Saturday, May 31, 2014

மெல்லிய அலைகளை தேடி...!!!அகத்திய உள்ளங்களை ஒரு சிறிய இடைவெளிக்குபின் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சிகொள்கிறேன்.கால தாமதத்திற்கு வருந்துகிறேன்.நிறைய கடிதங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.பொதுவாக அடுத்து அடுத்து விரைவாக கட்டுரைகளை எழுதுங்கள் என்ற வேண்டுகோள்.மாதம் ஒரு கட்டுரையாவது அகத்தியத்தில் வெளியிட முயற்சிசெய்கிறேன்.எல்லாம் இறைவன் சித்தம் ..!!

வேலை தேடி அலையும் மக்கள் ஒரு புறம்,பொருள் தேடும் மக்கள் ஒரு புறம். இனி வரும் காலமெல்லாம் Data analytical world .எந்த தொழிலை எப்படி செய்வது ? அதன் பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு ? இதற்கெல்லாம்  எல்லா முடிவுகளுமே ஏற்கனவே எடுத்தாகிவிட்டது.ஆக  80%  முடிகள் மற்றவர்கள் எப்படி எடுக்கிறார்கள் என்று அவர்களை போல முடிவுகளை எடுத்தும், 20% முடிவுகளை மட்டுமே  சுயமாக எடுத்துக்கொண்டும் வாழ்கை நடத்தும் மக்கள் ஒரு புறம்,இப்படி இது போல இன்னும் பல வழிகளில் இந்த பொருள் தேடும் உலகம் எப்பொழுதும் busyயாக ஓடிக்கொண்டிருகிறது.இது என்றும் இப்படிதான் ...!!

அருள் தேடும் உலகம் செல்வோம்...வாருங்கள்..!ஒன்றுமில்லா ஒன்றிலிருந்து ஒன்று உருவாகி,ஒன்று பலவாகி,ஒன்றில் ஒன்று கலந்து, ஒன்று மற்றதாகி,,ஒன்றில் இந்த ஒன்று பல்வேறு மாற்றங்களை உருவாக்கி,ஒன்றும் இல்லாமல் போகி,முடிவில் ஒன்று ஒன்றாகவே மாறும் நிலை.


 என்ன ஏதாவது புரிந்துகொள்ள முடிகிறதா.....? ஒன்றுமே இல்லாதவன்  இறைவன்,சூன்யமானவன் தமக்கென எதையுமே வைத்துக்கொள்ளாதவன்,இவனை இவனே அறியும் பயணத்தில் ,இவனே அணு முதல் அண்ட சராசரமாகி ,பல கோடி உயிர்களை படைத்து,அதில் ஒன்றாகிய மனிதனையும் படைத்தது ,மனம் என்ற ஒன்றை வைத்து ,அதில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி,இன்னல் முதல் இன்பம் வரை பெறவைத்து,பின்பு தம்மையே தாம்  எண்ணும் போது,தாமே அதில் கரைந்து,ஒரு முழுமையை ,ஒரு நிறைவை கொடுத்து,அன்பினால் திளைக்க வைத்து ,பிறகு இவனே இவனில் கலந்துவிடும் தன்மை.பார்க்கும் எந்த ஒரு பொருளுக்கும் ,எந்த ஒரு உயிருக்கும் ,இது ஒரு தற்காலிக கட்டமே ,இது விரைவில் கரைந்து போக போகிறது.இங்கே இதை மறந்து,இன்றுள்ள இன்னல்களில்,நிகழ்வுகளில் தம்மை வியாபித்து, நிரந்தரமற்ற ஒரு நிகழ்வுகளை ,எண்ணி எண்ணியே, நம் ஆற்றலை ,ஆகர்ஷன சக்தியை விரயம் செய்து,வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.முழுமையை நோக்கி, இறைநிலையை நோக்கி,எவ்விதமேனும்  எண்ணத்தை செலுத்த,ஆற்றல் அதிகமாகி,அன்பின் தன்மை அதிகமாகி,உள்ளமெங்கும் அமைதி சூழ்ந்து,வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிவிடும்.

ஒரு சாத்வீக அன்பர் எம்மிடம் ஒரு கேள்வியை வைத்தார் .ஒரு கூட்டம் நிறைந்த இடங்களுக்கு சென்று வரும்  போதெல்லாம்  ஒரு கோப உணர்வு அல்லது ஒரு வெறுப்பு உணர்வு வருகிறதே   ஏன் என்றார் ?

 மனம் என்ன காயலாங்கடையா ? கண்டதை ஏற்றுக்கொள்ள ?எதை  உள்ளே வைத்திருக்கவேண்டும் , என்ன  உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும்  என்பதை நாம் தானே  தீர்மானிக்க வேண்டும் ? .ஆற்றில் குளிக்கச்செல்பவன் ,குளித்த வேலை  முடிந்தவுடன் கரை ஏறி விடவேண்டும் .இல்லை  என்றால் ஆறு இழுத்துக்கொண்டு`சென்றுவிடும்,பிறகு ஆறு  எங்கெல்லாம் போகிறதோ அங்கெல்லாம் செல்லவேண்டிய நிலை வந்துவிடும். காரணம் நாம் தானே ?.எந்த அலைகளை ஏற்றுக்கொள்கிறோம் என்பதை தீர்மானிக்கவேண்டியது நாமே?

