Friday, January 18, 2013

நெஞ்சம் ஈர்த்த வேம்பு


கர்ம வினையின் செயல்பாடுகள் ,கால மாற்றத்திற்கேற்ப,கோள்கள் இடமாற, அதனதன் பூர்வ ஜென்ம புண்ணியங்களை,பாவங்களை எங்கெங்கு எவ்வாறு செயல் படுத்தமுடியுமோ அதனை  அவ்வாறே அச்சு பிறழாமல்  செயல் படுத்திவிடுகிறது.கர்ம பதிவிற்கேற்ப பலன்களை கொடுத்தே செல்கிறது.எதையும் விட்டுவைப்பதில்லை.புண்ணியங்களால் மனம் மகிழ்ச்சியடைகிறது .பாவங்களால் மனம் வேதனை அடைகிறது . இரண்டையும் சமமாக ஏற்றுகொள்பவன் ஞானி.மற்றவர்க்கு வேதனையிலிருந்து மீண்டுவெளிவர இங்கே ஒரு உதவி  தேவைப்படுகிறது.தெய்வீக அலைகள் ,மகான்களின் அருள் அலைகள் கர்மவினைகளுக்கு ஒரு விதிவிலக்கு .இந்த அருள் அலைகள்  எந்த அளவுக்கு செறிவு  உள்ளதோ   அதற்கு தக்கவாறு வினைபதிவுகளின் தாக்கத்தை  சற்று குறைவாக்கி மனதிற்கு ஒரு நிம்மதியையும் ஒரு மகிழ்ச்சியையும் அளிக்கிறது .

 தந்தையின் தெய்வீக அருள் தரிசனம் பெரும் முன் ,ஏனென்றால் இப்போது தந்தையின் அருள் அலையின் அரவணைப்பில் உள்ளேன். ஆதலால் எண்ணும் எண்ணமும் செய்யும் செயலும் தந்தையின் ஆட்சிபுலத்தில்.அகத்தியத்திற்கு முன் , பல ஆண்டுகளுக்கு முன் ,ஒரு நாள் ஒரு மிகபெரிய குழப்பம் என்  மனதில் ,எங்கு சென்றாலும் ஒரு  குழம்பிய தேவை இல்லாத அலைகளை என் மனது சுமந்தே சென்றது.கோள்கள் இடமாற்றம் ,கர்மவிணை  போன்ற பல காரணங்கள் இருக்கலாம் அல்லது  அன்றாட ஒரு மிக சாதாரமான நிகழ்வுகள்,செயல்களை  பெரிது என்று எண்ணி  மனதில் நானே என்னை இறுக்கிக்கொண்ட ஒரு குழப்பம்.ஏதோ ஒன்று ? குழப்பமான மனத்தால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை ,மனதை போட்டு ஆட்டிபடைத்தது .என்ன செய்வது என்று தெரியவில்லை , திருவண்ணாமலை  சேஷாத்ரி ஆஷ்ரமம் செல்லலாம் என்று முடிவு செய்தேன் .ஒரு மன சுமையோடுதான்  அங்கு  சென்றேன்.  ஜீவ சமாதி முன் நின்று சிறிதே தியானித்து
  "என் மன குழப்பம் தீர வழி தாருங்கள் "என்றேன்  அடுத்த வினாடியே "அட ....ச்சீ....வெளியே போடா.." என்ற பலத்த குரல்.இது ஒரு கர்ஜனை போல என்னை அதிர செய்தது. அடுத்த வினாடியே உடனே சன்னதி விட்டு மனது  படபடக்க மிக வேகமாக  வெளி வந்துவிட்டேன்.இந்த ஸ்தூல உடம்பில் எவ்வளவு சத்தம் வேண்டுமானாலும் தாங்கி கொள்ளலாம் ,ஆனால் சூட்சும உடம்பில் ஏற்படும் சப்த அதிர்வு, நாடி நரம்பெல்லாம் அதிரவைக்கிறது .ஏதோ செய்கிறது மனதை பிசைந்து. 

