Saturday, May 16, 2015

இறை தேடும் பயணத்தில்...!!!
மனம், இறைவன் வந்து அமரும் இடம்.என்றும் மிக உயர்ந்த நிலையில் இருத்தல் அவசியமாகிறது.அகண்ட பிரபஞ்சம் போல ,ஆழ்ந்து அகன்று விரிந்து  இருந்தால் அளவிலா ஆனந்தம் சூழ்கிறது.இல்லைஎனில் மாறான விளைவுவருகிறது.அகத்தே ஆராய்ந்து ஆராய்ந்து தேவை இல்லாத குப்பைகளை எல்லாம் தூக்கி எறிய எறிய,  மனம்மேலும் மேலும் உயர்வு பெறுகிறது.இறைஅலைகள் என்பது ஒரு இலவம் பஞ்சுபோல எடையற்ற ஜீவ அலைகள்,எந்த உருவமும் கிடையாது,எந்த வடிவமும் எடுக்கும் இந்த அலைகள்.இறைவன் உள்ளத்தில் அமர்ந்தால் மகிழ்ச்சி கரைபுரண்டோடுகிறது.

எவர் உள்ளத்திலும் வந்து அமருவான் இறைவன்.இவன் தன்மை யாதெனில் ,இவனுக்கு எதுவும் சொந்தமில்லை ,யார் தம்மை அழைத்தாலும் பாரபட்சமின்றி வந்தமருவான் ,எத்தனை கோடி ரூபாயும் ஒன்றுதான் எங்கிருக்கும் எதுவும், எந்த ஜடமும், ஒன்றுதான். எதுவும் இவனுக்கு பெரிய விசயமில்லை,யாவரும் தம் பிள்ளைகளே,எந்த ஒரு விருப்பும் கிடையாது,வெறுப்பும் கிடையாது.இவன் வந்தால், என்னே ஒரு மகிழ்ச்சிகொள்கிறது இந்த மனம் !,இவனை பற்றி அறிய முற்படும்போதே ஒரு அமைதி சூழ்ந்துகொள்கிறது.எங்கோ மழை அடித்தால் ,இங்கே வரும் குளிர்காற்று போல ,இவன் நறுமணம் ,இவன் தன்மையை ,இவனை அறிய முற்படும்போதே , மனம் மெல்ல மெல்ல உணரஆரம்பிக்கிறது.எந்த ஒரு நிகழ்வையும் இவன் நேர்படுத்துவான்(allign),எந்த ஒரு இடரையும் சரிசெய்வான்.எப்படிப்பட்ட மனதையும் அது எப்படிப்பட்ட தன்மையாயினும் அதனை நொடிபொழுதில் சரிசெய்துவிடுவான்.இவன் அற்புதம் உள்ளே நன்றாக ஆழ்ந்து உள்வாங்க உள்வாங்க ,கல்நெஞ்சமும் கரைந்துவிடும், நெகிழ்ந்துவிடும்.இவன் இருக்கும் இடத்தை சுற்றி எங்கெங்கும் அன்பின் அலைகள் கரைபுரண்டோடும்,மெல்லிய அமைதி உறைந்துகிடக்கும்.யாரெல்லாம் இந்த அலைவட்டத்திற்குள் தம்மை இணைத்துக்கொள்கிறார்களோ அவர்களுக்கெல்லாம்  அள்ள அள்ள குறையாத அன்பின் அலைகளும்,தெவிட்டாத ஆனந்தமும், அமைதியும், தெளிவும் கிடைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

எல்லாம் விதிப்படி கர்ம வினைப்படிதான் நடக்கிறது என்று சும்மா இருந்துவிடமுடியுமா? நடப்பது எல்லாம் இறைவன் செயல் .உண்மைதான்.ஆனால் கடுமையான முயற்சி எடுத்தல் என்பது இக்காலகட்டத்தில் மிகமிக அவசியமாகிறது.இல்லை எனில் இங்கே எந்த தொழிலையும் செய்யஇயலாது? எந்த வேலையிலும் நிலைக்க இயலாது .அதைவிட பெரியது என்னவெனில் அந்த கடினமுயற்சியால் வரும் விளைவுகளை இறைவன் தந்த பரிசு என எடுத்துக்கொள்ளுதல்.ஆக விளைவுகள் எப்படி வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நம் மனதில்கொண்டுவருவது   என்பது மிகமுக்கியமாகிறது.இங்கே ஈடுபாடு என்பது இன்னும் ஒரு படி மேலே போய் மிக மிக முக்கிய பங்குவகிக்கிறது.எந்த ஒரு செயலும் ஈடுபாடு இல்லையெனில் அதில் வெற்றிபெறுதல் என்பது கடினமாகிறது.


