ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே ...!!!



பிரபஞ்ச நாயகனே ..!! விஸ்வேஸ்வரனே ..!!! விரிந்து விரிந்து சென்றுகொண்டேயிருக்கும் வெட்டவெளியோனே..!!! காரிருளே !!! கரும்கும்மிருட்டே ..!!! யாவற்றையும் சூழ்ந்து சூழ்ந்து ஈர்க்கும் ஈர்ப்பு விசைக்கு மூலமான ஆதியே ..!!! அங்கிங்கெனாதபடி எங்கும், எங்கெங்கும் வியாபித்திருக்கும், ஆயிரம் ஆயிரம் கோடி சூரிய ஜோதியே ...!!! எப்படி நின் தன்மை உரைப்போம்..எம்பெருமானே ..!! யாவற்றுள்ளும் பிண்ணி பிணைந்து ஊடுறுவி ,யாவற்றுக்கும் அருள் ஆட்சி நடத்தும் அண்டபேரண்ட நாயகனே ..!!!மனம் போன போக்கில் திரிந்து ,கண்களை மூடிக்கொண்டு இவை எல்லாம் நீ கவனிக்க போகிறாயா ? என்று தெரிந்தும் தெரியாமலும் செய்யும் செயல்கள் யாவற்றுக்கும் மூல காரணமான இருந்துகொண்டு ,இம்மிகூட பிசகாமல் ,பலன்களை வாரிவழங்கும் எம் நாயகனே ..!!! எம் பெருமானே ..!!! பேரொளியே ..!!! உள்ளும் புறமும் நீ ..!! எம் உணர்வும் நீ !! உடலும் நீ ..!!! உள்ஒளியும் நீ ..!!நீயே அனைத்தையும் ஆள்கிறாய் ..!! எதுவும் நினது ஆட்சிபுலத்தை விட்டு விலகுவதில்லை.நின்னை அறிந்திடல் கடினம் ,நின்னை அன்பெனும் தன்மையால்  உணர்ந்திடல் எளிது.அன்பாய் எளிதாய் ஆத்மரூபமாய் இருக்கிறாய்.நுணுகி நுணுகி நுண்ணிய பொருளிலும் நீ ..!!! விரிந்து விரிந்து இருக்கும் அகண்டாகார நிலையிலும் நீ. இந்த சூட்சும வித்தை நின் ஒருவனுக்கு மட்டுமே உரித்தான அறிய இயலா அற்புத கலை.!!


மனதால் நினை கற்பனை செய்து  பழக பழக அன்பெனும் ஈர்ப்பை  உள்ளம் பெறுகிறது.அன்பெனும் தன்மை நிறைந்து நிறைந்து ,பெருக  பெருக ,கருணை தானாகவே சூழ்கிறது.இந்த அன்பும் கருணையும் நின் ஒரு துளியே .நிந்தன் தன்மையின் ஒரு வெளிப்பாடே.நின்னை முழுவதும்  இந்த ஈன பிறவியில் அறிய இயலோம்.ஆனால் நிந்தன் அன்பெனும் தன்மை கிடைக்கபெற்றோம்,அதன் வழியே நின்னை சிக்கென பிடிக்க முயல்கிறோம்.நின் தன்மை பிடிப்பதும் விடுவதும் என மாறி மாறி காலமெனும் நினது இன்னுமொரு புரியஇயலா ஆற்றல்  எம்மை இயக்குகிறது .பிறவி சுழல் மாறினாலும் என்றாவது ஒரு நாள் நின் அலைபிடித்து ,நின் பொற்பாத நிழல் அடைவோம்..!!எம் பெருமானே ..!!! ஈசனே ..!!! புரிய இயலா விந்தை புரியும் ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே !!! நின் பொற்பாதங்களில்  சரணாகதி ..!!! சரணாகதி ..!!! சரணாகதி ..!!! சரணாகதி ..!!!



