குருவடி சரணம் !!!


நீல வெளியோனே  !! நீக்க மற நிறைந்தோனே  !! நின்றும்  இருந்தும்  கிடந்தும்  நடந்தும்  நாட்டியமாடும்  நான்மறை  நாயகனே  !! ஆடி அசைந்து  அடர்ந்து  படர்ந்து  திரிந்து  விரிந்து  நீ உருவாக்கும்  கோடான  கோடி பிரபஞ்ச இரகசியம் தான்  யார் அறிவார்  மாயோனே  !! தூயோனே மறையோனே  !! இந்த  விந்தையை  யார் அறிவார் !! ஈசனே  !!சர்வேஸ்வரனே !! எப்படியெல்லாம்  கூப்பிட இயலுமோ  அப்படியெல்லாம்  அழைத்துவிட்டேன் எம் பெருமானே நாயகனே  !!.சொல்ல இயலா  உணர இயலா  நிலையில்  இருக்கும்  பேராற்றலே !! நின்  ஆற்றல்  கொண்டு  விம்மி  பெருமையுடன் நின்னை போற்றுகின்றேன் ,இப்பிரபஞ்சத்தில்  நீ செய்யும்  ஒவ்வொன்றும்  அதிசயம்  ஒவ்வொரு  நிகழ்வும்  அற்புதம்.  ஒவ்வொரு நொடியும்  அதி அற்புதமே  !! என்றும்  என்றென்றும்  நின்  ஆற்றல் கண்டு  ஆனந்த கண்ணீர்  மல்கிறேன் !!
வருவாய் !! வந்தமர்வாய்  எம்முள்ளே  பெருமானே !!








பறந்து விரிந்த பால்வெளி ,கருமையும் நீல  வெளிச்சமும்  கலந்து ஆங்காங்கே அள்ளித்தெளித்த  ஒளிக்கற்றைகள் , கேட்பாரற்று  சோ  வென  கிடக்கும்  அண்ட  பேரண்ட  கோள்கள் நட்சத்திரங்கள் துகள்கள் எத்தனை  சூரியன்  எத்தனை உயிர்வாழ தகுதியுள்ள  கோள்கள் ,விரிகிறது  விரிகிறது  விரிந்து கொண்டேயிருக்கிறது இந்த பிரபஞ்ச நாயகனின்  தார்மீக , யாரும்  அறியா  நுணுக்கரிய  புத்திகூர்மை ,  படைப்பு  திறமை .எந்த அளவுக்கு  வலிமை  இருந்தால் , திறமை  இருந்தால்  இத்தகைய  அற்புதங்களை  இறையால்  படைக்க இயலும்  .படைத்தவனின்  வியத்தகு  ஆற்றல் எத்தனை  வலிமை  உடையது  என  எண்ணும் போதே  மனதுள்  ஒரு   இனம் புரியா  ஈர்ப்பு  ஆற்றல்  கவர்ந்துகொள்கிறது .

 இருபது வருட ஆன்மீக  தேடல்  நொடியில்  கரைகிறது  ,கரைந்து  ஒன்றுமே  இல்லாமல்  போகிறது எதை பார்த்தாலும்  கேட்டாலும்  அவை யாவுமே  நின்னுள் மறைகிறது  மறைந்து  சிறு தூசி போல  ஒன்றுமே இல்லாமல்  போகிறது .அந்த அளவிற்கு  நின் படைத்தல்  எங்கெங்கும்  பறந்து விரிந்திருக்கின்றது .பார்க்கும்  யாவும்  செடியும்  கொடியும்  வானும் மண்ணும்  என யாவையுமே  தன்  ஆடையாக  உடைத்தி  அருள் ஆட்சிசெய்யும்  எம் தேவியே  !!  ஈசனின்  நாயகியே  !! சர்வ  சக்தி  நிறைந்தவளே  !!சர்வ மங்களம்  நிறைந்தவளே !! அழகெல்லாம்  ஒரு சேர  பூத்தவளே  !!  நின் திருவடி  சரணம் !! சரணம்  !!




