ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே..!! (பாகம் இரண்டு )

.




காலம்  சுழல்கிறது .ஒன்று  மற்றொன்றாய்  மாறுகிறது .மாற்றமே  புத்துயிர்  தருகிறது .ஒன்றுமில்லா  ஒன்றிலிருந்து  ஐம் பெரும்  பூதங்கள்  பிறக்கிறது.மழை  பெய்கிறது .சூழல்  மாறுகிறது  .உயிர்  பிறக்கிறது. புல்லாகிறது  பூடாகிறது  புழுவாகிறது   மரமாகிறது  பல் மிருகமாகிறது  பறவையாகிறது   பாம்பாகிறது  கல்லாகிறது மனிதராகிறது  பேயாகிறது  கணங்களாய் வல் அசுரர் ஆகிறது , முனிவராகிறது  தேவராகிறது  இப்படி  ஒவ்வொன்றாய்  எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்,எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்றுவீடு உற்றேன் என்கிறார்  மாணிக்கவாசப்பெருமான் .கால சுழற்சிக்கேற்ப  இறை தம்  உணர்வுகள்  அடங்கிய  கருத்துக்கள்  பாடல்களாய்   வரிகளாய்  ,மெல்லிய  இசையாய்  ,சொல்வதறியா  உணர்வுகளாய்   வந்துகொண்டேயிருக்கின்றது .எவர்  வந்தாலும்  சென்றாலும்  மறைந்தாலும்  இருந்தாலும்  இதுவே எமது  இயல்பு  எம் பாச அரவணைப்பு  எம்முள்  இருந்த  வற்றா ஊற்று யாம் கொடுத்துக்கொண்டேயிருப்போம்  என  காலம்  காலமாய்      இறை  அறிமுகப்படுத்திய  மகான்கள்,  ஞானிகள்,  மகரிஷிகள்  ஆயிரம்  ஆயிரம்  .அவ்வப்போது  எம்மையும்  எம்மைப்போன்ற  உள்ளங்களையும் ஒரு   சிறு தட்டுதட்டி   விழித்தெழு  மானுடா ,இறையே  முழுமை வேறு எதுவுமே இங்கே இல்லை   என்பதை  பல முறை  ஞாபகம்  செய்திருக்கின்றது .யாவும்  மாயையே.விழித்தெழு விழித்தெழு மானுடா என்று சில்வண்டு ரீங்காரம் இடுவது போல கூவி செல்கிறது.அதில்  ஒன்று  தான்  தேன் எனும்  திருவாசகம் , மாணிக்கவாசக பெருமானாரின் இறையமுதம். 


ஆழ்ந்து  அகன்ற  நுண்ணியனே... !!.  அப்பப்பா  என்ன  ஒரு வரி.ஒரே  ஒரு வரி  தான் ,  மூன்றே  மூன்று  வார்த்தை தான்  .மனதை  உள்ளத்தை  உறைய வைத்துவிடுகிறது .எத்தனை  ஞானம்  இருந்தால்  இவ்வளவு  பெரிய  கருத்துக்கள்  கொண்ட , மிகச்சிறந்த  வார்த்தைகள்  பிறந்திருக்கும்  .எவ்வளவு  மனவலிமை  இருந்தால்  இத்தகைய  அழகு  சொற்கள்  பிறந்திருக்கும்  .இதை எழுதிய  மாணிக்க வாசகருக்கு  எத்தனை  ஞானம்  எவ்வளவு  இறை பக்தி  எவ்வளவு  பெருங்கருணை  குடிகொண்டிருக்கின்றது என்பதை  நினைக்கும்  போதே  உடம்பு  சிலிர்க்கிறது   .இறையோடு  இறையாக  அவரே தம்மை  முற்றிலும்  மறந்து  இறைவனாக  எவ்வளவு  தூரம்  பயணம்  செய்திருக்கின்றார்கள்  பெருமகனார் .வா  மானுடா   வா ,இங்கே வந்து என்னோடு பயணம் செய்  ,யாம்  சென்ற  இறைவெளி  பயணத்தினை   எம்மோடு  சேர்ந்து  நீயும் கொஞ்சம் நேரம்   பயணம்  செய் , என   சொல்லாமல்  சொல்லி  உள்ளார்ந்து  ஈர்த்து    நம் யாவரையும்  இறையோடு  இருக்க வைக்கின்றார்கள்  பெருமகனார் .ஒவ்வொரு முறை  உள்செல்லும்  போதும் வாரி   அணைக்கின்றது  இவர் தந்த இறைவரிகள்  .அவரை மட்டுமா இல்லையில்லை    திருவாசகம்  படிக்கும்  அத்தனை  உள்ளங்களையும் .இந்த ஒரு வரியை  மட்டுமே  படித்து  படித்து  எம்முள்  கற்பனை செய்து ,செய்து  இது எப்படி இருக்கும் ,இவ்வாறு  இருக்குமா  ... என ஆழ்ந்து ,ஆழ்ந்து, அகன்று  கொண்டே   யாமும்  முடிந்த வரை  சென்றோம் ,இவை யாவும்  இறையே    எனபதை  நினைந்து  நினைந்து  எம்முள்  கருணை  நிறைந்து  விழிகள்  ததும்பி ,எம்மை  இழந்தோம்  மறந்தோம்  பல முறை. சோ வென கிடக்கின்றது  பெருவெளி. நின்றோர்  நடந்தோர்  அமர்ந்தோர்  ஆழ்ந்தோர்  என  எத்தனையோ    உள்ளங்கள்  கேட்பாரற்று  விழித்தெழும்  நிலையறியாது  மூழ்கிக்கிடக்கின்றார்கள் இறையில்   காலம்  காலமாய் .பசியா  தூக்கமா இரவா  பகலா என  எதுவும்  ஒரு பொருட்டல்ல  இங்கே கோடிக்கணக்கில் இருக்கும்  தூசியில்  ஒருவனாய்  யாமும்  மூழ்கிறோம் இறையில் .


நின்றும்  இருந்தும் கிடந்தும் நடந்தும்  ஆழ்ந்தும்  அமர்ந்தும்  உறைந்தும் என  எங்கெங்கு  பார்த்தாலும்  பர  வெளி  விரிந்து கொண்டுசெல்கிறது .எங்கிருந்து  ஆரம்பித்து  எங்கே முடிகிறது என்பதெல்லம்  கற்பனைக்கெட்டா  பேரறிவு  பெற்றோனின்  கட்டுக்கடங்கா  திறனை  உணர்த்துகிறது .சும்மா  இருத்தல்  இங்கே சுகமாகிறது ,  சூட்சும  தேகம் இங்கே  மிதக்கின்றது .இதை எவ்வாறு  விவரிப்பது  .அறிவாய்  ஆழ்வாய்  அமர்வாய்  பெருங்கருணையோடு .எந்த  மன இயக்கமும்மின்றி  ..நிசப்தமாக  கொட்டிக்கிடக்கும்  பேரமைதியில் சும்மா  செய்வதறியாது  எங்கேயோ எதையோ  ஈர்த்து வெறுமனே இருக்கின்றது .ஒரு ஆழ்ந்த  ஏக்கம்  ,தந்தையும்  தாயுமாகிய  ஈர்ப்பு  நிறைந்த  இறையோனின்  பெரும்கருணை  .இவன் ஒருவனை  தவிர  வேறு யாராலும்  இவ்வளவு  பாசம்  காட்ட இயலாது ஆனந்தமா  அமைதியா  ஆழ்ந்த  நிலையா  எதுவும் கூற இயலவில்லை ..ஆனால்  இப்படியே  இருத்தல்  சுகம்   ..மனம்  உயிர்  உடல் என  எதுவும்  அற்று  வெட்டவெளியில்  ஒன்றோடு ஒன்று  ஊடுருவி  எந்த  பிடிப்பும்  இல்லாமல்  கிடக்கின்றது .எங்கெங்கும்  வியாபிக்கும்  இறை  இங்கே  ஊடுறுவி  நிறைந்து  அதுவே  எல்லாமாகவும் இருக்கும்  தன்மையை  உணர்த்துகிறது .