இமைபொழுதும் நின் திருவருள் இன்றி பிரபஞ்சத்தில் எந்த ஒரு ஜீவராசியும் வாழஇயலாது.இந்த எழுத்தும் நினது கருணையாலே ,நின் நுண்ணிய ஆளுமை இன்றி எதுவுமே இல்லை. விழிகள் காணும் இந்த  உலகத்திலும் , விழி காண இயலாத கோடான கோடி கோள்கள் கொண்ட இந்த பிரபஞ்சத்திலும் நின் அருள்ஆட்சியே. அன்பால் கசிந்துருகி ,விழிகள் நீர் சுரந்து ,நெஞ்சம் நிறைந்து,கருணை முற்றிலும் ஆக்கிரமித்து ,நின் பெருமை உணர்ந்து  தொழுததால், எம் நெஞ்சம் ஆனந்தம் அடைந்தது ஒரு சுகம். எல்லாம் நீயே எம் தந்தையே ,எதுவும் இந்த அற்ப பதராகிய மானுட எம் அறிவை கொண்டு இயற்றுதல் என்பது இங்கே ஒன்றுமே இல்லை ஐயனே ,எல்லாம் நீ போட்ட  பிச்சையே,எல்லாம் நினது திருவருளே என எண்ணும் நிலை வரும் போது எமது நெஞ்சமெல்லாம் நீக்கமற சூழ்ந்து கொள்ளும் ,நினது அளவிட முடியா வீரியமிக்க   அன்பெனும் ஈர்ப்புவிசையின் ஒரு துளி உணரும் வாய்ப்புகிட்டுகிறது.இந்த அன்பின் ஒரு துளியிலே ஆயிரம் ஆயிரம் மகான்கள் சித்தர்கள் தவமாய் தவமிருந்து ,சொல்ல இயலா தனமைகளை கிடைத்த வார்த்தை கொண்டு கவிதையாய்,பாசுரமாய்,ஸ்லோகமாய்,இன்னும் என்னற்ற வடிவங்களில் புலம்பியும் அழுதும் விம்மியும் ஆழ்ந்தும் ஆனந்தம் அடைந்தும் எழுதிவைத்துச்சென்றிருக்கிறார்கள் .





ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே ..எனும் மாணிக்கவாசக பெருமானின் ஒரு வரிக்கு எம்மால் நூறுபக்கங்களுக்கு மேல் விளக்கம் எழுத இயலும்.அந்த அளவுக்கு இந்த வார்த்தை எம்மை இறைநிலை நோக்கி இழுக்கிறது.எவ்வளவு பெரிய அற்புத உண்மை, முற்றிலும்  உணர்ந்த மகான் மாணிக்கவாசகர் என்பது இந்த ஒரு வரியிலேயே உணர்ந்துகொள்ளமுடிகிறது.ஆழ்ந்து அகன்ற நுண்ணியனை அவனின் ஆற்றலை  ஒரே  ஒரு துளி ,இந்த உள்ளத்தில் கொண்டுவந்துவிட்டாலே ,துள்ளிகுதித்து ஆடும் இந்த மனம்.இறை ஆற்றலை உள்ளத்தில் நிரப்பி உப்பிபெருத்து ஆனந்ததாண்டவம் ஆடும் இந்த மனம்.கர்மவினையெல்லாம் மூழ்கிவிடும் இந்த தாண்டவத்தில்.



கேட்பாரற்று சோ...வென கிடக்கும் பிரபஞ்சம் .. வெட்டவெளி வெறும் வெளி...தாய்இல்லை ,தந்தை இல்லை அண்ணன் இல்லை தம்பி இல்லை ,எந்த சொந்தபந்த உறவும் இல்லை ,உழைப்பு இல்லை,உறக்கம் இல்லை எதுவும் இல்லை இங்கே.எதுவுவே இல்லாத  அனாதி ...ஆதி இந்த வெளி ,அகன்று  அகன்று விரிந்துகொண்டே செல்கிறது..அமைதி பேரமைதி  இங்கே குடிகொண்டிருக்கிறது. இதற்கு எங்கே ஒரு முடிவு இருக்கும்  என இது வரை யாரும் கண்டதில்லை ,உணர்ந்ததில்லை.உணர முற்பட்ட ஞானிகள், மகான்கள் எல்லாம் அவர் தத் தம் நிலையிலே இன்னும் மூழ்கிகிடக்கின்றார்கள்.ஆழ்ந்து ஆழ்ந்து, அகன்று அகன்று, செல்லும் இந்த பிரபஞ்சம் தாண்டிய வெளியை ,உங்களால் கற்பனை தான் செய்ய இயலுமா ..? முயன்று பாருங்கள் பிரபஞ்ச இரகசியம் எல்லாம் இங்கே பொதிந்துகிடக்கிறது...