பிறகு சிறிது நேரம் கழித்து ஒருவாரு சரியாகி "ஏன் என்னை இவ்வாறு  வெளியே போகசொன்னார் ? என்ன தவறு செய்தேன் ? என்று சிந்தனை செய்தேன் ,என்ன  அதியசம் இப்போது அந்த மன குழப்பம் என்னிடம் இல்லை. மனம் காற்றை போல் பஞ்சாகி இலேசானது.கண்ணாடி போன்ற தூய நீர் போன்ற பளிச்சிடும் மனம்.நெடுந்தூரம் சுமைதூக்கி வருபவன் ,சுமையை இறக்கியவுடன் எத்தனை மகிழ்ச்சியடைவானோ ,அத்தனை மகிழ்ச்சி .உணர்ந்தேன் சேஷாத்ரி மகானின் மகிமையை ,  " அட ....ச்சீ......வெளியே போ .." என்று சொன்னது என்னை அல்ல.என்  மனதினுள் உள்ள குழப்பத்தை.மகானின் ஒரு கர்ஜனை அடுத்த நொடி குழப்பத்தை உடனே வெளித்தள்ளியது.எத்தனை ஆற்றல் எவ்வளவு வலிமை உடையவர் மகான் .பிறகு உடனே மீண்டும்  சென்றேன்.ஆனால் இப்போது மிக  தெளிவான மனநிலையில் என் உள்ளம்.

அங்கே மகான்  "கைகளை கன்னத்தில் வைத்தபடி... புன்னகை .!!" ..மாகானுகே உரிய புன்னகை  ..சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தேன் .என் கண்களில் அன்பின் பரிசளிப்பாகிய கண்ணீர்  .என்ன கைம்மாறு செய்வேன் ? தங்களுக்கு .என்றும் என்  நெஞ்சில் தூய அன்புடன்  நன்றி உள்ளவனாக இருப்பேன்.அருள் நிறைந்த இடம்.மாகனின் ஜீவ அலைகள் இன்றும் ,என்றும் நிறைந்த இடம்.ஒரு முறைசென்று பாருங்கள் உள்ளம் நிறைந்த அன்போடு.

சமீபத்தில் ஒரு வயதுமிக்க மூதாட்டியினை  பார்த்தேன்  கிட்டத்தட்ட  எண்பது வயது கடந்திருக்கும் ...முகத்தில் என்ன  ஒரு பளிச்சிடும் அமைதி ! என்ன ஒரு ஈர்ப்பு ..எப்படி இது சாத்தியம் இந்த வயதில் ..!?அந்த பாட்டியை பார்த்தால்  அனைவருக்கும் பிடிக்கும்.அன்பு எனும் ஒரு ஈர்ப்பு ,சக்திமிக்க ஒளி பொருந்திய கண்கள், ஒரு கருணையான அன்பான பார்வை.ஒரு வார்த்தையாவது பேசிவிடவேண்டும் என்று என் மனம் துள்ளிக்குதித்தது .
"எப்படி பாட்டி நீங்கள் தனிமையில் இங்கே  பல ஆண்டுகாலம் தவம் செய்தீர்கள் ? உங்களை  சந்தித்தது ஒரு சிலநிமிடமே ,ஆனால் உங்களை விட்டு பிரிய மனம் வரவில்லையே பாட்டி..?


"ஈசன் அருள் , இறைநிலையை மனம் நாடியது ,எல்லாம் அன்பானது... .." என்றார் .மிக சிறந்த மனிதர் நீங்கள் ,அன்புள்ளம் கொண்டவர்கள் நீங்கள்  ,தங்கள் அருளாசி என்றும்  வேண்டும் பாட்டி ...வாழ்க வளமுடன் ..!! என்று விடை பெற்றேன்.Hats Off ! You are really a great Soul !.பல ஆண்டு காலம் மலையிலே தவம் செய்தவர்.சித்தர்களையும் முனிவர்களையும் நேரில் பார்த்து ஆசிபெற்றவர்  என்று  பின்னர் தெரிந்துகொண்டேன்.


