மகான் நாகமணி அடிகளார் அய்யா ஜீவசமாதி - பெருங்குடி சென்னை.!!!




கருணை என்பதை நம்மில் எத்தனைபேர் அதன் முழுத்தன்மையை உணர்ந்திருக்கிறோம்.கருணை என்பதை ஒரு வார்த்தை கொண்டு அடக்க இயலுமா ?கருணை என்ற ஒரு வார்த்தை ஓர் அளவுக்கு அதன் தன்மையை அதன் ஆற்றலை உணர்த்துகிறது.ஆனால் உணர்ந்தால்  தான் இந்த ஒரு வார்த்தையின் தாத்பர்யம் இவ்வளவு பெரியதா  என புரிகிறது.வார்த்தைகொண்டு வர்ணிக்க இயலாதுகருணையின் ஆற்றலை.

எல்லா தெய்வங்களும் கருணையின் பிறப்பிடம் ,கருணை கடல் போல் கொட்டிக்கிடக்கிறது.எல்லையற்ற கருணை உடையவர்கள் மகான்கள்.எல்லா மகான்களும்  கருணையின் வடிவம்.எல்லா மகான்களிடமும் கருணை என்னும் ஆற்றல் ததும்பி வழிகிறது.கருணை  என்பதை நன்கு  உணர்ந்து உள் கடந்து சென்றால் தான் அதன் வீரியம் புரியும்.இதை உணர்ந்துவிட்டால் அங்கிருந்து அன்பெனும் அலைகள் சூழ்ந்துகொள்ளஆரம்பித்துவிடுகிறது. இன்னும் கொஞ்சம் இப்படியே இதன் அலைகள் பிடித்தால் அன்பின் அலைகள் தாண்டி இறைஅலைகள் சூழ்ந்துகொள்கிறது.கருணையும் அன்பும் ஒன்றை ஒன்று பிரிக்க இயலாது.கருணை உள்ளம் கொண்டவர்கள் அன்பால் அன்பின் அலைகளால் அருள் ஆசி வழங்குகிறார்கள்.எந்த எதிர்பார்ப்புமின்றி தம்மை நோக்கி வரும் அன்பருக்கெல்லாம் அன்பால் பற்பல புரியஇயலா அற்புதம் செய்கிறார்கள்.இந்த அன்பெனும் அலை ஒன்றுக்கு மட்டுமே இவர்கள் கட்டுப்பட்டவர்கள்.வேறு எதைக்கொண்டும்  யாரும் இங்கே எதுவும்செய்ய இயலாது.


இறைவன் பேசும் மொழி அன்பு.அன்பை தவிர வேறு எதைக்கொண்டும் இறைவனிடம் நெருங்க இயலாது.அன்பால் கூனி குறுகி செய்வதறியாது பலர் மூழ்கினர் இங்கே.அன்பெனும் அலைநீளத்தை பிடித்தால் அதுஇறைவனிடம் கொண்டு சேர்க்கும்.இருக்கும் இடத்தின் தன்மை புரியும்.என்னென்ன அங்கே சூட்சுமமாக உள்ளதோ அதை எல்லாம் அன்பின் வழியால் மட்டுமே பெறமுடியும் அன்பின் வழியால் மட்டுமே உணரமுடியும்.


யாரிடம் கருணையும் அன்பும் ததும்பி வழிகிறதோ ,கண்டிப்பாக அவர் ஒரு மகான்.இறைநிலை உணர்ந்த மாபெரும் மனிதர்.என்ன தான் வேஷம் வேறாக இருந்தாலும் ,உடுத்தும் உடையும் ,தோற்றமும் முன்னுக்கு பின் முரணாக இருந்தாலும் ,அவர் தம் கண்கள் அந்த கண்கள் வழியே வரும் அன்பும் கருணையும்  அவர் ஒரு மகான் என்பதை மறைக்கஇயலாது. இது இறைவனின் தன்மை.யாரும் அன்பின் தன்மையை மறைக்க இயலாது.இதை உணர்ந்து கொள்ள ஒரே தகுதி அன்பெனும் கருவியே. அன்பெனும் நிலை உணராவிட்டால் அன்பெனும் தன்மை அறியாவிட்டால் அன்பெனும் நிலைக்குச்செல்ல தெரியாவிட்டால் , புரிவது கடினமாகிவிடுகிறது.

