இறை அருளாசிகள் ..!!!
கேட்பாரற்று ,கேள்விகள் அற்று ,முடிந்து அமிழ்ந்து ,மூழ்கி,மூழ்கி யுகங்கள் ஆயிரம் ஆயிரம் போனாலும் , எம் பெம்மானே !! இவை யாவும் அழியாத நின்னுள்ளே நாள்தோறும் நடந்தேறுகிறது!!ஆனந்த கூத்தனே !! எல்லை இல்லானே ! எத்தகைய வலிமை உடையோன் நீ ?
எம்மை மறந்து, நின்னில் கிடந்து ,அழுது புலம்பி ஆற்றல் பெற்ற காலம் யாவும் சுகம் சுகமே ..எம் பெருமானே !! இருந்தும் கிடந்தும் பரந்தும் விரியும் பெரியோனே !!!.நின் பெருமை எண்ணிடல் என்றென்றும் சொல்ல இயலா சுகமே !!
மூழ்கின ! முடிந்தன ! மறைந்தன! எழுந்தென !! என்பதெல்லாம் நீர்மேல் எழுதும் கணக்கு போல சட்டென மறைகிறது நீ படைத்த ஜீவராசிகளின் வாழ்க்கை ! பேரமைதியில் பரந்து விரிந்த மாயோனே !! அன்பால் இளகினால் மட்டுமே நின்னை சிக்கென பிடிக்க இயல்கிறது எம் பெருமானே !!
இளகும் பாகுபோல எம் நெஞ்சம் இளகி நின்னை நினைந்து ,அன்பால் ,பரந்து விரிந்து சூழ்கிறது எம்பெருமானே !! வந்தமர்மாய் எம்முள் எம் நெஞ்சத்துள் என்றும் நினை இறுக கட்டியணைக்கவியல்கிறேன் !! வருவாய் எம் நாயகனே !!வந்தமர்வாய் அதி நுண்ணிய நுட்பம் நிறைந்தோனே !!
வருவாய் எமை ஈன்றவளே !! எம் தாயே !! தந்தையே !! சர்வேஸ்வரனே !!
என்றும் நின் பாதங்களில் சரணாகதி !! சரணாகதி !! சரணாகதி !!
மெல்லிய தேகம் ,சாந்த ஸ்வருபம் எம் மீது கைகள் படுகின்றது.அந்த பெரியவருக்கு சேவை செய்வதெல்லாம் கனவிலும் கொடுத்துவைத்திருக்கவேண்டும்.ஸ்தூல உடலோடு அவரை பார்த்து எத்தனையோ ஆண்டுகள் .அதுவும் அவர் ஒரு பெரிய உலகம் போற்றும் மாபெரும் மகான் என்றதெல்லாம் ஒரு அணு அளவு கூட எமக்கு தெரியாது ஏனெனில் அத்தகைய பால பருவத்தில் எமக்கு வாய்ப்பு கிட்டியது .எல்லாரும் வணங்குகிறார்கள் ஆக யாமும் வணங்க வேண்டும் என்ற நினைவு மட்டுமே. எம் தோளில் கை வைத்திருக்கும் பெரியவரோ ஒரு பெரிய ஒளிவெள்ளம் போல ஜொலிக்கிறார் . அதன் சிதறல் எம் மீதும் விழுகிறது. என்ன ஒரு ஈர்ப்பு எம் உள்ளத்தில் அன்பு நிரம்பிய ஈர்ப்பு துள்ளுகிறது. அவர் நடந்து வரும் போது கீழே ஒரு மகான் நீண்ட தாடி முடியுடன் அமர்ந்து ,எம்மை தொட்டுகொண்டுவரும் பெரியவரின் காலில் விழுகின்றார்கள் விழுந்து பெரியவரின் பாதங்களை தொட்டு வணங்குகிறார்கள்.அவரும் ஒரு மெல்லிய தேகம் கண்களெல்லாம் இறை தேடிக்கொண்டிருக்கின்றது.அவரை பார்த்து நானும் பெரியவரின் காலில் விழ முயற்சி செய்யும் போது பெரியவர் வேண்டாம் என்று சொல்கிறார்கள்.அவரோ சன்யாசி போல தெரிகிறார்கள்.
