Tuesday, February 28, 2017

ஸ்ரீ லலிதாம்பிகை பாதம் போற்றி !!!
வில் எனும் புருவங்களும் வேல்விழி கண்களும்,கொவ்வை செவ்விதழ்களும்,கொன்றைவார் சடைமேல் குளுமைநிறை  மதியும் ,அமுதெனும் தேன்மழை மொழியால் அகிலத்தையே ஈர்த்தவளும்,அழகே யாவும் சேர்ந்து அழகுபார்க்கும் நின் எழில் அழகும்,அதி நுண்பார்வையும்,ஆழ்ந்து அடர்ந்து நீண்டு எங்கும் எங்கெங்குமாய் தமது அன்பெனும் கருணை அலைகளை பரப்பி ,அன்பால் அனைத்தையும் வாரி அரவணைத்து,காத்து ,எதுவும் எம்மை விட்டுவிலகுவதில்லை,எல்லாம் எமது ஆட்சிபுலத்தில் என அருளாட்சி செய்யும் ,திரிபுவன நாயகியே,சக்தி ஸ்வரூபிணியே,சாந்த ஸ்வரூபிணியே சகல கலைகளுக்கும் அதிபதியே,சர்வேஸ்வரரின் நாயகியே,ஆயிரம் நாமங்களுக்கு சொந்தக்காரியே ,ஸ்ரீ லலிதாம்பிகையே ! நின் பொற்பாதம் பட்ட மண்ணின் திருவடிதடத்தைகூட தரிசிக்க அருகதை அற்றவனாகிய இருக்கும் எம்மை ,நின் பார்வைபடும் கோடானகோடி தூசிகளின் ஒரு சிறு தூசிக்கும் கீழ் உள்ள அடியேனின்,எம் நிலை கண்டு இறங்கிவந்து,அருள்ஆசி அலைகள் வழங்குங்கள் அன்னையே !!நின் திருவருள் என்றும் எம்முள் இருக்க வழிவகை செய்யுங்கள் மஹாதேவியே!!கருணைகடலே !! கருணைத்தாயே !!!  சரணாகதி !! சரணாகதி !!!சரணாகதி !!!

சக்தியும் சிவமும்எங்கும் நிறைந்துள்ளது .சிவம் என்பது ஆழ்ந்த அமைதி .இது எப்படி இருக்கும் என அறியமுற்பட்ட ஆன்மாக்கள் அப்படியே மூழ்கி தத்தம் நிலை மறந்து சிவத்தோடு சிவமானார்கள்.ஆனால் அனைத்திற்கும் மூல காரணமே சிவமே.சக்திஎன்பது இயங்கும்ஆற்றல் ,ஒரு ஆகர்ஷன சக்தி ,இயங்கி இயங்கி பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கிறது .நம்முள்ளும்' சிவமும் சக்தியும் கலந்துள்ளது.சந்திரகளையும் ஓடுகிறது சூரியகளையும் ஓடுகிறது நம்முள்.ஒன்று குளுமை மற்றொன்று வெப்பம் .அதுவே ஒன்று சக்தி மற்றொன்று சிவம்.இவை இல்லாத இடமே இல்லை.சக்தி அலைகள் இல்லையெனில் இவ்வுலகில் எதுவும் சாத்தியமாகாது அல்லவா.எதுவும் இயங்காது.நமது உடலுள்ளே புதைந்து கிடக்கும் சக்தி அலைகளை உணர முற்பட ,அது நம்மை நமது சூட்சுமதேகத்தை நன்கு வலுவூட்டி, ஒரு பிரித்து உணரும் அளவிற்கு ஒரு தகுதியினை,ஒரு ஆற்றலை உணர்பவருக்கு ஏற்படுத்தி ,சொல்லஇயலா மாற்றங்களை உடலில் ,உயிரில்  ஏற்படுத்துகிறது. ஆகர்ஷன அலைகளை விரைவில் உணரவைக்கிறது.இந்த ஆகர்ஷன ஆற்றல் ஒரு முறை உணர முற்பட அது  நமது அன்றைய நாள் முழுவதும் ,நம்மை ஒரு ஆற்றல்மிகு வலையத்தில் வைத்திருக்கும்.இதை உணர நிறைய வழிகள் இருக்கிறது.ஒரு சில சக்திமிக்க ஸ்லோகங்களை சொல்வதால் நமது உடலில் ஒரு வித அதிர்வு அலைகளை உணரலாம்.அந்த அதிர்வு அலைபிடித்து ஆழ்ந்து செல்ல அதன் தாத்பர்யம் எளிதில் உணரலாம்.அதில் ஒன்று யாம் உணர்ந்த வழி ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்ரம் பாராயணம்.இது பற்றி நிறைய அன்பர்கள் வலைதளத்தில் மிக அருமையாக எழுதி உள்ளனர்.தயைகூர்ந்து அதன் பொருளையும்  சரியான உச்சரிப்பையும் நன்கு புரிந்து ஸ்லோகங்களை சொல்லுங்கள்.இங்கே  யாம் உணர்ந்த எமக்கு ஏற்பட்ட அனுபவத்தை எழுதுவதன் மூலம் , அகத்திய உள்ளங்களுக்கு இது பற்றி  இப்படியும் ஒரு வழி இருக்கிறது  என ஒரு சிறு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எமது  நோக்கம்.