அன்பின் அலை உணராமல் ,கருணை என்றால் என்னவென்றே தெரியாமல் ,எந்தமகான்களின் ஜீவசமாதிக்கு சென்றாலும் புண்ணியமில்லை,முண்டி அடித்து  கூட்டத்தோடு  கூட்டமாக  சென்று கருவறை சென்று பார்த்தாலும் பயனில்லை.சற்றே  மன அலைசுழல் குறைத்து ,உள்ளம் எங்கும் அன்பு அலைகள் நிரப்பி ,எல்லாம் இறைவன் செயல் ,நடப்பவை நடக்கட்டும் ,எம்மால் ஆகபோவது ஒன்றுமில்லை  என அமைதியாக கொஞ்சம் கொஞ்சமாக நான் எனும் கர்வம் ஒழித்து , அருகிலே சென்றாலே வள்ளல் மகனார் வாரிவழங்கிக்கொண்டிருக்கும் அன்பின் அலைகள் மெல்ல மெல்ல  புலப்படும், உள்ளே கிடக்கும் அன்பின் அலை மெதுவாக உணர்ந்து ,அதன் நுனி பிடித்து பிறகு அதன் உள்ளே செல்ல பேரமைதி புலப்படும்.மகான் உணர்த்த நினைத்த அலை புடிபடும்.பிறகு அங்கிருந்து இருள்விலகி ஒளி புலப்படஆரம்பிக்கும்.

அன்பின் தன்மையாக மாறி எந்த கோவிலுக்கும் ,எந்த ஒரு ஜீவசமாதிக்கும் சென்றுபாருங்கள் .அங்கே தற்பொழுது உங்கள் மனதில் சூட்சுமதேகத்தில் மாறும் மாற்றத்தை பாருங்கள்.கண்டிப்பாக வேறுபாடு உணர்வீர்கள்.வெறுமனே கடமைக்கு சென்றதிற்கும் அன்பின் அலைகளோடு சென்றதிற்கும் நிறைய மாற்றங்கள் உணர்வீர்கள்.


அப்படி அன்பின் தன்மை மிகுதியாக நிறைந்த, கருணைவடிவான ,மிக எளிமையான மானுட வாழ்வு வாழ்ந்து,தம்மை நாடி வந்த மக்களுக்கெல்லாம்
பல இன்னல் நீக்கி பேருதவி செய்தவர்,இன்றும் சூட்சும ரூபத்தில் பலஅற்புதங்கள் செய்துகொண்டிருக்கும் ஒரு அற்புத மகான்  தவத்திரு நாகமணி அடிகளார் அய்யா அவர்கள்.அய்யா அவர்களின் ஜீவ சமாதி சென்னையில்  பெருங்குடியில் இருக்கிறது.கந்தன் சாவடி பஸ் நிறுத்ததிலிருந்து மேற்கு புறமாக  (opp to police beat) ஒரு km சென்றால் ஒரு ஏரி வரும் ,அந்த ஏரி தாண்டி கொஞ்சதூரம் சென்று வலது புறம் திரும்ப அய்யாவின் ஜீவசமாதி இருப்பிடம் வரும்.


பரபரப்பான நகரஎல்லைக்குள் கடந்து உட்சென்றால் கிட்டத்தட்ட ஒரு நான்கு ஐந்து ஏக்கர் பரப்பளவில் ஒரு மிகபெரிய compund wall,அதனுள் சென்றால் ஒரு கிராமம் போல தோற்றம் அளிக்கிறது.கொஞ்சம் கூட நகரத்தின் சாயல் இன்றி ,ஒரு ஆலமரம் ,ஒரு அரசரமரம் ,ஒரு வேப்பமரம் ,ஒரு தாமரை குளம் சூழ மிக அழகான கிராமத்து சாயலில் உள்ளது.நடுவில் அய்யாவின் ஜீவசமாதி இருக்கிறது,ஆங்காங்கே இருக்கும் இடம் பராமரிப்பு இன்றி இருக்கிறது.ஆனால் அமைதி கரைபுரண்டு ஓடுகிறது.



யாம் சென்ற போது யாருமே இல்லை.என்னடா இப்படி தனி ஆளாய் வந்து இங்கே மாட்டிக்கொண்டோமா... என நினைக்கும் போதே ஒரு வயது முதிர்ந்த பெரியவர் அந்த ஜீவசமாதியிலிருந்து வெளியேவந்தார்.கழுத்தில் உத்திராட்சமாலை அணிந்து,யாம் வணக்கம் சொல்ல அவரும் புரிந்துகொண்டு மீண்டும் ஜீவ சமாதிக்கு சென்று ஆரத்திகாண்பிக்க ஏற்பாடு செய்தார்.தீப்பெட்டி தேட அவருக்கு கிடைக்கவில்லை.கீழே இறங்கி எங்கேயோ சென்றார் ,பிறகு மீண்டும் வந்து ,பொட்டிஒன்னு வாங்கிவாரியா...நடந்து அவ்வளவு தூரம் போக முடியவில்லை ...என தளதளத்த குரலில் சொன்னார் . இதோ நான் சென்று வாங்கி வருகிறேன் என ,யாம் கீழே இறங்க ஒரு வயதான அம்மா கையில் சூடம்,தீப்பெட்டி உட்பட பூஜை பொருட்களை கொண்டுவந்தார்.அவரிடம் தீப்பெட்டியை வாங்கி உள்ளே சென்று அய்யாவிடம் கொடுத்தேன்.
அவர் சூடத்தை வைத்து நெருப்பை பொருதி  ஜீவசமாதியில் உள்ள லிங்கத்தின் மீது ஆரத்தி காண்பித்தார்.
அந்த நொடியே சரேலென ஒரு காற்று  வாசல் வழியாக மேலிருந்து ஜீவசமாதிநோக்கி  சருகளுடன் (சருகுகள் ஏதோ வண்ண மலர் தூவி வருவது போல இருந்தது) ஜீவசமாதி வாசல் உள்ளே மிகஅதிவிரைவான காற்றுடன் சட்டென உள்நுழைந்தது.அவர் ஆரத்தி காண்பித்த நொடியும் இந்த காற்று உள்நுழைந்த நொடியும் எம்மையும் உரசியும் இங்கு நுழைவாயுள் முழுவதும்  உட்சென்றதும் எம்மை பிரமிப்பில் ஆழ்த்தியது.யாமும் வேறெங்கும் காற்றடிக்கிறதா என பார்த்தால் இல்லை.


எம் உடம்பு சிலிர்த்தது கண்டிப்பாகஅய்யா அவர்கள் தற்பொழுது ஜீவ்சமாதியுள் உள் வந்துவிட்டார்கள் என்பதை  இது உணர்த்துகிறது என்பதை உணர்ந்தோம்.எமக்கு இதுவரை மகான்கள் எமது சூட்சுமதேகத்தில் தான் விளையாடுவார்கள்.ஆனால் தற்பொழுது இந்த பூதஉடம்பில்  உணரும் நிகழ்வு எம்மை மெய்சிலிர்க்க வைத்தது. காற்றாக வருவார்கள் மகான்கள் என கேள்விபற்றிருக்கிறோம்.இங்கே அதை முற்றிலும் உணர்ந்தோம் ஐயாவின் அருள் அலைகளை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்தோம்.காற்றுடன் சேர்ந்த ஒரு ஒளிஉடல் ஒரு வெற்றுடல் ,விருட்னென உள்செல்வது ,யாம் இங்கே இருக்கின்றோம் என்பதை உணர்த்தியது.கருணை உள்ளத்தோடும் அன்போடும்  ஒரு நொடிஇருந்து பார்த்ததால் தான் தெரிகிறது, ,அய்யா அவர்கள் எப்படி அவர் வரவை எமக்கு உணர்த்திகாட்டியிருக்கிறார்கள் என்று.


அந்த பெரியவர் ஆரத்தி காண்பித்து கீழே வந்தார்,விபூதியை கொஞ்சம் எடுத்து எம் வாயினுள் வைத்து ,விழுங்கசொல்லி,கையில் கொஞ்சம் கொடுத்து இதைக்கொண்டுபொய் கழுத்து,தோள்பட்டை எங்கும் பூசிக்கொள் என்றார்.யாமும் அங்கேயே கொஞ்ச நேரம் அமர்ந்து ,இந்த நடந்த நிகழ்வை எண்ணி ஆழ்ந்தேன் .ஒரு வழியாக  மெதுவாக கீழே இறங்கி ,வெளிக்கிளம்ப ஆயத்தமானேன் .அப்பொழுது அந்த வயதான அம்மாவை சந்திக்க நேர்ந்தது.கருணைநிறைந்த உள்ளம் கொண்டவர்.தாம் தலைமைஆசிரியராய் ஓய்வு பெற்று ,இங்கே வந்து இந்த வயதிலும் சேவைஎண்ணம் கொண்டு ,அய்யாவின் ஜீவசமாதியையும் கவனித்துக்கொண்டு,ஒரு சிறிய பள்ளி ஒன்றையும்  இதன் அருகிலுள்ள ஏழைகுழந்தைகள் பயனுற  நடத்திவருகிறார்கள்.நிறைய தகவல்கள் சொன்னார்கள்.

