ஸ்ரீ காளிகாம்பாள் பாதம் போற்றி ..!!!




எந்த ஒரு ஸ்லோகம் ஆனாலும் சரி ,எந்த ஒரு மந்திரம் ஆனாலும் சரி,அதை  அதன் இயல்போடு சொல்ல அதாவது மனம் லயித்து அதன் தன்மைகளை முழுமையாக  உணர்ந்து சொல்ல ஆரம்பிக்க, அதன் அலைகள் மெல்ல மெல்ல நம்மை சூழ்ந்துகொள்ள ஆரம்பிக்கும்.உதாரணமாக கனகதாரா ஸ்தோத்ரத்தை அட்சரசுத்தமாக கணீர் கணீர் என்று, அதில் உள்ள அட்சரங்களை உச்சரிக்க (வார்த்தைகள் நுனி பிரளாமல் ,ஸ்படிகங்கள் உருண்டு ஓடுவது போல ),ஒருவித அதிர்வு அலைகளை உணர  முடியும்,அந்த அலை அந்த ஸ்லோகத்தின் தன்மையை மிகஅழகாக உணர்த்திவிடும்.எப்படி நறுமணமுள்ள வஸ்துவிலிருந்து  வரும் காற்று அந்த வஸ்துவின் நறுமணத்தை தருகிறதோ, அது போல ஸ்லோகங்களின் மந்திரங்களின் தன்மையை , உச்சரிக்கும்  நமது பிராண  அலை , மிக அழகாக அதில் பொதிந்துவைத்துள்ள அதிர்வுஅலைகளை  கொண்டுவந்துவிடுகிறது.அங்கே அது ஏற்படுத்தும் தாக்கத்தை மிக எளிதில் உணரலாம்.

அப்படி, சாதரண நமது நிலையிலிருந்து , தற்பொழுது ஸ்லோகத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட ஒரு வித அதிர்வு அலை உணர ஆரம்பிக்க முற்படும் போதே , நாம் மேலும் ஒரு படி முன்னேறிக்கொண்டிருக்கிறோம் என்பது எளிதில் விளங்கும்.சற்றே ஆழ்ந்து மேலும் கவனிக்க,கர்மவினையால் அதன் தாக்கத்தால் துவண்டுபோன மனமும்,ஆற்றல் இழந்த சூட்சுமதேகமும் ,அது  இழந்த ஆற்றலை அது தாமே இங்கே  புதுப்பித்துக்கொள்வதை உணரலாம். மிகவும் தோய்ந்து இருந்த தேகம் ,சற்றே ஏதோ ஒரு ஆற்றல் சூழ்ந்து ,இருக்கும் நமது ஆற்றலோடு ,இந்த அதிர்வு அலைகளும் சேர்ந்து ,தற்போது மனமும் சூட்சும தேகமும் நன்கு வலுப்பெற்றிருக்கும் தன்மையை உணரமுடியும்.




 நமக்கு நன்கு  பிடித்த ஸ்லோகங்கள் ,பைரவ மந்திரங்கள்,கனகதாரா ஸ்தோத்ரம்,லக்ஷ்மி நரசிம்மர் ஸ்லோகம் போன்ற எதுவானாலும் சரி, அதில் நமது மனம் லயித்திருந்தால் ,அதை உச்சரிக்க அது நம்முடைய சூட்சும தேகத்தில் மிக அழகான அதிர்வை ஏற்படுத்தி,நன்கு வலுப்பெற வைக்கும்,திடம் பெறவைக்கும்.ஒரு ஸ்திரத் தன்மையை  ஏற்படுத்தும்.வலுவிழந்த தேகம் உறுதி பெரும் ,எதையும் எதிர்கொள்ளும் ஒரு துணிவு தரும் . அது நம்மை மேலும் அடுத்த நிலைக்கு இழுத்துச்செல்லும்,வாழ்வை மிக எளிதாக மாற்றிவிடும்.நம்முடைய கருவியை சிரமபடுத்தாமல் (Throat) , அட்சரங்களால் உருவான அதில் பொதிந்துவைக்கப்பட்டுள்ள அலையை உணரமுற்பட ,அது அங்கேயே மஹாலக்ஷ்மி அலைகளை ஈர்த்துவந்துவிடும்.எந்த ஒரு செயலானாலும்  சரி,வேலையானாலும் சரி ,அதனை perfect ஆக செய்ய முற்பட,அங்கே  மகாலட்சுமியின் அனுக்கிரகம்  கிடைத்துவிடும்.மகாலெட்சுமி வந்துவிட்டால்,முதலில் இதுவரை சேர்த்து வைத்துள்ள தீயஅலைகளும் ,துஷ்கர்ம அலைகளும் மெல்ல மெல்ல நம்மைவிட்டு விலக ஆரம்பிக்கும்.இந்த துஷ்கர்ம அலைகள் ஓடிவிட்டாலே ,தூய்மை ,செழுமை, முழுமை மெல்ல மெல்ல வெளிவரும்,அங்கே இழப்பு இருக்காது. பிறகு அங்கே எல்லாமே சேமிப்புதான்.பிறகு செழுமையை நோக்கியபயணம்தான்.




