ஸ்ரீ கோரக்கர் தரிசனம்



சித்தர்களும் முனிவர்களும்  போற்றி வழிபட்ட தெய்வம் .சித்தர்கள் வேண்டியபடி,வேண்டிய அனைத்து  வரங்களையும் தந்து அருளியவள் இந்த தாய் . ஒவ்வொரு மனித உயிர் உள்ளும் நிறைந்திருப்பவள்.ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு கொடுப்பது போல , எக்காலத்தில் ,என்ன வேண்டுமோ அதை அறிந்து அருள் செய்பவள். அன்பும்  கருணையும் நிறைந்த குழந்தை வடிவான தாய்  ஸ்ரீ பாலதிரிபுரசுந்தரி பாதம்  போற்றி இக்கட்டுரையை சமர்ப்பிக்கின்றேன்



சதுரகிரி பயணம் ஒவ்வொரு முறையும்  ஒவ்வொரு அனுபவம்.சட்டை இன்றி வெறும் வேட்டியுடன் மட்டுமே என்  பயணம்.அப்பொழுது தான்,இந்த மூலிகை காற்று நன்கு உடல் மீது விழும். உலக வாழ்விலே ஈடுபட்டு, பல்வேறு நச்சு வாயுக்களே என் உடலில் மிச்சம்.மலை ஏற,ஏற, இவை எல்லாம் அழுத்தி,நன்கு  கசக்கி பிழியப்பட்டு ,நச்சு வாயுவெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுகிறது.எவ்வளவு அருமையான காற்று ..!  பயணம் செய்தால் மட்டுமே உணரமுடியும்.
என் குருநாதர் சொல்லுவார் "வருஷம் 365 நாளும் வேலை வேலை என்று கிழிச்சது போதும்,ஒரு நாள் எல்லாத்தையும் மூடிவைத்துவிட்டு,இயற்கையை இறைவனை ரசித்துப்பார், உணர்ந்துபார் "என்பார் .சத்தியமான உண்மை .

எத்தனையோ மூலிகை ,செடிகளும் கொடிகளும் மரங்களும் நன்கு சிலிர்த்து
அங்குள்ள இடத்தினை தூய்மை செய்துகொண்டே இருக்கிறது .
என்ன  ஒரு கொழு கொழு ஆரோக்கிய தன்மை! சுத்தமான நீரையும் ,காற்றையும் உண்டு ,தனக்கே உள்ள  ஒரு வகையான சிலிர்ப்பு தன்மையுடன் ,
தாவரங்கள். (A Real Beautiful Oxigen Factory ) ஒரு ஆழ்ந்த சுவாசம் ...!ஆஹா ..!
என்ன ஒரு புத்துணர்ச்சி ..!வேற எதுவும் தேவையில்லை இப்பொழுது எனக்கு.

மூலிகையினை பிரித்து அதன் பயன் அறியும் அறிவு எனக்கில்லை .ஆனால்
ஒட்டுமொத்தமாக அவை யாவும் ஒருவித அலையினை உருவாக்குகிறது.
அவை யாவும் தங்களை சுற்றி ஒரு அற்புத fieldஐ உருவாக்குகிறது.
அங்கே  நுழைபவர்க்கெல்லாம் ஒரு  வித வேதியல் மாற்றம்  உடலில். என்னுடைய வறட்சி செல்கள்எல்லாம் ,இப்போது வேண்டிய அளவு
புத்துணர்ச்சி "போதும் ... போதும்" என்று சொல்லும் அளவுக்கு ,அது தானாகவே பெறுகிறது (automatic  recharge).

நீண்டநாள்  எண்ணம்  எனக்கு ஒன்று உண்டு.எங்கேனும் தனியாக அதாவது மலையிலோ  அல்லது ஆழ்ந்த அமைதியான இயற்கையின் எழில்மிகு இடத்திலோ  உள்ள ஒரு சித்தர் சிலைக்கு,பால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்று."ஏன் இந்த எண்ணம் ?", "வெறும் பாலை ஒரு சிலையில் ஊற்றுவதால் என்ன விளைவு ?" என்றெல்லாம்  தெரியாது. இந்த எண்ணம் எனக்கு பிறந்தது என் தந்தை விதைத்த மூல விதை.மிக அழகாக கற்பனையில் நிறைவேறிவிட்டது .ஆனால் நடைமுறைக்கு வரவேண்டுமல்லவா ?,எண்ணம் பிறந்ததிற்கும்,நிறைவேறியதர்க்கும் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் இடைவெளி நீடித்தது.


சதுரகிரி மலையில் உள்ள கோரக்கர் குகை .அங்கே மிக அழகான கோரக்கர் சித்தர் சிலை.கோரக்கர் குகையோ ஒரு மலையின் பிளவில் உள்ளது.யாரும் நிற்கமுடியாது. மிக சிறிய இடைவெளி,அனைவருமே மிக வளைந்து  அமர மட்டுமேமுடியும்.எதிரே ஒரு மிகப்பெரிய மலை,யார் பார்த்தாலும் அவர் தன் கவனத்தினை ஈர்க்கும் ஒரு மலை ,ஆங்காங்கே   இங்கொன்றும் அங்கொன்றுமாக பசுமையான புற்கள்,தாவரங்கள்,மரங்கள்,செடிகள்,என மலை தொடர்கிறது.இந்தமலைக்கு ஏன் இப்படி ஒரு ஈர்ப்பு  என்று தெரியவில்லை ? ஏதோ ஒரு வெற்றிடம் உள்ளே (Hollow space ) இருந்து ,அனைத்தையும்  ஈர்ப்பது  போன்ற ஒரு பிரம்மை ,ஆனால் யாரும் மிக எளிதாக ஏறிவிட முடியாது.மிக அழகு.கொஞ்சநேரம் அமர்ந்து கண்ணை மூடி சிந்தித்தால் மனம் எங்கோ மிதக்கிறது .சூட்சும உடல் மிதக்கிறது (Immediate Soul floating ).ஆழ்ந்து இந்த இயற்கை அழகை சிந்திக்க,சிந்திக்க ,மலையில்  உள்ள பிளவு ,பிளவு போன்ற குகை ,ஒரு சில மிக அழகான கண்ணைகவரும்  மரம்,பசுமை புல்வெளி ,என ஒன்றன் பின் ஒன்றாக புலப்படுகிறது.

எளிதாக சொல்லவேண்டும் என்றால் ,தன் அகத்தே கொண்டுள்ள பல அரிய இரகசியங்களை ,தன்னுள்ளே கொண்டுள்ள ஆற்றலினை யாவருக்கும் அன்பினால் வாரி  வாரி வழங்கிக்கொண்டே இருக்கிறது.
ஆனால் இதை உணர, அனுபவிக்க  ஒரே ஒரு Qualification தேவை .
அன்பு  எனும் Qualification .தந்தை அகத்திய மாமுனிவர்  கற்பித்த
 "இது அன்பின் ஆழம்" ,இங்கு செயல்முறையானது .



அன்பினால் உருகி உருகி ,என் செருக்கு ஆணவம் ,நான் எனும் திமிர், இவை யாவும் அழிந்து போக போக, என்  மனம் கரைந்து....கரைந்து,இளகி....இளகி .... அன்பு  ஊற்று பெருக்கெடுக்க ஆரம்பிக்கிறது ..என் பார்வை அன்பானது.என் சிந்தனை அன்பானது ...எந்த  எதிர்பார்ப்பும் இல்லாத  பார்வையானது ...இந்த மலையும் அன்பானது ...இப்போ நானும் அன்பானேன்.எங்களுக்குள் Soul  பரிமாற்றம் ..எத்தனை விந்தை ..எத்தனை அமைதி ..எத்தனை பரிமாற்றம் ....கண்களில் அன்பின் வெளிப்பாடாகிய நீர்.... தந்தையே..!! என்னை அரவணைத்துக்கொள் ..!!ஒம்  அகத்தீஸ்வராய நமக ..! ..






நான் சென்றது ஒரு மழைக்காலம் என்றதால் என்னவோ ,மனிதர்கள் நடமாட்டம் மிக குறைவாகவே காணப்பட்டது .கோரக்கர் குகைக்கும் எதிர் உள்ள  மலைக்கும்  இடையே ஒரு பள்ளத்தாக்கு .அதில்  ஒரு நீரோடை, கோரக்க மகானின் சிலையின் முன்னே,தெள்ளிய நீரோடை தன பயணத்தினை ஒரு ஆர்ப்பரிப்போடு எங்கோ தொடர்ந்துகொண்டிருக்கிறது.நீரோடையின் சப்தத்தை தவிர வேற எந்த ஒரு சப்தமும் இல்லை."இதுவே சரியான இடம் ,இங்கு  நிறைவேற்ற  வேண்டியது தான்" என்று முடிவானது.  எப்படி எண்ணம் பிறந்ததோ அப்படியே  கோரக்க மகானின் சிலையில் பால் அபிஷேகம் செய்தேன்.ஒரு மகிழ்ச்சி.புனிதமான எண்ணங்கள் நடைமுறைக்கு வந்து, நிறைவேரும்போதெல்லாம் ,மனம் தூய்மைஅடைகிறது .ஏதோ ஒரு ஈர்ப்பான மகிழ்ச்சி .பிறகு சிறிதுநேரம்  அங்கே அமர்ந்து இயற்கை  எழிலை வியந்து ,என்  பயணத்தினை தொடர்ந்தேன் .கிட்டத்தட்ட ஓர் ஆண்டு கடந்துவிட்டது .



மனிதனாக பிறந்த காரணத்தினால் அன்றாட வாழ்க்கைக்கு  தயார்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது .பல்வேறு நிகழ்வுகள் ,பல்வேறு மனிதர்கள் ,பல வேறுபட்ட அலை இயக்கம்,இறுக்கமான,அடர்த்தியான  எண்ண செறிவு  உள்ள நகர வாழ்க்கை .வேறு வழி !? போட்டி  நிறைந்த உலகத்தில் பொருள் தேடும் போது இவை அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.இப்படி நாட்கள் சென்றன .


ஆனால் எப்படிப்பட்ட சூழ்நிலை வந்தாலும் மன ஆற்றல் விரயம்  ஏற்பட்டாலும் ,மகான்களின் ஒருதுளி அருட்பார்வை  இழந்த அனைத்தையும் சரிசெய்து,நிறைவையும் ,அமைதியையும் ஏற்படுத்துகிறது .மகான்கள் இந்த physical  உடலை,பெரிதுபடுத்துவதில்லை.Physical State ஒரு பாவம் .  ஏனென்றால் அது  ஒரு எல்லைக்கு அல்லது ஒரு வரம்புக்கு உட்பட்டது.ஆனால் சூட்சும உடலோ  எல்லையற்றது.ஒருவனுக்கு Physical  உடலில் வரும் நோயினை அல்லது  ஒரு நிகழ்வினை இந்த சூட்சும உடல் மூலமாக  வெகு முன்னரே மகான்கள்  அறிந்துகொள்கிறார்கள்.

சித்தர்களும் முனிவர்களும் மகான்களும் இந்த சூட்சும ஆற்றல் பற்றி நன்கு அறிந்தவர்கள்.உலகத்தில் எந்த மூலையில் உள்ள  ஒரு மனிதனின் அல்லது  உயிரின் தன்மையினை அறிந்துகொள்ளும் ஞானம்  உடையவர்கள் .சூட்சும உடலின் அலைநீளம் அதிகம். சூட்சும  உடலானது ஒரு வெண்பனிபோன்ற படலமாக  நம்மை எப்பொழுதும்  சுற்றியுள்ளது. உடலில் ,மனதில் உள்ள அதிர்வுகளின் மூல காரணம், இந்த சூட்சும உடல். இங்கு ஏற்படும் ஒரு அதிர்வு அதற்கு சரியான விளைவினை உடலில் மனதில் ஏற்படுத்துகிறது.உடலில் ஏற்படும் அதிர்வு வெகு முன்னதாகவே  சூட்சும உடலில் தெரிகிறது.கர்ம வினைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு சூட்சும உடம்புக்கும் ஓவ்வொரு வகையான பதிவு.சூட்சும உடலின் பதிவினை  வைத்து ,இவனுக்கு  இந்த காலகட்டத்தில்,இப்படி ஒரு நிகழ்வு அல்லது ஒரு விளைவு  நிகழும் என நன்கு அறிந்தவர்கள்.ஆக மனித Physical  உடம்பு  என்பது  சூட்சும உடம்பின் கட்டுபாட்டில் .எத்தனை அழகானாலும்,எத்தனை Physical வலிமை உடையதாக இருந்தாலும் ,அதை கட்டுபடுத்துவது சூட்சும உடம்பே. எனவே சித்தர்கள் முன் அனைவரும் சரணாகதியே (Surrender).வேறு வழியில்லை .



நான் தினந்தோறும் ஸ்ரீ மஹா பைரவர்  யாகம் செய்கிறேன்.ஒருநாள் அதற்காக தயார்செய்து கொண்டிருக்கும்போது ,என் குருநாதர்என்னை யாகம் செய்ய விடாமல் தடுத்து விட்டார்.என்  சூட்சும உடலில் ஒரு மிக சிறிய அழுத்தம் (touch ) ஒன்றை ஏற்படுத்திவிட்டார் .அவ்வளவுதான் , நான் என்  உடல் ஆற்றல்  அனைத்தையும் இழந்தேன்.உதவி  என்று அழைக்க கூட ஆற்றல் இல்லை.
சுத்தமாக கொஞ்சம் கூட ஆற்றல் இல்லை .பிறகு எவ்வாறு பைரவ மந்திரங்களை உச்சரிப்பது .பிறகு ஒருவாறு எழுந்து   அருகிலே உள்ள வேப்ப மரத்திற்கு  கீழே அமர்ந்தேன் .ஒரு சிறிய குழந்தை ஒன்று தான்  வைத்திருந்த  மிட்டாயை கொடுத்து "ம்ம் சாப்பிடு.." என்று சொல்லி ஓடிவிட்டது.மிட்டாயின் ஆற்றல் (energy),வெப்ப மரத்தின் ஆற்றல் இவை இரண்டும் கொஞ்சம் கொஞ்சமாக  என் உள்ளே சென்று ,ஆற்றல் இழப்பை  சரிசெய்தது.இழந்த ஆற்றலை பெற்று சிந்திக்க தொடங்கினேன் "ஏன் இவ்வாறு நிகழ்ந்தது என்று ?"

பார்த்த உடனே அல்லது நினைத்த உடனே இந்த சூட்சும உடல் அனைத்து உண்மையும் வெட்ட வெளிச்சமாக்கி விடுகிறது.நிறைவேறாத ஆசைகுப்பைகள்,எண்ண குமுறல்கள் ,மகிழ்ச்சியான  தருணம்,மனம் அடிபட்டு விழுந்த சோகமான தருணம்,இறை சிந்தனையால் நிறைநிலையான தருணம் என்று என பலவாறான அதிர்வுகள் அதனதன் பதிர்வுக்கேற்ப சூட்சுமத்திலே பதிந்து கிடக்கிறது.





சதுரகிரி மலையில் உள்ள கோரக்கர் குகை நோக்கி என் சூட்சும உடல் பயணம் செய்கிறது.என் உடல் பயணம்  செய்கிறது  என்று சொல்லுவதை விட,ஏதோ ஒன்று என்னை இழுக்கிறது என்று தான் சொல்வேன்.
அங்குள்ள கோரக்கர் மகானின் சிலையை மட்டுமே நான் இதுவரை  நேரில் பார்த்திருக்கிறேன். ஆக கோரக்கர் என்றால் ஒரு சிலைவடிவில் உள்ள ஒருவம் மட்டுமே என்று   என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது ."இங்கு உள்ள இடம் ஸ்ரீ கோரக்க மகானின் இடம் ஆயிற்றே" என்று அந்த சிலை வடிவத்தினையே நான் தேடுகிறேன்.ஆனால் தீடிரென்று ஒரு முனிவரின் தரிசனம் காண்கிறேன்.இங்கு  ஏதோ ஒரு சக்தியால் ஈர்த்து வரப்பட்டேன்,என்பதால் என்னவோ என்னால் எதுவும் செய்யமுடியவில்லை.நிறைநிலையான மனம் .எதையும் ஆழ்ந்து உணரும்தன்மை .ஒரு அமைதி,ஒரு தெளிவான மன அலையில் இருந்தேன்.உணர மட்டுமே முடிகிறது .

மிக அழகான முனிவர் .செந்நிறமான நிறம்."செந்நிறம் தந்தான் என்று  ஊதூது சங்கே ..." என்ற வள்ளலார் வரிகள் போல , காந்த செறிவினால் உருவான செந்நிறம்,தேஜஸ் உள்ள செந்நிறம், உடலிலே உள்ள ஒவ்வொரு செல்லும் ஒளி பிரகாசத்தினை உற்பத்திசெய்துகொண்டே  இருக்கிறது ,காவி வேஷ்டி,மேல் சட்டை எதுவும் இல்லை.ஒரு முனிவருக்கு உள்ள தோற்றம். பார்ப்பதிற்கு மிக ஜம்மென்று இருக்கிறார்.மிக ஆழ்ந்த நுட்பமான பார்வை . அந்த பார்வையின் அர்த்தங்களை எழுதஎனக்கு தகுதி இல்லை என்று தான் சொல்வேன்.என்ன  ஒரு பார்வை அது !.
ஒரு பார்வையின் அர்த்தம் கோடி கோடி,சூட்சும அலைகளை தட்டி எழுப்பி சிந்திக்க  வைக்கிறது.அந்த மாமுனிவரின் பார்வையிலே ஒரு அடர்த்தியான அலை,தான் செய்த பல நூறு ஆண்டுகள் செய்த தவத்தின் பயனாக  காந்த அலைகள், மிக  அடர்த்தியாக ஒரு மெல்லிய,அலை போன்று  அவரை சுற்றி இருப்பதை உணர்ந்தேன்.
அந்த மாமுனிவர் பார்வையிலே,உடலிலே  ஒருவித மிக நுண்ணிய காந்த அலைகள் எப்பொழுதும் உருவாகிக்கொண்டே இருக்கிறது . அது எக்காலத்தையும் கணிக்கும்(Guess)  ஒரு தன்மை உடையது  .அனைத்தும் அறிந்த நிறைவான, ஒரு அமைதியான ,ஆழமான, கூர்ந்து  நோக்கும் பார்வை. அது பார்வையா அல்லது ஒரு அலைதொடர்பா தெரியவில்லை. எவர் கண்ணில் பட்டாலும் அவர் உள்ளம்அமைதி பெரும்,நிறைவு பெரும் அப்படி ஒரு ஆற்றல் அவர் பார்வைக்கு.
அந்த முனிவரின் சூட்சுமமான மெல்லிய அலைகள்,அவர் பார்க்கும் பொருளெல்லாம், உயிர்களெல்லாம்  ஊடுறுவிக்கொண்டே இருக்கிறது .அது ஊடுறுவும் இடமெல்லாம் உள்ள பொருட்கள் ,உயிர்கள் மற்றும் அனைத்திலும்  ஒருவித மெல்லிய அலையினை நிரப்பிக்கொண்டே செல்கிறது.அதே மெல்லிய அலை என் மனதிலும்  ஊடுறுவி,என்னை அமைதி நிலைக்கு இழுத்துச்சென்றது.அந்த அலை "எதற்காக இவன் இங்கே அழைத்து வரப்பட்டான் ?" என்ற கேள்விக்கு விடை கூறியது .