விரும்பி ஏற்றுக்கொண்டால்  விளைவுகளையும் அனுபவித்தே ஆகவேண்டும்.ஒரு மனிதரை பார்க்கிறோம் என்றால் கண்ணிற்கு தெரிவது அவரது பூத உடல் மட்டுமே.ஆனால் அவரை சுற்றி அவரது  நுண்ணுடல் ,காரணஉடல்,காரீய உடல்,காந்தஉடல்,சூட்சும உடல் போன்ற பல்வேறு உடல்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து ,கர்ம வினையின் பதிவிர்கேற்ப கலந்துள்ளது.இவை எல்லாம் சேர்ந்த கலவையாக அவரிடமிருந்து வரும் அலைகள், அவரின்  குணநலன்களை  அப்படியே வெளிப்படுத்திவிடுகிறது.இவரிடம் interact  செய்யும் போது ,இருவரின் அலைகளும் இடைவெளி எங்குள்ளதோ அங்கே அது இயல்பாகவே புகுந்துவிடுகிறது.பிறகு அதன் தன்மையை  ஒன்று மற்றொரு உடலில் அப்படியே பிரதிபளிக்க முயற்சி செய்கிறது.விளைவு conflict .தாருமான அமைதியற்ற  அலைகள்.இயல்பாக இருந்த அலையில் தேவையற்ற மாறுபட்ட அதிர்வு அலைகள் புகுந்து உள்ளே இருக்கும் கொஞ்சநெஞ்ச நல்ல அலைகளை வெளியேற்றி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி விடுகிறது.


 இது  போன்ற அலைகளை ஏற்றுகொள்ளாமல் இருப்பதே நல்லது.வாழ்வியலில் ஈடுபடுவதால் மற்றவரோடு interact செய்யாமல் இருக்கமுடியாது. குறிப்பாக அளவோடு ,தேவை என்னவோ அதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும்.இல்லை எனில் இவை மனதினை ஆட்டிப்படைக்கும்.விரும்பி ஏற்றுக்கொள்ளும் அலைகள் ஒன்று மகான்களின் ஜீவசமாதி. மற்றொன்று  பழமைவாய்ந்த கோவில்கருவரையிலிருந்து எழும் அலைகள்.அன்போடு இங்கே உள்ள அலைகளை பிரித்துணர்ந்து ஏற்றுக்கொள்ளவேண்டும் .இங்கே அமைதி கொட்டிக்கிடக்கிறது.அமைதியை இந்த அலைகள் அப்படியே அள்ளி தாரைவார்க்கிறது.இது தரும் மகிழ்ச்சி,நிறைவு,ஆனந்தம் , பேரின்பம்,வேறெதிலும் இல்லை.வாழ்கையின் தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு தீர்வு இங்கே உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.


எதை உள்ளே வைக்கிறோம் என்பதை பொறுத்தே மனதின் அமைதி மற்றும் நிம்மதி.மகான்கள் எல்லாம் எதையும் உள்ளே வைப்பதில்லை, இறைநிலை ஒன்றை தவிர .உணவு கூட ஒரு வேலை மட்டுமே, உண்டு வாழ்ந்தார்கள்.ஏனெனில் உணவின் வழியாக இந்த கோள்கள் தன் வேலையை காண்பித்துவிடும் .தூய மெல்லிய சூட்சும அலைகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது .ஸ்தூல உடம்பே ஒரு சிக்கல் ,ஒரு பாவம் .எல்லாம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டது .ஆனால் சூட்சும உடம்போ எல்லையற்றது.பொருள் உலகத்தை துச்சமென மதித்தனர் .யாவற்றையும் மறந்து அன்பாகிய இறைநிலையிலேயே வெகுகாலம் இருந்தனர் ,இன்றும் இருக்கின்றார்கள்.


ஒரு முறை ஒரு மாபெரும் மனிதரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.அவரை சுற்றி எப்பொழுதும் ஒரு கூட்டம்.பல ஆண்டுகாலம் தவம் செய்து ,மனதை எப்பொழுதுமே மிக நுண்ணிய அலை நீளத்தில் வைத்திருந்தார்.மனம் மிக நுண்ணிய அலைநீளத்தில் இருந்ததால் ,மனதின் வழியே விரயமாகும் ஆற்றல் நன்கு உடலிலே சேமிக்கப்பட்டு, மின்னிடும் பொன்னிற உடல், தக தக வென்று மின்னியது. பளிச்சென்ற வெண்ணிற தாடி, உடலெங்கும் காந்தஅலைகள் ,ஒரு பெரிய புயல் போல் காந்த அலைகள்,அந்த அளவுக்கு தன் சாதாரண மனித உடலில், தன் தவ சக்தியால் தன்னை ஒரு மாபெரும் இறை சக்தியில் எப்பொழுதும் இணைத்திருந்தார். அவர் இருக்கும் இடம் முழுவதும் வெண்ணிற காந்த அலைகளால் எப்பொழுதும் சூழ்ந்திருந்தது.இறைநிலையிலேயே இருந்ததால் அன்பின்  வடிவமாகவே  திகழ்ந்தார்.

