Saturday, June 12, 2010

இது கருணை மழை..!!
எனது அம்மா ஒருமுறை அகத்தியர் மகானின் தரிசனம் பெற்றார்கள்.அந்த பெரியவர் வந்து இங்கே இந்த இடத்தில் ,ஒரு நீண்ட ஜடா முடியுடன் ,ஒரு வேஷ்டிஉடன் இருந்தார்.நல்ல தேஜஸ் உள்ள முகம்.கருணை பார்வை .கையில் ஏதோ வைத்திருக்கிறார்.அது என்னவென்று தெரியவில்லை.ஒரு சில வினாடி ,அப்படி இங்கே அமர்ந்தார் என்றார்கள் .உடனே நான் "நீ ஏதாவது அவரிடம் ஏதும் கேள்வி கேட்டாயா ?"என்றேன்.
"என்னால் எதுவும் கேட்கவும் முடியவில்லை ,கேட்பதற்கும்  ஒன்றும் இல்லை அப்போது" என்றார்கள்.இந்த மகானின் தரிசனத்திற்கு காரணம் ,என் அம்மா தினந்தோறும் சொல்லும் "ஒம் அகத்தீஸ்வராய நமஹ!" என்னும் ஒரு மிக வலிமையான மந்திரத்தின் ஆற்றல் ஆகும்.


இதனை தொலைபேசியில் கேட்டு தெரிந்துகொண்டேன்.அவ்வளவுதான் ,பிறகு என் மனம் ஆழ்ந்து,மென்மையானது,இந்த நிகழ்வால் .பெரியவர் இப்படி இருந்தார் என்று சொன்ன உடனே,என் மனதுள்ளே ஒரு பிளாஷ் .அதனை என் மனம் நன்றாக இப்படிதான் இருந்திருப்பார் என்று உணர்ந்தது.


அலுவலக வேலை பார்த்து உலர்ந்து,வாடிய மனம் இதனை கேட்ட உடனே ,தன் பிடியிலிருந்து தளர்ந்தது.இறுக்க பிடியிலிருந்து மனதுள்ளே, ஒரு சிறு நீர்த்துளி ஆங்காங்கே உருவாகிறது .வறண்ட நிலத்தில் உள்ள தாவரங்கள்,எப்படி கார்கால மழை தன்மீது பட்டவுடன் ,ஒரு உணர்வு பெறுமோ அது போன்ற ஒரு உணர்வு. சிறிது சிறிதாக அமைதியை நோக்கி விரிகிறது,பசுமைக்கு திரும்புகிறது.


அது ஒரு வெண்மையான ஜில்லென்ற ஒரு சூட்சும அலை,அது அகத்தியமஹானின் கருணை.எங்கோ இந்த பிரபஞ்ச அணுக்களில் பதிந்த அந்த அலை .அந்த அலைநீளத்திற்கு ,இந்த மனம் சென்றடையும்போது,அது தன்னுடைய ,இயல்பை விரித்து ,அதனுள்ளே உள்ள ஆற்றலை வெளிப்படுத்துகிறது  .இந்த சூட்சும அலை விரிந்துகொண்டே  செல்கிறது ,என் மனம் கொஞ்சம்,கொஞ்சமாக ,அதில் கரைகிறது.
நான் என்ற வலு குறைகிறது,ஒரு அமைதி ,ஆனந்தம் ,நிசப்தம் சூழ்ந்துகொள்கிறது.
      
பலவேறு வகையான  கழிவு நிறைந்த மனஅலைகளை, தினப்பொழுதிலே ,அன்றாட நிகழ்வுகளிலே ,அதுதான் பெரிது என்று சேர்த்து வைத்திருந்த மனம், இப்பொழுது அதன் ஆற்றலை இழக்கிறது.நான் என்ற அகங்காரம் கொண்ட மனதிலே,பேரானந்தம் என்னும் கருணை மெல்ல ,மெல்ல இறங்குகிறது.கருணை இறங்கிய மனதிற்கும் ,சாதாரண மனதிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.சாதாரண மனம் அந்த சாதாரண ஆன்மாவில், அது இது வரை செய்துவந்த
கர்மத்தின் பதிவுகளே  தலை தூக்கி நிற்கின்றது.கர்மத்தின் பதிவிர்கேற்ப ,அது மற்றொரு மனிதரிடம் உரையாடும் போதோ அல்லது செயல்களை செய்யும் போதோ ,ஒருவித பிணக்கான,விளைவுகளையே உண்டாக்குகிறது.சில மனிதர்கள் யாருடன் பேசினாலும் சண்டையே போடுவர்,மன வெறுப்பே அடைவர் ,இவர்களிடம் கருணை ஆற்றல் இறங்கவில்லை என்றுதான் அர்த்தம்.ஆனால் கருணை இறங்கிய மனம், ஆன்மா மற்றொரு உயிருடன் உரையாடும் போது ,அங்கே அதில்  ஒரு அன்பின் அரவணைப்பு இருகின்றது .இந்த ஆன்மாவுக்கு என்ன வேண்டுமோ அதனை அந்த ஆன்மா கொடுத்து உதவ தயாராக இருகின்றது .இங்கே எந்தவித பிணக்கும் இல்லை .மாறாக ஒருவித ஈர்ப்பே அதிகம்.கருணையை உணரத்தெரிந்த மனம்,கருணையை ஈர்க்க தெரிந்த மனம் ,இவை எங்கு சென்றாலும் அங்கே அமைதியும் ,ஆனந்தமும் ,சாந்தமும்,நிறைவையும் நிறப்பி செல்லும்.அன்புபினைப்பே மிகும்.

