தாய் சக்தி - II



பிரபஞ்சம் மிக அழகானது.தாம் படைத்த கோடான கோடி உயிர்களை காத்து அரவணைத்து அருள் ஆசி செய்கிறது தாயெனும் மாபெரும் சக்தி .நாம் வாழும் இந்த சூரியகுடும்பம் போல் ஆயிரம் ஆயிரம் சூரிய குடும்பங்களையும் ,அதில் வாழும் உயிர்களையும் மற்றும் தாம் படைத்த  கோடான கோடி ஜீவராசிகளையும் காத்து அரவணைத்து ,அன்பும் கருணையும் நிரப்பி அருள் ஆசி செய்து  ஆட்சிசெய்கிறாள் அன்னையவள்.ஒவ்வொரு உயிரும் அற்புதமானது.ஒவ்வொன்றும் ஒரு தனித்தன்மை நிறைந்தது .ஒவ்வொரு உயிரும் ஆழ்ந்து விரிந்து படர்ந்து அதன் திறமையை இந்த பிரபஞ்சஎல்லை வரை விரிக்கும் அளவிற்கு வெளியும் ஆற்றலும் நிறைந்து படைக்கப்பட்டிருக்கிறது இந்த பிரபஞ்சம் . பிரம்மாண்டமாய் மிக பிரம்மண்டமாய் விரிந்துகொண்டேயிருக்கிறது இறை.இங்கே யாருக்கும் பாதகம் நிகழாதமுறையில் செய்யப்படும் ஒவ்வொரு செயலின் விளைவும் மிக நேர்த்தியானது அதில் தோல்விகள் வெற்றிகள் என்பதெல்லாம் ஒன்றும் இல்லை.இங்கே எல்லாம் ஒன்றுதான் எந்த போட்டியும் இல்லை.பொறாமையும் இல்லை.ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு ஜடமும் அதன் இயல்பில் ,அது என்னகாரணத்திற்காக படைக்கப்பட்டதோ அதை நிறைவேற்றி , இயல்போடு ஒவ்வொரு நொடிப்பொழுதையும் இறையோடு இசைந்து தமது பணியினை மிக அற்புதமாக செய்துகொண்டிருக்கிறது.




ஸ்ரீ லலிதை  அழகே உருவானவள்.அன்பும் கருணையும் நிறைந்த கண்கள் உடையவள்.தாம் படைத்த இப்பிரபஞ்சத்தை ஆழ்ந்து பார்க்கும் மிக அழகான  கண்கள் கொண்டவள்,இவள் இந்த உலகத்தை பார்க்கும் பார்வை அது தரும் அர்த்தம்  மிக அற்புதமானது யாருமே கணிக்க இயலாதது.மிக உயர்ந்த குணமுடைய பெண் ,இவளே மிக முதன்மையானவள் இவளுக்கு மேல் உயர்ந்த  குணமுடைய பெண் என்று யாரும் இல்லை.குருவிந்தம் எனும் மிக அரியவகை மாணிக்கம் பதித்த கீரிடத்தினை அணிந்தவள்.இந்த குருவிந்த மாணிக்க கீரிடத்தினை யார் ஒருவர் தியானிக்கிறார்களோ அவர்களுக்கு மிகுந்த செல்வமும் ஆன்மிகத்தில் ஒரு மிகபெரிய முன்னேற்றமும் ஏற்படுமாம்.அவ்வளவு மகத்துவமுடையது.நெற்றியிலே கஸ்தூரி பொட்டினை சூடியவள் .சம்பகம் புன்னாகம் அசோகம் சௌகந்திகம் எனும்  நறுமணம் மிக்க மலர்களை தம் கூந்தலில் சூடியவள்.தேவியின் கூந்தல் மிக்க நறுமணம் உடையது. சம்பகம் புன்னாகம் அசோகம் சௌகந்திக மலர்களெல்லாம் தேவியின் கூந்தலில் இருக்கின்ற காரணத்தினால் அவைகள் நறுமணம் பெறுகிறதாம்.அந்த அளவிற்கு நறுமணம் வீசும் கூந்தலினை கொண்டவள். அன்று மலர்ந்த சம்பகம் பூ போல அழகிய மூக்கினை உடை யவள்.அவள் மூக்கில் இருக்கும் மூக்குத்தி தரும் ஒளி நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளியை விட மிக பிரகாசமானது.அந்த மூக்குத்தியில் அழகிய மாணிக்கங்களும் முத்துக்களும் நிறைந்திருக்கிறது. சிவப்பு நிற மாணிக்கம் செவ்வாய் கிரகத்தையும் வைரம் சுக்கிரனையும் குறிக்கிறது .செவ்வாய் சுக்கிர கிரக தோஷம் உள்ளவர்கள்  தாயவளின் மூக்குத்தியில் இருக்கும் இந்த இரண்டினையும் வழிபட கிரகபாதிப்பு விடுபடுகிறது .தாயவளின் உதடு ,பவள சிவப்பு ,கொவ்வை சிவப்பு நிறமெல்லாம் தோற்றுபோகும் அளவிற்கு சிவப்பானது.அழகிய ஒளிவெள்ளம் நிறைந்த முகம் .தேவியினுடைய கன்னங்கள் ஒளிமிகுந்ததாகவும், மென்மையாகவும், ஒளி பட்டால் தெறிக்கும் தன்மையுடையதாகவும் இருக்கிறது.தாயவள் மேனியும் செந்நிறம் ,கன்னங்கள் சிவப்பு நிறம் ,தேவியினுடைய ஆபரணங்கள் எல்லாம் செந்நிறம்.ஆக யாவும் செக்கச்செவேல் என செந்நிறமாய் ஒளிர்கிறது. செந்நிற ஒளிப்பிம்மமாய் மிளிர்கிறது.எதுவமே இவளிடமிருந்தே தொடங்குகிறது .இவளை போல் அழகு யாரும் இல்லை .இவளை விட சிறந்தவள் என எதற்கும் ஒப்பீடு செய்யவோ உதாரணம் சொல்லவோ யாருமே இல்லை .ஏனெனில் எதற்கும் ஒரு மூலமானவள் .சர்வமங்களம் நிறைந்தவள்.சாந்தஸ்வரூபிணி.இவள் பேசும் அமுத மொழி அழகு .இவள் சிரிக்கும் சிரிப்பு அழகு.இவள் பார்க்கும் பார்வை அழகு.இப்படி ஸ்ரீ லலிதையின் சகஸ்ரநாமம் படிக்க படிக்க பிரம்மிப்பாய் தொடர்கிறது.

குலாம்ருதைக-ரஸிகாயை 

குலாம்ருதைக-ரஸிகாயை என்பது குலாமிருதத்தை இரசிப்பவள்.அதாவது நமது உடலில் தலைஉச்சியில் இருக்கும் சக்கரம் சகஸ்ராதாரம் .இங்கே சிவம் இருக்கிறது.சிவ ஆற்றல் குலம் இருக்கிறது.மூலாதாரம் என்பது நமது முதுகு கடைசி முள்எலும்புத்தண்டின் உட்புறம் அதாவது கருவாய்க்கும் எருவாய்க்கும் மத்தியில் இருப்பது மூலாதாரம்.இங்கே குண்டலினி எனும் சக்தி உறங்குகிறது.இந்த குண்டலினி மேலே எழும்பி ஒவ்வொரு சக்கரமாக மூலாதாரம் ,சுவாதிஷ்டானம் ,மணிபூரகம், அனாகதம் ,விசுத்தி, ஆக்ஞை தாண்டி பிறகு தலைஉச்சியில் இருக்கும்  சகஸ்ராதார சக்கரத்திற்கு வரும்பொழுது அங்கே இருக்கும் சிவத்தோடு இணைகிறது அப்பொழுது  அமிர்தமழையாக பொழிகிறது.இந்த அமிர்தமழையை இரசிப்பவள் .இவள் ரசிப்பதற்கு  அதன் சுவைமட்டும் காரணம் இல்லை .ஏனெனில் இங்கே சிவம் இருக்கிறது.என்றுமே சிவத்தை விட்டு நொடிப்பொழுதும் பிரியாதவள்.ஸிவாங்கினி,  என்றும் தமது ஆழ்ந்த அன்பினால் சிவனை விட்டு இமைப்பொழுதும் பிரியாதவள் .இந்த அமிர்தமழையின் ஒரு துளியை ,தொண்டைக்கு மேலே இருக்கும் உள்நாக்குக்கு மேலே இருக்கும் மனோன்மனி மையத்தில் அமிர்தமழையாக வழியும் துளியை, சுவைக்க ,ஒரே ஒரு துளி போதும் ,பிறகு பசிஎன்பதே அவருக்கு கிடையாது.பிணி மூப்பு நோய் என எதுவும் கிடையாது.இறையோடு இறையாக மனதை தேவியின் நாமாக்களை எண்ணிக்கொண்டே பேரானந்தத்தில் இருக்கலாம்.எனவே ஸ்ரீ லலிதாசகஸ்ரநாமம் சொல்வதால் அமிர்தமழையின் துளியை சுவைக்கும் அளவிற்கு அட்சரங்கள் இருக்கிறது.அதன் அதிர்வுகள் அமிர்தமழையை நமது உடலில் பெறவைக்கும் அதிநுட்பம் நிறைந்தவை.குலாம்ருதைக-ரஸிகாயை எனும் நாமவிற்கு உண்டான விளக்கம் இது.இதை  அறிந்து  இந்த அளவிற்கு பொருள் உணர்ந்து ஸ்ரீ லலிதாசகஸ்ரநாமம் சொல்லுதல் என்பது மிக உயர்ந்த ஆற்றலை உள்ளத்திற்கு தரும்.


இங்கே இன்னும் ஒரு சூட்சுமம் மறைந்திருக்கிறது.இது குருவின்' ஆசி இருந்தால் மட்டுமே சாத்தியம்.தனஞ்செயன் எனும் வாயு உடலில் உயிர்  விட்டுப் பிரியும் பொழுது இந்த வாயுவானது மேலே எழும்பி இந்த உடலை சிதைக்கும் வேலை செய்யுமாம் .சிதைத்தல் என்றால்  உடலை பூமியில் மண்ணோடு மண்ணாக மட்க வைக்கும், சிதைக்கும்வேலையை செய்கிறது  இந்த தனஞ்செயன் வாயுவை  ஏமாற்றி அதாவது  எப்படி ஏமாற்றுதல் என்றால் மிகச்சிறந்த பிராணயாமப் பயிற்சியினாலும் குருவின் வழி சென்று கற்கக்கூடிய  வாசியோக பயிற்சியினாலும் உடலில் இருக்கும் மூச்சினை மிக மென்மையாக மாற்றி மிக நுண்மை சுவாசம் பழகி ,பிறகு கொஞ்சம் கொஞ்சமாக  உடலில் அசைவு இன்றி ,சுவாமின்றி இருக்க பழகி ,உடலை ஆடாது அசையாது வைக்கும் பொழுது ,இந்த தனஞ்ஜெயன் வாயு ,உயிர் பிரிந்துவிட்டது என நம்பி ,மேலே  எலும்புமாம் ,தனஞ்செயன்  வாயு எழும்பி மூலாதாரத்தில் இருந்து கிளம்புமாம் அப்படி கிளம்புகின்ற வாயு  மேலே சென்று ஸஹஸ்ராரத்தில் இருக்கும் சிவத்தோடு இணைகின்ற பொழுது அங்கே அமுத மழை பொழிகிறது.அந்த அற்புத அமிர்தமழை பெய்ததால் உடலுக்கு உயிருக்கு மிகப்பெரிய சக்தியையும் ஆற்றலையும் சித்துக்களையும் தருகிறது . இதுவரை அவர் மனிதர் என அழைக்கப்பட்டவர் இந்த நிகழ்வுக்கு பிறகு அவர் மகான் சித்தர் என்னும் அடுத்த நிலைக்கு மாறுகிறார் அவரால் எதுவும் சாதிக்கமுடியும் அவருக்கு எதுவும் சாத்தியமே.திரிகால ஞானிஆகிறார் அவரால் எதையும் கணிக்க முடியும் அவருக்கு நோய் பிணி மூப்பு என எதுவும் அவருக்கு கிடையாது அவர் சொல்வதெல்லாம் வேதவாக்கு .எது நிகழுமோ அதை அழகாக கணித்துக் கூறும் தன்மை பெறுகிறார்.இவை தாயவளின் ஆசியாலும் குருவின் ஆசியும் இருந்தால் மட்டுமே சாத்தியம்.அந்த அளவிற்கு மிகஅற்புதமான அட்சரத்தால் உடலிலே அமிர்தமழையை பொழியவைக்கும் ஆற்றல் நிறைந்தது ஸ்ரீ லலிதாசகஸ்ரநாமம்.





ஸ்ரீ லலிதை உலகம் மிக அற்புதமானது.இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த ஸ்தூலஉலகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது .முதலில் நமது மன அலைச்சுழலை குறைத்து ,மெல்ல மெல்ல உட்செல்ல முனைந்தால் தான் இது சாத்தியமாகிறது .இல்லையெனில் நாம் வாழும் இந்த ஸ்தூல உலகத்தின் நாம் உறவாடும் இந்த அலையக்கம் மிக அதீத அலைச்சுழல் கொண்டிருக்கிறது,ஸ்ரீ லலிதை பாராயணம் அதனால் பெறப்படும் அதிர்வு அலைகள் உடலில் உள்ளத்தில் மிக மெல்லிய வெப்பத்தை ஏற்படுத்தி மனதை எங்கோ அழைத்துச்செல்கிறது.மெல்ல மெல்ல அலைச்சுழல் குறைத்து தாயவளின் கருணையை உணர இதமாக கருணை கவ்விக்கொள்கிறது.கொஞ்சம் கொஞ்சமாக  ஆனந்தம் நிறைகிறது .அன்பும் கருணையும் நிறைகிறது..ஆழ்ந்தும் அகன்றும் விரிந்தும் யாவற்றையும் ஊடறுவி செல்லும் ஒரு பயணம்.மெல்லிய மனது அமைதியால் ஆனந்தம் கொள்கிறது.கேட்பாரற்று சோவென கிடக்கும் வெளி,எதை பற்றியும் கவலை துளியும் இல்லை.போட்டி இல்லை பொறாமை இல்லை.எந்தவித கமிட்மெண்டும் இல்லை.எல்லாம் ஒரு நியதிக்கு உட்பட்டு மிக ஆனந்தமாக தத்தம் செயல்களை மிக அற்புதமாக நடத்திக்கொண்டிருக்கிறது.ஆனந்தம், பேரானந்தம் ,.அமைதி, பேரமைதி என பரந்து விரிகிறது.இப்படி ஆழ்ந்து விரிந்து படர்ந்த பயணம் , தாய் தம் ஞானப்பார்வையால் யாவற்றிக்கும் அருள்ஆசிசெய்கிறாள், தாயவளின் அன்பும் கருணையும் எங்கெங்கும் மிளிர்கிறது .கண்களில் நீர் சூழ்ந்துகொள்கிறது.ஆனந்த கண்ணீர் பெருகிசெய்வதறியாது ஆழ்த்துகிறது. ஒருமுறையேனும் இது போன்ற ஆனந்தகுளில் அவசியமாகிறது  கண்கள் புத்துணர்ச்சி பெறுகிறது.இதற்கு பிறகு, இந்த ஆனந்த குளியலுக்கு பிறகு தான், கண்களே அழகு பெறுகிறது.ஒரு கண்ணிற்கு அழகு என்பது வெறும் புறத்தோற்றம் மட்டும்  அல்ல அது எந்தஅளவிற்கு அன்பும் கருணையும் நிறைந்திருக்கிறது என்பதை பொருத்து தான் கண்களின் அழகு நிர்ணயிக்கப்படுகிறது.
ஸ்ரீ லலிதாசகஸ்ரநாமத்தில் எம்மை பிரமிக்க வைத்த வரிகளின் சில துளிகளின் விளக்கம் மேலே சொன்னவை.இன்னும் நிறைய எம்முள் தாக்கத்தை ஏற்படுத்திய வரிகள் ஏராளம்  ஏராளம் ,யாவும் இங்கே அகத்தியத்தில் தொடர்ந்து எம்மோடு  பயணித்துவரும் உள்ளங்களுக்கு கட்டுரை வழியாக ,யாம் உணர்ந்தவண்ணம் தெரியபடுத்த விளைகிறோம்.

வாழ்க வளமுடன்

ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!

Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்