ஆனால் அவரை பார்க்க வந்த அன்பர்களோ  முற்றிலும் வேறுபட்ட அலைநீளத்தில் ,ஆக தங்களுக்கு  தெரிந்தவரையில் ஒரு மாறுபட்ட கருத்துகளையும் கேள்விகளையும் எழுப்பி ,அங்கே அந்த மாமனிதரின் காந்த அலைகளை எப்படி பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று தெரியாமல் ,முடிந்த வரையில்  துவம்சமே  செய்தனர் .அனால் அந்த பெரியவரோ ஒரு மாபெரும் இறைவடிவம் ,இந்த மாறுபட்ட அலைகளையெல்லாம்  மிக எளிதாக தனக்கே உரித்தான  இறை அலைகளின் குணத்தால் ,அன்பெனும் தன்மையால் ,கொஞ்சம் கூட அன்பின் தன்மை மாறாமல் ,மிக அழகாக பதிலளித்துக்கொண்டிருந்தார்.

மாறுபட்ட மனிதர்களும் இறை அலைகளே ,இங்கே அன்றாட வாழ்வியல் நிகழ்வுக்காக தனது இறையாற்றல்களை ஒரு குறுகிய அலைவடிவில் மாற்றம் செய்து துக்கம், துயரம், கோபம் ,காமம், கவலை போன்ற பல அலைகளாக  அறியாமையால் மாற்றம் செய்து தன்னையும் ,தன்னை சுற்றியுள்ள இடம் முழுவதும் நிரப்புகின்றனர்.இங்கே வருபவர்கள் இந்த சூட்சுமம் அறியாதவர்கள் இங்குள்ள அலை சூழலுக்கு கட்டாயப்படுத்தப்பட்டு, இந்த மாறுபட்ட அலைதன்மைகளை சுமந்தே செல்கின்றனர்.

அந்த பெரியவரை நோக்கி சற்று ஆழ்ந்து கவனித்தேன் .என்ன ஒரு  அற்புத அலைகள் ..! அங்கிருந்துவரும் காந்த அலைகள் ஒரு Powerful tablet. அந்த காந்த அலைகள் என்னுள் ஊடறுவி எம் மூலையில் உள்ள செல்களின் அறையின் கதவுகளை தட்டித்திறந்து என்னை சிந்திக்க வைத்தது .சிந்திக்கும் தன்மையை அந்த பெரியவரின் அலைகள் எங்கெங்கும் பரப்புகிறது .முதல் முறையாக மற்றவரின்  அலை எம் சிந்தனை கதவை  திறக்கும்  அற்புதம்  கண்டு வியந்தேன்.இந்த மாமனிதரின் அலைகள் எத்தனை அழகாக எம் சிந்தனையை தூண்டிவிடுகிறது.இவர் இருக்கும் இடத்தில் எத்தனை ஆனந்தமாக உள்ளது.சற்று தூரம் தாண்டி சென்றால் அங்கே மிக சாதாரணமாக உள்ளது.எவ்வளவு வேறுபாடு உணர்கிறேன்..!!  இப்பொழுதுள்ள எம் மனதிற்கு எத்தனை திணிவு. எவ்வளவு நிறைவு ? எங்கிருந்து இந்த ஆற்றல் வந்தது ? காந்த அலைகளின் கூட்டம் ,இருக்கும் அன்பர்களுக்கெல்லாம் திணிக்கப்படுகிறது.சும்மா இருந்தவரெல்லாம் ,தன்னில் ஆற்றல் பெறப்பட்டு ,தம் மனம் வலுப்பெற்று ,திடம் பெரும் ஒரு தன்மை உணரவைக்கப்படுகிறது.

யாரிந்த மாமனிதர் என்கிறீர்களா ..? உலகமே வியந்த உண்மை தத்துவத்தை உணரவைத்த , அறிவியல் உலகமேஅறியாத மிக சிறிய  வேதான் எனும்  துகளினை கண்டறிந்த மகான்,உலகசமுதாய சேவா சங்கத்தினை உருவாக்கியர், வாழ்கவளமுடன் எனும் தாரக மந்திரத்தை அருளியவர்,அருள் தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.பூத உடலில் வாழும்  ஒரு மகானை சந்தித்ததில் மிகபெரும் மகிழ்ச்சிகொண்டேன்.இவரின்  பல்வேறு தவ விளக்கங்கள் ,ஆன்மீக சொற்பொழிவு  வாழ்க்கையில் மிக சிறந்த மாற்றங்களை உருவாக்கும் சக்திவாய்ந்தவை.உன்னதமானது .அதில்  யாம் கண்டு வியந்தது,மகரிஷி அவர்களின் காந்த தத்துவம்,பிரம்மஞான தத்துவம் ,துரியாதீத தவம் ,பஞ்சபூத நவக்கிரக தவம் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.இந்த மகான் தம் இருகைகளையும் தூக்கி வாழ்க வளமுடன் என்று ஆசிவழங்கினால் ,தம் அருகில் அங்கிருக்கும் மக்கள் அனைவருக்கும ,காந்த அலைகள் ,பளிச்சென்று அலைவடிவில்  நீந்திவந்து ,தத்தம் கைகளில்  இதமாக ஒரு  செல்ல தட்டு தட்டி, காந்த அலைகளை உணரவைக்கும் ஒரு அற்புதம்.மகரிஷி அவர்களின் பஞ்ச பூத நவக்கிரக தவம்,மிக சிறந்த தவம்.பொருளாதாரத்தில் ஒரு சமநிலையை உருவாக்கும் சக்திவாய்ந்தது.இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

