ஸ்ரீலஸ்ரீ சுப்பையா சித்தர் -திருக்கழுக்குன்றம்




எம்பெருமானே ..!! ஈசனே ..!! சர்வேஸ்வரனே ..!! காலத்தின் நாயகனே ..!! எம் புயங்கப்பெருமானே ..!! சகலமும் நிறைந்தோனே ..!! தூய வெண்பனி போல  உள்ளத்தை கசியவைக்கும் நின் தார்மீக அன்பெனும் அலைகளால் எம்மை உறையவைத்து, கண்களால் பார்க்கும் தூரம் வரைக்கும்,காதுகளால் கேட்கும் தூரம் வரைக்கும் , ஜடமாகவும் ஜீவனாகவும் காட்சியளித்து ,இன்னும் தாண்டி பார்க்க இயலாத ,கேட்க இயலாத எல்லைகளற்ற  எங்கோ....எங்கெங்கோ....அடர்ந்து படர்ந்த வெளியில் ஊமையாக ,சப்தமற்று ,நிறமற்று ,மொழியற்று கேட்பாரட்று கிடக்கும் ஒன்றுமில்லா ஒன்றோனே..!! அன்பெனும் அலைகொண்டே நின்னை, நின்  பெருமையினை நின் கருணையினை , எல்லா உயிர்களையும் யாவற்றையும் வாரியனைக்கும் நின் மாசில்லா பாசத்தன்மையினை, நுட்பத்தை  அதிநுட்பத்தை ,எண்ணி எண்ணி பெருமை கொண்டு ,விம்மி விம்மி, விழிகள் பிதிங்கி ,உள்ளம் நெக்குருகி செய்வதறியாது சரணாகதியில் நிற்கின்றோம் ...தூயோனே வெட்டவேளியோனே !!ஜோதியில் ஜோதியே ..!!! ஆதியே ..!! அருள் ஆசிகள் தருவாய் எம்பெருமானே .... என்றென்றும் நின் திருவடியில் வீழ்ந்து வணங்குகின்றோம்.!!






எவ்வளவு தான் கற்றறிந்தாலும் அனுபவத்தில் கிடைக்கும் அனுபவ அறிவு பெரும்போது கிடைக்கும் வலிமை அதன் ஆற்றல் மிக உன்னதமானது.அனுபவம் தரும் சுகம் அதில் மெய் மறந்து லயிக்கும் மனம் ,அங்கே சூட்சும உடலில் அது தாமாகவே பெறப்படும் இறை ஆற்றல் ,இவை யாவும் சேர்ந்து உயிரை, மனதை, உடலை ஆற்றல் மிக்கதாகி மாற்றிவிடுகிறது.யாம் ஏற்கனவே எழுதியது போல ,பிரதோஷ காலங்களில் ,மிகபழமையான சிவன் கோவில்களில் ,ஏதேனும் ஒரு இடத்தில் அமர்ந்து அங்கே இருக்கும் சூழலை அலையை கவனிக்க ,ஆற்றல் மிக்க ,இதம் தரும் அலைக்கூட்டங்கள் இறையின் கருணையால் அங்கே எங்கெங்கும் சூழ்ந்து ஒரு வித அமைதியை ,இதம் தரும் ஒரு வித ஈர்ப்பு நிறைந்த அலைகளை அங்கே நிரப்பி செல்வதை உணரலாம்.அப்பொழுது அங்கே தவழும் இதமான தென்றல் ,அதனை அப்படியே உள்வாங்கி உணர ,சிவ அதிர்வு அலைகளை உணரலாம்.உள்ளம் சட்டென உறைந்து அமைதியை நோக்கி செல்லும் தன்மையை உணரலாம்.இங்கே இப்படி பெறப்படும் ஒரு துளி ஒரே ஒரு நொடி ,அது போதும் ,அது தரும் அற்புதமான இதம் ஒரு துளி உணர்ந்தாலே அதன் ஆற்றல் தொடர்ந்துகொண்டேயிருக்கும்.




காலம் எனும் சக்கரம் சுழல சுழல ,இறையின் கருணையால் ஆங்காங்கே மகான்களையும் சித்தர்களையும் விதை போல தூவி விதைத்துக்கொண்டேயிருக்கிறது இறை.இறைக்கு மட்டுமே தெரியும் எக்காலத்தில் எத்தனை மகான்களை விதைப்பது மற்றும் எப்படி தாம் சிருஷ்டியில் உருவான ஜீவராசிகளுக்கு இடர் நீக்குவது என்றும் .இறை என்றாலே அன்பும் கருணையும் நிறைந்தது தானே.அதன் கருணையின் வெளிப்பாடே தெய்வீக மகா மூலிகையும் ,மகாமுனிவர்களும் ரிஷிகளும் மகான்களும்.கருணையை ஒரு துளி உணர்ந்தால் தான் தெரியும் ,அதில் உறைந்துகிடக்கும் தன்னலமற்ற தெய்வீக அர்ப்பணிப்பு.எங்கும் எங்கெங்கும் அன்பு மயம் .தாம் படைத்த தமது ஜீவராசிகளுக்கு அமுதுஊட்டுவதும் அவைகளை காப்பதும் ஒரு சுழற்சிக்கு உட்படுத்தி பிறகு மீண்டும் தமது அடுத்த பரினாம மாற்றதிற்கு தயார்செய்வதும் என எல்லாமே இறை செய்யும் அற்புதம் ..அற்புதம் ..அற்புதம்..!!! நம்மை சுற்றியிருக்கும் மாயை எனும் திரையை விளக்கிபார்க்க இறை தரும் ஆனந்தம் நம்முள் மெல்ல மெல்ல ஊடுருவி யாருமே தர இயலா சொல்ல இயலா சுகத்தை தந்து நம்மை பேரமைதியில் திளைக்க வைக்கும்





கருவிலே திருவானவர் இந்த ஐயா.கருணைமிக்க விழிகளும் இறையின் அருளால் கிடைக்கப் பெற்ற தேஜஸ் நிறைந்த முகமும் கொண்டவர்.மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சென்ற நூற்றாண்டில் B A honors எனும் பட்டம் பெற்றவர்,கடையனோடை எனும் குக்கிராமத்தில் பிறந்து திருக்கழுக்குன்றம் எனும் ஊரில் இறையில் முக்தியடைந்திருக்கிறார்கள் அய்யா அவர்கள்.தமது பாலபருவத்திலேயே தமது தங்கைக்கு இன்னல் தந்த காச நோயினை மூலிகைகளை கொண்டே சரிசெய்துவைத்திருக்கிறார்கள்.தமது இளம் வயதில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருக்கும் வள்ளிகுகையிலும் மூவர் சமாதியிலும் தியானத்தில் ஆழ்ந்து ,மெல்ல மெல்ல
இறைத்தன்மையை எப்படி தம்முள் உள்வாங்குவது எனும் நுட்பத்தை ,அங்கே இருக்கும் ஆறுமுக சாமி,காசி சாமி மற்றும் மௌனகுரு சாமிகளின் அருள் ஆசியோடு கற்றிருக்கிறார்கள்.அய்யா தம்மோடு எப்பொழுதுமே திருஅருட்பா புத்தகத்தை வைத்திருப்பார்கள் .திருஇராமலிங்கவள்ளலாரின் ஜீவகாருண்யம் ஜீவ ஆன்ம ஒழுக்கம்,மரணமில்லாபெருவாழ்வு ,பசித்தோர்க்கு உணவு அளித்தல் போன்றவைகள் மனிதனை இறைவனாக்கும் தன்மை நிறைந்தவை என்று குறிப்பிடுகிறார்கள்.

 பட்ட படிப்பின் போதே தம்மை ஆராய்ச்சியில் உட்படுத்தி ,காற்றை மட்டுமே சுவாசித்து உயிர்வாழ்தல் எனும் கலையை கற்றறிந்தவர்.கிடைக்கும் மூலிகைகள் மூலம் உடலை எப்படி கற்பமாக மாற்றவேண்டும் எனும் அற்புத கலையையும் அதன்  நுட்பத்தையும்  அறிந்தவர்கள் அய்யா அவர்கள்.இல்லறத்தில் இருந்துகொண்டே  மக்களுக்கு தொண்டுசெய்தவர்.பிறகு துணைவியின் ஒப்புதல் கொண்டு தம்மை முற்றிலும் துறவறத்தில் அர்ப்பணித்தவர்கள்.திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலையில் பட்சிகள் உணவுஅருந்தும் பாறைக்கு மேற்கில் இருக்கும் குகையில் ஐயா எப்பொழுதும் தம்மை தவத்தில் ஆழ்த்தி ,அந்த இடத்தையே  தம் தவபீடமாக
தேர்வுசெய்திருக்கிறார்கள். மலையில் மாபெரும் கழுகுகள் உணவு அருந்துவதை பார்க்க வரும்  மக்கள் கூட்டம் ,ஐயாவின் குகைக்கும் சென்று வணங்கி அருள் ஆசிவாங்கியிருக்கிறார்கள்.இன்னும் கொடிய பிரச்சினை கொண்ட ஒரு சிலர் ,ஐயாவை சாஸ்டாங்கமாக வணங்கி தமக்கு ஒரு தீர்வு கேட்க ,அய்யாவும் அவர்களின் கண்களை ஆழ்ந்து உள்நோக்கி ,அதற்கான தீர்வுகளை "செல்..சரியாகும் "  என்பார்களாம் .தம் பேச்சில்  ஒரு சில சொற்களை மட்டுமே பயன்படுத்துவார்கள்.தீராத வயிற்று வழியால் துடித்த ஒரு பக்தர் அய்யா அருகே வந்து கண்கலங்க ,அவர் கண்களை உள்நோக்கி ,ஒரு மூலிகை களிம்பினை கொடுத்து ,"..ஒரு மண்டலம் உட்கொள் வயிறுவலி வராது ஜென்மத்துக்கும்.." என சொல்ல ,அவ்வாறே செயல்படுத்த வயிறுவலி சரியானதாம்.

சாமி என் சொத்தைஎல்லாம் உறவுக்காரர்கள் பிடுங்கிகொண்டுவிட்டார்கள்.தீர்ப்பு எம் பக்கம் வரணும் சாமி  என ஒரு மூதாட்டி அய்யாவின் முன் கண் கலங்க ,அய்யாவும்  "..போய் வா ..எல்லாம் சரியாகும் .." என சைகையில் சொல்ல ,அடுத்த நாள் மகிழ்ச்சியோடு தம் பக்கம் தீர்ப்பு வந்ததை சொல்லி ஆனந்தகண்ணீரால் நன்றி தெரிவித்தார் அந்த மூதாட்டி.

ஒரு வாரமா எங்க அம்மா புத்திசுவாதினமில்லாம ..படுத்த படுக்கையாக இருக்காங்க சாமி என ஒரு பக்தர் சொல்ல ,அய்யா ஒரு மூலிகையை கொடுத்து "...செல் சரியாகும் .." என அய்யா தலையை அசைக்க ,அவரும் மூலிகையை வாங்கி சென்று கொடுத்துவர ,பத்தாவது நாள் அவர் தம் அம்மாவுடன் மலைஏறி சாமியை வணங்கி நன்றிதெரிவித்தனர்.

இது போன்ற பலமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வாரி வாரி வழங்கியிருக்கிறார்கள் அய்யா அவர்கள்.


மனம் சொல் செயல் இவை மூன்றிலிருந்து தீயவினைகள் வருகிறது ,இவை மூன்றையும் வசமாக்கிவிட்டால் தீவினைகள் வராது .ஆக இவைகளை அளவோடு பயன்படுத்தி இவைகளை,  நல்ல எண்ணம் ,இனிய சொல் ,தீங்குஇல்லா நல்ல செயல் இல்லாதவர்களுக்கு உதவுதல் என எப்பொழுதும் பழகிக்கொள்ள எல்லாம் நன்மையை நோக்கி ,இறையை நோக்கி அழைத்துச்செல்லும் என்பதை தாமே வாழ்ந்துகாட்டியும் ,பிறகு தம்மை நாடி வரும் மக்களுக்கும் உணர்த்தியவர்கள்.ஒரு காலகட்டத்திற்கு மேல் ஒரு சில வார்த்தைகள் பேசுவதையும் முற்றிலும் நிறுத்தி மௌனநிலையாக சென்றுவிட்டார்கள்.கர்மவினை தாக்கத்தால் துவன்று வாடும் பக்தர் தம் கண் முன்னே வந்து அவர் தம் இன்னலுக்கு தீர்வாக அருகில் இருக்கும் சிலேட்டில் ஒரு சில வார்த்தைகளை எழுதிகாட்டுவார்களாம்.எப்பொழுது தமக்கு இந்த சிலேட்டில் எழுத்து வரும்,சத்திய வாக்கு வரும்... என ஏங்கி காண ,பல முறை இந்த திருக்கழுக்குன்ற மலை ஏறி இறங்கியவர்கள் ஏராளம் ஏராளம்.


ஒரு முறை திருகழுகுன்ற மலை மீது படிக்கட்டுகள் அமைக்கும் பணி  ஆயத்தமாகி ஒரு இருநூறு படிக்கட்டுகள் கட்டிமுடித்தாகிவிட்டது ,பிறகு அங்கே ஒரு பெரிய பாறை,  படிக்கட்டு அமைக்கும் பணிக்கு தடையாக இருந்ததாம்.வெடிவைத்து பாறையை உடைத்தால் ஏற்கனவே கட்டப்பட்ட அனைத்து படிகளும் சேதமாகும் அது மட்டுமல்ல ,வெடியால் சிதறும் உருண்டு ஓடி வரும் பாறைகள் மலையின் அடிவாரத்தில் இருக்கும் வீடுகளுக்கும் அங்கே இருப்பவர்களுக்கும் மிகபெரிய சேதத்தினை ஏற்ப்படுத்திவிடுமே என அச்சத்தால் செய்வதறியாது திகைத்தனர்.கோவில் அதிகாரிகளும் மக்களும் மலை மேல்சென்று சித்தர் ஐயாவை வணங்கி இந்த பாறைபிரச்சினையை சொல்ல ,அய்யா ".புன்னகை...." தமக்கு தெரியும் என்பதை புன்னகையால் சொல்லாமல் உணர்த்தியிருகிக்கிறார்கள் .சற்றே தியானத்தில் கண்களை மூடி ,பிறகு பாறையில் எந்தெந்த இடத்தில் எத்தனை குழிகள் அமைத்து அதில் எவ்வளவு ஆழத்திற்கு துளையிட்டு மருந்துகள் வைக்க வேண்டும் எனவும் ,மேலும் அவ்வாறு செய்யும் போது அதன் விளைவாக கிடைக்கும் பாறைகள் கொண்டு அறுபது படிகள் வரை படிக்கட்டுகள் அமைக்கலாம் எனவும் ,மேலும் இவ்வாறு செய்வதால் மூன்று படிகள் மட்டும் சிறிதே சேதமடையும் எனவும் மேலும் விழும் பாறைகள் படிக்கட்டுகளுக்கு வெளியில் தான் விழும் எனவும் அச்சம் கொள்ள தேவையில்லை இவ்வாறு செய்யுங்கள் என எழுதிக்காட்டியிருக்கிறார்கள்.சத்திய வாக்கு கிடைத்த மக்களும் அதிகாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.பிறகு அய்யாவின் வாக்குபடியே .சரியான  ஆழத்திற்கு அய்யாவின் எழுத்துவாக்கில் வந்த என்ணிக்கையே துளைகள் ஆனது.மருந்தும் வைக்கப்பட்டது.வெடித்து பாறைகளும் சிதறின ,சிதறி பாறைகள் படிக்கட்டுகளுக்கு வெளியிலே யாவும் விழுந்தன.சரியாக மூன்று படிகள் மட்டுமே சிறிதே சேதமடைந்தன.சிதறிய பாறைகளிருந்து சரியாக அறுபது படிக்கட்டுகள் கட்டப்பட்டது.அய்யாவின் சத்திய வேதவாக்கு துல்லியமாக நிறைவேறியது கண்டு பெருமகிழ்ச்சியடைந்தனர்.சேதமடைந்த மூன்றுபடிகள் இன்றும் சாட்சியாக இருக்கிறது.