அன்பு  எனும் ஆற்றல் இல்லை எனில் இந்த உலகம் தறிகெட்டு, கெட்டு குட்டிச்சுவறாயிருக்கும்.இதற்கு ஒரு உருவம் இல்லை ,ஒரு வடிவமில்லை .ஒரு வகையான மெல்லிய அலை போன்றது.அன்புள்ள இதயத்திலிருந்து அலையாக.எங்கெல்லாம் அன்பு இருக்கிறதோ அங்கெல்லாம் அது தானாகவே ஒரு இணைப்பு ஏற்படுத்தி இணைத்துக்கொள்கிறது ,ஒரு வகையான ஈர்ப்பான இணைப்பு .இந்த அலையினை கடவுள் அனைத்திலும் பிசைந்து தான் அனுப்பி உள்ளார்.ஒவ்வொரு உயிர் உள்ளும் போதும் போதும் என்றும் சொல்லும் அன்பு  அளவுக்கு நிறைந்துள்ளது .ஒரு சிறிய அலையாக  அடர்ந்து படர்ந்து  மெல்லிய போர்வை போன்று சூழ்ந்துள்ளது.

எனக்கு ஒரு பழக்கம் உண்டு.ஒரு சில மரங்கள் என்னை வெகு விரைவில் ஈர்த்துவிடுகிறது ,அப்போது அதன் தோள்தட்டிக்கொடுத்து,
 அதன் பெருமையை பாராட்டுவேன்.
 "எவ்வளவு அழகான மரம் ,எத்தனை  அழகான வளர்ச்சி ,எத்தனை ஆண்டுகாலம் கிடைக்கும்  நீரையும் ,காற்றையும் ,மண்ணையும் வைத்து ஒளிச்சேர்க்கை செய்து  இலைகள் ,தண்டுகள் ,காம்புகள் ,உறுதி மிக்க கிளைகள் ,ஆழமான வேர்கள்  என தன்னுள் ,தன் விதையுனுள்  என்ன எழுதிவைக்கப்பட்டதோ (Fate layout ) ,அதனை அப்படியே செயலாக்கி இன்று இத்தனை பெரிய மரமாக ,என்றும் புத்துணர்ச்சியுடன் திகழ்கிறாயே ,ஏ மரமே நீ  வாழ்க ..!உன்னை படைத்த இறைவன் எத்தனை பெரியவன் .!எத்தனை திறமையானவன்  என் மனம்  நிறைந்த வாழ்த்துக்கள் !....
  என்று  வாழ்த்தி ,சிறிது நேரம் சிந்தனையில்  என்னையே மறந்துவிடுவேன் .ஒரு நாள் எனை ஈர்த்த ஒரு வேப்ப மரம் (Neem Tree )ஒன்றின் கீழ் அமர்ந்தேன்.மிக அழகான கிளைகள் ,ஓங்கி உயர்ந்து ,விரிந்து ,பரந்த மரம் .பல தலைமுறைகளை கண்ட மரம் .காற்றை உள்வாங்கி , உட்செலுத்தி ,சுத்தம் செய்து ,தன் வசீகரிக்கும் ஜீவ  சக்தியை அதனுடன் பிசைந்து ,சுழலும் காற்றிற்கேற்ப ,தன் மிகப்பெரிய கிளைகளில் உள்ள இலைகளின் வழியாக ,வாங்கிய காற்றினை ,காந்த அலையாக கசியவிட்டு ,தன்னை சுற்றி  எப்பொழுதுமே ஒரு  ஒரு வசீகரிக்கும் அலைஇயக்கத்துடன்,ஆற்றல் பெட்டகமாக ஒளி வீசிக்கொண்டிருந்தது .அதன் எழில் பார்த்து,அதன் தன்மையை பார்த்து ,வியந்து ,அதனுள் என்னை நான் இணைத்துக்கொண்டேன்.என்னுள் உள்ள அன்பும் ,அதனுள் உள்ள அன்பும் ஒரே கலவையானது .என்ன ஒரு ஈர்ப்பு .பிண்ணி பிணைந்த பாசம் ,வார்த்தைகள் இல்லை அதன் அன்பை கூறுவதற்கு.என்னை நான் காண்கிறேனா ?அல்லது மரத்தினை  காண்கிறேனா ? நான் தான் மரமா ? இல்லை மரம் தான் நானா ? மரத்திற்கே உரித்தான ஜீவ  அலைகள் ,என்னுள் எழும் அலையுடன் ஒன்றுகலப்பு .
என்னுள்  மரம் ,மரத்துள் நான் .என்னுள் உள்ள மரத்தின் இலைகளில் ,காம்புகளில் ,தண்டில் ,பூவில் ,கிளைகளில் அனைத்திலும் என் ஆன்மா .வேரிலிருந்து நுனி வரை எங்கும் வியாபித்திருக்கிறேன் .எப்படி சாத்தியம் இது ?!


