதென்பது ஒரு சாதாரண விசயமில்லை.அதற்கு மிகப்பெரும் அசையா இறைநம்பிக்கை வேண்டும் பல பிறவிகளில்.கர்மவினை யாது வரினும் அதை இறைவன் தந்த பரிசு என எடுத்துக்கொள்ளுதல் ரொம்ம கடினம் அதற்கு விடா முயற்சியும் மிக அதீத மன ஈடுபாடும் மிக அவசியம்.முற்பிறவி பற்றி யாம் அறியோம்.ஆனால் இப்பிறவியில் முடிந்த வரை பிறருக்கு துன்பம் நிகழாதவண்ணம் ,பொருளீட்டி ,தர்மம் செய்து புண்ணியம் தேடி, கொஞ்சம் கொஞ்சமாக பக்குவத்தை வரவழைக்க பழகிக்கொள்ளவேண்டும்.வார்த்தைகளில் இப்படி "பக்குவம் என்பது கடினம்" என்பதை எளிமையாக சொல்லிவிடலாம்.ஆனால் அதை நடைமுறைபடுத்தி ,இறைவன் தரும் சோதனையில் வெற்றிபெறுதல் என்பது மிக மிக மிக..... கடினம்.பொறுமையும்,விடா முயற்சியும் அதீத நெஞ்சார்ந்த ஈடுபாடும் கொண்டு வெற்றி பெறலாம்.இப்படி இறை தந்த சோதனையில் காலம் காலமாக வெற்றி பெற்றவர்கள் மாபெரும் மகான்கள் என புகழப்படுகிறார்கள்.
 
ஒரு முறை யோகி ராம்சூரத்குமார் திருவண்ணாமலைக்கு வந்த காலகட்டத்தில் ஒரு சில விஷமிகள் அவரை கல்லால் அடித்தே துன்புருத்தியிருக்கிறார்கள்.ஆனால் மகானோ அவைகளை வாங்கிக்கொண்டு எந்த ஒரு எதிர் செயலும் செய்யவில்லையாம்.எல்லாம் இறைவனின் செயல் எல்லாம் எம் தந்தை செயல் என ,அவர் தம் இறைவழிப்பயணத்தை தொடர்ந்திருக்கிறார்கள்.எச்சில் இலையில் கிடைத்த உணவினை தம் அப்பன் தந்த பிரசாதம் ,என பல முறை உண்டு வாழ்ந்திருக்கிறார்கள்.இது போல எத்தனையோ சம்பவங்கள் அவர் தம் வாழ்வில். இவை எல்லாம் கோடியில் ஒருவர் இன்னும் கொஞ்சம் சரியாக சொல்லவேண்டுமானால்  பலகோடி மக்களில் ஒருவரே இவ்வாறு வரஇயலும் என நம்புகிறோம்.அதற்கு கர்மவினை யாவும் கலயப்படவேண்டும்.கர்மவினை எனும் மாசு போகப்போக ,ஆத்மா ஒளி பெறுகிறது.தூய்மை பெறுகிறது.இறைதன்மை மிளிர்கிறது.யாவற்றையும் ஈர்க்கும் தன்மை வருகிறது.அன்பெனும் தன்மை இயல்பாக ஊற்றெடுக்கிறது.பார்வையே அன்பாகிறது.இவரையே இன்னும் கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டிருந்தால் என்ன என்று எண்ணத்தோணுகிறது.அப்படிப்பட்ட ஒரு உன்னத மகான்,இயற்கை தந்த இறைவன் தந்த மாபெரும் ஒரு வரப்பிரசாதம் தந்தை யோகிராம் சூரத்குமார்.

