Sunday, February 17, 2013

ஸ்ரீ மஹா பைரவர்

ஸ்ரீ மஹா பைரவர்  மிக சக்திவாய்ந்த ஒரு கடவுள் .ஒரு மிக உக்கிரமான அதிக ஆற்றல் வாய்ந்த ஒரு சக்திமிக்க அலை வடிவம் .சிறிது பயபக்தியுடனே இக்கட்டுரை எழுதுகிறேன்.சிவபெருமானின் பூத கணங்களில் மிக முக்கியமானவர் .ஸ்ரீ மஹா பைரவரை வணங்கினால் 100% பலன் கைகூடும் என்பார்கள் .தேய் பிறையில் வரும் அஷ்டமியில் ஸ்ரீ மஹா பைரவரை வணங்குவது மிகுந்த விஷேசம். மணி ,மந்திரம், ஓளஷதம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஸ்ரீ மஹா பைரவரின் அருள் இன்றி அறிந்து கொள்ள முடியாது என்பார்கள் .சித்தர்கள் பாதையில் இந்த மணி ,மந்திரம், ஔஸதம் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது .ஒரு சிறிய மந்திரமாகட்டும் அல்லது  ஔஸதமாகட்டும் அது சித்தி பெற வேண்டும் என்றால் ஸ்ரீ மஹா பைரவர் அருளாசி இன்றி  முழுமைபெறாது .அனுகிரகம் வேண்டும் அது இருந்தால் தான் மணி ,மந்திரம் தெரிந்துகொள்ள முடியும் என்பார்களே ,அந்த அனுகிரகத்தை அருள்பவர் ஸ்ரீ மஹா பைரவர் .காலம் காலமாக நமக்கு முன் எத்தனையோ தலைமுறைகள், பைரவ சக்தியின் அளப்பரிய ஆற்றல் கண்டு வியந்து  வணங்கிய ஒரு காலம் ,அங்கே ஒரு  மிக மிக  பழமையான பாடல் ஒன்று
 
உரக கங்கணம் தருவன பணமணி
உலகடங்கலும் துயிலெழ வெயிலெழ
உடை தவிர்ந்ததன் திரு அரை உடை மணி
உலவி ஒன்றோடொன்று அலமார விலகிய


கரதலம் தரும் தமருக சதிபொதி
கழல் புனைந்த செம்பரிபுர ஒலியொடு
கலகலன் கலன்கலன் என வருமொரு
கரிய கஞ்சுகள் கழலினை கருதுவாம்


ஸ்ரீ மஹா பைரவர் தன்  கைகளில் கங்கணமாகக் கட்டி இருக்கிற பாம்பு  கக்கும் மாணிக்கக் கற்களால்  உலகம் முழுவதும் துயிலெழ வெயிலெழ. உடை தவிர்ந்த தன் இடுப்பினில் கட்டப்பட்டுள்ள  மணிகள் ஒன்றோடு ஒன்று மோதி ஒலி எழுப்ப ,கையில் உள்ள தமருகம் என்னும் உடுக்கை எழுப்பும் தாள ஓசையும் ,சிவந்த சிலம்பின் ஒலியும்  சேர்ந்து கலன், கலன் என்னும் இனிய நாதம் உண்டாகுமாம்.இப்படி காட்சி தரும் கரிய ஆடை அணிந்த பைரவர் பாதம் பணிந்து  வணங்குவோம் என்ற ஒரு மிக பழமையான பாடல் , ஒட்டக்கூத்தர் புலவரால் இயற்றப்பட்ட  பாடல் தொடர்கிறது.பைரவ சக்தியை மிக தத்ரூபமாக எவ்வளவு அழகான வார்த்தைகளால் கொண்டு வர்ணிக்க முடியுமோ அவ்வளவு  அழகாக வர்ணித்துள்ளார்.எந்த அளவுக்கு புலவர் பெருமகனார் சக்தியை உணர்ந்து பாடியுள்ளார் என்பது புரிகிறது.இதற்குரிய ஒரு சரியான வேகத்தில் உச்சரிக்க ,இங்கே உள்ள வார்த்தைகள் எல்லாம் சக்திகளை வெளியிட்டு ,உடல் மயிர்கூட்சம் பெற்று புல்லரிக்கும் . எவ்வளவு ஒரு அழகான தமிழ் சொல்  "கலன்,கலன்,கலன்......." மிக வேகமாக உச்சரித்து பாருங்கள் .அதன் சக்தி ,ஆற்றல் புரியும் .கிராமத்தில் வாழும் அன்பர்களுக்கு இதன் ஒசை புரியும் .இந்த ஓசை ஒன்றே போதும் , பயம் ,துக்கம் ,குழப்பம் போன்ற யாவையும் தூக்கி எறிந்துவிடும் .செவ்வி அரை என்று சொல்வார்களே அது போல .ஒரே அரையில் பளிச்சென்று அனைத்து துர் சக்திகளையும்  விரட்டி அடித்துவிடும் .