என்ன ஒரு ஈர்க்கும் அரவணைப்பு ,தன் ஆற்றலினை , தன் செயலினை ,தன்  தன்னலமற்ற கடின உழைப்பினை ,ஒரு  மற்ற உயிர் உணரும் போது ,என்ன ஒரு மகிழ்ச்சி இந்த மரத்திற்கு.ஆழ்ந்தேன்....ஆழ்ந்தேன்.....ஆழ்ந்தேன் அதனுள் .சிறிதே  அயர்ந்தேன் ,என்னை மறந்தேன் .மரம் என்னுடன் பேச ஆரம்பித்துவிட்டது.எவ்வாறு இது சாத்தியம் ? என்னுள் நிகழ்ந்த மாற்றமே.
"இது காறும் யாம்  செய்த, செய்துகொண்டிருக்கும்  செயல் பார்த்து வியந்த மகனே ! பார் .. என் அணுக்கூட்டின் இயக்கத்தை பார் மகனே .! பார்! அன்பின் உருவமே நான் ,அன்பெனும் போதையிலே மயங்கி மருவி ஒரு சூட்சும புள்ளியிலிருந்து இன்று இத்தனை பெரிய விருட்சமாக.
என் நோக்கம் ,செயல் , எல்லாம் அன்பே . என்  மூலம் அன்பே ,அன்பெனும் சூட்சும மூல ஆற்றலுடன் என்றுமே ஒரு ஆழமான இணைப்பு , என்றுமே ஒரு ஆழமான  நீங்காத தொடர்பு ,ஆதலால்  என் கருவும்,வித்தும் ,செயலும்,முதலும் ,முடிவும் எல்லாம் அன்பே. யாம் செய்யும் செயல் யாவும் இறைவழியே .அன்பெனும் சூட்சுமஅலை சூழ்ந்துள்ளதால்  எல்லாம் முழுமையே (perfection ) .இங்கே எந்த இழப்பும் இல்லை."

