சிந்தனைக்கு எட்டாத சிவரூபம்...!!!





பரவெளியில் ஆடி அசைந்து திருத்தாண்டவம் நிகழ்த்திக்கொண்டிருக்கும்  மஹாசிவமே !! கோடிக்கணக்கான அண்ட பேரண்ட துகள்கலெல்லாம் நின் அசைவை எதிர் நோக்கியே காலம் காலமாய் காத்துக் கிடக்கிறது . !! எக்காலம் பொற்காலம் ,எது  நன்மை தரும் காலம் ,எக்காலத்தில் எந்த நுட்பம் வெளிவரவேண்டும் ,எக்காலத்தில் எந்தவொரு உயிரின்  கர்மவினை கலயப்படவேண்டும் , என்பனவெல்லாம்  தீர்மானித்து  அச்சு பிசகாமால் அற்புதமாய் அருள் ஆட்சி செய்துகொண்டிருக்கும் தூயஜோதியே ! அருள் தாண்டவமாடும் அற்புத பரப்பிரம்மமே !! ஒளியே ! பேரொளியே !! நாயகனே !! நான்மறையே !! தட்டுத்தடுமாறும் போதெல்லாம் நின் சூட்சும அலையே எம்மை தூக்கிதலைநிமிர்த்தி வாழவைக்கிறது எம்பெருமானே!! ஈசனே !! நேசனே!ஆருயிர் வேந்தே !  நீ இட்ட பிச்சை தானே இந்த உயிர் உடல் உள்ளம் யாவுமே ! .ஒரு அருகதையும் அற்றவன் யாம் .எம்முள்ளும் ஆங்காங்கே அத்திபூத்தார் போல நின் சூட்சும அலைகள்  கொண்டு எம் நெஞ்சத்தை வருடிய  நொடிகள்தருணம் யாவும் அலையாய் ஒளியாய் ஆற்றலாய் அற்புதமாய்  நெஞ்சமெங்கும் விரிந்து நின் ஆழ்ந்த பேரமைதியில் சிறிதுநேரம் கண்அயர  வழிவகுத்திருக்கிறது எம்பெருமானே !  ஈசனே !! எம் நாயகனே !! எம்மை மறந்து,உடல் மறந்து ,உயிர் மறந்துநின் அருள் ஒளி அலைகளை தேடித்தேடி வீழ்ந்திருக்கின்றேன் பலமுறை . அன்பால் கசிந்து அன்பால் நெகிழ்ந்து இருக்கும் ,அடியவர் உள்ளமெல்லாம் நின் காரிருள் தாண்டவ அலைகள் வழிந்தோடுகிறது ஐயனே !! என்றும் நின் திருவருள் அருட்பிரகாச ஜோதி அலைகளை எம்போன்ற உள்ளங்கள் உணர அருள்செய்து  வாழ வழிவகை செய்யுங்கள் ஐயனே !! நின் திருவடி பாதம் போற்றி !! போற்றி !!  போற்றி !! 





சென்னையில் வேதஸ்ரேணி எனும் ஓரு இயற்கை எழில்கொஞ்சும் கிராமம்,எங்கெங்கும் விவசாயம் பச்சைபசேல் என நெல்லும் புல்லும்  செடியும் மரமும் என பரந்து கிடக்கின்றது.இயற்கை எழில் சூழ்ந்த மாசற்ற காற்றும் இயற்கைக்கே உரித்தான ரம்மியமான சூழலும் நிறைந்துஇருந்தது.ஏரியும் கிணறும் குட்டையும் நீர் நிறைந்து நெல்மணிகள் சிதறிகிடக்க எங்கெங்கும் விவசாயம் கொடிகட்டிபரந்திருக்கின்றது. கிட்டதட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன் இப்படிஒரு அழகான விவசாய பூமியாக இருந்திருக்கிறது இன்றைய வேளச்சேரி . என்ன கொஞ்சமாவது நம்ம முடிகிறதா ? இன்றைய சூழலில் எங்குபார்த்தாலும் கட்டிடங்களும் வணிகவளாகமும் ,ஜன நெருக்கமும் ,ஒரே traffic கும்  வாகன புகையும் ,ஜனநெருக்கமும் அப்பப்பா ....வேண்டாம் இதற்கு மேல் இன்றைய நிலையை படிக்ககூட  விரும்பவில்லை என்று மனது சொல்லும்முன் ...வாருங்கள் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னேயே சென்று விடுவோம்.