பைரவர்என்பது  ஒரு சக்திமிக்க  அலைகளின் வடிவம் .இதன் சக்தியின் வடிவத்தை அனுமானிப்பது என்பது  மனித சக்தியால் இயலாத ஒன்று.நன்கு செறிவுஊட்டப்பட்ட சக்தியுள்ள பிரபஞ்ச அலைகளின் ,இறை அலைகளின், ஒருங்கிணைக்கபட்ட  ஆற்றல் மிக்க சக்தியின் வடிவம் .நன்கு செறிவுள்ள ஒரு மாதிரியாக உருத்திரண்ட கட்டுக்கடங்காத  அலைகளின் வீரியமிக்க சக்தி,இதனை ஒரு உருவத்தில் கொண்டுவருவது ,மிக  மிக கடினம்.கண்டங்கள் விட்டு கண்டங்களை நொடிபொழுதில் தாவும் ஒரு  அலை வடிவம் .சக்திகள் உருத்திரண்டு பூமியைப்போல் பல கோள்களை நொடிப்பொழுதில் சுழன்று பிரபஞ்சத்தை காவல் காக்கும் ஒரு சக்தி .

இறைநிலையின் சக்தியை பூமியில் நிலைநிறுத்திட சித்தர்கள் முனிவர்கள்  ஒரு சில பீஜாஜ்ர சொற்களை வைத்து முடிந்த வரை இறை சக்தியை இந்த பூமியிலே நிலை நிறுத்தினார்கள் .வடிவமே இல்லாத இறைநிலையையில் உள்ள ஆற்றல் கண்டு வியந்து ,அதன் ஆற்றலை,அதன் தன்மையை  ஒரு சில சொற்களை வைத்து ,அதன் மூலம் இறை சக்தியை எப்பொழுதெல்லாம் வேண்டுமோ ,அப்போதெல்லாம்  அனுபவித்து மகிழ்ந்தார்கள்.
 அதற்காக பல பீஜங்களை கண்டுபிடித்தார்கள் ,அதற்குரிய பலன்களை அனைவரும் உணரும் வண்ணம் சரியான உருவத்தில் பொருத்தி தெய்வங்களாக வழிபட்டார்கள் .ஒவ்வொரு பீஜமும் ஒவ்வொரு தன்மை .அதற்குரிய பலன்கள் .உதாரணமாக ஒம்ஹம்  யெனும் பீஜம் கடவுள் கணபதிக்குரிய பீஜம்.இந்த பீஜம் அடி மூலாதாரத்திலிருந்து உச்சரிக்கவேண்டும்  (மூலாதாரம் என்பது கருவாய்க்கும் எருவாய்க்கும் மத்தியில் ,அதாவது முதுகு கடைசி முள்ளெலும்புதண்டின் உட்புறம்) .
 ஒம்.....ஹம்... இந்த ஹம் என்பதை க்ஹம்என்று    நன்றாக அழுத்தி சொல்ல வேண்டும் .இவ்வாறு சொல்லும்போது அடி மூலாதாரத்திலிருந்து சக்தி கிளம்பி உடலெங்கும் வியாபித்து ,இறை சக்தியுடன் ஒரு தொடர்பு ஏற்படுத்தி ,உடலுக்கு ,மனதுக்கு ஒரு மிக பெரிய வலிமையை கொடுக்கும். இந்த ஹம் (க்ஹம்) .அதாவது ஒரு யானைக்குரிய ஒரு வலிமையை தரும் சக்தியுடையது .அத்தனை சக்திமிக்க பீஜம்.இப்படி ஒவ்வொரு பீஜமும் ஒவ்வொரு சக்தி .ஒரு தெளிவான நல்ல அறையினை தேர்ந்தெடுத்து ,அங்கே அமைதியை நிலைநாட்ட வேண்டும் ,எவ்வாறு ? ஒரு இருக்கும் இடத்தை பார்த்தஉடனே மனம் அமைதியை நாட வேண்டும்  என்றால் என்ன நாம் செய்ய வேண்டும் ?