அற்புதமான கனவு.பெரியவர் எம்மை தொட்டதால் சூட்சும தேகம் இங்குமங்கும் நெளிந்து அதிர்வுகள் பெறுகின்றது .இந்த பெரியவர் அருகிலே இருப்பதால் அவர்களின் அலை நீளத்திற்கு அங்கே சிதறும் இறை அதிர்வுகள் எம் தேகத்திலும் தெறிக்கின்றது.இந்த நிகழ்விலே வந்த பெரியவர் மகாபெரியவர் எளிமையே உருவானவர்.இது கனவு தான் ஆனால் இதன் மூலம் எம் சூட்சும தேகம் பெற்ற அனுபவம் மிக அதி அற்புதமானது.சுகமான அனுபவம்.எவ்வளவு பெரிய அற்புத ஆற்றல் கொண்ட மகா பெரியவர் எனும் சூட்சும தேகம் இவ்வளவு எளிமையானதா , எம்மையும் தம் சூட்சும ஸ்பரிசத்தால் தொட்டு எமக்கும் ஓரிரு வார்த்தை உரையாடியதா ? எம்மால் இது கனவா நினைவா என்று எமை யாமே புரிந்துகொள்வதற்கே சிலமணி நேரம் ஆனது.
எல்லாருக்கும் ஆவல் தானே மகாபெரியவரை கனவினில் காண்பது.யாம் அவரை நினைத்த பொழுது மஹாபெரியவர் வரவில்லை.அவராகவே வருகிறார் அதுவே அதி அற்புத சூட்சும தேக தரிசனம். பூர்வ ஜென்ம புண்ணியம் வேண்டும் இல்லை எனில் அம்பாளுக்கு உரிய மந்திரங்களை பாராயணம் செய்து அம்பாளின் திருவடியில் சாஸ்டாங்கமாக பணிந்தால் மகாபெரியவர் சூட்சும தரிசனம் கிடைக்க சாத்தியமாகிறது என்றே எம்மால் ஊகிக்கமுடிகிறது.
அம்பாளுக்கும் திரு மகாபெரியவருக்கும் நிறைய இறைத்தொடர்பு இருக்கின்றது.அம்பாளின் அருள் ஆசி பெற்ற சூட்சும தேகம் இன்றும் இந்த பூமியில் உலாவருகின்றது. இது மகாபெரியவரா ? இல்லை அம்பாள் ஸ்தூல வடிவமா ? இல்லை இரண்டுபேருமே ஒன்றுதானா ? என்று கணிப்பது மிக கடினமாக இருக்கின்றது. இருவரும் ஒன்றே தான் என்று எண்ணம் உதயமாகிறது.எங்கெல்லாம் அம்பாளின் வழிபாடு அம்பாள் பற்றிய பாராயணம் இருக்கின்றதோ அங்கெல்லாம் இந்த சூட்சும தேக பெரியவர் அருள் ஆசிகளும் கலந்தே இருக்கின்றது என்றே சொல்லமுடிகிறது. நம்முள் நம்மை மறந்த அம்பாளின் மந்திர பாராயனமே ஒரு காரணமாக இருக்கலாம்.எப்பொழுதெல்லாம் அம்பாளை பற்றிய அதி தீவிர சிந்தனை.மனமுருகிய லலிதா சகஸ்ரநாம பாராயணம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை புடம் போட்டு மேருகேற்றுகின்றதோ அப்பொழுதெல்லாம் இந்த மகாபெரியவரின் சூட்சும கனவு தரிசனம் பெறுவதற்கு வாய்ப்புகள் நிறைய உருவாக்கும் என்றே சொல்ல தோன்றுகிறது.இது இன்று சொன்னால் எப்பொழுது கிட்டும் என்பதெல்லாம் அவர்கள் சித்தம். ஆழ்ந்து பாராயணங்கள் அல்லது மனம் ஒன்றிய இறை சிந்தனை செய்தல் மட்டுமே நமது செயல் . விளைவுகள் எப்படிவேண்டுமானாலும் இறையால் எழுதப்படலாம். ஒருசில இறை சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் நேரில் காண இந்த ஸ்தூல தேக கருவிகள் ஆற்றலை கிரகிக்க போதிய ஆற்றல் இல்லாத பொழுது அது கனவினில் சாத்தியம் ஆகிறது என்பது தந்தையின் அருள் வாக்கு.
மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதி திருப்பரங்குன்ற மலையின் அருகில் திருக்கூடல் மலையில் அடிவாரத்தில் இருக்கின்றது.மலையில் சோமப்பா ஸ்வாமிகள் ஜீவ சமாதி இருக்கின்றது கீழே மாயாண்டி அய்யா ஜீவசமாதி இருக்கின்றது. தைப்பூச நாளில் சென்றதால் மக்கள் கூட்டம் ,அபிஷேக ஆராதனை என ஜெக ஜோதியாய் இருந்தது.கிடைத்த இடத்தில் அமர்ந்து மெதுவாக எமது மந்திர ஜெபங்களை சொல்லிக்கொண்டிருந்தேன்.நல்ல அதிர்வு அலை இயக்கம் இந்த இடம் முழுவதும் நிறைந்திருந்தது.அபிஷேகம் முடிந்து தீப ஆராதனை நிகழ ஐயாவின் அருள் ஆசிகள் அங்கிருந்த அனைவருக்கும் கிட்டியது.
அன்னதான கூட்டம் ஒருபுறம் அதற்காக நீண்டநேரம் வரிசையாக மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது.கூட்டம் குறைவாக இருந்தால் அன்னதானம் செல்வோம் இல்லை எனில் நடையை கட்டவேண்டியது தான் என முடிவெடுத்து அருகிலேயே அமர்ந்தேன்.சிறிது நேரத்தில் மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்திருந்தது.தற்பொழுது இருக்கும் வரிசையில் இருந்தால் எப்படியும் ஒரு பத்து நிமிடமாவது இருக்கவேண்டும் என்ன செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு அய்யா கரிய நிறம்,ஓரளவிற்கு உயரம் குறைவு வெள்ளை முடி ,கதர் வேட்டி சட்டை .வாங்க வரிசையில் நிற்கலாம் என என்னையும் அழைத்து அவரும் எனக்கு முன்னே நிற்கிறார்.
மெதுவாக அவரே பேச்சு கொடுக்கிறார்."...நம்மளை எல்லாம் நிக்கவச்சிட்டு அவரு அங்கே உட்கார்ந்திருக்கார்..." நம்ம என்ன மாயாண்டியா ..?! நிக்க வேண்டியதுதான் ..."சொல்லிட்டு அருகிலே அமர்ந்துவிட்டார். எமக்கு ஒன்றும் புரியவில்லை முதலில். மனதினுள் சுரீர் என்றே இருந்தது.இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை .நாம் ஒரு மகானாக ஆகும் அளவிற்கு தகுதிகள் கொடுத்திருக்கின்றது இறை .இறை உணர்ந்து அமர்ந்தவர் இன்று ஆயிரம் ஆயிரம் மக்களுக்கு அருள் ஆசி வழங்கி அன்னதானமும் வழங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.ஆனால் யாமோ இன்னமும் கையேந்திக்கொண்டிருக்கின்றோமோ ....என்று ஒரு குழப்பத்தில் இருக்க .மறுபடியும் பேச்சு கொடுக்கின்றார்கள் அந்த பெரியவர்
"பூச சாப்பாடு கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும் ,யார் யாருக்கு கிடைக்கனுமின்னு எழுதிவச்சிருகில்ல ... " அந்த காலத்து பெரியவர்களின் பேச்சு அப்படியே இருந்தது.இந்த கால மனிதர்கள் அல்ல என்பது புலப்பட்டது ...நேரம் ஆனாலும் நின்னு சாப்பிட்டுதான் போகணும் என்று எனக்கு சொல்வது போல அவரே சொல்லிகொண்டிருந்தார்.சரி , என்று அன்னதான சாப்பாடு சாப்பிட்டு ரொம்பவருடங்களாயிற்று ,இவளவு தூரம் வந்தாச்சு ,இன்னும் கொஞ்ச நேரம் மட்டுமே என என்னும் பொழுதே வரிசை மெல்ல நகர்ந்து அன்னதான கூடத்திற்கு அந்த பெரியவர் என்னை அழைத்து உள்ளே செல்லவிட்டு ,சட்டென அவர் சிட்டாய் பறந்துவிட்டார் நானும் தேடு தேடுன்னு தேடுறேன் ஆளையே காணவில்லை.
"பூச சாப்பாடு கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும் , சொன்ன அய்யா சாப்பிடவில்லை ,,அங்கேயிருந்து எங்கோ சென்றுவிட்டார்.என்னுடைய எண்ண ஓட்டத்தை நன்கு கவனித்து ,ஒரு தெளிவான பதிலை கொடுத்தும் கையோடு என்னையும் அழைத்து உள்ளே அமரவைத்து உணவைகொடுத்கவைத்து விட்டு அவர் எங்கோ சென்றுவிட்டார்.
பிறகு அய்யாவின் ஜீவ சமாதி சென்றேன் மேலே இருக்கின்ற அய்யாவின் புகைப்படம் பார்க்கின்றேன் .கிட்டத்தட்ட இந்த அய்யா மனித உருவில் வந்தால், இப்படி என்கிட்ட பேசிய அய்யாபோல ஒரு வேளை இருந்திருக்குமோ என்று கணிக்க ,கண்டிப்பாக கொஞ்சம் ஒத்துவருகிறது.யாராக இருந்தாலும் அதி அற்புதமான கருத்துக்களை நாம் உணரும் வண்ணம், நன்கு பதியும் வண்ணம் சொல்பவர்கள் நம் குருநாதர்களே .நம்மை நல்வழிப்படுத்தும் அற்புத ஞானிகள் இவர்கள். குருமார்கள் எனும் நிலையில் இருக்கின்றவர்கள்.அப்படியே அங்கேயே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து எழுந்து ,குருவே சரணம் என்று எழுந்து நடந்த நிகழ்வுகளை அசைபோட்டு வீடுவந்து சேர்ந்தேன்.
இன்றும் ஜீவசமாதியில் சூட்சுமமாக வாழ்ந்துகொண்டேயிருக்கிறார்கள் யுகம் யுகமாய் .நாம் மேற்கொள்ளும் செயல் நிறைய மக்களுக்கு பயன்பெரும் வகையில் பொதுநலம் கருதி இருந்தால் சட்டென அவர்கள் அலை இயக்கத்திற்கு ஈர்க்கப்பட்டு என்ன செய்யவேண்டுமோ அதை உடனே செய்கிறார்கள்.எல்லாம் பரோஉபகாரம் தானே எனும் நிலைமைக்கு வந்தால் அல்லது புரிந்துகொண்டால் அக்கணமே இறை தம் அதி அற்புத சாகசங்களை யார் மூலமாவது நடத்திவிடுகிறது.பிறஉயிர்களுக்கு இறை நம் மூலமாக சேவைகள் செய்கிறது எனும் கருத்திற்கு ஒத்து உணர்ந்து அன்றைய நாட்களில் இடப்பட்ட நிகழ்வுகளை திறம்பட கொஞ்சம் கூட பலன் எதிர்பார்க்காமல் செய்தல் ,வாழ்தல் ஆகியவை வாழ்வை இறைநோக்கி அழைத்து பேரானந்தமாக்குகிறது.
மீண்டும் சந்திப்போம் விரைவில்
வாழ்கவளமுடன்
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!
Comments
Post a Comment