ஒரு முழுமையான புத்துணர்ச்சி( Complete Recharge ).மின்னிடும் நுண்ணிய ஆற்றல் துகள்கள் ,அதனை சுற்றி ஒரு அழகான இதமான பளிச்சிடும் மிக மிக நுண்ணிய அலை.இந்த அலை யாரெல்லாம் தன்னருகே வருகிறார்களோ ,அவர்களுக்கெல்லாம் ஒரு auto scanning செய்து ,அவருள் உட்சென்று ,அங்கே எங்கெல்லாம் இடைவெளி உள்ளதோ ,அங்கெல்லாம் அது தானாகவே நிரப்பி தன் தன்மையை தன் ஆற்றலை செயல்படுத்த ஆரம்பிக்கின்றது .விளைவு  ஒரு முழுமையான புத்துணர்ச்சி,நச்சு நீக்கப்பட்ட சுவாசம் ,இருக்கும் வெற்று காற்றில் வேம்பின் சக்தியுள்ள ஆற்றல் கலப்பு.ஒவ்வொருவருக்கும் ஒரு வகையான அணுக்கூறு  ,ஒன்றோடு ஒன்று தொடர்புடைய அணுக்கூட்டம் , ஆக  அதற்கேற்ப  ஒரு அலைஇயக்கம் நம்மை சுற்றி .ஒரு சில நேரங்களில் இந்த கூட்டமைப்பின் காந்த ஓட்டம் சிதைந்துவிடுகிறது ,கோள்கள் இடமாற்றம் ,அன்றைய நாள் உண்ட  உணவு  ,கடின உடல் உழைப்பு ,தூக்கமின்மை போன்ற பல காரணங்கள் இருக்கலாம் .அதனால் ஆங்காங்கே இடைவெளி .இந்த இடைவெளி தான் பல்வேறு நோய்களின் ஆரம்பம் . சிதைந்த அணுக்களின் இடைவெளியை இந்த வேப்ப மர  இலைகள் அலைகள் தன் காந்த சக்தியால் சரிசெய்கிறது.ஒரு புத்துணர்ச்சியை ஊற்றுகிறது.என்னுடன்.சிறிது அதன் கொப்புகளை பிடுங்கி , உச்சி  முதல்  பாதம் வரை  இரண்டு மூன்று முறை தொட்டும் தொடாமல் வருடிஇருக்கிறேன் .என்ன ஒரு காந்த சக்தி அந்த இலைகளில், அப்படியே உடலில் உள்ள காந்த அலைகளோடு  ஏதோ செய்கிறது . தலையில் உள்ள அணுக்களோடு ஒன்று கலக்கிறது
மேலும் மரம் தொடர்கிறது ...
" மகனே !எத்தனை தலைமுறைகளை நான் பார்த்துள்ளேன் தெரியுமா ! எத்தனை குழந்தைகள் என் கிளைகளில் தொட்டில்கட்டி கண் அயர்ந்தார்கள் தெரியுமா !. என் கடன் பணிசெய்து கிடப்பதே .எத்தனை  மனிதர்கள்  வந்தாலும், அவர்களின் உடல் கூறில் உள்ள ,சிதைந்த காந்த ஓட்டத்தை  சரி செய்வேன்.விருப்பு வெறுப்பு  என்று பாரபட்சம் இல்லை.என் மூல காரணம் அன்பு.அன்பின் வழி  வந்த நான்,என்னுள் உள்ள அனைத்து சக்திகளையும் ,அனைத்து ஆற்றல்களையும் கொடுத்துகொண்டேதான்  இருப்பேன்.என் அனைத்து ஆற்றல்களின் ஒரு சாராம்சம் என் விதைகள் ,என்  முழுமையான xerox .அங்கெ என் layout ஒரு புள்ளி வடிவில். அதனை விரித்து விரித்து பார்   என் முழு உருவமும் தெரியும்.
அன்பால் பின்னி பினையப்பட்டது தான் என்  பணி .எவர் வரினும்  நான் வாரி வாரி வழங்கிக்கொண்டேதான்  இருப்பேன்.யாருக்காகவும் இல்லை என்று  என்  முகத்தினை சுழிப்பதுமில்லை ஒரு போதும் என்னால் இயலவில்லை என்றும்  சொன்னதுமில்லை .சமநேர்  நோக்கான பார்வைதான் என் பார்வை  .என்னை வெட்டினாலும் ,சுக்கு சுக்காக கிழித்து எரிந்தாலும் ,கிழித்தெரிந்த பாகத்திலிருந்தும் ,என் பணி  தொடர்ந்துகொண்டு தான் இருக்கும்.

என்னைப்பார் என் ஒவ்வொரு இயக்கமும் செயலும் மிக மிக துல்லியமானது .என் அடிமுதல் நுனி வரை , வேர் ,தண்டு ,பட்டை ,பூக்கள் ,கனிகள்,இலைகள் ,காம்புகள் என அனைத்தும் துல்லியம் ..துல்லியம்...முழுமை ,நிறைவு மட்டுமே என் எந்த ஒரு பாகத்திலும்.
என்னுள் என்ன எழுதிவைக்கப்பட்டதோ அது அச்சுபிறளாமல் அவ்வாறே நடந்தேறுகிறது . எல்லாம் அன்பெனும் போதை ,அன்பெனும் ஞானம் ,அன்பெனும் சூட்சுமம்,இது எப்பொழுது தொடங்கியது ,என்று முடியும் என்றெல்லாம் நான் அறியேன் .எங்கிருந்தோ எழும் அலையுடன் ஒரு தொடர்பு ,அதனால் என் பார்வையே எனதல்ல ,மயங்கிய மயக்கத்தில் என் தொனி இழந்து ,அன்பாலே உன்னை பார்க்கிறேன்.அன்பெனும் மூலத்தால் நீயும் வந்ததால் ,உன்னுள் உள்ள அன்பையும்  பார்க்கிறேன்.உன்னுள்ளும் இதே அன்பின் கலவைதான.


