ஸ்ரீ ஸ்வர்ணஆகர்ஷன பைரவர் - இலுப்பைக்குடி





பைரவசக்தி என்பது காலம் காலமாய் தொடர்ந்து இம்மண்ணுலகில் வாழும் உயிர்களை காத்துக்கொண்டிருக்கிறது.இந்த சக்தியின் வேகம் ,இதன் மயிர்கூச்செறியும் ஆற்றல்,அதனால் உடலில்,உள்ளத்தில் ஏற்படும் மாற்றம் பிரமிக்கவைக்கிறது.எவர் தம்மை அழைத்தாலும் பாரபட்சமின்றி நொடிப்பொழுதில் தம் தன்மையை காண்பிக்கும் இதன் வல்லமை ,நினைக்கவே பிரம்மாண்டமாய் உள்ளது.பைரவரை வழிபாடு செய்பவர்கள் கண்டிப்பாக  பைரவர் தரும் பலன்களை அனுபவித்தே ஆகவேண்டும்.இது யாம் எமது அனுபவத்தில் கண்டஉண்மை.பைரவரின் சக்தியை உணர்ந்தே ஆவர்கள்.பைரவரின் அருள் ஆசிஇருந்தால் மட்டுமே மூலிகை பற்றிய ரகசியங்கள் புரியும்.இல்லை எனில் ஏட்டுசுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல ஆகிவிடுகிறது.அதுமட்டுமல்ல பொருள் வளத்திற்கும் பைரவசக்தி மிக சிறந்தமுறையில் உதவுகிறது.


வாழ்வின் தேவைகள் நிறைவேற்றிக்கொள்ள ஸ்வர்ணம் மிக அவசியமாகிறது. ஸ்வர்ணம் இல்லாமல் அதுவும் இன்றைய காலகட்டத்தில் வாழ்வது மிக கடினமாகிறது.கடின உழைப்பின் மூலம் இதனை பெறவேண்டிய நிர்பந்தம் உள்ளது .எல்லாம் கர்மவினையும் கோள்கள் ஆட்சிபுலமும் மிக முக்கியபங்கு வகிக்கிறது.இருந்தாலும் இவை எளிதில் பெற ,தடைகள் எளிதாய் அகன்று வேண்டியவை வேண்டியவாறு பெற ஒரு சக்தி தேவைப்படுகிறதல்லவா ..? பைரவர் அருள் இதற்கு சிறந்த முறையில் வழிகாட்டுகிறது.ஸ்ரீ ஸ்வர்ணஆகர்ஷன பைரவர் ,வாழ்வின் மிக முக்கிய தேவையான ஸ்வர்ணங்களை அள்ளிதரும் ஒரு அற்புத சக்தி.

ஸ்ரீ ஸ்வர்ணஆகர்ஷன  பைரவ மந்திரம்

ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்
ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய
அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மம தாரித்தர்ய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:








கொங்கணசித்தர் தமது கடும் முயற்சிக்கு பிறகு தமக்கு  கிடைத்த மூலிகையை பயன்படுத்தி இரும்பை தங்கமாக மாற்றுகிறார்.அப்படி அவர் செய்த தங்கம் 500( Touch) மாற்றுக்கள் தரம் உடையது.இன்று நாம் பெரும்பாலும் பயன்படுத்துவது 91.6 (touch ).ஆனால் கொங்கணரோ அன்றே 500( Touch)க்கு சென்றுவிட்டார்.அதோடு அவர் தம் ஆய்வை நிறுத்தவில்லை.மேலும் இன்னும் தகதகவென மேலும் அதிக தூய்மையான டச் வேண்டுமென்று சிவபெருமானை நோக்கி தவம் இயற்றுகிறார்.சித்தர் அல்லவா எதிலும் அதன் நுனிவரை சென்று, செய்யும் செயல்களை ,வேலைகளை மிக அதிநுட்பமாக  செய்து, அதன் உச்ச எல்லைவரை செல்லும் தகுதி பெற்ற மாபெரும் புண்ணியவான்கள்.சிவனும் மனமிறங்கி அதோ அங்கே  இலுப்பை மரமும் வில்வ மரமும் நிறைந்த அந்த இடத்தில் பைரவரை நினைத்து 1000 ( Touch) மாற்றுக்கள் உள்ள தங்கத்தை தயாரிக்க அருள்செய்கிறார்.கொங்கணரும் மிக சரியாக இந்த  வில்வமரம் மற்றும் இலுப்பைமரங்கள் நிறைந்த இடத்தில் ஸ்வர்ணாகர்ஷன பைரவர் ஆசியுடன் 1000 ( Touch) மாற்றுக்கள் உள்ள தங்கத்தை தயாரித்துவிட்டார்.அந்த தங்கமோ தகதகவென ஜோதியாக மின்னுகிறதாம் .பிறகுஅவர் அதை எடுக்க முற்படும்போது அதுஅப்படியே பூமிக்குள் சென்று ஜோதியாக சிவலிங்கமாக காட்சியளித்ததாம்.இப்படி பிரகாசமாக ஜோதியிலிருந்து தோன்றியதால் ஸ்வாமிக்கு சுயம்பிரகாசேஸ்வரர் ,தான்தோன்றிஸ்வரர் என்று அழைக்கிறார்கள்.மிக பழமையான பைரவர் தலங்களுள் இதுவும் ஒன்று.ஒரு புறம் இரும்பு மறு புறம் அதன் உச்சம் ஜோதியாகிய இறைநிலை.இதற்குமேல் தூய்மை கிடையாதல்லவா ? ஆக சித்தன் ஒரு புறம் அவன் எண்ணம் செயல் எல்லாம் மருபுறமாகிய இறைவன் எனும் ஜோதிவரைசென்றுவிட்டான்.

