ஓம் சுந்தர மஹாலிங்காயா போற்றி !!





சதுரகிரி ஒரு அற்புத  மலை.சித்தர்களின்  சாம்ராஜ்யம் .சதுரகிரி என்றாலே பசுமையும் ,துள்ளலும் துடிப்பும் நிறைந்த   சிற்றோடைகளும் ,ஆங்காங்கே சிறிய பெரிய நீர்வீழ்ச்சிகளும்,  வானுயர்ந்து பசுமை போர்த்திய  மரங்களும் மலைகளும் ,இயற்கை அன்னையின் தூய  100%  தூய காற்றும் ,கண்ணாடி போன்ற தண்ணீரும்,வியக்க வைக்கும் மூலிகைகளும் அதன் தாத்பர்யங்களும்,அடர்ந்து விரிந்த பல்வேறு மலைகளும் காடுகளும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பாரம்பரிய வரலாற்று  நிகழ்வுகளும் என தொடர்கிறது..இந்த மலையை பற்றி  நினைக்க நினைக்க மனதை  ஈர்த்து இனம் புரியா அலைகளை அள்ளி வீசுகிறது மனதுள்.குளுமையும் குளிர்ச்சியும் வாரி  அள்ளி வீசுகிறது.எம் முதல் முதல் பயணம் இந்த மலையோடு எம் மனதோடு ஒட்டி உறவாடிய நிகழ்வுகள், எண்ணங்கள், தருணங்கள்,ஏற்பட்ட மாற்றங்கள் எல்லாம் எண்ணிட ,எண்ணிட , எம் மனதுள் ஒரு புத்தம் புது நறுமண மலர்  பூத்துக்குலுங்கி நறுமணம் வீசுவது போல என்றும் ஒரு அற்புத  சுகம் தருகிறது.





பத்து வருடங்களுக்கு முந்தைய நிகழ்வுகள் ஒரு சித்தர் அய்யாவை பார்த்த நிகழ்வுகள் ,அவராலே இட்ட பிச்சை தான் இந்த எழுதும் தகுதிகள் .எம்மை அழைத்து அருள்வாக்கு சொல்லி , அகத்தியர்  அய்யாவின் சூட்சும தரிசனம்  உணரவைத்து சொல்ல இயலா வர்ணிக்க இயலா உணர்வுகளை தந்து ,எம்மை எம் உள்ளத்தை கட்டிபோட்ட நிகழ்வுகள் அசைபோட அசைபோட, பேரமைதிக்கு அழைத்துச்சென்று ,கண்ணீர் மல்க ,வாய் பேச வார்த்தையின்றி பேரமைதியில் ஆழ்ந்து இருக்க வைக்கிறது  .அய்யாவின் சூட்சும தரிசனம் என்றென்றும் எம் வாழ்வில் மறக்க இயலாது .உலகமே போற்றும் உன்னத தலையாய சித்தர் பெருமான் .சர்வ ஞானம்  நிறைந்த தந்தை, எம்மையும் ஒரு பொருட்டென கருதி ,யாம் சந்தித்த சதுரகிரி சித்தர் உதவியோடு எமக்கும் சூட்சும தரிசனம் தந்து ,எம்மோடு ஓரிரு வார்த்தைகளும் உறவாடி ,எமக்கு அன்பு என்றால் என்ன அதன் உண்மை ஆழம் என்ன என்று எம்மையும் அன்பை உணரவைத்து ,அன்பின் மூலமான அற்புத அதி அற்புத சூட்சும ஆழமான இறை அலைகளை எம்முள் உணரவைத்து ,எம்மை இறையில் மறக்க செய்த எம் குருநாதர் எம் தந்தை அன்பின் சுத்த பரப்பிரம்மம்,ஆயிரம் கோடி உயிர்கள் கேட்டாலும் ஒவ்வொரு உயிருக்கும்  ,வாரி வாரி வழங்கும் வள்ளல் அகத்திய மாமுனிவர் எம்முள் ஏற்படுத்திய மாற்றங்கள் தாக்கங்கள் ஆயிரம் ஆயிரம்.குருநாதா நின் திருவடி சரணம் ..!!
நின் திருவடி சரணம் ..!! நின்னை காண ஏங்குகிறது எம் உள்ளம் ..!! எம் தலைவனே !! அன்பின் ஆழம் கட்டுரை எழுதவைத்த எம் நாயகனே ..!! மாபெரும் அருள் ஒளி  பரப்பும்  சூரியனே !! மஹா ஞானியே !! தமிழ் தந்த முனிவனே ..!! தலையாய முனிவனே ..!! எமை ஆளும் ஈசனே ..!!  அத்துணை கலைகளும் நீக்கமற  கற்ற மாபெரும் தலைவனே..!! சோதித்து கர்ம வினை களைந்து அருள் தரும் எம் தந்தையே !! நின் பொற்பாதம் சரணம் !! நீ வைக்கும் அத்துனை சோதனைகளிலும் தோற்றவன் அடியேன் .இருப்பினும்  எமக்கும் அருள் ஆசிகள் தந்த மாபெரும் கருணை வள்ளலே !! எம் மஹா தெய்வமே !! சரணம் அய்யா நின் பொற்பாதம் சரணம் .!!நின் திருவடி சரணம் !!






