சிவாய எனும் அட்சரம்..!!!




ஆயிரம் கோடி சூரிய ஜோதி, எங்கும் நிறைந்து ,எங்கெங்கும் நிறைந்து ,ஆதியாய் அனாதியாய் நிற்கும் அற்புதம்.இதுவே  கூனி குறுகி , எல்லோர் உள்ளங்களிலும் நான் எனும் அகந்தையாய் நின்று,இதன் தன்மை யாதென ஆழ்ந்து செல்ல,இந்த அகந்தையை உடைத்தெறிந்து ,எங்கெங்கும் நீண்டு விரிந்து,அடர்ந்து படர்ந்து, நீக்கமற நிறைந்து,யாவற்றையும் சூழ்ந்து அன்பால் அரவணைக்கும் எம்பெருமானின் நம் பெருமானின் அலைகள் நிறைந்த இருப்பிடம் நோக்கி ஈர்த்துச்செல்கிறது.எம்மால் எதுவும் இல்லை எல்லாம் அந்த எல்லைஇல்லா பேரொளியின் கருணையே என , உடம்பு ,மனம், இவற்றை கடந்து சென்றாலே,இறை அலைகள் முழுவதும் நிறைந்துகொள்ளும் அற்புதம் நிகழ்கிறது.

எந்த தெய்வவழி சென்றாலும், அதன் முடிவு எல்லையில்லா பெருமானிடமே அழைத்துச்செல்கிறது.எம் பெருமானே வெவ்வேறு தோற்றங்களில் வெவ்வேறு தெய்வங்களாக கோடி கோடி உயிர்களின் உள்ளம் கவர்ந்த தெய்வமாக ஏதேனும் ஒரு வடிவில் பொருளாகவோ,வடிவமாகவோ ,நம்பிக்கையாகவோ ஏதும் அற்ற சூட்சுமமாகவோ இருந்துகொண்டு அருள்ஆட்சி நடத்தும் அற்புதம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது,எளிதில் நம் மீது உரசிச்செல்லும் காற்றே மிக சிறந்த உதாரணம் .காற்று அனைத்திற்கும் பொது,எந்த ஒரு சன்மானமும் கொடுக்கவேண்டாம்.காற்று இருக்கிறது.பார்க்க முடியவில்லை .உரசிச்செல்லும் போது உணரமுடிகிறது.இதன் மூலம் எப்படி எப்படி ...எப்படி இருக்கும் இவை எங்கேயிருந்து வருகிறது.. என ஆழ்ந்து செல்ல செல்ல எம்பெருமானின் ஈர்ப்பு அலைகள் ,கொஞ்சம் கொஞ்சமாக தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் உள்ளத்தை சிறிது சிறிதாய் ஆக்கிரமிக்கும் அற்புதம்  நிகழ்கிறது.பாச அலைகள் கொண்ட காரிருள் நாயகன் ,ஆயிரம் கோடி சூரிய ஜோதிக்கு சொந்தக்காரன்.பிரபஞ்சத்தின் எந்த மூலையில் இருந்தாலும் ,இதோ உன் கண்முன்னே யாம் இருக்கிறோம் என,அனைத்தும் யாமே .சற்றே உள்நோக்கி ஆழ்ந்து,ஒரே ஒரு இமை பொழுது ,இருப்பது நான் அல்ல ,எல்லாம் யாமே எனும் தன்மை ததும்பி அன்பால் நெஞ்சுறுகி எம்பெருமானை உணர முற்பட ,வாகைசூடிய பெருமானின் ஆர்ப்பரிக்கும் அலைகள் உள்ளத்துள் நிரம்பும் அதிசயம் நிகழ்கிறது.



பல ஆயிரம் ஆயிரம் கோடி உயிர்களின் ஆத்ம நாயகனே..!! ஆயிரம் ஆயிரம் கோடி கோடி ஜடத்திற்கும் ஜடமற்ற உயிருக்கும் உள்ளே அன்பாய் இருந்து அருள் ஆட்சிசெய்யும் ஈசனே ..!! சர்வேஸ்வரனே.நினது கருணையும் அன்பையும் எண்ண இயலவில்லை ,ஒரே ஒரு துளி உயிராய் எம்முள் இருப்பதால் ,யாமும் நினது படைப்பின் ஒரு சிறு தூசியென உணர்ந்தோம்,நின் பேராற்றல் எண்ணி எண்ணி நெஞ்சம் அன்பால் நிறைந்து ஆனந்தம் அடைந்தோம்.நின்னை நினைந்து நினைந்து, நின் பெருமை எண்ணி எண்ணி, ஆனந்தம் அடைகிறோம்.எத்தனை கோடி நுட்ப அதி நுட்ப திறம் எம்முள் வைத்தாய் இறைவா .!! அன்பால் விரிந்து,உள்ளம் நிறைந்து, எமது ஆயிரம் ஆயிரம் கற்பனை கைகளால் நின்னை கட்டி அரவணைத்து நன்றி கூறவியல்கிறேன் இயலவில்லை.எம் நாயகனே !!எம்பெருமானே !! சரணாகதி !!! சரணாகதி !!

நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மஹாதேவாய  த்ரயம்பகாய  த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய  நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய ஸதா சிவாய  ஸ்ரீமன் மஹாதேவாய நம:








 உள்நோக்கி சிவமாக இருக்கும் நினது காற்றும் யாமே!.உள்ளும் வெளியும் யாமே !! சிவமாகிய  காற்றே..!! நீ வாழ்க !! எம் உள்ளத்துள் நெஞ்சத்துள் நீக்கமற நிறைந்திருக்கும் நின் திருவடி வாழ்க !!நின் பொற்பாதம் வீழ்ந்து வணங்குகிறோம். !!  காற்றே நம்முள்ளே உள்ளும் புறமும் தச வாயுவாக  சொல்ல இயலா விந்தை புரிகிறது.இந்த தசவாயுவில் நமது வாழ்கையே அடங்கி போகிறது.இதில் சிவ வாக்கிய சித்தரின் ஒரு அற்புதமான பாடல் .உண்மையில் சாதாரணமாக இதில் இருக்கும் சூட்சும இரகசியம் தெரிந்து கொள்ளல் மிக மிக கடினம்.அகத்திய உள்ளங்கள் முயற்சிசெய்து பாருங்கள் !!

சிவாய என்ற அட்சரம் சிவனிருக்கும் அட்சரம்
உபாயமென்று நம்புவதற்கு உண்மையான அட்சரம்
கபாடஅற்ற வாசலை கடந்துபோன வாயுவை
உபாயம்இட் டழைக்குமே சிவாய அஞ்செழுத்துமே


சிவாய என்ற அட்சரம் சிவன் இருக்கிற அட்சரம் .உபாயம் தரும் உண்மையான அட்சரம்.உடலில் இருக்கும் தச வாயு ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலைசெய்கிறது.
உயிர் வாயு (பிராணன்)
 மல வாயு (அபானன்)
தொழில் வாயு (வியானன்)
ஒலி வாயு. (உதானன்)
சத்துகளை உடல் முழுவதும் பரவும் வாயு( சமானன்)
தும்மல் வாயு(நாகன்)
விழிவாயு (கூர்மன்)
கொட்டாவிவாயு(கிருகரன்)
இமை வாயு (தேவதத்தன்)
உடலை வீங்கசெய்யும் வாயு ( தனசெயன்)

இதில் இந்த தனஞ்செயன் எனும் வாயு  ஒருவர்  இறந்தவுடன் அந்த உடலை சுற்றி மூன்று நாட்கள் இருக்குமாம் .அதாவது ஒவ்வொரு செல்களையும்  அதன் இயக்கங்களை நிறுத்தி உடலை வீங்க செய்து பிறகு தான் கிளம்புமாம்.
தனஞ்செயன் கிளம்பியாச்சுன்னா அவ்வளவு தான்.எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தம்.அப்படி அந்த கபாடம் அற்று கடந்து போகும் வாயுவாகிய தனஞ்செயனை  அழைத்து ,உபாயம் அருளுமாம் இந்த சிவாய_ _ என்ற அஞ்செழுத்துமே என்கிறார் சிவவாக்கியர் ஐயா.சிவாய என்ற மூன்று எழுத்தும் பிறகு வரும்  டேஸ் டேஸ்  _ _  என்ற இரண்டும் சேர்ந்து மொத்தம் இந்த ஜந்தெழுத்தும்.மூன்று எழுத்தை மட்டும் சொல்லிவிட்டு இரண்டு எழுத்தை நீயே கண்டுபிடித்துக்கொள் என்று பாடல் எழுதிவைத்துள்ளார் சிவவாக்கியர் அய்யா. இந்த சிவனிருக்கும் அட்சரத்தை கண்டுபிடித்து நாள் தோறும் சொல்ல.அடுத்த நொடியே அவனுக்கு உள்ளம் உறைந்து  இறைநிலை கிட்டிவிடுமாம்.அப்படி சொல்லும் அவனுக்கு மரணமே இல்லை என்கிறார்.மரணம் தரும் தனஞ்செயன் எனும் வாயுவை இந்த சிவாய _ _ என்ற அட்சரம் ,நமக்கு உதவிசெய்து மரணமே இல்லாத பெருவாழ்வை அளிக்கும் என்கிறார் சிவவாக்கிய சித்தர் அய்யா.

இந்த எழுத்தை கண்டுபிடித்து உணர்ந்துவிட்டால் ,அவனுக்கு அடுத்த நொடியே மனம் அற்று இறை தன்மை வந்துவிடுமாம்.ஞானி ஆகிவிடுவானாம்.இப்படி உணர்ந்த ஒருவனுக்கு எல்லாம் கைவந்த கலைஆகிவிடுமாம்.எதை பற்றியும் அறியும்  ஞானம் வந்துவிடுமாம்.ஒரு ஞானி என்பவன் இறைநிலையோடு நொடிப்பொழுதும் இறையை விட்டுவிலகுவதில்லை.இப்படி ஆகவில்லை எனில் கண்டுபிடித்த எழுத்து தவறு என்பதே ஆகும். சிவவாக்கியர் அய்யாவை அன்பால் நிறைந்து அவர் பொற்பாதம் பணிய கண்டிப்பாக அய்யா உபாயம் செய்வார் என நம்புகிறோம்.
அகத்திய உள்ளங்களை விரைவில் அடுத்த கட்டுரையில் சந்திக்கின்றோம்.

ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!!




Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்