ஆக மெல்ல உண்மையின் ஆற்றலை உணர தொடங்குகிறது என் மனம்.
என் மனம் மட்டும் அல்ல இங்கே என்னை சூழ்ந்த ,இந்த அறை,அருகில் உள்ள இடம்,இங்குள்ள தாவரம் ,செடி,புற்கள்  என்று சார்ந்துள்ள  அனைத்திலும்,இந்த பனித்துளி போன்று, ஒரு மெல்லிய அமைதியை மட்டுமே கொடுக்கும், அன்பை மட்டுமே வாரி வழங்கும்,காந்த அலை சூழ்கிறது.சூழ்ந்து அரவனைத்துக்கொள்கிறது.ஒரு ஆழமான பிணைப்பு .ஒரு தாய் எப்படி தன் குழந்தையை அரவனைத்துக்கொள்கிறாளோ அப்படி ஒரு அரவணைப்பு. ஒரு பசு எப்படி தன் கன்றை நாவால் தடவிக்கொடுத்து  அரவனைக்கின்றதோ , அப்படி ஒரு அரவணைப்பு. இந்த பிரபஞ்ச  பேராற்றலுக்கு  இங்குள்ள  அனைத்துமே தன் குழந்தைகள் தான்.அங்கு யார் வந்தாலும் இவை அதனுள் செல்லும் .
  எந்த பாரபட்சமும் இல்லை அதற்கு.எவர் வந்தாலும் அள்ளிகொடுக்கும் ஒரு வற்றாத ஜீவ நதி .என்ன ஒரு அழகான இறைவனின் கருணை !!


இந்த மெல்லிய அலை மேலும் ,மேலும் விரிகிறது ,மனதுள்ளே ஒரு பேரமைதி மேலும் மேலும் சூழ்ந்துகொள்கிறது.மனதுள்ளே பலவேறான ,கதவுகள் ஒன்றன்பின் ஒன்றாக  திறக்கப்பட்டு ,பேரண்ட வெளிக்குள் ,பிரபஞ்ச வெளிக்குள்,மனம் நீள்கிறது.நீண்டுகொண்டே செல்கிறது.

சற்றுமுன் உள்ள மனமா இது ? இவ்வளவு ஆற்றல் எங்கிருந்து வந்தது இதற்கு இப்போது ?வாடி உலர்ந்த மனதில் எங்கெங்கு நோக்கினும் ஆழ்ந்து விரிந்த நிசப்தமான அமைதி,அது எந்த பக்கம் விரிய நினைத்தாலும் விரியும்,விரிந்து செல்ல செல்ல ,எங்கெங்கும் வெளியே !ஆழ்ந்து அகன்ற வெளி ,நீண்டு நிறைந்த வெளி,பரந்து,படர்ந்த வெளி .ஊதும் காற்று நீண்டு பருத்து விரிவதுபோல விரிகிறது.  பரந்த வெளி  ஒரு எல்லை என்பதே கிடையாது அதற்கு .மனம் அடைந்த அமைதிக்கும் ,ஆனந்தத்திற்கும் எல்லையே இல்லை.

என் அன்னைக்கு தரிசனம்தந்த மகான் இப்படி இருந்தார் என்று ஒரே ஒரு வார்த்தை மட்டும் கேட்ட இந்தஆன்மா ,அதனை நன்கு ஆழமாக ஈர்த்து,அதன் அலைநீளத்தை எப்படியோ பிடித்து, அதிலே உறைந்தது .