காரைக்குடியிலிருந்து மாத்தூர் செல்லும் வழியில் உள்ளது.கிட்டதட்ட ஒரு 6 km (from new busstand) தொலைவில் உள்ளது ஸ்ரீ ஸ்வர்ணஆகர்ஷன பைரவர் கோவில்.கோவிலின் அம்பாள் சன்னதிக்கு எதிரே ஒரு மிகப்பெரிய குளம் உள்ளது.



ஒரு காலத்தில் மிக அதிக எண்ணிக்கையில் இலுப்பைமரங்கள் இருந்ததாம்.அதனால் தான் இந்த ஊருக்கு இலுப்பைக்குடி என்று பெயர்வந்ததாம்.இப்பொழுது இந்த குளத்தின் அருகே ஒரே ஒரு இலுப்பை மரம் உள்ளது.பைரவருக்கு பிடித்த ஒருமரம் இந்த இலுப்பைமரம் .மேலும் இதில்இருந்துஎடுக்கப்படும் இலுப்ப எண்ணெய்.இலுப்பஎண்ணெய்யில் விளக்கேற்றி  பைரவரை வழிபட வாழ்வில் இன்னல் அகன்று எண்ணியவை நிறைவேறும் என்பது நிதர்சனமான  உண்மை.




பைரவர் இங்கே ஜொலிக்கிறார்.ஒரு கையில் தங்க அட்சயபாத்திரம் ஏந்திஉள்ளார்.இங்கே வேண்டிக்கொள்ள வீட்டில் ஸ்வர்ணம் பெருகும் என்கிறார்கள்.இரண்டு நாய்களுடன் காட்சிதருகிறார்.பைரவர் சன்னதியில் எந்திரபிரதிஷ்டை செய்துள்ளார்கள்.கொஞ்சம் தவத்தில் ஆழ்ந்து சொல்ல சுழலும் ஒரு அலையினை உணரலாம்.பைரவருக்கு அருகே ஒரு சிறிய பலகையில் நாய் உருவம் உள்ளது,நாய்கடி பெற்றவர்கள் இங்கு வந்து இந்த தூணை வளம் வந்து ,இங்குள்ள குளத்தில் நீராடி பைரவரை வேண்ட,பைரவர் விஷதன்மையை முறிப்பதாக சொல்கிறார்கள்.