ஒரு மிக புளிப்பு சுவையுள்ள எலுமிச்சம்பழத்திணை இரண்டாக வெட்டி ,பிறகு அதன் ஒரு பக்கத்தினை  நன்றாக  கசக்கி பிழிந்து அதன்  ஒரு துளி சாற்றினை நாவில் வைத்தால் என்று சொல்லும் போதே அந்த புளிப்பின் சக்தியை உணருகிறோம் அல்லவா அது போல .உண்மையிலே இங்கே ஒரு துளி எலுமிச்சம்பழரசம் உங்களுக்கு கொடுக்கப்பட்டதா  ?இல்லையே .வெறும் எழுத்து மட்டும் தானே ,எப்படி  அதன் தன்மையினை அப்படியே உணர்த்துகிறது .அது போலதான் இந்த சூட்சுமம்.சூட்சும அலைகள் ,வெறும் அலைகள் மட்டுமே ,ஆனால் அதன் தன்மையை அப்படியே உணர்த்திவிடும்.


ஒரு வீட்டிலே நான்கு அல்லது ஐந்து பேர் இருக்கின்றனர் என்று வைத்துகொள்வோம் ,ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அலையியக்கம் ,மாறுபட்ட எண்ணங்கள் ,இவை எல்லாம் இருக்கும் இடம் முழுவதும் சுழன்று கொண்டே இருக்கும்.எண்ணங்களை பொருத்து இருக்கும் இடம் அமைதியாகவோ அல்லது வேறு மாதிரியாகவோ இருக்கும் .இப்படி இருப்பதால் ஆகப்போவது ஒன்றுமில்லை .இந்த அலைகளை எல்லாம் தூக்கி எரிந்துவிட வேண்டியதுதான் .நல்ல அமைதியும் இறைஆற்றலும் உள்ள இடமே நமக்கு வேண்டும் .எவ்வாறு நீங்காத அமைதி தரும் அலைகளை ஒரு இடத்தில் நிலைக்க  செய்வது ?