 எதுவும்  நிரப்பப்படாத ஒரு மண்  பானை  ,வெறுமையாக  இருக்கின்றது .இந்த மண் பானை  அறிந்தாலும்  அறியாவிட்டாலும்  அதன் உள்ளேயும்  வெளியேயும்  வெறும் வெளி இருக்கின்றது .இந்த பானையும்  அதன்  பிடிமண்ணும்  கொஞ்சம் கொஞ்சமாக  நாளடைவில்  சிதைந்து  உடைந்து  போக  பிறகு  முற்றிலும்  வெறும்   வெளியேயிருக்கின்றது.இந்த மண்  பானை  போல  ஸ்தூல  உடல் , நமக்கு  வைக்கப்பட்ட  பெயர்  ,நாம்  பெற்றிருக்கும்  இந்த கட்டமைப்பு , இந்த உயிர்  ,கற்ற அறிவு ,உழைத்த  உழைப்பு  ,ஈட்டிய  செல்வம்  பொருட்கள்  என நீண்டு  இந்த கர்வத்தினை  வளர்த்து இந்த பிடிமண் , பானையை  பானையாகவே  இருக்கவைக்கின்றது .இந்த பானையாகவே  இருக்க பழக்கப்பட்டு  ,உள்ளும் புறமும்  ஊடுருவியும்  இருக்கும்  பரவெளியை  மறந்து  தான்  எனும்  கர்வம்  கொள்கிறது ,தான்  உடம்பு  எனும்  கர்வம் இருக்கின்றது  தான்  பெற்ற கல்வி  எனும்  கர்வம்  இருக்கின்றது தான்  ஈட்டிய செல்வம்  எனும்  கர்வம் இருக்கின்றது .எல்லாம்  தான்  தான்  எனும்  கர்வம்  அனைத்திலும்  இருக்கின்றது .அதனால்  இது  தன்னுள்ளே  இருக்கும்  பெருவெளியை மறந்துவிடுகிறது .இந்த பெருவெளியை  மறப்பதால்  சிக்கல்  சோகம்  கவலை  துக்கம் பாசம்  இன்பம்  துன்பம்  என  பின்னி பிணைந்து  வாழ்நாள்  முழுமையும்  கர்வத்திலே  கிடந்து   மீண்டும்  மீண்டும்  பிறப்பெடுத்து  பிறவி  சுழல்  நீள்கிறது .

"அவனை  அறிந்தால்  நீ பெரியோன்....  

அவனை  மறந்தால்  நீ சிறியோன்  ..."

                                                     --வேதாத்திரி  மகரிஷி

 அவன்  தான்  நான்,  இறைவனே  யாம்  ..என்பதை  நினைக்கும்  போது   மிகப்பெரிய இறையோடு  தொடர்பு  பெறுகிறது .எல்லையற்ற  ஆனந்தம்  கொள்கிறது .ஏதோ  ஒன்று நம்மை  ஈர்த்து அரவனைக்கின்றது எதை  பற்றியும்  கவலை  தேவையில்லை  .எல்லாம்  இறை  பார்த்துக்கொள்ளும்  ஒரு தந்தை  போல ஒரு அன்னை  போல  ஒரு மிகப்பெரிய  பேராற்றல்  தன்னை  பாதுகாத்துக்கொள்ளும்  ,யாம்  எங்கிருந்தாலும் சரி ,  எந்த தேசமோ  எந்த மொழியோ  என  எதுவாயினும்  சரி , இறை  ஏதேனும்  ஒரு வடிவில்  தம்மை  காப்பாற்றும்  பாதுக்காக்கும்  தேவையை  வாரிவழங்கும் எனும்  நம்பிக்கை  பிறக்கிறது  அதன் தன்மை  பெறுகிறது .அவனை  அறிவதாலே  அவன் தன்மை  கொஞ்சம்  கொஞ்சமாக  பெரும்  பாக்யம்  பெறுகிறது .



