Saturday, January 28, 2017

சிவமும் பைரவமும்..!!!இருக்கும் இடத்திலிருந்து,  இருக்கும் இந்த மனதினை,உள்ளத்தை வைத்துக்கொண்டு, எங்கும் நிறைந்திருக்கும் ஈசனின் அலைகளை ,நாம் இருக்கும் இடம் முழுவதும், நிறைந்து வழிந்தோடசெய்யும் ஒரு அற்புத சக்தியை ,நம்முள் ஏற்படுத்தும் ஒரு நுட்பம்  யாதெனில் பைரவ மந்திரம்,அவை  தொடர்ந்து சொல்வதால் யாவும் வசப்படும் என்பது சத்தியமான உண்மை.சிவத்தின் அலைகள் உணர,அது தரும் மனதிற்கு எதையும் எதிர்கொள்ளத்தேவையான வலிமை,ஒரு அமைதி,ஒரு நிறைவு மற்றும் ஆனந்தம்.எங்கும் நீக்கமற நிறைந்த சர்வேஸ்வரரின் அலைகள் உணர்வது என்பது இன்றைய  வாழ்வியலின் ஒரு தேவை.என்றோ செய்த பாவ,புண்ணியத்தின் சாராம்சமாகிய கர்மவினையும் ,அச்சுபிசகாமல் ஆட்டிபடைக்கும் அதன் தாக்கத்தையும்,இன்று உணரும், இந்த நொடிபொழுது உணரும், சிவ அலைகள்  அதன் தன்மையை நீர்த்துவிடசெய்கிறது என்பதும் உண்மை. அமைதியும் ,நிறைவும்,ஆனந்தமும் வேண்டுமெனில் ,சிவ அலைகளை உணர்வது அவசியமாகிறது.சிவ அலைகளை ஒரு துளி உணர்வதால் ,உணர்பவரின் உள்ளம் கட்டுங்கடங்கா பேராற்றல் பெற்ற நாயகனின் சுடரொளியால் சூழப்படுகிறது.உணர்பவரையும் உணர்பவரின் அருகில் இருப்போரையும்,புல் பூண்டு செடி,கொடி என அனைத்தையும் சூழ்ந்து அமைதி அலைகளை பரவச்செய்கிறது.சிவ அலைகளை உணர உணர உள்ளம்  அன்பால் நிறைந்து ,கண்கள் தமது பார்வையை  கருணையாய் அது தாமாகவே மாறும் அதிசயம் நிகழ்கிறது.இந்த கருணையும் அன்புமே இறைவனை ஈர்க்கிறது. கருணையும் அன்புமே யாவற்றையும் வெல்கிறது. கருணையும் அன்புமே யாவற்றையும் அரவணைக்கிறது.கருணையும் அன்பும் நிறைந்தவர்களே மற்றவர்களை .எளிதில் கவர்ந்து ,அவர்களுள் நல்எண்ணங்களை விதைக்கிறார்கள்  .வாழ்வை மிக எளிதாக  எதிர்கொண்டு ,யாருக்கும் எவருக்கும் எந்தவித தீங்குமின்றி ,நிகழ்வுகள் ஆற்றி இறைநோக்கி வெகுவிரைவில் செல்கிறார்கள்.ஒரு முறை கருணையும் அன்பும் நிறைந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று கற்பனை செய்தாலே ,அதன் உண்மைத்தன்மை பெறப்பட்டு,உள்ளமும் கண்களும் இயல்பாகவே கருணை நோக்கி சென்றுவிடும் .கருணையும் அன்பும் ,இதன் மூலம் யார் என தேட அங்கே அன்பால் ஆழ்ந்த சிவம் என்பது புலப்படுகிறது.
 


பைரவரை வணங்கினால் சித்தர் தரிசனம் பெற இயலுமா ? எமக்கு சித்தர் பெருமக்களின் தரிசனம் வேண்டும்.அதற்கு இது போல பைரவ மந்திரங்கள் உதவி செய்யுமா ? எனும் நீண்ட நாள் ,தமது உள்ளத்தில் உலாவிக்கொண்டிருந்த கேள்வியை அன்பர் ஒருவர் எம்மிடம் வைத்தார்.மேலும் தமக்கு இதுதொடர்பான அனுபவங்களை தயைகூர்ந்து பகிருங்கள் என வேண்டுகோள் வைத்தார்.

அன்பரே! சித்தர்கள் மகான்கள் தரிசனம் என்பது அவரவர் செய்த புண்ணியத்தின் பலன்.எத்தனையோ பிறவிகள் ,இடைவிடாத இறைதேடல் ,ஏதோ ஒரு சில கர்மவினை தாக்கத்தால் ,தடை பட்டு ,பின்னர் மீண்டும் அது இப்பிறவியில் தொடரப்பட்டு ,சிலருக்கு வெகு விரைவில் கிடைத்துவிடுகிறது.சிலருக்கு தரிசனம்  இன்னும் கொஞ்சகாலம் வரை காத்திருக்கும் நிகழ்வு தொடர்ந்துகொண்டிருக்கிறது.எல்லாம் அவர்கள் சித்தம்.இதற்கு நிறைய வழிகள் இருக்கின்றது.பைரவர் வழிபாடு கண்டிப்பாக இதற்கு உதவும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை.அதற்கும் மேலாக இது இறைநோக்கி அழைத்துச்செல்கிறது. வாழ்வின் உன்னத நோக்கமான இறைவழி வந்த உயிரை இறையிடமே சேர்க்க உதவுகிறது.என்றும் வற்றா கருணாசாகரமான ,கருணையே வடிவான,உள்ளத்தை தமது அதீத அன்பெனும் சூட்சும சக்தியால் கட்டிபோட்டு,என்றுமே ஈர்த்துக்கொண்டிருக்கும் ,என்றுமே அன்பெனும் தன்மையை அடர்வு திணிவு அதிகம் பெற்று,யாவரையும்,யாவற்றையும் தமது ஆட்சிபுலத்தில்  நின்று ,நிலைத்து,ஊடுறுவி,ஆட்சிசெய்யும் ,திருவாதிரை நாயகனிடம்,தென்பாண்டி நாட்டானிடம் ,திரிகால நாயகனிடம்,அன்பருக்கு அன்பனிடம்,ஆருயிர் நேசனிடம்,கொஞ்சம் கொஞ்சமாக அழைத்துச்செல்ல ,வேண்டிய அளவு வழிவகை செய்யும் ஸ்ரீ மகாபைரவ ஆற்றல்.இந்த மாபெரும்பிரபஞ்ச பேராற்றல் நாயகன் என்றுமே தமது அன்பெனும் அலைகளால் தாம் படைத்த அத்தனை கோள்களையும் ஜீவராசிகளையும் ஆட்சிசெய்கிறான்.இவனது ஒரு துளி அலைகளை சாமானியரும் உணரும் வண்ணம் ,இவன் தாமே இறங்கி வந்து ,தமது கருணை அலைகளை அள்ளித்தூவும் காலமே பிரதோஷ காலம்.பிரதோஷகாலங்களில்  இருக்கும்  அலை இயக்கம்  மிகவும் போற்றுதலுக்கு உரியது.இதற்கு காரணம் சர்வேஸ்வரின் தார்மீக அலைகளே .உடலெங்கும் உள்ளமெங்கும் ஒரு விதமான அமைதியை அது தாமே ஏற்படுத்துகிறது. உள்ளத்தில் அமைதி  என்பது கரைபுரண்டு ஓடும். அதன் காரணம் யாது  என ஒரு நுனி பிடித்து உட்செல்ல ,இந்த பிரதோஷ நாயகனின் வற்றா ஜீவநதி எனும் கருணை நதி ஓடும் ,அகண்ட பிரபஞ்சம் நோக்கி அழைத்துச்சென்று ,அமைதியில்  நம்மை திளைக்கச் செய்து அன்பால் நம்மை முற்றிலும் மூழ்கடித்துவிடும்.உள்ளம் எனும் பெருங்கோவிலில் ஈசனின் அலைகள் சூழ ,உள்ளத்தை மிக எளிதாக ,காற்று போல,எடையற்று அமைதிகொள்ளச்செய்துவிடும்.எங்கிருந்தோ  வந்த இந்த அலைகள் புவியில் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் ,ஒரு வெண்பனி போல,போர்வை போத்தியது போல படர்ந்து, யாவற்றையும் சூழ்ந்துகொள்வதை உணரலாம். உள்ளம் எனும் பெருங்கோவிலில் இது போன்ற சிவ அலைகள் ,அன்பின் அலைகள் ,நிறைந்து இருக்க  இருக்க,கர்மவினை தாக்கங்களை குறைத்துவிடுகிறது.இறைதன்மையை மிளிரசெய்கிறது.யாருமே தர இயலாத ஒரு புத்துணர்ச்சி (Refresh) மனதிற்கு தந்து மனதினை ஆனந்தத்தில் திளைக்கசெய்கிறது.யார் தருவார் இது போன்ற இறைஅலைகள் நிறைந்த Refresh.!பைரவ வழிபாடை தொடர்ந்து செய்பவர்கள் எல்லாம் முற்பிறவியில் ஏதேனும் ஒரு வகையில் சித்தர் பெருமக்களின் ஆசிகளை பெற்றவர்களே.வேறு யாரும் பைரவ மந்திரங்களை தொடர்ந்து உச்சரிக்க இயலாது.நீங்கள் வேண்டுமானால் தொடர்ந்து சொல்லிப் பாருங்கள்,உங்களால் எத்தனை நாட்கள் ,எத்தனை மாதங்கள் சொல்ல இயலுகிறது என்று.பைரவ வழிபாடு என்பது மிக மிக மிக அதீத அதிர்வு அலைகள் சூழ்ந்து சக்திஅதிகம் நிறைந்தது.இந்த அதிர்வு அலைகளை நம்முள் உள்வாங்க முதலில் தூய்மை மிக அவசியம்.தீட்டுஇருக்கிற வீட்டில் சொல்லக்கூடாது.நாளை பைரவ மந்திரங்களை (108 முறை )சொல்லபோகிறோம் என்றால் இன்றே நாம் சுத்தமாக இருக்கவேண்டும்.
அப்பொழுது தான் அதன் அதிர்வு அலைகள் நம்முள் உள்வாங்கமுடியும்அது நம்முள் ஏற்படுத்தும் மாற்றம்,அது நமது சூட்சும தேகத்துள் உருவாக்கும் அற்புதங்களை உணரமுடியும்.யார் வேண்டுமானாலும் சொல்லலாம் .இதை பற்றி ஏற்கனவே ஸ்ரீமகாபைரவர் கட்டுரையில் எழுதியுள்ளோம் .அதை மீண்டும் இங்கே தருகிறோம்.கீழே உள்ள புகைப்படம் ,பைரவ மந்திரங்களை அதிகம் உச்சரித்து ,அதீத அன்பு நிறைந்து ,நெகிழ்ந்த உள்ளத்தால் ,தமது தரிசனம் வேண்டும் என்ற வேண்டுகோள் வைத்து ,எம்பெருமான் ஆசிர்வாதத்தால் பெறப்பட்டது.பைரவபெருமானே சூலாயுதம் ஏந்தி அருள் ஆசிசெய்வதாகவே உணர்ந்தோம்.


 ஸ்ரீ மகா பைரவகாயத்ரி

ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே !சூல ஹஸ்தாய தீமஹி !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!


ஒரு தேய்பிறை அஷ்டமியில் இந்த மந்திரத்தை உச்சரிக்க தொடங்கலாம் .முதலில் முடிந்தவரை சொல்லலாம் ,பிறகு போக போக 108,504,1008..என்று எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.ஒரு அதிகாலை வேளையில் வெண்ணிற உடையணிந்து , வெறும் வயிற்றில் சொல்லதொடுங்குவது நல்லது .
முடிந்தவர்கள் ஒரு அக்னிகுண்டம் ஒன்று செய்து அதிலே அத்தி ,அரசு,ஆல் ,நெல்லி  இவைகளில் எந்தெந்த குச்சிகள் கிடைக்குமோ ,அதனை  போட்டு , பசு நெய் விட்டு ,அக்னி  வளர்த்து ,இந்த மந்திரத்தினை சொல்லவேண்டும்.பசு நெய்யை இந்த அக்னியில் சேர்ப்பதால் ,இரண்டும் வெப்பத்தில் ஒரு வேதியல் மாற்றமாகி ,அதனை சுற்றி உள்ள இடம் முழுவதும் நச்சு நீக்கி ,ஒரு தெய்வீக நறுமணத்தினை ஏற்படுத்தும்.

ஒரு உட்காரும் மரப்பலகையில் இருந்து  மந்திரம் சொல்வது மிக அவசியம் ,அப்போது தான் கிரகிக்கும் சக்தி நம்முடனேயே  இருக்கும்,இல்லை என்றால் தரை வழியே பூமிக்கு போய்விடும்  . மந்திரம் சொல்லும் போது மனம்  விழிப்புடன் இருப்பது மிக அவசியம்.முதலில் கொஞ்சம் கடினமாகவே இருக்கும்.உச்சரிக்கும் மந்திரம் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக ,மந்திரத்தில் உள்ள ஒவ்வொரு சொல்லும் அதற்குறிய அலைகளை ஈர்த்துஇருக்கும் இடம் முழுவதும் மெல்ல மெல்ல பரவச்செய்யும் .அந்த  இடம் முழுவதும் ஒருவித சக்திமிக்க அலை filedஐ உருவாக்கும் .பிறகு உச்சரிக்கும் ஒவ்வொரு சொல்லும் ,ஒவ்வொரு பீஜமும் , crispy crystal ஆக இருக்கும் .அதாவது ஒரு ஆயிரம் ஸ்படிகங்களை உருட்டிவிட்டால் எவ்வாறு இருக்குமோ ,அது போல ,நீங்கள் சொல்லும் ஒவ்வொரு மந்திர சொல்லும் உருண்டு ஓடும் .ஒவ்வொரு வார்த்தையும் கணீர் கணீரென்று அதிரும் .இது  தான் சரியான  பதம்.அப்படி ஒரு பதத்தினை உருவாக்க வேண்டும்.இங்கிருந்துதான் அடுத்த படிநிலை  உருவாகும்.உடலில் ,மூளையில் எத்தனையோ வருடமாக   திறக்கப்படாத செல்கள் எல்லாம்,திறந்து செயல் பட ஆரம்பிக்கும்.   இப்படி ஒரு field உருவாகிவிட்டால் ,பிறகு சொல்லும் எந்தஒரு ஸ்லோகத்தையும்  மிக எளிதாக சொல்லமுடியும் ,மேலும் ஒவ்வொரு ஸ்லோகமும் அட்சர சுத்தமாக  அது தானாகவே  வார்த்தைகளாக வந்து விழும் .இது போன்று சிறு சிறு  மாற்றங்களை விழிப்புடன் உணரவேண்டும் .எத்தனை ஆயிரம் முறை வேண்டுமானாலும் சொல்லலாம் ,அப்படியொரு தகுதியை ஏற்படுத்திகொடுக்கும்.
ஒரு சில நாட்களில் தினந்தோறும் சொல்லும்  அதே பைரவமந்திரம் நிறைய ஆற்றல்களை தந்துவிட்டு செல்கிறது.உள்ளத்தில் அதீத ஆற்றல் எப்பொழுதெல்லாம் இருக்குமோ அப்பொழுதெல்லாம் ,அது கொஞ்சம் இயல்பை மீறி ,கொஞ்சம் சூட்சும தேகத்தை நாம் விரும்பியவண்ணம் பயணிக்க வைக்கும்.ஒரு முறை வாரணாசியில் உள்ள இரண்டு சிவலிங்கங்களை தரிசிக்க நேர்ந்தது.அழகான சிவலிங்கம்  தண்ணீர் சூழ்ந்து,லிங்கம் மட்டும் வெளிதெரிகிறது.யாமும் சென்று நீரை மோந்து அபிஷேகம் செய்கிறோம்.பலவகையான மலர்கள் மிதந்த வண்ணம் லிங்கத்தை சூழ்ந்து மிக ரம்மியமாக இருந்தது.இந்த ஒரு சில நொடி தரிசனம்,இந்த நிகழ்வு நீண்ட நேரம் ,எம்மை எம் உள்ளத்தை அமைதியில் ஆழ்த்தியது.


 ஒரு முறை பூஜைமுடித்து சற்றே ஆழ்ந்துஉட்செல்ல,ஒரு அழகான இயற்கை எழில் சூழ்ந்த மலைபிரதேசத்திற்கு சென்றோம்.எமக்கு இதை சூட்சுமமாக இருந்து எம்மை வழிநடத்துபவர் ஒரு மெல்லிய தேகம் கொண்ட சாது.அந்த பசுமை நிறைந்த ,இயற்கை எழில் சூழ்ந்த மலையில் ,ஒரு பகுதிக்கு மேல் அங்கே யாரும் செல்லஇயலாது என்பதை உணர்கிறோம்.ஆனால் எம்மோடு வந்த சாதுவோ ,அதையும் தாண்டி எம்மை அழைத்துச்செல்கிறார்.அங்கே  காவிஉடை அணிந்த  இரண்டு முனிவர்கள் எம்மையும் எம்மை கூட்டிவந்த அன்பரையும் ஒரு பார்வை பார்த்து ,தடை மீறி ஏன் வந்தீர்கள் என்பது போல ஒரு பார்வை பார்க்க,எம்மோடு வந்த சாது அந்த இரு முனிவர்களிடம்  எம்மையும் அறிமுகம் செய்துவைக்கிறார். அவர்கள் கைகளில் ஏதோ ஒரு சில மூலிகை இலைகளை தூளாக்கி பொடிசெய்து ,அதனை மீண்டும் இன்னொரு இலையில் வைத்து அழகாக கட்டி,இதில்  குளிகை உள்ளது ,இதை வைத்துகொண்டு ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எளிதில் சென்றுவிடமுடியும் என்கிறார்கள்.இன்னும் நிறையசொல்கிறார்கள் .ஆனால் எமக்கோ அழகான அந்தமலையும் ,அங்கேவீசும் நறுமணமும் ,யாம் இதுவரை பார்க்காத மலர்களையும் ,ஒரு சில ஆள் உயரத்திற்கு மேல் வளர்ந்த அழகான புல் போன்ற தாவரத்தையும்,அதன் அற்புத குணாதிசயங்களையும் பார்த்து ,ரசித்து ,வியந்து,பூரிப்படைகிறோம்.இந்த இயற்கையின் அழகில் மயங்கி எம்மை மறந்தோம்.


பைரவஅலைகளை உணர்ந்து ,அதன் ஆற்றலால் சூட்சும தேகத்தை நன்கு வலுப்பெறசெய்வோம்,அதன் மூலம் சிவ அலைகளை உணர்ந்து ,வாழ்வை எளிதாக மாற்றும் சிவத்துள் சிவமாக இருக்கும் தன்மை பெறுவோம், என அகத்திய உள்ளங்களை வாழ்த்தி வணங்கி வேறு ஒரு நிகழ்வில் சந்திக்கிறோம் .!

ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!
1 comment:

  1. அருமையாக உள்ளது கட்டுரை வாழ்க வளமுடன் ஐயா எங்களுக்கு ஓர் வழிகட்டியாக உள்ளீர்கள் மிகவும் நன்றி ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete