தான்றில் மரமும் மகானும்


தான்றில் மரம் என்று ஒரு மரம் இருக்கிறது .உலகத்திலே மிக அரிதாக காணப்படும் மரங்களில் இதுவும் ஒன்று.மிக அழகான மரம் ,ஜிவ்வென்று ஓங்கி உயர்ந்து ,இளமையும் துள்ளலையும் தன்னகத்தே உள்டக்கி, வெப்பமான கோடையிலே மிக ரம்மியமாக ,தன்னருகே வருவோர்க்கெல்லாம் பல்வேறு வகையானஆற்றல்களை  வாரி வழங்கும், ஒரு மிக அற்புதமான மரம் .



தான்றில் மரத்திற்கும் சனி கோளுக்கும் (Saturn Planet) ஒரு மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது .இது சனி கிரகத்தின் அலைகளை அதிகமாக கிரகிக்கும் தன்மை உடையது .இவைகள் எல்லாம் தனக்கென்று எதையுமே வைத்துகொள்ளும் தன்மை இல்லை .தான் கிரகித்த ஆற்றலை மேலும் சுத்திகரித்து காற்றிலே கலந்து தன்னருகே வருவோர்க்கெல்லாம் வாரி வாரி வழங்கும் ஒரு வள்ளல் மரம் .



மாற்றமே வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் .....என்று திரு மாணிக்கவாசகர் அன்றே தன் ஞானக்கண்ணால் பார்த்திருக்கிறார். இறை என்ற அறிவே உலகத்தில் வெவ்வேறு மாறுதலுக்கு உட்படுத்த பட்டு பொருளாகவும் ,இடமாகவும் ,கோள்களாகவும் ,செடியாகவும் ,மரமாகவும் ,மனிதராகவும் மற்றும் அனைத்துமாகவும் மாறிக்கொண்டே இருக்கிறது .இந்த உலகத்தில் எது நிலையானது ? மாற்றம் மட்டுமே நிலையானது.இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொன்றும் ஒரு மாறுதலுக்கு உட்பட்டது .மாற்றத்திற்கேற்ப அதன் விளைவுகள் இனிமையாகவோ அல்லது சுமையாகவோ உள்ளது

கோள்கள் எல்லாம் சுற்றி கொண்டே இருக்கும் தன்மை உடையது ஆகையால் ஒருவன் பிறந்த போது கோள்கள் இருக்கும் நிலையை பொருத்து ,அவனுக்கு அந்தந்த கோள்கள் உடலிலே ,மனதிலே ஒரு வகையான மாற்றங்களை அவனுக்கு கொடுத்துகொண்டே இருக்கிறது .கோள்களின் அலை ஆற்றல் பற்றாகுறை இருக்கும் போது ,மனிதனுக்கு பாதிப்பு உடலிலோ உள்ளத்திலோ ஏற்படுத்துகின்றது.

யாருக்கேனும் சனி கிரகத்தின் பாதிப்பு இருக்கிறதென்றால் அதன் தாக்கத்தை குறைக்கும் தன்மை இதோ இந்த தான்றில் மரத்திற்கு உள்ளது.

இந்த மரத்தை முடிந்த வரை சுற்றி வரவேண்டும் (குறைந்தது 108 முறை ).அவ்வாறு இந்த மரத்தினை சுற்றி வரும் போது மரத்திற்கும் நமக்கும் ஒருவித இணைப்பு ஏற்படுகிறது .அந்த இணைப்பிலே தான்றில் மரம் தன் அற்புத ஆற்றலை அள்ளி வழங்கி ,இங்கே உள்ள ஆற்றல் பற்றாக்குறையை நிரப்புகிறது.மற்றும் பல்வேறு வகையான நம்மால் அறியமுடியாத ஆற்றல்களையெல்லாம் வாரி வழங்குகிறது.



புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தாண்டீஸ்வரம் என்னும் ஊரிலே மகான் சத்குரு சம்ஹாரமூர்த்தி தன் அருள் அலைகளை வாரி வழங்கிக்கொண்டிருகிறார்.மகான் ஒரு அன்னதானப்பிரியர் .இங்கு வரும் அன்பர்களுக்கெல்லாம் அன்னதானம் வழங்கிக்கொண்டிருகிறார்.

நான் தாண்டீஸ்வரதிற்கு ஓரிரு முறை சென்று வந்திருக்கிறேன்.அப்போது மகானின் அன்னதானத்திணை அருந்தியிருக்கிறேன்.ஒரு முறை என்னால் முடிந்த வரை இங்கே நாமும் அன்னதானம் செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணம் USA இல் உருவானது.மாதங்கள் சென்றன.பல்வேறு வேலைகள்.பல்வேறு மாற்றங்கள்.பிறகு இந்தியா வந்தேன்.

ஒரு நாள் நானும் என் நண்பரும் தாண்டீஸ்வரம் செல்ல புறப்பட தயாரானோம்.புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து அன்னவாசல் வழியாக தாண்டீஸ்வரம் செல்ல வேண்டும் .ஒரு வழியாக அன்னவாசல் வந்தோம்.அங்கு உள்ள ஒரு மளிகை கடையில் அன்ன தானத்திற்கு தேவையான பொருளை வாங்க வேண்டும் .நிறைய மளிகை கடைகள் இருந்தன.எந்த மளிகை கடையில் வாங்குவதென்று ஒரு சிறிய குழப்பம் .ஒரு சந்தில் உள்ள ஒரு மளிகை கடையை முடிவு செய்து ,அரிசி பருப்பு மற்றும் சமையலுக்கு தேவையான மளிகையை எடுக்கு மாறு சொன்னோம் .அந்த கடைக்காரரும் நாங்கள் சொல்லும் பொருளை எடுப்பதிலே தன் முழு கவனத்தினையும் ஈடுபடுதிக்கொண்டிருந்தார் .

அப்போது அங்கெ ஒரு காவி உடையில் ஒரு மனிதர் ,ஆங்காங்கே கொஞ்சம் தாடி ,ஒரு அசல் கிராமத்து மனித தோற்றம் அவரும் அங்கே மளிகை வாங்குவது போல தெரிகிறது.எனக்கு அறிமுகம் இல்லாத அன்பர் அவர்.

நான் நினைத்ததெல்லாம் இந்த மாளிகையினை வாங்கி தாண்டீஸ்வரம் சென்று மகானை வணங்கி அங்கே கொடுத்து விட்டு வந்து விடுவோம் .சாப்பாட்டுக்காக அங்கே காத்திருக்க வேண்டாம் . ஏனென்றால்
நேரம் அதிகமாகிவிடும் என்று.அறிமுகம் இல்லாத அன்பரிடம் நான் பேசுவதில்லை என் சுபாவம் அப்படி .ஆனால் என் நண்பரோ அதற்க்கு நேர்மாறானவர்.ஆனால் அன்று அவன் ஒரு வார்தைகூட பேசவில்லை ஏனென்று தெரியவில்லை.

ஏதோ நான் என்னை அறியாமல் ,அந்த காவி உடைஅணிந்த அன்பரிடம் அவர் என்னை பார்த்த உடனேயே ," நாங்கள் இந்த தாண்டீஸ்வரதிற்கு இந்த மாளிகையினை வாங்கிசெல்ல இருக்கிறோம்" என்றேன் .

உடனே "அவர் பருப்ப கட்டசொல்லும்போது அத தான் நான் நினச்சேன்.நாளை பரணி (பரணி நட்சத்திரம் அன்று மகான் சத்குரு சம்ஹாரமூர்த்தி அவதரித்த நாள் ஆகையால் மாதந்தோறும் வரும் பரணியில் மிக சிறப்பான அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறுமாம்) ,தாண்டீஸ்வரம் அன்னதானத்திற்கு திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு வரும் கூட்டத்தில் பாதி பேர் அங்கு வருவர்.நான் திருச்செந்தூர் செல்ல இருக்கிறேன் .அங்கேயும் நாளை அன்ன தானம் செய்ய இருக்கிறேன்.மேலும் தன் பேச்சை தொடர்ந்தார்......
 முடிவில் எல்லாத்தையும் வாங்கி சும்மா கொடுத்துவிட்டு வருவதுல ஒன்னும் மில்லை அங்கே இருந்து அன்னதானத்தில் கலந்து சாப்பிட்டு வரணும்.... "என்று தனக்கே உள்ள ஒரு தோரணையில் எதைபற்றியும் கவலைபடாமல் சொன்னார் .
\எனக்கு சுருக்கென்று இருந்தது.என்னது இது ? நான் நினைத்தது
எப்படி இவருக்கு தெரியும்.இப்படி மனதினை பிடித்து கிள்ளுவது போல சொல்லலாமா ?



இங்கே தான் என் மனதினை கவர்ந்தார் மகான் சத்குரு சம்ஹாரமூர்த்தி.அந்த நொடியிலிருந்து எங்களை அரவணைத்துஅன்பு மழையிலே நனைக்க வைத்து விட்டார்.அணைத்து வேலையும் அழகாக நடந்தது.


நண்பருக்கு பசி ,உடனே அங்குள்ள டீ கடையை அந்த மளிகை கடைக்காரர் அடையாளம் காட்ட.அங்கே அந்த டீக்கடை அன்பர் எங்களை வரவேற்று ஏதோ தெரிந்தவர் போல சுவையான டீயும் வடையும் தந்து உபசரித்தார். ஒரு சிறிய கூடம் ,அங்கே நீளமான ஒரு திண்டு கல் (இரண்டு கல்களின் மேல் ஒரு குறுக்காக ஒரு கல் ).அதிலே அமர்ந்து ,வடையும் டீயும் , இப்படி இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் ஒரு பழங்காலத்து திண்டு கல்லில் அமர்ந்து ரசிப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும் .இது போல் அமெரிக்காவில் கிடையாது.எல்லாம் அங்கே செயற்கையான அழகு.இங்கே எல்லாம் இயற்கை அழகு.

பிறகு தாண்டீஸ்வரம் சென்று அங்குள்ள அன்பரிடம் இதனை கொடுத்துவிட்டு , மனதினை ஈர்க்கும் தான்றில் மரத்தினை வலம் வந்து ,அங்கே அந்த தான்றில் மரத்தில்உள்ளே இருந்து தன் கருணை அலையை வீசும் மகான் சத்குரு சம்ஹாரமூர்த்தியை வணங்கினோம். பிறகு சன்னதிக்கு நேர் எதிருள்ள மூலையில் ஒரு மாமரம், அதற்கு அருகில் நாகலிங்க பூ மரம்,அதன் அருகே நாங்கள்அமர்ந்தோம்.மாமரத்தில் மாங்காய் கொத்துக்கொத்தாய் காய்த்து இருக்கிறது.நாகலிங்க பூ மரம் நாகலிங்க பூவாக பூத்துக்குலுங்கி நறுமனத்தினை வீசுகிறது.


ஒருவர் அமர்ந்து தியானம் செய்யும் அளவு தான்றில் மரத்தின் அடியிலே ஒரு பொந்து உள்ளது. மகான் தன் இரு கைகளையும் மேல் தூக்கி தலைக்கு மேல் பின்புறமாக கோர்த்து அமர்ந்த வண்ணம் இருக்கிறார்.மகானின் பார்வை கருணை பார்வை.மகானின் ஒரு புகைப்படம் மட்டும் அந்த தான்றில் மர பொந்திலே உள்ளது.



அங்கே அமர்ந்து, அங்கே நிலவும் ஒரு அமைதியை நோக்கி மனம் ஈர்க்கப்படுகிறது.தான்றில் மரத்தினை மையமாக வைத்து அங்குள்ள அனைத்து இடங்களிலும் அமைதி பரவிக்கொண்டே இருக்கிறது.தான்றில் மரத்தின் வேதியில் மாற்றமும்,கூடவே மாகனின் கருணை ஆற்றல் அலைகளும் அங்குள்ள பகுதிகளையெல்லாம் பரந்து, விரிந்து செல்கிறது.சும்மா ஓரிடத்தில் அமர்ந்து அமைதியை ரசிக்க தொடங்கினாலே,மகானின் கருணை ஆற்றலை உணரலாம் .நீண்ட நேரம் அமர்ந்து ரசித்துக்கொண்டிருந்தோம்.

நண்பர் சரி புறப்படலாம ? வீட்டில் உணவு ரெடியாகிவிட்டது.........என்று ஆரம்பித்தார்.இது போன்று பல முறை மகான்களின் சன்னதியில் ஏதோ ஒரு காரணத்தினால் ,மாகான்கள் தரும் அருளினை முழுமையாக அனுபவிக்காமல் பாதியிலே சென்று இருக்கிறேன்.இம்முறை அந்த காவிஉடை அணிந்த மனிதர் ,என் மனம் நன்றாக உணரும் வண்ணம் சொல்லிவிட்டார்


"...எல்லாத்தையும் வாங்கி சும்மா கொடுத்துவிட்டு வருவதுல ஒன்னும் மில்லை அங்கே இருந்து அன்னதானத்தில் கலந்து சாப்பிட்டு வரணும்.... " இது மீண்டும் மீண்டும் என்னை விழிக்க வைத்தது.பிறகு என் நண்பரை சமாதானம் செய்தேன் ,அன்னதானத்திலே கலந்து கொண்டு உணவு அருந்தினோம் .உணவிலே அங்கு வைத்த தக்காளி பச்சடி மிக பிரமாதமாக இருந்தது .அது போன்று ஒரு சுவையினை எந்த ஸ்டார் ஹோட்டலில் கூட சாப்பிடமுடியாது.அப்படி ஒரு சுவை ..

மகானுக்கு நன்றி கூறி விடை பெற்றோம்..

அன்றிரவு  என்வீட்டுக்கு வந்தேன் ..வீடெல்லாம் ஒரே வெள்ளம்.சரியான இடி மின்னலுடன் மற்றும் பலத்த காற்றுடன் மழையாம்.எவ்வளவுதான் கதவு ஜன்னல்களை மூடினாலும் ,மழை சாரல் வீட்டுள்ளே.

அனைத்தையும் துவட்டிக்கொண்டிருந்தார்கள் என் அன்னையார்.

ஏதோ ஒரு வகையில் என் வீட்டினை சுத்தம் செய்து ,மகான் இங்குள்ள தீய ஆற்றலை பலத்த காற்றுடன் கூடிய மழையால் விரட்டிஅடித்திருக்கிறார் என்றே உணர்ந்தேன்.



தாண்டீஸ்வரத்தில் அமைதி மிகபெரிய பனிபோர்த்திய இமய  மலைபோல் குவிந்து உள்ளது.அள்ள அள்ள குறையாத அமைதியும் ஆனந்தமும் நிறைந்திருக்கிறது.புதுக்கோட்டை மாவட்டம் வரும் அன்பர்கள் ,அன்னவாசல் வழியாக தாண்டீஸ்வரம் சென்று , மகான் சத்குரு சம்ஹாரமூர்த்தியை தரிசித்து,தான்றில் மர ஆற்றலையும் கிரகித்து ,அங்கே கொட்டிகிடக்கும் அமைதியையும் ஆனந்தத்தையும் அள்ளி, பருகி, அகம் மகிழலாம் .!!!



மீண்டும் விரைவில் உங்களை சந்திக்கிறேன் ..நன்றி ..!!

அன்புடன்
செந்தில்மாணிக்கம்

Comments

  1. Hello Uncle,

    I feel your feelings...

    S.Manikandan,
    Kuruvikkondanpatti.

    ReplyDelete
  2. hii.. Nice Post

    Thanks for sharing

    For latest stills videos visit ..

    Celeb Saree

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

மெய்கண்ட சித்தர் குகை - கன்னிவாடி