அய்யாஅவர்கள்  எமக்கு பெரியப்பா முறை வேணும் .எமது சிறுவயதில் ஐயாவின் மடியில் தவழ்ந்திருக்கின்றேன்.எங்கள் வீடு மயிலாப்பூரில் இருக்கிறது .அங்கே எமது சிறுவயது முதலே தேவாரம் திருவாசகம்,பெரியபுராணம் ,ஸ்லோகம் என நிறைய பக்திவழியில் எங்களது குடும்பத்தில் அனைவரும் நாள்தோறும் அதிகாலையில் சொல்வோம்.அய்யா எந்த மந்திரமும் சொல்லமாட்டார் ,எங்களுடனேயே இருப்பார்கள்,பார்த்துகொண்டிருக்கும் போதே சட்டென மறைந்து விடுவார்கள். நிறைய சித்துக்கள் செய்வார்கள்.ஒரு கோவணம் மட்டுமே கட்டியிருப்பார்கள். தமிழகத்தின் பல பகுதியிலிருந்து அய்யாவை தேடி மயிலாப்பூர் வருவார்கள்.வருபவர்களுக்கு என்ன பிரச்சினையாக இருந்தாலும் ,கொஞ்சம் விபூதியை எடுத்து வாயில் விழுங்க சொல்வார்கள்.எவ்வளவு பெரிய நாள்பட்ட வியாதியானாலும் ,எவ்வளவு பிரச்சினையானாலும் ஓரிரு நாளில் சரியாகிவிடும்.ஐயா அவர்கள்  மயிலாப்பூரிலிருந்து இங்கே பெருங்குடி வந்துவிட்டார்கள் .அப்பொழுதெல்லாம் இது ஒரு மிகப்பெரிய காடு.குள்ளநரி நெறைய திரியும் .நாங்கள் வருவதற்கே இங்கே பயப்டுவோம்.ஆனால் அய்யா இங்கே வந்து நிறைய நேரம் இருப்பார்கள்.அய்யா தொல்காப்பியத்துக்கு உரை எழுதிஇருக்கிறார்கள்.திரு.வி.க , அய்யாவின் மிக நெருங்கிய நண்பர்,என நிறைய சொன்னார்கள்.


நீங்கள் இங்கே பார்த்த  ருத்திராட்சம் அணிந்த அந்தமுதியவர் அய்யாவின் சீடர்.அவருக்கு வயது 98.அதிகாலை நான்குமணிக்கே எழுந்து நாள் தவறாமல் ஜீவசமாதியில் விளக்கேற்றி பூஜைசெய்துவிடுவார்கள். 1946 ம்வருடம்  நாகமணி அய்யா அவர்கள் இங்கே ஜீவசமாதி அடைந்துவிட்டார்கள்.நிறைய இந்த இடத்தை சரிசெய்யவேனும் ,ஒரு சரஸ்வதி சிலை பிரதிஸ்டை செய்யவேண்டும் ,...எல்லாம் அய்யாவின் அனுக்கிரகம்..நிறைய பேர் வந்து இங்கே பௌர்ணமியில் தவம் செய்வார்கள்.ஆவணியில் வரும் பௌர்ணமியில் இங்கே குருபூஜை நடக்கும் ,வந்துகலந்துக்கபா என கனிவோடு சொல்லி எம்மை வழிஅனுப்பிவைத்தார்கள்.

எங்காவது நல்ல முறையில் பயனுள்ள வகையில் உதவவேண்டும் என  எண்ணும் அன்பர்கள்    இங்கே வந்து தாராளமாய் நேரடியாகவே  உதவி செய்யுங்கள் !!  கர்மவினையின் தாக்கத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.புண்ணியத்தை பெற்றிடுங்கள்.அய்யாவின் அருள் ஆசிகளை பெறுங்கள் . இங்கேயேதான் மகான் சூட்சும உடம்பில் இன்றும் இருக்கிறார்கள்.இந்தஇடம் சோலைவனமாக மாறவேண்டும்.இது போன்ற இடங்கள் வரும் தலைமுறையினர் நன்கு உணர்ந்து நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.அகத்திய உள்ளங்களை மீண்டும் விரைவில்  வேறுஒரு நிகழ்வில் விரைவில் சந்திக்கின்றோம்.!!!

ஒம் அகத்தீஸ்வராய நமஹா!!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா!!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா!!!







Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

மெய்கண்ட சித்தர் குகை - கன்னிவாடி