நன்றி வலைதள அன்பர்கள்
 click below link  to download the PDF
  ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்ரம்


கதகதவென வெப்ப அலைகள் .வெப்பம் என்றால் இது நெருப்பில் உள்ள வெப்பம் போல அல்லாமல்,சற்றே மாறுபட்டு  உடல் தாங்கும் அளவிற்கு இதமான வெப்பஅலைகள்,நமது மாயைகளை சுட்டெரித்து ,கர்மவினை அழுக்கினை சாம்பலாக்கி ,சூட்சுமதேகத்தை ஒரு வித சக்திமிக்க அலையால் கழுவி,நன்கு ஸ்திரம் கொள்ளசெய்து எப்பொழுதும் ஒரு வித விழிப்பு நிலையில் ஒரு active stateல் நம்மை இருக்க வைக்கிறது.இது போன்ற நிலை கிடைத்தவுடன் ,அதன் பிறகு நாம் செய்யத்துவங்கும் செயல்,தொழில்,படிப்பு என அனைத்தும் புத்துணர்ச்சியோடு எதிர்கொள்ளமுடிகிறது.அன்றைய நாள் வாழ்வியலில் உண்மையான ,ஞாயமான என்ன தேவையோ அதை கிடைக்க வழிவகை செய்கிறது.தொடர்ந்து சொல்லசொல்ல எவ்வித தடைகளையும் கடந்து வாழ்வில் முன்னேற்றத்தில் வெற்றி பல குவிக்கும் என்பது உண்மை. கர்மவினை தாக்கத்தால் ஒரு சாதாரண தேவை சரி செய்ய எவ்வளவு சிரமத்திற்கு உள்ளாகிறோம் ? இங்கே அன்னை இந்த அலைகள் மூலம்,தடையை தகர்த்தெறிந்து, அல்லவை நீக்கி, நல்லவை  கிடைக்க வழிவகை செய்கிறாள். ஏழரை நாட்டு சனியால் சிரமப்படும் அன்பர்கள் இதனை சொல்ல சொல்ல கிரக பாதிப்பு தாக்கம் குறைந்துவிடும்.தெரிந்தோ தெரியாமலோ முற்பிறவியில் செய்த வினை ,அதன் காரணமாக தாங்கி வந்த இந்த பீடை அதிகமாகவோ குறைவாகவோ  நிறைந்த உடல் .இவை எல்லாம் செய்தது செய்தது தான். அதனை இம்மி அளவு கூட மாற்ற முடியாது.இவை எல்லாம் இது வரை செய்தவினையின் அறுவடை.அனுபவித்தே ஆகவேண்டும்.வேறு வழியில்லை.ஆனால் தற்பொழுது இறைவனால் கொடுக்கப்பட்ட நாம் வாழும் காலம் ஒரு பொன்னான காலம் அல்லவா .ஒவ்வொரு நொடியும் மிகமுக்கியமே. .இங்கே இது போன்ற சக்திமிக்க ஸ்லோகங்களை சொல்லியோ அல்லது ஏதேனும் ஒரு முறையில் இறைஅலைகளை உணர பழகிக்கொள்ள ,கண்டிப்பாக கர்மவினை தாக்கங்களை குறைத்துவிடும்.ஏனெனில் இப்பொழுது செய்யும் இந்த நல்வினைக்கான விளைவு இறைவனால் என்றோ ஒரு நாள் நமக்கு பயன் தரப்போகிறது என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை.ஒரு முறை ஸ்ரீ சக்கரத்தாழ்வார் கோவிலுக்கு சென்று பெருமாளை வழிபட்டுவெளிவர ,ஒரு வயது முதிர்ந்த அய்யா எம்மிடம் சொன்னார்,"..நாளை என்ன நடக்குமோ தெரியாது ? இன்று நடந்துகொண்டிருப்பது யாம் என்றோ செய்த கர்மவினை   செயல் ,,ஷனப்பொழுதும் லலிதாசகஸ்ரநாம சொல்லுதல் ,உனக்கும் ,உன்பிள்ளைக்கும் ,உன் சந்ததிக்கும்  நன்மைபயக்குமப்பா.மறவாதே!.."என்று சொல்லிவிட்டு அவர் தொடர்ந்து மந்திரங்களை உச்சரித்துகொண்டு வெளிகிளம்பினார்.எமக்கு ஒரே வியப்பாக இருந்தது .இந்த கட்டுரை வெளிவர என்றோ அவர் எம்முள் சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றார் என்றே உணர்கிறோம்

ஒரு முறை அட்சரசுத்தமாக இந்த ஸ்தோத்திரத்தை சொல்லி ,அதிர்வு அலைகளை உள்வாங்கி அது உங்களுள் ஏற்படுத்தும் மாற்றத்தை உணர்ந்து பாருங்கள்.அதிர்வு அலைகள் உணர்தலே ஒரு பெரிய கலை.எந்த சப்தம் எந்த அட்சரம்  எந்தவிதமான உணர்வினை ,தாக்கத்தினை உடலில் உள்ளத்தில் ஏற்படுத்தும் என்பதை உணர்ந்துவிட்டாலே ஆன்மீகவாழ்வில் ஒருபடி மேலே வந்துவிட்டீர்கள் என்பதே பொருள்.
ஸ்ரீலலிதா சகஸ்ரநாம ஸ்தோத்ரம் சொல்லவேண்டும் அதுவும் ஒரு பிரசித்தி பெற்ற  கோவிலில் சொல்வது சிறப்பு என எண்ணி
திருவேற்காடு மாரியம்மன் கோவிலில் சொல்லலாம் என தேர்வு செய்து அங்கு சென்றோம். அம்பாள் தரிசனம் பெற்று வெளி வந்து அருகிலே உள்ள மரத்தின் அருகே அமர்ந்து ,கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக ஸ்தோத்ரங்களை உச்சரித்து கொண்டிருந்தோம்.எம்மோடு வந்த குரூப் எமது அருகே கொஞ்ச நேரம் அமர்ந்து ,பிறகு அது தமது வேலைகளை தெளிவாக செய்ய ஆரம்பித்தது.முறுக்கு ,அதிரசம் ,லட்டு என பிரித்து மேய ஆரம்பித்தது.இடையில் எமக்கும் கொஞ்சம் உண்ணுமாறு என வேண்டுகோள் வேற வைத்தது.எமக்கு வேண்டாம் என யாம் தொடர்ந்து மந்திரங்களை உச்சரித்த வண்ணம் இருந்தோம் .ஆயிரம் அம்பாள் நாமங்கள் சொல்லவேண்டுமல்லமா அதனால் நேரம்  கொஞ்சம் அதிகமானது .அதற்கு மேல் அந்த குரூப் அங்கே இருக்க இயலவில்லை .எம்மை விட்டு கோவில் வெளியே செல்ல ஆரம்பித்தது.அப்பாடா ஒருவழியாக சென்றுவிட்டார்கள் என மீண்டும் கவனம் முழுவதும் செலுத்தி உச்ரரிக்க ,வேறு ஒரு அன்பர் எமது அருகிலே வந்து அமர்ந்து ,தொடர்ந்து கைபேசியில் பேசிய வண்ணம் இருந்தார்.பிறகு தான் எம் மனம் செம்மையானது .உலகம் இயங்க இது போன்ற அன்பர்கள் தேவை என்று தந்தை சொல்லியிருக்கிறார் அல்லவா.எனவே இவை பற்றி எமது கவனம் சிதற தேவையில்லை.சேற்றிலே இருந்தாலும் செந்தாமரை மலர் போலல்லவா இருக்கவேண்டும் .செந்தாமரை என்பது அது எங்கிருந்தாலும் அதன் அழகும் அதன் நறுமணமும் என்றும் போற்றுதலுக்கு உரியது அல்லவா .ஆகா இப்பொழுது முன்பு விட எம்மை யாமே செழுமை  செய்துகொண்டு ,முழுகவனமும் ஸ்லோகத்தில் கவனம் செலுத்தி ,சொல்லிக்கொண்டிருந்தோம்.தற்பொழுது தான் ...