சென்னையில் பாரிமுனை மண்ணடியில் இருக்கும்  தம்புசெட்டி தெருவில் உள்ள ஸ்ரீ காளிகாம்பாள்   கோவில் மிக பழமையான ஒரு அற்புத ஆற்றல் நிறைந்த கோவில். அன்னை ஸ்ரீ காளிகாம்பாள் மிக சாதரண மனிதர்களையும்  பிரபலங்களாக மாற்றியவள் . அடிக்கடி பிரபலங்கள் வந்து செல்லும் இடம் .மிக புராதனமான கோவில் .அன்னை ஸ்ரீ காளிகாம்பாள்,  காளி என்ற பெயர் கொண்டாலும் இங்கே சாந்தமாக அமைதியின் ஸ்வரூபமாக ,காமாட்சியாக பத்மாசனத்தில் அமர்ந்து மிக அழகாக அருள்ஆசி செய்கிறாள்.மாகாகவி பாரதியார் வழிபட்ட ஸ்தலம் .ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரம் ஸ்தாபித்த ஸ்தலம்,என அம்பாளின் பெருமைகள் நீண்டுகொண்டேசெல்கிறது.

யாம் சென்ற போது சரியானகூட்டம் .இங்கே வருவது இதுவே எமது முதல் முறை ,எனவே இங்கே அம்பாளை  அமைதியாக தரிசிக்க இயலுமா என எண்ணிக்கொண்டிருந்த போது ,அவளின் கருணை அலைகள் மெல்ல மெல்ல கசிந்து எம்மையும் ஈர்த்தது  .அம்பாள் "காருண்ணிய வாராம் நிதிம்.அல்லவா .. .".இவள் கருணை கடல்  போன்று கொட்டிக்கிடக்கிறது பெரும் செல்வங்கள் நிறைந்தவள்..மூலஸ்தானத்திலிருந்து கிட்டத்தட்ட 20-30 அடி வரை அருள் ஆலைகள் நிரம்பி வழிகிறது..அள்ள அள்ள குறையாத கருணை தருபவள்.யாரும் சற்றே ஆழ்ந்து இவள் கருணை அலைகள் எப்படி இருக்கும் என்று எண்ணிய நொடியே ,சிறிது சிறிதாக தமது அரவணைக்கும் கருணை அலைகளால் கொஞ்சம் கொஞ்சமாக ஈர்த்துவிடுகிறாள்.எமக்கும் அம்பாள் மூலஸ்தானத்திற்கும் ஒரு இருபது அடிக்குள்ளே இருக்கும் .நிறைய கூட்டம் இருந்தாலும் அது தற்பொழுது  எமக்கு ஒரு பெரியபொருட்டாக தெரியவில்லை .சிறிது நேரத்தில் அம்பாளின் நேர் எதிரே வந்துவிட்டோம். ஒரு பத்து நிமிடம் எம்மை அவள்அருகே நிறுத்தினாள்...எமது சூட்சும தேகம் நிறைந்தது ,நிரம்பி வழிந்தது.மனதிற்கும் உள்ளே அங்கே இழந்த அலைகளால் உண்டான ஆங்காங்கே உள்ள சிறு சிறு நுண்ணிய வெற்றிடம் ,இப்பொது அம்பாளின் தெய்வீக அலைகளால் நிரப்பபட்டு,முன்னிலும் பொலிவு பெற்று துள்ளல் மிகுந்து  நிறைவான ஆற்றலுடன் ,துள்ளிக்குதித்தது.





எவ்வளவு கர்மவினை குப்பைகள் இந்த தேகம் எடுத்த நாள் முதல் இன்று வரை.இவை யாவும் மூட்டை மூட்டையாக நமது சூட்சும தேகத்துள் இருந்துகொண்டு,நாம் எங்கே சென்றாலும் நம்மைதொடர்ந்துவருகிறதல்லவா ? .பெற்ற தாய், தந்தை ,நண்பர் மற்றும் உறவுகளும் ,கிடைத்த தொழில்,செல்வம்,ஆளுமைதிறன், ,சந்தித்த,சந்தித்துகொண்டிருக்கும் ,சந்திக்கபோகும் அனைத்து நிகழ்வுகளும் ,போன்ற எல்லாம் இந்த கர்மவினையை பொறுத்தே, மிக அழகாக பின்னிகோர்த்து ஒரு சாதாரண மனிதர் கணிக்க முடியாத நிகழ்வாக தொடர்கிறது அல்லவா. எந்த ஆற்றல் நிறைந்த கோவில்சென்றாலும் ,அங்கே உள்ள தெய்வீக அலைகளால் செல்பவரின் கர்மவினைகள் அவர் அறிந்தோ அறியாமலோ  அதன் தாக்கம் குறைகிறது.மெல்ல மெல்ல மாயை அகன்று ஞானம் நோக்கி செல்கிறது என்பது உண்மை.கண்டிப்பாக சிக்கல் மிகுந்தவர்கள் ,வாழ்கையே எனக்கு எப்பொழுதும் பிரச்சனையாகவே உள்ளது அதிலிருந்து மீழ ஒரு தீர்வு வேண்டும் என துடிப்பவர்கள்,இது போன்ற ஆற்றல் பெற்ற ஸ்தலங்களுக்கு சென்று,தமது சூட்சும தேகத்தை புடம் போடவேண்டும்.இங்கே சூட்சும தேகம் அம்பாளின் அருள் அலைகளால் புடம் போடப்பட்டு ,கொஞ்சம் கொஞ்சமாக கர்மவினை களையபட்டு ,தாக்கம் குறைந்து ,மிளிர்கிறது.






கைகளில் பாசம் அங்குசம்,நீலோத்பல மலரும் ,இடது கை வரத முத்திரையுடனும் ,வலது கால் ஒரு தாமரை பூவின் மீது வைத்து ,அமர்ந்து மிக அழகாக காட்சிதருகிறாள்..யாம் சென்ற பொது அம்பாளின் அழகும் அவள் உடுத்திய பச்சை பட்டும் ,ஜொலிஜொலிக்கும் அவள் ஆபரணங்களும் ,மருண்ட பார்வையும் , வசீகரிக்கும் கண்களும்,மஞ்சள் ,குங்குமம் நிறைந்த மங்களகரமான அவள்  தோற்றமும், தத்ரூபமாக நிஜத்தில் இருப்பது போன்ற  உணர்வு எம்முள் வந்தது .அங்கே ஒளிவீசிகொண்டிருந்த ஆடாத அசையாத தீப சுடரும் ,அம்பாளின் மேல் மாலைகளாக தொடுக்கப்பட்டு நறுமணம் வீசும் ,மல்லிகையும்,சம்மங்கிபூக்களும்,மரிக்கொழுந்தும், சற்றே ஓரிரு நொடிகளுள்  எம்மை முற்றிலும் தெய்வீகஅலைகளால் ஈர்த்தது. எம்மை, எம் மனதினை உறையவைத்து , ஆழ்ந்து உட்செல்லவைத்தது.



 கோடான கோடி ஜீவராசிகளையும் ஆழ்ந்து பார்க்கும் ஒரு விசாலமான பார்வை.கருணை நிறைந்த தாயின் அன்பும் அரவணைப்பும் குறையாத பார்வை.இந்த ஒரு பார்வை எத்தனையோ ஜீவராசிகளின் நிகழ்வுகள் ,நடந்த நடக்கும்,நடக்க போகும் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு அற்புதமான பார்வை.இப்படி ஒரு பார்வை யாரேனும் பார்க்க இயலுமா என எண்ணும் பொழுதே அலைகள் நெஞ்சமெங்கும் சூழ்ந்துகொள்ளும் ஒரு அற்புதம் நிகழ்கிறது. நெஞ்சம் நிறையும் பார்வை.கர்மவினை சுட்டெரிக்கும் சூட்சும தேக பார்வை.ஒளியின் மாபெரும் ஜொலிக்கும் பார்வை.இப்படி ஒரு சக்தி ஒரு இடத்தில் இருந்தால் அந்த இடம் முழுவதும் சுபிக்க்ஷம் பெரும்.அமைதி பெரும்.ஆனந்தம் பெரும்.சாந்த ஸ்வரூபினி,சகலமும் உணர்ந்தவள்,ஈசனின் நாயகி ,தம்மை தரிசிக்கும் எவரையும் அருள்ஆசி செய்து,அவர் தம் கர்மவினையை சுட்டெரிப்பவள்.விஸ்வரூபினி,விசால ரூபம் கொண்டு  காளியாக மாறி, ஆணவம், கன்மம்,மாயை எனும் நம்முள் இருக்கும் அரக்கனை அழிப்பவள்.அன்பின் தன்மை நிறைந்தவள்.ஈசனின் நாயகி.அன்பால் மனம் இளகி, இவள் பொற்பாதம் பணிந்து, இவள் அருள் ஒளி வீசும் அலைகளை உணர ,உணர ,அது தரும் பேரமைதி.உலகில் எங்கிருந்தாலும் தாயவள் கருணையை எண்ணிய ஷணமே இவளின் பரந்த  அலைகள் சூழ்ந்துகொள்ளும்.மனதினை புரிய இயலா சந்தோஷத்தில் ஆழ்த்தும்.தாய் சக்தியும்  இவளே,காஞ்சி காமாட்சியும் இவளே,காளிகாம்பாளும் இவளே!!!




சர்வலட்சணமும் நிறைந்தவள் .ஒளி பொருந்திய கண்களால் உலகையே அரவணைப்பவள்.யாவுமாய் இருந்துகொண்டு யாவற்றையும் ஆள்பவள்.,கணிவையும் ,பாசத்தையும் தம் பார்வையால் யாவருக்கும் அமுது ஊட்டுபவள்.அன்பால்  அகிலத்தையே ஈர்த்து,அதில் உள்ள ஜீவராசிகளையும் ஈர்த்து, எல்லாம் எம்முள்ளே ,எதுவும் எம்மை விட்டு நுனி விலகுவதில்லை,எல்லாம் எமது ஆட்சிபுலத்தில் ,எல்லாம் எமது தாயேனும் சக்தியின் கனிவுமிக்க அலைகளின் ஆட்சியில் என கருணையோடு அரவணைப்பவள்.கருணை மிகுந்த அன்பெனும் பார்வையால் ,பார்க்கும் யாவற்றுள்ளும்  அன்பின் அலைகளை மிளிரசெய்பவள்.வாழ்வில் எந்தொரு நிகழ்வும் இவளின் பார்வையிலே நிகழ்கிறது.எந்த ஒரு முன்னேற்றமும் இவளின் அருளினாலே..எந்த ஒரு ஜஸ்வர்யமும் இவளின் கருணையினாலே கிடைக்கிறது. மாபெரும் சக்தியே..!! மாபெரும் தாயே ..!! சுடரொளியே ..!! ஜோதியே !! பாசம் நிறைந்த தாயே ..!! நின் பொற்பாதம் பணிந்து ,சரணாகதி அடைந்தோம் ...நீளும் இப் பிறவிப்பிணி அறுத்து ,என்றும் நின் அருள்  எங்களிடம் நிறைந்து இருக்க அருள் ஆசி வழங்குங்கள் தாயே!!!

தாயவள் பொற்பாதம் போற்றி..!!
காளிகாம்பாள் பொற்பாதம் போற்றி..!!
போற்றி !! போற்றி ..!!! நின் திருவடி போற்றி
சரணம் ..!! சரணம்..!!! நின் திருவடி சரணம்..!!!

அன்னையின் அருள் ஆசிஅலைகளோடு ,அகத்திய உள்ளங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு மீண்டும் ஒரு நிகழ்வில் விரைவில் சந்திப்போம்.

ஒம் அகத்தீஸ்வராய நமஹா ...!!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா ...!!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா ...!!!


Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

சூட்சுமங்கள் நிறைந்த ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் !!!