பெருவெளியானே  பெரும் கருணையானே அன்பு குடி கொண்ட உள்ளம் கொண்டோனே  !!பெருவெளியும்  கருவெளியும்  சிறுவெளியும்  கேட்பாரற்று  எங்கெங்கோ  விரிந்து விரிந்து   கிடக்கிறது .ஆழ்ந்து  ஆழ்ந்து  அகன்று அகன்று  நீல வெளியும்  விரிந்துகொண்டே  செல்கிறது .ஆழ்ந்தவன்  அகன்றவன்  மேலும் மிக மிகநுண்ணியவன்  ஒருவனே  இப்படி   அகண்டாகார  பெருவெளியுமாய்  அணுவிலும்  நுணுகி  நுணுகி  நுண்ணியவனாய்  இருக்கின்றான் என்றால்  எல்லாம்  அவனே  தானே  எதிலும்  அவனே  .கேட்பாரற்று  நிசப்தமாக கிடக்கிறது .வெளி, பெரு வெளி,  வெட்ட வெளி   எல்லாம் நிறைந்த  அருள் வெளி .இந்த வெட்டவெளி நாயகன்  தான்  என்னுளேயும்  இருக்கின்றான்  ஏன் இதை உணர மனம் முதலில்  மறுக்கின்றது  பிறகு அவனை விட்டு விலக  மறுக்கின்றது .அவனை  எம்முள்  இருக்கும்  இறையை நோக்கி  எம்  எண்ணத்தை  செலுத்த  முயல்கிறேன்  .

ஈர்ப்பாய்  ஒரு பிடிப்பாய்  இருக்கின்றான்  .பிறகு  எம்  நெஞ்சத்தை  சூழ்ந்து  அமைதியாய்  நிறைவாய்  இருக்கின்றான் .இவன் இருந்தால்  இங்கே  நிறைவு  இவன் இருப்பதால்  இங்கே  ஒரு பேரமைதி  .இவன் தன்மை  யாதெனில்  இருக்கும்  இடம்  முழுவதும்  மகிழ்ச்சியாய்  இருக்க  வைக்கின்றான் .இவனை  இவன்  தந்த  இந்த சின்னஞ்சிறிய  மனதால்  உள்ளத்தால்  அன்பால்  இறுக்கி  பிடித்து நீண்ட  நேரம்  இவனோடு  இருக்க  முயல்கிறேன்  .சட்டென  பறக்கின்றான்   நொடியில்.இறையோடு  இயைந்த  இந்த மனம்  ஒரு மாபெரும்  வலுப்பெற்று  நிறைவு  பெறுகின்றது .


இறை  எனும்  தேகம்  இங்கே மிளிர்கின்றதே  ..!!

நிறை  எனும்  தன்மை  பிறக்கின்றதே  ..!!

இறைவா  எம்முள் இருப்பது  நீதானோ இதை  

ஏன் தான்  மறந்தேன்  பல முறையே  !! 

இது தான்  நினது  பெருங்கருணையோ !! இதையே  

நினைந்தால் நீர் தேம்பும்  எம் கண்கள்  !!

அழுதேன்  தொழுதேன்  எமை  மறந்தே  !!

என்  அருகில்  என்றும்  நீ இருந்தால்  

எடுத்த  இப்பிறவி  முழுமையாகிவிடும்

 

 


 

நானார்என் உள்ளமார் ஞானங்களாரென்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ.

 

நான்  யார்  ? என்  உள்ளம்  யார்  ?என்னை  யார் அறிவார்  ...? 

