மகான் ஸ்ரீ சாங்கு சித்த சிவலிங்க நாயனார் ஜீவ சமாதி - கிண்டி சென்னை
இறை எனும் அகண்டாகார பேரொளி தம் அகத்தே கொண்டிருக்கும் கற்பனைகெட்டா ஆற்றலை , அதன் அற்புதத்தை தாம் படைத்த எண்ணிலடங்கா உலகத்திற்கும் அதில் வாழும் ஒவ்வொரு ஜீவராசிக்கும் தந்துகொண்டேயிருக்கிறது.அன்பும் கருணையும் எங்கெங்கும் நிரப்பி அனைத்தையும் ஆனந்தம் கொள்ளச்செய்கிறது.என்றும் என்றென்றும் மாற்றதை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கிறது. எதுவும் நிலையானது இல்லையப்பா இங்கே, மாற்றம் மற்றுமே நிலையானது என்பதை சொல்லாமல் சொல்லி ஒன்றை மற்றொண்டாய் மாற்றிக்கொண்டேயிருக்கிறது .அன்பு எனும் ஒரே சூட்சுமம் கொண்டு அணு முதல் பேரண்டம் வரையிலும் அதில் வாழும் கோடான கோடி ஜீவராசிகளையும் நொடி பொழுதில் தொடர்பு கொள்ளும் அதி சூட்சும வித்தையையும் உருவாக்கி ,அன்பாய் ,பேரன்பாய்,அறிவாய்,தெளிவாய் முழுமையாய் யாவற்றையும் ஷன பொழுதுகூட விட்டு பிரியாமல் தமது படைப்பின் திறம் மிளிரும் வண்ணம் , தந்தையாய் ,தாயாய்,சிவமாய் ,சக்தியாய்,விஷ்ணுவாய்,அல்லா,இயேசு என நீளும் பெயர்கொண்டு யாவற்றையும் கட்டியனைத்து கண்ணை இமை காப்பது போல காத்துக்கொண்டும்,அன்பும் கருணையும் வழங்கிக்கொண்டும் இருக்கிறது.
இந்த மாபெரும் பிரமாண்ட இறைபயணத்தில் ,தமது அன்பை கருணையை பரிசளிப்பாக அன்பு உள்ளங்களுக்காக சேவை செய்ய,காலம் காலமாக மகான்களையும் ,சித்தர்களையும் ,சூபிகளையும் ,ஞானிகளையும் கொடுத்துக்கொண்டேஇருக்கிறது மாபெரும் வற்றா பேராற்றல். வந்தவர்கள் ,இருப்பவர்கள்,சென்றவர்கள் என யாவருக்கும் சேவை செய்ய தம்முடைய பேராற்றலின் படைப்பை அதன் அதி உன்னதத்தை வெளிப்படுத்திகொண்டேஇருக்கிறது.
எத்தனை மகான்கள் ,எத்தனை சித்தர்கள் இந்த புண்ணிய பூமியிலே .!!! எண்ணிலடங்கா இறைஉணர்ந்த மகான்கள் ,தம்மை முற்றிலும் உணர்ந்து அதில் தன்னை மறந்து ,தாமே தம்முள் ஆழ்ந்து ,அடர்ந்த படர்ந்த வெளியில் வெட்டவெளியில் தம்மை' ஒன்றுமில்லா ஒன்றோடு கலந்த மகான்கள் ஏராளாம்...ஏராளாம்.!!! அருள் தந்த ஞானியர்கள்!! அற்புத பேராற்றலை உணர்ந்தவர்கள்!!. இறை தந்த அமுதம் உண்டவர்கள் ,இறையோடு இறையாக பேரமைதியில் என்றும் தம்மை மூழ்கச்செய்பவர்கள்.இன்றும் தம் ஜீவசமாதியில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்.இவர்கள் முன் நின்றாலே அருள் ஞான அலை பெறலாம்.இவர்கள் முன்னே எதுவும் சாத்தியமே.எந்த ஒரு இடரையும் தெய்வசக்தி கொண்டு தூள் தூளாக்கிவிடும் அருள் வித்தை தெரிந்தவர்கள்.