பூஜைக்குரிய மனதிற்கு பிடித்த ஒரு இடத்தினை தேர்ந்தெடுந்து ,அங்கே இந்த பைரவ மந்திரங்களை சொல்ல அந்த இடம் முழுவதும் தூய்மைபெரும் .மேலும் அங்கே ஒரு அமைதி நிலவும் ,தினந்தோறும் சொல்ல சொல்ல அந்த இடம் முழுவதும் நல்ல உரு ஏற்றப்பட்டு ஒரு சக்தியுள்ள இடமாகவே மாறும் .நாள் தோறும் சொல்ல சொல்ல அங்கே உள்ள அமைதியும் சக்தியும் அதிகரித்துக்கொண்டே இருக்கும் .இந்த அமைதியை தூரத்திலிருந்தே உணரலாம் .இங்கே கொடுக்கபட்டுள்ள பைரவ மந்திரத்திற்கும் சூட்சுமத்திற்கும் தொடர்புஉள்ளது .ஒரு இடம் இது போல நல்ல உரு பெற்றுவிட்டால் ,மிக அற்புதமான இடமாக மாறும் .நம்மால்  வெறும் காற்றினை மட்டுமே அங்கு உணரமுடிகிறது .இன்னும் இந்த மந்திர வலிமை அதிகமாக ,அங்குள்ள இடத்தில் உள்ள செல்கள் எல்லாம் கணீர் கணீரென்று அதிரும் .Crystal clear என்பது போல இருக்கும். நன்றாக ஒவ்வொரு சொல்லும் அதற்குரிய அதிர்வில் மிக சரியான அலைகளை பிரபஞ்சத்திலிருந்து ஈர்த்து இங்கே அழகிய அலைகளை நிரப்பிவிடும்.தூயஒளி போல பளிச்சென்று இருக்கும் .இனி இங்கே நடக்கபோகும் ஒரு அலைஇயக்கம் மிக புனிதமானதாகவே இருக்கும் .இனி இங்கே அமர்ந்து தியானம் செய்பவர் யாராகினும் அவர்  ஒரு அமைதியை கண்டிப்பாக உணர்ந்தே ஆகவேண்டும் .மகான்களின் அலைகளை இங்கே மிக நன்றாக பிரித்துணரலாம் .மகான்களை ஈர்க்கும் ஒரு இடம் என்றே யாம் சொல்வோம் .இந்த அலைகளை தேடி  மகான்கள் வருவார்கள்.

ஓரிரு முறை சொல்வது என்பது நுனிப்புல் மேய்வதற்கு சமம் .ஓரிருமுறை சொல்வதால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை .தந்தையின் கூற்று படி  எந்த ஒரு ஸ்லோகமும்  அதன்  முழு தன்மையை அறிய வேண்டுமாயின் குறைந்தது ஒரு லட்சம் முறையாவது சொல்லவேண்டும் .அப்பொழுது தான்
அதன் ஆற்றல் செயல்பட தொடங்கும்.ஒரு லட்சத்தையும் ஒரே தொடர்ச்சியில் சொல்வதென்பது இக்காலத்தில் கொஞ்சம் சிரமம்.ஆகையால்
ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களில் இந்த எண்ணிக்கையை கொண்டு  வந்துவிடலாம் .


இதுபோல பல பீஜங்களை வைத்து கோர்வையாக்கி இறை ஆற்றலை கடல் போல் எங்கெங்கும் பரவச்செய்தார்கள்.அப்படி  ஒரு மந்திரம் இங்கே உள்ள ஸ்ரீ மகா பைரவ காயத்ரி .மிகுந்த சக்தியுடையது .குறிப்பாக யாரெல்லாம் சூட்சும சக்தி பற்றி அறிய வேண்டுமென்ற  ஆர்வம் கொண்டிருக்கிறார்களோ  ,அவர்களுக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம் இந்த ஸ்ரீ மகா பைரவகாயத்ரி

ஓம் ஸ்வாந ப்ரஜாயே வித்மகே சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ பைரவ ப்ரசோதயாத் ஸ்வாஹா ஒரு தேய்பிறை அஷ்டமியில் இந்த மந்திரத்தை உச்சரிக்க தொடங்கலாம் .முதலில் முடிந்தவரை சொல்லலாம் ,பிறகு போக போக 108,504,1008..என்று எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.ஒரு அதிகாலை வேளையில் வெண்ணிற உடையணிந்து , வெறும் வயிற்றில் சொல்லதொடுங்குவது நல்லது .
முடிந்தவர்கள் ஒரு அக்னிகுண்டம் ஒன்று செய்து அதிலே அத்தி ,அரசு,ஆல் ,நெல்லி  இவைகளில் எந்தெந்த குச்சிகள் கிடைக்குமோ ,அதனை  போட்டு , பசு நெய் விட்டு ,அக்னி  வளர்த்து ,இந்த மந்திரத்தினை சொல்லவேண்டும்.பசு நெய்யை இந்த அக்னியில் சேர்ப்பதால் ,இரண்டும் வெப்பத்தில் ஒரு வேதியல் மாற்றமாகி ,அதனை சுற்றி உள்ள இடம் முழுவதும் நச்சு நீக்கி ,ஒரு தெய்வீக நறுமணத்தினை ஏற்படுத்தும்.

ஒரு உட்காரும் மரப்பலகையில் இருந்து  மந்திரம் சொல்வது மிக அவசியம் ,அப்போது தான் கிரகிக்கும் சக்தி நம்முடனேயே  இருக்கும்,இல்லை என்றால் தரை வழியே பூமிக்கு போய்விடும்  . மந்திரம் சொல்லும் போது மனம்  விழிப்புடன் இருப்பது மிக அவசியம்.முதலில் கொஞ்சம் கடினமாகவே இருக்கும்.உச்சரிக்கும் மந்திரம் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக ,மந்திரத்தில் உள்ள ஒவ்வொரு சொல்லும் அதற்குறிய அலைகளை ஈர்த்து
இருக்கும் இடம் முழுவதும் மெல்ல மெல்ல பரவச்செய்யும் .அந்த  இடம் முழுவதும் ஒருவித சக்திமிக்க அலை filedஐ உருவாக்கும் .பிறகு உச்சரிக்கும் ஒவ்வொரு சொல்லும் ,ஒவ்வொரு பீஜமும் , crispy crystal ஆக இருக்கும் .அதாவது ஒரு ஆயிரம் ஸ்படிகங்களை உருட்டிவிட்டால் எவ்வாறு இருக்குமோ ,அது போல ,நீங்கள் சொல்லும் ஒவ்வொரு மந்திர சொல்லும் உருண்டு ஓடும் .ஒவ்வொரு வார்த்தையும் கணீர் கணீரென்று அதிரும் .இது  தான் சரியான  பதம்.அப்படி ஒரு பதத்தினை உருவாக்க வேண்டும்.இங்கிருந்துதான் அடுத்த படிநிலை  உருவாகும்.உடலில் ,மூளையில் எத்தனையோ வருடமாக   திறக்கப்படாத செல்கள் எல்லாம்,திறந்து செயல் பட ஆரம்பிக்கும்.   இப்படி ஒரு field உருவாகிவிட்டால் ,பிறகு சொல்லும் எந்தஒரு ஸ்லோகத்தையும்  மிக எளிதாக சொல்லமுடியும் ,மேலும் ஒவ்வொரு ஸ்லோகமும் அட்சர சுத்தமாக  அது தானாகவே  வார்த்தைகளாக வந்து விழும் .இது போன்று சிறு சிறு  மாற்றங்களை விழிப்புடன் உணரவேண்டும் .எத்தனை ஆயிரம் முறை வேண்டுமானாலும் சொல்லலாம் ,அப்படியொரு தகுதியை ஏற்படுத்திகொடுக்கும் .அதன் பிறகு அங்கே மந்திரத்தை உச்சரிக்க,உச்சரிக்க மிகுந்த சக்தியை அங்குள்ள  இடம் முழுவதும் நிரப்பும் .பிறகு அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அருகில்  இருக்கும் இடமெல்லாம் பரவும் .இந்த அலைகள் உள்ள எந்த இடமானாலும் அங்கே அமைதி கரை புரண்டோடும் .அழகிய சாத்வீக  அலைகள் ,அமைதியையும் ,ஆனந்தத்தையும் தரும் சக்திமிக்க அலைகள் .கோவிலுக்கு சமமானது .ஒரு தெருவிற்கு ஒருவர் இந்த யாகம் செய்தால் போதும் , அந்த தெரு  முழுவதும்  அமைதி பெரும்,இயற்கை சீற்றமெல்லாம் குறையும் ,அங்குள்ளவர்கள் அமைதியை மிக நன்றாக உணர முடியும் .என் அனுபவத்தில்  ஒரு 500 முறை பைரவர் ஸ்லோகம் சொல்வது ,ஒரு சக்திமிக்க அலைகளை நாம இருக்கும் இடம் முழுவதும் நிரப்பும் .பிறகு அங்குள்ள அமைதியில் அமிழ்ந்து அமிழ்ந்து லயித்திருக்கலாம் .அப்படி லயித்திருக்கும்பொது நம் உடம்பில் உள்ள சூட்சும அலைகளை மிக நன்றாக உணரலாம்.சூட்சும அலைகளை உணரதெரிந்தால் ,மகான்களின் அருள்ஆசி உணரலாம். ஒரு மிதமான  வெது வெதுப்பான ஆற்றலை உணரலாம்.மேலும் இந்த யாகம் செய்துபார்த்தால் தான் அதன் தன்மை ,பலன்கள் புரியும்.!

 ஒரு முறை காலிலே ஒரு துயர்மிக்க வலி ஏற்பட்டது.கால்களில் உள்ள நரம்பின் செயல்பாடுகள் குறித்து அலோபதி  டாக்டரிடம் பரிசீலனை செய்த காலம் .இருப்பினும் வேதனை அளவுக்கு அதிகமாக இருந்தது.என்னசெய்வதென்று தெரியவில்லை.தந்தையிடம் பிராத்தனை செய்தேன் .ஆனால் தந்தையை  நினைத்த நேரத்தில் எப்படி பார்ப்பது ? தந்தை எப்பொழுது தன் கருணையை அருள்வார் என்று காத்துக்கொன்டிருந்தேன்.பல மணி நேரம் ஆகலாம் அல்லது பல நாட்கள் ஆகலாம் அல்லது பல வருடங்கள் கூட ஆகலாம்.யார் அறிவார் தந்தையின் திருஉள்ளம்! 
ஸ்ரீ மஹா பைரவர் யாகம் செய்த நேரம்.ஸ்ரீ பைரவர் கோவிலுக்கு செல்லலாம் என்ற எண்ணம் உதயமாகி  செயல்பட ஆரம்பித்தது .மிக பழமையான பைரவர் கோவில் .மிக அழகான கோவில்.நிறைவான தரிசனம் .பைரவர் சன்னதி சென்று வணங்கி ,கோவில் பிரகாராம் சுற்றி ,கோவில் கொடிமர அருகில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து எழுந்தேன்.