வானோர்  பிரான்  எம்மை ஆளவில்லை  எனில்  மாணிக்கவாசக பெருமானே  தாம்  ஒன்றுமில்லை  என்கிறார் .வானோர்  பிரான்  வந்து  குடிகொண்டபொழுது  கற்பனையும் கவியாகிறது  .துவண்ட உள்ளமும்  துடிப்பு  பெறுகிறது பொலிவு பெறுகிறது  மகிழ்ச்சிகொள்கிறது .பேரானந்தம் கொள்கிறது .அந்த வானோர்  பிரானை  இமைப்பொழுதும்  நீங்காது  பிடித்துக்கொண்டிருக்கும் பொழுது  எத்தனை  கொடுமையான கர்மாவின்  பிடியில்  சிக்கிய  நாட்களும்  மிக எளிதாக  கடந்துபோகிறது .இறையை  உணர்ந்த  மாணிக்கவாகப்பெருமானின்  பாடல்கள் காலம்  காலமாய் இறையை  அதன் தன்மையை  தாம்  உணர்ந்த  விதத்தினை  மிக அற்புதமாக  திருவாசகத்தில்  அணு அணுவாய்  செதுக்கி  வைத்திருக்கின்றார்கள் .படிக்கும்  அத்தனை  உள்ளங்களும்  கொஞ்சம்  ஆழ்ந்து  சென்றால்  வானோர்  பிரான்   வந்துவிடுவார் என்பது யாம் அனுபவத்தில்  கண்ட உண்மை .



 ஒருமுறை  ஒரு ஆன்மீக அன்பர்   மிகுந்த மன நெருக்கத்தில், மனநெருடலில் ,மன உளைச்சலில்  இருந்தார் .அவரின்   ஆன்மீக தேடல்  என்னை  அவர் அருகே  அழைக்கும்  ஒரு சந்தர்ப்பத்தை  ஏற்படுத்தி கொடுத்தது .அவரை  சந்தித்த  பொழுதே  எதற்காக  இறை  இங்கே  சந்திக்க  வைத்தது  எனும்  நோக்கத்தினை  புரிந்துகொண்டேன் .மானுட வாழ்வு  தானே  கர்மா இல்லாத  மனிதர்  உண்டா  சிக்கல்  இல்லா மானுடர் உண்டா  ..இந்த நண்பருக்கும்  ஒரு இடர்  அதில் ஒரு  இழப்பு அதனால்  கொஞ்சம்  மன சங்கடம் . அந்த கர்மாவை  அவர் எதிர்கொண்ட  விதம்  அதில் கிடைத்த  அந்த இழப்பு  மன நெருடல்  அவர் பார்வையிலே  தெரிந்தது .எதேச்சையாக  பேசும் பொழுதே  மாணிக்கவாசக பெருமானின்  திருவாசகம்  இடையே வந்தது .அதுவும் ... 

"வேதங்கள்  அய்யா  ஏன் ஓங்கி ....ஆழ்ந்து  அகன்ற  நுண்ணியனே ..!!!" .இந்த  ஒரே ஒரு வரியை  பற்றி  என்ன நினைக்கின்றீகள்  அன்பரே  என்று  கேட்டேன்.அவரும் "இதை கேட்டுருக்கின்றேன் .இந்த வரி ஏற்கனவே  தெரியும்"  என்றார்  .நீங்கள் உணர்ந்ததை  சொல்லுங்கள்  என்றேன் .பெரிதும்  எதையும்  உணரவில்லை  என்றார்.அப்படியா  பரவாயில்லை இதில்  இந்த வரிகளுக்கு யாம்  உணர்ந்ததை  சொல்கிறேன்  கேளுங்கள்  என்று  ஆரம்பித்தேன் ..இங்கே எழுதிய  கட்டுரையின்  விளக்கங்களை  கொஞ்சமாக  விவரித்தேன் .கிட்டத்தட்ட  ஒரு மணி நேரம்  பேச்சு  ,மாணிக்கவாசக பெருமானை பற்றியும் அவர்  அருளிய தேன்  வழியும்  திருவாசகத்தை  பற்றியும்  அதிலும்  இந்த ஒரு  வரி  ..பெருமானார்  உணர்ந்த விதம் ..எவ்வளவு பெரிய  இறையை  எவ்வளவு  அழகாக  இங்கே இரத்தின  சுருக்கமாக வார்த்தையாக  வரிகளாக  பாடல்களாக  வைத்திருக்கின்றார்கள்  என்பதை  விவரித்தேன்  ..அவ்வளவு  தான் .மாணிக்க  வாசக  பெருமானே  இறைவடிவில்  அலையாக  ,சும்மா  தீப்பொறி  போல  இறை  ஒளியாய்  அந்த அன்பரின்  மனதுள்  சென்று  அங்கே  இருந்த  மன இறுக்கத்தை  துவசம்  செய்து ,மனதை  ஒரு  தெள்ளிய நீரோடை  போல  மாற்றிவிட்டார்கள் .தற்பொழுது  அன்பரின்   மனம் பெரும் அமைதியில்  திளைத்தது  .இறுதியில் அன்பர் சொன்னார்  ,நீங்கள்  கொடுத்த  இந்த  அலை  ஆற்றல்  ,உள்சென்ற விதம்  அதனால்  கிடைத்த  அமைதி  ஒரு வாரத்திற்கு  தகும்  அந்த அளவிற்கு  எனக்கான  ஆன்மீக   பசியினை  போக்கிவிட்டது .மிக்க நன்றி  என்றார் .

இறை உணருவது  என்பது  என்ன சும்மாவா ?ஆர்ப்பரிக்கும் பெருமகிழ்ச்சியல்லவா  அவன் இயல்பு ,அது உங்களை  வாரி அல்லவா அணைத்திருக்கின்றது .எத்தனை கோடிகள் கொட்டினாலும் கிடைக்குமா இறை..இல்லை வேறு எதைகொண்டுதான் , இறையை  வாங்கிடமுடியுமா? ஆக  நண்பரே  நன்றிகளை  மாணிக்க  வாசக பெருமானுக்கு  சொல்லுங்கள் .இறையை  இறையின்  வரிகொண்டு  விலக்குவதால்  எம்மையே  யாம் தூய்மை  படுத்திக்கொள்கிறோம் .இதை கேட்பவருக்கும்   அதை  சொல்பருக்கும்  அருகில் இருக்கும்  அனைவருக்கும்  நன்மை  பயக்கும் . ஆக நன்றி  இறைக்கு,  இறை  தந்த  பெருமானுக்கு  சொல்லுங்கள்  ,நான்  வந்த வேலை  முடிந்து விட்டது ,விடைபெறுகிறேன்  என்றேன் ."..என்ன  வந்த வேலை முடிந்துவிட்டது  என்றால்  இது நடக்கும்  என்று  முன்னரே  தெரியுமா  ?என்றார்  .உங்களுள்  நீங்கள்  தேடிய  இறை  ,என்னை  உங்களை  சந்திக்க  வைத்தது..அவ்வளவு தான் ..நான் இங்கே ஒரு கருவி மட்டுமே  ..நகர்த்தும்  யாவும் இறையே  என்று  சொல்லி  விடைபெற்றேன்.

பெருமகிழ்ச்சியும்   பேரானந்தமும்  குடிகொண்டுள்ள  இந்த  தேன்  வாசக  திரு வாசக வரிகளை  ஆழ்ந்து  சிந்தியுங்கள்   .ஒவ்வொருவருக்கும்  ஏதேனும்  ஒரு  இடத்தில்  ஒரு வரியில்  ஒரு சில  கருத்துக்கள் நன்கு ஆழ்ந்த மனதில்  பிடிபடும் .எது ஈர்க்கின்றதோ  அதை பிடித்து  கொஞ்சம் கொஞ்சமாக  செல்ல  இறை  அருகே  அழைத்து செல்லும் .எப்பேர்ப்பட்ட  பெரும் மன  இறுக்கமானாலும்  சரி  எவ்வளவு  பெரிய  மன சிக்கலானாலும்  சரி  ,அவை  யாவற்றையும்  துவம்சம் செய்து  தவிடு பொடியாக்கிவிடும்  இந்த இறை வாசகம் .அந்த அளவிற்கு  இறை  ஆற்றல்  நிரம்பியுள்ளது .

தொல்லை இரும் பிறவி சூழும் தளைநீக்கி
 அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே!  
எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோமான்
திருவாசகம் என்னும் தேன்.

வாழ்க  வளமுடன் 

ஒம்  அகத்தீஸ்வராய  நமஹா !!

ஒம்  அகத்தீஸ்வராய  நமஹா !! 

ஒம்  அகத்தீஸ்வராய  நமஹா !!



Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்