தரா தராசுதா தன்யா தர்மிணீ தர்ம வர்த்தினி 
லோகதீதா குணாதீதா  ஸர்வதீதா ஸமாத்மிகா....

என்று கடந்து உள்ளே மேலும் தொடர்ந்து   100,200,500,என  1008 அம்பாளின் நாமங்களை  போற்றி வணங்கி ஸ்தோத்ரத்தை நிறைவு செய்தோம்.உடலெங்கும் ஒரே அதிர்வு அலைகள் அதுவும் அம்பாளின் சன்னதி அருகே சக்திமிகுந்த அதிர்வு அலைகள்.தொடர்ந்து உச்சரித்ததால் ஓரு வித லேசான களைப்பு ,சற்றே அருகிலே உள்ள தூனில் மெதுவாக சாய்ந்து ,சற்றே கண் அயர்ந்து தூக்கம் போல ஒரு நிலை ஏற்பட்டு எமை  மறந்தோம்.அது ஒரு குருகுலம்,அங்கே நிறைய சிஷ்யகோடிகள். அவர்கள் தம் குருவுக்காக சேவை செய்துகொண்டு ஒரு அற்புதமான குருவின் பாடத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்,ஒருவர் தமது குருவின் கட்டளைக்கிணங்க .ஒரு வாளி தண்ணீரை எடுத்து வந்து , எம் மேலே ஊற்றுகிறார்.பிறகு எம்மையும் அங்கே வந்து அமரசொல்கிறார். அங்கேஒரு பெரியவர் இருக்கிறார் .ஒரு அழுக்கான வெண்மை வேஷ்டி மட்டும் உடுத்தி இருக்கிறார் ,கிட்டதட்ட ஒரு என்பது வயதிற்கு மேல் இருக்கும்,வயிறு ஒட்டி மெல்லிய தேகம்,நிறைய ருத்திராட்சம் மாலை அணிந்திருக்கிறார்.நெற்றி முழுவதும் விபூதி, அவர் நினைவு, கவனம்,சிந்தனைஎல்லாம் ஏதோ ஒரு உலகத்தில் உள்ளது போல ,இங்கே நடக்கும் நிகழ்வு பற்றி எந்த சலனம் இன்றி,மிக இலகுவாக ,ஒவ்வொரு செயல்களையும் செய்கிறார்.மெதுவாக அருகே வந்து   ஒரு ஸ்லோகத்தை சொல்ல சொல்கிறார் ,இது எமக்கு தெரியுமே என யாம் முந்திக்கொண்டு சொல்ல ஆரம்பிக்க ,எமது வார்த்தை தடுமாறுகிறது.அருகில் உள்ள அன்பரோ ஸ்லோகத்தின்  வார்த்தைகள் அட்சரசுத்தமாக,தெளிவாக உச்சரிப்பு சரியாக  இருக்கவேண்டும் ,ஒரு சிறு தவறு இருந்தாலும் ஐயா சாட்டையால் அடித்துவிடுவார் என பயமுறுத்துகிறார்.எமக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.வேகவேகமாக எமது மொபைலில் உள்ள ஸ்லோகத்தை பார்த்தாவது படிப்போம் என தேடியெடுத்து படிக்க ,தெளிவாக மொபைல் வேலைசெய்யவில்லை .மொபைல்  சரியாக உள்ளது .ஆனால் அங்கே உள்ள ஸ்லோகத்தை எடுக்க இயலவில்லை.அருகிலே வருகிறார் ,இதை இப்படியா படிப்பது என தமது கைகளில் உள்ள சாட்டையை  சுளீர் என அடிப்பது போல ஓங்குகிறார.