 யோகிராம் சூரத்குமார் அய்யா அவர்களை ஒரு முறை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.சுற்றிலும் மக்கள் யோகிராம் சூரத்குமார், யோகிராம் சூரத்குமார், யோகிராம் சூரத்குமார், ஜெய குரு ராயா எனும் சரணகோசத்துடன் இருந்தனர். மகான் ஒரு chain smoker ,கையில் புகை இழுத்தபடியே  இருந்தார்.ஆனால் அருகில் சென்றாலோ புகையின் வாசமே தெரியவில்லை. ஆச்சரியமாக இருந்தது. கையில் ஒரு கொட்டாங்குச்சி ,விசிறி ,உடம்பில் ஒரு கயிறு போன்ற ஒரு மாலை,ஒரு அழுக்கு சட்டை இன்னும் நிறைய இருந்தது. அவர் கண்கள் எமை இழுத்துசென்ற உலகமோ வேறு.தம் கண்களால் எள் அளவும் தீங்குசெய்யாத இறை அலைகளில் ததும்பி வழியும் ஒரு விசாலமான அன்பு கலந்த இறைநிலை பார்வை அவர் பார்வை..இறைநிலையே மனிதவடிவில் வந்திறங்கியது போலதான் எமக்கு தோன்றியது.மெல்லிய தேகம் நன்கு செறிவு ஊட்டப்பட்ட இறை அலைகள் எங்கெங்கும் அவரை சுற்றி வியாபித்து இருந்தது.எம்முள் உள்ள இறையை அவர் தம் கண்களால் கண்டு ,அவர் தம் கண்களில் ஏற்பட்ட ஒரு துளி வியப்பு,(....ஆகா அதோ பார் அங்கே இறை...) எம் மாசுபட்ட ஆலயத்தில் இறை ஒளியை காண வழிவகை செய்தவர். தேகமெல்லாம் மெய்சிலிர்த்தது.எம்முள்ளும் இறை இருக்கிறது என்பதை எமக்கும்  உணரவைத்த மகான்.ஆத்மார்த்தமாக வணங்கி விடைபெற்றோம்.ஒரு முறை ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ,கோவில் படி இறங்கி வந்துகொண்டிருந்தோம்.யாரோ ஒரு குறிபார்க்கும் மனிதர்,கையில் ஒரு சிறிய கோலுடன் ,ஒரு ஜோல்னா பையுடன்,மிக மிக வேகமாக எம்மிடம் வந்து ,நீங்கள் ஒரு நீண்ட தூர பயணம் மேற்கொள்ள இருக்கிறீர்கள்.உங்கள் கைகளை காண்பியுங்கள் மேலும் சொல்கிறேன் என்றார் .ஆனால் எமக்கோ  இதில் எல்லாம் உடன்பாடு  இல்லை,எனவே எமக்கு இவை வேண்டாம்  அன்பரே ..! என்று விலகி வந்துவிட்டோம்.

யாமோ onsite பயணம் எல்லாம் முடித்து விட்டு இப்பொழுது நிம்மதியாக தந்தையின் அரவணைப்பில் உள்ளோம் .இப்பொழுது  மீண்டும் இது எல்லாம் சாத்தியம் இல்லை என வீட்டிற்கு வந்துவிட்டோம்.
தந்தையின் வேதவாக்கு யாதெனில்
 " புண்ணியம் செய்தவர்கள் தான் மனிதர்களாக பிறப்பார்கள்.அதிலும் மேலும் புண்ணியம் செய்தவர்கள் உடற்கூறுகள் குறைபாடின்றி நல்ல ஆரோக்கியத்துடன் பிறப்பார்கள்.அதனினும் மேல் புண்ணியம் செய்தவர்கள் இந்த பாரததேசத்தில் பிறப்பார்கள்.அதனினும் மேல் புண்ணியம் செய்தவர்கள் எல்லா ஆலயங்களுக்கும் தங்குதடையின்றி செல்ல இயலும், அதனினும் மேல் புண்ணியம் செய்தவர்கள் மகான்கள் தரிசனம் ,சித்தர்கள் தரிசனம் ,இறை தரிசனம் பெற இயலும்..........".

அந்நிய தேசம் என்பது பொருளீட்ட ஒரு நல்ல தேசம்.ஆனால் அங்கே இறைநிலை உணர்தல் என்பது மிக கடினம்.ஏனெனில் நம் பாரத தேசம் இறைவழிபாடுகளுக்கு உகந்த தட்பவெப்ப சீதோசன நிலைகளை உருவாக்கிக்கொடுத்துள்ளது. உலகத்திற்கே ஆன்மீக தாய்நாடு நம் பழம்பெரும் பாரத தேசம்.இங்கு தான் எத்தனையோ கோடானகோடி மாகான்கள் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.நெஞ்சம் வருடும் இதய அலைகளை தொடக்கூடிய ஆயிரக்கணக்கான ஜீவ சமாதிகள்,புகழ்பெற்ற சிவ ஆலயங்கள்,பழமை வாய்ந்த விஷ்ணு ஆலயங்கள், மூலிகைகள் நிறைந்த மலைகள் ,சித்தர்கள்,மகான்கள் வாசம் செய்யும் சதுரகிரி,கொல்லி மலை போன்ற மலைகள் ...இன்னும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.குறிபார்க்க சொன்னவர் முகத்தை கூட சரியாக பார்க்கவில்லை .சதுரகிரி இளம் சாதுபோல மெல்லிய கருமையான தேகம் இருந்தது. சரிபார்க்கலாம் என ஒருவாறு அமர்ந்து ஆழ்ந்து .சிறிதே அயர்ந்து கண்மூட .ஒரு மெல்லிய தேகம் உள்ள ஒரு அன்பர் எம் சூட்சும தேகத்தை தட்டி மெதுவாக எழுப்புகிறார் .தம்முடனேயே எம்மையும் அழைத்து செல்கிறார் .முதலில் எமக்கு ஒரு தயக்கம், எப்படி இவருடன் செல்வது !?மனமோ பொருள் உலக பற்றிலிருந்து இன்னும் விடுபடவில்லையே ?.! எம்மை எங்கோ அழைத்துசெல்கிறார். பிறகு அங்கு  ஒரு பெரியவரை சந்திக்கிறோம்.நல்ல ஒரு அழகான மலை அடிவாரம்.அருகே பழமையான கற்தூண்களால் செய்யபட்ட, மேற்கூரை முதல் தாழ்வாரம் வரை அனைத்தும் மிக நீண்ட  அழகிய கற்தூண்களால் ஆன, ஒரு மிக அழகான மண்டபம். அங்கே ஒரு பெரியவர் இருக்கிறார்.அவருடன் யாம் பேசுகிறோம்.
"அய்யா சிவத்தை காண இதோ இவர் எம்மை  அழைத்துசெல்கிறார்....?" எமக்கோ ஒரு ஐயம் "குடும்பத்தை விட்டுவிட்டு,ஈட்டிய பொருள் யாவும் வைத்துவிட்டு இவர் பேச்சை கேட்டு இங்கு வந்துவிட்டோம்.தயவுசெய்து இவைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்...." என்றோம்.அவரோ ..புன்முறுவலில் ....
"ம்ம்ம்ம்...சென்று வந்தால் தானே தெரியும்..." என்று இரத்தினச்சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

கொஞ்சம் தெளிவில்லாத சற்றே ஐயமுள்ள மனநிலையில் இருந்தோம்...எப்படி இவருடன் செல்வது என்று...  !? சரிநடப்பவை நடக்கட்டும்  என ஆயத்தமாகி எங்கே  அன்பரே ...வாருங்கள் செல்லலாம் என வினவ ? எம்மை அழைத்து வந்தவரை  காணவில்லை.ஆனால் யாம் இருக்கும் இடமோ மிக அற்புதமாக இருக்கிறது .யாம் இதுவரை கண்டதில்லை.நேரில் பார்த்ததில்லை.வெண்பனி உறைந்து மிதமான குளிரில் எங்கெங்கும் வெண்மை ..தூய வெண்மை நிறைந்திருந்தது.ஒரு அழகான மலை, அடிவாரத்தில் யாம், அன்னாந்து மலை உச்சி நோக்கி பார்க்க... பார்க்க சென்றுகொண்டே இருக்கிறது மலை. ஒரு அளவிற்குமேல் மேகங்கள் தழுவி ,அதற்கு மேல் ஒன்றும் புலப்படவில்லை .இவை என்ன மலை என்று கணிக்க முடியவில்லை.

சிறிதே இளைப்பாறி மீண்டும் மலை உச்சி நோக்கி செல்கிறேன்.எம்மைப்போல் பல அன்பர்கள் மேல் சென்றுள்ளனர் .மலை உச்சி செல்ல செல்ல ,ஏதோ ஒரு ஈர்ப்பு  உள்ளது .ஆனால் அங்கே இருப்பது சிவம் என்றும் அதை காண  இன்னும் வெகு தூரம் செல்லவேண்டும் எனவும் உணர்கிறேன்.ஒரு சில தூரத்திற்குமேல் சென்றவர்கள் எல்லாம் இறங்கி வர மன மில்லது அங்கேயே தங்கிவிட்டனர் எனவும் உணர்கிறேன்.ஏனென்றால் அப்படி ஒரு உயிர் ஈர்ப்பு இந்த மலையில் ஏற்படுகிறது அங்கே. சாந்தம் அமைதி கரைபுரண்டோடுகிறது .இறைஅலைகள் எங்கெங்கும் வியாபித்துள்ளது. Fully energetic wave..!!!  யார் வேண்டுமானாலும் எளிதில் அமைதியாகி இறைவனை இங்கே எளிதில் தரிசிக்கலாம் என உணர்கிறேன். ஒரு சிலர் மலை இறங்கி திரும்பிய வண்ணம் இருந்தனர் .ஆனால் அவர்கள் செய்யும் செயல் எல்லாம் மிக விநோதமாக இருந்தது .தம் உடம்பிலே அணிந்திருந்த நகை மட்டும் விலை உயர்ந்த ஆபரணங்களை எல்லாம் கலட்டி தூக்கி எறிந்த வண்ணம் வந்துகொண்டிருந்தனர். .ஆனால்  யாமோ இவைகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பொறுக்கிகொண்டு ஒரு பையிலே மூட்டையாக கட்டி அதனையும் சேர்த்து எம்முடன் எடுத்துக்கொண்டு மேலே உச்சி நோக்கி மலை ஏறிக்கொண்டிருந்தேன். 


ஒரு அளவிற்கு மேல் இந்த மூட்டையை தூக்கிகொண்டு ஏற இயலவில்லை.ஏனெனில் இந்த மூட்டையை விட அங்கே ஜீவ அன்பு அலைகளின் அரவணைப்பு அது  தாமாகவே நிறைய எம்மை சூழ்ந்துகொள்கிறது. எம் நெஞ்சத்துள் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுறுவி ,பிறகு முற்றிலுமாக ஆக்கிரமிப்பு செய்துகொள்கிறது.விட்டுபிரிய இயலா அன்பு அலைகள்...!! தூய சக்தி நிறைந்த அலைகள் .மேலும்  எம் உள்ளம் எங்கும் நிறைந்து அங்குள்ள அலைகளோடு கலந்து  அப்படியே ஆழ்ந்துவிடுகிறது.இப்போது ஐயமில்லை ..எதை பற்றியும் கவலையில்லை..எந்த ஒரு சின்ன  முரண்பாடுமில்லை...எந்த உணர்வும் இல்லை ..எல்லாம் நிறைந்துள்ளது...எல்லாம்  இங்கே பரிபூரணமாக  நிறைந்துள்ளது.அதனுள்ளே அப்படியே  யாமும்   இருந்துவிடலாமே என எண்ண தோணுகிறது ....அமைதி கடல் போல் உறைந்துள்ளது.எவர் வரினும் அள்ள அள்ள குறையாத தெவிட்டாத தூய வெண்மை ஒளி போல மின்னிடும் இறை அலைகள்...!! அமைதியின் விளிம்பு ...! இதயத்தை ஈர்க்கும் ஒன்றுமில்லா ஒன்று ..இது தான் சிவமா....!!! சிவத்துள் மூழ்கிடக்கும்  பாச அன்பு அலைகள் இவை தானா ..!!! அற்புதம் ..அற்புதம்..அற்புதம் .... ஆனந்தம் ...ஆனந்தம்...ஆனந்தம்...ஆனந்தம்!!  சிவமே இந்த அலைகளா ..!!! இன்னும் இவ்வாறே இதில் உறைந்து ..இன்னும் சற்று மேல் போய் காண விளையலாமா ..? என எண்ண ..அப்படியே உறைந்து ,செயலற்று ,அங்கேயே எம்மை மறந்துவிடுகிறேன் ....!!

எவ்வளவு நேரம் சென்றதென தெரியவில்லை .ஒருவர்  வந்து எம்மை தொட ,எம் நிலை தெளிந்தோம் .மெதுவாக யார் இவர் என பார்க்க ,ஆஹா....!!! இவர் தானே இங்கு எமை அழைத்து வந்தவர் ...இவர் தானே எமக்கு சோதனை வைத்தவர் ,...இவர்தானே எம்மை பாதியிலேயே விட்டுவிட்டு சென்றவர்...ஒரு வித ஏக்கமும் அழுகையுடன் மேலும் அவரை  நோக்க ...! அடடா ... இவர் தானே அந்த சதுரகிரி இளம் சாது !!   இது என்ன இறைவா ?இதை ஏன் முன்னர் எம்மிடம் சொல்லவில்லை... இவர் தானே  எம்மை ஒரு பெரியவரிடமும் அழைத்துசென்றார்.... .ஆகா அந்த பெரியவர் எம் தந்தையே!!! இப்பொழுதானே அவரை எம் தந்தையென அடையாளம் காண்கிறேன்.எப்படி மறந்தோம் தந்தையின்  பொற்பாதம் பணிய !!  .....எம் கண்கள் இதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது, பார்க்க இயலாது ... கண்ணீர் சொரிந்து நிற்க ...இந்த இளம் சாதுவினை கட்டிஅணைக்க முயல்கிறேன் ...ஒரு இமை பொழுதில் அவரை பிடித்தேன் ...இமை திறப்பதற்குள் ,சட்டென ஒளி போல ,மின்னலைபோல வானில் பறந்துவிட்டார்..வானில் நின்றுகொண்டே சிரிக்கிறார்..!!! யாமோ அன்பில்  ஜீவ அலையில் நிலைகுலைந்து  அப்படியே செய்வதறியாது கிடந்தோம்..!!

மெல்ல விழி திறந்து ,எழுந்து  மெதுவாக ,நடந்து  "...அப்பப்பா என்ன ஒரு பயணம்  இது...!! என நடந்த நிகழ்வுகளை  எல்லாம் அசைபோட்டு .....ஆயத்தமானேன் நிகழ்கால வாழ்க்கையை எதிர்கொள்ள ...!!!  என்றென்றும் எம் நினைவில் நெஞ்சத்துள் நீங்கா இடம் பெற்றுவிட்டது இந்த நிகழ்வு.கடிதங்கள் மூலம் எம்மை தொடர்புகொண்டு ,விரைவில் கட்டுரை எழுத ஊக்கப்படுத்திய அனைத்து அகத்திய உள்ளங்களையும் இறைஅலை கொண்டு, அன்பின் அலை கொண்டு, வாழ்த்தி ,அகத்திய உள்ளங்களை மேலும் ஒரு நிகழ்வில் விரைவில் சந்திக்கிறோம் .!!வாழ்க வளமுடன் !!!

ஒம் அகத்தீஸ்வராயாக நமக !!!!
ஒம் அகத்தீஸ்வராயாக நமக !!!!
ஒம் அகத்தீஸ்வராயாக நமக !!!!