Monday, September 30, 2013

அகத்தீசனடி போற்றி.!!  
அன்புள்ள நெஞ்சங்களே ! இங்கே மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் !இங்குள்ள நிகழ்வுகள் எல்லாம் இந்த சிற்றறிவிற்கு எட்டியவை மட்டுமே!இன்னும் எத்தனையோ கோடி பிரபஞ்ச ரகசியங்கள் எண்ணி அனுபவிக்க காத்துகிடக்கின்றது.தந்தையின் அரவணைப்பு இங்கே யாம் உணர ஒரு முழு காரணமாகிறது.இனம் அறியாது மொழி அறியாது இந்த உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் எம்மையும், எம்மைப்போல் உள்ள அகத்திய உள்ளங்களையும், தந்தையின் அன்பும் , கருணையும் மெய் சிலிர்க்க வைக்கிறது.இப்படி செல் மகனே என்னும் தந்தையின் வேத வாக்கு,ஒரு தைரியத்தையும் நிறைவையும் அளித்து என்றும் எம்மை சூழ்ந்து அமைதியில் திளைக்க வைக்கிறது.

என்ன உள் எழுதிவைக்கபட்டதோ அது கால சுழற்சிக்கேற்ப வெளிவந்து செயல்பட ஆரம்பிக்கும் இறைநிலையின் இயல்பு.எப்படி ஒரு மிக சிறிய ஆலமரத்தின் விதையிலிருந்து,காலத்திற்கேற்ப இலை,தண்டு,கிளைகள்,விழுதுகள் என மிக பிரமாண்ட மரம் வருகிறதோ அது போல, சூட்சும அலைகளால் சுருக்கி எழுதப்பட்ட இறை எழுத்து செயல்பட ஆரம்பிக்கும் விந்தை.இவர்களை போல பொருள்இல்லை,புகழ் இல்லை,இடமில்லை etc போன்ற பொறாமைக்கோ, comparisonக்கோ இங்கே இடமில்லை.ஒவ்வொரு உயிரின் அலைசுழலும் அலை நீளமும் தனித்தனி.ஒவ்வொரு உயிரின் கர்மவினை பதிவும் தனித்தனி.ஒவ்வொரு உயிரும் இறைநிலைக்கு சமமான நிலைவரை வளர்ச்சி அடையும் தன்மை.

இறைஅலைகளை உள்வாங்கி இருக்கும் கர்மவினையின் தாக்கத்தை நீக்கி, பிறவிப்பெருங்கடல் நீந்துவது என்பதே மிகச்சரியான ஒரு வழி!. உள்ளம் எனும் கோவிலை தூய்மையாக வைத்திருக்கவேண்டும்.நாள் தோறும் இங்கே தூய்மை அவசியமாகிறது.தினந்தோறும் உணவு உண்ட பாத்திரத்தை சுத்தம் செய்வது போல, மாசுடைய அழுக்கான அலைகளை நீக்கி, மனம் விரும்பி நல்ல அலைகளை நாமே உள் நிரப்பி அமைதியை நிலைநாட்டவேண்டும்.எதை உள் வைக்கிறோம் என்பதை பொறுத்தே அமைதி,முகத்தில் ஒரு தெளிவு,நெஞ்சில் ஒரு நிம்மதி!எம் தந்தையின் அலைகளும் ,பைரவமந்திர அதிர்வுகளும் எம் நெஞ்சத்தை,எம் உள்ளத்தை, எப்பொழுதும் தூய்மையாக வைக்க உதவிசெய்கிறது! அன்பின் அலைகளை ஈர்க்கிறது!