இன்னைக்கு நல்லா சரியா மாட்டிக்கிட்டோம் எல்லாருக்கும் முன்னாடி இப்படி தர்மசங்கடமா அடி வாங்கபோறோமே  என எண்ணி,செய்தபிழைக்கு தண்டனை அனுபவிக்கவே வேண்டும் என முடிவுஎடுத்து  ,சற்றே மேல்நோக்கி,அந்த ஐயாவை பார்த்தேன் ,அப்பொழுது தான் அவர் கண்களில் உள்ள அன்பு பார்வை எம்மை அரவணைப்பது தெரியவந்தது,அதாவது யாரையும் இவர் அடிப்பதில்லை,அடிப்பது போல பாவனை செய்கிறார் ,மிக அழகாக இந்த ஸ்லோகத்தை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என சொல்கிறார் .அவர் சொல்லும் அழகும் ,அம்பாளின் நாமங்களுக்கு உண்டான அர்த்தங்களும் ,உச்சரிப்பும் எம்முள்  கணீர் கணீர் என விழுகிறது.எம்முள் என்றால் எமது சூட்சும தேகத்துள் .மிக அற்புதமாக உள்ளது.பிறகு அந்த பெரியவர் தம் கையில் அவர் உண்ட எச்சில் பாத்திரத்திலிருந்து ,கொஞ்சம் உணவினை எடுத்து எமக்கு கொடுத்து உண்ணுமாறு சொல்கிறார்.அந்த பெரியவரின் அன்பும் கருணையும் எம்மை மெய்சிலிர்க்க வைத்தது.அந்த பெரியவர் யார் அவர் பெயர் என்ன?இந்த புனிதகோவிலில் என்ன செய்கிறார் ? என இது  போன்ற கேள்விகலெல்லாம் எம்முள் எழவில்லை.ஏனெனெனில் இது போன்ற கேள்விகேட்பதை நிறுத்திக்கொண்டோம் இதற்கு முந்தைய ஒரு அனுபவத்தால்.

சூட்சம தேகத்துடன்  கருணை நிறைந்த பெரியவர் இங்கே சூட்சும தேகத்துடன் உலாவுகிறார்.உள்ளத்தில் அன்பை நிரப்பிகொண்டு அம்பாளின் நாமங்களை சொல்ல ,அன்பால் உள்ளம் நிறைந்த அன்பர்களுக்கு அவர் தம் வேண்டுகோளை ,இவர் தாமாகவே முன்வந்து அதற்கான காரணங்களை ஆராய்ந்து,எதற்காக இங்கே வந்திருக்கிறாய் ?உனது பிரச்சினை என்ன ? என அவர் தாமாகவே ஆராய்ந்து அருள்ஆசிசெய்கிறார் அம்பாளின் உத்தரவிற்கிணங்க. அன்புள்ளம் கொண்ட மகான்.கருணை நிறைந்தவர்.ஒரு முறைசென்று அம்பாளின் தரிசனம் செய்யுங்கள் ,மகானின் கருணை தாமாகவே கிட்டும்.

அன்னையவள் அருள் ஆசிகளோடு ,அகத்திய உள்ளங்களை வேறுஒரு நிகழ்வில் விரைவில் சந்திக்கின்றோம்.
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!!
ஓம் அகத்தீஸ்வராய நமஹா !!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா!!!

1 comment: