அகத்தியம்....!!

Wednesday, January 31, 2018

ஸ்ரீ ராமநாதீஸ்வரர் சுவாமி திருக்கோவில் போரூர்.
இறை எனும் சக்தி ,  இறை எனும் வெளி,   இறை எனும்  பேராற்றல் ,இறை எனும் பேரண்ட நாயகன் ,இறை எனும் சிவம், இறை அது தாமாகவே தம்மை தாமே அறியும் பயணத்தில்,   பஞ்சபூதமுதல் ஆறறிவு உள்ள மனிதன் வரை யாவும் ஒரு கட்டமே,  ஒரு நிலையில்லா ஒரு நிலையே.எல்லாமே மாறுதலுக்கு உட்பட்டு ஒன்று மற்றொன்றாய் மாறி மாறி  இறை தம் பயணத்தில் தொடர்ந்துகொண்டேஇருக்கிறது.இழந்த நொடிகள் மீண்டும் வருவதில்லை,இருக்கும் இந்த நொடியை மிக கவனமாக அதில் வாழ்ந்துவிடுவதே மிக சிறந்தது.

இறை அது தாமே தம்மை அதிக அழுத்தத்திற்கு உட்படுத்தி ,தாமே ஒரு மிக சிறிய அணு எனும் அளவிற்கு தன்னிச்சையாக மாற்றம் பெற்று ,அதே பேராற்றல் தாம் உருவாக்கிய அணுவினை எல்லா பக்கங்களிருந்தும் அழுத்தியும் சூழ்ந்தும் அதனை சுழலவைத்தும் ,இப்படியே எண்ண இயலா கோடான கோடி அணுக்களை உருவாக்கி,அதனை அழுத்தி சுழலவைத்து, தமது அடுத்தடுத்த நிலைகளை ,வடிவங்களை பெற்று ,ஆகாயமாகவும் ,காற்றாகவும்,நெருப்பாகவும்,நீராகவும்,நிலமாகவும்  உருவாக்கி ,அதிலிருந்து ஓர் அறிவு உடைய உயிர் முதல் ஆறு அறிவு உடைய மனிதன் படைத்து தமது ஒன்றுமில்லா ஒன்றிலே இருக்கும் அதி நுட்பத்தை வெளிபடுத்தி தம் பயணத்தை தொடர்ந்தவண்ணம் இருக்கிறது.

யார் அறிவார் சிவனின் சூட்சும ஆற்றலை.விரிந்து விரிந்து உட்செல்ல அழகாய் மிக அழகாய் ஈர்க்கும் அற்புதம்,ஈர்ப்பு இங்கே அன்பாக மாறுகிறது.காற்றாய் மெல்லிய காற்றாய் இதம் தரும் மிக மெல்லிய காற்று எங்கிருந்தோ சில்லென அடிக்கிறது.இவ்வளவு இதம் தரும் காற்றே, நீ எங்கிருந்து வருகிறாய் என சற்றே உட்செல்ல, இழுத்துச்செல்கிறது சூட்சுமாய்  விரிகிறது.


திரு ராமநாத சுவாமி திருக்கோவில் , போரூர் சந்திப்புக்கு அருகில்,  குன்றத்தூர் செல்லும் வழியே வரும் மின்வாரிய அலுவலகத்திற்கு அருகிலேயே இருக்கிறது இந்த மிக பழமையான திரு ராமநாத சுவாமி கோவில்.ஸ்ரீ ராமர் சீதையை தேடி வனத்தில் அலைந்து திரிந்து செல்லும் வேளையில் ஒரு நெல்லி மரத்தின் வேர், ஸ்ரீ ராமரின் கால் இடர,உள்ளுணர்வால் வேரின் உள்ளே சிவலிங்கம் இருக்கிறது என்பதை உணர்கிறார்.சிவனின் தலைமீது கால்பட்டதால்,உண்டான தோஷத்தை போக்க ,அங்கேயே தவத்தில் இருக்கிறார்,நாள் ஒன்றிற்கு ஒரு நெல்லிக்கனியை மட்டுமே உணவாக உண்டு 48 நாட்கள் இருக்கிறார்.முடிவில் வேரின் அடியில் இருந்த லிங்கம் பூமியை பிளந்துகொண்டு வந்து வெளிப்பட, விஸ்வரூப தரிசனம் தருகிறார் சிவபெருமான்.பரவசத்தில் ஸ்ரீராமர் பெருமானை கட்டியணைக்க உடனே சிவலிங்கம் ஆறு அடி உயர அமிர்தலிங்கமாக மாறுகிறது. ஸ்ரீ ராமர் சீதையை தேட வழிகேட்க, "ராமேஸ்வரம் நோக்கி செல் " என்ற அசரீரி  கேட்கிறது...என்று கோவில் வரலாறு தொடர்கிறது.

இறைவனே குருவாக அமர்ந்து இருக்கிறார்.அன்போடு வழிபட குருவருள் விரைவில் கிட்டும் என்பது உண்மை.குருவருள் பெறவும் ,வியாழன் கோள் சம்பந்தமான எந்தவித தோஷத்தையும் போக்கும் மிக அற்புதமான ,மிக பழம்பெருமைவாய்ந்த ஸ்தலம்.ஆழ்ந்து அமர்ந்து வழிபட அற்புதமான கோவில்.
மிக அருமையான குரு ஸ்தலம்.மிக பழமையானது.முன்னொரு காலத்தில் அடர்ந்த வனமாய் இருந்திருக்கிறது.ஆனால் தற்பொழுது எங்கெங்கும் கட்டிடமே தெரிகிறது.கோவில் உள்ளே ஸ்தலவிருட்சமாக நெல்லி மரம் இருக்கிறது.சிவனின் அழகே அழகு .எப்படி சொல்வது ...நன்கு ஆறடி உயரம் இருக்கும்.நல்ல அம்சமான சிவலிங்கம்.நன்கு ஆற்றல் நிறைந்துள்ளது.அன்பால் நெஞ்சம் நிறைந்து எம்பெருமானே ...!!! ,எமது நாயகனே ..!! எமது பேராற்றலே ..!!! கண்ணிற்கு எட்டிய தூரம் வரை யாம் பார்பதெல்லாம் நின் அருள் நிறைந்த ஆட்சியே ..!!மனதால் நினைக்கும் எதையும் ,மனதால் செல்லும் தூரம் வரையும் நினது அற்புத பேராற்றலின் சொல்ல இயலா விந்தையே நிகழ்கிறது..நின் ஆட்சிபுலத்திலிருந்து எதுவும் நுனி அளவும் பிசகுவதில்லை..எல்லாமே நின் கருணையே ..எல்லாமே நின் அற்புதமே ..எல்லாமே நீயே... என மனதால்  போற்றி ,எம்பெருமானை சூட்சுமாய் அரவணைக்க ,சட்டென ஆற்றல் மனதுள் வியாபிக்கிறது.
சிவனின் ஆற்றல் யார் அறிவார்.ஏதோ கொஞ்சம் ஒரு துளி அளவே யாம் உணர்ந்தது.சிவலிங்கத்தை சுற்றி ஒரு வெண்பனி போல ஒரு ஆற்றல் .நிறமற்ற நெஞ்சம் மற்றுமே ஈர்த்துக்கொள்ளும் ஆற்றல் ,கிட்டதட்ட ஒரு பத்தடி தூரம் வரை பரவிஇருக்கிறது.யார் யாரெல்லாம் இதன் ஆட்சிபுலத்தில் வருகிறார்களோ அவர்கள் யாவரும் இந்த ஆற்றல் இருக்கும் களத்தை உள்வாங்கியே செல்லவேண்டும்.யாம் உணர உணர எமக்குள் உருவானது ,இன்னும் இன்னும் எம்பெருமானை பற்றி நன்கு பாடல் பாடவேண்டும் அவர் தம் பெருமை போற்றி அவன் தாள் பணிந்துகொண்டேஇருக்கவேண்டும் என்பதே.தூய அலைகள் நிறைந்த அந்த களத்தில் மேலும் மேலும் ஆற்றல் உணர்ந்து அப்படியே உள்வாங்க மனம் ஆழ்ந்துசெல்கிறது.அவரவர் பிறந்த நட்சத்திரம் அன்று (ஒவ்வொரு மாதமும் வரும் தேதியை குறித்துவைத்துக்கொள்ளுங்கள்) அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு பழமையான சிவாலயம் சென்று இறைவனை வணங்கி ருத்ரம் அல்லது ஏதேனும் ஒரு ஸ்லோகம் சொல்லி ,ஏற்படும் மாற்றத்தை உணருங்கள்.ஒவ்வொருவருக்கும் அவரது ஜென்மநட்சத்திரத்தில் .உடல் உயிர் அது தாமாகவே ஈர்க்கும் அதீத ஆற்றலை உணரலாம்.இந்த ஆற்றல் ஒரு குறிப்பிட்ட நாள் வரை அதன் தன்மை மாறாமல் Full chargeல் அப்படியே இருக்கும்.இது போன்ற நட்சத்திர நாட்கள்  நம்மை நாமே இறை ஆற்றலை எளிதில்  சார்ஜ் செய்துகொள்ளவே .ஆக ஆற்றல் அதிகம் செலவு செய்யாமல் முடிந்த வரை ,வாழ்கவளமுடன் என்று வாழ்த்தியோ ,அல்லது இயன்றவரை அன்னதானம் செய்தோ அல்லது ஏதேனும் புண்ணிய காரியங்களை செய்தோ  பழக ,கர்மவினை தாக்கம் அதன் வலிமை மெல்ல மெல்ல குறையும் என்பது குருஅருள் நிறைந்த கோவிலில் எமக்கு கிடைத்த அனுபவம்.

குருஅருளோடு அகத்திய  உள்ளங்களை வேறு ஒரு கட்டுரையில் சந்திக்கின்றோம்.

ஒம் அகத்தீஸ்வராய நமஹா ..!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா ..!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா ..!!