ஸ்ரீ ஹனுமான் பாதம் போற்றி !!!





 தூரம் ....தூரம்...தூரம் என எங்கோ செல்கிறது ..சென்றுகொண்டேயிருக்கிறது... மனதால், கற்பனையால், சிந்தனையால் , வேகம் ...வேகம் ...வேகம் என எவ்வளவு வேகமாக சென்றாலும் ,காலம்... காலம் ...காலம் என பிறவிகள் கடந்துகொண்டேயிருக்கிறது.சிற்றறிவிற்கெல்லாம் எட்டாத சகலமும் அறிந்த பெயரிடமுடியா பேரண்ட பிரபஞ்ச பெருவெளியே ..!! வற்றா ஆற்றலே !!அண்டகோடி  சூரியகுடும்பங்களையும் நொடிபொழுதில் இயக்கும் சர்வவல்லமை நிறைந்தோனே ..!! ஆயிரம் ஆயிரம் கோடி கோடி ஆண்டுகள் சென்றாலும் நின் அற்புத இந்த  பிரபஞ்ச திருத்தாண்டவம், படைத்து,காத்து ,அழிக்கும் இரகசிய வித்தை ,அறிந்தவர் யாருளர் ஐயனே !! அற்ப குறுகிய வாழ்க்கை பயணத்தில் ,நின்னை நின் பெருமையினை ,நினது ஆற்றலை எப்படிஇருக்கும் என்று எண்ணுவதற்குள் வாழ்க்கை சட்டென முடிந்துவிடுகிறது.எங்கோ செல்கிறது..நாட்களும் நிமிடங்களும் கரைந்து ஓடுகிறது..ஒரு இடைப்பட்ட காலம் தானே இது !! ..பெருமானே !! நீ இட்ட பிச்சைதானே இந்த வாழ்வு !! . எம் உள்ளத்துள்... ஆழ்ந்து... ஆழ்ந்து அமிழ்ந்து ...அமிழ்ந்து..எமது ஆணவம் மாயை கன்மம் விலக்கி விலக்கி செல்கிறோம்..அணுவில் ஒரு நுனியில் நின் அன்பெனும் தன்மை உறைந்துகிடப்பதை உணர்கிறோம்..உள்ளம் நிறைந்து நிற்கிறோம் ..அன்பால் நிறைந்து ..அமைதியின் விளிம்பில் இருப்பதாய் உணர்கிறோம்...அண்டசராசரங்களைஎல்லாம் ஆளும் மாபெரும் சர்வேஸ்வரன் ..இந்த அற்ப மானுடத்தின் நெஞ்சதுள்ளே இருக்கும் அணுவின் நுனியில் அன்பால் உறைந்துகிடப்பதை உணரும் போது  பெருமகிழ்ச்சியும் பேரானந்தமும் சூழ்கிறது ஐயனே ..!! எங்கிருந்தோ வந்த அருள் அலை மிக ரம்மியமாய் ,அழகாய் ,அமைதியாய் ,மிதமாய் எம் நெஞ்சம் ஈர்த்து கவ்விக்கொள்கிறது !! எம் ஈசனே !! நின் திருவடி போற்றி !! நின் அருள் அற்புததாண்டவம் உணரமுற்பட துடிக்கும் கோடான கோடி உள்ளங்களுக்கும்  என்றென்றும்  நின்  அருள் ஆசி அலைகள் ஏற்படுத்தும் அற்புதம் தொடரட்டும் .!!என்றும் நின் திருவடியில் சரணாகதி  சர்வேஸ்வரனே !!



இறை  எடுத்த வடிவங்கள் எல்லாம் போற்றுதலுக்குரியது.கால சுழற்சிகேற்ப தாம் படைத்த ஜீவராசிகளின் துயர்தீர்க்க ,இறையே நேரில் இறங்கி வந்து இன்னல் தீர்த்த மானுட இறைவடிவங்கள் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது .அப்படி இறை எடுத்த ஒரு வடிவம் ஒரு ஆற்றல் நிரம்பிய ,அதிசயம் நிரம்பிய ,அறிவு நிறைந்த மகாபராக்கிரமம் நிறைந்த  இறைவடிவம் ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர்  . ஸ்ரீ இராமாயணம் தெய்வீகம் நிறைந்தது ,மிக புனிதமானது.நேரம் கிடைப்பவர்கள் ஸ்ரீராமகாவியத்தை மீண்டும் மீண்டும் படிக்கவேண்டும் எனும் எம் தாழ்மையான வேண்டுகோளை இந்த வலைத்தளம் மூலம் வைக்கிறோம்.ஏனெனில் அந்த அளவிற்கு வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் அங்கே பொதிந்துகிடக்கிறது.பாரத தேசத்தில் வாழ்வதற்கு பெருமை கொள்ளவேண்டும் அதிலும் தமிழகத்தில் வாழ்வதற்கு மிகபெரும் பெருமை கொள்ளவேண்டும்,ஏனெனில் இங்கு ஏற்படுத்திவைக்கப்பட்ட கலாச்சாரம் ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் ஒரு பெருமை .அதன் பெருமை தொடரும் வண்ணம் ஒவ்வொரு விழா, பண்டிகை,நோன்பு, என இறையை நம் வாழ்வோடு தொடரும் வண்ணம் வழிவகை செய்துள்ளனர்.இந்த புனிதமான புரட்டாசி மாதத்தில் ஸ்ரீராமகாவியத்தை படிக்க வேண்டும் ,அறிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்த முன்னோர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். லாஸ்ஏஞ்சல்லிருந்தும் கலிபோர்நியாவிலிருந்தும் என்ன பயன் ? ஸ்ரீ ராமர் பாதம் பட்ட மண்ணில் இருக்கும் சுகம் அங்கு வருமா ?


எமது சிறுவயதில் எமது தந்தையின் வேண்டுகோளின் படி ராமாயணம் படிக்க நேர்ந்தது.எங்கள் ஊரில் புரட்டாசி மாதத்தில் இராமாயணம் படித்தல் என்பது காலம் காலமாக இருந்துகொண்டிருக்கிறது.சிறுவர்களாக சேர்ந்து பொதுவான ஒரு இடத்தில் ராமாயண காவியத்தை ,ஸ்ரீ ராமர்  படம் வைத்து தொடர்ந்து பத்துநாட்கள் படிப்போம். இதில் மூன்றாம் நாள் அன்று ஸ்ரீ ராமருக்கு கல்யாணம் மற்றும் கடைசிநாளில் ஸ்ரீ ராமருக்கு பட்டாபிஷேகம் செய்துவைப்போம். சிறிய அளவில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக பெரிய  அளவில்  வளர்ந்தது  ஒவ்வொரு நாளும் ஒரு உபயதாரர் அவர்களாகவே வந்து அன்றைய பாராயனத்திற்கு தேவையான  பூஜை சாமான்கள் முதல் விநியோகம் வரை அனைத்தும் அவர்களாகவே செய்து தருவார்கள். இதில் எமக்கு ஏற்பட்ட அனுபவம் மிக அற்புதம். இந்த பத்து  நாட்களில் ஒவ்வொரு நாளும் இரவு கனவில் ஆஞ்சநேயர் வருவார்.விண்ணில் பறந்துகொண்டே வருவார் .இங்குமங்கும் செல்வார்.அவர் வரும் விதம் ,வானத்தில் பறக்கும் அற்புதம் ,அழகான  தேஜஸ் நிரம்பிய முகம் ,புஜ பலம் ,அவர் கட்டுமஸ்தான உடம்பு , எல்லாம் எமக்கு சிலிர்ப்பாகவும், ஒரே வியப்பாகவும் ,ஆச்சர்யமாகவும் இருக்கும்.முக்கியமாக அவர் பறக்கும் விதம் ரொம்பபிடிக்கும் . எமக்கு இது உண்மைதானா என்று சட்டென  எழுந்துவிடுவேன் ,பிறகு  கனவு தான் என்று மீண்டும்  தூங்கி விடுவேன் .வெகு  காலம் கழித்து தான் தெரிந்துகொண்டேன் கனவாகினும் ,அதில் இறைவடிவங்கள் காண்பது நன்மைபயக்கும் என்று.






