நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை







உலகத்திலே என்றும் ஆன்மீகம் பூத்து குலுங்கும் நாடு இந்தியா.இங்குதான் இயற்கை இதற்கென  சரியான  தட்ப வெட்பம் மற்றும்  சூழலை  உருவாக்கியுள்ளது.எத்தனையோ ஆயிரம் ஆயிரம் சித்தர்கள் ,இன்னும் இந்த பூமியில் ஆங்காங்கே சூட்சும உடலில்  வாழ்ந்துகொண்டு  தாம் இருக்கும் இடமெங்கும், தம்மை நோக்கி வரும் அன்பர்களுக்கும் அருள்ஆசிகள் கொடுத்துக்கொண்டும், புனித அலைகளை எங்கெங்கும் பரப்பும் மாபெரும் அருட்சேவை செய்துகொண்டிருகிக்கின்றார்கள்! அப்படி மாகன்களும் சித்தர்களும் கூடி  அருள் அலைகளில் உறைந்து கிடக்கும் ஒரு இடம் தான் நினைத்தாலே முக்தி தரும்  திருவண்ணாமலை.


 நினைத்தாலே முக்தி தரும்  திருவண்ணாமலை  என்ற வாக்கியம்  எம் சிந்தனையுள் ஓடிக்கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் கருவரையில் உள்ள சிவன் ,கடந்த முறை எமக்கு ஏற்பட்ட அனுபவம் , அங்குள்ள சூட்சும அலைகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வந்தோடியது. நினைத்தாலே எப்படி முக்தி தரும் ? அப்படி எனில் அந்த அளவுக்கு அதீத சக்தி அங்கே குடிகொண்டிருக்கிறதல்லவா நினைக்கும்  எண்ணம்,எப்படி இந்த நினைவலைகளை  எல்லாம் ஒரு முகப்படுத்தி, ஆற்றல் பெற்று சக்தியாக்கி  இங்கிருந்தே அதன் அலைகளை ஈர்க்கிறது ?சிவனை சுற்றி ஆழப்பதிந்துள்ள சூட்சும அலைகள் .எவர் வரினும் எவர் போகினும் கொஞ்சம் கூட அளவிற் குறையாது,தன் இருப்பில் மாற்றமில்லாது , ஆனால் இந்த பிரபஞ்சத்தை , இந்த உலகத்தை  சுழலவைத்து ,தாவரங்கள் முதல் பல்வேறு உயிர்கள் வரை   மனிதர்களையும் உள்ளடக்கி, நொடிப் பொழுதோரும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திஒன்றை மற்றொண்டாய் மாறவைத்து அதில் ஏற்படும் நிகழ்வுகள், விளைவுகள் இன்பமாய்,துன்பமாய்,ஆனந்தமாய் ,பேரானந்தமாய்  உணரவைத்து நடத்திகாட்டும் அற்புதம் !




பிரமாண்டமான பிரபஞ்சத்தையே இயக்க தெரிந்த சிவனுக்கு ,தம்மை பற்றி, தம் சிவ சக்திஅலைகள் பற்றி சிந்திக்கும் எந்த ஒரு ஜீவராசிக்கும்,அதன் அலையின் சிந்தனை , அது எங்கிருந்து வருகிறது ? யார் இதன் மூலம் ?அதற்கு எப்படி என்ன  பதில்ஆற்றலை கொடுப்பது? அவனை எப்படி தம் இருப்பிடம் அழைப்பது ? என்பதெல்லாம்  ஒரு பெரிய விசயமேமில்லை அவனக்கு ! தாம் நினைத்தால் எதையும் நடத்துவான் ! எதையும்  தூக்கி எறிவான் ! எதையும் அழிப்பான் ! எதையும் உருவாக்குவான் ! எதையும் ஈர்க்கவும் செய்வான் ! அன்பால் உள்ளம் உருகுவோற்கு அரவணைக்கவும் செய்வான் ! யார் அறிவார் சிவனின் சூட்சுமங்களை ! 

ஒன்றுமில்லா வெட்டவெளியில் அணுவை உருவாக்கி ! அவைகளையே  நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களாக்கி, இவைகளை பிரபஞ்சமாக்கி ,எத்தனயோ கோடி கோள்களாக்கி , பிறகு அதனை சரியான முறையில்  இயங்கவைத்து ,பஞ்ச பூதங்களை கலந்து ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரை உள்ள ஜீவன்களாக மாறவைத்து , அவைகளையே நொடிப் பொழுதோரும் மாற்றங்களை ஏற்படுத்தி இன்பம் முதல் இன்னல் வரை யாவற்றையும்  உணரவைத்து ,தானே அனைத்தும் உருவாக்கி பிறகு தானே அதனை அழித்தும் ,வேறு ஒன்றாக மாற வைத்துக்கொண்டே இருக்கும் இவன் செயல்கள் ! இவன் நடத்தும் அற்புதம் ,இவை எல்லாம் மனித அறிவிற்கு அப்பாற்பட்டவை !

திருவண்ணாமலை சென்றுவ வர வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாகவே இருந்தது.நேரம் கூடிவர சனிக்கிழமையில்  ஒரு பிரதோஷம்  வந்தது (Nov 30 2013). சனி பிரதோஷம் மிகவும் அற்புதமான நாள்.அதுவும் சுவாதி நட்சத்திரமும் சேர்ந்து வந்தது அந்நாளில்.இது போல இனி அமைய காலம் கனிய வேண்டும்.இந்த நாளில் சிவ தரிசனம் என்பது கோடி கோடி புண்ணியம். இந் நாளில் எத்தனையோ நன்மைகள் உண்டு .நாம் அறியாமல் பல பிறவிகளில் செய்த கர்மவினையை, சிவன் தாமே முன் வந்து இறக்கம் கொண்டு பாவ அலைகளை அழித்து ,இறைஅலைகளை நம்முள் நிரப்பும்  அருள் நிறைந்த ஒரு அற்புதமான நாள்.

  உகந்த நாள் எனவே அதற்கான பயணம் ஆயத்தமானது.அன்றைய நாட்பொழுதில் எமக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை எல்லாம் முடிந்த வரை திறம்பட செய்துவிட்டேன்.சனிக்கிழமையில் பிரதோஷம் விசேஷம் அதுவும் திருவண்ணமலையில் மிகுந்த விசேஷம்,இப்படி ஒரு நாளுக்காகத்தான் காத்திருந்தேன் போலும் என எண்ணத்தோன்றியது.தாங்கள் என்றாவது ஒருநாள் திருவண்ணாமலை செல்லும்பொழுது என்னையும் அழைத்துசெல்லுங்கள் என்று ஏற்கனவே எம்மிடம் கோரிக்கை வைத்த நண்பர் நினைவுக்குவர ,அவரையும் ஆயத்தமாகுங்கள் நாளை  அதிகாலை கிளம்பலாம் என்று சொல்லி எம் சிந்தனையில்  மீண்டும்ஆழ்ந்தேன்.

 இப்படிஅன்றைய நாள்முழுவதும் இதே எண்ணம்  மேலும் அயர்ந்து தூங்கிவிட்டேன்.அதிகாலை நேரம் உறக்கமற்ற விழிப்பு நிலை.தூய வெண்மை அலைகள் .மிக மெல்லிய மலர் இதழ் போல் வருடி இதம் தரும் அலைகள், அன்பு போதைஊட்டும் மிதமான அலைகள். தற்பொழுதுள்ள காலைப்பொழுதோ அதிகம் பனி சூழ்ந்தது, ஆனால் இந்த அலைகள் ஒரு மென்மையான இளம் சூட்டினை தந்தது .இதமாக இருக்க அப்படியே இருந்துவிட்டேன்.ஒரு மனதிற்கு ஒரு இதமூட்டும்  அலைகள், ஒரு தைரியத்தை கொடுக்கும் அலைகள், ஒரு நிறைவை கொடுக்கும் அலைகள்,மனிதர்களின் அலையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட அலைகள்.பாற்கடல் வெண்மை, இப்படியே இருத்தல் எத்தனை சுகம் ! அற்புதம் !




திருவண்ணாமலை மலை தெரிகிறது, அந்த மலையின் உச்சியிலே  மிகப்பெரும்   முற்றிலும் வெண்மையான நிறத்தில் மேகம் போல் அதிகாலை வேளையில் மலையின் உச்சி மையபகுதி முழுவதும்  சூழ்ந்துள்ளது. உச்சி மலையில் யார் இது இவ்வாறு வெண்பஞ்சு மேகங்களை   சொறுகிவைத்தது ? .கிட்டத்தட்ட மலையின் பாதி அளவு மேகம் ஒரு படலம் போல ,மலை உச்சி தெரியாமல் ,மேலே  வெண்மை அலைகளாகவும் அதன் கீழே மலையும் இருந்தது.அதிகாலை வேளையில் இது எவ்வாறு சாத்தியம் என்றெண்ணி மேலும் சற்று உற்றுநோக்கினேன்.

வெண்மேகம் மெல்ல மெல்ல ஒரு உருவமாக இருப்பது போல ஒரு பிரம்மை.ஆழ்ந்து அதன் அழகை ரசிக்கலாம் என்று கவனம் செலுத்த, முற்றிலும் ஒரு அழகிய உருவமாக அது இருந்தது .ஆனால்  வெறுமென பார்க்க ஒரு  மேகமாக தெரிகிறது.ஆழ்ந்து பார்க்கவோ ஒரு உருவமாக தெரிகிறது.ஒரு ஒருவம் அல்ல இன்னும் ஒரு அழகிய உருவமும் சேர்ந்து இருந்தது.மேலும் நுணுகி நுணுகி பார்க்க , பரம்பொருளான அம்மையும் அப்பனுமே !!.சிவனும் பார்வதியும் மிகப்பெரும்   உருவத்துடன்  அதிகாலை  மலை மீதமர்ந்து சனி பிரதோஷத்தன்று ,ஆடாது அசையாது   தூய வெண்மை உடல் கொண்ட அலையாக காட்சிகொடுக்கும் தன்மை.! மெய் சிலிர்த்துவிட்டேன்.முகத்தை உருவத்தை தெள்ளத்தெளிவாக பார்க்க இயலவில்லை. மலை மீதமர்ந்து  அழகாக  கீழ் உள்ள உலகத்தை, மக்களை,  அனைத்து ஜீவராசிகளையும் பார்க்கும், கவனிக்கும் ஒரு அற்புதம்.மலையை சுற்றி  இந்த வெண்நிற அலைகள் ஒரு கதகதப்பான ஒரு மெல்லிய ஆகர்ஷன சக்தியை மிதமான வெப்பத்தில் பரப்பிக்கொண்டிருந்தது.

எங்கும் எதிலும் சிவ அலைகள் ஊடுருவி இருக்கிறது.யார் எது செய்யினும் அங்கே அலை அதிர்வாக அலையினுள்ளே பதியும் அற்புதம்.பார்த்து வியந்து இது என்ன ? எவ்வாறு சாத்தியம் ? இது கனவா அல்லது  என் நினைவலைகளா என்று சட்டென எழுந்துவிட்டேன். எழுந்தாலும் அந்த நினைவுகள் என்னை விட்டு வெகு நேரத்திற்கு நீங்கவே இல்லை.எம்மை முற்றிலும் ஒரு ஜீவ அலைகள் சூழ்ந்தது.என்ன ஒரு அற்புதமான வேறு பாடு அன்றாட யாம் சந்திக்கும் மனிதர்களின் அலைகளுக்கும் இந்த ஜீவ அலைகளுக்கும் எவ்வளவு வேறுபாடு  இறைவா !! .உணவு உண்டால் வயிறு நிறைகிறது, இங்கே ஜீவ அலை உண்டால் மனம் நிறைகிறது.உணவோ ஒரு எல்லைக்குட்பட்டது அதற்கு மேல் அது அழிவுப்பாதை நோக்கி ஆனால் இந்த ஜீவ அலைகளோ ஆக்கப்பாதை நோக்கி! மனதை செம்மை படுத்துகிறது .மனதை ஆரோக்யமாக்கிறது சாதரண மனதில் இறை அலைகள் சேர்ந்ததால், வலுப்பெற்று ஒரு அதீத சக்தியை பெறவைக்கிறது.உறுதி பெரும் மனம் .இறை அலைகளால் செறிவு பெரும் மனம்!இப்பொழுது எந்த முடிவு எடுத்தாலும் மாயை இன்றி தெளிவாக எடுக்க முடியும்.இவை இருந்தால் எப்பொழுதும் ஒரு பாதுகாப்பு வளையம் போல ,செய்யும் செயலிலும் ,அன்றாட நிகழ்வுகளிலும் முற்றிலும் பாதுகாக்கும் என்பதில் ஐயம்மில்லை.இறை அலைகள் இல்லையேல் வாழ்கையில் ஏதோ ஒன்று இழந்ததை போலதான் ஒரு ஏக்கம்.ஆனால் இங்கே உலகையே உணர்ந்த ஒரு கம்பீரம்.!அனைத்தும் உணர்ந்த அலையின் ஒரு துளி சாரல் ,வற்றாத ஜீவஅமுதமாக இரண்டற கலந்திருப்பதால் ஒரு ஜீவ அரவணைப்பு!

வெகு விரைவில் நேரடியாக சென்று ஸ்தூல கண்களால் திருவண்ணாமலையை பார்த்துவிடவேண்டியது தான் என்று எண்ணி ஆவலுடன் உடனே பயணத்திற்கு ஆயத்தமானேன்.வண்டியை ஒட்டும் போதும் இதே அலைகள் சுழன்றோடியது. திருவண்ணாமலை வந்து சேர்ந்தேன் நண்பருடன்.கிட்டதட்ட பகல் பதினோரு மணி ஆகிவிட்டது.வந்த உடனே மலையை சுற்றிலும் நோக்க ,நடந்த நிகழ்வு போல எந்த வெண்மேகமும் இல்லை.வெகு தூரத்தில் கூட  இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்தற்கான எந்தஒரு அறிகுறியும் தென்படவில்லை. எப்படி என் அதிகாலை நிகழ்வு பொய்த்தது.?!





ஒரு வேலைதாமதாகி வந்துவிட்டோமோ அதனால் தான் இவை காணமுடியவில்லையோ ? .அதிகாலை வேளையில் வந்திருந்தால் ஒரு வேலை பார்த்திருக்கலாம் .ம்ம்..ஒன்றும் புலப்படவில்லை. இறைவா எல்லாம் உமது சித்தம்  என்றெண்ணி நேரடியாக அண்ணாமலையார் கருவறைநோக்கி சென்றோம். பிரதோஷம் மாலை நேரம்,அப்பொழுது தான் மிக  அதிக மக்கள் சிவ தரிசனம் செய்யவருவார்கள்.இப்பொழுது கூட்டம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது.வரிசையில் மெதுவாக நகர்ந்து நகர்ந்து சரியாக கருவறையின் நேர் எதிர் வந்துவிட்டேன்.மிக சரியாக துல்லியமும் மாறாமல்   சிவனை தரிசிக்கும் நேரத்தில் திரை போட்டுவிட்டனர்.

இறைவா  என்னே  நின் கருணை !அறிவிலன் யாம் இறைவா !தாம் சூட்சுமமாக அதிகாலை வேலையில் எமக்கு நிகழ்த்தியது  இந்த மாபெரும் தரிசனத்திற்காகத்தானே..! ஆஹா ! அற்புதம் ! கருவறையின் முன்எவ்வளவு ஆற்றல் ! அண்ணாமலையாரின் கருவறை மிக சக்தி மிக்கது.! சூட்சுமம் நிறைந்தது ! எவர் காணினும் அவர் தம் சூட்சும உடம்பில் சிவ அலைகள் ஊடுருவி மெருகேற்றும் உன்னதம் இங்கே !

