Wednesday, March 29, 2017

சிவமெனும் அற்புதம் !!!


சிவமென்னும் அற்புதம்.சிவம் எப்படி இருக்கும் என்று நினைத்தாலே,கண்களை மூடிக்கொண்டு சிந்தித்தாலே  மனதின் அலை ஓட்டத்தை சற்றே குறைத்து ,குளுமை அலைகளால் சூழ்ந்து ,கவ்வி இழுக்கும் ஒரு அற்புதம் நிகழ்கிறது.எல்லாவற்றையும் சுருக்கி அணுவாக ,இன்னும் உள்ளே செல்ல அதன் மிக சிறிய அலைவடிவாக ,இன்னும் இன்னும் உள்ளே செல்லச்செல்ல எதுவுமே இல்லாத, ஆனால் எல்லாம் ஆன, ஒன்றும் இல்லாத ஒன்றாக இருக்கும் அற்புதம்.அலை பாயும் மனதிற்கு ஒரு சம்மட்டி அடி கொடுத்து ,அதன் ஆதிமூலம் உணரவைக்கும் உண்மையின் உறைவிடம் சிவம்.சிவத்தை உணர்ந்தால் ஞானம்.சிவத்தை மறந்தால் ஊனம்.சிவமே எல்லாம் .சிவமே எங்கும் .சிவமே எங்கெங்கும்.சிவம் அறிய இப்பிறவி முயற்சி தோற்றாலும்  இனிவரும் ஒரு பிறவியில் சிவத்தோடு சிவமாக ஆகும் ஒரு பொன்னான காலம் வரும் என்பது உண்மை.நாள் தோறும் அழிந்துகொண்டிருக்கும் இந்த பூதஉடலுள்ளே ஒரு தற்காலிக பயணம் செய்துகொண்டிருக்கும் பேராற்றல் நாயகனின் இந்த உயிர் என்ற தூசியும் ஒரு சிவமே. ஒன்றை மற்றொண்டாய் மாற்றுவதும் சிவமே.அப்படி ஒன்றை மற்றொண்டாய் மாற்றிக்கொண்டே முழுவீச்சில் இயங்கிகொண்டிருக்கும்  நிலை சக்தி எனும் நிலை.சக்தி அலைகளை உணர்ந்துகொண்டு இவற்றை கடந்து உட்செல்ல மெல்ல மெல்ல இயக்கம் குறைந்து ஆழ்ந்து உட்செல்ல  இயக்கமற்ற சிவத்தோடு சிவமாய் கலக்கும் அற்புதம்.பிரபஞ்சத்தின் எந்த மூலையில் இருந்து அழைத்தாலும் எங்கும் எங்கெங்குமாய் பரந்து விரிந்துள்ள மாபெரும் பேராற்றல் அழைத்தநொடியிலேயே வந்து அரவணைக்கும் அற்புதம்.

 காற்றோடு கலந்திருக்கிறது ஆனால் காற்றல்ல. காற்றின் மூலமாக உள்இழுத்து இறையை மற்றும் விழுங்கிக்கொண்டு அதாவது உள்வைத்துகொண்டு பிறகு வெறும் காற்றை மட்டும் வெளியிடவேண்டும்.தாமரை இலையும் நீரும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டுள்ளது போல ,காற்றின் மீது ஓட்டிக்கொண்டேஇருக்கும்  இருக்கும்  இறையை உள் இழுத்து ,நம்மோடு உள்வைத்துகொள்ளல் இது போன்ற ஒரு கலையை கற்றுக்கொண்டால் தேகத்தில் பிணி என்பதே கிடையாது.மூப்பு என்பதே வராது.என்றும் இளமையே .முகத்தில் ஒரு பொலிவு ,ஒரு தேஜஸ் உருவாகும்.ஒரு சிவபழம் போல ஜொலிக்கலாம்.