சுயம்பிரகாசேஸ்வரர், சிவன் மிக சிறியவடிவில் உள்ளார்.தெய்வீகம் நிறைந்த அலைகள் சூழ்ந்துள்ளது.கொஞ்சம் ஆழ்ந்து செல்லசெல்ல சென்றுகொண்டேஇருக்கிறது.அமைதி பரவுகிறது.ஆழ்ந்து கொஞ்சநேரம் இன்னும் கொஞ்சகாலம் பின்னோக்கி சென்றால் இந்த இடம் எப்படிஇருந்திருக்கும் என எண்ண ,ஒரு இனம் புரியாத அமைதி நோக்கிதான் செல்கிறது.காலம் சுழல்வதோ மிக மெதுவாக சுழல்வதுபோல தோணுகிறது.எந்த ஒரு டென்ஷனுமின்றி ,உடல் செல்கள் எல்லாம் நல்ல ஆற்றல் அலைகளை ஈர்த்துக்கொண்டு ,எந்த இழப்புமின்றி அது தம் வேலையை செய்கிறது.இப்படியே இருத்தல் சுகம் என்பதை உணர்த்துகிறது.இங்கே இன்றும் கொங்கண சித்தரின் ஆசிகள் கிடைக்கிறது .பிரம்மிக்க வைக்கிறது.முதலில் பைரவரின் அருள் வேண்டும் ,பிறகு கொங்கணரின் ஆசிவேண்டும்.இவை இரண்டும் இருந்தால் ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றும் தத்துவத்தின் ஒரு சிறுமுதல் படி விளங்குகிறது.நோக்கம் சிறந்ததாக இருத்தல் அவசியமாகிறது.எமது எண்ணம் நோக்கம் பைரவரின் அருள்அலைகளை நோக்கியே இருந்தது.

இங்குள்ள ஒருஇடத்தில் கொங்கணர் சிவனுக்குபூஜை செய்வது போன்று ஒருஅழகியசிற்ப வேலைபாடுஉள்ளதாம்.பொதுவாக இது போன்ற சிலைவேலைப்பாடுகள் எல்லாம்,அதிலும் இது போன்ற 500 வருடம் மிக பழமையான கோவிலில் இருக்கிறதென்றால் அதற்கொரு காரணம் கண்டிப்பாக இருக்கவேண்டுமல்லவா ? .அந்த இடத்தில அதிர்வுகள் அதிகமாக இருக்கவேண்டும் அல்லது ஏதோ ஒன்றை அதன் தாத்பரியத்தை சித்தர் பெருமகனார் மக்களுக்கு உணர்த்த உதவும் ஒரு அடையாளமாகவே யாம் கருதுகிறோம்.ஆக அதனை காணும் பொருட்டு கொஞ்சம் ஒவ்வொரு தூண்களாக பார்த்துக்கொண்டுவந்தோம் .அப்படி பார்த்துகொண்டிருந்தபோது , ஒரு என்பது வயது மதிக்கத்தக்க ஒரு அய்யாவை கண்டேன்.மிக சாதாரணமான ஒரு வெள்ளைவேஷ்டி வெள்ளை சட்டையுடன் அவர் உண்டு அவர் வேலையுண்டு என அமைதியாக இருந்தார்.அவரிடம் சென்று அய்யா இங்கே கொங்கணர் சித்தர் சிவனுக்கு பூஜை செய்வது போல சிற்பம் , எங்குள்ளது என்று கேட்டேன்.அவரோ அதை காதிலே வாங்கவில்லை .இரண்டுமுறை சொல்லிப்பார்த்தேன்,அவர் அதைபற்றி கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை.சரி யாமே தேடுவோம்,என்று ஒவ்வொரு தூண்களில் உள்ள சிற்பங்களை பார்த்துக்கொண்டே வந்தோம்.யாமும் முயற்சிசெய்து தேடினாலும் கிடைத்தபாடில்லை.சரி கிளம்பலாம் என வெளிவந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து  வெளியே செல்லலாம் என நினைக்க ,சட்டென அந்த பெரியவர் அவராகவே  எம்மிடம் வந்து இங்கே பாரு ,இங்கே வா வா என ஒரு குறுக்குபாதையில் அழைத்துசென்று ஒரு இடத்தினை காட்டினார் ,நல்ல உற்று கவனித்துபார் அங்கே கொங்கணர் சிவனுக்கு பூஜைசெய்கிறார் என காண்பிக்க ,மிக அழகாக இருந்தது .ஒரு லிங்கத்தில் கொங்கணர் சிவனுக்கு பூஜை செய்கிறார்.கொஞ்சநேரம் அங்கேயே ஆழ்ந்துவிட்டேன்.


மேலும் வேகமாக விறுவிறுவென்று அழகிய புருவம்,வேலைபாடுயைட கண்ணிமை,நகங்கள் போன்ற நுண்ணிய வேலைப்பாடுடைய ஒரு சிறிய விநாயகர் சிற்பம்,ஹயக்ரீவர் சிலை,கொங்கணர் தங்கத்தால் ஒரு முருகன் சிலை வடிக்க எண்ணுவது  போன்ற சிற்பம்,நாய்கடி பலகை என நிறைய சிற்பங்களை இங்குமங்கும் ஒரு இரண்டுநிமிடத்தில் காட்டிவிட்டு சென்றுவிட்டார்.காட்டினார் என்பது எமக்கு கிட்டத்தட்ட ஒரு பறப்பது போன்ற உணர்வுதான் ஆனால் பாதங்களில் நடந்துதான் அவரோடு சென்றோம்,சும்மா .....,மனிதர், சற்று நேரத்தில் படபடவென  குறுக்கும் நெருக்குமாக இங்கும் அங்கும் காட்டிவிட்டு பறந்துவிட்டார் .யாமோ சுத்தமாக அவர் என்னசொல்கிறாரோ அதனை அவ்வாறே ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்திற்கு தள்ளப்பட்டோம்.எந்த ஒரு வினாவும் எழவில்லை.அப்பப்பா.....என்ன ஒருவேகம் !!வேறு ஏதேதோ சொன்னார் ஒன்றும் விளங்கவில்லை.இந்த சிலை மிக அருமையாக உள்ளது என்றேன் அதையும் அவர் காதில் வாங்கிகொள்ளவிள்ளை


பசு ஒன்று சிவலிங்கத்திற்கு பால் சுரக்கும் காட்சியை விளக்கும் சிற்பம்


பிறகு ஒருவாறு கோவில்வெளியேவந்து ,காரில் ஏறி கொஞ்சதூரம் செல்ல,அப்பொழுதுதான் எமது சிந்தனை இந்த பெரியவரின் பிடியில் இருந்து வெளிவந்து சிந்திக்க ஆரம்பிக்கிறது என்பதை உணர்கிறோம்.இந்த பெரியவரிடம் யாம்கேட்கும்போது இவர் ஏன் அதனை பொருட்படுத்தவில்லை ?! .கிட்டதட்ட காதுகேட்காதவர்போல இருந்துவிட்டு,பிறகு நீண்டநேரத்திற்கு பிறகு அவரே ஏன் எம்மிடம் வந்து யாவற்றையும் விளக்கவேண்டும் ?!இவை போன்ற அனுபவம் எமக்கு சதுரகிரியில் உள்ள இளம்சித்தரோடு ஏற்பட்டதை நினைவுகூர்கிறோம்!!


சித்தனின் அருள் வேண்டுபவர்கள்அதற்கு முன் பைரவரை வணங்கினால் பைரவர் அதனை எளிதாக்கிவிடுகிறார்.சித்தர்கள் மகான்கள் இன்றும் நல்ல உள்ளங்களுக்கு தரிசனம் ஏதேனும் ஒரு விதத்தில் தந்த வண்ணத்தில் இருக்கிறார்கள்.எண்ணமும் நோக்கமும் சரியாய் இருந்தால் தரிசனம் விரைவில் கிட்டுகிறது.இல்லையெனில் பக்குவம் வரும் வரை காத்திருக்கவேண்டியதாகிறது.


ஆலய தரிசனம் கோடி கோடி புண்ணியம் .வாய்ப்புகிடைப்பவர்கள் காரைக்குடி வரும் பொழுது இங்குவந்து பைரவர் ஆசிபெற்று செல்லுங்கள் .பார்க்கவேண்டிய பைரவர் ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று.நகரத்தார் பெருமக்கள் இந்த கோவிலை நிர்வகித்துவருகிறார்கள் .மிக சிறந்த தொண்டு
அதுவும் காலம் காலமாக ஆலயபணிகளை செவ்வனே செய்பவர்கள், அவர்களுக்கு எமது நன்றியைதெரிவித்து,அகத்திய உள்ளங்களுக்கும் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவ அலைகளை இக்கட்டுரைவழியாக பகிர்ந்துகொண்டு, வேறு ஒரு நிகழ்வில் விரைவில் சந்திக்கின்றோம்.!


ஒம் அகத்தீஸ்வராய நமக !
ஒம் அகத்தீஸ்வராய நமக !
ஒம் அகத்தீஸ்வராய நமக !

Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

சூட்சுமங்கள் நிறைந்த ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் !!!