போற்றுதளுக்குறிய  பெருமையுடைய மண், இந்த  பாரததேசம் ..ஸ்ரீ ராமரிடம் ".. கண்டேன் சீதையை ..." என்று ஹனுமார் சொன்ன இடத்தில் , இன்று யாமும் அந்த காட்சியை கற்பனை செய்து , ,எம் பாதங்களை வைத்து இங்கும் அங்கும் நடந்து பெருமை கொள்கிறோம்.ஸ்ரீ ஹனுமான் எனும் தெய்வம் நடந்த இடம் இந்த இடம் காலம் கடந்து சென்றாலும் ,இதோ இந்த மண்ணில் ,இந்த காற்றில் இங்கிருக்கும் வெளியில் ,ஆஜானுபாவனின் அருள் அலைகள் நிறைந்திருக்கும் என்பது உண்மை.

மகேந்திர மலையில் (இன்றைய நம்பி மலை)  ஆஞ்நேயர் கம்பீரமாக நின்று விஸ்வரூபமாக வளர்ந்து அவருடைய வெகு தூரத்தில் பார்க்கும் சக்தியால், அங்கிருந்து இலங்கையை காண்பதும் ,  இந்த மலையிலிருந்து தானே கடல் தாண்டினார் எனும் காட்சியை கொண்டுவந்து ,எப்படி இருந்திருப்பார் என நினைக்கும் போதே ஒரு கம்பீரமும் ,ஆற்றலும் மனதிற்குள் ஊடுருவுவதை பார்க்கமுடிகிறது. அந்த அளவிற்கு பெருமை சேர்க்கிறது.







 எதிரிகள் எப்படி இருந்தாலும் எவ்வளவு வலிமைஉடையவனாக இருந்தாலும் அவர்களை தூக்கி பந்தாடுவதில்  மிகவும் சர்வவல்லமை  படைத்தவர்  ஸ்ரீ ஆஞ்சநேயர் .அப்படி எனில் எந்த அளவிற்கு அவர் பராக்கிரமம் நிறைந்தவர் என்பதை நினைக்கும் போதே அஞ்சனை மைந்தனின் ஆற்றல் விஸ்வரூபம் எடுக்கிறது.ஆற்றல்அளவிடற்கரியது என்று புரிந்துகொள்ளமுடிகிறது.மிக கூர்மையான அறிவு கொண்டவர்,நான்கு வேதங்களையும் கற்று தேர்ச்சிபெற்றவர்.நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உடல் பலம் ,மனோ பலம் வலிமை பெற்றவர்.வரபோவதை யோசிக்க தெரிந்தவர் ,கொடுக்கும் காரியத்தை ஸ்ரத்தையோடு முடிக்கும் சாமர்த்தியம் தெரிந்தவர்.இவ்வளவு ஆற்றல் இருந்தும் மிக எளிமையாக ஸ்ரீ ராம நாமம்  ஒன்றே தம் உயிர்மூச்சென்று ,என்றென்றும் ஸ்ரீராமருக்கு தொண்டுகள் செய்து அவர் திருவடிபணிந்தவர்.
மானுடம்  கற்றுக்கொள்ளவேண்டும் இங்கே. ...எவ்வளவு மாபெரும் ஆற்றல் கொண்டவரிடம் எத்தனை எளிமை ..!!   ஆண்டாண்டு காலம் ஸ்ரீ ஹனுமானின் திருவடியில் வீழ்ந்துகிடந்தால் மட்டுமே இது சாத்தியம் !!

ஸ்ரீ ஹனுமான் எப்படி இருந்திருப்பார் அவர் ஆற்றல் எத்தகையது என்பதை வால்மீகியும் ,கம்பனும் அவர்கள் சொல்வண்ணம் மூலம் , ஸ்லோகமாய் கவியாய் படித்தல் என்பதும் ஒரு சுகமே... ஒரு  அற்புதமே.ஏனெனில் வாழ்வின் புதிர்களுக்கெல்லாம் தீர்வு  அங்கே கொட்டிகிடக்கிறது.ராமாயணத்தின் எல்லா காண்டங்களையும் படிக்கமுடியாவிட்டாலும் ,சுந்தரகாண்டம் மட்டுமாவது படித்தல் என்பது மிக மிக முக்கியமானது.



ஸ்ரீஹனுமான்!!  ஸ்ரீ ஆஞ்சநேயா !! என்று  உணர்ந்து சொல்லும் போது ,அவரின் தன்மை அவரின் ஆற்றல் அவர் செய்த கார்யம் ,அவரின் குணாதிசயங்கள் எல்லாம் சூட்சுமமாய் ஒளிந்துகொண்டிருப்பது புலப்படும்.அதுவே மெல்ல மெல்ல அலையாக சொல்பவரின் உள்ளத்துள் புகுந்து ,இருக்கும் துர் சக்தியை விரட்டியடித்து ,தெய்வீக அலைகளை நிரப்பி வாழ்வை திறம்பட எதிர்கொள்ளத்தேவையான ஆற்றலை வாரி வழங்கும் என்பது யாம் உணர்ந்த உண்மை.


புத்திர்-பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்-படுத்வம் ச ஹநூமத் ஸ்மரணாத் பவேத் ||

ஸ்ரீஹனுமான்  பாதம் பணிந்து அவரை வணங்குவதால் ,புத்தி, பலம், யசஸ், தைர்யம், அபயத்வம், ஆரோக்யம், அஜாட்யம்,வாக்-படுத்வம் இவை யாவும் கிடக்கிறது என்கிறது ஸ்லோகம். சுந்தரகாண்டம் படித்து ஸ்ரீ ராமகார்யத்தில் ஹனுமானின் ஒவ்வொரு செயலையும் நன்கு கவனியுங்கள் ,ஒவ்வொன்றும் ஒரு அறிவுரை சொல்கிறது ,ஒவ்வொன்றும் ஒரு அழகான தீர்வினை சொல்றது  நம் அன்றாட தேவைகளுக்கு  தீர்வுகளும் கொட்டிக்கிடக்கிறது.வாழ்வில் சோம்பேரித்தனமாக ஒரு பிடிப்பு இல்லாமல் இருப்பவர்கள்,எதுவுமே என்னால் சரியாக செய்யமுடியவில்லையே  ,எதிலுமே ஒரு அலுப்பு தட்டுகிறது எனும் நிலையில் இருப்பவர்கள் ,சுந்தரகாண்டம் படியுங்கள்.அனுமனின் ஒவ்வொரு செய்கையையும் அணுஅணுவாய் ரசியுங்கள் ,திரைபடம் போல காட்சிகளை கண்டு உங்கள் மனதுள்ளே ஹனுமனின் ஆற்றலை மகாபராக்கிரமத்தை எண்ணி வியந்து பாருங்கள் அது உங்கள் வாழ்வையே புரட்டிபோட்டுவிடும்.

வால்மீகி முனிவர் எழுதிய சுந்தரகாண்ட ஸ்லோகங்கள் ஆயிரம் ஆயிரம் அதில் எந்தெந்த ஸ்லோகம் படித்தால் என்னென்ன நன்மை ? எந்தெந்த ஸ்லோகம் எந்தெந்த தீர்வுகள் தரும்  என்பதை தந்தை ஸ்ரீ அகத்திய மகரிஷி ,காலம் சென்ற அய்யா ஹனுமத்தாசன் அவர்களுக்கு ஜீவ நாடி மூலம் சொல்லிருக்கிறார்கள்.அய்யாவும் அத்னை சுகம் தரும் சுந்தரகாண்டம் எனும் தலைப்பில் புத்தகமாக எழுதிஇருக்கிறார்கள்.படித்து பயன்பெறுங்கள்.



ஏழரை சனியால் கஷ்டபடுகிறவர்கள் அஷ்டமத்து சனியால் பாதிக்கப்பட்டவர்கள் ,சனி மகாதிசையில் கேது புத்தியோ, கேது திசையில்  சனி புத்தியோ  நடப்பவர்களுக்கு இந்த ஸர்க்கத்தை  தினமும் பாராயணம் செய்தால்,அவர்கள் ஹனுமானின் அருளால் அச்சம் விலகி நலம் பெறுவார்கள்.இவை அகத்திய மகரிஷி ஜீவ அருள் வாக்கு.!!





Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்