அன்பெனும் மூலம் நீ மறந்ததால் பார் !மகனே பார்! எத்தனை குழப்பம் !,எத்தனை பிணக்கு உன்னுள், அதனால் எத்தனை பிழையான முடிவுகள் .
 ஒரு சில செயல்கள்,ஒரு சில நிகழ்வுகள் பெரிது என்று எண்ணி, உன் உள்ளம் நிறைந்த அன்பை ,உன் அன்பின் உண்மை ஸ்வரூபத்தை  நீயே மறைத்துக்கொண்டாய். என்றுமே துள்ளிப்பொங்கும் உன் அன்பை மட்டும் உள்நோக்கி ,மற்றவைகளை பிரித்தெடுத்து  களை நீக்கி ,உண்மையின் மூலமான ,அன்பெனும் சூட்சும ஆற்றலை மட்டும் பார் .அன்பின் ஆழம் புரியும்.அன்பின் மூலம் தெரியும்.அன்பின் உணர்வு புரியும்.பிறகு பார் அன்பு  எனும் மலர் உன்னுள்  பூத்து குலுங்கும் ,நீ செல்லும் இடமெல்லாம் நறுமணம் வீசும் .நீ செய்யும் ஒவ்வொரு செயலும் எத்தனை அழகாய் மிளிரும்! .எத்தனை  அழகாய் ஈர்க்கும்.!எவ்வளவு அழகாய் நடந்தேறும்!.

என்னைப்பார் மகனே !என் சூத்திரம் (formulla ),அன்பு எனும் பாசம் மட்டுமே அன்பு  எனும் கருணை மட்டுமே ,அன்பு எனும் மூல ஆற்றல் மட்டுமே,அன்பு எனும் இறைவன்  மட்டுமே ,என்னை  யார்  இடர்  செயுனும் ,அன்பை தவிர வேற எதுவும் கொடுக்க போவதில்லை.என்னுள் உள்ள எந்த ஒரு பாகமும் அப்படித்தான்.என் பிரம்மாண்ட உருவம் அன்பினால் சுருங்கி  சூட்சுமமாக ஒரு புள்ளியில் என் பாசக்குழந்தைகளாகிய என் விதைகளில் .நான் கொடுத்த அன்பைபோல் பல நூறு மடங்கு சேவை செய்ய இன்னும் பல தலைமுறைகளுக்காக காத்துகிடக்கின்றன...."


உன் நிகழ்வை சொல்ல சொல்ல  ,மெல்ல மெல்ல என் இதயம் குளிர்கிறது மரமே!.என் உள்ளம் நெகிழ்கிறது மரமே !இப்போது நீ சொன்ன அன்பை தொடும் இடம் நோக்கி என்னுள் அதுவாகவே ...ஆழ்ந்து....ஆழ்ந்து.... நிறைவை நோக்கிய பயணம் . ஆழ்ந்து அகன்று எங்கும் விரிந்த அலை ..இது அலையா ! இல்லை இது தான் நிலையா ! எப்படி சொல்வது .எந்த வார்த்தையும் வைத்து இதன் நிலையை சொல்ல இயலவில்லையே.மிக பிரமாண்டமாய், மிக மிக பிரமாண்டமாய் விரிந்துள்ளதே ..விரிந்துகொண்டே இருக்கிறதே .என்ன தேவை இங்கே ! .பிரபஞ்ச பிரமாண்ட அலையுடன் இங்கே ஒரு மிக நுண்ணிய புள்ளியாக என் உருவம் .எத்தனை நாழிகையும் நொடிபொழுதாக சென்றதே!. யாரெல்லாம் இந்த பிரபஞ்ச மூல அலைகளுடன் தம்மை இணைத்துக்கொள்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் தேவை என்ற ஒன்று இங்கு இல்லையே.!.
ஒருவகையான குளுமையும் ,ஈர்ப்பும் நிறைந்த ,எதுவும் அற்ற ,எல்லாமும் ஆன ஒரு அலை ...!என்ன ஒரு அழகான நிசப்தம்  இங்கே !.
என்ன ஒரு ஆனந்தம் ..!என்ன  ஒரு அமைதி ..!என்ன இதன் பெயர் !என்ன இதன் உருவம்.! என்னே இதன் தன்மை ..! என்னே இதன் ப்ரமாண்டம் !
யார் இதன் மூல காரணம் .!என்னவென்று சொல்வேன் இதன் மகிமையை  !