நமது உடலியே  சுரக்கும் ஒரே ஒரு அமிர்தத்தை ஒரே ஒரு முறை வாழ்வில் உணர்ந்தால் ,நமது உடலில் உள்ள எந்தவித நோயினையும் ஒரு நொடிப்பொழுதில் நீக்கிவிடலாம்.சர்க்கரை நோய் ,இரத்தஅழுத்தம்,கேன்சர்,மூட்டுவலி,முழங்கால் வலி, etc ,என நம் ஒவ்வோர்வருக்கும் நீண்டுகொண்டு செல்லும் நோய்களின் பட்டியல் ,இவை எதுவாகினும் அதனை முற்றிலும் நீக்கிவிடலாம் ,அப்படி ஒரு மருந்து உங்கள் தேகத்துள்ளே இருக்கிறது .முடிந்தால் கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்
 என சவால் விடுவது போலவும் ,அதை எவ்வாறு உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்கு தேவையான குறிப்புகளையும்,அது தீயோர் கையில் சிக்ககூடாது என்பதற்காக அவற்றை பரிபாஷைகளில் போற்றுதலுக்குரிய பாடலாக என்றோ எழுதிவைத்துசென்றுள்ளனர்  சித்தர் பெருமக்கள் .சித்தன் வாக்கு என்றுமே சிவவாக்காகும்.இதோ இப்படி ஒரு வழி இருக்கிறது ,இதை உணர்ந்தால் உடலில் உள்ள உபாதைகள் நீங்குவது மட்டும் அல்லாமல் ,இறை நிலையை அடையவைக்கும் ஒரு அற்புத மார்கத்தையும் தந்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.அன்பும் கருணையும் நிறைந்த உள்ளங்களுக்கு விரைவில் இதன் முழுபலனும் கிடைக்கும் என்பதில்கொஞ்சம்கூட சந்தேகம் இல்லை.


அகத்தியர் மெய்ஞானத்தில் வரும் ஒரு அற்புதமான பாடல்

உண்ணும்போ துயிரெழுத்தை வுயர வாங்கி 
உறங்குகின்ற போதெல்லா மதுவே யாகும்; 
பெண்ணின்பா லிந்திரியம் விடும்போ தெல்லாம் 
பேணிவலம் மேல்நோக்கி அவத்தில் நில்லு

திண்ணுங்கா யிலைமருந்து மதுவே யாகும் 
தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார் 
மண்ணூழி காலமட்டும் வாழ்வார் பாரு 
மறலிகையில் அகப்படவு மாட்டார் தாமே.


இந்த பாடலில் சூட்சுமாக நிறைய கருத்துக்கள் நிறைந்துள்ளது.அன்பால் உள்ளம் உருகி ஸ்ரீ அகத்தியர் அய்யாவை வணங்கி ,அவர் பொற்பாதம் பணிந்து இதன் பொருளை நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.இதற்கு நிறைய அன்பர்கள் நிறைய விளக்கங்கள் சொல்லிஇருக்கிறார்கள்.இங்கே எமக்கு எமது சிற்றறிவிற்கு கிடைத்த ஒரு வழியில் விளக்கம் தர முயற்சிசெய்கின்றோம்.உண்மையில் அய்யா, இது யாருக்கு இதன் முழுமையான பலன் கிடைக்கவேண்டுமோ அவருக்கு அவர் தாமே முன்வந்து முற்றிலும் புரிந்துகொள்ளவைப்பார் என்றே யாம் உணர்கிறோம்.


 நன்கு வாசியோகம் சித்திபெற்ற குருவிடமிருந்து வாசி பயிற்சிமுறைகளை கற்றுகொள்ளவேண்டும். இங்கே பொருள்  பரிபாஷையில் சொல்லப்பட்டுள்ளது.இதற்கு நேராக பொருள்கொள்ளல் சுத்தமாக குழப்பிவிடும்.உதாரணமாக உண்ணும் போது உயிர் எழுத்தை உயர வாங்கு ,என்றால் சாப்பாடு சாப்பிடும் போது உயிர் எழுத்தை உயர வாங்கு என்று பொருள்கொள்ளுதல் தவறு. மூச்சை உள்இழுக்கும் போது (பூரகம்) ,அ என்ற உயிர் எழுத்தை உயர வாங்கி,அப்படி உள்ளே வாங்கும் போது இது உடலில் சுரக்கும் அமிர்தத்தை புசிக்கவைப்பது ,உணரவைப்பது ,இந்த அமிர்தத்தை புசித்தால் பிறப்பு,இறப்பு கிடையாது ,என்றும் இளமையே,இதுவே அனைத்திற்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மருந்து,ஒரு குறிப்பிட்ட அதிர்வில் இந்த அகாரத்தை உள்வாங்க அது நமது உடலில் உள்ள ஒரு அமிர்தத்தை சிவ அமிர்தத்தை ,உணர்ந்துகொள்ளும் நிலையை உருவாக்கும்) உறங்கும் போது (கும்பகம்)  (உறங்காமல், தூங்கியும் தூங்காமல் இருக்கும் நிலை)அதுவே ஆகும் ,அப்படியே  நிலை நிறுத்தி, பெண்ணின் பால் இந்திரியம் விடும் போதெல்லாம் என்றால் மூச்சை வெளியிடும் போது (ரேசகம்) ,சிவமாகிய அந்த அமிர்தம் (அ), நமது இந்த ஸ்தூலமாகிய சக்தி என்பது இங்கே பெண் ,ஆக அ என்ற சிவ அமிர்தத்தை, அந்த சிவத்தை,நமது ஸ்தூல சக்தியுள் இறக்கினால், திண்ணும் காய் இலை மருந்து எல்லாம் அந்த  அமிர்தமே ஆகும் .இந்த அமிர்தமே அனைத்தும் .இப்படி தினந்தோறும் இந்த அமிர்தத்தை புசிப்பவருக்கு இந்த மண் உலகம் உள்ளவரை வாழ்வார்கள், அவர்கள் எமன் கைகளில் (மறலிகையில் )அகப்படமாட்டார் என்று ஒரு மிக அற்புதமான மருந்தினை, சிவத்தை அடையும் ஒரு ஞானத்தை அய்யா மிக அற்புதமாக சொல்லிவைத்திருக்கிறார்கள் இந்த பாடலில்.