ஒரு துளி அளவு கூட பொருள் வாங்காது ஆன்மிகம் சொல்லித்தந்த அருட்கொடையாளர்கள்.ஏனெனில் தாம் வந்த வழி இறை வழி,இறை வழியே சென்று ,இறை தன்மை மிகுதியால் ,தம்மை நாடி வரும் அன்பர்களுக்கு ,அன்பும் கருணையும் நிறைய ஊட்டியவர்கள்.இவர்கள் மிக எளியவர்கள் ,தமக்கென இம்மி அளவில் கூட பொருளோ ,பொன்னோ சேர்த்துவைக்காதவர்கள்.கருணை மிகுந்தவர்கள்.அன்பால் அனைவரையும் ஈர்த்துக்கொள்பவர்கள் இறை வழியே வந்ததால் ,வாரி வாரி கொடுக்கும் வள்ளல் தன்மை ,இவர்கள் பிறப்பெடுக்கும் முன்னரே சூட்சுமத்தில் அலையாக கலந்திருக்கிறது.உன்னத மகான்கள்.உண்மை உரைப்பவர்கள்.திரிகால ஞானிகள்.இவர்கள் வாழ்ந்த காலத்தில் உறவாடிய அன்பர்கள் எல்லாம் கொடுத்துவைத்தவர்கள்.
அன்பை உள்ளத்தில் நிரப்பி இவர்கள் முன் சென்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவேண்டும்.உண்மையின் உறைவிடம்.நான் எனும் அகந்தையை விட்டொழித்து ,இறை தேட ,குமிருட்டு வந்து சூழ்கிறது அருள் அலை சாரல்களாய்.
குதிரை பூட்டிய சாரட் வண்டிகளும் ,அரைகால் ஆடை உடுத்திய சிப்பாய்களும்,வெள்ளை வேட்டி சட்டை கட்டிய ஜனங்களும் ,நீண்டு நெடிய அகலமான பாதையும் ,அதில் இருபுறமும் ஓங்கி உயர்ந்த அதன் கிளைகள் நீண்டு வளைந்து பெருத்து,பச்சை பசேல் என காட்சியளிக்கும் மரங்களும் ,கிட்டத்தட்ட் நிறைய காடாய் வனமாய் இன்றைய சென்னை கிண்டி அந்த காலத்தில் கிட்டதட்ட நூற்றியிருவது வருடங்களுக்கு முன்னர் இருந்திருக்கிறது.ஆங்கிலேயர் ஆட்சிசெய்த காலம் .
அங்கே இருக்கிறார் இறை அனுப்பிய மகான் .ஒரு சாதாரண மனிதனாய் தோற்றம்,சமையல் செய்யும் வேலை ,உழைத்தே சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம்,ஆதலால் ஒரு ஆங்கிலேய கம்பெனியில் வேலை.ஆனால் தம்முள்ளே பேரானந்த்தை என்றும் வைத்துகொண்டு ,துளி அளவு கூட கர்வம் இன்றி ,அன்பாய் தமது அருகில் உள்ள மக்களுக்கெல்லாம் வள்ளல் போல் வாரி வாரி வழங்கியிருக்கிறார் இந்த அய்யா.நெஞ்சம் பூரித்து பிரமித்துபோய்விட்டேன் இந்த மகானின் வரலாறு படித்து அதில் உறைந்து கிடந்த அதி அற்புத ஆற்றல் கண்டு .
வாருங்கள் நீங்களும் படியுங்கள் .முன்னரே படித்திருந்தாலும் அகத்தியம் மூலம் மீண்டும் படியுங்கள்,மகானின் வரலாறு தந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி ! நன்றி
கிண்டி MKN சாலையில் (saidapet to guindy flyover route after sangeetha take left and again immediate 1st left )அருணா லாட்ஜை ஒட்டியுள்ள சந்தில் சென்றால் வெகு அருகில் சாங்கு சித்தர் அய்யா ஜீவ சமாதி வருகிறது.சுற்றிலும் டமால் ,டம் டும் என கேட்கும் இரும்பு பட்டறை சத்தம் நிறைந்த கடைகளுக்கிடையே ,திவ்யமாய் ,பேரமைதி நிறைந்து ஜீவனுள்ள அலைகள் சூழ்ந்து காணப்படுகிறது.எவ்வளவு சத்தம் வந்தாலும் இங்கே அமைதி கரைபுரண்டோடுகிறது.அய்யாவின் ஜீவ சமாதி அதில் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்யபட்டுள்ளது.அருகிலே அய்யாவின் சீடர்கள் கொல்லாபுரி ஸ்வாமிகள் மற்றும் ஏழுமலை சுவாமிகள் ஜீவசமாதியும் இருக்கிறது.
சாங்கு சித்த சிவலிங்க நாயனார் , உன்னுள் உத்தமனை காணும் வழி சாகாகல்வி எனும் உண்மையை உலகுக்கு' உரைத்தவர்.
வள்ளலார் மூலம் இறைவழியில் ஈடுபட்டவர் .சமையல் செய்யும் வேலை புரிந்தவர்.பல மணி நேரம் உலக நிலையில் இருந்து விடுபட்டு யோக நிலையில் ஆழ்ந்துவிடுவாராம்.
நவகண்ட யோகம் செய்தவர் .தன்னுடைய ஒன்பது துவாரத்தையும் ஒன்பது துண்டுகளாக்கி ,பின்பு மீண்டும் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்க்கும் யோக கலையில் கைதேர்ந்தவர்
வருங்கால நிகழ்வுகளை முன்னரே உரைக்கும் திரிகால ஞானி.தம்முடைய சீடர்களை எளிதில் எற்பதில்லையாம்.பல சோதனை வைத்து ,செப்பு காசை பொன்னாக்கி ,அதில் ஆசை இருக்கிறதா இல்லையா என சோதித்து ,பின்னர் தான் தம்முடைய மாணவனாய் எற்றுக்கொள்வாராம். அந்தரத்தில் ஒரு இரண்டடி உயரத்தில் ஆழ்ந்த நிலையில் தவம் இருப்பாராம்.
பென்னி அண்ட் கம்பெனியில் சிம்சன் துறையிடம் உழைத்துசம்பாதிக்க வேண்டும் என்ற கொள்கையில் வேலைக்கு சேர்ந்தார்கள்.
சிம்சன் ஒரு முறை உறங்கசெல்லும் போது ,அங்கே செல்லவேண்டாம் என அய்யா வேண்டுகோளை வைக்க,அதனை மறுத்து உட் சென்று தூங்க சென்றிருக்கிறார் சிம்சன், உடனே ஐயா ஆட்களை வைத்து சிம்சனை வெளியே தூக்கி வரச்சொல்ல,சிறிதே சற்று நேரத்தில் ,சிம்சனின் படுக்கை அரை மேற்கூரை ,இடிந்து தரைமட்டமாய் சரிந்திருக்கிறது.பிறகு தான் சிம்சன் , அய்யாவின் அசாத்திய சக்தியை உணர்ந்திருக்கிறார்.
ஒரு முறை சிம்சனின் மனைவி இங்கிலாந்திலிருந்து ஒரு கடிதம் எழுதிஇருக்கிறார்.அதில் தாம் கர்ப்பமாக இருப்பதாகவும் சுகபிரசவதிற்கு வழியில்லை எனவும் ,தமக்கு உயிருக்கு கூட ஆபத்து இருப்பதாகவும் எழுதியிருக்கிறாள் .அதை படித்து செய்வதறியாது சிம்சன் கவலையோடு அய்யாவிடம் வேண்டுதல் வைக்க.அய்யாவும் தாம் சென்று உமது மனைவியை சந்தித்து ,விபூதி மந்திரித்து கொடுத்து, பிரச்சினையை சரிசெய்து ,அவளிடமிருந்து பதில் கடிதமும் வாங்கிவருகிறேன் ,அதுவரை தம்மை ஒரு அறையில் வைத்து ஒரு மணி நேரம் பூட்டி,எமது குரல் கேட்டவுடன் திறந்தால் போதும் என சொல்லிசென்றிருக்கிறார்கள் அய்யா .இது எவ்வாறு சாத்தியம்,இங்கிலாந்திற்கும் இந்தியாவுக்கும் எவ்வளவு தூரம் ,இது' எப்படி சாத்தியம் ஆக முடியும் ,என்பதை சிம்சனால் நம்ம முடியவில்லையாம்.அய்யாவின் மீது இருக்கும் அனுபவம் மற்றும் அதீத நம்பிக்கையில் ,அய்யா பேச்சை தட்டாது.கதவை தாழ்ப்பாள் போட்டு காத்திருக்கிறார் சிம்சன்
சரியாக 45 நிமிடத்திலேயே, நான் வந்துவிட்டேன் கதவை திற என்று சொல்ல,சிம்சனும் நம்ம முடியாத ஆச்சரியத்தில் ,கதவை திறக்க,தம் மனைவின் கையெழுத்திட்ட கடிதம் பார்த்தார்.ஒரே ஆச்சரியம். அந்த கடிதத்தில் ,சுவாமியின் உருவ அமைப்பு,அவர் கொடுத்த விபூதியை நெற்றியிலும் இட்டுக்கொண்டு,சிறிது உண்ணவும் செய்து,மேலும் உனக்கும் குழந்தைக்கும் எதுவும் ஆகாது எல்லாம் சுகப்பிரசவமாகவே நிகழும் கவலை கொள்ளாதே என்று சுவாமி தமக்கு சொன்னது, மிகுந்த நம்பிக்கைஅளித்ததாவும் குறிப்பிட்டு,ஆனால் ஒரே நொடியில் எப்படி இவ்வளவு தூரம் பயனித்தல் சாத்தியம்,இங்கிலாந்திற்கும் இந்தியாவுக்கும் எவ்வளவு தூரம் ,ஆக நீங்கள் இதற்கு ஒரு பதில் கடிதம் எழுதி சுவாமி எமக்கு கொண்டுவந்தால் ,எமக்கு முழு நம்மிக்கை வரும் என்று கடிதத்தில் எழுதியதை படித்தார் சிம்சன்.உடனே சிம்சன் அதற்கு பதில் கடிதம் எழுதி அய்யாவிடம் கொடுக்க,அய்யாவும் மீண்டும் இங்கிலாந்து சென்று சிம்சன் மனைவியிடம் கொடுத்தார்கள்.பின்னர் அய்யாவின் ஆசி போலவே சிம்சன் மனைவிக்கு சுகப்பிரசவம் நடந்திருக்கிறது.