மனம்  ஆழ்ந்து  விரிய  விரிய  எந்த ஒரு மன அழுத்தமும்  சட்டென  மறைகிறது .எவ்வளவு பெரிய மன அழுத்தமும் கரைந்து போகிறது .ஆகாய  நீல  வெளி  நோக்கி  அதன் வண்ணம்  அழகு  அமைதி நோக்கி   கவனிக்க  ஒன்றுமே இல்லாமல்  போகிறது . மேலும்  உண்டான  சிக்கலுக்கு  தீர்வினையும்  ஒரு  தீர்க்கமான முடிவெடுக்கும்  தன்மையினையும்  தருகிறது பரந்த வெளி .கொட்டிக்கிடக்கின்றது பயன்படுத்த ஆட்களின்றி .

சின்னஞ்சிறிய  மனம்  இது  கர்மாவினால் அகங்காரம்  கொண்டு  இருக்கும்  ஆற்றலை  எல்லாம்  துவம்சம்  செய்து எதையெல்லாம்  நினைக்கக்கூடாதோ  அதையெல்லாம்  நினைத்து ,எப்படியெல்லாம்  ஒவ்வொரு நொடியையும்  வீணடிக்கவேண்டுமோ  அப்படியெல்லாம்  வீணடித்து  , தினந்தோறும் பொருமி சிக்கி  மனதை ஒரு நிலைகொள்ளாமல்  இருக்கச்செய்யும்  நிகழ்வெல்லாம் இங்கே  இந்த பேரண்ட வெளி பயணத்தில்   ,தூசியாக்கி  தூக்கி  வெளியே எறிந்துவிடுகிறது இந்த பேரண்ட  நாயகனை  நினைக்கும்  போதெல்லாம் .ஒரே ஒரு முறை  இந்த பேரண்ட  பால்வெளி  திரள்களை  அதன்  அழகினை    மனதால்  கற்பனை  செய்யும்  ஒரு கற்பனை  பயணம்  ,தொடர  சற்றே  உள்வாங்க  ,குபீரென  பிரபஞ்ச  ஆற்றல்  மனதினை  இறுக்கப்பிடிக்கிறது  .இழந்த  அதன் தன்மையினை  கொஞ்சம்  கொஞ்சமாக  மெருகேற்றி  ,துள்ளல்களையும்   இறை சாரல்களையும்  சட்டென   உருவாக்கி  ஆற்றல்  மிக்க  அருவி போல  மனதினை  துள்ளலில்  கொட்டவைக்கிறது  அருள் அலைகள்  சுழன்று  தெறிக்கவைக்கிறது 


வைராக்கியம்  வேண்டும்  இல்லையெனில்  எதுவும் சுவாரசியம்  இல்லாமல் போய்விடும் எல்லாமே   விருப்பமில்லாமல்  போய்விடும் .கொஞ்சம் கூட  சலிப்புத்தன்மை இருக்க கூடாது .ஆர்வமும்  விடா முயற்சியும்  கண்டிப்பாக  வேண்டும் .இந்த உயிரே   உடம்போடு   இருக்கும்  காலகட்டத்தில்  நம்மை  அறியாமல் பல விஷயங்களை  கற்றுக்கொள்கிறது .எத்தனை  வயதானாலும்  இந்த வைராக்கியத்தை  மட்டும்  இழக்க  கூடாது . என்பது  வயதிலும்  கற்றுக்கொள்ளும்  ஆர்வம்  வேண்டும் .அந்த என்பது வயதிலாவது  லலிதா  சகஸ்ர  நாமத்தின்  ஒரு நாமாவுக்காவது  பொருள் உணர்ந்து  உயிரில் அதன்  தன்மையினை  உணர்ந்திருக்கவேண்டும்.எதையும்   நன்கு  எந்தவித  சந்தேகமும்  இன்றி, நன்கு  உணர்ந்து ,  அனுபவபட்டு  தெரிந்து கொள்கிறோமோ  அது  உயிரில்  ஆன்மாவில்  நன்கு  பதிகிறது .இப்பிறவி  போனாலும்  வரும் பிறவியில்  அதற்குறிய  தகுதியிலேயே  பிறப்பெடுக்கிறது .



வைராக்கியம்  எனும்  தமிழ்  வார்த்தைக்கு  அர்த்தம்  என்ன  எனபது கூட  நினைவு படுத்தவேண்டும் அந்த அளவிற்கு  பொருள் தேடும்  உலகிலே தம்மை  மறந்த  பயணம்  நம்மில் பலர் . நான் யார்  ?என் உண்மையான  இயல்பென்ன  என் படைப்பின் நோக்கமென்ன ?  எனும்  கேள்விகளை கேட்டு  அதற்கான  பதில் கிடைத்து  அதை சரியாக  புரிந்து உணர்ந்து  வாழும் போது  தான்  வாழ்வு  சிக்கலின்றி  இனிமையாக மாறுகிறது .நான் யார் எனும் வினா எழுந்து   அதன் ஒரு பகுதியாக  ஆன்மீக  வாழ்வில்  நாட்டம்  பெற்று  அதற்கான  முயற்சியில்  இறங்கி  தியானம்  மந்திரம்  ஸ்லோகம் கற்றுக்கொள்வது  அதற்கான  நேரம்  செலவிடுவதென்பதெல்லாம்  வெகு சிலரே .ஆன்மீக கட்டுரைப்படிப்பது  தியானம்  செய்வது  ஸ்லோகம்  சொல்வது  என்பதெல்லம்  விரல்விட்டு  எண்ணிவிடலாம் .அந்த  அளவிற்கு  இங்கே யாருக்கும்  நேரமில்லை  இந்த பொருள் தேடும்  உலகில்   

ஒரு இருபது  வருடத்திற்கு  முந்தைய  சென்னை அது . தாம்பரத்துலிருந்து  வேளச்சேரி  நோக்கி எனது  நண்பர்  ஒருவருடன்  பயணித்த  காலம்  மிகுந்த ஸ்வாரஸ்யமாக  இருந்தது . இன்றிருக்கும்  மேம்பாலங்கள்  எல்லாம்  அப்பொழுதில்லை .ஒரு நான்கு  ரோடு  வரும் பொழுது  சிக்னளுக்காக   காத்திருந்தோம்  .அங்கிருந்து   ஒரு கிலோமீட்டர்  தூரத்தில்  இருக்கும்  ஒரு மகானின்  அலை இயக்கம்  இங்கே  வருகிறது  என்று சொல்லுவார்.அப்படியா  என வியந்தேன் .புழுதி  நிறைந்த  வாகன புகை  நிறைந்த  சூழல் ,மக்கள் நெருக்கம்  நிறைந்த  இடத்தில்  எப்படி  நண்பர்  எங்கோவிருந்து  வரும்  அலை பற்றி   அதுவும்  ஒரு மகானின்  அலை வருகிறது  என்று  சொல்கிறார்  என எண்ணி  வியந்தேன் .அவர்  சொன்னது  போலவே  அங்கு சென்றால்  அற்புதமான  ஒரு சித்தர்  ஜீவசமாதி  வந்தது .இன்றைய  சித்தர்  சிதம்பரம்  ஸ்வாமிகள்  தண்டீஸ்வரம்  வேளச்சேரி .எமக்கு  ஒரே வியப்பு  எப்படி  நண்பரே  இதை  கணிக்கின்றீர்கள்  என்று  கேட்டேன் ."குருவிடம்  சரணாகதி.."  என்று ஒரே வார்த்தையில்  முடித்துக்கொண்டார் .இதை எண்ணி  எண்ணி  ஆராய்ந்தேன்  பலமுறை எந்த அளவிற்கு  ஆற்றல்  உள்ள  மனதினை  இப்படி  வைத்திருக்கின்றோமே நாமும் !?   .இதை தகுதியாக்கி  கொள்ளாதது  யார்  காரணம்  ? என்று  பலமுறை  எம்முள்ளே  கேள்வி  எழுப்பி எம் இயலாமையை  எண்ணி  வருத்தமடைந்தேன் .




நாட்கள்  கடந்தது .இந்த தகுதியினை  வளர்த்து  கொள்ள  முயன்றேன்.விரும்பியே  தேடியே  நிறைய மகான்களை  பற்றி தெரிந்து கொள்ள   எண்ணினேன்    ...கொஞ்சம்  கொஞ்சமாக  யாம்  உணர  நினைக்கும்  மகானின்  ஜீவசமாதி  பற்றி  முதலில்  கனவில்  வந்தது.பிறகு  வேளச்சேரி அய்யா  பற்றி  நிறைய  தகவல்  கிடைத்தது .ஒரு முறை  கனவில்  ஜீவசமாதியில்  ஒரு பெரிய வேள்வி  ஒன்று  நடை பெறுவது போலவும்  செல்  ...என  ஒரு கட்டளை  போன்ற  கனவும்  வந்தது .அதே போல  பொழுது விடிந்ததும்  அய்யாவின்  ஜீவா சமாதி சென்றேன் எந்த அழைப்பிதழும்  இல்லாமல்  .பார்த்தால்  அங்கே   அய்யாவின்  குருபூஜை  வெகு  நேர்த்தியாக  யாக  கலசம்  வைத்து  வேள்வி தீ ஜோதியாக  வெண்மை நிற  மூலிகை  கலந்த  யாக புகை  ஜீவசமாதியெங்கும்  நிறைந்திருந்தது  . அதி அற்புத ஜோதி ரூப  அய்யாவின்  தரிசனம்  பெற்றேன்  ..இது வெறும் ஸ்தூல கண்ணால்  பார்த்தது  .இதே நிகழ்வு  இது  நடக்கும்  முன்னரே கனவினில்  வந்தது  ..இதை எண்ணி  எண்ணி  பெருமை  கொண்டேன் ..சும்மா  மனதால்  குருவை பற்றி  நினைத்தலே  இந்த அளவிற்கு  என்றால்  சதா  குருவே  என்று கதியாய்  கிடக்கும்  ,அந்த நண்பர்  போல இருக்கும்  அன்பர்களுக்கெல்லாம்  வாரி வாரி அல்லவா  வழங்குவார்கள் மகான்கள்  . 
எம் முயற்சி  தொடர  தொடர  மேலும் மேலும்  மனம் வலுப்பெற்றது .
காற்று வடிவில்  ஒரு மகானின்  ஆசிகள்  பெற்றோம்  .இன்றும்  எம் நினைவில்  நீங்கா  இடம் பெற்றுள்ளது  அந்த நிகழ்வு .யாம் வரும்  வருகையை  முன்னரே  அறிந்து  அவர் ஜீவசமாதி  அருகே வர  ,காற்றாய்  சுழன்று  அடிக்கும்  காற்றாய்  வந்து தரிசனம்  தந்தார்  உடம்பெல்லாம்  புல்லரித்தது .உன்னத மஹான்  .ஏற்கனவே  அகத்தியத்தில்  கட்டுரை எழுதியுள்ளோம் .(அய்யா நாகமணி அடிகளார் ).இப்படி  நிறைய  நிகழ்வுகள்  தொடர்ந்தது  முடிந்தவரை எல்லாம்  அகத்தியதில்  கட்டுரையில்  எழுதிவைத்துள்ளோம் 



 எல்லாம்  குருவிடம்  சரணாகதி  யாருக்கு  எதை  எப்பொழுது  எப்படி  கொடுக்க  வேண்டுமோ   அதை அப்படி கொடுக்கின்றார்கள்  குருநாதர்கள்  .சதா  குருநாதரிடம்  பணிதல்  நம்மை  வியப்பில்  ஆழ்த்தி  நம்மை  பண்படுத்தி ,நம்  ஆன்மாவை  புனிதமாக்கி  பல நுணுக்கங்களை  கற்று தருகிறார்கள் .அய்யா ஸ்தூல   உடலால்  என்றோ  வாழ்ந்தவர்கள்  ஆனால்  இன்று  சூட்சும  உடலால்  அதி அற்புதம்  செய்கின்றார்கள்  .ஆக சோர்வின்றி  சலிப்பின்றி தேடுதல்   முயற்சி,  வைராக்கியம்  வேண்டும்  அது  எப்பிறவி  வந்தாலும்  அதற்குரிய  பயனை  அனுபவ  அறிவை தந்தே  செல்லும் .
தகுதிகள்  வளர்ப்போம்  குருவிடம்  சரணாகதியடைவோம் .

எந்த ஒரு சிக்கலான சூழலிலும் , கர்மாவினால்  மனம்  ஸ்தம்பித்து போய்  நின்றாலும் ,முழுமையாக  குநாதரிடம் சரணாகதியடைந்து   குருநாதரின்' பேச்சு  அல்லது குருவின்  வாக்கியம்,சுலோகம் ,  அவர் எழுதி சென்ற  பாடல்கள் படிப்பது நினைப்பது போன்றவை  வெகு விரைவில்  இன்னலிருந்து காப்பாற்றும் நம்மை.


நோக்கமின்றி  ,சலிப்புத்தன்மை  தரும் அன்பர்களின்  பேச்சினை  காதில் வாங்கவே வேண்டாம் .  எப்பொழுதுமே  மனதினை  ஆக்க  துறையிலேயே ,ஆக்க பாதையிலேயே  செலுத்தும்  நல்ல வழிகளை  தேடித்கண்டு  அதன்  வழியிலேயே  மனதினை  செலுத்த மனம்  என்றுமே  ஒரு ஸ்திரத்தன்மையுடன்  இருக்கும் .வரும்  புத்தாண்டு  ஆன்மீக  பாதையில் விடா முயற்சியும் வைராக்கியமும்  நிறைய தரும் , வளர்த்துக்கொள்ளும்  ஆண்டாக  அமையட்டும்,நிறைய  குருநாதர்  ஜீவசமாதி  சென்று  அருள் அலை  உணரும்   தகுதியினை  தரும் ஆண்டாக  அமையட்டும்  ,அய்யாவின்  திருவருள்  அனைவருக்கும்  அமைதியையும்  ஆனந்தத்தையும்  தரவேண்டும்,கிருமி சூழல்  விரைவில்  நீங்கவேண்டும் ,அனைவருக்கும்  தேவையான பொருளாதார வாய்ப்புகளை  உருவாக்கி  தரவேண்டும்     என அய்யாவிடம்  ஆழ்ந்து  பிரார்த்தனை  செய்கின்றோம்  !!


யாம் உணர்ந்ததோ   தூசியிலும்  தூசி ஒன்றுமே இல்லை  எனும்  அளவிற்கு  ஒரு சிறு நுண்ணிய  நிகழ்வுகள்  அதையும்  பொருட்டாக  கருதி  ஒரு லட்சம்  பார்வை  என  தொடர்கிறது  இந்த அகத்தியம்  .   எம்மோடு  தொடர்ந்து பயணித்து வரும்   அகத்திய  உள்ளங்களுக்கும்    அனைவருக்கும் எம் இனிய  புத்தாண்டு  மற்றும்  பொங்கல்  நல்வாழ்த்துக்கள்.!! 

வாழ்க  வளமுடன் 
ஓம்  அகத்தீஸ்வராய  நமஹா  !!
ஓம்  அகத்தீஸ்வராய  நமஹா  !!
ஓம்  அகத்தீஸ்வராய  நமஹா  !!


 

Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்