என் ஆன்மாவை புனிதப்படுத்தியது .ஒரு அமைதியின் அரவணைப்பிலேயே என்னை இருக்கச்செய்தது. என்  மனதின் அலைசுழலின் வித்தியாசம் காண்கிறேன். எவ்வளவு ஒரு அமைதி .கடல் கரையோ எப்போதும்  அலைகளின் குமுறல், ஆனால் கடலின் மத்தியிலோ ஒரு மிகப்பெரிய அமைதி.இங்கே எப்பொழுதும் அமைதி ஆட்கொண்டுள்ளது .

எப்போதெல்லாம் மகான்களின்  தரிசனம் காண்கிறோமோ, அப்போதெல்லாம் ஒரு மெல்லிய அலை நம்  மனதை ஆட்கொள்கிறது.நாம்  செல்லும் இடமெல்லாம்,அந்த அருள் அலை நம்முடனேயே   பயணம் செய்கிறது.ஒரு அமைதியை விரித்து பரவச்செய்கிறது. மேலும் ஆழ்ந்து நினைத்தால் ஒரு தூக்கத்திற்கு அழைத்து செல்கிறது.விழிப்பை இழந்தால் தூக்கமாகிறது.விழிப்புடன் இருந்தால்அது ஒரு தவமாகிறது.மனதிற்கு ஒரு திடத்தினை,ஒரு நிறைவினை,ஒரு வலிமையினை,எதையும்  எதிர்கொள்ளும் ஒரு ஆற்றலினை,அனைத்தையும் ஏற்றதாழ்வற்ற சரிசமநிலையில் பார்க்கும் நிலையினை,ஆழ்ந்த  அமைதியினை கொடுக்கிறது.அதே மெல்லிய அலை இந்த அகத்தியம் படிக்கும் அனைத்து உள்ளங்களையும் தழுவிச்செல்லும் என நம்புகிறேன்.

"மீண்டும்  மகான்களின் தரிசனம் எப்பொழுது?" என்று தெரியாது.சித்தன் போக்கு சிவன் போக்கு.எல்லாம் அவர்களின் சித்தம்.ஒரு எறும்பு எப்படி இந்த உலகத்தினை கணிக்க முடியும் ?அல்லது  அது சுவைத்தது  மிக நுண்ணிய  ஒருதுளி இனிப்பில் உள்ள கோடியில் ஒரு  இம்மி அளவு.அவ்வளவு தான் என்  ஞானம்.சித்தர்கள்  கருணையின் கடல்.தந்தை அகத்திய மாமுனிவர் அன்றே உணர்த்திய  "அன்பின் ஆழம்" ஒரு அன்பு பாடம்,இது மிக எளிதான,முழுமையான வழி, சித்தர்களையும்  முனிவர்களையும் வணங்கி அவர்கள் அருளாசி பெறுவதற்கு.
என்னிடம் பல அன்பர்கள் எப்படி "இது அன்பின் ஆழம்" கட்டுரை எழுதினீர்கள் ? என்றார்கள்.எழுதவைக்க பட்டேன் அவ்வளவு தான் .வெறும் கருவி மட்டுமே நான், இயக்குவதும் மூல கருவும், என் தந்தை, அங்கே தந்தையின் மெல்லிய  அலை (Holy Wave ) பொக்கிஷம் போல புதைந்துள்ளது.நீர்,காற்று போல யாவருக்கும் பொது, யாவருக்கும்  பொருந்தும் .மீண்டும்  மீண்டும் அந்த மெல்லிய அலைகளை அசைபோட்டு,அனைத்து  உள்ளங்களுக்கும்  தந்தையின் மெல்லிய  அருள்அலை அமைதியையும் ஆனந்தத்தையும் நிறைவையும்,வழங்க வேண்டும் என்று தந்தையை வணங்கி , இக்கட்டுரையை நிறைவு செய்து, மீண்டும் ஒரு நிகழ்வில் உங்களை சந்திக்கின்றேன் .
 வாழ்க வளமுடன் !
ஒம் அகத்தீஸ்வராய  நமஹ !

Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்