ஒரு  ஐம்பது வயது மதிக்கதக்க ஒரு பெரியவர் எனக்கு பின்புறமாக மிக மெலிதான குரலில் ஏதோ சொல்லிவிட்டு  எனக்கு முன்புறமாக சென்று விட்டார் .அவர் என்ன சொன்னார் என்று புரியவில்லை.அவர் என்னிடம் வேண்டுகோளும் வைக்கவில்லை ,இதை செய் என்று ஆனையாகவும் சொல்லவில்லை ,ஏதோ ஒன்று சொன்னது போல் இருந்தது .இதனை நான் கவனிக்காமலும் போயிருந்திருக்கலாம் .அந்த பெரியவர் உருவம் மற்றும் ஞாபகம் இருக்கிறது .ஆனால் சரியாக பார்க்கவில்லை .நன்றாக வெள்ளைநிற தாடி ,வெண்ணிற வேஷ்டி ,யாரோ இந்த கோவிலில் வேலை செய்யும் அர்ச்சகர் என்றே நினைத்தேன்.ஆதலால் அதிகமாக கவனிக்கவில்லை . சிறிதே சுதாரித்து என்னவாக இருக்கும்  என்று  எண்ணி ,சற்று recall செய்து பார்த்தேன் . ஏதோ அங்கே சென்று உதவி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் சுழன்று கொண்டேயிருந்தது .இவை எல்லாம் நடந்தது ஒரு சில நொடிகளே . அதன் பிறகு அந்த பெரியவர்  எங்கு சென்றார் என்று தெரியவில்லை .
என்னவாக இருக்கும் என்று சிறிதே  பின்னோக்கி பார்த்தேன்.அங்கே இருவர் உற்சவர் சிலையை தூக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தனர்.என்னவென்று புரிந்துவிட்டது .உடனே என் நண்பரை அழைத்துக்கொண்டு வேகமாக சென்றேன் .அன்று தேய்பிறை அஷ்டமி ஆதலால் ,சற்று முன்னர் தான் உற்சவர் சிலையை கோவில் ஊர்வலமாக  எடுத்துச் சென்றுவிட்டு ,கோவிலின் உள்ளே இறக்கிவைத்திருக்கின்றனர்.பிறகு அந்த சிலையை  அங்கிருந்து அதன் மூல இருப்பிடத்திற்கு செல்வதற்கான ஆயத்தம் நடந்துகொண்டிருந்தது .
 ஆகா....! பைரவரின் சிலையை தூக்குவதற்கு  கொடுத்துவைத்திருக்க வேண்டுமல்லவா ? ஏன் அந்த பெரியவர்  இதனை சூசகமாக சொல்லி சென்றுவிட்டார் என்றே  எண்ணினேன் .அங்கே உடனே அவர்கள் இருவரும் சிலையின் தலைப்பாகம் பிடிக்க ,நானும் என் நண்பரும் சிலையின் கால் பாகம் பிடித்தோம் .என் இரு கைகளால் பைரவரின் கால்களை பிடித்தேன் .பார்ப்பதற்கு ஒரளவுக்கு  சிறிய சிலையாக இருந்தாலும் ,நான்கு ஆட்கள்  சேர்ந்து தூக்கினாலும் மிகப்பழுவாக இருந்தது .அப்படி ஒரு எடையுடன் செய்திருக்கிறார்கள்.மிக அழகான பைரவர் சிலை ,சிரிக்கும் முகத்துடன் பைரவர் ,அழகான வடிவமைப்பு.பிறகு ஒரு வழியாக நாங்கள் உற்சவரின் இருப்பிடத்தில் பைரவர் சிலையை வைத்தோம் .

இரு கைகளால் ஆத்மார்த்தமாக வணங்கி ,சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து ,வந்த    நுழைவாயில் வழியாக  கோவில் வெளியே வந்துகொண்டிருந்தேன்.
இந்த நிகழ்வில் என் கால் வலியை  மறந்துவிட்டேன் .எந்த கணத்தில் பைரவரின் பாதங்களை  தொட்டேனோ அக்கணத்தில் ஒரு மின்சாரம் உடலில் பாய்ந்ததை நன்கு உணர்ந்தேன் ,ஒரு வித்தியாசமான உணர்வு என்றே சொல்வேன் .என் கால் வலி பாதியாக குறைந்துவிட்டது .எப்படி இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகிறது?எப்படி இவையெல்லாம் சாத்தியமாகிறது ?என்று எண்ணிக்கொண்டே   நடந்தேன்.
 அதன் வெளிப்புரகாரம் வழியாக நடந்து கொண்டிருந்தேன்.

 ஏர்அழிஞ்சில் என்னும் ஒரு அதியச மரம் இங்கேயுள்ளது .இதன் சிறப்பு என்னவென்றால் இந்த மரத்திலிருந்து விழும் பழங்கள்  மண்ணில் விழுந்தபின்பு ,அதன் பழத்திலிருந்து  கொட்டைகள் அதுவாகவே தாவி இந்த மரத்தில் ஒட்டிவிடுமாம் .அவ்வாறு பல நூறு விதைகள் இந்த மரத்தண்டில் ஒட்டியுள்ளது .மிக சிறந்த மூலிகை மரம்  என்கிறார்கள் .


