ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி
பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி புராந்தகி த்ரியம்பகி எழில் புங்கவி விளங்குசிவ சங்கரி சகஸ்ரதள புஷ்பமிசை வீற்றிருக்கும் நாரணி மனாதீத நாயகி குணாதீத நாதாந்த சத்திஎன்றுன் நாமமே உச்சரித் திடுமடியர் நாமமே நானுச்ச ரிக்கவசமோ ஆரணி சடைக்கடவுள் ஆரணி எனப்புகழ அகிலாண்ட கோடிஈன்ற அன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசும் ஆனந்த ரூபமயிலே வாரணியும் இருகொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ் வளமருவு தேவைஅரசே வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை வளர்காத லிப்பெண்உமையே.
தாயுமானவ ஸ்வாமிகள் ராமேஸ்வரம் அம்பாள் பற்றி எழுதிய மிக அற்புதமான பாடல் .அனைவரும் படித்து பொருள் உணர்ந்து பயன்பெறவேண்டிய தெய்வீக பாடல் .
எங்கெங்கும் நிறைந்திருப்பவளே !! சிருஷ்டிக்கு முன்னே தோன்றிய மிக பழமையானவளே !! சர்வ மங்களம் நிறைந்தவளே !! அனைத்தையும் ஆளும் சர்வேஸ்வரியே !! முப்புரம் எரித்தவளே 1! மூன்று திருவிழிகளையுடையவளே !!மிக அற்புதமான குணங்களை கொண்ட சக்தியே !! மனாதீத , குணாதீத , நாதாந்த சத்தியே !! இப்படி இடைவிடாது ஓதும் உன் அடியார்களின் திருநாமங்களை நான் உனது அருளால் ஓதும் பேரு எனக்கு கிட்டுமா ? என்கிறார்கள் தாயுமானவ ஸ்வாமிகள் .
எம்பெருமான் மறைமுதல்வி என்று போற்றி வணங்குகின்ற தாயே !!கோடான கோடி ஜீவராசிகள் யாவற்றையும் ஈன்ற பின்பும் வேதங்கள் தங்களை கன்னியே என்று போற்றி வணங்குகின்ற பேரின்ப ஆனந்த மயிலே !!மாதர்கள் மகிழும் தாயே !! புனிதமான கங்கை போற்றி கொண்டாடும் வளம் நிறைந்த ராமேஸ்வரத்தில் ஆளும் அரசியே !! இமவான் எனும் மலையரசனுக்கு இரு கண்ணின் மணியாய் உதித்த ,மலை மகளாகிய காதலிப்பெண் உமையே ..!!! என்று தாயவள் பெருமை போற்றி வணங்குகின்றார்கள் தாயுமானவ ஸ்வாமிகள் . இப்பிறவி கிடைத்தமைக்கு நன்றி சொல்லவேண்டும் என்று நினைத்தால் இப்பாடலை மனப்பாடமாக ஒரு அம்பாள் சன்னதியில் பாடவேண்டும் . நலம் பெருகும் !!
எவ்வளவு எளிமையானவர் பணிவு மிக்கவர் தாயுமானவ ஸ்வாமிகள் .அன்னையின் நாமங்களை உச்சரிக்கும் அடியவரின் நாமங்களை உச்சரிக்க தாயிடம் வேண்டுகோள் வைக்கின்றார்கள் . அடியார்களின் நாமங்களை உச்சரித்தாலே அவர்களிடம் நிறைந்துள்ள அன்னையின் கருணை அலைகளை எளிதில் பெற்று தாயவள் ஆசி அலைகள் வெகு எளிதில் கிட்டும் என்பதில் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள் .அந்த அளவுக்கு தாயவளின் நாமங்கள் சக்திகொண்டவை என்று ஸ்வாமிகள் உணர்ந்திருக்கின்றார்கள் .
இப்பாடலில் வரும் ஒவ்வொரு நாமங்களும் ஒவ்வொரு அற்புதமான தேவியின் அதிர்வு அலைகளை ஈர்க்க வல்லவை .நன்கு சரியாக உச்சரித்தாலே அதன் தாத்பர்யம் புரியும் .மிக அழகாக கோர்வையாக கோர்த்து பாடலாக தந்திருக்கிறார்கள் தாயுமானவ ஸ்வாமிகள் .நல்ல அதிர்வு அலைகளை நம்முள் உருவாக்கும் அதி அற்புதம் நிறைந்தவை .துள்ளலும் துடிப்பும் நிறைந்திருக்கின்றது .துவண்டு போன உள்ளங்களை தட்டி எழுப்பி இதற்கே உரித்தான காந்த அலைகளை ஈர்க்கும் தன்மை நிறைந்தவை .மேலும் அம்பாளின் அருள் அலைகளை ஈர்க்கும் அற்புத சக்தி நிறைந்த அதி அற்புதமான பாடல் .மனதினை ஒரு ஆக்க துறையிலேயே வைத்திருக்க உதவும் மிக நல்ல ஒரு பாடல் .தொடர்ந்து கேளுங்கள் !! தொடர்ந்து இது போன்ற நாமங்களை உச்சரியுங்கள் .அவை எப்பொழுதுமே நல்ல அதிர்வு நிலையிலேயே வைத்திருக்க உதவும் .
பூரணி புராதனி ஒலி வடிவ பாடலை கேளுங்கள் ஒருமுறை .
Click below link to listen
நீரின் மையதிற்கான கோவில் .நிறைய மகான்கள் போற்றி வழிபட்ட கோவில் .அருணகிரி நாதர் இங்கு வந்து இங்குள்ள முருகனையும் கற்பக விநாயகரையும் பாடியிருக்கிறார்கள் . திருநாவுக்கரசர் ,திருஞான சம்பந்தர் ,சுந்தரர் வந்து பாடி நிறைய பதிகங்களை பாடியிருக்கிறார்கள்.அவ்வளவு தொன்மையும் பெருமையும் நிறைந்தது .நிறைய தோஷங்களையும் பாவங்களையும் போக்கவல்ல ஒரு அற்புதமான கோவில் தான் திருவானைக்காவல் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் ஆலயம் . வாழ்வில் ஒரு முறையேனும் வந்து அமர்ந்து ,ஜம்புகேஸ்வரரையும் ,அகிலாண்டேஸ்வரியையும் தரிசனம் செய்யவேண்டிய கோவில் .மனநிறைவு தரும் , வாழ்வை செம்மை படுத்தும் ஒரு அற்புத திருதத்தலம் .
வெண்நாவல் மரங்கள் நிறைந்த காட்டில், அதன் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் .சிவகணங்கள் தாம் பெற்ற சாபத்தின் காரணமாக யானையாகவும் சிலந்தியாகவும் இங்கே பிறந்திருக்கின்றது .வெயில் தூசி ,சருகுகலிருந்து தினந்தோறும் வலை பின்னி சிவலிங்கத்தை காக்கும் சிலந்தி ,அந்த சிலந்தி பின்னிய வலையை அழுக்கென நினைத்து ,காவிரியிலிருந்து தம் துதிக்கையால் நீர் கொண்டுவந்து சிவனுக்கு தினந்தோறும் அபிஷேகம் செய்யும் யானை. தினமும் இந்த நிகழ்வுகள் நடந்தேறியது
தினந்தோறும் சிலந்தி வலை பின்ன ,யானை அதை பிய்த்தெறிய இப்படி ஒரு நிகழ்வு தொடரந்துகொண்டேயிருந்தது . யானையை தண்டிக்க நினைத்த சிலந்தி யானையின் தும்பிக்கையில் புக ,இறுதியில் ஒன்றோடு ஒன்று போராடி இரண்டும் மடிந்தன .பக்தியை மெச்சிய சிவன் யானையை சிவகணங்களுக்கு தலைவனாக்கி ,சிலந்தியை மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் எனும் அரசனாக்கினார் .அந்த அரசன் கட்டிய முதல் கோவிலே இந்த திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் இப்படி இன்னும் பல அற்புதமான ஸ்வாரஸ்யங்களுடன் கோவில் வரலாறுகள் தொடர்கின்றது .
.அம்பிகையே காவேரியில் நீரினை எடுத்து அதனை லிங்கமாக உருவாக்கி வடிவமைத்து வழிபட்ட ஒரு அற்புத லிங்கம் ஜம்புகேஸ்வரர் பெருமான் . ஜம்புகேஸ்வரர் தரிசனம் செய்து வெளிவந்தோம்.அதி உன்னத தரிசனம்.
.அகிலாண்டேஸ்வரியை சந்திக்க ஆயத்தமாகி அம்பாளின் இருப்பிடம் நோக்கி சென்றோம் .அன்னையை தரிசிக்கும் போது . பளிச்சென்று யாவரும் காணும் வண்ணம் இருக்கும் அவளின் காதணிகளை தரிசிக்கவேண்டும் .அங்கு தான் ஸ்ரீ சக்கரம் உள்ளது .முன்னொரு காலத்தில் அம்பாள் மிக உக்கிரமாக இருந்ததால் மக்கள் யாவரும் தரிசிக்கும் வண்ணம் ஆதிசங்கரர் இங்கே எழுந்தருளி ,ஸ்ரீ சக்கரத்தை அம்பிகையின் காதுகளில் தொங்கும் இந்த தடாகங்களில் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தை தணித்தார்கள் என்றும் மேலும் அம்பாளுக்கு முன்புறம் விநாயகரையும் பின்புறம் முருகனையும் பிரதிஷடை செய்து உக்கிரத்தை மேலும் குறைத்ததாகவும் வரலாறு சொல்கிறது.
மனோரஞ்சித பூக்கள் இக்கோவிலின் அருகிலே இருக்கும் கிராமங்களில் விளைகின்றது .அம்பாளின் சன்னதி நுழையும் முன் உள்ள கோவில் உள்கடையிலேயே இந்த மனோரஞ்சித பூக்களும் தாமரை மலர்களும் கிடைக்கின்றது .இது வரை இந்த பூவினை பார்க்காதவர்கள் ஒரு பூவினை வாங்கி ,மஞ்சள் நிறமுள்ள அதன் இதழ்களில் இருந்து மெல்ல வரும் நறுமணத்தை கவனியுங்கள் . அழகிய நறுமணம் வீசுகிறது .மனம் துடிப்புடன் ,நல்ல அலைச்சுழலில் இருக்க, இது போன்ற பூக்களின் நறுமணம் மேலும் மேலும் மனதினை மென்மையாக்கி இதம் தந்து உதவுகிறது .அம்பாளுக்கு சூடிட முகராத பூக்கள் மட்டுமே பயன்படுத்தவேண்டும் .தாமரை மலர்களும் மரிக்கொழுந்தும் ,மனோரஞ்சிதமும் மற்ற பூக்களும் இடத்தையே அற்புத நறுமண நந்தவனமாக மாற்றுகிறது .அம்பாள் வாசம் செய்ய அதற்குரிய அலைகளை கவர்ந்திழுக்கின்றது.