நெஞ்சமெங்கும் குளுமை.நெஞ்சில் குளுமை நிறைந்ததால் ,மெல்ல மெல்ல கண்கள் கருணையை நோக்கி !என் உள்ளம் முழுவதும் ,என் உடல் முழுவதும் ,இருக்கும் இடம் முழுவதும் ,ஒரு கவர்ந்திழுக்கும் சூட்சும அலை விரிந்துகொண்டே இருக்கிறது மரமே !.என்னுள் மட்டும் தானா  ? இதோ என்னருகில் உள்ள மனிதர்கள் ஒரு இனம் புரியாத சந்தோஷத்தை உள்வாங்கி மகிழ்ச்சியுடன்,ஒரு ஆனந்தத்துடன் இருக்கும் காரணம் . என்ன ?.! இவை எல்லாம் உன் மூல அன்பெனும் ஆற்றல் தான் காரணமா ..! இது தான் ஆன்ம குளியலா !

எத்தனை இன்பம் !எத்தனை ஆனந்தம் !எத்தனை கருணை ..!
தந்தையே ...!இறைவனே ! என் இதயம் தொட்ட மரமே !எவ்வாறு உனக்கு நன்றி சொல்வேன்.உன் அன்பின் ஒரு சிறு துளி ,என்னுள் கலந்து ,என்னை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறதே.இதோ என் பயணம் ஆரம்பம் .இல்லை இல்லை ,அன்பெனும் பிரபஞ்ச சக்தியின் பயணத்தில் என்னையும்  இணைத்துவிட்டது.ஆழ்ந்தும் ,அமர்ந்தும்,மூழ்கியும்,நின்றும்,நிலைத்தும்,கிடந்தும் பரந்தும்,விரிந்தும்......!.எப்படி சொல்வேன் இங்குள்ள உணர்வை ...!கவர்ந்திழுக்கும் பிரபஞ்ச பேராற்றல்.அன்பால் அனைத்தையும் ஈர்த்துப்பிடித்துள்ளதே  .எல்லாம் சூட்சுமத்தின் பிடியில் ,எதுவும் இதைவிட்டு பிரியவில்லை .எல்லாம் இதனுள்ளே .அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு .மிக நெருங்கிய பாசம் ,அன்பு . அன்பெனும் ஆனந்தமழை !.
இதனால் தான் என் தந்தை என்றுமே கருணை வடிவமாக திகழ்கிறாறோ ?தந்தை அன்பின் ஆழம் ,அன்பெனும் ஞானம் ,உணர்த்தாவிட்டால் அற்ப பதராகல்லவா இருந்திருப்பேன்.?இன்று மீண்டும்இந்த மெல்லிய அலை இந்த அன்பு ஊற்றாகிய மரத்தால் என்னை  தொட்டுவிட்டதே.
என்றும் பொங்கிப்பெருகி ,தொடர்ந்துகொண்டே இருக்கும் ஒரு வற்றாத ஜீவ மெல்லிய அலை .இதற்கு ஒரு முடிவு என்று ஒன்று இல்லையே !இது  எங்கு செல்கிறது!இதன் தொடக்கம் என்ன ! முடிவு  என்ன ! இவைஎல்லாம் எள்ளளவும் மனித சிந்தனைக்கு எட்டாதவையே .தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது .
இப்படியே இருப்பது எத்தனை சுகம் .எத்தனை தெளிவு .கண்களில் ,முகத்தில் ,இதயத்தில் எத்தனை மாற்றம்,  எத்தனை மலர்ச்சி. யாரும் தர இயலாத  ஒரு அரவணைப்பு ,இது தான் கடவுளின் அலைகளா ? கண்ணில் படும் அனைத்து உயிர் உள்ளும்  நிறைந்துள்ளதே !

தந்தையே..!.கருணையின் வடிவமே ! தாங்கள் உணர்த்திய அன்பின் ஆழம் இங்கே தொடர்கிறது தந்தையே ..!எத்தனை முறை இந்த ஆன்ம குளியலில் என்னை  நனைத்தீர்கள்  தந்தையே... !  யார் தருவார் இந்த நெஞ்சில் நிலைக்கும் ஆனந்தம் !.அகத்தீசனே ..!  அன்பெனும் ஈசனே ..!  நாதமே !  ஜீவனே ! தந்தையே ..!

எத்தனை கோடி மகான்கள் இந்த புண்ணிய பூமியிலே !எம்  நெஞ்சம் ஈர்த்த மகான்கள் சிலரை நினைத்துப்பார்க்கிறேன்.அனைவரும் இங்கே அன்பெனும் அலை இயக்கத்தில்,ஒரே அலை இயக்கத்தில்.கருணையே வடிவானவர்கள் !அன்பும் கருணையும் நிறைந்தவர்கள்.மிக மிக  எளிமையானவர்கள்.