 ஸ்ரீமத் சிதம்பர பெரிய சுவாமிகள்(அய்யாவே தம் உருவத்தை தாமே வரைந்த படம் )

இயற்கை எழில் சூழ்ந்த இப்படி ஒரு  அழகிய பகுதிக்கு  வருகிறார் திருச்சி அருகே இருக்கும் அரியம்பாக்கம் எனும் கிராமத்தை சேர்ந்த ஒரு துறவி.இளம் வயதிலேயே துறவறம் இறைமீது கொண்ட தீராத வேட்கையால். ஒருவன் ஞானியா மகானா என்பது ஏழுவயதிலிருந்து பனிரெண்டுவயதிற்குள் தெரிந்துவிடும் என்பார்கள். சுத்தபரப்பிரமத்தை உணர்ந்த மகான்கள் யாவருமே கிட்டத்தட்ட  ஏழுலிருந்து பனிரெண்டு வயதுற்குள் ,முற்றிலும் துறவறம்  வந்துவிடுகிறார்கள். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்களே அது போல இந்த குழந்தையும்  இறையை நோக்கி பயணம் செய்கிறது.காலம் செல்கிறது ,தம்  முழுமையை நோக்கிய பயணத்தில் வரும் வழியில் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும்  பல சிவஆலயங்களை தரிசித்து ,இறுதியாக வேதஸ்ரேணியில் இருக்கும் ஸ்ரீதண்டீஸ்வரர் கோவிலுக்கு வருகிறார்கள்.கோவிலின் அருகே இருக்கும் குளத்தில் குளித்து எழுந்து வர ,அங்கே ஒரு மூதாட்டி "...இந்த சிவாலயத்தை நீதான் சீரமைத்து இறைபணி செய்யவேண்டும் .." என்று சொல்லிவிட்டு சட்டென  மறைந்துவிடுகிறார்கள். வந்தவர் கருணாஸாகரமான அம்பிகையே என்பதை அய்யா தம் ஞான திருஷ்டியால் உணர்ந்துகொள்கிறார்கள்.

ஆலயப்பணி செய்ய ஆயத்தமாகிறார்கள் .கோவில்சீரமைப்பு வேலை செய்பவருக்கு எப்படி கூலிகொடுப்பது என்பதை நினைவில் கொண்டு ஆழ்ந்திருக்க ,சிவனே வந்து ,"...விபூதியை அளி .." என்று சொல்லிவிட்டு மறைந்தது.அய்யாவும் அவ்வாறே விபூதியை அளிக்க அது மறுகணமே அவரவர் வேலைக்கேற்ப ஊதியமாய் மாறியது.கோவில் சீரமைப்பு பணியில் இடையே ஒரு முறை ஐயா ஆழ்ந்த நிஷ்டையில் இருக்க ,ஐயா மீது படும் சூரிய ஒளியை  நாகம் ஒன்று படமெடுத்து நிழல் கொடுத்தது.இக்காட்சியை கண்ட ஊர்மக்கள் ஐயாவின் பெருமை உணர்ந்து அய்யாவின் திருவடியை வணங்க ஆரம்பித்தனர்.ஒருமுறை அய்யா அவர்கள் உலாவரும் பொழுது ,தேங்காய் திருடும் திருடர்கள் மரத்தின் மேல் ஒளிந்திருப்பதை கண்டு ,அய்யா ஒரு பார்வை பார்க்க திருடர்கள் மரத்தோடு மரமாக ஒட்டிக்கொண்டார்கள்.பிறகு அய்யா "..இறங்கி ..வா "என்றதும் வந்து  தவற்றை உணர்ந்து .,ஐயாவிடம் மன்னிப்புகேட்டு வணங்கிசென்றனர்.அய்யாவுக்கு வழக்கமாக உணவிடும் ஒரு பெண்மணி  ,ஒருநாள் வேலை பளுகாரணமாக ,இன்று சமைக்கவில்லை என்று அய்யாவிடம் பொய்கூறிவிட்டார்.அய்யாவும் சரி என்று அருகில்இருக்கும் கோவிலில் உள்ள திண்ணையில் அமர்ந்துவிட்டார்கள்.அப்பெண்மணி குழந்தைகளுக்கு உணவுஊட்ட ,பானையை திறந்தபொழுது ,உணவின்றி காலியாக இருந்தது.உடனே அப்பெண்மணி தம் தவறை உணர்ந்து அய்யாவிடம் சென்று மன்னிப்புகேட்க ,அய்யாவும் "உணவு  இருக்கிறது  போய்  குழந்தைகளுக்கு கொடு தாயே ! " என்று சொல்ல ,அப்பெண்ணும் மீண்டும் பானையை திறந்த போது ,உணவு தற்பொழுது இருப்பதை கண்டு வியந்தாள்.

கோவில் சீரமைப்பு திருப்பணிகள் முடிந்த பிறகு ,இங்கிருந்து செல்லலாம் என அய்யா முடிவெடுத்து ,கோவிலின் கோபுரவாசல் வழியே வர ,அங்கே ஒரு நாகம் ஐயாவை வழிமறித்ததாம்.சரி என்று வேறுஒரு வாசல் வழியே செல்ல அங்கேயும் அதே நாகம் வழிமறித்ததாம் மீண்டும் .ஈசனே எம்மை இங்கே சிவதொண்டு செய்ய சொல்கிறார் என்பதை உணர்ந்து அய்யாவும் அங்கேயே தங்கி மேலும் மேலும் சிவதொண்டுகள் செய்தார்கள்.

ஒரு முறை தீராத வயிற்றுவலியால் துடித்துக்கொண்டிருந்த ஒரு நவாப்வை அய்யாவிடம் அழைத்துவந்திருக்கிறார்கள்.அய்யாவும் திருநீறு கொடுக்க ,சட்டென நவாபின் வயிற்றுவலி குறைந்தது .நவாபும் மகிழ்ந்து அய்யாவுக்கு தங்க இடமும் நிறைய விளைநிலங்களையும் கொடுத்திருக்கிறார்.அய்யா முக்திஅடையும் நாளை முன்னரே கணித்து ,கார்த்திகை மாதம் விசாக நட்சத்திரத்தில் 4.12.1858 ல் சிவத்தோடு கலந்தார்கள்.ஒவ்வொரு வருடமும் வரும் கார்த்திகை மாதம் விசாக நட்சத்திரத்தில் ஐயாவின் குருபூஜை விழா நடைபெறுகிறது.

அய்யாவின் சீடர் திரு.செல்வமணி அய்யா அவர்கள் அய்யாவின் அருள் ஆசி பெற்றவர் .இக்கோவிலுக்கு நிறைய திருப்பணிகள் செய்கிறார்கள்.அய்யாவிடம் சூட்சுமமாக ஆசிகள் பெற்று அருள்வாக்காக ஒவ்வொரு வியாழக்கிழமையும் சொல்கிறார்கள்.வாசியோகம் இலவசமாக கற்றுக்கொடுக்கிறார்கள்.ஒவ்வொரு வியாழக்கிழமையும் இங்கு அன்னதானம் செய்கிறார்கள். இன்னும் நிறைய தகவல்கள் velacherymahan.org இல் இருக்கிறது படித்து பயன்பெறுங்கள்.




எமக்கு ஏற்பட்ட அனுபவம் இங்கே நிறைய இருக்கிறது.எமை போன்று நிறைய அன்பர்கள், அய்யாவின் சீடர்கள், devotees  அவர்கள் அனுபவங்கள் ஏராளம் ஏராளம் .எமக்கு ஏற்பட்ட ஒரு சிறு அனுபவத்தை எழுதுகிறேன்.


ஒரு முறை தேய்பிறை அஷ்டமி வந்தது ,வழக்கம் போல வீட்டில் பைரவர் ஸ்லோகம் சொல்லி  அய்யாவின் ஜீவசமாதி கோவிலுக்கு சென்றேன் . தேய்பிறை அஷ்டமி அதுவும் அன்று வியாழக்கிழமை,  எனவே அன்று 
 அய்யாவிற்கு அலங்காரம் ஜெகஜோதியாகயிருந்தது. யாமும் அய்யாவின் ஜீவசமாதி சென்று வணங்கி  , பிறகு  அங்கே அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தேன்.ஐயாவை photoவில் பார்த்திருக்கின்றேன்.ஜீவசமாதியில் கருங்கல் சிலைவடிவிலும் பார்த்திருக்கின்றேன். இதை வைத்துக்கொண்டு  அய்யா இப்படி இருப்பார் என எம் மனதில், இந்த போட்டோ  பிம்பத்தை வைத்து  கற்பனை செய்துவைத்திருக்கின்றேன். மூச்சினை  மூலாதாரத்திலிருந்து இழுத்து  ஆக்ஞை கொண்டுவந்து  அங்கே சுழலவிட நெற்றியில், நெற்றி மையத்தில்,ஆக்ஞையில் ஒரு அழுத்தம் தெரியும் 
பிறகு அது தாமாகவே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மெதுவாக சென்றுவிடும். (வாசியோகம் கற்றவர்களுக்கு இதை பற்றி நிறைய தெரியும் ...)இப்படி மறுபடியும் மறுபடியும் இழுத்து இழுத்து ஆக்ஞையில் சுழலவிட ,ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சட்டென ஒரு சூட்சும உருவம் தெரிந்தது .அந்த சூட்சும உருவம் கண்டு வியந்தேன் மெய்சிலிர்த்தேன் பலமுறை .என்ன ஒரு பிரம்மாண்டம் ..கிட்டத்தட்ட ஏழு அடி உயரம் இருக்கும்.நல்ல உடல் பருமன். உயரமும் பருமனும் கம்பீரம் சேர்க்கிறது இந்த சூட்சும ரூபம்,ஒரு ராஜாபோல மிகக்கம்பீரமாக  ஜீவசமாதியில் இருந்து எழுந்து வருகிறது.சடா முடி இதுபோன்ற ஜடாமுடி யாம் பார்த்ததேயில்லை எம் வாழ்நாளில் இன்றுவரை .எத்தனையோ ஆண்டுகள் சிவத்தோடு சிவமாக இருந்தததால் தலை முடி ஆங்காங்கே ஜடை போட்டு ,நிறைய பின்னல் ஜடைதலையெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ஜடாமுடி கம்பீர நடையும் அந்த ஜடாமுடியும் பிரம்மிக்கவைக்கிறது.
  .அருகே இருக்கும் நுழைவாயில் கிட்டதட்ட ஒரு ஆறுஅடிக்குள் இருக்கும் ,இந்த மாபெரும் ஜடாமுடிதரித்த மகானோ கிட்டதட்ட  ஏழுஅடிக்கு மேல் ..சூட்சும தேகம் சும்மா புகுந்து யாவற்றையும் ஊடறுவி கம்பீரமாக ராஜநடைபோட்டு வருகிறது.இந்த ஐயா காலபைரவர் அம்சமா. ... இல்லை ருத்ர தாண்டவமாடும் சிவனின் அம்சமா..!!  இந்த இருதெய்வங்களின் அம்சம் போல அவர் தேகம் இருந்தது ...இப்படி பிரம்மாண்டமாய் அமர்ந்திருக்கும் இந்த அய்யாவிடம் ..யாரும் எதுவும் செய்யஇயலாது .இப்படி ஒரு பிரம்மாண்ட சூட்சுமதேகம் அருள்செய்தால் எவர் வந்து அன்போடு ஆத்மார்த்தமாய்வேண்டினாலும்   அவர்பிரச்சினையெல்லாம் தவிடுபொடியாகிவிடும் என்றே இந்த பிரம்மாண்ட சூட்சுமதேகம் உணர்த்துகிறது.அய்யாவின் ஜீவசமாதிக்கு வரும்போதெல்லாம், ஐயா எப்படி இருப்பார்கள் அவர்   சூட்சுமதேகத்தை பார்க்கவேண்டும் என்று கோரிக்கையும் வைத்தேன் .இப்படி ஒரு பிரம்மாண்டகாலபைரவர் அம்சமாகவும் ,சிவஅம்சமாகவும் காட்சிதருவார் என்று துளிகூட நினைக்கவில்லை.இந்த நிகழ்வு எப்பொழுது நினைத்தாலும் உடலை புல்லரிக்கசெய்கிறது .பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது ...அற்புதம்..அற்புதம்...எம் உள்ளத்துள் எப்பொழுது நினைத்தாலும் ஆற்றல் தருகிறது..நிறைய பாடங்களை கற்றுத்தருகிறது. 


சிந்தனைக்கு எட்டாத சிவரூபத்தை காண் எனும் மூலமந்திரத்திற்கு சொந்தகாரர், சுத்த பரப்பிரம்மம் ,மகான் அய்யா ஸ்ரீமத்  சிதம்பர பெரிய ஸ்வாமிகள்.சென்னையில் இருக்கும் அன்பர்கள் மற்றும் வெளிஊர்களில் இருக்கும் அன்பர்கள்  நேரம் ஒதுக்கி வாழ்வில் ஒருமுறையேனும்  வந்து இந்த அய்யாவின் ஜீவசமாதியை தரிசித்து ,சூட்சுமதேகத்தில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு அற்புத சுத்தபரப்பிரம்மத்தை வணங்கி ஆசிகள் பெற்று செல்லுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..!!

கோவில் முகவரி :ஸ்ரீமத் சிதம்பர பெரிய சுவாமிகள் ஜீவத்திருக்கோயில், குருநானக் சாலை, வேளச்சேரி, சென்னை-600042


வாழ்க வளமுடன் !!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!



Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்