இந்த ஒரு பாடலுக்கு உண்மையான விளக்கம் கொடுத்து,நம்முள் இருக்கும் இந்த அமிர்தத்தை உணரவைப்போர்,கண்டிப்பாக ஒரு சாதரண மனிதராக இருக்க முடியாது ,அவர் ஒரு போற்றுதலுக்குரிய மகானாகவோ அல்லது ஒரு மாபெரும் சித்தபுருஷராகவோ தான் அவர் இருக்கவேண்டும்.அவர் பொற்பாதம் பணிந்து வணங்கவேண்டும்.ஏனெனில் வாழ்வில் ஒருமுறை இதை உணர்ந்துவிட்டால் ,இந்த உயிர் என்றென்றும் சிவத்தோடு சிவமாக ஆழ்ந்து செல்லும் நிலை கிட்டிவிடும். இதை எப்படி உணர்வது  ?இந்த அமிர்தத்தை எப்படி புசிப்பது ? அய்யாவின் அருள் அலைகளை உணரும்  வாய்ப்பே ஏதோ பட்டும் படாமல் சூட்சுமாக என்றோ ஒரு நாள் இந்த சிற்றறிவிற்கு கிடைக்கிறது .இதில் எப்படி இந்த அமிர்தத்தை உணர்ந்துகொள்ளும் வழியினை யாம் உணர்ந்துகொள்ளுமாறு கேட்பது ? உண்மையில் அடையும் வழியாது என எண்ணிக்கொண்டே ஒரு கோவிலுக்கு சென்று வெளிவந்தேன்.வெளிவந்து காலனியை தேடி அதனை மாட்டும் பொழுது ,ஒரு பெரியவர் பிச்சைகார தோற்றத்துடன் அங்கே மற்ற பிச்சைஎடுப்பவர்களுடன் அமர்ந்து இருந்திருந்தார்.
 "....தறிகெட்டு ஓடுது மனது ,இதுலே அகத்தியரை பார்க்கணுமா ? அகாஹ்.ஹ்ஹா... அகாஹ்.ஹ்ஹா ..."
என சிரிப்புடன் அந்த பிச்சைக்கார பெரியவர் சிரித்தார். இதை கொஞ்சம் கூட கவனிக்காமல் வெளிவந்துவிட்டேன்.பிறகு சிறிது தூரம் சென்றவுடன் தான் ஞாபகம் வருகிறது .ஆகா அந்த பெரியவர் என்னைத் தானே சொல்லியிருக்கிறார் ,கண்டிப்பாக அவர் எமது வேண்டுகோளை ஏற்று இதனை மேலும் உணர அவர் தெளிவு படுத்துவார் என எண்ணி ,வேகமாக  தேடி சென்றேன் அவர் அங்கே  இல்லை.


சிவ அமிர்தம் எனும் அற்புதத்தை  அகத்திய உள்ளங்களுக்கு ஞாபகபடுத்தல் மட்டுமே எமது முயற்சி ,இப்படியும் ஒரு வழி இருக்கிறது என்பதை ஞாபகபடுத்த எடுத்த ஒரு சிறு முயற்சியே இது.தக்க குரு பெற்று இதனை உணர்தலே அதி உத்தமம்.அகத்திய உள்ளங்களை மீண்டும் வேறு நிகழ்வில் சந்திக்கிறோம் விரைவில்.

ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!!

4 comments:

  1. அருமையான விளக்கம் தம்பி சிவப்பழம்

    ReplyDelete
  2. எல்லாம் சிவமயமே

    ReplyDelete