 ஒரு முறை சதுரகிரி செல்லும் போது ,கிருஷ்ணன் கோவில் எனும் ஊர் வந்தடைந்தோம் .சரியான பசி எடுக்கவே.ஒரு வண்டியை ஒரு ஓரமாக park செய்துவிட்டு ,அங்குள்ள ஒரு மிக சாதாரணமான ஹோட்டலில் யாமும் நண்பரும் நுழைந்தோம். மிக சிறிய ஹோட்டல் .அந்த ஊர் மக்களுக்கேற்ப வசதி செய்யப்பட்டுள்ளது. மூன்று மேஜைகள் இருந்தது.ஒவ்வொன்றிலும் நான்கு பேர் அமர்ந்து உண்ணலாம்.முதலில் உள்ள ஒரு மேஜையில் அமர்ந்தோம் .எனது நண்பர் எனக்கு எதிரே அமர, எனது அருகிலும் ,நண்பர் அருகிலும் ஒரு இருக்கை காலியாக இருந்தது. அங்கே யாம் ,எமது நண்பர் மற்றும் அந்த ஹோட்டல் owner ஆகிய மூவரை தவிர வேறு யாரும் இல்லை. முதலாளி ,தொழிலாளி எல்லாம் அந்த ஹோட்டல் owner ஒருவர் மட்டுமே.


“என்ன வேண்டும்” என்றார் ? “ நல்ல சூடான தோசை வேண்டும்....” என்றோம். சிறிது நேரம் கழித்து இருவருக்கும் தோசை கொண்டுவந்து ,சாம்பார் , சட்னி எல்லாம் பரிமாறினார்.தோசையை பிய்த்து வாயினுள் வைக்கும்போது ,திடீரென ஒரு இளம் வயது அன்பர் எமக்கு எதிரே உள்ள காலியான இருக்கையில் அமர்ந்தார்.வெள்ளை நிற ஜிப்பா,நெற்றியில் எடுப்பான ஒரு சிறிய செந்தூர நாமம்.மிக அழகாக இருந்தது.அந்த செந்தூரம் இவருக்கு.நல்ல கருமையான தலைமுடி ஒரு இளம்வயது அன்பருக்கு ஏற்றார்போல் haircut.மிக இளமையான தோற்றம்.உடல் கருப்பு நிறம்,மெல்லிய தேகம்.அந்த ஊர் இளைஞர் போல தோற்றம்.ஆனால் கண்கள் எம்மை முற்றிலும் ஈர்த்தது.ஏதோ ஒரு ஆஞ்சநேயர் கோயில் பக்தர் போல இருந்தார்.இங்குள்ள கோவிலுக்கு வந்திருக்கலாம் என எண்ணினேன்.

அவர் வந்து அமர்ந்த விதம் மிகவும் ஈர்த்தது. இப்படி யாரும் அமர்ந்ததை இதுவரை யாம் பார்த்ததில்லை.ஏதோ பல ஜென்மமாக தொடர்புள்ள ஒரு பாசம் மிகுந்த ,கருணை உள்ளம் கொண்ட அன்பர் ஒருவர் ,தம் குடும்ப அன்பரை பார்க்க வந்தால் எப்படி இருக்கும்,அப்படி ஒரு பாசத்தோடு அருகிலே அமர்ந்தார்.அவரிடமிருந்து வந்த அலைகள் ஒரு ஈர்ப்புமிக்க பாசத்தை கொட்டியது.அறிமுகமே இல்லாத அன்பர்.இவரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லை.பார்க்க ஒரு சாதாரண மனிதர் ஆனால் இவரிடமிருந்து வரும் அலைகள்,எம்மை அன்பினால் கட்டிபோட்டுவிட்டது.மன அமைதியில் ஆழ்த்தியது.ஒரு இனம் புரியாத பாச அலைகள்,யார் இவர் ? யார் இவர் ? யாராக இருக்கும் என்றே எண்ணினேன் .அவர் கண்களை சற்று உற்று நோக்கினேன்.

இது போன்ற கண்கள் தானே அந்த இளம் சாதுக்குரியது.சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் சன்னதியருகில் சந்தித்த அதே கண்கள்.அப்படியே உள்ளது.ஆனால் வழக்கம் போல் எம் கற்ற அறிவு எம்மை compare செய்ய வைத்தது.அந்த சதுரகிரி இளம் சாதுவிற்கோ நீண்ட தாடி,நீண்ட முடி,ஆனால்இங்கே முற்றிலும் மாறியுள்ளதே.அந்த இளம் சதுரகிரி சாது தான் இவர் என்று எப்படி இவரிடம் கேட்பது ..! அடையாளம் காண்பதில் ஒரே குழப்பம். இவை எல்லாம் ஓரிரு நொடியே.எம் நண்பரோ சாப்பாடு பற்றி பேசி கவனத்தை முற்றிலும் திசை திருப்பிவிட்டார். சாம்பார் புளிக்கிறதே என்றார்.பிறகு யாமும் உண்ண ஆரம்பித்தோம். உண்மையிலேயே சாம்பார் புளித்தது.உடனே அந்த ஆஞ்சநேயர் பக்தர் “,....ஆமாம் புளிக்கிறது ..என்ன சாப்பாடு போடுறீங்க..?” என்று ஹோட்டல் ownerஐ கேட்க.அவரோ திரு திருவென்று முழிக்கிறார் “இல்லங்க இதுக்கு முன்னாடி நிறைய பேர் சாப்பிட்டாங்க,ஏதும் சொல்லலையே...”