 சிறிது நேரம் அந்த மரத்தில் கையை வைத்து வியந்தேன் .எத்தனை காந்த ஆற்றல் தன்னுள் இருந்தால் இந்த மரம் தன் விதைகளை இப்படி ஈர்த்துக்கொள்ளும்.வியப்பாகவே இருந்தது .சூட்சுமங்கள் நிறைந்த பழம்பெரும் கோயில் .எத்தனை கோடி மக்கள் வந்தாலும் ,வந்தவர் ஒருவர் விடாமல் ,ஒவ்வொருவருக்கும் தன் தும்பிக்கையால் அருளும் ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயில்  பிள்ளையார் பட்டி அதன் அருகிலே இந்த பழம்பெரும் வயிரவன்கோவில் உள்ளது .ஒரு முறை சென்று இங்குள்ள சூட்சுமங்களை உணருங்கள்.


  அன்றைய நாட்பொழுது என்னமோ எனக்கு மிக சுகமாகவும், ஒரு இதமாகவும் இருந்தது .ஆனால் என் எண்ணமெல்லாம் " யார் அந்த பெரியவர்!".மீண்டும் அதே கோவிலுக்கு  சென்றேன் பலமுறை ,அந்த பெரியவரை காணவேண்டும் என்ற ஆவலோடு ,ஆனால் அங்கே அவர் மட்டும் காணவில்லை ,மற்ற யாவும் இருந்தது .


ஒரு அமைதியான சூழலில் அமர்ந்தேன் ,நடந்த  நிகழ்வுகளை அசைபோட்டு எண்ணும்போது , ஒரு ஆழ்ந்த அமைதியும் ,நிறைவும்  மட்டுமே என் நெஞ்சினில் நீங்காத  நிலைகொண்டு ,என்னை ஒரு அமைதி நிலைக்கு அழைத்துச்சென்றது .எத்தனையோ முறை தொட்டும் தொடாமல் என்பார்களே அது போல தந்தையின் அருள் ஆசிகளை பல  வடிவங்களில் பல முறைஇழந்திருக்கிறேன் .அங்கே வந்த அந்த பெரியவர் ஒரு அமைதி அலைகளின் சாராம்சம் ,பார்க்க மிக சாதாரண ஒரு மனித வடிவம் ,அவர் சென்ற பின் யாம் உணர்ந்த சூட்சும அலைகளோ என்னவென்று உரைக்க இயலவில்லை . தாம் செய்யும் எத்தனையோ புனித வேலைகளை விட்டுவிட்டு ,எம் துயர் துடைக்க வந்தவர் .யாமோ  எம் சுய நலத்திற்காக அழைத்தோம் . ஆனால் அவரோ எத்தனை கருணை உள்ளம் கொண்டவர் !.இன்னும் எத்தனையோ உள்ளங்களின் கோரிக்கைகளை  நிறைவேற்ற சென்றுவிட்டார் .வெகு தூரத்திற்க்கு பிறகே  எமக்கு தெரிகிறது வந்தவர் ஒரு மாபெரும் மகான் ,மாபெரும் முனிவரென்று.தனக்கே உரிய ஒரு பணிவுடன்,கருணை வடிவுடன் ,ஒரு மிக மிக சாதரணமாக, தான் வந்த வழி ஒரு  அன்பு வழியென்றும் ,அதன் வழியே வரும் அன்பர்களுக்கு ஒரு கருணை பார்வை என்றும் அருள்வேன்.."  என்றே உணர்கிறேன் .
தந்தையின் அருள் ஆசிகளோடு இக்கட்டுரையை நிறைவு செய்து அன்பு உள்ளங்களை மீண்டும் ஒரு நிகழ்வில் சந்திகின்றேன்.
ஒம் அகத்தீஸ்வராய  நமக !

2 comments:

 1. ஒம் அகத்தீஸ்வராய நமக!
  nice sir
  www.srisairamacademy.blogspot.in

  ReplyDelete
 2. wow!!!..what a wonderful article..you have taken us a spiritual tour to pillaiyar patti..
  each time you write about one tree, which is very informative.Pl do write more about Sage AGASTHIYAR.
  Thank you

  ReplyDelete