கிட்டத்தட்ட குறைந்தது மூன்று மணிநேரம் ஆகிறது மலை அடிவாரத்திலிருந்து மேலே சென்று சுந்தரமகாலிங்கம் சன்னதியை அடைவதற்கு.மலை ஏற தகுதிகள் வேண்டும் .உடல் ஆரோக்கியம் வேண்டும்.ஒரு முறை ஏறி இறங்குவது என்பதெல்லாம் ஒரு சாதாரணவிஷயம் அல்ல.ஆனால் இங்குள்ள கிராமத்து மக்கள் மிக அருமையாக ஏறி இறங்குகிறார்கள்.அந்த அளவிற்கு மலை ஏறும் தகுதியை பாலாக்கி வைத்திருக்கின்றோம்  எம்மை போன்ற நகர வாசிகள்.இப்போதெல்லாம் அமாவாசை பௌர்ணமி பிரதோஷ காலங்களில் ஒட்டியே மலை ஏற அனுமதி .மற்ற நாட்களில் அனுமதி இல்லை.
பத்து வருடங்களுக்கு பிறகு மலை ஏறுகிறேன் .நிறைய மாற்றங்கள்.ஒரு கால் வாசி தூரம் சிமெண்ட் பாதைகள்.மேலே  ஒவ்வொரு குறிப்பிட்ட தொலைவுக்கு அருகில் குடிநீர் தொட்டிகள்.பாராட்ட வேண்டிய அதி உன்னத செயல். ,ஆங்காங்கே  காவல் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது. வாழ்க வளமுடன் அணைத்து பணியாற்றும் அத்தனை உள்ளங்களுக்கும்.அமாவாசை என்றாலே மக்கள் கூட்டம் அதிகம் .ஒரு சில இடங்களில் மிக மெதுவாகவே செல்ல முடிகிறது.ஒரு முழுவீச்சில் ஏறி இறங்குவது என்பதெல்லாம் இயலாத காரியம்.