அதிகாலை பொழுது , ரம்மியமான பிரம்ம முகூர்த்த வேளை.அதிகாலை 4:30 மணி இருக்கும், தந்தை எமக்கு உணர்த்தும் சூட்சும விளக்கம்.  ஒரு சில இடங்களில் உள்ள அதீத தெய்வ சூட்சும தரிசனம்.கிட்டதட்ட ஒரு 200  முதல் 300 வருடங்கள் பின்னோக்கி சென்றால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது,யாம் சென்ற இடம் .கொஞ்சம் பரந்து விரிந்த நிலபரப்பு  அங்கே ஒரு மிக பழமை வாய்ந்த ஒரு மரம், அதன் அருகில் ஒரு சிவலிங்கம் ,கஸ்தூரி அரளி பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை ,லிங்கத்தின் திருமேனிஎங்கும் அலங்கரித்துக்கொண்டிருந்தது. அதன் அருகிலே அம்பாள் ,தெய்வீக பச்சை வண்ண மரகதத்தால் ஆன சிலை ,அம்பாள்  மிக அழகாக அங்கே தத்ரூபமாக காட்சி தந்துகொண்டிருக்கிறாள்.அம்பாளின் திருமேனியும் கஸ்தூரி அரளி பூக்கள் மாலைகள் சூழ காட்சியளிக்கிறது.யாமோ முற்றிலும் அம்பாளின் அருள் அலைகளால் திளைக்கிறோம்.தாயவள் திருமுகம் காணும் அருகதை எமக்கில்லை.ஆனால் அங்குள்ள அதீத தெய்வீக அலைகள் கண்டு பிரமிக்கிறோம்.எங்கெங்கும் சக்திமிக்க அருள் அலைகள்.தாயவள்  பெருமை, தாயவள் ஆற்றும் அற்புதம் ,எல்லாம் யாமே எம்முள்  பாடல்களாக பாடி ,சரணாகதி நிலை வந்து ,தாயவள் பொற்பாதம் பணிகிறோம்.நண்பரிடம் அதிகாலை 5 மணி அளவில் ,"நண்பரே ஒருமுக்கியமான கோவில் செல்லவேண்டும்,  புறப்பட தயாராகுங்கள்" என்று சொல்ல அவரும் உடனே எந்த மறுப்பும் சொல்லாமல் ," சரி "என்று சொல்லிவிட்டார்.சென்னை to கொல்கத்தா நெடுஞ்சாலையில் ,GNT Road ஜ பிடித்து,காரனோடை வந்தவுடன் ,கொஞ்ச தூரத்தில் வலது புறம் திரும்ப மிக அருகில் வரும்.பஞ்சேஷ்டி ஸ்ரீ அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில்.நகரஎல்லை தாண்டி மிக அமைதியில் இருக்கிறது இக்கோவில்.தெற்குநோக்கிய ராஜகோபுரம் மிக கம்பீரமாக அமைந்துள்ளது மேலும் இது ஒரு  பரிகாரஸ்தலம் என்கிறார்கள்.கோவிலின் அருகில் ஒரு பெரிய குளம் உள்ளது.தற்பொழுது தண்ணீர்இல்லை.அகத்தியமகரிஷி உருவாக்கிய குளம்,மிக பழமைவாய்ந்தது.( மேலும் ஸ்தலவரலாறு,இக்கோவில் பற்றிய தகவல்கள் பல அன்பர்கள் இணையதலத்தில் கட்டுரையாக கொடுத்துள்ளார்கள்.படித்து பயன்பெறுக.!)உள்ளே சென்று சுயம்பு ஸ்ரீ அகத்தீஸ்வர லிங்கத்தை வணங்கினோம்.அர்ச்சகர் தந்த பிரசாதத்தை வாங்கி,நெற்றியில் இட்டு,அருகே உள்ள ஸ்ரீஆனந்தவல்லி அம்பாளையும் வணங்கினோம்.வெறும் கண்களால் பார்க்க ,சூட்சும நிகழ்வில் வந்தது போன்ற ஒரு தோற்றமும் இல்லை.முற்றிலும் மாறுபட்டுள்ளது.ஒரு வேலை இந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு பார்க்கலாம் என ஆழ்ந்து செல்ல, அப்படியே கச்சிதமாக சூட்சும நிகழ்வும் ,இப்போதும் யாம் பார்க்கும் சிவனும் அம்பாளும்  பொருந்துகிறது.என்ன ஒரு அற்புதம்.!!எம் தந்தை உணர்த்தியது இது தான் என்பது தெள்ளத்தெளிவாகிறது.தந்தையை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.!!அதே கஸ்தூரி மலர்கள் சூழ அம்பாளும் சிவமும் காட்சிதருகிறார்கள்.யாராரோ சூட்சுமரூபத்தில் வந்துசெல்கிறார்கள்.வருவதும் செல்வதுமாக இருக்கிறது.அருகில் இருக்கும் எம்மையும் சிலரையும் உரசிய வண்ணம் ஒரு சூட்சும தேகம் செல்கிறது.
பொருள் தேடும் வாழ்வில் எம்மை இணைத்ததால் எமது சூட்சும தேகம் வலுவிழந்து,கிட்டதட்ட அடிபட்டு ,தட்டுதடுமாறும் நிலையில் தான் இருந்திருக்கிறது இது வரை, என்பதை இங்குவந்து தான் உணர்ந்தோம்.ஆனால் கோவிலின் உட்செல்ல ,மேலும் அம்பாள் அருகில் செல்ல செல்ல,எமது சூட்சும உடல்,உப்பி வலுப்பெறுகிறது.சிதிலம் அடைந்த செல்கள் எல்லாம் ஆற்றலை அவை தாமே புதுப்பித்துக்கொண்டும்,இங்குமெங்கும் துள்ளிக்குதிக்கிறது.அம்பாளின் அருகிலே அந்த கோவில் கருவறையிலிருந்து ஒரு பத்தடி வரை ஒரு வித வெப்பம் இருக்கிறது.நெருப்பின் அருகில் இருந்தால் எவ்வாறு இருக்குமோ அவ்வாறு ஒரு வித தணல் ஆற்றலை, வெப்ப ஆற்றலை சூட்சும தேகம் உணர்கிறது.இப்பொழுது முன்மைவிட முற்றிலும் வலுப்பெறுகிறது.உடம்பெல்லாம் பூரிக்கிறது.யார் வேண்டுமானாலும் இவற்றை உணரலாம்.
அம்பாள் ஒரு சத்துரு சம்ஹாரி ,எதிரியை துவம்சம் செய்பவள்.அவளின் உக்கிரம் இன்றும் உணரமுடிகிறது.தக தக வென எழும் அக்னி அலை.எப்படிப்பட்ட துர்சக்தியாயினும் தாயவள் பாதம் பணிய ,இருக்கும் இடம்தெரியாமல் ஓடிவிடும்.அந்த அளவுக்கு
மிக அதீத உக்கிர ஆற்றல் அலைகள்.வளம் அளிக்கும் அலைகள் . அம்பாளின் அருகில் வரும் அனைவருக்கும் இந்த தெய்வீக தணல் அலைகள் ,அம்பாளை வணங்கும் அவர் தம் சூட்சும தேகத்துள்  அது தானாகவே செல்கிறது என்பது முற்றிலும் யாம் உணர்ந்த உண்மை.தந்தை முன்னொரு காலத்தில் செய்த  பஞ்ச வேள்வியின்  ஆற்றலோ அல்லது அதன் தாக்கமோ யாம் அறியோம் ஆனால் இன்றும் இங்கே ஒரு விதஆற்றல் மிக்க அலைகள் இருக்கிறது.யாம் இதுவரை உணர்ந்த அலைகளுள் மிக அதிக ஆற்றல் பெற்ற அலைகளாகவும் பார்த்த ஸ்தலங்களுள் இது மிகஅதிக அதிர்வு ஆற்றல் கொண்டுள்ள ஸ்தலமாகவும் இருக்கிறது.கோள்கள் ஆட்சியால் துவண்டுபோனவர்கள்,புண்ணிய பற்றாக்குறையால் ஒரு சில நிகழ்வால் மனதில் ,வாழ்வில், பாதிக்கபட்டவர்கள், கண்டிப்பாக சிரமம் பாராது இங்கு வந்து இங்கே உள்ள இந்தஆற்றலை உணர உணர,அம்பாளின் அருளாலும் தந்தை அகத்திய மகரிஷி அருளாலும் ,வாழ்வில் உள்ள கர்மவினை தாக்கம் குறைந்து ,வாழ்வு வளமாகவும் ,அர்த்தமுள்ளதாகவும் விளங்கும் என்பது உண்மை.வெளிப்புறகாரத்தில் ஒரு வன்னி மரம் ,அருகிலே  இளம்வயது வில்வமரமும்,அதன் அருகிலே ஒரு வயதுமுதிர்ந்த அரசமரமும் இருக்கிறது.
வில்வம் பற்றி இப்பொழுது பார்ப்போம் ,அரசமரத்தை வேறொரு கட்டுரையில் விளக்குவோம்.  வில்வம் ஒரு கற்ப மூலிகை.அதாவது உடலுக்கு,செல்களுக்கு அமுதம் ஊட்டும் மூலிகைகளில் இதுவும் ஒன்று.உடலில் அடிபட்ட,சிதைந்த,செல்களைஎல்லாம் இந்த வில்வ இலையில் உள்ள மூலிகை ஆற்றல் புதுப்பிக்குமாம்.எனவே எந்த ஒரு சுரப்பியின் (Glands) தன்மை குறைபாடு என்பது அதில் உள்ள செல்களின் திறம் தான்.( பல்வேறு வியாதிகளுக்கு அடித்தளம் இங்கிருந்து தான்,உதாரணமாக இன்று வேகமாக பரவும் சர்க்கரை நோய்க்கு மிக முக்கிய காரணம்  ,கணைய சுரப்பியின் செயல் குறைபாடு,அதனால் அதில் சுரக்கும் இன்சுலின் பற்றாக்குறை.அதில் உள்ள செல்கள் ஒழுங்காக வேலை செய்யாதது etc)அங்குள்ள செல்கள் நன்றாக வேலை செய்யவேண்டுமாயின் அவை முதலில் சிதைவடையாமல் நல்ல ஆரோக்கியமாக இருத்தல் வேண்டும்.அதற்கு நன்கு உறுதுணை செய்யும் மூலிகைகளுள் இந்த வில்வமும் ஒன்று.எனவே இனி சிவன்கோவிலில் தரும் வில்வ பிரசாதத்தை ,அதன் மகத்துவம் உணர்ந்து நன்கு பயன்படுத்திக்கொள்வோம்.வில்வ இலைகளை தினந்தோறும் இரண்டு மூன்று இலைகளை,வெறும் வயிற்றில்   உண்ண,ஒரு ஆறுமாத காலத்தில்,மாற்றம் உண்டு என்பது உண்மை.வில்வம் பழம் ஒன்று எடுத்து பூமியில் நட்டால் ,அதாவது ஒரு தலைமுறைக்கு ஒரு அன்பர்  ஓரு வில்வ மரம் நட்டால் அது அவர்கள் வம்சம் முழுவதும் பயன்தரும் மேலும் அருகில் உள்ள அன்பர்கள் யாவரும் பயன்பெற்ற புண்ணியமும் வந்துசேரும்.

மேலும் ஒரு நிகழ்வில் விரைவில் சந்திக்கிறோம்,தந்தையின் ஆசிகளோடு !!!
ஒம் அகத்தீஸ்வராய நமக!!!
ஒம் அகத்தீஸ்வராய நமக!!!
ஒம் அகத்தீஸ்வராய நமக!!!


1 comment: