Sunday, December 14, 2014

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரால் ஜீவ சமாதி.!!அன்பின் வழி வந்தவர்கள்,அன்போடு இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள், இவர்கள் அருகில் இருந்தாலோ அல்லது அவர்கள் அருகில் நாம் சென்றாலோ அந்த கருணை அலைகள் நம்மையும் சூழ்ந்துகொள்ளும்.எங்கெங்கும் ஒரு வித அமைதி அலைகள் மொத்தமாக ஆக்கிரமிப்பு செய்துகொள்ளும்.அன்பு ஒரு கட்டத்திற்கு மேல் எல்லை இல்லாமல் செல்லும் போது இறைநிலை ஆகிறது.எல்லை இல்லா அன்பு இறைநிலை.அன்பில்  மட்டுமே அனைத்தும் தம் நிலை இழந்து கரைந்துவிடுகிறது.இருக்கும் இடம் தெரியாது  போய்விடுகிறது.எங்கெல்லாம் அன்பின் அலை தவழ்கிறதோ அங்கெல்லாம், இறை நிலை உள்ளது.தந்தை ஸ்ரீ அகத்திய மகான்  " அன்பு  என்றால் என்ன  ?  அதன் ஆழம் என்ன ..? "  என்று  எமக்கு சூட்சுமமாக உணர்த்திய பிறகே, ஒரு அலைகளின் அன்பு பசை எம்முள், எம் சூட்சும தேகத்தில் திணித்த பிறகே பல் வேறு மாற்றங்களை உணர்ந்தோம்.அன்பின் ஆற்றல் கண்டு வியந்தோம் பல முறை.((இது அன்பின் ஆழம்.... கட்டுரை வாசிக்கவும் )அன்பெனும் அதிர்வு குறைந்த மன நிலையில் இருக்க, பார்க்கும் எதுவும், கேட்கும் எதுவும், நடக்கும் நிகழ்வு எதுவும், ஒரு சுகமான ஆனந்தமே.!

எமது வாழ்வில்  அன்புநிறைந்த பல்வேறு ஆத்மாக்களை சந்தித்திருக்கின்றேன், அதில் ஓர் ஆத்மா மெல்லிய தேகத்துடன்,வெண்ணிற தாடியுடன், இறைஅலை சூழ்ந்த கண்ணால் எமை பார்க்க பளிச்சென்று எம் எண்ணத்தில் உதித்தது, அதன் விளைவே இக்கட்டுரை. சாதாரண மன அலைசுழலுக்கு சற்று கீழே ஒரு layer கீழே இறங்கி, அன்போடு இருக்க பழக அலைகள் சிறிது சிறிதாக சூழ்ந்து, பிறகு முற்றிலும் அன்பாக மாற்றிவிடும்.இருக்கும் இடம்முழுவதும்ஆனந்த அலைகள் சூழ்ந்து விடும்.


நகர வாழ்வில் தம்மை இனைத்துக்கொண்டவர்களுக்கு ஒரு நீண்ட தூர பயணம் ஒரு சில மாற்றங்களை தரும் என்பது  உண்மையே. அதுவும்  அமைதி தேடி சித்தர்களையும்  மாகான்களையும் தேடிய பயணம் ஒரு நிறைவை தரும் என்பதும், கர்ம வினையின் தாக்கங்களை வேரறுக்க உதவும் என்பதும் உண்மையே.

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரால் அவர்களுக்கு இளமையிலேயே இறைநாட்டம் அதிகம் இருந்திருக்கிறது .ஒரு முறை தம் மனதால் இறைநிலையை நினைத்தால் அவருக்கு நூறுமடங்கு  இறைசக்தியைஈர்க்கும் தன்மை இயற்கையிலேயே இருந்திருக்கிறது.ஏனெனில் மகான் அவர்களின் பிறப்பு மிக புனிதமானது. அய்யாவின் பெற்றோர்கள் கோடி முறைக்கு மேல் ஸ்ரீராமநாமம் சொல்லி, அருந்தவத்தால், இறைவன் அருளிய  இந்த திருக்குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார்கள்.மகான் அவர்களின் வரலாறு படிக்கும் போது ஒருவித தெய்வீகமும் ,ஈர்ப்பும் நம்மை கவர்கிறது.

  • வேத சாஸ்திரங்கள் பயின்று, இளமையிலேயே ஞானம் ஒளிர்விட, இவரை யாரும் வெல்ல இயலவில்லை." ஊர் வாயை எல்லாம் அடக்குகிற நீ உன் வாய்க்கு எப்போது பூட்டுப் போடுவாய்? ..." என்ற குருவின் ஆனைக்கிணங்க ,அடுத்த கணமே ,மௌனமாய், பரப்பிரம்மாக தம்மை மறந்து  பல காலம் ,இறைநிலையை எண்ணி ,அதில் மூழ்கி சுற்றித்திரிந்திருக்கிறார்கள்.

  • இறை நிலையிலேயே இருந்ததால் ,எப்பொழுதுமே ஆடைகளின்றி சதா பிரம்மத்தை எண்ணியே உலாவருவார்கள்.மாபெரும் மாளிகையும் ஒன்றுதான் மண்குடிசையும் ஒன்றுதான் .எல்லாம் இறையே ,எல்லாம் பிரம்மமே ! தாம்  செல்லும் வழியில் எதேச்சையாக  ,ஒரு மன்னனின் அவையில் நுழைய , அவனோ எப்படி இவ்வாறு ஆடையின்றி இங்கு வரலாம் என  அந்த மன்னன் இவர் கைகளை தம் வாளால் வெட்டிவீழ்த்த ,சிறு சப்தமுமின்றி,ஏதும் நிகழாதது போல அவர் தாம் போக்கில் செல்ல,மன்னனோ தம் அறியாமையை எண்ணி மகானின் கைகளை சுமந்துகொண்டு வெகு தூரம் சென்ற, மகானின் கால்களில் வணங்கி ,தம் பிழையை மன்னியுங்கள் என்று மன்றாட ,அப்பொழுதும் ஒன்றும் நிகழாதது போல கைகளை லேசாக தடவ ,அது மீண்டும் பழையநிலைமைக்கு மாறியிருக்கிறது.

  • ஒரு முறை விறகு வெட்டும் மூடர்கள், சும்மாதானே இவன் சுற்றிதிரிகிறான்  என்று மகானின் தலையில் ஒரு கட்டு விறகை தலையில் சுமக்க வைக்க ,மகானும் சுமந்து வந்து அவர்கள் சொன்ன இடத்தில் போட ,போட்ட உடனே அந்த விறகுமண்டலமே தீப்பற்றி விட்டதாம்.

  • தாம் செல்லும் இறைபயணத்தில் தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் அமைய  காரணமான,அங்குள்ள ஒரு புற்றினை அடையாளம் காட்டி,அங்கே அம்பாள் எழுந்தருளியிருப்பதை மன்னனுக்கும்,மக்களுக்கும் அடையாளம் காட்டியவரும் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரால் அவர்களே. 

  • சதா பிரம்மத்தை எப்பொழுதும் நினைவுகொண்டு வெகுகாலம் தம்மை மறந்து  ஓரிடத்தில் தவமிருக்க, பிறகு ஒரு காலத்தில் காவேரி பெருக்கெடுத்து கரைபுரண்டு மண்ணால்,  தாம் தவமிருந்த இடத்தையும் தம்மையும் மூட, அதன்பிறகு ஒரு சில ஆண்டுகழித்து ,ஆற்றில் மணல் எடுக்க வந்தவர்கள் ஓரிடத்தில் மண்வெட்ட, அங்கே ரத்தம் பீரிட்டு எழ, பதறிபோய் உள்ளே மெதுவாக தோண்டி எடுக்க, தவகோலத்தில் மகான் கண்டு அனைவரும் பிரமிக்க,ஆனால் மகானோ நினைவு வந்து ,எதுவும் நிகழாதது போல சட்டென எழுந்து நடந்துவிட்டார்களாம்.

  • அங்கு விளையாடிய சிறுவர்கள் கோரிக்கைக்கினங்க, கரூரிலிருந்து மதுரைக்கு அவர்கள் யாவரையும் நொடிப்பொழுதில்  வானவெளியில்அழைத்துசென்று, திருவிழாவை காணவைத்து,இனிப்பு மிட்டாய்ய எல்லாம் வாங்கிகொடுத்து, மீண்டும் அவர்களை கரூரில் இறக்கிவிட்டிருக்கிறார்கள்.

  • திருப்பதி வேங்கடாஜலபதிக்கு சமமான தரிசனம் பெற கரூரிலே, தான்தோன்றி மலையப்பர் எனும் கோவிலை தேர்ந்தெடுத்து, அங்கே ஜனஆகர்ஷன சக்கரம் ஒன்றினை பிரதிஸ்டை செய்துள்ளார்கள்.இன்றும் மக்கள் திருப்பதி செல்ல இயலாதவர்கள் இங்கு சென்று தரிசனம் செய்து பயன்பெறுகிறார்கள்.ஒரு மிக சிறிய பாறையில் பெருமாளின் தரிசனம், இன்றும் அந்த ஆகர்ஷன சக்கர இறைஅலைகளை உணரலாம்.

  • பிரம்மம் ஒன்றே எனும் நினைவு,சதா சர்வ காலமும் இறைஅலைகளிலே மூழ்கியதால்,பல சித்துகளும் பெற்று,தம்மை நாடி வரும் அன்பர்களுக்கு பல்வேறு குறைகளை , பல மக்களின் நோய்களை ,தம் பார்வையாலே குணப்படுத்தியிருக்கிறார்கள்.பல்வேறு ஸ்லோகங்களை உருவாக்கிகொடுத்திருக்கிறார்கள்.இப்படி அய்யாவின் வாழ்கை வரலாறு பிரமிக்கவைக்கும் வகையில் விரிகிறது.நன்கு விரிவாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.


காவேரி ஆறு சென்ற இடமெல்லாம் செழுமையாக இருக்கிறது.திருச்சியிலிருந்து  கரூர் இரண்டுமணிநேர பயணம், பிறகு அங்கிருந்து  20  நிமிட பயணம் நெரூர். ஒரு சிறிய கிராமமே. கிராமத்தின் எல்லையில் இருக்கும் ஜீவசமாதியை நோக்கி பயணிக்க, வெகு தொலைவிலே ஒரு இனம் புரியாத ஈர்ப்பு அலைகள் நம்மை சூழ்ந்துகொள்ளும். ஆஹா இந்த இடம் எவ்வளவு அமைதியாக உள்ளது ? இந்த குளுமைக்கும் செழுமைக்கும் காரணம் என்ன ?  எவ்வாறு இங்குமட்டும் தாவரங்களும் மரங்களும் செழித்து, கொழித்து,  வளர்ந்து ,இருக்கும் இடமெங்கும் நல்ல நிழல் பரப்பி அமைதியை நிலை நாட்டுகிறது...? என சிந்திக்க உண்மை புலப்படும்.மகான்கள் இருக்கும் இடமெங்கும் நல்ல நீரோட்டத்திற்கும்,செழுமைக்கும் குறைவிருக்காது அல்லவா .வெகு அருகிலே காவேரி ஆறு  ஓடுகிறது.ஆக இயற்கை எழில் சூழ அமைத்துள்ளது ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரால் ஜீவ சமாதி.

 பொதுவாக  அருள் அலை நிறைந்த இடங்களுக்கு செல்லும் போது தேவையானால் கால்வயிறு உணவு, அப்படி இயலாதவர்கள் அரைவயிறு உணவுடன் மட்டுமே செல்வது சிறந்தது. வயிறு முட்ட உணவு உண்டு செல்வதற்கு பதில் பேசாமல் வீட்டிலேயே இருந்துவிடலாம். ஆக்கத்துறையிலேயே எண்ணத்தை செலுத்துபவனுக்கும், மனதை வீணே சிதறடிக்காமல், முடிந்தவரை தேவைஇல்லாத கற்பனையும் தவிர்ப்பவனுக்கும், மனதில், எண்ணத்தில் ஆற்றல் மேலும் மேலும் சேமிக்கப்படுகிறது.இந்த சேமிப்பு மனதிற்கு ஒரு நல்ல ஸ்திரத்தன்மையை கொடுக்கிறது.ஒரு சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு தானே ,இந்த வயல்வெளிகளில் தானே ,சதாசிவ பிரம்மம்  என்றும் தம்மை இறையோடு இணைத்துக்கொண்டு,ஸ்தூல உடம்போடு  ,எதுவும் அற்று ,இறை நிலை ஒன்றே மட்டும் நினைவில் வைத்து ,இதோ இந்த  இடங்களில் தானே,வளம்வந்திருப்பார்கள்.ஆண்டுகள் பல நூறு கடந்தாலும் ,சதாசிவ பிரம்ம எண்ணம்,இதோ இந்த வெளியில்,இங்குள்ள பல நூறு ஆண்டு வயதுள்ள ,கல்லில் ,மண்ணில் ,மரத்தில், அய்யா அவர்களின் ஆற்றல் பதிந்திருக்குமல்லவா....அதிர்வு குறைந்த மன நிலையில் சென்றால் இவைகளை உணரமுடியுமல்லவா ...? ஆம் உண்மை.காவிவண்ணத்தில் வண்ணம் தீட்டப்பட்ட ஆலயம்.நாவல் மரம் ,அரசமரம்,தென்னைமரம்,ஆலமரம்,நாகலிங்க மரம் ,வில்வமரம்  போன்ற பல மரங்கள்  நிழல் சூழ கோவில் அமைந்துள்ளது.கோவிலின் நுழைவாயிலில் ஒரு சிறிய கிணறு .கையை எட்டி நீர் எடுக்கும் அளவுக்கு நீர் வளம் நிறைந்துள்ளது.ஒரு சிவன் கோவில் அதில் காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு லிங்கம்  பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது,அதற்கு அருகிலே ஒரு பத்தடி தூரத்தில் அய்யாவின்  ஜீவசமாதி. அதன் மேல் ஒரு வில்வமரம் ,மிக வயது முதிர்ந்த மரம்.கிட்டதட்ட குறைந்தது ஒரு 200 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் அதன் வயது, ஆகவே இப்பொழுது அதன் அடி பாகம் மட்டுமே இருக்கிறது.அதனை சுற்றிலும் ஒரு திண்டு போன்று கட்டியுள்ளார்கள்.சாதரணமாகவே கோவில் ஒரு  வித அமைதியிலே இருக்கிறது.இங்கே ஜீவ சமாதியிலே இன்னும் ஆழ்ந்த அமைதி தென்படுகிறது. அருகினில் செல்லும் போதே பேசாமல் வாயை மூடி இருக்கவே தோன்றுகிறது.கருமையான  வண்ணத்தில் ஐயாவின் தேகத்தை ஒரு குத்துமதிப்பாக  அருகில் உள்ள சுவரிலே வரைந்துள்ளார்கள்.அமைதியில் மனம் திளைக்கிறது.ஆழ்ந்த அமைதி நோக்கி இழுக்கிறது .பேரமைதி நோக்கியே செல்கிறது.கிட்டத்தட்ட ஒரு இரண்டு மணிநேரம் இருந்திருக்கும் ,என்ன நடந்தது என்றே தெரியவில்லை.உயிரில் என்ன மாற்றம் நடந்தது ,சற்று முன்னர் தான் அமர்ந்தது போல இருந்தது.இவ்வளவு மணிநேரம் எப்படி சென்றது என தெரியவில்லை.

மிகப்பெரும் ஒரு ஜீவ காந்தபுயல்  ,எம்மை எமது உயிரை,எமது சூட்சும உடலை  எங்கோ இழுத்துச்செல்கிறது.ஒரு ஆரம்பமும் முடிவும் இல்லையெனில் ,நடுவில் நடப்பதை எப்படி கணிக்க முடியும் ,எவ்வாறு ஆரம்பித்தது என்று தெரிந்தால் தானே அதனை பற்றிய நிகழ்வுகளை ,மாற்றங்களை உணரமுடியும்.எங்கோ ஆழ்ந்த அமைதி ,எங்கு இருக்கிறோம்,இனி என்ன செய்யபோகிறோம் எதுவும் கணிப்பதர்க்கில்லை.ஏதோ ஒன்று,கருமை சூழ்ந்த ,அல்லது எதுவும் அற்ற  வெளி, அந்தரம் என்று  சொல்ல இயலுமோ ?! ,எங்கோ ஏதோ ஒன்றின் பயணத்தில் எம்மை இணைத்தது போல தான்  இருந்தது.அங்கே எதுவும் தேவை இல்லை .யாரும் தம்மை இணைத்துக்கொள்ளலாம்.ஒரு முறை இணைத்துவிட்டால் எத்தனை காலம் ,நேரம் சென்றாலும்,இருந்த நிலை மாறாது அப்படியே இருக்க இயலும்..இங்கு மட்டும் தான் மாற்றம்  என்பதே கிடையாது.மாற்றம் இருந்தால் தானே  இன்பம் ,துன்பம்,ஆசை, தேவை போன்றதெல்லாம்.எந்த தேவையும் இல்லை.அமைதியின் விளிம்பு.சும்மா இருப்பது  எத்தனை சுகம் என்பது இங்கே தான்.வாழும் இந்த பூமி ஏதோ ஒரு சிறிய புள்ளிபோல இந்த பிரபஞ்சத்தில் சுழல்கிறது.ஆனால்இந்த பிரபஞ்சமோ எதுவும் இன்றி ,இங்குள்ள எதுவும் அற்ற வெளியில் மூழ்கி இருக்கும் சுவடு தெரியாது கரைந்துவிடுகிறது.


இங்கே சும்மா இருத்தல் எத்தனை ஆற்றல் உள்ளது. எடை அற்ற உயிர் எவ்வளவு ஆற்றலை இழுத்துக்கொள்கிறது தெரியுமா ?இங்கே இருக்க இருக்க ஒரு ஜீவ ஒளி ஒன்று சூழ்கிறது.இறைஅலைகளால் உயிர் நிறைகிறது.விளைவு ,அதனோடு தொடர்பு கொண்ட மனம் , ஒரு நிறைவோடு இருக்க விளைகிறது.சாந்தம் ,தெளிவு ,அமைதி,கருணை இவை எல்லாம் இங்கே தான் பிறக்கிறது. இம்மி அளவும் அசைவில்லாது , இறை அலைகளால் அடித்து போட்டது போன்ற ஒரு பயணம். ஒரு காரிருள் கொண்டஇறைவெளி பயணம் ,தந்தை ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரால் அய்யா அவர்களின் கருணையால் கிடைத்தது.அன்புள்ளம் கொண்ட மகான் ,சும்மா இருத்தல் எத்தனை சுகம் என்பதை  எமக்கும் உணர்த்திய மகான்.இதயம் நிறைந்த நன்றி அலைகளுடன்,கண்ணீர்மல்கி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து,ஒருவாறு எழுந்து சிறிது தூரம் நடந்தேன். உடல் விடைபெற்று கோவில்வெளியே வந்தாலும் .உள்ளம் மட்டும் அய்யாவின் கருணையை, ஆற்றல்களை பிரமிப்பூட்டும் அந்த பயணத்தை, அது எம்முள் ஏற்படுத்திய ஜீவ உயிர்மாற்ற நிகழ்வுகளை  எண்ணிக்கொண்டேஇருந்தது  வெகுநேரம்.

பௌர்ணமி நாட்களில்  வெகு சிறப்பாக  பூஜை நடைபெறுகிறது .மக்கள் அதிகம் வருகிறார்கள்.மற்ற நாட்கள் கூட்டமின்றி உள்ளது.ஒரு முறை வாய்ப்புகிடைக்கும் போது சென்றுவாருங்கள்.மகானின் அருள்ஆசி பெறுங்கள்.அகத்திய உள்ளங்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டு,வரும் காலம்  இறைஅலைகளும் மகான்கள் அருள்அலைகளும்  அகத்திய  உள்ளங்களை  என்றென்றும் நிரப்பட்டும் என வாழ்த்தி, காலம் வழிவிட விரைவில் மற்றுமொரு நிகழ்வில் மீண்டும் சந்திக்கின்றேன்...

ஒம் அகத்தீஸ்வராய நமக !
ஒம் அகத்தீஸ்வராய நமக !
ஒம் அகத்தீஸ்வராய நமக !


No comments:

Post a Comment