தாம் வாழும் காலத்திலே  திருக்கழுக்குன்றத்திலேயே, மார்கழி மதம் சதயநட்சத்திரத்தில் இறைநிலையில் முக்தியடையும் நாள் குறித்து ,அதன் போலவே 3.1.1960 ல்  அய்யா அவர்கள் இறையில் ஐய்க்கியமானார்கள்.காலம் உருண்டோடியது ,கிட்டத்தட்ட அறுபத்திஏழு ஆண்டுகளுக்கு பிறகு மாணிக்கம் எனும் சாது மலைமேல் ஏறி அய்யா வாழ்ந்த குகையில் தீபஏற்றி வழிபட்டு திரும்பும் போது ,கொடிய விஷம்நிறைந்த பாம்பு ஒன்று கடித்துவிட மூர்ச்சையானார் சாது ,உடனே அங்கேயிருந்தவர்கள் சாதுவை கட்டிலில் வைத்து கீழேஇறக்கி ஐயாவின் சமாதியில் அருகே வைத்தனர்.ஒரு பெரும் சத்தம் கேட்டு ஜீவசமாதியில் வெண்புகை சூழ அங்கேயிருந்தவர்கள் என்ன நிகழ்ந்தது என கணிக்க இயலாமல் வெளியேறிவிட்டார்கள்.சிறிது நேரத்தில் பாம்பு கடித்த, சாது மாணிக்கம் எதுவுமே நடக்காதது போல எழுந்து நடந்திருக்கிறார்.அங்கே ஜீவ சமாதியில் அய்யாவின்  உருவம் வெளியில் சென்றதை அங்கேஇருந்தவர்கள் பார்த்திருக்கிறார்கள்.அய்யாவின் அருள் ஆசிகள் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

அய்யாவின் ஜீவசமாதி திருக்கழுக்குன்றம் மலை அடிவாரத்தில் இருக்கும் பேருந்துநிலையத்திற்கு அருகிலேயே இருக்கிறது.வாய்ப்பு கிடைக்கும் அன்பர்கள் இங்கே வந்து திருக்கழுக்குன்றம் மலைமீது இருக்கும் வேதகிரீஸ்வரர் பெருமானை வணங்கி ,ஜீவசமாதியில் என்றென்றும் அருள் புரியும் ஐயாவையும் வணங்கி ,நடந்த நிகழ்வுகளை மனதால் அசைபோடுங்கள் ..அய்யாவின் ஆசிகள் கிட்டும்.


ஸ்ரீலஸ்ரீ சுப்பையா சித்தர் அய்யா அவர்கள் ஆசிகளோடு ,அய்யா அவர்கள்  வாழ்ந்து காட்டி சென்ற  "மனம், சொல், செயல் " இவை மூன்றிலிருந்து வரும் வினைத்தாக்கத்தை குறைக்க ,முடிந்த வரை நல்ல எண்ணங்களை மனதில் உலாவிடுவோம் ,முடிந்தவரை பேச்சினை குறைத்து அழகான இனிய சொற்களை பயன்படுத்துவோம் ,முடிந்த வரை இல்லாதவர்களுக்கு நம்மால் இயன்ற வரை உதவிகள் செய்வோம் என்பதை ,இதில் இம்மி அளவும் எமக்கு சொந்தமில்லை,  எல்லாம்  ஸ்ரீலஸ்ரீ சுப்பையா சித்தர் அய்யா அவர்களின் அருள்வாக்காக, வரும்  புத்தாண்டு நாளில் உறுதிமொழியாக எடுத்து அய்யாவின் ஆசிகள் பெறுவோம் இறை என்றென்றும் நம்மை வழிநடத்தட்டும் என வாழ்த்தி வணங்கி ,அகத்திய உள்ளங்கள் அனைவருக்கும்  சித்தரின் ஆசிகலந்த புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகளை பணிவோடு தெரிவித்து வேறு ஒரு கட்டுரையில் சந்திப்போம் .!!

வாழ்க வளமுடன் ..!!
வாழ்க வளமுடன் ..!!
வாழ்க வளமுடன் ..!!



Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்