Tuesday, November 29, 2016

அருணாசல சிவ..!!!


உள்ளம் என்பது உருகி உருகி ,மெதுவாய் கனிந்து,கனிந்து ,அன்பால் கசிந்து,கசிந்து ,இறைஅலைகளை உணர்வதற்கே.இதில் எவ்விதமேனும் இறை தவிர்த்த மற்ற அலைகள்  இங்கே  இருக்க, உள்ள தூய்மை மற்றும் அதன் தன்மை மாசுபடுகிறது.அது எதற்காக படைக்கப்பட்டதோ அதன் நோக்கம்  தடைபட்டு ,அழுக்கும்,மனகுப்பையும் சூழ்ந்துகொள்கிறது.இப்படி காலம் காலமாக மாசுபட்ட உள்ளத்தால்,இப்படியே  இருக்க பழகிகொண்டதால் இறைஅலைகள் உணரும் தன்மை என்பது இங்கே கேள்விக் குறியாகிவிடுகிறது.மாறாக கூச்சலும் குழப்பமும் மிகுந்து ஒரு நொடி பொழுதுகூட  நிம்மதியின்றி இருக்க வைக்கிறது.மகான்களையும்  ,சித்தர்களையும் அவர் தம்  அருள் அலைகளை உணரும் தன்மையும் சுத்தமாக இழந்துவிடுகிறது.நாள் தோறும் இங்கே உள்ளத்தில் தூய்மை என்பது  மிக அவசியமாகிறது.ஒரு நாளில் ஒரு நொடி பொழுதேனும் எவ்வித வாழ்வியல் அழுக்கின்றி ,இறைஅலைகளை உணரும் தன்மை உருவாக்கிகொண்டால் ,அந்த நாளில் அந்த நொடி தந்த அலைகளே ஒரு தெளிவினை தந்து ,அன்றைய நாளை எதிர்கொள்ள தேவையான  தைரியத்தையும் ஆற்றலையும் தந்துவிடுகிறது.அமைதியாக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி ,எதுவும் அற்று நிறைவாக ,நிறைந்த மனதாய் ,நடப்பதெல்லாம் இறையின் செயல்,எது வரினும் இறைஅலை துணைகொண்டு எதிர்கொள்வோம்  என, இப்பொழுது இறை நடத்தும் நிகழ்வினை விழிப்புடன் கவனிப்போம் எனும் மனநிலைக்கு வந்துவிட உள்ளம் மெதுவாக நிறைவடைந்து அமைதியை நோக்கி திரும்புகிறது. உள்ளத்தை அன்பு ஊற்று எடுக்கும் இறைசுரங்கமாக இருக்க பழகிக்கொண்டால், அன்பெனும் இறை அலைகள் தாண்டவமாடும்.எங்கே ஆழ்ந்த அன்பு இருக்கிறதோ, அங்கே ஒரு ஈர்ப்பு தன்மை வந்துவிடுகிறது . அன்பும் ஈர்ப்பும் வந்த உடனே,  கண்கள் அது தாமாகவே கருணை மழையை பொழிந்துவிடுகிறது.இப்படி இருக்கும் அன்பர்கள் முகத்தில் ஒரு பொலிவும் ,கருணை நிறைந்த கண்களும் மிக அழகாக, பூத்துகுலுங்கும் நந்தவனம் போல யாவரையும்,யாவற்றையும் எளிதில் ஈர்துவிடுகிறது.

மிக பழமையான, புராதனமான கோவில்களில் இறைஆற்றல்  என்பது  மிக அதீத அளவில் இருக்கிறது.அதுவும் சித்தர் பெருமக்கள் வழிபட்ட  கோவில் எனில் வர்ணிக்க இயலா ஆற்றல் நிறைந்துள்ளது.பல்வேறு தோஷ நிவர்த்தி அலைகளை அங்கே மிக சூட்சுமமான முறையில் வைத்துள்ளார்கள்.சும்மா வெறுமனே வந்து,தெரிந்தோ தெரியாமலோ  இங்கே கால் பதித்து இறைவனை வணங்கி செல்ல ,வந்தவர்களின் சூட்சும தேகத்தில் இயல்பாகவே ஒரு வித ஆற்றல் உள்சென்று,அது அங்கே உள்ள கர்மவினை தாக்கத்தை குறைத்துவிடுகிறது என்பது உண்மை.ஒரு சிறிய அளவில் மாற்றத்தை மிக அழகாக ஏற்படுத்திவிடுகிறது.
சித்தர் பெருமக்கள் வழிபட்ட ,அவர்களின் சூட்சும ஆற்றல் நிறைந்துள்ள சிவ ஆலயங்கள் நிறையஇருக்கிறது.அதன் அடையாளமாக  சிவ ஆலயத்தில்,சிவனை வழிபட்டு வெளிவர ,தெற்கு நோக்கி  பார்த்தவண்ணம் தட்சிணாமூர்த்தி இருக்கும்.எங்கெல்லாம் தட்சிணாமூர்த்தி ஸ்வாமிக்கு  அருகில் நர்த்தன கணபதி பிரதிஸ்டை செய்திருக்கிறார்களோ,அங்கெல்லாம் அந்த சிவ ஆலயங்கள் எல்லாம் புராதனமான சிவஆலயம்,அது சித்தர்கள் வழிபட்ட,வழிபடும் ஆலயம். மேலும் அங்கே இறை சக்தியும் நிறைந்திருக்கும் மற்றும் சித்தர் பெருமக்களின் ஆசி அலைகளும் நிறைந்திருக்கும் என்பது சித்தரகசியம்.


இப்படி ஒரு  சிவஆலயம்  சமீபத்தில் செல்ல நேர்ந்தது.அங்கே உள்ள பைரவபெருமானின் அருகே நின்று வணங்கி,  சற்றே நின்று மூச்சை அதன் இயல்பிலே கவனித்து கொஞ்சம் கொஞ்சமாக ஆழ்ந்து உட்செல்ல எம்முள் செல்ல , அடர்த்தி அதிகம் நிறைந்து ,கட்டுக்கடங்கா பிளிருடும் சக்திமிகுந்த ஆற்றலை உணரநேர்ந்தது.இங்கிருக்கும் பைரவபெருமானின் ஆற்றல் சூட்சும தேகத்தோடு சேர்ந்துகொள்கிறது.கண்களுக்கு புலப்படாத மிக நுண்ணிய அலைகள் ஆற்றல் பெட்டகமாக சிலையை அருகே கொஞ்ச தூரம் வரை படர்ந்து சுற்றிஇருக்கிறது.ஒரு நொடியே போதும் நமது சூட்சும தேகத்தை சார்ஜ் செய்ய ,எப்படி ஆற்றல் இழந்திருந்தாலும் இங்கே இந்த ஒரு நொடியில் கிடைக்கும், ஸ்வீகரிக்கும் ஆற்றல் ,நம்மை ,நம் மனதினை ,நமது சூட்சும தேகத்தை நன்கு நிறைவுபடுத்தி,வலுப்பெறவைக்கிறது. இந்த ஒரு முறை சார்ஜ் ,கணிசமான கர்மவினை தாக்கத்தை குறைக்கும் என்பது உண்மை. எத்தனையோ வருடங்களாக ,காலம்,காலமாக இந்த ஆற்றல் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது.தம்மை வணங்கும் அடியவர்களின்  உருவம் மட்டும் தான் மாறுகிறதே தவிர ,இங்கே இந்த ஆற்றல் அதன் தன்மை, உணர்பவருக்கு அது ஏற்படுத்தும் அற்புத மாற்றம், தலைமுறை, தலைமுறையாக தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.

இது போல ஆற்றலை நம்முள் உள்செலுத்தி நம்முள் ஆற்றலை பெருக்கிகொள்ள ,கொஞ்சம் கொஞ்சமாக ஒரு சில புரிய இயலா விந்தைகளையும் நம்மை உணரவைக்கிறது.இதெல்லாம் எப்படி சாத்தியம் இந்த கலியுகத்தில் என்பரின் கேள்விகளுக்கு புரியவைப்பது எப்படிஎன தெரியவில்லை. ஏனெனில் உணர மட்டுமே முடிகிறது.அதுவும் அவர்கள் ஆசி இருந்தால் மட்டுமே ஒரு சில நொடிகள் உணர முடிகிறது.ஏற்கனவே அன்பின் ஆழம் கட்டுரையில் மிலிட்டரி சிம்பல் நட்சத்திரம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு நேர் மேலே மிக அருகில் ஸ்தூல கண்களால் தரிசனம் பெற்றோம் என்பதை எழுதியிருந்தோம். அதே நட்சத்திரத்தை யாவரும் வெறும் கண்களால் வெகு தொலைவில் இருப்பதை யாவரும் பார்க்கலாம். இரவிலே அண்ணாந்து வானத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் ஒளிரும். அங்கே பார்க்க கோபுரம் போல இருக்கும் நட்சத்திர கூட்டம் ஒரே ஒரு குரூப் மட்டுமே..எத்தனையோ வருடங்களாக யாமும் பார்த்துகொண்டிருக்கிறோம். அதில் உள்ள ஒரு நட்சத்திரம் ,இங்கே இந்த சிவஆலயத்திற்கு நேர் மேலே வந்து,பளிச்சென ஒளியாக மாறி இங்குவந்து இறைவனை வழிபட்டு ,பின்பு அது தமது இருப்பிடம் செல்கிறது.எமது கணிப்பின் படி ஒரு அற்புத ஆற்றல் நிறைந்த முனிவரே நட்சத்திரமாக ஒளிர்கிறார் அவரே இங்கே வந்துசெல்கிறார் என்பது தெரிகிறது.இது சென்னையில் உள்ள மிகப்பழமையான வியாக்கிரபாத முனிவர் வழிபட்ட ஸ்தலம்.திருவண்ணாமலை கிரிவலத்தில் ஒரு வயது முதிர்ந்த அய்யாவை சந்திக்க நேர்ந்தது.கிரிவலம் ஆரம்பித்ததிலிருந்து பாதி தூரம் வரை ஒரு சாதரண மனநிலையே இருந்தது.பிரதோஷ காலம் நெருங்கி வர,வர,மெல்லிய காற்றாய் ருத்ர அலைகள் கிரிவலம் முழுவதும் எங்கெங்கும் சுழல்கிறது,எங்கிருந்தோ ஒரு சாரல் போல உள்ள அருள் அலைகள் ,சட்டென உள்ளத்தில் சென்று,மனதினை முற்றிலும் கவர்ந்தது.யாம் இறைவனை உணரும் தருணமெல்லாம் இது போன்ற தருணங்களே.மெல்லிய மனதுள்ளே விட்டுப்பிரிய இயலா ஈசனின் ஈர்ப்பு அலைகள்.இறைஅலைகள் நெஞ்சுள்ளே வந்தமர்ந்தவுடன்,ஒரு இனம் புரிய சந்தோசம் ,ஒரு ஆனந்தம் ,ஒரு அரவணைப்பு ,ஏதோ ஒரு மிகப்பெரும் பேராற்றல் நமக்கு பின்னே இருப்பது போலவும், தனிமையாய் விட்டுபிரிந்தவன் ,தமது வாழ்விற்கு எதையும் கணிக்கும் தன்மை நிறைந்த ஒரு தந்தை தமக்கு துணையாய் இருந்தால் எப்படி இருக்குமோ அது போலவும், இந்த மனம் ஜில்லென ஆற்றல் நிறைந்து  மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுகிறது.எமது ஸ்தூல தேகத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரு இரண்டடி தூரம் வரையும் ,எம்மையும் எமது சூட்சும தேகத்தையும் சூழ்ந்து ,கொஞ்சம் படர்ந்தும் இருந்தது. நெஞ்சமெங்கும் அடர்த்தி அதிகம் நிறைந்த ஈசனின் அலைகள்.இது ஒன்று மட்டும் இருந்தால்,இந்த அலைகள் மட்டும் நம்மை சூழ்ந்தால் ,இப்படியே இந்த அலை தொடர்பு மட்டும் இருந்துகொண்டிருந்தால், வேறு எதுவுமே தேவையில்லை இந்த உலகில்.எதையும் எதிர்கொள்ளலாம். ஒரு சாதாரண மனித மனம் என்பது ஒரு இக்கட்டான சூழல் வரும் பொழுது ,எப்படி அதை எதிர்கொள்ளல் என்பது தெரியாமல் ,துவண்டு நொந்துபோய் இருக்கும் கொஞ்சநெஞ்ச positivie அலைகளை வீணடித்து, மேலும் மேலும் துயரம் அது தானாகவே ஏற்படுத்தி, தாங்ககொனா சிக்கலில், துயரம் நோக்கியே போகச்செய்யும்.அப்படிப்பட்டசூழலில் சிக்கிய அன்பர்களெல்லாம் ,இங்கே இந்த இறை அலையை உணர, அது ஒரு நொடியில் ஏற்படுத்தும் மாற்றத்தை உணர ,negative அலைகள் சட்டென வெளியேறி,மனம் முன்னிலும் வலுப்பெற்று,கணிசமான அளவிற்கு எதையும் எதிர்கொள்ளும் தன்மையை உடனே உணரமுடியும் என்பது சத்தியமான உண்மை.


கிட்டத்தட்ட ஏழு கிலோமீட்டர் தூரம் நடந்து வந்த களைப்பு எங்கே சென்றது என தெரியவில்லை.காரிருள் நாயகனின் கனிவான நெஞ்சம் கவரும் அலைகள்,எதையுமே உடனே எடுத்த எடுப்பில் எம்பெருமான் தருவதில்லை,கொஞ்ச தூரம் அலையவிட்டு,கொஞ்சம் சோதனை வைத்து ,இதனையெல்லாம் கடந்துசெல்கிறானா இல்லை இப்படியே திரும்பி ஓடிவிடுகிறானா என்றெல்லாம் பல்வேறு சோதனைகள் நடத்தி,இறுதியிலே  இந்த அன்பெனும் மாபெரும் பேரியக்க அலைகளை உள்ளத்துள்,நெஞ்சத்துள் உணரவைக்கிறார்.இந்த பேரமைதி அலைகள் ,சாந்தம் தரும் அலைகள்,சாத்வீக அலைகள்,யாவருக்கும் உடனே பிடித்துவிடும்,ஒரு வித நிசப்தமான அலைகள்,கேட்பாரற்று கிடக்கும் சுத்த வெளி நோக்கி அழைத்துசெல்லும் அலைகள். தூய ஜோதிநோக்கி அழைத்துச்செல்லும் அலைகள்.யாரையும் அவர் தம் அலைச்சுழலை உடனே குறைத்து,கட்டுக்கடங்கா ஆற்றல் உடையோனின், அன்பின் இருப்பிடத்தை நோக்கி இழுத்துச்செல்லும் அலைகள்.யாவுமாய் இருந்து யாவற்றையும் ஆண்டுகொண்டு,யாவருள்ளும் ஒரு ஒழுங்கு,ஒரு நியதி,ஒரு துல்லியம் என தமது சுழற்சியை செய்துகொண்டு,யாவற்றையும் இயக்கும்  நம் பெருமானின் தார்மீக அலைகள்.இந்த அலைகள் உணர உணர அது தரும் வர்ணிக்க இயலா ஆனந்தம்.அமைதி ,பேரமைதி.

இறைவனின் இருப்பிடம் நோக்கி அழைத்துசெல்லும் அலைகள் நெஞ்சத்துள் வந்தமர்ந்தவுடனே, இவ்வளவு தூரம் நடந்துவந்ததால் உருவான கால்வலி,உடல்வலி யாவும் பறந்துவிடுகிறது.கனிவும்,பாசமும்,நிறைவும் ,ஒரு ஸ்திரத்தன்மையும் நிறைந்த,ஒரு அப்ப்பளுக்கற்ற தூய,மென்மையான அலைகள்.ஒரு முறை இதனை உள்வாங்கினால் பல்வேறு கர்மவினைகள் தாக்கம் குறைகிறது.தண்ணீர் தாகம் எற்பட்டவனுக்கு தான் தண்ணீரின் அருமை புரியும்.அது போல இறை எனும் தேடல் உள்ள ஆன்மாக்களுக்கு தான்,இந்த இறை அலைகள் தரும் சுகம் ,அது உள்ளத்துள் ஏற்படுத்தும் தாக்கம் இவைகளை  முழுமையாக உணர்ந்துகொள்ளமுடியும்..A solid state mind which can keep quite itself for longer time and can observe simply what is happening around.It is like the Supreme Power who simply surrounds all of its creations and keep keenly observe as well.இதற்கு முன்னர் வரை இந்த மகிழ்ச்சி ,இந்த  நிறைவு எங்கிருந்தது என தெரியவில்லை.அப்படி ஒரு நிறைந்த மனம் ,ஈசனின்,சர்வேஸ்வரரின்,அண்ணாமலையாரின்,அருணாச்சலசிவத்தின் அற்புத அலைகளால் உணரமுடிந்தது.  


இப்படி இந்த மனநிலையில் சிவனிடம் ஒருவேண்டுகோள் வைப்போம் என எண்ணி," "இறைவா...அருணாச்சலனே ..!! ஆதிஅண்ணாமலையே ..!! எதுவும் இப்பொழுது எமக்கு தேவை இல்லை.எம் மனம் முற்றிலும் பொலிவு பெற்று தூய்மையாய் உள்ளது.இந்த அற்பனின் நெஞ்சத்துள் ஒரு துளி ஆனந்தம் தற்பொழுதும் நிலைத்திருப்பது உமது திரு அலைகளின் தாண்டவத்தால் தான்.இதில் உலகில் தேவை கேட்டு, நினது கருணையால் இன்று துள்ளும் இந்த மனதினை  மாசுபடுத்தமாட்டேன். ஆனால் உமது அற்புதம் ன்றை மட்டும் இங்கே நிகழ்த்து என வேண்டி, இங்கே எம்மை போன்ற கோடான கோடி மக்கள்  கிரிவலம் வருகிறார்கள், இதில் வரும் ஒவ்வொருவரும் நின் திருவருளால் இன்னல் அகன்று ,சூட்சும தேகம் தூய்மை பெறுகிறார்கள்.,எம்மை போன்ற ஒரு சிறு தூசியும் நின் ஆட்சிபுலத்தில்,நினது கருணையினை பெற்று ,தூய்மை பெறுகிறதா ..?  ஏதேனும் ஒரு சிறு துளி கூட போதும் ஒரு சிறு நிகழ்வு கூட போதும்...ஆனால் ஸ்தூல தேகத்தில் எமக்கு உணர்த்து அது போதும்,ஏனெனில் கண்களால் எதையும் ஒரு வரையரைக்கு உட்படுத்தியே பழக்கபட்டுவிட்டோம், நீயோ வரையரை அற்றவன்,எந்த ஒரு வரையறைக்கும் நீ  வரமாட்டாய், ஆதலால் தயைகூர்ந்து ,எமது வேண்டுகோளினை ஏற்று நின் கருணையினை அருள்வாயாக என  எண்ணி வேண்டுகோள் வைத்தோம்.கொஞ்சநேரத்தில் ,ஒரு சில வினாடிகளே சென்றிருக்கும், (வாயு லிங்கத்திலிருந்து ஒரு 1 km இருக்கும் இடம்), கால்களால் பத்தடி தூரம் மட்டுமே வைத்திருப்போம்,ஒரு வயது முதிர்ந்த அய்யாவை சந்திக்க நேர்ந்தது.,ஒரு பெரியவர் ஒரு டீ கடைக்கு அருகே உள்ள ஒரு நீண்ட சிறியகல்லில் அமர்ந்திருந்தார்.அவர் எம்மை பார்த்து புன்முறுவல் பூத்து,இங்கே வாப்பா என எம்மை அழைத்தார்.எமது வேண்டுகோளும் இந்த பெரியவர் எம்மை அழைத்த நிகழ்வும் ஒரே மாதிரியே இருந்தது ஒரே அலைநீளத்தில் இருந்தது.எமக்கு ஒரு புறம் மகிழ்ச்சி மருபுறம்.இந்த நிகழ்வு ஒரு சாதாரண நிகழ்வாக கூட இருக்கலாம் அல்லவா என எண்ண தோணியது.ஆனால் சாதாரன நிகழ்வு ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்காது.எனவே யாமும் விழிப்போடு ,பெரியவரை மதித்து அவர் அருகே சென்றோம்.நல்ல நீண்ட நிறைய முடிச்சு விழுந்த ஜடாமுடி,கருணை நிறைந்த கண்கள்,எளிமையான எந்த பிதற்றலும் இல்லாத சாமியார் தோற்றம், அன்பின் ரூபம்,பார்த்த உடனே ஒம் நமசிவாய மட்டுமே சொல்லவேண்டும் என்று தோணியது.காவி வேஷ்டி ,ஒரு கையில்ஒரு ஜோல்னாபை.அந்த ஜோல்னா பையிலிருந்து கொஞ்சம் கைநிறைய விபூதியை எடுத்து ,சரியா எமது நெற்றியில் ,தமது மூன்று விரல்களால் ஒரு விபூதி பட்டை போட்டார்.அவராகவே பேச ஆரம்பித்தார்.

"...எனக்கு ஆறு வயசு ஆகும் போதே என்னோட இருந்த அம்மா இறந்துட்டா." எங்க சொந்த ஊரு கரூருக்கு பக்கத்துல உள்ள நத்தமேடுக்கு பக்கத்தில இருக்கு.எனக்கு எல்லா ஊருக்கும் போயிருக்கேன்..." "நீ எந்த ஊருப்பா ...?" அய்யா எமக்கு சென்னை..."சென்னையா ..நான் தாம்பரம் ,வடசென்னை எல்லாம் வந்திருக்கே...."கொஞ்சநேரம் அமைதியாக இருந்து பிறகு "...இல்லப்பா உன்னோட சொந்த ஊரு சொல்லப்பா ...?" புதுக்கோட்டை  ..தெரியுமா அய்யா ?..

 "..ம்ம்.. அங்கேயும் வந்திருக்கேன் ..".பிறகு மீண்டும்..
 "..இங்கே ..பாட்டன் ...பூட்டன் செஞ்ச...வேலை. அவ்வளவோ பேரோட வேலையும் அந்தா ...அங்கே பெரம்பால அடிச்சு விரட்டிட்டேன்.....சொந்தகாரன்களோடு வந்திருக்க ,எல்லாரையும் அங்கவிட்டுட்டு இங்கே நீ மட்டும் கிரிவலம் வரியா....பேப்பருல்ல வரபோது ...
 
இந்த முறை யாம் family யோடு வந்தோம் என்பது உண்மை ,அவர்களை எல்லாம் ஒவ்வொரு சிவலிங்கத்திற்கும் ஐந்து முக நெய் விளக்கு ஏற்றி ,அபிஷேகத்திற்கு ஒரு பால் பாக்கெட்டை  பிரதோஷம் முடிவதற்குள்  கொடுத்துக்கொண்டுவருமாறு சொல்லிவிட்டு  யாம் மட்டும் கிரிவலம் வந்துவிட்டோம்.இங்கே இந்த அய்யா நேரில் பார்த்தது போல  எல்லாத்தையும் சொல்லிட்டார்.அய்யாவிடம் பேசும் போது கூட ,இந்த நிகழ்வு அகத்தியத்தில் ஒரு article வரும் என   நினைக்ககூட வில்லை.ஆனால் அவர் அதை கணித்து முன்னரே சொல்லிட்டார்.

திருவண்ணாமலையை சுற்றி எத்தனையோ சாதுக்கள் இருக்கிறார்கள்.இதில் யார் உண்மை, யார் போலி என கணிப்பது சிரமமாக உள்ளது.அன்பு அதிகமாக நம்முள் இருப்பு வைக்க பழகிக்கொண்டால் ,அது ஓரளவிற்கு மேல் அங்கே அதன் இயல்பு ,அலையாக  கசிந்து ,அன்பலைகள் அதிகம்  இருக்கும் அடியவரிடம் அது தாமாகவே அழைத்துச்சென்றுவிடும்.உண்மை மட்டுமே  அன்பினை ஈர்க்கும்.போலி  அது அன்பினை  ஈர்க்காது.ஒரு இருபது ருபா நோட்டை எடுத்து ,அய்யா இந்தாங்க இதை வாங்கிகங்க,என யாம் கொடுக்க,அவர் அதை கொஞ்சம் கூட கண்டுக்கவே இல்லை.." அவர் பானியிலே நிறைய பேசுகிறார் .அய்யா உங்க பெயர் என்ன ? என கேட்க ,அவரது flow தடைபட்டது போல,இதை வைத்து நீ என்ன பன்ன போற ? என்பது போல  ஒரு பார்வை பார்த்து,

 ஒரு நீளமான பெயரை சொன்னார் "...வெள்ளையப்பா...........சாமி .."

நிறைய பேசுகிறார்கள்.எல்லாம் தமிழ் மொழி தான்,தமிழ்  வார்த்தை தான்.அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிகிறது.ஆனால் அதை வைத்துகொண்டு மொத்தமாக பார்த்தால் சுத்தமாக குழப்பிவிடுகிறது. அவர் என்ன சொல்லவருகிறார்,யாரை சொல்கிறார் ,எதை பற்றி சொல்கிறார் என்பதையெல்லாம்  புரிந்துகொள்ளமுடியவில்லை.எமக்கு என்ன புரிந்துகொள்ளவேண்டுமோ அதை மட்டும் சரியாக புரியவைத்தார்.

வேறு எதையும் அவரிடமிருந்து  புரிந்துகொள்ளமுடியவில்லை இது தான் சித்தர் பரிபாஷை.மகான்களுக்கு மட்டுமே புரியும்.எல்லாம் அவர்கள் சித்தமே.அவர்கள் ஆசிகளை மட்டுமே பெறமுடியும்.நமது கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்பது  அவர்களுக்கு அவசியமில்லை அவர்கள் இறைவனின் ஆணைக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள்.அனு ஷணமும் இறைவெளியே கதி என்றிருப்பவர்கள்.இந்த நிகழ்வில் அருணாச்சலேஸ்வரிடம் வைத்த வேண்டுகோளுக்கு ,சரியாக பதில் கூறிவிட்டார்.அண்ணாமலையை வலம் வரும் ஒவ்வொரு ஆத்மாக்களும்,அருணாச்சலேஸ்வரரின் ஆட்சிபுலத்தில்.எதுவும் இம்மிகூட அவர் பார்வை விட்டு விலகுவதில்லை.கர்மவினை தாக்கம் அருனாச்சலேஸ்வரின் ஆசியால் குறைக்கப்டுகிறது என்பதை தெளிவாக உணர்த்திவிட்டார்.இந்தநிகழ்வை எண்ணி பூரிப்படைந்து ,நீண்டதூரம் வந்துவிட்டோம்,இந்த ஐயாவின் உருவமும் ,ஸ்ரீயோகிராம் சூரத்குமார் அய்யாவின் உருவமும், எம்முள் மாறி,மாறி வந்து மறைகிறது.

உள்ளம் நிறைந்த அன்பால் அருணாச்சலேஸ்வரர் கருணையை எண்ணி நன்றி சொல்லி ,சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வீடுவந்தோம்.
அருணாச்சலேஸ்வரரின் ஆசிஅலைகளோடு அகத்திய உள்ளங்களை வேறு ஒரு நிகழ்வில் சந்திக்கின்றோம்.ஒம் அகத்தீஸ்வராய நமஹா .!!

ஒம் அகத்தீஸ்வராய நமஹா .!!

ஒம் அகத்தீஸ்வராய நமஹா .!!
 
1 comment:

  1. //.இது சென்னையில் உள்ள மிகப்பழமையான வியாக்கிரபாத முனிவர் வழிபட்ட ஸ்தலம்.
    enga ullathu inth koil pls

    ReplyDelete