சிம்சன் கப்பலில் இங்கிலாந்து செல்லும் போது , கடல் கொந்தளித்ததாம்.அனைவரும் உயிருக்கு பயந்து நடுங்க ,சிம்சன் ஐயாவை மனதில் நினைத்து வேண்ட ,அய்யாவும் உடனே அங்கே காட்சிகொடுத்து,கடல் கொந்தளிப்பை அமைதிசெய்திருக்கிறார்கள்.சிம்சன் இங்கிலாந்து செல்லும் முன் ,கிண்டியில் உள்ள தமது 400 கிரௌண்ட் நிலத்தை அய்யாபேருக்கு எழுதிவைத்துச்சென்றிருக்கிறார்.ஆனால்அய்யா ஒரு கால் கிரவுண்டு நிலத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து அதில் ஞானசம்பந்தர் பெயரில் மடாலயம் நிறுவி ,தமது ஞானத்தை தமது வழிவந்த மானவர்களுக்கு போதித்துள்ளார்கள்.தமது அதிசய சக்தியால் பல ஏழை எளிய மக்களை மிக உயர்ந்த நிலைக்கு மாற்றியுள்ளார்கள் அய்யா சாங்கு சித்த நாயனார் அவர்கள்
தாம் ஜீவ சமாதியாகும் நாளையும் முன்னரே கணித்து சொல்லி அதன்படி 12-07-1900 பௌர்ணமி திதியில் மூலநட்சத்திரத்தில் ,வியாழக்கிழமையில் நிர்விகற்ப சமாதி அடைந்திருக்கிறார்கள் அய்யா அவர்கள்.
கண்களை மூடி அமர்ந்தால் சொர்க்கம் போல் இருக்கிறது.அருள் அலைகள் நிறைந்த சொர்க்கம்.அள்ள அள்ள குறையாத ஜீவ அலைகள் நிரம்பி வழிகிறது.தன்னிலம் உணர்ந்த மகான். ஐயாவைபற்றி நிறைய தகவல்கள் கிடைக்கிறது.
இப்படி அய்யாவின் அற்புத வரலாறு இன்றும் தொடர்ந்துகொண்டேஇருக்கிறது. உன்னத மகான் .படிக்கும் போதே உடம்பு புல்லரிக்கிறது.இப்படி ஒரு மகான் ,இவர் செய்த அற்புதங்களை எண்ணி சிந்திக்க உள்ளம் பரவசமடைகிறது. மகானின் ஜீவசமாதியை எப்பாடு பட்டாவது நல்ல முறையில் பராமரித்தல் என்பது மிக அவசியமாகிறது.வரும் தலைமுறைகள் இதன் வரலாறு கண்டு மெய்சிலிர்க்கட்டும். கொஞ்சம் பொருள் நிறைந்த ,அருள் தேடும் உள்ளங்கள், ஏதேனும் தமது நெஞ்சத்தில் ஒரு மூலையில்,அருள் தொண்டு செய்யவேண்டும் என்று ஒரு எண்ணம் இருந்தால் ,இங்கே வாருங்கள் வந்து பொருள்உதவிசெய்யுங்கள்.அய்யாவின் ஜீவசமாதியில் பூஜைகள் நடக்கட்டும், என்றென்றும் ஆராதனைகள் நடக்கட்டும்.நெய்விளக்கும் ,சந்தனமும்,மல்லிகை பூக்களும் சாம்பிராணியும்,ஜவ்வாது வாசனையும் என்றும் இந்த அய்யாவின் இருப்பிடத்தில் நறுமணம் வீசட்டும்.சென்னை வரும் போது ஐயாவை தரிசனம் செய்து ,தாங்களே நேரடியாக வந்து சேவை செய்யுங்கள்.நம் பாரததேசம் புகழ்பெறச்செய்த மகான்களின் பொற்பாதம் பணிந்து பெருமை கொள்வோம் .
இறை தேடும் உள்ளங்களுக்கு சாங்கு சித்த சிவலிங்க நாயனார் ஜீவ சமாதி ஒரு அருள் அலை அள்ளி வீசும் சொர்க்கபூமி .அமர்ந்து ஆழ்ந்து அய்யாவின் அருள் அலைகளை உணரலாம் ,அருள் ஒளிவீசும் அற்புதம் காணலாம்,வாழும் நொடிப்பொழுதையும் அர்த்தமுள்ளதாக்கலாம், என வாழ்த்தி வணங்கி ,அகத்திய உள்ளங்களை வேறு ஒரு கட்டுரையில் சந்திக்கிறோம்
வாழ்க வளமுடன்
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!!
ஓம் அகத்தீஸ்வராய நமஹ
ReplyDeleteநன்றி அய்யா