என் நண்பரோ ஒரு சாப்பாட்டு பிரியர், சாப்பாடு பற்றி ஒரே புலம்பல். “சரி...சரி விடுப்பா ..அடுத்த முறை நன்றாக அமையும்,நாம் வந்ததோ சதுரகிரி சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்க, இடையிலே கிடைக்கிறதை சாப்பிட்டு,எதுவும் குறைகாணமல் பசியாறி சீக்கிரம் மலை ஏறணும் ..சரியா? .வா ..வா..கிளம்பலாம் .”என்று அவரை அழைத்து பயணத்திற்கு ஆயத்தமானேன்.பிறகு பணம் எவ்வளவு என்று ஹோட்டல்அன்பரிடம் கேட்டேன்,அதற்குள் அந்த ஆஞ்சநேய பக்தர் ,நாங்கள் சாப்பிட்டதற்கும்சேர்த்து billஐ settle பன்ன ready ஆகி, பணத்தை கையிலெடுத்து நிற்க ,.உடனே நான் தடுத்து “இல்லை இல்லை எங்கள் இருவருக்கும் யாம் settle பண்ணுகிறேன்.தயவு செய்து அவருக்கு சுமையாக இதையும் அவர் bill உடன் சேர்க்காதீர்கள் என்றேன்.. “.. அவரோ தலையில் கையை வைத்து ,ஒ ..sorry ! இன்னைக்கு எனக்கு என்னாச்சு.. தெரியல ? ஏன் இப்படீன்னு தெரியல...” என்றார் அந்த ஹோட்டல் owner.

பிறகு ஹோட்டல் விட்டு கீழிறங்கி நடந்தேன்..ஒரு பத்து நிமிடம் சென்றிருக்கும்.பிறகு தான் எம் சிந்தனை முற்றிலும் செயல்பட ஆரம்பிக்கிறது.சுய நினைவிற்கே வருகிறேன் என்று சொல்லலாம். ஒரு குறிப்பிட்ட நிமிடங்களுக்கு பிறகு தான் சூட்சும கட்டுகளை அவிழ்த்து விடுகிறார்கள் மகான்கள்.பிறகு தான் நடந்ததை முற்றிலும் உணர்கிறேன்.ஹோட்டலில் நுழைந்ததிலிருந்து வெளி வரும் வரை நடந்த அலைஇயக்கம், சாம்பாரிலிருந்து ,தோசை முதல்,மேஜை நாற்காலி,ஹோட்டல் owner,எம் நண்பர் மற்றும் யாம் போன்ற எல்லாம், வந்திருந்த ஆஞ்சநேய பக்தரின் கட்டுபாட்டில்.குறிப்பாக அந்த ஹோட்டல் ownerரின் சிந்தனை கூட அவரது கட்டுபாட்டில் இல்லை.

அந்த ஆஞ்சநேயர் பக்தர் வேறு யாருமல்ல,யாம் முதன் முதலில் சதுரகிரியில் சந்தித்த அதே இளம் சாது.எம் கற்ற அறிவும் எமது தோல்விக்கு ஒரு காரணம்.கற்ற அறிவெல்லாம் தூக்கி குப்பையில் எறிந்துவிடுகிறார்கள் மகான்கள்.தாடி இல்லாமல் போனதும்,தலைமுடி குட்டையாக மாறியதும்,சாம்பார் புளித்ததும்,ஹோட்டல் owner தவறாக கணக்குபோட்டதும் ஆகிய எல்லாம் இந்த மகானின் சித்து வேலை.இது அன்பின் ஆழம் கட்டுரையில் வரும் அதே இளம் சாது. மீண்டும் இங்கே ஆஞ்சநேய பக்தர் வடிவில் தரிசனம்.இந்த இளம் சாதுவை காண இடைப்பட்ட காலங்களில் பல முறை காத்துக்கொன்டிருந்தேன்.ஒவ்வொரு முறை சதுரகிரி செல்லும் போதெல்லாம் ,இளம் சாதுவை மீண்டும் எப்பொழுது சந்திப்பேன்..?,எப்பொழுது சந்திப்பேன்...? என்று ஏங்கி இருந்திருக்கின்றேன் பல முறை!.
 


இந்த இளம் சாதுவை எவ்வாறு யாம் அழைப்போம்.இவர் ஒரு சித்தரே! உண்மையில் சித்தர்கள் தம்மை தாமே சித்தர் என்று யாரும் அழைப்பதில்லை.இந்த இளம் சாதுவிடமிருந்து எமக்கு எத்தனை மெய்சிலிர்க்கும் அனுபவங்கள் ! அமெரிக்காவில் இருந்த எம் ஸ்தூல உடம்பில் உள்ள சூட்சுமத்தை தட்டி எழுப்பி,எம்மை முதன் முதலில் தந்தை ஸ்ரீ அகத்திய மகானிடம் சூட்சுமமாக கொண்டுசென்றவர் இவரல்லவா ! .இவர் இல்லை எனில் யாம் தந்தையை எவ்வாறு இவ்வளவு எளிதில் தரிசனம் பெற்றிருக்க முடியும் ! தந்தையின் அன்பின் ஆழம் எவ்வாறு உணர்ந்திருக்க முடியும்.!இளம் சாது எமது அருகில் அமர்ந்த நொடிகள் ,அந்த மணித்துளிகள் எம் வாழ்கையின் மிக சிறந்த நொடிகளுள் ஒன்று. அறிமுகமற்ற இவருக்கு எப்படி இத்தனை கவர்ந்திழுக்கும் ஆற்றல் என எண்ணினேன். ஆனால் அதற்குமேல் அங்கே எம்மால் சிந்தனையை செலுத்தமுடியவில்லை !.இவர் தான் அந்த இளம் சாதுவென்று அந்த ஹோட்டலில் தெரிந்திருந்தால் அப்படியே கட்டிபிடித்து அழுதிருப்பேனே.......!

 
வந்தவர் எம்மை தொடவில்லை,எந்த ஒரு பேச்சும் யாம் அவருடன் பேசவில்லை. எமக்கும் அவருக்கும் இடையே இருப்பது வெற்றிடமும் காற்றும் மட்டுமே.பார்க்க ஒரு சாதரண மனிதர் ,அவரிடமிருந்து எழுந்த அலைகள்.,எத்தனை சக்தியுள்ளது தெரியுமா..!இந்த அலைகள் யாம் எப்பொழுது நினைத்தாலும் அதே மெல்லிய அலைநீளத்திற்கு எம்மை கொண்டுசெல்கிறது.இது தான் ஒரு சித்தனுக்குரிய ஆற்றல்.சித்தனின் உண்மை அலைகளின் ஆற்றல்.எங்கு எப்பொழுது நினைத்தாலும் அதே frequency க்கு இழுத்துசெல்லும் தன்மை.இறைநிலையின் தூய character .இந்த அலைதான் வந்தவரை மகான் என்று எம்மை உணரவைத்தது.எப்படி ஒரு விந்தை..!இந்த ஸ்தூல கண்களுக்கு எதுவும் தெரியவில்லை.ஆனால் இந்த உள்ளம் எனும் நெஞ்சம் அமைதியால் சூழ்ந்ததால் ,இந்த அன்பு அலைகளால் நன்கு செறிவுஊட்டப்பட்ட இளம் சாது கொண்டுவந்த அன்பு அலைகள், அவரையும் மீறி கசிய ஆரம்பித்துவிட்டது,ஆதலால் ஒரு துளி யாமும் உணர்ந்தோம்.அப்படியே தந்தையின் அலைகள்..! கண்களில் ஆனந்த கண்ணீர் ..! என்ன கைம்மாறு செய்வோம் இவர்களுக்கு..!! எத்தனை கோடி கொடுத்தாலும் இவை பெற இயலாது...!


ஆழ்ந்து கவனிக்க கவனிக்க...மனதை மிக மென்மையாக்கி ,குழந்தை ஏங்கி அழுவது போல் மாற்றி, ஆழ்ந்து அடிமனது தொட்டு,அங்கேயே நிலைக்க செய்து,ஒரு பேரமைதியிலே மூழ்கசெய்து விடுகிறது.நெஞ்சை கவர்ந்திழுக்கும் ஈர்ப்பு நிறைந்த தூய அன்பு அலைகள்.விட்டுபிரிய மனமில்லாத பாசஅலைகள்.இறைநிலையிலேயே மூழ்கி,ஆழ்ந்து தவம் செய்து ,தூய அன்பெனும் ஆற்றல் உணர்ந்த ஒருவருக்குதான் இவ்வளவு ஆற்றல் இருக்க முடியும் என நம்புகிறோம்..ஒரு தந்தைக்கும் தம் மகனுக்கும் இருக்கும் இதயம் ஈர்க்கும் அன்பு அலைகளின் உறவுகள்.என்னவென்று சொல்வோம்..!தந்தை எமக்கு அளித்த அன்பின் அலைகளை சுமந்து கொண்டுவந்த ஒரு மகா மனிதவடிவில் வந்த சித்தர்......தந்தையின் சாராம்சம் அப்படியே ..! ஒம் அகத்தீஸ்வராய நமஹ!....!

 
யாமோ குப்பையான அலைகளை எம்முடன் சுமந்தே செல்கிறோம்.ஆனால் வந்தவரோ தூய அன்பெனும் அலைகளை தம்முடன் எப்பொழுதும் சுமந்து செல்கிறார் .தாம் சந்திக்கும் அன்பருக்கெல்லாம் வாரி வாரி வழங்குகிறார்.எல்லாம் மகானின் கட்டுபாட்டில் ..ஒரு இம்மி கூட மீறி செய்ய இயலவில்லை...!! எல்லாம் எம் தந்தையின் கருணை!அகத்திய மகானின் அன்பு சீடர் இவர்.மீண்டும் சந்திப்போம் இம்மகானை என எம் உள்ளம் சொல்லும் அலைகளை இங்கே அகத்திய உள்ளங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.எமது சூட்சும அனுபவமும் சரி,ஸ்தூல அனுபவமும் சரி, நிகழ்வு நடத்தப்பட்ட அலையியக்கம் மிக சரியானது.அதாவது மிக சரியானவற்றை மட்டுமே செய்யமுடியும் அந்த அலையியக்கதில்.மிக தூய்மையானது.எல்லாம் அவர்களின் கட்டுபாட்டில்.மிக துல்லியமானது.எல்லாம் predefined .நன்கு வரையறுக்கப்பட்ட சூழல்.ஒரு சிறு தவறு கூட நிகழ வாய்ப்பில்லை.!

 


தந்தையை இடைப்பட்ட காலங்களில் இருமுறை தரிசனம் பெரும் வாய்ப்பு கிட்டியது .இருமுறையும் முதலும் முடிவும் அறிய இயலவில்லை.எப்படி இது நிகழ்ந்தது என்றதற்கான ஆரம்பமும் தெரியவில்லை.அது போல அதன் முடிவும் தெரியவில்லை.அலைஇயக்கம் மிக நுண்ணியது.அமைதியாக இருந்த ஆன்மாவை, சூட்சும உடலை விரும்பியபடி அழைக்கும் நுணுக்கம்.இந்த சூட்சும உடலை வா என்றால் வரும், செல் என்றால் செல்லும் அப்படி ஒரு கவர்ந்து இழுக்கும் தன்மை நிறைந்த ஒரு கலை .இதன் நுணுக்கம் இதன் நுட்பம் (Technology )எல்லாம் அறிய இயலவில்லை.இது போன்ற சூட்சும அலைகள் பற்றிய விந்தையெல்லாம் மகான்களுக்கும் சித்தர்களுக்கும மட்டுமே உரிய கைவந்த கலை.எத்தனையோ புனித ஆத்மாக்களும் தந்தையின் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். அவர்களுள் ஒருவனாக யாமும் அழைத்துவரப்பட்டோம். ஒம் அகத்தீஸ்வராய நமக என்னும் தாரக மந்திரம் ஒன்றே யாம் தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருக்கிறோம்.நிற்கும் கோலத்தில் தந்தை.அமைதியின் ஆழ்கடல்.பிரபஞ்சத்தையும் கடந்து செல்லும் ஆழ்ந்த பார்வை.தந்தையின் வருகையால் அந்த இடம் முழுவதும் ஒரு பேரமைதி குடிகொண்டுள்ளது.தெய்வீகம் நிறைந்த அலைகள் எங்கெங்கும் சூழ்ந்துள்ளது.எங்கெங்கு காணினும் மெல்லிய சாத்வீக அலைகள்.தந்தை எம்மை பார்த்தவுடன் ஒரு பரவச நிலை எமக்கு.

எத்தனை ஜென்மம் வேண்டுமானாலும் இத்தரிசனத்திற்காக காத்திருப்பேன் தந்தையே ..!நின்  ஆழ்ந்த நிறைவான அருட்பார்வை ,எம்முல் ஊடுறுவி  எம் சிதிலம் அடைந்த  செல்களை எல்லாம் புதுப்பிக்கிறது தந்தையே ..! தந்தையின் அருட்பார்வை பட்டதால் எம் கண்களில் அன்பெனும் கண்ணீர்.வார்த்தை இல்லை எமக்கு.ஒரு அழகான புன்னகை எம்மை பார்த்து."என்னை ஏனப்பா பெரிதாக எழுதுகிறாய்... ? என்றார்.என்னால் எந்த பதிலும் சொல்ல இயலவில்லை.எத்தனை பெருந்தன்மை.எவ்வாறு யாம் தந்தையை  எழுதாமல் இருக்கமுடியும். எமது சூட்சும தேகத்தை முதன் முதலில்  உரசி தட்டி எழுப்பி ,எம்மையும்  ஒரு பொருட்டாக கருதி, அன்பெனும்  ஜீவ அலைகளால்,எம் ஆணவம் அழித்து ,சூட்சுமத்தை முதன் முதலில் எமக்கு உணர்த்தியவர் அல்லவா ?  அன்பெனும் இறைநிலை உணரவைத்தவர் அல்லவா ? எப்படி  தந்தையை பற்றி  எழுதாமல் இருக்க முடியும் ?
 இங்கே ஒரு சாதாரண மனித உரையாடல் போல என்னால் எந்த ஒரு reactம் செய்ய முடியவில்லை.முக்கியமாக சிந்தனை கூட எனது கட்டுபாட்டில் இல்லை .ஒரு frozen state என்று சொல்வார்களே அது போலவே .வாய் திறந்து பேசவேண்டும் என்ற தேவை இல்லை இங்கே. எல்லாம் அலைகளின் இயக்கம்.எண்ணங்களின் சாராம்சம் எம்மை சுற்றியுள்ள சூட்சும அலைகள். ஒரு துளி சூட்சும அலைகள் எம் எண்ணங்களை அப்படியே பிரதிபளித்துவிடுகிறது. அனைத்தும் தந்தையின் கட்டுபாட்டில்.ஒரு நல்ல அலையியக்கம்.அமைதியும் முழுமையும் நிறைந்த அலைஇயக்கம். எத்தனையோ அருள் நிறைந்த வேலைகள் தந்தைக்கு.சூட்சும அலைகளின் ஒளிப்பிரகாசம். ஒரு துளி நொடிகளே கடந்துசென்றிருக்கும்.இருக்கும் இடத்திலிருந்து அப்படியே மேல் நோக்கி பறக்கும் ஜாலம். தந்தை பறந்து செல்கிறார்.பறக்கும் ஜாலம் எம்மை பிரமிக்கவைக்கிறது.எடையற்ற அலைகள்.ஆக எங்கு பறக்க வேண்டுமோ அங்கே பறக்க தயாறாகின்றது.எல்லா சூட்சும உடல்களும் எங்கு வேண்டுமானாலும் பறக்க இயலவில்லை. அதற்கென்று ஒரு சூட்சும மந்திரம்உள்ளது. அந்த சூட்சும மந்திரம் பெற்றவுடன் காற்றடைக்கப்பட்ட பலூன் போல பறக்க தயாராகிறது.பறக்கும் ஜாலம் எம்மை பிரமிக்க வைக்கிறது. சித்தர்களுக்கே உரிய கைவந்த கலை .கோரக்கர் சித்தர் பறக்கும் வித்தை பற்றிய அணைத்து உண்மைகளையும் சந்திர ரேகை எனும் நூலில் உள்ளது உள்ளபடியே எழுதியுள்ளார்.மிக சிறந்த நூல்.

 


சமீபத்தில் ஒரு சிவாலயத்திற்கு சென்றேன் .மிக பழமையான கருவறை ,கோவில் அர்ச்சகர் சற்று முன்னர்தான் வந்து அவர் வேலை முடித்து வெளியிலே உள்ள விக்கரங்கங்களுக்கு தன் வேலையில் ஆயத்தமாக இருந்தார். வேறு யாரையும் கவனிக்கவில்லை அங்கே அழகிய சிவலிங்கம் சாயரட்சை பூஜை முடித்து ,பூக்கள் மாலைகள் சூழ ,ஒரு மிதமான சுடர் விளக்கில் ரம்மியமாக ஒளிவீசிக்கொண்டிருந்தது .அந்தி சந்தி வேலை என்பார்களே அந்த நேரம் .மிக முக்கியமான நேரம் .சூட்சுமங்கள் உணரும் நேரம். அதாவது பகல் முடிந்து இரவு சந்திக்கும் நேரம்,ஒரு மருவிய நேரம்.யதார்த்தமாக இந்நேரம் அமைந்தது .சிவலிங்கத்தில் சூடப்பட்டுள்ள முல்லைபூவின் நறுமணம் என்னை கவர்ந்திழுத்தது .இதே நறுமணம் இதே வேளையில் வேறு எங்கோ ஒரு இடத்தில் இது போன்று உணர்ந்திருக்கிறேன்.கிட்டத்தட்ட ஒரே நிகழ்வு .ஒரே அலைசுழல் .இங்கே மீண்டும் நடக்க இருக்கிறது.என்னவாக இருக்கும் என்று சிறிதே கண்ணை மூடி அங்கே உள்ள அலைகளோடு எம்மை கலந்தோம்.

வேத மந்திரங்களால் நிரப்ப பற்ற கருவறை .பளிச்சிடும் வெண்ணிற அலைகள் .எவ்வளவு இறையாற்றல் ! கருவறையிலிருந்து விரிந்து கொண்டேயிருக்கிறது .மனதை வருடும் ஆற்றல் .எங்கோ இழுத்துசெல்லும் தன்மை .அமைதியும் சாத்வீகமும் நிறைந்த அலைகள் மெதுவாக எம்முல் கலந்து ,கொஞ்சம் கொஞ்சமாக நெஞ்சமெங்கும் வியாபித்து மெதுவாக எம்மை மறக்க வைக்கிறது .இறை அலைகளின் செறிவு அதிகமாகிக்கொண்டே செல்கிறது .ஒரு கட்டத்தில் உப்பி பருக்கும் சூட்சும அலைகள் .இறை ஆற்றல் செறிவு அதிகமாகிறது .சூட்சும அலைகளின் ஒன்று கலப்பு .தந்தையின் திருமுகம் அருகிலே சிவலிங்கம் ,புன்னகை பூக்கும் தந்தை .பளிச்சிடும் முகம் .என்றும் சிவ லயத்திலே இருக்கும் தந்தை .இருவரும் ஒன்றே என்பது போல .பிரித்து பார்க்க முடியாத அலைகள் .சிவமும் தந்தையும் அங்கே .சிவம் என்னவென்று உணரமுடியவில்லை .தந்தையோ புன்னகை வீசும் முகத்துடன். கருணையின் வடிவம் .கருணை பொங்கும் முகத்துடன். மெய் சிலிர்க்கும் நேரம்.எல்லாம் அலைகளே .தந்தையின் தெய்வீக அலைகள் .கேட்பதற்கு ஒன்றும் இல்லை.அலைகள் அது தானாகவே தன்னை புதுப்பித்துகொள்ளும் தருணம்.எல்லாம் ஒரு சில வினாடிகளே .ஆனால் இவைகள் பல கோடி வினாடிகளுக்கு சமம்.கண்திறந்து பார்த்தேன் .ஆடாது அசையாத தீப விளக்கின் சுடரொளியும் சிவலிங்கமும் அப்படியே இருந்தது .ஆனால் எம் நெஞ்சமெங்கும் நிறைவான புனிதமான தந்தையின் புன்னகை பூக்கும் அலைகளும் ,ஒரு வித ஆழ்ந்த அமைதியான அலைகளும் சூழ்ந்திருந்தது வெகு நேரத்திற்கு. 

கருணை மட்டுமே தந்தையின் பார்வை .உலகத்தில் அணு அளவேனும் எதிர்பார்ப்பு இல்லாத ஒரு பார்வை.உலகையே அன்பினால் பார்க்கும் ஒரு பார்வை ,அன்பினால் அரவணைக்கும் ஒரு பார்வை .தந்தையின் ஞானபார்வை .இப்படிப்பட்ட ஒரு பார்வை எப்படி இருக்கும் என்று நினைக்கும் போதே அதற்குரிய அலைகளை ஈர்த்துவிடுகிறது.மெல்ல மெல்ல அமைதி சூழ்கிறது. ஒரு முறை தந்தையின் தரிசனம் வாழ்நாள் உள்ளவரை ஜீவ அலைகளாக என்றும் நம்மை சூழ்ந்து அமைதியையும் ஆனந்தத்தையும் நிறைவையும் அள்ளி வீசி, மனதை மிக நுண்ணிய அலைநீளத்திற்கு கொண்டுசெல்லும்.

தம்மை அன்பாக மாற்ற தெரிந்தவர்கள்,அன்பின் அலைகளாக மாறுபவர்கள்,அப்பழுக்கட்ற தூய எண்ணம் உடையவர்கள்,எதையும் அன்பால் உள்ளம் உருகி பார்ப்பவர்கள்,என்றுமே கருணை உள்ளத்துடன் இருப்பவர்கள்,இவர்கள் எம் தந்தையை வெகு எளிதில் தரிசனம் பெறுவார்கள். 
எவ்வாறு அன்பின் அலைகளாக மாறுவது ? அன்பின் உண்மை அலைகளை உணர்வது எப்படி ? ஒரு சிறு முயற்சி இங்கே கொடுத்துள்ளோம் ! மிக நுண்ணிய அலைநீளம் சென்று அங்கே எம் நெஞ்சம் தொட்டு சுழன்று ஓடிய அலைகளை முடிந்தவரையில் பிடித்து, மெட்டுக்களாக மாற்றி,கிடைத்த வார்த்தைகளையும் வைத்து இதோ ஒரு அன்பின் ஆழம் நிறைந்த எம் தந்தையின் திருவடியை போற்றி வணங்கும் ஒரு பாடலாக வைத்துள்ளோம்.தந்தையின் திருவடிகளுக்கு இப்பாடலை சமர்ப்பணம் செய்கின்றோம்.ஒரு உருக்கமான பாடல், அமைதியான சூழலில், உள்ளம் நிறைந்த அன்போடு, இப்பாடலை கேளுங்கள் .ஒரு மெல்லிய அமைதியான அலைசூழ்ந்து உங்கள் மனதினை அமைதி நிலைக்கு கொண்டுசெல்லும்,அமைதியும் தூய அன்பும் நிறைந்த கருணைக்கடலாம் ஸ்ரீ மகாஅகத்திய சித்தரை, தரிசிக்க வழிசெய்யும் தூய அலைகளை உங்கள் உள்ளங்களில் தட்டி எழுப்பும் என நம்புகிறோம் !இதை download செய்வதில் ஏதேனும் problem எனில் எம் மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும் agathieyam@gmail.com

ஏதேனும் பிழைஇருப்பின் அதற்கு யாமே காரணம், பிழைபொருத்து அருள்க.இந்த நிறைவான மெல்லிய அலைகளோடு மீண்டும் அடுத்த ஒரு நிகழ்வில் விரைவில் சந்திக்கிறோம் !

ஒம் அகத்தீஸ்வராய நமஹ....!