தந்தை அன்பே வடிவானவர்.அன்பின் ரூபம் .கருணையின் கடல்.தந்தையின் கண்கள் கருணையின் உச்சகட்டம். Tons of  Power on his holy eyes .பல கோடி டன் அன்பை ,கருணையை உள்ளடக்கிய   பார்வை .அன்பின் செறிவு மிகுதியால் ,கருணையின் செறிவு மிகுதியால்,  யாரும் ஒரு நொடி கூட பார்க்க இயலாது தந்தையை.A real powerful holy eyes .

எத்தனை மந்திரம் சொன்னாலும்  ,எத்தனை யாகம்செய்தாலும் ,எத்தனை  நாம ஜெபம் செய்தாலும்,தந்தையை அடைய ஒரு எளிய வழி
அன்பெனும் ஞானம் மட்டுமே.உள்ளம் நிறைந்த அன்பே தந்தையிடம் கொண்டு சேர்க்கும்.இங்கு தான் மனம் நிறைவடைகிறது.
அன்பு நிறைந்த மனதில்தான் ,அழுக்கில்லை,பதற்றமில்லை,பிணக்கில்லை,ஒளிமறைவில்லை
 தூய்மையானது ,தெளிவானது ,முழுமையானது அன்பின் இயல்பானது இந்த நிலையில் தான் , சரணாகதியும் உள்ளது.எங்கே சரணாகதி நிலை உருவாகுமோ, அங்கே,அதன் பின்னே இறைவனின் ஆட்சி  ஆரம்பம்.இங்கே இந்த ஒரு துளி அன்பின் ஏக்கம் ,தந்தையின் கோடான கோடி கருணை அலைகளை நோக்கி ஈர்க்கும் சக்தியுடையது. 

என்  வாழ்நாளில்  என்றுமே மறக்க முடியாத தருணம் "அந்த ஒரு துளி கருணை பார்வை" .கருணையும் அன்பும் நிறைந்ததால் தந்தையின் கண்களில் அன்பு ததும்பும் மெல்லிய நீருடன்  பிரபஞ்ச ஈசனுடன் ஒரு அருள் காதல் , ஒரு விட்டுபிரியாத பார்வை ,என்றும் நீக்கமற நிறைந்த ஒரு அன்பு பார்வை.அன்பு அலைகளின் பரிமாற்றம்.இறைவனின் அன்பிற்காக ஏங்கும் ஒரு பார்வை .இறைஅலைகளின் ஆற்றல்  பார்த்து வியந்த  ஒரு பார்வை.

 இன்று வரை என்னுள் என் இதயத்தின் மைய புள்ளியிலிருந்து  உயிர் மூச்சாக ,எப்பொழுது நினைத்தாலும் என்னுள் ஒரு ஜீவ அலையாக , அன்பு என்றால் என்ன என்று புரியவைத்த நிலையாக,என் ஆன்மாவை மகிழ்ச்சியில் ஆழ்த்திக்கொண்டேயிருக்கிறது.என்னே ஒரு சூட்சும வித்தை! .தந்தையின் கண்களை நினைத்தவுடன் என் கண்களில் கண்ணீர் .எம் தந்தை எங்கே ? நான் எங்கே ? எப்படி ஒரு சூட்சும இணைப்பு .ஒரு முறை தந்தையின் தரிசனம்  ஒவ்வொரு உணரும் உயிர்களின், ஒவ்வொரு செல்களிலும், உயிர் மூச்சு உள்ளவரை, பிண்ணிப்பிணைந்து  நிறைந்தே இருக்கும்.உணர்ந்தவர் மறந்தாலும் ,தந்தையின் ஜீவ அலைகள் என்றும் அதன்  தன்மையை ,நறுமணமாக வீசிக்கொண்டே இருக்கும்.
தந்தையின் கருணை அலைகள் அகத்தியம் இதழ் வாசிக்கும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும்  நிறைவையும் ,அன்பையும் வாரி வழங்கி ,என்றும் அருள் புரியட்டும் என  இக்கட்டுரையை  நிறைவு செய்து ,மீண்டும்  அன்பு உள்ளங்களை சந்திக்கின்றேன்.
ஒம் அகத்தீஸ்வராய நமக !

No comments:

Post a Comment