ஸ்ரீ லலிதை



ஆடாது அசையாது ஆழ்ந்து உள்நோக்கி பரந்து விரிந்த ஸ்ருஷ்டியில் தாம் படைத்த உயிர்களின் ஒவ்வொன்றையும் சூழ்ந்து ,அரவணைத்து ,ஒவ்வொரு அணுவிலும் ஊடுருவி அருள் ஆட்சி செய்யும் ஆயிரம்  கோடி சூரியனை போன்ற கண் கூசும் பிரகாச  சுடரொளி கொண்ட  கருணை தாயே  !!  கருணா ஸாகரமே !!  அன்பால் இளகிய நெஞ்சம் கொண்டு ஈசனையே ஈர்த்த மாபெரும் பேரழகியே ..!!அன்னம் போன்ற நடை கொண்டவளே !! அமுதம் போன்ற சொற்கள் அருள்பவளே !!  அன்னபூரணியே  ..!!  அகிலாண்டகோடி ஈஸ்வரியே !! காரிருள் நாயகனின் நெஞ்சம் ஈர்த்தவளே !!  செக்கச்சிவந்த செந்நிறம் கொண்டவளே !!  எழிலே !! நாயகியே !!துடிப்பும் துள்ளலும் கொண்ட ஈர்ப்பு நிறைந்தவளே !!   அழகே !!  ஆருயிரே !! தாய்மை நிறைந்தவளே !!   எழில் நாயகியே !! எம் நெஞ்சமெல்லாம் நின்னை நினைந்து நினைந்து ,ஏங்கி ஏங்கி ,கண்ணீர் மல்கி மல்கி ,விம்மி விம்மி , பூரித்து புளங்காகிதமடைந்து,அன்பால் கசிந்து உள்ளம் நெக்குருகி,நின் கருணை மழையில் நனைகிறது .என்றும் நின் ஜீவ அருள் ஆசி தொடர  நின்னை அழைக்கின்றோம்  தாயே ..!! வருக !! வருக !!

ஞான ஒளியே  வருக !! நான் மறையே வருக !!
திருமகளே   வருக   !! திரிசூலியே வருக !!
மாபெருந்தேவியே வருக  !! மாமதுரை ஆளும் இளவரசியே வருக !!
எழில் நிறைந்த   ஈசனின் பேரழகியே  வருக!!
செங்குவளை திருகரமேந்திய  செக்கச் செவந்தவளே  வருக..!!
செங்கழுநீர் சம்பக புன்னாகம் சூடிய  செந்தூர மேனியுடையவளே   வருக ..!!
எம் நெஞ்சமெனும் சாம்ராஜ்யத்தில்  அருள் ஆட்சிசெய்யும்
ஆயிரம் கோடி சூர்ய பிரகாசம் கொண்டவளே வருக !!
ராஜஸ்யாமளா தேவியே வருக !! ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியே வருக !!
ஸ்ரீ லலிதாம்பிகையே வருக !!
நின் வரவு என்றென்றும் தந்திடும்  அமைதியும் ஆனந்தமும் சாந்தமும் சகல பாக்யங்களும் .
என்றென்றும்  நின் பொற்பாதங்களில் சரணாகதி !!!சரணாகதி !!! கருனாம்பிகை தாயே !!! சரணாகதி !!!


ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் அதை பாராயணம் செய்யவேண்டும் எனும் எண்ணம் எழுவது என்பதெல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியம். இல்லை எனில் ஸ்ரீ லலிதையை பற்றி எண்ணுவது ,அவள் நாமங்களை சொல்வது என்பதெல்லாம்  இயலாத காரியம் .புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இவளுடைய நாமங்களை சொல்லமுடியும்.இதில் என்ன அதிசயம் என்றால் ஏதோ கொஞ்சமாவது  புண்ணியம் இப்பிறவியில் தேடுவோமே எனும் மன நிலையில் உள்ளவர்கள்,(இதற்கும் புண்ணியம் செய்திருக்கவேண்டும் ) ,    பாராயணம் செய்யலாம் நாமும் கொஞ்சம் சொல்வோம் என்று தன்னிச்சையாக தம்மை இதில் ஈடுபடுத்தி ,ஒரே ஒரு முறை பாராயணம் செய்தாலே ,இந்த  அம்பாள் சும்மா விடமாட்டாள் .கொஞ்சம் காலம் சென்றவுடன் அவளே மீண்டும் இந்த நாமங்களை உங்கள் நாவலே சொல்லவைப்பாள்.அந்த அளவிற்கு ஈர்ப்பு நிறைந்தது , புண்ணியங்களை தரவல்லது. எப்பொழுது வரை பலன்கள் தொடரும்  என்பதை  கணித்தல் இயலாது .நம் காலத்திற்கு பிறகு நம் சந்ததிகள், அவர்களுக்கு நம்மால் என்ன செய்ய இயலும்  ? ஆனால்   லலிதையின் அருள்  ஆசிகள் அவர்களை காத்தருளும் .

தாராகாந்திதிரஸ்காரி  நாஸாபரண பாஸுரா 


அம்பாளின் நாமங்களை சொல்வதால் அவள் மகிழ்ச்சியடைகிறாள்.உள்ளம் உருகி சொல்லும் ஒவ்வொரு அக்ஷரமும்  அதற்குரிய தேவதைகள் அங்கே ஆவாஹனம் ஆகி ,அந்ததந்த அதிர்வலைகளை சுமந்து சென்று ஸ்ரீ லலிதையிடம் சமர்ப்பிக்கிறார்கள். ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்துமே இந்த சகஸ்ரநாமங்களில் இருக்கின்றது .எப்படி ஒரு மனிதன் குருகுல கல்வி பயின்று ,முறையாக குண்டலினியை படிப்படியாக  மூலாதாரம் ,சுவாதிஸ்டானம் ,மணிபூரகம் ,அனாகதம் விசுத்தி ,ஆக்ஞை ,சகஸ்ராதாரம் என  ஏற்றி இறையை காண வழிவகை செய்கிறானோ அதைப்போல இன்னும் ஒரு படி மேலே சென்று மிக எளிதாக பக்தி வழியில் இறையை காண வழிவகை செய்கிறது . உடம்பில் இருக்கும் அனைத்து  மையங்களும் இயக்கப்டுகிறது.ஒவ்வொரு மையங்களும் இயங்குவதால் அதற்குண்டான உடல் கருவிகள் நன்றாக செயல்பட்டு தத்தம் கடமைகளை செவ்வனே செய்கிறது .உடல் கருவிகள் ஒழுங்காக இயங்குவதால் வியாதிகள் கட்டுக்குள் வந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுகிறது..ஸர்வ வியாதி பிரசமனி  சர்வ மிருத்யு நிவாரிணி




ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் சொல்வதற்கு என்ன  தகுதி வேண்டும் ? ஒரு சாதாரண மனிதர் இந்த நாமங்களை சொல்லலாமா ?  இல்லை முறைப்படி குரு மூலமாக மந்திர தீட்சை பெற்று தான் சொல்லவேண்டுமா ? என்றால்  பக்தி வழியில் அம்பாளின் திருவடியில்  ஆத்மார்த்தமாக சரணடைய நினைக்கும் ,விரும்பும் மனிதம்,  சிரத்தை யோடு சொல்லும் உள்ளம்  மட்டுமே போதும் ..பக்தி எனும் ஒன்றே  ஒன்று தான் தகுதி இங்கே . குரு மூலமாக வாய்ப்பு கிடைக்கும் அன்பர்கள் தத்தம் குருமார்கள் சொல்படி கண்டிப்பாக சொல்லலாம்.இங்கே பக்தி ஒன்று மட்டும் போதும் ,நெஞ்சத்தில் ஒரு ஈர்ப்பு ,லலிதையின் திருவடியை அவள் நாமங்களால் பற்ற நினைக்கும் ஒரு மிகச்சிறந்த எண்ணம் ஒன்று மட்டுமே இருந்தால்  போதும்.அவள் ஓடோடி வந்துவிடுவாள்.

சிதக்நிகுண்ட ஸம்பூதா
தேவகார்யஸமுத்யதா ||
.......................
...............................
காமேச்வர பிரேம ரத்னமணி 
பிரதிப்பண ஸ்தநீ.......

ஞானம் எனும் அக்னிகுன்டத்திலிருந்து தோன்றியவள்........ 
ஒவ்வொரு வரியும் அற்புதம் நிறைந்தது .ஒவ்வொரு வரிக்கும் ஒரு அற்புதம் நிகழ்த்துவாள்.குடும்பத்தில் ஒற்றுமை நிலைநாட்ட  லலிதை சகஸ்ரநாமம் அற்புதமாக உதவிசெய்கிறது . எப்பொழுதும் சண்டையிலே இருக்கும் தம்பதியர்,கருத்து வேறுபாடு   கொண்டவர்கள் ,வீட்டில் நிம்மதியே இல்லை என்பவர்கள் இது போன்ற பிரச்சினை கொண்டவர்கள் ,இவர்கள் யாவரையும் மத்தியஸ்தம் செய்வது என்பதெல்லாம் கடினமான  காரியம்.சக்தி பெரிதா சிவன் பெரிதா என்ற ஆதிமுடிவு வரை விவாதம் தொடர்வார்கள்....இவை எல்லாம் ஆகாத காரியம் .பெரும்பாலும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் பொருந்தாத அலை (bad waves )  அவரவர் கர்மாபடி அலை வேறுபடுகிறது.அதாவது ஒரு கெட்ட அலை  ஒன்று, யாரோ ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ இவர்கள் மனம் விரும்பி  என்றோ எற்றுக் கொண்டது   அது இந்த அளவுக்கு  பாடுபடுத்தி அமைதியை துவம்சம் செய்திருக்கிறது.இங்கே விவாதம் தேவையில்லை, ஆக விழிப்பில் இருந்து கொண்டு உள்ளத்தில் இருந்து இந்த அலைகளை உள்ளம் விட்டு விரட்டி விட்டால் பொருந்தாத அலை ஓடிவிடும்.அமைதி திரும்பிவிடும் உடனே.ஆனால் இது அவ்வளவு எளிதல்ல ஏனெனில் நாம் விழிப்பு நிலையிலேயே இருப்பதில்லையே எம்மையும் சேர்த்தே சொல்கிறேன் . இதற்கு ஒரு அற்புத எளிமையான வழி தான் இந்த லலிதையின் சஹஸ்ர நாமங்கள்.இதில் வரும் ஒரு நாமம் இந்த பொருந்தாத அலையினை ஓட  ஓட  விரட்டியடிக்கும்.தம்பதியர் இருவரில் யாரேனும் ஒருவர் சொன்னாலே போதும்,.லலிதையின் அற்புத சக்தி,மணிபூரகத்தில் அக்னியை உருவாக்கி, அக்னிகுண்ட சக்தி அலைகள் பொருந்தா அலைகளை பஸ்பமாக்கிவிடும் .ஈர்ப்பு தன்மையினை அதிகபடுத்திகொடுக்கும்.அமைதியை நிலைநாட்டும்.
சமநிலைத் தன்மையை ஏற்படுத்துவாள் என்பது யாம் கண்ட உண்மை .
அது மட்டுமல்ல திருமணம் ஆகாத அன்பர்களுக்கும் திருமணம் நடைபெறும்.

உத்யத்பாநு ஸஹஸ்ராபா

எந்த இயக்கத்திலும்  கோள்களானாலும்  சரி மனிதனாலும் சரி அங்கே ஒரே ஈர்ப்பு வேண்டும் .இல்லை எனில் ஒன்றும் நிகழாது .ஒன்றுக்கு ஒன்று முரணான சக்தி ஏதோ ஒரு காரணத்தால் ஒன்றை ஒன்று ஈர்த்து பிடித்து  கொஞ்ச காலம் ஒன்றோடு ஒன்று இணைந்து இயங்கிக்கொண்டிருக்கிறது.இந்த காலம் எவ்வளவு என்பதை கணிக்க இயலாது நூறு வருடமோ ஆயிரம் வருடமோ தெரியாது.அது படைக்கப்பட்ட காரணத்தின் நோக்கம் நிறைவேறியவுடன் பிரிகிறது .பிரிந்து தூள் தூளாகி பஸ்பமாகி ...வேறு ஒரு இறையின் கட்டளைக்காக காத்திருந்து மாற்றம் பெறுகிறது.ஒவ்வொரு அனுவுள்ளும் ஈர்ப்பாய் இருக்கிறாள் அன்னை.




ஒரு முறை மதுரை மீனாக்ஷி அம்மனின் சித்திரைத்திருவிழாவிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.விழாவின் அங்கமாக ஒரு நாள் அம்பாள் பூப்பல்லக்கில் ஊர்வலம்  ,மதுரை நகர வீதிகளில் .சித்திரை வீதி ,வடக்கு ஆவணி மூல விதி என இன்னும் பல தமிழ் மாதங்களை எல்லாம் பெயர்களாக  கொண்ட வீதிகள் எல்லாம் கூட்டம் ,லட்சோ பலலெட்சம் மக்கள் கூட்டம்.எங்கெங்கு காணினும் மக்கள்... மக்கள் ....மக்கள் கூட்டம்...அப்பப்பா என்ன ஒரு கூட்டம்.அவ்வளவு பக்திநிறைந்த உள்ளங்கள் குழுமிஇருக்கிறார்கள் அங்கே அம்பாளின் வருகைக்காக.இந்த கூட்டத்தில் எப்படி அம்பாளை காண்பது ..எங்கேயாவது ஒரு சிறு வழி கிடைக்குமா என்று தேடி கடைசியில் ஒரு வழியாக ஒரு சிறு இடம் கிடைத்தது.அந்த இடம் வீதியின் வளைவு ,அம்பாளின் ரதம்  நேர்புரம் வந்து ,பிறகுமீண்டும் வலது புறமாக திரும்பும் ஒரு இடம்.நேரம் ஆகிறது ,,நின்று நின்று கால் வலிக்கிறது உட்கார இடமில்லை.கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் சென்றிருக்கும் ,இரவு மணி பத்தினை நெருங்குகிறது.பூப்பல்லக்கு நெருங்கி வருகிறது.




