Friday, August 1, 2014

ஸ்ரீ ஸ்யாமளா தேவி பாதம் போற்றி...!!! ஈன்றெடுத்து அறிவு புகட்டிய உலகம் இது. இங்கே ஏதாவது கைம்மாறு செய்வதே சாலச்சிறந்தது,இங்கிருந்து தானே அனைத்தும் பெறப்பட்டது.மற்றவர்களின் உதவி ஏதேனும் ஒரு விதத்திலேனும் இல்லையேல் வாழும் வாழ்கை கடினமாகிபோய்விடுமல்லவா?. ஆழ்ந்து அகன்ற பிரபஞ்சத்தை,சற்றே உள்நோக்கி ,அதனுள் மனதை செலுத்த,கற்றதும்,பெற்றதும்,போட்டியும்,பொறாமையும்,சந்தோசமும் துக்கமும்,சுவடற்று,அறிவோ அர்த்தமற்று ஒரு சிறு புள்ளியில் முடிந்து, காணமல் போய்விடுகிறது.எத்தனை சாம்ராஜ்யத்திற்கு அதிபதியாயினும் இங்கே தூசியாகிபோய்விடுகிறதல்லவா?.


மீதம் இருப்பதோ அன்பெனும் ஒரு சிறு ஈர்ப்பு.அந்த அன்பே பிறகு ஆழ்ந்து விரிந்து இரண்டற கலந்து முழுமை எனும் தன்மை பெறுகிறது. குழந்தை கன்று ஒன்று தாயை விட்டு விலகி, கொஞ்ச தூரம் ஓடியாடி, ஆட்டம் போட்டு,தாயை காண இயலாது அறியாது,தவித்து,போராடி,பிறகு ஒருவாறு தம் தாயை அடைந்தவுடன், அந்த குழந்தை கன்றுகுட்டி பெரும் மகிழ்ச்சி இருக்கிறதே, அப்பப்பா...! அது போல இறைவனே தம்மை அறியும் பயணத்தில், இந்த பரிணாம மாற்றத்தில்,தனித்து ஒரு சிறு உயிராக மாற்றம் பெற்று, வெகு காலம் பிரிந்து, பிறகு தம் இருப்பிடமாகிய இறைஅலைகளுடன் மீண்டும் சேரும் போது,ஏற்படும் இரட்டிப்பு பிணைப்பு,தைரிய ஆற்றல், இனமறியாத  ஒரு வித பாசஅலைகள்,செய்வதறியாது மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கும் ,தாய் அலைகள்,சக்தியலைகள்,இறைஅலைகள்.

சிவமோ ஆழ்ந்தஅமைதி,இவனின் ஆற்றல் எங்கே தொடங்கும் எங்கே முடியும் என்று எவரும் அறியார்.ஆனால் சக்தியோ சுழன்று சுழன்று பல்வேறு ஆற்றல்களை உருவாக்கி  அனைத்து இயக்கத்திற்கும் மூலதனமாகி பிரமிக்க வைக்கிறாள் .இவள் இன்றி எதுவும் இயங்காது. இவள் அனுக்கிரமின்றி மானுட வாழ்வில் எந்த ஒரு ஜஸ்வரியமும் கிட்டாது.இவளின் அருட்பார்வை பட்டால் தான் மங்களம் உண்டாகும். இவளின் கடைக்கண் பார்வை ஒரு துளி பெற்றால் தான், அவர்களுக்கு சர்வகலைகளுக்கும் வல்லமை ஆகும் சக்தி பெறுகிறார்கள்.இவளை சூழ்ந்துள்ள சக்தியோ ஒரு ஆகர்ஷனசக்தி,ஒரு இயங்கு சக்தி ,சுழலவைக்கும் சக்தி.சக்தியின் அலைகள் எங்கெங்கும் வியாபித்துக்திகிடக்கின்றது.இந்த ஓட்டு மொத்த சக்தியின் ஒரு முழு வடிவமே தாய், சக்தி ,அம்பாள்,ஈஸ்வரி,ராஜராஜேஸ்வரி,அகிலாண்டேஸ்வரி, ஸ்யாமளா தேவி போன்ற பல பெயர்களுடன் அழைக்கப்படுகிறாள்.தந்தையின் அருளால் ஸ்ரீ ஸ்யாமளா தேவி தாயின் பாதம் பட்ட அருள்  மண்ணின் சுவடுகளை, உணரும் ஒரு வாய்ப்பு கிட்டியது என்றே சொல்வோம். அவளின் அருள் எம்மை மெய்சிலிர்க்க வைத்தது.ஒரு சிறு அதிர்வு மட்டுமே,ஆனால் இதன் ஆற்றாலோ மிக பெரியது.குறிப்பிட்ட ஒரு சில பீஜங்களை  சரியான உச்சரிப்பில் சொல்லும் போது ,அது ஒரு வித அருள் அலைகளை தொட்டு உரசிச்செல்கிறது.இது மிகப்பெரும் ஆற்றலை மனதிற்குள் திணித்துவிட்டு செல்கிறது.விளைவு கம்பீரம் பெரும் மனம்,சர்வ ஆற்றல் பெரும் மனம்,எதையும் கணிக்க தகுதி பெரும் மனம்.மீண்டும் மீண்டும் தாயின் அருளை உணர்ந்து,உணர்ந்து,அலைகளை உள்வாங்கி அப்படியே கரைந்துபோய்,அன்பால் அரவணைக்கபட்டு,செய்வதறியாது,ஆழ்ந்து அமிழ்ந்து,விரிந்து,படர்ந்து,அன்பின் வெளிப்பாடாகிய கண்ணீரால் நனைந்து,நனைந்து,இவளை ,இவளின் சக்தியை எண்ணி எண்ணி தூங்காமல் தூங்கி சுகம் பெரும் ஒரு அற்புத அனுபவம் என்றே சொல்வோம்.


ஒரு சில ஸ்லோகங்கள், அதில் ஒரு சில வரிகள்,ஒரு சில வார்த்தைகள் ,மனதை கவ்வி இழுத்துவிடுகிறது.அப்படி எம்மை கவ்வி இழுத்துக்கொண்டதுதான்  காளிதாசர் அருளிய இந்த ஸ்யாமளாதேவி தண்டகம்.இந்த தண்டகத்தை படிக்கும் போது ஒரு சில பீஜ அதிர்வுகள்,எங்கேனும் ஒரு விதத்திலாவது,மனதினை மிக நுண்ணியதாக்கி,அமைதியை திணித்து,அம்பாளின் ,சக்தியின், ஜீவ அலைகளை உணரவைக்கும் சக்திவாய்ந்தவை.அந்த அதிர்வு நிலை,உணர்வு நிலை கிடைத்தவுடன்,அப்படியே அதில் எவ்வளவு நேரம்வேண்டுமானாலும்  இருக்கலாம்.என்ன ஒரு அற்புதமான அலை இந்த ஸ்லோகத்தினுள் இருக்கிறது.ஸ்ரீ ஸ்யாமளா தேவி தண்டகம் சர்வ வல்லமை படைத்தது .அருள் அலைகளை ஈர்த்துப்பிடித்து இருக்கும் இடமெங்கும் பரப்ப கூடியது.நம்முள்ளே ,நம் சூட்சும உடலில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. Stepping Stone என்று சொல்வார்களே அது போல,வாழ்வில் ஒரு படி உயர  இந்த அலைகள் மிக மிக தேவை.வாழ்வு நல்ல வளம் பெற இந்த அருள் அலைகள் தேவை.துஷ்ட தேவதைகளை விரட்டி அடிக்கும் சக்தியுடையது.வாழ்வில் கல்வி,செல்வம், இவைகள் அமைய இந்த தாயின் அலைகள் மிகவும் இன்றியமையாதது.இவள் இருக்கும் இடமெங்கும் அமைதி கரைபுரண்டோடுகிறது.இவள் கருணையோ கடல் போன்றது. 

காருண்யா வாராம் நிதிம்....இவளின் கருணை கடல் போல் கொட்டிக்கிடக்கிறது.எவர் வரினும் அள்ள அள்ள குறையாத கருணையின் கடல்.வாழ்வில் பொருள் மற்றும் பெரியது அல்ல,நல்ல கல்வியறிவு வேண்டும்,நல்ல சொல்வன்மை வேண்டும்,எதையும் எதிர்கொள்ள நல்ல தைரியம் வேண்டும்,கருணை நிறைந்த உள்ளம் வேண்டும்,வாழ்வில் நம் அன்றாட  சாதாரண தேவைகள் சரிவர இன்னலின்றி பூர்த்திசெய்யவேண்டும், இவளின் ஒரு துளி கருணை அலைகளை  அன்பால் உருகி ,மெல்ல மெல்ல இதன் அலைநீளம் பிடித்து, உட்சென்று ,ஆழ்ந்து அமைதியின் விளிம்பில்,சென்று ,இங்கு கொட்டிக்கிடக்கும் தெய்வீகத்தை உணர வேண்டும்.


நவயெளவனா ஸுபகரீ.... எப்படி ஒரு பெண் என்றுமே இளமையுடன் அழகுடன் இருக்க முடியும்.? மானுட வாழ்வில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தானே அழகுடன் இருக்க முடியும்.பிறகு முதுமை ஆட்கொண்டுவிடுமே? ஆனால் இவளோ என்றுமே அழகுடன் இருக்கிறாள்.அதுவும் ஒரு வசீகரிக்கும் அழகுடன்.இவள் அழகும் நிறைந்தவள் ! தாய்மை சக்தியும் நிறைந்தவள்.அன்பும் நிறைந்தவள்! கண்களில் கருணையும் நிறைந்தவள்! இந்த ஈனப்பிறவியில் இவளின் கருணை வேண்டும்.இவள் கருணை இல்லையேல் அது ஒரு வறண்ட நிலத்திற்கு ஒப்பாகும்.இவள் கருணை இன்றி இந்த உலகத்தில் சுபிக்க்ஷம் நிலவாது.இவளை பற்றி,இவள் பெருமை பற்றி,இவள் தரும் அன்பு பற்றி,இவள் தரும் ஆற்றல் பற்றி,இவள் தரும் ஞானம் பற்றி ,சிந்திக்க,சிந்திக்க,என்னே மகிழ்ச்சி இவளுக்கு.இவள் அருளும் பாக்கியங்களை இவளிடமே சொல்லி,இவள் அருள் உணர,பேரானந்தம் பெருக்கெடுக்கிறது கருணை துளியை அள்ளி வீசுகிறாள்.

 
சதுரகிரியில் யாம் ஒரு முறை சந்தித்த அந்த இளம் சாது கூறிய வார்த்தைகள் இன்றும் எம் நினைவுக்கு வருகிறது. ஒரு முறை சதுரகிரி பயணத்தில் ஒரே வறட்சி .மரங்களும் செடிகளும் கொடிகளும் நீரின்றி வாடி ,எப்பொழுது நீர் வரும் என்று மழைக்காக ஏங்கியது.எங்கெங்கும் ஒரு வித வறட்சி நிலவியது.அன்று இரவில் அந்த சாது எங்களிடம் பேசியபொழுது.

சக்தியிடம் வேண்டி இங்கே மழை பெய்ய வேண்டுகோள் வைத்துள்ளோம். அவளும் இறங்கி வந்து ,தம் கருணையால், அருளியது தான் இங்குவரப்போகும் இந்த சிற்றருவி..." என்று சுட்டிக்காட்ட, சிறிது நேரத்தில் மழையும் சிறு துளியாய் ஆரம்பித்து ,சடசட வென கொட்டத்தொடங்கியது.எல்லாம் ஒரே நேர்கோட்டில்,இளம் சாதுவின் வாக்கு,சக்தியின் கருணை,மழையின் ஆரம்பம் எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது போலவே இருந்தது. சற்று நேரத்தில் ஓடை பெருக்கெடுத்து  துள்ளி ஓட ஆரம்பித்தது ஒரே ஆச்சரியமாக இருந்தது.பொதுவாக மலைபிரதேசங்களில் அடிக்கடி கருமேகம் தென்பட்டு ,அங்குள்ள குளிர்ச்சிக்கு தக்க ஆங்காங்கு சட்டென மழைபெய்யும்.ஆனால் ஏன் பலநாட்கள் இந்த வறட்சி நிலவியது....? மகான்களின் சொல்வதை அப்படியே உள்வாங்குவதே சிறந்தது.


 
என்ன ஒரு அழகான பார்வை இவள் பார்வை.ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களை சிந்தனை வாயிலாக அருவி போல் கொட்டவைக்கிறது.அ முதல் தொடங்கி ஒவ்வொரு எழுத்தின் வாயிலாக இவள் பெருமையை சொல்லவைக்கும் சொல்வன்மை நாவில், வாக்கில் துள்ளி எழுகிறது.இவள் ஒரு சங்கீதப்பிரியை .எங்கு சங்கீதம் உள்ளதோ அங்கு இவள் இருக்கிறாள்.எங்கு உள்ளம் வருடும் பாடல் ஒலிக்கிறதோ,அங்கே இவள்  இருக்கிறாள்.கைகளில் மாணிக்க வீணையை ஏந்தியவள்.வீணை என்பதே ஒரு அற்புதமான கருவி.வீணையின் நாதம் மனதோடு மிக நெருங்கிய தொடர்புடையது.மனதின் அலைகளோடு ஒட்டி உறவாடி நல்ல அதிர்வுள்ள அலைகளை எற்படுத்தக்கூடியது.

எப்பொழுதேனும் உள்ளம் சோர்வுற்றால் வீணை ஒலியை மட்டும் கேட்டுப்பாருங்கள்,சோர்வுஅலைகளை விரட்டி மெல்ல மெல்ல நல்ல அலைகளை உள்ளமெங்கும் பரப்பும் மகத்துவம் வாய்ந்தது, இவள் வைத்திருக்கும் இந்த வீணை. வீணைக்கு அப்படிப்பட்ட ஒரு சக்தியுள்ளது. மிக இதமாக இதயத்தை வருடி நல்ல அன்பின் ஜீவ அலைகளை தொடும் சக்தியுள்ளது.எந்த ஒரு பாடலில் வரும் வீணையின் நாதத்தை மட்டும் சற்றே தனியாக பிரித்து கவனித்து பாருங்கள், ஏதோ ஒரு ஈர்ப்பு அதில் உள்ளது என்பது  புலப்படும்.அந்த ஈர்ப்பு மனதோடு உறவாடும் தன்மை வாய்ந்தது.

காலம் காலமாக ஆத்மாவுடன் பயணம் செய்வது பாவமும் புண்ணியமுமே.இன்றைய தலைமுறையில் எந்த ஒரு பிரச்சனைக்கும் மூல காரணம் அதன் கர்ம வினைகள் தானே.இதன் சாரம்சமே வாழ்வின் அமைதிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.வாழ்வு அமைதியின்றி நிலை தடுமாற புண்ணியதத்தின் பற்றாக்குறை தான் காரணம்.கர்மவினை பதிவுகள் நமது கருமையத்தில் பதிந்து ,நாள் தோறும் நொடி தோறும் ,அலையாக கசிந்து ,மென்மையான மனதினை,சூழ்ந்துகொண்டு நம்மை  எதையும் முழுமையாக செய்யவிடுவதில்லை.இதை எல்லாம் விரட்டி அடிக்க ,பல வழிகள் ,அதில் ஒன்று தான் இந்த ஸ்லோகம்.இதை யார்வேண்டுமானாலும் தூயமனதுடன் சொல்லலாம்.நீர் போல,காற்று போல அனைவருக்கும் பொது இது.யாரும் இதனை copyright வாங்கமுடியாது.இந்த ஸ்லோகங்கள் இறை அலைகளை அப்படியே ஏதேனும் ஒரு விதத்தில் தாங்கிவரும் ஒரு வார்த்தை கோர்வைகள்.மனதை மிக நுண்ணிய அலைநீளத்தில் வைத்தவர்கள்,என்றும் இறைஅலைகளிலேயே திளைத்தவர்கள்,சக்தியின் அருள்ஆற்றலை உணர்ந்தவர்கள்,மனதில் அன்பு எனும் சூட்சும ஆற்றலை வெகுகாலம் நிலைநிறுத்தப்பழகியவர்கள், இவர்கள் இறைஅலைகளை மிக அழகாக உள்வாங்கி ,அப்படியே உணர்ந்து, அதை யாவரும்  உணரும் வண்ணம் மிக சரியான அதிர்வுகள் தருமாறு,மிக சரியான பீஜங்களால் கோர்த்து, வார்த்தைகளை வைத்து மிக அழகாக compose செய்து கொடுத்திருக்கிறார்கள்.மிகவும் போற்றப்படவேண்டியவர்கள்.மிக உயர்ந்த உள்ளம் கொண்ட ஆத்மாக்கள் .!!

எப்படி அழகாக இந்த ஸ்லோகத்தினுள்  அருள் அலையில் பொதிந்துகிடக்கிறது. உணர்ந்து பார்த்தால் தான் தெரியும் இதன் மகத்துவம்.இவை மனதினுள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது.இந்த ஸ்லோகம் எம்மை  ஈர்க்க, அதனை அவ்வாறு உள்வாங்கி உள்ளம் உருகி பாட ஆரம்பித்துவிட்டோம்.ஆனால் ஷியாமளா தேவி என்பவள் எப்படி இருப்பாள் ,அவள் உருவம் எப்படி ? முகம் எப்படி இருக்கும் என்பதெல்லாம் தெரியாது ஆரம்பத்தில் .ஒரு சில பீஜங்கள் ,வரிகள் எம்மை ஈர்க்க ,அதனால் உந்தப்பட்டு ஸ்லோகத்தினுள் உள்நுழைந்தோம். இதில் உள்ள அதிர்வுகள் ,பல முறை எம்மை அன்பில் ஆழ்த்தியது.

 
ஒருமுறை காஞ்சியில் உள்ள காமாட்சி அம்பாளை தரிக்க சென்றோம்.தரிசனம் முடித்து அந்த கோவிலில் உள்ள ஒரு இடத்தில் முதல் முறையாக ஸ்யாமளா தேவியின் மிகப்பெரிய புகைப்படம் பார்த்தேன்.ஸ்லோகத்தின் வரிகள் மிக அழகாக இந்த தாயவளின் உருவத்தோடு ஒத்துபோவது தெரிந்தது. அங்கேயே அமர்ந்து கண்களை மூடி ஸ்யாமளா தேவி தண்டகத்தை உள்ளம் உருகி பாடினேன்.எவ்வளவு நேரம் சென்றது என தெரியவில்லை.ஸ்லோகத்தின் இறுதியில் அமைதி எம்மை சூழ்ந்தது.அப்படியே கண்மூடி ஆழ்ந்தேன்.....ஆழ்ந்தேன்.....ஆழ்ந்துவிட்டேன்.

 
பூத உடம்பின், ஆற்றல் வெளிச்செல்லும் கதவுகள் மூடப்பட்டு,சூட்சும உடம்பின் கதவுகள் திறக்கப்படுகின்றன.வெளிச்செல்லும் ஆற்றல் உள்ளே சேமிக்கப்படுவதால்,இருக்கும் சூட்சும உடல் திடம் பெறுகிறது.ஹிருதயத்தில்,நெஞ்சத்தினுள்,மிக மிக மெல்லிய நுண்ணிய சின்னஞ்சிரிய,சிறு சிறு அறைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தெய்வீக அலைகளால் நிரம்புகிறது.இவை நிரம்ப,நிரம்ப ஒவ்வொரு செல்லும் புத்துணர்வு பெறுகிறது. கருணை ஊற்றெடுக்கிறது.கருணையோடு தொடர்புடைய கண்கள் ,தம் நிலையினை அதற்கேற்றார் போல மாற்றி ,தம் கண்கள் வழியே ,கருணை அலைகளை உணர்ந்தும் ,எதையும் கருணையோடு பார்க்கும் ஒரு ஞானத்தை உருவாக்குகிறது.இப்பொழுது கருணையோடு தாயவள் திருமுகம் மீண்டும் நோக்க, மேலும் பல சூட்சுமங்களை அள்ளி வாரி வழங்குகிறது.

உருத்திரண்ட சக்தியொன்று உன்னத பெண் வடிவில்.அழகிய முகம், அசையாத இமையும், அழகாண கண்களும்,நீல நிற மேனியும்,நிமிர்ந்த பார்வையும்,பார்ப்பவரை  ஆழ்ந்து உட்நோக்கி ,தத்தம் கர்ம வினையையும் கவனித்து,சூட்சுமத்தையும் தட்டிஎழுப்பி,அருள் அலைகளை பரப்பும் அற்புதம். எவரும் இப்பார்வைக்கு ஈடுகொடுக்க முடியாது.வசீகரிக்கும் முகம்.ஒரு சிறு பார்வை சுரீரென்று உறைந்து கிடக்கும் தெய்வீக தன்மையை தட்டி எழுப்பி சிந்திக்க வைக்கக்கூடியது.சர்வ வல்லமை படைத்தது.இவளின் திருமுகம் தெளிவாக காணும் அருகதை எமக்கில்லை,இவள் பொற்பாதம் படும் மண்ணின் திருவடி அது ஒன்றே போதும் இந்த ஈனப்பிறவிக்கு ,கிட்டும் மோட்சம் இவள் கருணையால்.!

கண்கள் அது ஏனோ கண்ணீர் மழையில் நனைந்தது.சாந்தமும் அமைதியும் உள்ளத்தில் குடிகொண்டது வெகுநேரம்.

நடக்கும் செயல்களெலாம், சரியாகவே இருந்தது, அதனை இயக்குபவன் மிகத்தெளிவாக செய்துகொண்டிருப்பதும் தெரியவந்தது.
கண்விழித்து எழுந்தேன் ,கண்களில் தாரை தாரையாக  நீர் .ஒருவாறு எழுந்து ,மெல்ல மெல்ல நடந்து வெளிவந்தேன். மனமோ மிக மென்மையாகிவிட்டது. சிந்தனை என்பது துளியும்இல்லை.இனிமேல் தான் இந்த வெளிஉலகத்தை பற்றியே எண்ணவேண்டும்.அங்கே ஒரு பெரியவர் நின்றார். ஏதோ எமக்காக காத்திருப்பதுபோல இருந்தது.வயதான தோற்றம்.கண்களில் கண்ணாடி அணிந்திருந்தார்.அன்பின் உருவமாக இருந்தார்.பார்த்த உடனேயே கைகூப்பி கும்பிடவேண்டும் என்றே தோணியது.அந்த அளவுக்கு அன்பின் முழுவடிவமாகவே திகழ்ந்தார்.எம்மை பார்த்து ஒரு சிறு புன்னகை.தமது கைகளில் ஒரு photo .புன்முறுவலோடு எம்மிடம் கொடுத்தார்.எல்லாம் அனிச்சை செயல்போல யாமும் வாங்கிக்கொண்டோம்.சிறிதுநேரம் கழித்து ,என்ன போட்டோ என பார்க்க ,யாம் சற்றுமுன் உள்ளம் உருகி பாடிய அதே ஸ்யாமளாதேவியின் போட்டோ.மிக அழகாக இருந்தது.அப்படியே கண்களில் ஓத்திக்கொண்டேம்.தாயவள் கருணையினை நினைத்து மெய்மறந்தோம்.அந்த பெரியவருக்கு நன்றி சொல்ல திரும்ப அவர் எங்கோ சென்றுவிட்டார்.

 
இறை அலைகளை உள்ளத்தில் உட்செலுத்த பழகிக்கொள்ளவேண்டும்.இது போல பல தூயஅலைகளை உணர்ந்து நாள் தோறும் உள்ளம் பொலிவு பெறவேண்டும், தூய்மை பெறவேண்டும்.உள்ளம் என நினைத்தால் அங்கே மிக சாத்வீக அலைகள் ,அன்பெனும் அலைகள் ,கருணை அலைகள் இவை என்றும் உலாவ வழிவகை செய்தல் வேண்டும்.இப்படி தெய்வீக அலைகளை உள்வாங்க ,காலமும் கனிந்துவந்தால் எப்படி இருக்கும் என எண்ணிப்பாருங்கள்.அப்படிப்பட்ட ஒரு சரியான காலமே இந்த ஆடி மாதம்.இறைஅலைகளை, சக்தி அலைகளை நம்முள் உணரும் மிக அருமையான தருணம் இது.மிக எளிதாக உணரும் தருணம் இந்த காலம்.எவ்வாறு உணர்வது ? இருக்கும் இடத்தில் ஒரு தனி பூஜை அறையில் அல்லது இருக்கும் இடத்தினை தூய்மையாக வைத்து ,(முடிந்தால் பசும் சாணம் இட்டு ,கோலமிட்டு ,கோமயம் தெளித்து )மாலை நேரத்தில்,ஒரு சிறு அகல் விளக்கில் நெய்தீபம் ஏற்றி ,தனிமையில் அமரவேண்டும் .உள்ளம் உருகி அம்பாள் ஸ்லோகங்களை அல்லது பாடல்களை பாடவேண்டும்.நமது வீடு,நமது உள்ளம் ,நமது மெட்டு ,எனவே யாரைபற்றியும் சிறிதும் கூச்சமின்றி,மனதால் ,உள்ளத்தாள் உருகி ,ஸ்யாமளாதேவியை பற்றி,அம்பாளை,சக்தியை நெஞ்சினில் நினைத்து, பாடுவதோ அல்லது அவள் பெருமையை பற்றி ,அவள் தன்மையை பற்றியோ அவளிடமே பேசி உள்ளம் உருகவேண்டும்.பிறகு ஏற்படும் ஆன்மீக அதிர்வுகளை,மாற்றங்களை உணரவேண்டும்.,சும்மா இருந்த உள்ளத்தில் தற்பொழுது சேர்க்கப்பட்டுள்ள ஒரு வகை அலையினை பிரித்துணரவேண்டும்.இவை தரும் பேரானந்தம் ,இவை மட்டுமே வரும் இப்பிறவி போனபின்னும்.அழிவில்லாத செல்வம் இவை.காலம் காலமாக நமது சந்ததிக்கும் தொடரும் இவை.மிக அழகாக சியாமளா தேவி தண்டகத்தை பாடியவர்கள்,அதற்கு விளக்கம் அளித்த சான்றோர்கள் ,இவர்கள் செய்த பங்களிப்பு எல்லாம் வலைத்தளங்களில் நிறைய கொட்டிகிடக்கிறது. இவைகளை படித்து பயன்பெருக..!! தாயவள் அருள் பெருக..!! 


 (click the link below to download the Shiyamala Thandagam.PDF )
ஸ்யாமளா தண்டகம்
அகத்திய உள்ளங்களே...! கடந்த முறை ஒரு ஜீவசமாதியின் இருப்பிடம் பற்றி சொல்லியிருந்தோம் அல்லவா ? இந்த சிற்றறிவிற்கு எட்டியபடி,எம் உள்ளத்தில் தென்பட்ட அந்த மகான் ஒரு ஸ்ரீ ராம பக்தர் ,மிக மெல்லிய தேகம் கொண்டவர்,அனைத்தும் வெண்மை அவரிடம்,வெண்மைநிற தாடி,வெண்மையான நீண்ட முடி,மிக மெல்லிய வயிறு,(திட உணவினை ஒரு போதும் உண்ணாமல்,ஒரு சில இலைகளை ,மூலிகை சாற்றினை மிக நீண்ட காலத்திற்கு அருந்துவதால்  மட்டுமே இது போல வயிறு அமையும் என எண்ணத்தோண்றுகிறது) எப்பொழுதும் ஸ்ரீ ராம நாமங்களை உச்சரித்த வண்ணம் உள்ளார்கள்.ஸ்ரீ ராமரின் பெருமை பற்றி பேசிய வண்ணம் உள்ளார்கள்.மேல் சொன்ன தோற்றத்துடன் சற்றே ஏறக்குறைய , ஒரு பூதஉடல் மனிதரையும் எதேச்சையாக அங்கே சந்திக்க நேர்ந்தது.அவரோ மிக சரியாக எம் எண்ணத்துள் ஒடிக்கொண்டிருந்த அதே ஸ்லோகத்தினை ,அவர் தாமாக சொல்லி அதற்கு இதுதான் விளக்கம் எனவும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.சற்று நேரத்தில் சென்றுவிட்டார் அவர்.மகானின் அருள் ஆசிகள்  இனி வரும் பதிவுகளில் தொடரும் என நம்புகிறோம்.ஏற்கனவே சொன்னது போலவே அமாவாசை அன்று வெறும் வயிற்றுடன்,முடிந்தவரை வெண்மை உடை அணிந்து,சென்னையில் உள்ள நங்கநல்லூரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகில் உள்ள,வரசித்திவிநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகர் ஆசி பெற்று,பின்பு அதன் மிக அருகிலே உள்ள ஸ்ரீ லக்ஷ்மி ஹயவதன பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாள் தரிசனம் செய்யுங்கள் .பிறகு அங்குள்ள இடத்தில் ஒரு ஓரமாக அமர்ந்து இங்கு அமர்ந்திருக்கும் மகானின் ஆசிர்வாதம் வேண்டும் என பிரார்த்தனை செய்யுங்கள்.மாற்றங்களை உணருங்கள்...!!


இது போல சென்னையில் இன்னும் சில கோவில்கள் உள்ளது.மிகச்சிறிய நுழைவுவாயில் உள்ள ஒரு கோவில் ஒன்று இருக்கிறது.இங்கேயும் இப்படி உள்ளதா என தெரியாதவர்கள் அதிகம் பேர்.அங்கேயும் ஒரு மகான் இருக்கிறார்கள். தெய்வீக அலை உலாவுவதையும் உணர்ந்தோம்.அதை பின் வரும் கட்டுரையில் உரைப்போம்.இத்துடன் இந்த கட்டுரையை நிறைவு செய்து மீண்டும் அடுத்து ஒரு நிகழ்வில் விரைவில் சந்திக்கின்றோம்.

 
ஓம் அகத்தீஸ்வராய நமக ...!!!