 மகரிஷி அவர்கள் வாழ்ந்த காலகட்டங்களில் அவரோடு எமக்கு ஏற்பட்ட அனுபங்கள் ,நிகழ்வுகள், எம் வாழ்வில்  என்றும் மறக்க முடியாதவை.ஒரு அன்பின் மறு உருவாமாகவே திகழ்ந்தார்.எவர் பார்த்தாலும் அவர் தம் உள்ளத்தில் ஒரு ஈர்ப்பு ஏற்படும் .காரணம் உண்மையான அன்பு.அன்பாகிய இறைநிலையில் என்றும் இருந்தவர்.இவர் தம் எளிமை ,இவர் ஆற்றும் இறைபணி ,வள்ளலார் அவர்கள் மகரிஷி உடம்பில் புகுந்து வெகு காலம் இருந்ததாலும் ,கட்டிலடங்கா ஒரு ஈர்ப்பு தன்மை மகரிஷி அவர்களிடம்  எப்பொழுதுமே கொட்டிக்கிடந்தது.மேலும் எமது ஆன்மீக வாழ்கையில் பல்வேறு புதிர்களுக்கு மிக அருமையான விளங்கங்கள் தந்தார் , எமது உடலில் ,மனதில் மிக சிறந்த  பல மாற்றங்கள்,அனுபவங்கள் கிடைக்கப்பட்ட காலம்.எம்மை பொறுத்தவரை வாழ்கையில் ஒரு அறிவியல் பாடம்,மகரிஷி அவர்களின் தத்துவவிளக்கங்கள் மற்றும் தவங்கள்.

கீழேவருவது எமது தனிப்பட்ட அனுபவம் ,யாரும் எந்த முயற்சியிலும் ஈடுபடவேண்டாம் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்
ஒரு முறை கூடுவிட்டு கூடு பாயும் வித்தைக்கான பயிற்சிகளை பாடமாக சொல்லிக்கொடுத்தார்.இந்த பயிற்சி மட்டும் மகரிஷி அவர்கள்  தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் . வேறு யாரையும் மகரிஷி அவர்கள் அனுமதிக்க வில்லை.அதற்கென தனிப்பட்ட  விஷேச பயிற்சிகள்.சாதாரன உடலில் எப்படி காந்த ஆற்றலை பெருக்குவது எனும் பயிற்சி .இருக்கும் ஆற்றலை எவ்வாறு நன்கு வலுப்பெற வைப்பது ?.எவ்வாறு  அதனை பன்மடங்காக பெருக்கவைப்பது ?.எனும் ஒரு அற்புதமான பயிற்சி.அதனை  செய்ய சொல்லி ,உணவினை மிக கொஞ்சமாக எடுத்துக்கொள்ளுங்கள். அதிகாலை மணி நான்கிற்கு சந்திக்கிறேன் என்று  சொல்லி சென்றுவிட்டார்.
உடலிலே தம் தேவை போக (அதாவது ஐம்புலன் களின் செலவு போக ,கண்ணால் பார்ப்பது ,காதால் கேட்பது,நாவால் சுவைப்பது,ஸ்பரிஷத்தால் தொடுவது ,மூக்கால் சுவாசிப்பது இவை எல்லாமே செலவு தான்) குறைந்தது 70% காந்த ஆற்றல் (above the surplus) நன்கு சேமிக்கப்படவேண்டும் இல்லை எனில் இந்த வித்தை முழுமையடையாது.மகான்களுக்கெல்லாம் இது ஒரு பெரிய விசயமில்லை .ஏனெனில் அவர்கள் உடலில் எப்பொழுதுமே அதீத காந்த சக்தி இருக்கும்.அவர்களிடம் இந்த ஆற்றல் செலவு என்பதே வெகு அரிது.ஆக எங்கு செல்லவேண்டுமோ அங்கே நொடியில் சென்று வந்து,பல் வேறு நிகழ்வுகளை உலகமக்கள் நன்மைக்காக செய்துவந்தார்கள்.

எமக்கோ ஒரே ஆர்வம் ,இந்த உடலிலிருந்து எவ்வாறு உயிர் வெளிக்கிளம்புகிறது,அதன் அனுபவம் எப்படி இருக்கும் ? ஒரு புறம் இன்னும் வாழவேண்டிய வாழ்க்கை நிறைய உள்ளதே ,இதில் ஏதாவது பிசகினால் என்னவாகும் என அச்சம் வேறு ?மறுபுறம் எம்மை கூட்டிச்செல்பவர் மகரிஷி அவர்களே . மகரிஷியோ ஒரு மாபெரும் ஆற்றல் பெட்டகம்,ஒரு மிகப் பெரிய காந்த மலை,தாம் இருக்கும் இடமெங்கும் காந்த ஆற்றல்களை பரப்பிக்கொண்டிருப்பவர்.யாமோ ஒரு சிறு இரும்பு தூசி போல ,எதுவும் தனித்து எம்மால் செய்யஇயலாது ,எல்லாம் அந்த மிகப்பெரிய காந்தகடல் மகரிஷி அவர்களின் கட்டுபாட்டில்.

துளியும் பயமின்றி பயிற்சிக்கு தயார்செய்தேன்.மிக அற்புதமான பயிற்சி.உடலிலே மனதிலே காந்த ஆற்றல்  செறிவு நன்கு ஏற்பட்டது.ஒரு அளவிற்கு மேல் பயிற்சியினை செய்ய செய்ய,காந்தத்தை, காந்த அலைகளை  உண்டால்  எப்படி இருக்கும் அது போல ஆகிவிட்டது.உணவின் மீது கொஞ்சம்கூட நாட்டம் இல்லை. மனம்  வீட்டைபற்றிகூட நினைக்கவில்லை, ஆழியார்,மகரிஷி,அங்குள்ள இயற்கை எழில் மிகுஅருவி சத்தம் ,இவை தான் ,இதை விட்டு வேறெங்கும் செல்லவில்லை.மனமோ திடமானது,மிக வலுப்பெற்றது .சும்மாகிடந்த மனதில் ,உடலில் , காந்த ஆற்றல் நன்கு திணிக்கப்பட்டதால் ,எதையாவது  அசாத்திய நிகழ்வுகளை செய்தால் என்ன என்று தோணியது.சூட்சுமபயணத்திற்கு தகுதியினை நெருங்கிகொண்டிருக்கிறேன் என்றே தெரிந்தது.நேரம் சென்றதே தெரியவில்லை..ஒரிடத்தில் அமர்ந்து ,பிறகு அங்கேயே படுத்துவிட்டேன்.இரவு சென்றதே தெரியவில்லை.அதிகாலை மணி நான்கு.சொன்னது போலவே மகரிஷி அவர்கள் சரியாக வந்துவிட்டார்கள்.

கால்களை நீட்டி ,கைகளைஅருகில் வைத்து ,மேல் நோக்கி படுக்க ,மகரிஷி அவர்கள் தம் கைகளை அப்படி ஒரு சிறு அசைவு அசைக்க ,அங்கிருந்த அத்தனை உயிர்களும் ,அப்படியே  கொத்தாக மகரிஷி அவர்களின் கைகளில்.ஏதோ செடிகளை கொஞ்சம் கொத்தாக ஒரு கையில் பிடுங்கினால் எப்படி இருக்கும் அப்படி ,ஒரே அசைவில்அங்குள்ள அத்தனை சூட்சும உடம்பும் ,மகரிஷியின் கட்டுப்பாட்டில்.இவை எல்லாம் மகான்களுக்கு மட்டுமே  சாத்தியம் எனத்தெரிகிறது.எமது உடம்பு கீழே இருப்பதையும் உணர்கிறேன்,அதே சமயம் மகரிஷி அவர்களின் கைகளில் இருப்பதையும் உணர்கிறேன்.

அடுத்த நொடியே astral travel .சூட்சும பயணம் .எத்தனை தூரமானாலும்,எவ்வளவு கண்டம் விட்டு கண்டம் செல்ல வேண்டுமானாலும், இங்கே நொடியில் சாத்தியமாகிறது.சூட்சும உடம்பில் முதலில் வந்திறங்கிய இடம் ,பழனி போகர் பெருமானின் ஜீவசமாதி.மகரிஷி அவர்களின் மெல்லிய குரல் மட்டும் அங்கே இருக்கும் இடத்தினை பற்றி விவரிக்கிறது.அதே அதிகாலைவேலை .பார்க்கவே மிக ரம்மியமாக இருந்தது.பழனி மலையும் ,போகர் ஜீவசமாதியும் ,மலை மீதிலிருந்து ஓர் பத்தடி உயரத்தில் பார்த்தால் எப்படிஇருக்கும்.physical உடம்பால் பார்ப்பதற்கும் ,இந்த சூட்சும உடம்பால் பார்ப்பதற்கும் எந்த ஒரு வேறு பாடும் தெரியவில்லை. அங்குள்ள இரும்பு கேட் ,சிமெண்ட் சுவர்கள் எல்லாம்   அப்படியே உள்ளது.ஜீவசமாதி உள்சென்று வலம் வந்து ,தரிசனம் செய்கிறோம். பிறகு அங்கிருந்து அப்படியே மேல்நோக்கி செல்கிறோம்.பிறகு சென்ற இடங்கலெல்லாம் சரியாக புலப்படவில்லை .ஆனால் வெகு தூரம் சென்றோம் .பல அரிய காட்சிகள் .பிறகு மீண்டும்ஆழியாறு திரும்பி  வெற்றுடம்பாககிடந்த  எம்மில் துளியும் பிசகின்றி,உடலில் புகுந்தது ,உள் நுழைந்தது.மட்டுமே ஞாபகம் இருந்தது.

பிறகு மெதுவாக ,கைகளை  ,கால்களை அசைக்க,உடம்பிற்கு ஒரு இயக்கம் வந்தது. உடம்போ ஒரு சரியான அசதியில் இருந்தது .மெல்ல ,மெல்ல இந்த உலகியல் வாழ்க்கைக்கு திரும்பினோம். இந்த வித்தை செய்வதால் சூட்சும உடல் நன்கு பிரகாசமடைகிறது.உயிரின் வழியே விரையமாகும் ஆற்றல் சரிசெய்யப்படுகிறது.இதுவோ ஒரு சூட்சும பயணம் .கீழே வருவது physical பயணம்.

அக்னி நட்சத்திர காலங்களில் செய்யவேண்டிய ஒரு முக்கியமான வேலை என்ன தெரியுமா ? கோரக்கர் சித்தர் சொல்லிய  ரகசியம்.ஏற்கனவே அகத்தியம் இதழ் ஒன்றில் எழுதியிருந்தோம்.எத்தனை அன்பர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள் என்று தெரியவில்லை. மற்றவர்கள் அடுத்த முறையாவது முயற்சி செய்யுங்கள்!

அக்னி நட்சத்திர காலங்களில் மிக அதிக உஷ்ணம் ஆக அதன் காரணமாக நவபாசன சிலையில் ஒரு வித வேதியல் மாற்றம் நடைபெறுகிறதாம்.  அப்பொழுது அந்த காலகட்டங்களில் பழனி சென்று ,கிரிவலம் வந்தோ ,மலை ஏறியோ ,ஸ்ரீதண்டாயுதபாணியை, முருகப்பெருமானை வணங்கவேண்டுமாம்.அவ்வாறு செய்யும் போது,நவபாசன சிலையில் உள்ள தன்மை அங்குள்ள காற்றோடு கலந்து வருமாம்.அந்த காற்றினை சுவாசிப்பவர்கள் பிணிகுறைந்து ஆரோக்கியமாக வாழும் தன்மை ஒன்று உள்ளது என்று கோரக்கர் சித்தர் சொல்லியிருக்கிறார்கள்.


இம்ம்முறை எமக்கும் ஒரு வாய்ப்பு தந்தை ஸ்ரீமகாபைரவர்  ஆசியால் கிடைத்தது. ஒரு சில முக்கியமான வேலை காரணமாக இந்த அக்னிநட்சத்திரகாலத்தில் பழனி செல்ல இயலாதோ என எண்ணிஇருந்தேன்.இருப்பினும் ஸ்ரீமகாபைரவர் ஆலயம் சென்றேன் .இது போல் இங்கு செல்லவேண்டும் ,அருளாசி தாருங்கள் என்றேன்.சட்டென ஒரு ஆற்றல் எம்முள் புகுந்தது.அந்த ஆற்றல்
சிறிது நேரத்தில் எமக்குஉள்ள அன்றைய தடைகளை எல்லாம் தகர்த் தெரிந்தது.அனுமதியை பெறவைத்தது.

பழனி செல்லும் சூழல் அது தானாகவே உருவாக ஆரம்பித்தது.முடிந்த வரை வெறும் வயிற்றில் செல்வது நல்லது.தரிசனத்திற்கான  மதியம் மணி 12 க்கு வரிசையில் நின்றோம்.கொஞ்சம் காலதாமதம் ஆகியது.எல்லாம் நன்மைக்கே என்று பொறுமையுடன் இருந்தோம்.சன்னதி அருகே சென்றபோது  மணி மதியம் 2ஜ தொட்டது.எமது நண்பர் அங்குள்ள பாதுகாவலரிடம் ஏதோ கூற,அவரோ பட்டென கதவை திறந்து அமருங்கள் என்றார்.அழகன் முருகன் இவன்.ஆகா ...! என்ன ஒரு அற்புதமான ஆனந்தமான அலங்காரம்.கூட்டம் ஒரு புறம், சலசலவென  சத்தம் ஒரு புறம் இருந்தாலும்  அங்கே ஒரு அமைதி நிலவியதையும் உணர்ந்தேன்.ஆழ்ந்து அன்போடு ஸ்ரீதண்டாயுதபாணியை  எம் நெஞ்சோடு எம் இதயத்தோடு வணங்கினேன்.ஒரு ஐந்து நிமிடம் சென்றிருக்கும் .பிறகு அங்கிருந்து வெளி வந்து ஸ்ரீபோகர்பெருமானை வணங்கினேன்.அதன் அருகிலே அமர்ந்தேன்.போகனை நோக்கி தவம் செய்தேன்.அன்போடு உள்ளம் உருகினேன்.போகன் கருணை மிக்கவர் . எவ்வாறு எமக்கு கருணை செய்தார் தெரியுமா ?மூன்று முறை அங்கே ஒரு சுழற்காற்று  வீசியது.கோவில் கருவறை மற்றும் நவபாசன சிலை மற்றும் அதை சார்ந்த இடமெல்லாம் ,அதன் அலைகளை எல்லாம்  அந்த காற்று அங்கே சுமந்து வந்து,மிக அற்புதமாக அள்ளிவீசியது. .அருகில் எத்தனை  மானுடர்  இவைகளை உணர்ந்தார் என்று தெரியவில்லை.ஆனால் யாம்உணர்ந்தோம் .!!. இதுவே மூச்சினை நன்றாக இழுத்துவிட வேண்டிய தருணம் என்று தோன்றியது .அவ்வாறே செய்தோம்.மூன்று முறை மூச்சினை நன்றாக உள்இழுத்தோம்.....அற்புதம்,...அற்புதம்....ஆனந்தம். அமைதியானோம் ..ஆழ்ந்தோம் .கொஞ்ச நேரத்திற்கு பிறகு ,சிறிதே கண் விழித்துப்பார்க்க ,எம்மை அறியாமலேயே கண்களில் ஆனந்த கண்ணீர் துளிகள்.அன்பின் வெளிபாடு இந்த கண்ணீர். இன்னும் சிறிது நேரம்  அங்கே அங்குள்ள அமைதியிலே மனம்  திளைத்தது.பிறகு ஒருவாறு எழுந்து
மீண்டும் போகரை  நோக்கி சாஷ்டங்க நமஸ்காரம் செய்து ,போகர் பற்றிய சிந்தனையிலேயே மெதுவாக நடந்து வெளிவந்தோம்.


வெறும் பாதத்தில் மலை மீது நடப்பது சுட்டெரிக்கிறது.சிறிது தூரம் நடந்து ஒரு நிழலில் அமர , ஒரு நண்பர் ஒருவர் மூலம்  சிறு பொட்டலம் ஒன்றை கொடுத்தார்.எவ்வாறு இவை கிடைத்தன என்றேன் ?"...இவரை எமக்கு தெரியும் ,மிக அரிதான ஒன்று முருகனின் பிரசாதம், வெறும் வயிற்றில் இந்த சந்தனத்தை உண்ணவேண்டும் என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்....." என்றார்.

பொட்டலத்தை பிரித்து பார்க்க ஆவல் தூண்டியது.சிறிய நூலினால் கட்டப்பட்ட பொட்டலம்.பிரித்து உள் பார்க்க அதனுள் நான்கு மிக சிறிய பொட்டலம், ஒன்றில் திருநீற், மற்றொன்றில் குங்குமம், இன்னொன்றில் சந்தனம், மீதமொன்றில் உலர்ந்த திராட்சை பழங்கள் கொஞ்சம்,.
மிக அழகாக மடிக்கப்பட்டு இருந்தது.எல்லாம் போகர்  கருணை ......திருநீறையும் சந்தனத்தையும் பூசி ,சிறு திராட்சை எடுத்து சிறிது வாயில் உள்வைக்க ....அப்பப்பா ..என்ன சுவை .வெறும் வயிற்றில் இந்த திராட்சை பழத்தின் இனிப்பு சுவை ,மெதுவாக உள்ளிறங்கி ஒருதெம்பினை கொடுத்தது.இவை எல்லாம் , நடந்த நிகழ்வுகள் எல்லாம், கருணையும் அன்பினால் மட்டுமே பெறமுடியும் என்று எண்ணத்தோண்றியது.எவ்வளவு கருணை மிக்கவன் இந்த போகன் .அவன் இருக்குமிடம் சென்றால் எத்தனை அழகாக கவனித்து  அனுப்புகிறான்..! போகனுக்கு தெரியாத மருந்துமில்லை ..போகனால் குணப்படுத்த முடியாத வியாதியும் இல்லை.!
அன்பும் கருணையும் நிறைந்தவருக்கு ,போகன் தம் கருணை அலைகளை   மிக எளிதில் உணரவைக்கிறான்.இவன் செய்யும் செயல் எத்தனை புனிதமானது..!இவன் பூத உடலில் வாழ்ந்த காலங்கள் எங்கோ சென்றுவிட்டன...ஆனால் இன்று எத்தனை தலைமுறைகளுக்கு நன்மை செய்துகொண்டிருக்கிறான்..! என்னே இவன் கருணை..!!இவனின் கடினஉழைப்பு..! மானுடகுலத்திற்கு இவன் ஆற்றும் மருத்துவ தொண்டு,ஆன்மிகம் கலந்த மருத்துவம்...!கருணை நிறைந்த அன்பின் அலைகள்....!!! எல்லாம் பிரமிக்க வைக்கிறது...மானுடனால் இவை சாத்தியமா ...?!சித்தர்களால் மட்டுமே இவ்வாறு செய்யஇயலும்..!!உள்ள நிறைவோடு எழுந்து வீடுவந்தோம்.

சிந்தனை என்பது எவ்வளவு  சுகமானது தெரியுமா? எதை பற்றி சிந்திக்கிறோமோ அதைபற்றி   அதன் அலைகள் அதன் தன்மையை அப்படியே உணர்த்திவிடுகிறது .பிரபஞ்சத்தை நோக்கி சிந்திக்க காந்த அலைகள் உள்ளமெங்கும் சூழ்ந்து விடுகிறது .முதலில் இழந்த ஆற்றல்களை நிரப்பி ,பிறகு தன்னை சுற்றி அப்படியே  ஜிவ்வென்று சூழ்ந்துகொள்கிறது .அந்த field ல்  யார் வந்தாலும் இதன் தன்மையை பெறலாம் .எல்லாம் அலைகளின் சாம்ராஜ்யம்.ஜீவசமாதியில் உள்ள மாகான்கள் கொடுப்பதும் அலைகளே .மிகபழம்பெரும் கோவில்  கருவறையிலிருந்து வருவதும் அலைகளே.இருவர் சந்திக்கும் பொழுது ஒருவரை dominate செய்வதும் அலைகளே .உள்ளம் உருகி அன்பால் உருகவைப்பதும்  அலைகளே !

அலைகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள தெரிந்தவன் ஒரு மாபெரும் மனிதனாகிறான்.சமீபத்தில்  ஒரு  கோவிலுக்கு சென்றிருந்தேன் ,ஆனால் அங்கோ  மிக அதிகமான  கூட்டம் .சாமியை தரிசிக்க கிட்டத்தட்ட குறைந்தது 5 மணி நேரமாவது ஆகும் என்பதுபோல தெரிந்தது .இது நமக்கு  ஒத்து வராது  என்று  முடிவுஎடுத்து ,மெதுவாக  நடந்துகொண்டிருந்தேன் .வரும்  வழியில்  உள்ள  ஒரு  மிகசிறிய  கோவில் ஒன்று  கூட்டமின்றி  இருந்தது ,அங்கே சென்று  வரலாம் என்று  எண்ணி கோவினுள் சென்றேன்.  உள்ளே  மூலவர்  வர சித்தி விநாயகர் ,அருகே  ஆஞ்சநேயர்  மற்றும்  சிறு சிறு  விக்கிரகங்கள் ,அனைத்தையும்  வணங்கி  கோவிலை  சுற்றிவந்தேன் .இதுவரை  எம்  உயிர் ,சூட்சும  உடம்பு எல்லாம்  மிக  சாதரணமாகவேயிருந்தது.பிறகு சரி  கிளம்பலாம்  என  எண்ணிக்கொண்டிருக்கும்  வேளையில் ,ஏதோ  ஒரு
 அலை  எம் சூட்சுமத்தில்  சேர்ந்தது , மெதுவாக  சேர்ந்து உடலெங்கும்  வியாபிக்க ஆரம்பித்தது .சிறிது  நேரம்  அமரலாம்  என  எண்ணி  கண்களை  மூடினேன் .

ஒரு  அலை வடிவில் ஒரு மகான் .இந்த  கோவிலே இருக்கிறார் .இருக்கிறார்  என்றார்  இங்கே  எங்கெங்கும்  இருக்கிறார் .ஒரு அரை வினாடியில் இந்த  கோவிலெங்கும்  சென்றுவருகிறார் .வரும்  ஒவ்வொருவரையும் ஆசிர்வதிக்கிறார்.ஒவ்வொருவரின்  சூட்சும  உடம்பையும்  நொடியில்  உரசி கோவிலை   வலம் வருகிறார் .இந்த  மகானின்  அலைகள்  எம்  சூட்சுமத்தையும்   பிசைந்து  ஏதேதோ  செய்தது.என்னவென்று  சொல்ல தெரியவில்லை .அலைகளும்  அலைகளும்  ஒன்று  சேர்கிறது .ஏற்ற இறக்கங்களை  சரிசெய்கிறது .என்ன அந்த  மகான்  அருள  எண்ணினாரோ  அதனை  இந்த  அலைகள் எம்  சூட்சுமத்தில்  சேர்க்கிறது .ஏதோ  எமக்கு நடக்கவிருக்கும் நிகழ்விற்கு ,இங்கே இந்த  மகானின் அலைகள்  எம்மை  நடக்கபோகும்  நிகழ்வோடு பிரித்து அந்த  நிகழ்வின்  பாதையை மாற்றுகிறது .சுறுக்கமாக சொன்னால்  பாதுகாக்கிறது .

வெற்றுடம்பு போல  வெண்ணிற அலைகளால்  சூழப்பட்ட  உடம்பு ,எடையே  இல்லாத  உடம்பு எங்கெங்கும்  பறக்கிறார் .நன்கு இறை ஆற்றல்களின்  செறிவுள்ள  சூட்சும  உடம்பு .A turbulant wave  which is just keep rotating ..!யார்  இவர்  ?தெளிவாக  இவர்  முகம்  காணும்  தகுதி எனக்கில்லை .அமாவாசை அன்று  வெளிகிளம்புகிறார்.இது  ஒரு  ஜீவசமாதி என்றே  தோண்றுகிறது .வெளி உலகம்  விநாயகர் கோவிலென  எண்ணினாலும் ,இங்கே  ஒரு  மகான் சூட்சும  உடம்பில்  இருக்கிறார் என்பது  தெள்ளத்தெளிவாகிறது .இரண்டு  மூன்று  முறை  உணர்ந்திருக்கிறேன் .சென்னையிலே  உள்ள ஒரு கோவில் ,மீண்டும் ஒரு முறை உணர்ந்துவிட்டு, சரியான முகவரியை தருகிறேன் .ஒரு முறை   அமாவசை நாளில்  வெறும்  வயிற்றுடன்  முடிந்த வரை வெண்ணிற  உடையணிந்து  சென்று  தரிசியுங்கள் மகானின்  அருள் ஆசி கிட்டும் .

அன்பின் அலைகளை எவ்விதமேனும் உணருங்கள்.தூய வெளியை ,இறைவெளியை சிந்திக்க ,சிந்திக்க ,ஒரு சிறு துளி  உருவாகி,பிறகு அதுவே பன்மடங்கு அன்பை இருக்கும் இடமெங்கும் பரப்பிவிடும். அன்றைய பொழுது சுகமாக கழிந்துவிடும்.தேவை நிறைவேறும்.அமைதியாகும்.
அகத்திய உள்ளங்களே ! மீண்டும் உங்களை இன்னுமொரு நிகழ்வில் விரைவில் சந்திகின்றேன் .

ஒம் அகத்தீஸ்வராய நமக ..!!

3 comments:

 1. armaiyana pathivu very nice iam waiting

  ReplyDelete
 2. நல்ல கட்டுரை. உங்கள் மாதிரி இறை தேடுதல்களில் உள்ளவர்களின் கட்டுரையை படிப்பது, சந்திப்பது இவைகளெல்லாம் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அந்த கோவில் முகவரியை தெரிந்து கொள்ள ஆசையாய் உள்ளேன். நான் USA வில் இருந்தாலும், INDIA வரும் போது அங்கு செல்ல இறைவன் அருள் புரிய வேண்டும். Thank you Sir.

  ReplyDelete
 3. wonderful article! I wonder how I stopped following??!!
  The temple you have mentioned, where is it in chennai?
  Thanks in advance.

  ReplyDelete