மல்லிகை  மலர்கள் சூடிய ரதம் .மல்லிகையே ஒரு அழகான நறுமணம் நிறைந்த மலர்.கவர்ந்திழுக்கும்  நறுமணம் கொண்ட மலர்.அதுவும் மதுரை மல்லிகைக்கு நறுமணம்  சொல்லவா வேண்டும்.மதுரைக்கே உரித்தான மல்லிகை வாசம் வீசுகிறது.பல்லக்கு எங்கும் மல்லிகை மலர்கள் அழகிய மலர் கொத்துக்கள் மல்லிகை மலர் வளையங்கள் என ஜொலிக்கிறது.ஒரே வெண்மையான மலர்கள் கொண்ட  மல்லிகை மெத்தை பல்லக்கின் உள்ளே,அங்கே தேவி ,அம்பாள் ,சாந்தஸ்வருபிணி வெள்ளி விக்கிரஹமாக ,அழகே உருவான சிலையாக ஒளிர்கிறாள்.வெள்ளியும் வெண்மைநிற மலர்களும் மனதை வேருலோஹம் அழைத்துச்செல்கிறது ஜொலிஜொலிக்கும் வெள்ளி விக்கிரஹம் .அதை சிலையாக  பார்ப்பவருக்கு சிலையாகத்தான் தெரியும்.ஆனால் அது எமக்கு ஏற்படுத்திய தாக்கம் சொல்ல இயலாதது. என்ன ஒரு காருண்யம் முகத்தில். காருண்யம் மட்டுமா  ஸ்மிதமுகீம் எவ்வளவு அழகான ஒரு மெல்லிய புன்னகை நிறைந்த முகம்.வெட்கம் ,ஞானம் ,சாந்தம் ,தெய்வீகம்,என வர்ணிக்கும் அழகு நிறைந்த முகம் .தேவலோக தேவதை யாம் பார்த்ததில்லை இவள் தெய்வீகம் நிறைந்தவள் . மதிமயக்கும் கண்கள்   ஒளி வீசும் மருடிய  பார்வை . காருண்யம் நிறைந்த பார்வை .தம் முன்னே நிற்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தம் அருள் பார்வையை ஒரு தாயைப்போல் அள்ளி வழங்குகிறாள்.ரதம் வருகிறது கொஞ்ச நேரம் நின்று மெதுவாக திரும்பி நிற்கிறது.அங்கே ஒரு  மெல்லிய தேகம் கொண்ட அழகு நிறைந்த ஒரு பெண் அது மின்னும் சிலையா அல்லது பெண் வடிவில் இருக்கும் ஒரு மஹாஅழகு நிறைந்த தெய்வமா ? மனித வடிவில் இப்படி ஒரு பெண்ணை பார்ப்பது முடியாது .சகல பாக்கியங்களும் நிறைந்தவள்.அவள் பார்த்த விதம் தம்  முகத்தில் இருந்த காருண்யம்,தம் உருவத்தில் இருக்கும் தேஜஸ்  எல்லாம் .எப்படி வர்ணிப்பது .....கருணா ஸாகரம். இவள்..அருள் ஒளி வீசும் அற்புத அலைகள் சிதறுகிறது இங்கே.சிலை பேசவில்லை ..அருள் அலை பேசுகிறது.எத்தனை கோடி ஜென்ம ஜென்ம மக்கள் வரினும் எம் ஆசிகள் தொடர்ந்துகொண்டேயிருக்கும் என்பதை சொல்லாமல் சொல்கிறது. உள்ளத்தில்  பக்தியோடு நம்பிக்கையோடு ,இவள் நாமம் பாடிய  அத்தனை உள்ளங்களுக்கும் அருள் அலையால் ஒரு தாய் தம் பிள்ளைக்கு வழங்குவது போல கருணையோடு அருள் ஆசி செய்கிறாள்..தம்மை பார்க்கும் யாவருக்கும் எந்த பாரபட்சமின்றி வழங்குகிறாள்.ஒவ்வொருவரின் சூட்சும உடலுள்ளும் இந்த அலைகள் அருள் விதையாக செல்கிறது.காலம் செல்ல செல்ல ,இவள் செலுத்திய அலையாவும் பயன்பாட்டிற்கு கண்டிப்பாக வந்தே தீரும்.ஒரு துளி பார்வை தான், என்ன ஒரு பார்வை பிரபஞ்சத்தையே வென்ற ஒரு இளம் மாபெரும் அழகு பொருந்திய ஒரு தெய்வீக இளவரசியின் பார்வை ,ஞானம் நிறைந்த  பார்வை.தாம் படைத்த ஸ்ருஷ்டியில் இருக்கும் ஒவ்வொரு உயிருள்ளும் அனுவுள்ளும் ஊடுருவி ஆழ்ந்து நோக்கும் அற்புத ஞானம் பொருந்திய பார்வை.ஸ்ரீ லலிதையும் மீனாக்ஷியையும் ஒன்றுபடுத்தி பார்க்கிறேன்.ஒவ்வொரு நாமமும் மிக்க அழகுடன் அதி அற்புதமாக இங்கே பொருந்துகிறது.மெய் மறந்து நிற்கின்றேன் ..



பக்திமார்க்கத்தில் ஒரு அற்புதமான வழியை லலிதை தருகிறாள்.மனம் மென்மையாகிறது. அருள் அலைகள் ஈர்கப்படுகிறது கருணா ஸாஹரத்தின்  ஈர்ப்பு அலைகள் உள்ளத்தை கவ்விக்கொள்கிறது.லலிதையின் அற்புதங்கள் தொடரும் .இது முடியும் கட்டுரையல்ல .மீண்டும் எழுத  வைப்பாள்.



ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம பாராயண ஸ்லோகம் PDF

ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம ஸ்லோகம் meaning line by line PDF


வாழ்க வளமுடன்

ஓம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஓம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஓம் அகத்தீஸ்வராய நமஹா !!



Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

சூட்சுமங்கள் நிறைந்த ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் !!!