இந்த நுண்ணியனை உணர முற்படும் போதே , அன்பால்  உள்ளம் நிறைந்து ,கருணை ததும்பி வழிகிறது.எந்த உணவும் இன்றி இந்த உடல் ஆற்றல் கிடைக்கபெற்று,அமைதி நிரம்பி ,இறைவெளி நோக்கி பயணம் செய்கிறது. இந்த நுண்ணியனே பிரிக்க முடியாத முதல் அணுவாக மாற்றம் பெறுகிறது.பிறகு அது ஒன்றோடு ஒன்று சேர்ந்து இரண்டாகி ,பல ஆகி ,பரிணாம மாற்றத்திற்கு வித்திடுகிறது.கொஞ்சம் குறிப்பிட்ட அணுக்கள் சேர்ந்தது விண் என்ற மாற்றம் பெறுகிறது.இன்னும் கொஞ்சம் மாறுதல் பெற்று அடர்ந்த காற்றாகிறது.மேலும் மேலும் இறைவெளியின் வெட்டவெளியின் அழுத்தத்தால் வெப்ப காற்றாகி,நெருப்பாக புதிய வடிவம் பெறுகிறது.இன்னும் இன்னும் மோதி அழுத்தும் இறைவெளியால் ,நீராகி பிறகு மண்ணாகும் மாற்றம் பெறுகிறது.ஆக ஒன்றுமில்லா ஒன்றான வெளியில் அதுவே அதன் பயணத்தின் சுழற்சியில் தற்பொழுது விண்ணாகி ,காற்றாகி,நெருப்பாகி,நீராகி,நிலம் ஆகி, மாபெரும் பூதமாகிய பஞ்சபூதமெனும் பெயர்பெறுகிறது.

அதாவது
எனும் நிலமாகி ,(நமது உடலில் மூலாதாரம்)
எனும் நீராகி,(நமது உடலில் ஸ்வாதிஷ்டானம்)
சி எனும் நெருப்பாகி,(நமது உடலில் மணி பூரகம்)
எனும் காற்றாகி, (நமது உடலில் அனாகதம்)
எனும் விண்ணாகி , (நமது உடலில் விசுத்தி)

ஆக நமசிவய மாகி இருக்கிறது.எல்லாம் பஞ்ச பூத கலவையே.நமது கண்ணால் பார்க்கும் தூரம் வரை ,காதால் கேட்கும் ஒலி வரை ,நாவால் சுவைக்கும் சுவை வரை,என  எல்லாமே பஞ்ச பூத கலவையே. ஓரளவிற்கு இந்த ஸ்தூல கருவிகொண்டு உணரலாம்.ஆனால் ஸ்தூலத்தால் உணரஇயலா எண்ணில் அடங்கா வியத்தகு ஆற்றல் இன்னும் விரிந்து கிடப்பது ஏராளம் ஏராளம்.இந்த பஞ்சபூத (நமசிவய) கலவையே ஓர் அறிவு உள்ள உயிராகி ,பிறகு அதுவே இரண்டு,மூன்று ,நான்கு,ஐந்து,ஆறு என  ஆரறிவு உள்ள இந்த இதழ் வாசிக்கும் மானுட ஜீவன் வரை  பரிணாமமாற்றம் பெற்று வந்திருக்கிறது.

இப்பொழுது கொஞ்சம் பின்னோக்கி இந்த பயணத்தை,அதாவது அது கடந்துவந்த பாதையை உணர முற்படுங்கள்,அதாவது ஆரறரிவிலிருந்து ஐந்து ,நான்கு,மூன்று,இரண்டு ,ஒன்று ,பஞ்சபூதம் ,பல அணு ,ஓர் அணு ,அதனுள்ளே இன்னும் உள்செல்ல வெளி ,வெறும் வெட்டவெளி,சுத்த சூன்யம்.....ஆனால் எல்லாம் இந்த சூன்யத்துள்ளே...எல்லாம் இந்த வெளியுள்ளே.... ஆழ்ந்தும் அகன்றதும் இதுவே ...நுணுகி நுணுகி நுண்ணிய மானதுவும் இதுவே.இது இல்லாத பொருள் இல்லை உயிர் இல்லை,ஜடம் இல்லை ,எதுவும் இல்லை, எல்லாவற்றுள்ளும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

இப்பொழுது
நமசிவாய வாழ்க..!!! ..நாதன் தாள் வாழ்க...!!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் வாழ்க ..!!!  எனும் மாணிக்கவாசக பெருமானின் பாடலை படியுங்கள் .உள்ளம் உணர்ந்து நெஞ்சம் நிறைந்து, நம் நெஞ்சத்துள்ளே , நீக்கமற பஞ்ச பூதமாய் நிறைந்திருக்கும் இறைவனை ,நாமே இறைவனின் ஒரு துளி என்பதை உணர்ந்தும்,நாதனாகிய இறையே எம் உடம்பில் உயிரில் பஞ்சபூதமாய் இருக்கிறது ,அப்படி இருக்கும் இறையே நின் தாள் வாழ்க ..!! என உணர்ந்து சொல்லும் போது ,இந்த மொத்த ஸ்தூலமும் மனமும் உயிரும் எல்லாம் ஒட்டுமொத்தமாக ,இது நான் இல்லை ,இந்த உயிர் நான் இல்லை,எல்லாம் இறையே . எல்லாம் நின் ஒரு துளியே ..!! எம்முள் இந்த பஞ்சபூதமாய் இருக்கும்  இறைவனே நீ வாழ்க ..நின் தாள் வாழ்க ..!! என்று  இறைபெருமை  போற்றி ,ஆனந்ததாண்டவம் ஆடும் அவன்  திருவடிஅருகில் அலைத்துச்செல்லும்.இந்த மாபெரும் ருத்ர சக்தி நம்முள்ளும், வெளியும், உள்ளும், புறமும், மண்ணும், மரமும், பொன்னும், பொருளும், பார்க்கும்,கேட்கும், தொடும் ,நினைக்கும்  என எல்லாமுமாய்  இருந்துகொண்டும் ,நம்மையும் ஆண்டுகொண்டும்,எல்லா அணு முதல் பேரண்டம் வரை  யாவற்றையும் ஆண்டுகொண்டும், இருக்கும் இந்த தத்துவத்தை நீ அறிந்தால் நீ பெரியோன் ,இதனை மறந்தால் நீ சிறியோன்.

இந்த வெட்டவெளி நாயகனின் ஒரு துளி வெளியில்,அந்த  வெட்டவெளியில் இருக்கும் அளவிடமுடியா ஈர்ப்பு அலையாகிய அன்பின் ஒரு துளியை, நாம் பார்க்கும் யாவற்றுள்ளும் ,சூட்சுமமாய்  மிளிரும் இந்த பஞ்சாட்சர தன்மை உணர்ந்து ,வாழ்த்தி ,அதன் பெருமை போற்றி மகிழ்வோம் என ஆழ்ந்து அகன்ற நுண்ணியனின் ஆற்றல் அலைகளோடு அகத்திய உள்ளங்களை  வேறு ஒரு நிகழ்வில் சந்திக்கிறோம்,
வாழ்க வளமுடன்

ஒம்  அகத்தீஸ்வராய நமஹா ..!!!
ஒம்  அகத்தீஸ்வராய நமஹா ..!!!
ஒம்  அகத்தீஸ்வராய நமஹா ..!!!



Comments

  1. ஆருயிர் அன்பரே உங்கள் மலரடி வணங்குகிறேன்.

    உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்க என் அவா .
    எம்பெருமான் மாணிக்க வாசகர் ஆசி பெற்று, அவர் துணை கொண்டு திரு சிவபுராணம் விளக்கம் இத்தளத்தில் உங்களால் படைக்க வேண்டும் என யாசிக்கிறேன்.

    நமசிவாய வாழ்க..!!! ..நாதன் தாள் வாழ்க...!!
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் வாழ்க ..!!!
    திருச்சிற்றம்பலம் ..!!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்