பூக்களை வாங்கிக்கொண்டு அம்பாளின் மூல ஸ்தானம் முன் செல்ல ,அர்ச்சகர் வந்து,அம்பாளுக்கு பூஜை அலங்காரம் ஆகிக்கொண்டிருக்கின்றது,ஆகவே ஒரு அரைமணி நேரம் ஆகும் அப்படியே அமருங்கள் என்று சொல்ல ,அங்கேயே அமர்ந்துவிட்டோம் .கைகளில் மனோரஞ்சிதமும் தாமரையும் ,மனதில் அம்பாளின் திருநாமங்கள் உச்சரித்த வாரே , அரைமணிநேரம் கடந்தவுடன் சட்டென கதவுகள் திறக்கப்பட்டு திரை விலக ,அம்பாளின் திருமுகம் தரிசனம் .ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது அகிலாண்டேஸ்வரியை பார்த்து .தீப ஆராதனை அதன் ஒளியில் ஜொலிக்கும் அவள் திருமுகம் ,ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ சக்கர ரூபமாகிய அம்பாளின் அழகிய தடாகங்கள் ஜொலிக்கின்றது .அம்மா அகிலாண்டேஸ்வரி தாயே !! பூரணியே !! புராதனியே !! சுமங்கலியே !! சுதந்தரியே !! சிவசங்கரியே !!நாரணியே !! த்ரியம்பகியே !! எமை பெற்றவளே !! தாயே !! காத்தருள் தாயே என்று சாஷ்டாங்க சரணாகதி செய்ய கண்களில் நீர் தாரைதாரையாக ஓடுகிறது .இன்னும் எத்தனை எத்தனை நாமங்கள் சொன்னாலும் போதவில்லை இவள் புகழ் பாட ,.தத்ரூப சிலை வடிவில் அம்பாள் தரிசனம் மெய்சிலிர்க்க வைக்கின்றது .கற்பூர ஆர்த்தியின் வெளிச்சத்தில் அம்பாளின் அழகும் அவளின் உயரமும் ,அழகிய கண்களும் ,அவள் உடுத்தியிருக்கும் அழகிய வஸ்திரமும் ,மனதை வருடி ,கண்களில் நீர் சுரக்கவைக்கிறது. .கருணா ஸாகரமே !! அகிலாண்டேஸ்வரியே !! அம்மா காத்தருள்வாய் தேவி !! என்று வணங்கி ஆரத்தியை ஒத்திக்கொண்டு ,குங்கும பிரசாதம் வாங்கி வெளிவந்து அருகிலே இருக்கும் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்துவிட்டேன் .
ஒரு வழக்கம் போல உள்ள முறை தான் என்றாலும் .இந்த அம்பாளின் மூல விக்கிரக தரிசனம் , சூட்சும உடலை ஏதோ செய்திருக்கின்றது .ஏதோ இங்குள்ள சக்தி சூட்சும தேகத்தோடு கலந்திருக்கின்றது .அதனால் ஒரு பூரிப்பு இந்த உடலுள் உள்ளே இருக்கும் ஆன்மாவில் .நீண்ட நெடிய நாட்களுக்கு பிறகு தாயினை பார்த்த மகிழ்ச்சி .சூட்சும தேகம் அருள் அலையால் நிறைந்திருக்கின்றது .ஒரு சில சொல்ல இயலா ரகசியங்கள் உணர்த்தப்படுகின்றது அல்லது ஒவ்வொரு ஆன்மாவும் உணர்ந்துகொண்டிருக்கின்றது என்றே சொல்லவேண்டும் .
தேவையில்லாமல் வில்வ இலைகள் பறிப்பது சரியல்ல .வில்வ இலைகளை மரத்திடமிருந்து பறிப்பதற்கான விதிமுறைகள் உள்ளது .மனமுருகி வேண்டி இதை சிவனிடம் அர்ச்சனை செய்ய பயன்படுத்தப்போகிறேன் என்று வில்வ மரத்திடம் மானசீகமாக சொல்லி அனுமதி வாங்கி பிறகு எடுத்து அர்ச்சனை செய்து விடுங்கள் அல்லது சிவனிடம் சேர்த்துவிடுங்கள் அல்லது யாகத்தில் அக்னியில் சேர்த்துவிடுங்கள் . காரணமின்றி , சும்மா வில்வ இலைகளை பிடுங்குதல் சரியல்ல .
அம்பாள் சன்னதி வெளிவந்து ,கொஞ்ச தூரம் சென்றவுடன் குபேர லிங்கம் வருகின்றது .அதன் அருகிலே மிக வயது முதிர்ந்த அரசமரமும் வேப்பமரமும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து காற்றினை தூய்மை செய்கிறது .அரசமர காற்றில் இருந்து வெளி வரும் செரோடொனின், சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரிசெய்கிறது .குபேர லிங்கத்திற்கு அருகிலே கோசாலை கோமாதாக்கள் உண்ணும் புற்கள் கோவில் உள்ளேயே பயிரிட்டுள்ளார்கள் அவ்வளவு பெரிய கோவில் .பச்சைப்பசேல் என காட்சியளிக்கின்றது .சிறிது நேரம் அமர்ந்து இந்த அரசமர காற்றினை சுவாசித்தாலே நேரம் போவதே தெரியவில்லை .மனதிற்கு ஒரு அருமையான releax தருகிறது இந்த மரத்தின் காற்றும் இங்குள்ள சூழலும் .
அம்பாள் இரகசியங்களுக்கெல்லாம் இரகசியமானவள் என்று லலிதா சகஸ்ர நாமம் சொல்கிறது . இரகசியமானவள் இரகசியம் உணர்த்துவாள் .மாயை விளக்கி உண்மை உணர்த்துவாள் . இரகசியம் என்றாலே வெளிப்பட சொல்லுதல் கூடாது .ஏனெனில் தெரிந்துவிட்டால் அதன் தாத்பர்யம் கெட்டுவிட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது . நல்ல ஆன்மாக்களுக்கு மட்டுமே இதனை காத்தருள இயலும் .வேறு வழி செல்லும் ஆன்மாக்களுக்கு கிடைத்துவிட்டால் , படைத்ததின் நோக்கம் சிதைந்துவிடும்.
இந்த தலத்தில் ஒரு அற்புத வில்வ மரம் இருக்கின்றது என்பது ஒரு இரகசியம் என்று வைத்துக்கொள்வோம் .வில்வ மரம் என்பதே நிறைய அன்பர்களுக்கு தெரியாது அதுவும் பதினெட்டு இதழ் கொண்ட வில்வம் என்பதெல்லாம் சுத்தமாக தெரிந்துகொள்ள நேரம் இருக்காது ஆர்வம் இருக்காது .ஏனெனில் பொருள் தேடும் உலகம் ஈர்க்கிறது அதிகம். கர்மா தடுக்கின்றது .குறையொன்றுமில்லை மெதுவாக வருவார்கள் .
இந்த அற்புத வில்வ இலைகள் அதன் தாத்பர்யம் என்ன ? அதன் சரியான பலன்கள் என்ன ? எதற்காக இங்கே இந்த அகிலாண்டேஸ்வரி கோவிலில் வளர்க்கப்பட்டது ? மூன்று இதழ் கொண்ட வில்வம் எடுத்து சிவனை வழிபட்டால் ஏழேழு ஜென்ம பாவம் போகும் என்கிறார்கள் .இப்படி வில்வம் பறித்தே சிவனை வழிபட தமது கைகளையும் கால்களையும் புலி நெகம் போல மாற்றி வழிபட்டு சிவத்தில் கலந்த ஒரு மாபெரும் முனிவர் வியாக்கிர பாத முனிவர் .அந்த அளவிற்கு வில்வத்தின் தாத்பர்யத்தை உணர்ந்திருக்கின்றார்கள் .
எந்த நோக்கத்திற்காக படைக்கப்பட்டது என்பதெல்லாம் அதி சூட்சும இரகசியம் அந்த இரகசியம் தெரிந்தவள் அம்பாள் .தாமே படைத்த கோடான கோடி ஜீவராசிகளின் ,ஒவ்வொரு உயிரின் படைப்பின் நோக்கம் ,சென்றபிறவி ,இப்பிறவி , இனி வரும் பிறவி என்ற இரகசியம் எல்லாம் இரகசியமாய் வைத்திருப்பவள். இரகசியங்களுக்கெல்லாம் இரகசியமானவள் அன்போடு வழிபட நிறைய இரகசியங்களை மெல்ல மெல்ல உணர்த்துவாள் .
மனதினை சற்றே ஓய்வு படுத்தி இங்கே கொட்டிக்கிடக்கும் அமைதியில் மூழ்கவைக்க மேலும் மேலும் மனம் திடம் கொள்கிறது உறுதிகொள்கிறது வலிமை பெறுகிறது .தாயவளின் ஆட்சி ,வில்வமர காற்றும் அரசமர காற்றும் பரந்த வெளியும் ,நீண்ட நெடிய தூண்களும் ,கலைமிகு சிற்பங்களும் மனதினை எங்கோ கொண்டுசெல்கிறது . .அமைதி அலைகள் கொட்டிக்கிடக்கின்றது இங்கே !! அம்பாளின் அதிர்வு அலைகள் நிரம்பியிருக்கின்றது இங்கே .
ஆத்மார்த்தமாக வழிபடும் ஒவ்வொருவரின் குறைகளையும் நன்கு கவனித்து ஆறுதல் தருகிறாள் .ஒரு பெரிய மன நெருடல் இருக்கின்றது அல்லது ஒரு பெரிய குழப்பம் இருக்கின்றது .மனம் ஒரு மாற்றம் வேண்டுகிறது என்ற தேடல் உள்ளவர்கள் இங்கே வந்து ஜம்புகேசுவரையும் அம்பாளையும் வணங்கி செல்லுங்கள் .விரைவில் ஆறுதல் தருவாள் இந்த அம்பாள் ,நிறைய\ மகான்கள் வந்து வழிபட்டு சென்ற ஸ்தலம் .ஒரு புண்ணிய ஸ்தலம் .அதுவும் தமிழ் நாட்டில் இருக்கின்றது .அதுவும் திருச்சியில் காவிரிக்கரை அருகே இருக்கின்றது .சென்றவர்கள் மீண்டும் செல்லுங்கள் .கொட்டிக்கிடக்கும் அம்பாளின் அருள் ஆசிகளை உணருங்கள் .
வாழ்வு மிக இனிதாகும் விரைவில் .
இந்த நவராத்திரி நாளில் ஒவ்வொரு ராத்திரியும் மிக்க விஷேச மானவை .அம்பாளை வழிபட மிக அற்புதமான நாட்கள் இவை .ஒரு புறம் வெயில்காலமும் குளிர்காலமும் ஒன்றோடு ஒன்று சேரும் காலம் .அப்படிப்பட்ட பருவ நிலை காலம் இந்நேரம் .நோய் நொடிகள் அதிகம் பரவ உருவாக வழிவகுக்கும் காலம்.இதற்கான தீர்வாக இந்த நவராத்திரி வழிபாடு வைத்திருக்கின்றார்கள் முன்னோர்கள் . இதுவரை தேவி வழிபாடு செய்யாதவர்கள் இந்த நாட்களில் தேவியை வழிபட முயற்சிப்பது மிகுந்த பலன்களை தரவல்லது .
வழிபாடு முறை தெரிந்தவர்கள் அதன் படி செய்தல் ,கொலுவைத்து அதற்கான பூஜை முறைகளை செய்தல் அதி உத்தமம் .மற்றவர்கள் அமைதியாக தேவியே கதி என்று அவள் பொற்பாதம் பணிந்து , மனம் உருகி ,உள்ளம் உருகி ,அன்பு அலைகளை இதயம் முழுவதும் நிரப்பி ,கருணை நிறைந்து ,கண்கள் நீர் சொரிந்து தேவியின் நாமங்கள் உச்சரிக்க ,மெல்லிய அலையாய் வருவாள் ஈசனின் நாயகி , அருள் தருவாள்.
முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வழிபடவேண்டும் .அம்பாளின் அருள்வேண்டி உடல் ஆரோக்கியம் வேண்ட வேண்டும் எடுத்த இந்த பிறவி, நோய் நொடியின்றி வாழ்வாங்கு வாழ அம்பிகையை துர்க்கையை தொழவேண்டும் .மேலும் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் இந்த கிருமியை ஒழித்திட வேண்டும் அதிலிருந்து யாவரும் நலம்பெறவேண்டும் என்று அம்பாளிடம் பிரார்த்தனை செய்யவேண்டும்
அடுத்த மூன்று நாட்கள் மஹாலக்ஷ்மியை வழிபடவேண்டும் .பொருள்வேண்டுமே இந்த வாழ்வை சுகமாக வாழ்வதற்கு .பொருள் இன்றி எதுவும் நகராது இங்கே .தர்ம வழியில் பொருள் சேர மனம் உருகி பிரார் த்தனை செய்ய வேண்டும்.மஹாலெட்சுமியே வெகு அருகில் வந்து அருள் தரும் அற்புத காலத்தினை முன்னோர்கள் இத்திருநாளில் கணித்திருக்கிறார்கள் .தேவியே மகாலெட்சுமியாய் வந்து அருள் தருவாள்.தேவையான பொருள் தேவைகளை பூர்த்தி செய்வாள்.
கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை வணங்கவேண்டும் .ஞானம் வேண்டும் ஞானமின்றி வாழ்வே சூன்யமாய்விடும்.ஒரு மனிதனுக்கு பலம் அவன் கற்றறிந்த கல்வியே .இந்த வயசில் போய் இதை கற்றுக்கொள்கிறோமே என்ற எண்ணத்தை யாராவது நம்மிடம் விதைத்தாலோ அல்லது நமது சோம்பேறித்தனத்தால் நம்முள் எழுந்தாலோ அதை தூக்கி எறிந்துவிடவேண்டும் .கற்பதற்கு எந்த வயதும் தடையில்லை.ஒவ்வொரு நாளும் ஒன்றை கற்றுக்கொள்ளல் அதி உத்தமம் .ஒரு முறை கற்ற கல்வி அவனுக்கு ஏழுபிறப்பு வரை பயன்தரும் என்கிறார் வள்ளுவப்பெருமான் .சரஸ்வதி தேவியை வணங்க ஞானம் தருவாள் .கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
ஒவ்வொருவரும் இந்த ஒன்பது நாட்களையும் அற்புத தேவி வழிபாடு நாளாக கொண்டாடுவோம் .தெரிந்த ஸ்லோகங்களை சொல்வோம் .லலிதா சகஸ்ர நாம பாராயணம் ,மஹாலட்சுமி அஷ்டகம்,கனகதாரா ஸ்தோத்ரம் என தொடரும் தெரிந்த எந்த ஸ்லோகங்களையும் ,பாடல்களையும் சொல்லி நல்ல அதிர்வு அலைகளை வீட்டினுள் உருவாக்குவோம் .இப்படி உருவாகும் இந்த அதிர்வு அலைகள் எங்கெங்கும் நிரம்பி நல்ல அலைகள் நாடெங்கும் பரவட்டும் .தேவியின் அதிர்வு அலைகள் தீய அலைகளை துவசம்சமாக்கட்டும் .
அகிலாண்டேஸ்வரி தேவியின் அன்பு அலைகள் இந்த அகத்தியம் இதழ் வாசிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் நலம் பல பெருக்கட்டும் .
வாழ்க வளமுடன் !!
ஓம் அகத்தீஸ்வராய நமஹ !!
ஓம் அகத்தீஸ்வராய நமஹ !!
ஓம் அகத்தீஸ்வராய நமஹ !!
Comments
Post a Comment