ஏற்கனே கருவறையில் எமக்கு ஏற்பட்ட அனுபவத்தை அகத்தியத்தில் ஒரு கட்டுரையில் எழுதியுள்ளேன்.அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்ய ஆயத்தமாகினர்.எமக்கு அருகிலே ஒரு இளம்வயது அன்பர் ,அவருடன் ஒரு சிறு குழந்தை மூன்று முதல் ஐந்து வயதுஇருக்கும் ,தம் தோளிலே தூக்கி வைத்திருந்தார்.ஒரு சாதாரண நடுத்தரவகுப்பு மக்களின் குழந்தையை ஒத்திருந்தது.என்னவோ  எம் மனது அண்ணாமலையாரின் சன்னதிமுன்னும்   பால திருபுரசுந்தரியின் வாலை மந்திரமே சொல்லத்தோன்றியது.வாலை மந்திரம் சொல்ல சொல்ல அந்த சிறிய குழந்தை மிக அருகில் வருவது போல ஒரு பிரம்மை .மீண்டும் சொல்ல தொடங்கினேன் அன்பால் நனைந்து ,உள்ளம் உருகி சொல்ல ஆரம்பித்தேன் அந்த குழந்தை  தம் தலையை ,எம் தலையுடன் மெதுவாக முட்டியது. என்ன ஒரு  ஆற்றல்  ? சிறியஅலை எம் தலையினுள்  உட்சென்று  கொஞ்சம் பெரிதாகி ,எம்மை முற்றிலும் சூழ்ந்தது.ஏற்கனவே கருவறையில் மிக அதீத ஆற்றல் .வெறும் கண்களால் பார்க்க ஒரு சாதாரண குழந்தை ,ஆனால் ஆற்றலோ மிக அற்புதம் ! யாம் வணங்கிய வாலை சிறுமியாகவே எமக்கு தெரிந்தது.

கிட்டதட்ட ஒரு முப்பது நிமிடம் இருக்கும் .அந்த முப்பது நிமிடமும் கருவறையில் ,நினத்தாலே முக்தி தரும் அண்ணலுக்கு அருகில்,ஒரு மாபெரும் ஆதிமூலத்திற்கு அருகில்,உலகையே அரவணைத்து இயங்கவைக்கும் ஒரு கட்டிலடங்கா சக்திக்கு அருகில், ஒருமாபெரும் ஜோதிக்கு அருகில் இருந்தோம். அதன் கதகதப்பில் யாமும் அதே மென்மையான இளம்சூடுடைய அலைகளை உணர்ந்தோம்! யாம் எந்த அலைகளை அதிகாலை வேளையில் உணர்ந்தோமோ அதே அலைகளை இங்கு உணர்ந்தோம்.இங்கு செறிவும் திணிவும் அதிகம்! எத்தனை கர்மவினைபதிவுகள் எம்முள் ! ஒவ்வொரு செல்களிலும் ஊடுருவி,அத்தனை செல்களிலும் உட்சென்று இந்த ஜீவ அலைகள் அது தானாகவே நிரம்பும் அற்புதம்.வெண்மைமிக்க சூட்சும அலைகள், சிவனின் சக்திமிக்க  அலைகள்,நிரம்பி வழியும் அற்புதம்.அனைத்தையும் ஈர்க்கும் ஒரு பேராற்றல்!

கற்றதும்,பெற்றதும்,ஆசையும்,மோகமும்,கோபமும்,துன்பமும், எல்லாம் அர்த்தமற்று கரைந்து, பிறகு அன்பால் உருகுமிடம் வந்தும்,அதன் பிறகு அதுவும் கரைந்து ,எதுவும் அற்று என்னவென்று தெரியாமல் சிவத்தோடு சிவமாகபோகுமிடம்.!இது என்னவென்று யார் உரைக்க இயலும்! எம் தந்தையே அறிவார் !

திரை விலகியது .அண்ணாமலையார் அழகிய தரிசனம் ! மஞ்சள் நீர் அபிஷேகம் ,பால் அபிஷேகம் ,தேன்,பன்னீர்,இளநீர்,விபூதி மேலும் பல திரவியங்களால் அண்ணாமலையாருக்கு அபிசேகம் நிறைவேறியது. கற்பூர ஆரத்தியுடன், மிக நிறைவாக ,இறைஅலைகளுடன் எங்களுக்கு விடை கொடுத்தார் அண்ணாமலையார்!. தந்தையின் கருணையால் எமக்கும் அழைப்புகொடுத்து, திவ்ய தரிசனம் அருளிய அண்ணலே! அண்ணாமலையாரே ! எம் மனம் நிறைந்த நன்றிகள் ! யாம் எப்படி நன்றி சொல்லமுடியும் ! இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இத்தரிசனம் எம்முள் என்றும் நிறைந்திருக்கும் ! தம் திருவடியை என்றும் அடிபனிந்துதிருக்கும்.! எத்தனைப் மாற்றங்கள் எம் சூட்சும உடம்பில் ! ஆனந்தம் ..ஆனந்தம்...ஆனந்தம் பேரானந்தம் ...!




பிறகு மெதுவாக ஸ்தூல உலகிற்கு வந்து,உண்ணாமுலை அம்மையாரையும் வணங்கி,ஸ்ரீ காலபைரவர் சன்னதிக்கு வந்தோம் .! காலபைரவரை  வணங்கி கொஞ்சநேரம் பைரவ அதிர்வலைகளில் அமிழ்ந்திருந்தோம் ! காலபைர சன்னதிக்கருகிலே ஒரு நாய் அமைதியின் விளிம்பில் இருந்தது ! பைரவகாயத்ரியை ஒரு முறை மனதால் உச்சரித்து,மெதுவாக வருடிக்கொடுத்தேன் ! ஒரு சாதுவான புன்னகையுடன் என்னப்பா..? என்பதுபோல ஒரு சின்ன பார்வை பார்த்து, அது அங்கே எந்த பணியை அங்கு செய்ததோ அதை மீண்டும் தொடர்ந்தது !




பிறகு கிரிவலம் வர தொடங்கினோம்.திருவண்ணாமலையே சித்தர்களும் முனிவர்களும் மகான்களும் வாழும் இடமல்லவா.ஆக யாரேனும் ஒருசித்தரையாவது பார்க்க வேண்டும்.எதுவும் எனக்கு கோரிக்கை இல்லை .அவர்கள் செய்யும் செயல் மிக புனிதமானது.யாம் எதுவும் அவர்கள் செய்யும் காரியத்தில் இடையூறு செய்யவில்லை.இந்த ஸ்தூல கண்களுக்கு தெரியவேண்டும் ஆசீர்வாதம் வேண்டும் அவ்வளவு தான் என்று தாய் வாலை பால திரிபுர சுந்தரியிடம் (அம்பிகையிடம்) வேண்டிக்கொண்டேன்.மிக சக்திவாய்ந்த மந்திரம்! அன்போடு நிறை மனதுடன் சொல்வது மிக சிறந்தது.

" ஒம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வா வா வாலை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாஹா!! "




கிரிவலம் செல்லும்போது எப்பொழுதும்  மந்திரங்களை உச்சரிப்பது மிகச்சிறந்தது அல்லது தூய அன்பின் அலைகளால் மனதை வைத்துகொள்வது மிகவும் சிறப்பானது.ஆனால் நண்பரோ பேச்சுகொடுக்க முற்றிலும்  ஒரு முகப்படுத்தி மந்திரத்தை சொல்ல இயலவில்லை.இருப்பினும் கொஞ்சநேரம் சொல்லமுடிந்தது. மலையை சுற்றி உள்ள ஒவ்வொரு லிங்கத்தையும் வழிபட்டு மெதுவாக ஒரு இடம் வந்தோம் ! இளநீர் சாப்பிடலாம் என்றெண்ணி ஒரு இடத்திலே அமர்ந்தோம்! அந்த இடத்திலே கொஞ்சம் கூட்டம் இருந்தது.அதாவது கொஞ்சம் மக்கள் carகளில் அந்த இடத்தில ரொம்ப நேரமாக இருப்பது போல தெரிந்தது! இந்த இடம் சரியாக அண்ணாமலையாரின் நுழைவாயிலிருந்து மலையின் நேர்பின்புறம்.கிட்டதட்ட மலையின் சரிபாதி!  அங்கொரு நவக்கிரககோவில்உள்ளது !

ஒரு ஐந்துநிமிடம் சென்றிருக்கும் ,தீடிரென ஒரு சாமியார் போல் ஒருவர் வந்தார். உடலில்ஒரு துண்டுபோல் உள்ள  ஒரு காவிவேட்டி மட்டும்,தலையோ பரட்டை,மெல்லிய தேகம்,அங்கும் இங்கும் ஒரு பத்தடி தூரம்வரை நடந்தவண்ணம் இருந்தார் ! அவர் வந்தவுடன் ஒரே நிசப்தம்! எமக்கோ யாரென்று தெரியவில்லை ! அவர் செய்கையும் ,அவர் பார்ப்பதும் ஒரு சாதாரணமனிதர்போல் இல்லை. அவர் எதுக்கு இவ்வாறு இங்கும் அங்கும் செல்கிறார் என்றெல்லாம் தெரியவில்லை ! மக்களெல்லாம் அவர் தம்மை பார்க்கமாட்டாறோ என்றவாறே ஏங்கிய வண்ணம் இருந்தனர் ! திருவண்ணாமலையில் எங்கெங்கும் காவிஉடையில் சாமியார்கள் ! இவர்களில் எத்தனை சித்தர்கள் ? எத்தனை சாதாரண மனிதர்கள் ,எவ்வாறு அடையாளம் காண்பது ? சரி கண்களையாவது பார்த்துவிடுவோம் என்றால் அவரோ நடந்த வண்ணம்.சரியாக பார்க்கமுடியவில்லை, எவ்வாறு கணிப்பது ? தெரியவில்லை எமக்கு!

மெதுவாக அந்த இளநீர் வெட்டும் பெண்ணிடம் “ யார் இந்த சாமியார் ? ஏன் அமைதியாக இவ்வளவு கூட்டம் என்றேன்? “  அவர் மிக , மெதுவான குரலில் குசுகுசுவென “ இவர் தானுங்க மூக்குப்பொடி சித்தர், அவரு எப்போ நினைக்கிறாரோ அப்போ இங்க வருவார், சனங்கெல்லாம் சாமிக்காகத்தான் ரொம்பநேரம் காத்துக்கிட்டிருங்காங்க..." என்றார்.ஏதோ வேறு ஒன்றை மனதில் நினைத்துகொண்டு நடப்பது போல, இங்கும் அங்கும் மீண்டும்  நடந்துவிட்டு, இங்கிருக்கும் யாரையும் ஒரு பொருட்டாக கருதாமல் நடந்துகொண்டிருந்தார். ஒரு ரெண்டு நிமிடம் சென்றிருக்கும் ,அருகில் இருந்த ஒரு ஆட்டோவில் சட்டென அமர்ந்து விரைவாக சென்றுவிட்டார்!

அங்கிருந்து மீண்டும் கிரிவலம் தொடர்ந்தோம் ! மனதால் வாலை அம்பாளுக்கு  நன்றி சொல்லி.கிரிவலம் நிறைவுசெய்து ,நெஞ்சம் நிறைந்த அலைகளுடன் திரும்பினோம்! இந்த  அலைகள் எம் சூட்சும உடம்பை நன்றாக  போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு charge செய்து இரண்டு நாட்கள் வரை எம்முடனே ஒரு சூட்சும வடிவில் ஒரு பாதுகாப்பு வளையம் போல எம்மை எப்பொழுதும் சூழ்ந்திருந்தது !நெஞ்சம் நிறைந்த அண்ணாமலையாரின் ஜீவ அருள்அலைகளுடன் மீண்டும் அகத்திய உள்ளங்களை வேறொரு நிகழ்வில் விரைவில் சந்திக்கின்றேன்..!!

ஒம் அகத்தீஸ்வராய நமக !

Comments

  1. sir ungalukku annamalaiyarin arputha tharisanam kitaithathu engalukkum kitaithathu ungalin eluthin moolam nantri .sir neengal ramathevar kovilukku feb 16 antru varveerkala

    ReplyDelete
  2. Yes , I am planning to attend for Feb 16 (Also will be there on Feb 14 where have to do some initial arrangement for the function along with Friends and trustee members )

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்