ஒரு புறம் உடம்பில் இருக்கும் ஆற்றல் குறைந்து தளர்வு ஏற்பட்டாலும் . மறு புறம் மலை ஏற ஏற சுகம் தொடர்கிறது.மலை முகில் தொட்ட தென்றல் ஜில்லென மூச்சாக உள்சென்று ஆற்றல் தருகிறது.ஆங்காங்கே மலையோடு கசியும் நீரும் மூலிகையும் ஆற்றல் தருகிறது.அமாவாசை காலங்களில் மலைஏறுதல் மிகவும் நன்மை பயக்கும்.அதுவும் விரதம் இருந்து வெறும் காலோடு  மலை ஏறுதல் அதிக நன்மை பயக்கும்.உடம்பில் இடகலையும் பிங்கலையும் சேர்ந்து அது தானாகவே சுழுமுனை நோக்கி பாயும் தன்மைகளை தரவல்லது இந்த தினத்தில் சதுரகிரி மலை ஏறுதல். மலை ஏறுவதே பெரும் கடினம் இதில் எங்கே சுழுமுனையை பார்ப்பது என்கிறீர்களா ? ஆனால் அது தான் உண்மை.சுழுமுனை தரும் யோகம் வெகு விரைவில் கிட்டும் என்பதே அதி சூட்சும   இரகசியம்.உடம்பில் உள்ள ஒவ்வொரு பகுதியும் நன்கு பிழியப்பட்டு ஒவ்வொரு வர்ம புள்ளிகளும்  ஆங்காங்கே அக்குபஞ்சர் மசாஜ் செய்யப்பட்டு ,வழிபாதையில் கிடக்கின்ற வேர்களும் ,சிறு கற்களும்  பாறைகளும் அதன் மீது நடப்பதால் உடலில் பல்வேறு மாற்றங்கள் உருவாகின்றது.இதை எல்லாம் கசக்கி பிழிந்து  செய்த பல்வேறு கர்மா பலனை பார்த்து பிறகு இறுதியிலே தான் மகாலிங்கம்  தரிசனம்  தருகிறார்.மகாலிங்கம் தரிசனம் என்றால் சும்மாவா ..காண கண் கோடி வேண்டும் இந்த இயற்கை எழிலில் எல்லா மலைகளையும் தாண்டி இறுதியில் இருக்கும் சதுரமான கிரியில் அமர்ந்து இமயமலை நோக்கி சாய்ந்து அருள் புரியும் அழகான சுந்தர மகாலிங்கம்.இந்த கோவிலில் இருந்து மேல் நோக்கி பார்க்க எங்கெங்கும் மலைகள் ஓங்கி உயர்ந்த மலைகள் .கொள்ளை அழகு .அழகுக்கு அழகு சேர்க்கிறது.அற்புதமான மலைகாற்றும் ஓங்கி உயர்ந்த மலைகளில் பட்டு விழும் தண்ணீரும் சுந்தர மகாலிங்கம் சன்னதி அருகே சிற்றருவியாக ஓடையாக ஓடுகிறது.






கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் ஒரு வழியாக இறுதியில் சுந்தர மகாலிங்கம் சன்னதி .ஏறிய களைப்பு வேறு .மிகப்பெரும் கூட்டம் மலையில் .தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசையில் பெரும் கூட்டம் தவழ்கிறது இங்கே.கிட்டதட்ட ஒரு மணி நேரம் வரிசையில்.இறுதியாக சுந்தர மகாலிங்கம் இருக்கும் இடத்துக்கு அருகே நகன்று வருகிறோம்.இதோ இந்த இடத்தில் தான் யாம் சந்தித்த சித்தர் புருஷன் அமர்ந்த இடம்.அந்த இடம் அந்த அறை யாவும் பூட்டு போட்டு பூட்டிவைக்கப்பட்டுள்ளது.காலம் சுழன்று எங்கோ சென்றுவிட்டது.ஆனால் நடந்த நிகழ்வுகள் இன்று நடந்தது போல நெஞ்சை பிணைகிறது.சூட்சும அலைகள் தெறித்து ஓடுகிறது.அப்படியே மெல்ல மெல்ல நகர்ந்து இருக்கும் கூட்டத்தோடு எமக்கும் ஒரு சிறு தரிசனம் கிடைக்க வழி பிறந்தது. சுந்தரமகாலிங்கம் தரிசனம் கிடைத்தது.கருவறைக்கும் எமக்கும் ஒரு பத்தடி இருக்கும்.மெல்ல மெல்ல சுந்தரத்தை நோக்கி செல்கிறோம்.




ஒரு மணி நேரம் காந்திருந்து ஒரு நிமிடம் மட்டுமே தரிசிக்க வாய்ப்பு கிட்டியது.அப்பப்பா என்ன ஒரு சக்தி கருவறையில்.கருவறை எங்கும் சூட்சும வெண்மை நிற அலைகள்.செறிவு மிகுந்த அடர்த்தி அதிகம் நிறைந்த அலைகள்.வெண்பனி போல சூழ்ந்திருக்கின்றது.கண்களை மூடி கருவறை நினைத்தாலே அரூப  உருவங்கள் இங்குமங்கும்  மருவுகிறது.சதுரகிரி என்றாலே சித்தர்கள் சாம்ராஜ்யம் என்பது  மெல்ல மெல்ல உணர்ந்துகொள்ள முடிகிறது.இந்த கருவறையில் என்ன ஒரு ஆற்றல் இன்று தவழ்கிறது.அதை அப்படியே எமது மனம் உயிர் உள்வாங்குகிறது.உள்வாங்கி எமக்குள் ஒரு நிறைவை தருகிறது.மேலும் மேலும் பெறுவதால் மனமும் உயிரும் சூட்சும தேகமும் நன்கு உப்பிபெருத்து நன்கு வலுபெறுகிறது.ஆற்றல் பெறுகிறது.ஆற்றல் அப்படியே உள்ளமெங்கும் பெருத்து வியாபித்து நிறைந்திருக்கின்றது.நிறைகுணம் பெறுகிறது .சிக்கல் இன்றி மனம் கண்ணாடி போன்று தெளிவாக இருக்கின்றது.காணும் யாவரும் எதுவும் எந்தவித பேதமும் இன்றி  யாவரும் ஒன்றே எனும் நிலைக்கு வருகிறது.ஆற்றல்  அப்படியே வெளி செல்கிறது.எம் உள்ளம் நிறைந்த சூட்சும அலைகள் பேரமைதியில் திளைக்கிறது.யாவருக்கும் இந்த சூட்சும அலைகள் சுந்தர மாகாலிங்க அலைகள்  விரிந்து பரந்து கொட்டிக்கிடக்கிறது. வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறோம்.அந்த அளவிற்கு நிறைந்திருக்கின்றது.ஆயிரம் ஆயிரம் அன்பர்கள் இன்றைய அமாவசை நாளில் தரிசனம்.எத்தனை ஆயிரம் அன்பர்கள் வந்தாலும் எவர் உள்ளத்தையும் நிரப்பி அதி அற்புதம் புரியும் அள்ள அள்ள குறையாத வற்றாத சுந்தர மகாலிங்க அலைகள் கோடி கோடியாய் டன் கணக்கில் ,அளவிட முடியாத அளவிற்கு இங்கே கொட்டிகிடக்கிறது .ஒன்றே ஒன்று தான் தேவை இதை உணர அனுபவிக்க,நம் உள்ளத்தில் அன்பெனும் அலை நிரப்பி  வந்தாலே இந்த சூட்சும அரூப தரிசனங்கள் பெற்று ஆற்றல் உணரலாம்.யாம் பெற்ற இந்த கருவறை தரிசனம் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை தருகிறது.அங்கே இருக்கும் அதி நுண்ணிய சூட்சும அலைகளும் ,கவர்ந்திழுக்கும் சுந்தரமகாலிங்கமும் தரிசிக்க தரிசிக்க ஆற்றலை வாரி வாரி வழங்குகிறது.





உள்ளம் நிரம்பிய அலைகளோடு அப்படியே மலை விட்டு கீழே இறங்கிவந்தேன்.மகாலிங்க தரிசனம் அதி சூட்சுமஅலைகள் ,கருவறையில் கொட்டிக்கிடக்கும் செறிவு நிறைந்த அலைகள் அந்த இடம் அங்கே ஆர்ப்பரிக்கும் அருவி ,ஓங்கி உயர்ந்த மலைகள் ,அருமையான காற்று அங்கே இருக்கும் பறந்த வெளி ,பனி படர்ந்த மலைகள் அதில் உள்ள ஓங்கி உயர்ந்த மரங்கள் ,பச்சை பசேல் என இருக்கும் தாவரங்கள் கொடிகள் அனைத்துமே மனதிற்கு ஒரு இதமான சுகத்தை தந்துகொண்டேயிருக்கிறது.செறிவு நிறைந்த சுந்தரமகாலிங்க கருவறை அலைகளை இந்த இதழ் வாசிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் அமைதியையும் ஆனந்தத்தையும் அள்ளி வழங்கட்டும் சுந்தரமகாலிங்க தரிசனம் விரைவில் கிட்டும் அதற்கான வழிவகை செய்வார் மகாலிங்கம் என்று  வாழ்த்தி அகத்திய உள்ளங்களை மீண்டும் வேறு ஒரு கட்டுரையில் சந்திக்கின்றோம்.

வாழ்க வளமுடன் !!

ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!


Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்