மகானின் கண்களில் உள்ள கருணை பார்வையை ,நினைக்கும் போதுகூட,இந்த மானுட கண்கள் ஒரு சிறுவினாடி பொழுதுகூட பார்த்து, ஈடுகொடுக்க முடியவில்லை.கண்களில் இருந்து ,நீர் வந்துகொண்டே இருக்கிறது,நீண்ட நேரமாக அழுவதிர்க்கும்  ,ஒரு வகையான ஏக்கத்திற்கும் இடையே உள்ள ஒரு நிலைக்கு என்னை அழைத்து சென்றது.அழுதுகொண்டே இருக்க வேண்டுமா அல்லது அரவணைப்பின் ஏக்கத்திலே இருக்கவேண்டுமா,தெரியவில்லை .ஒரு அமைதியான ஆனந்தம்,ஒரு மெல்லிய காந்த அலை ,இந்த நெஞ்சின் மைய பகுதிக்குள் நுழைந்து ,நன்றாக தனது இடத்தை பிடித்து கொண்டது .

நெஞ்சின் மைய பகுதிக்கு மிக அருகிலே ,ஒரு நெல்  முனையின் அளவினும் சிறிதான,ஒருபுள்ளி உள்ளது.இதன் பெயர் சிதாகோசம் 
என்பார்கள்.எப்பொழுதெல்லாம் ,நாம் ஒரு நிறைவை அடைகின்றோமோ ,ஒரு மகிழ்ச்சியை ,ஒரு உள்ள அமைதியை உணர்கின்றோமோ, ஒரு ஜில்லென்ற ஒரு மன இன்பத்தை உணர்கின்றோமோ ,அப்போதெல்லாம் இந்த சிதாகோசம் ,activate  ஆக இருகின்றது என்று பொருள்.

மகான்களின் கருணை பார்வைபட்டாலே,இவை எல்லாம் அடுத்த வினாடியே இயக்கத்திற்கு வந்துவிடும்.இந்த மகானின் கருணை கண்களின் சூட்சும பார்வை என் சிதாகோசத்தை தொட்டு விட்டது .கருணை ஊற்றால் என் இதயம் நனைந்தது.நனைந்து கொண்டே இருந்தது.கண்கள் நீர் வழிந்து தனது நன்றியை சொல்லிக்கொண்டே இருந்தது.கருணையின் பிறப்பே..! அகத்தியமே..அகத்திய மாமுனியே ? உனது சிறுதுளி கருணை இந்த மானுட ஜென்மத்தை மேன்மையாக்கியது.மனம் வீழ்ந்தது,ஆணவம் வீழ்ந்தது,அகந்தை வீழ்ந்தது.அன்பு மலர்ந்தது.
இங்கே இப்போது எனக்கு உணவு தேவைஇல்லை,ஓய்வு தேவை இல்லை ,உறக்கம் தேவை இல்லை.எதுவும் அற்ற நிலை. என்னை சூழ்ந்த ஆற்றல் ,இந்த உடலுக்கு,உயிருக்கு,என்ன தேவையோ அதனை அதுவே வழங்கி சரிசெய்துகொள்கிறது. இந்த நிகழ்வுகள் மூன்று மணி நேரம் தொடர்ந்தது .இந்த மூன்று மணி நேரத்தில் எனக்கு எந்த ஒரு இடர்பாடும்  இல்லை.ஒரு சிறு சப்தம் கூட இல்லை.அந்த மணித்துளியில், என்னோட வேலை ,நான் பார்க்கவேண்டிய செயல் எல்லாம் இந்த கருணை ஆற்றல் தன் கட்டுப்பாட்டில்  எடுத்துக்கொண்டது . இவை எல்லாம் அந்த மகானின் கருணை ஆற்றலின் அற்புதம் .இந்த நிகழ்வுகள் நீண்டு கொண்டே செல்கிறது, சூட்சும உடல் நீண்டு பறக்கிறது.சதுகிரி மலை அது .அங்கே கல்,மரம்,செடி,கொடி அடர்ந்த வனம் .சதுரகிரின் எந்த பகுதி என்று தெரியவில்லை.அங்கே நான்கு மகான்கள் நின்று கொண்டிருகின்றனர் .அவர்கள் யார் ?,அவர்கள் பெயர் என்ன? என்றெல்லாம் உணர இந்த சிறிய தூசியால் முடியவில்லை. ஆசிர்வாதம் வேண்டி நான் எனது கையை அந்த மகானை நோக்கி தொட முயற்சி செய்கிறேன் .எனது ஒரு சிறு விரல் அங்கே தொட நினைக்கிறது .தொட்டேன்.தொட்டது தான் தெரியும் ,தொட்டவுடன் சட்டென்று மிக வேகமாக  எனது சூட்சும உடலின்  இரு கால்களும் மேலே , இரு கைகளும் கீழே,நான்  அந்தரத்தில். நான் தொட்டுக்கொண்டிருக்கும்   மகான்,இப்போது  சுந்தர மகாலிங்கமாக மாறுகிறது.ஆமாம் இப்போது லிங்க வடிவில் உள்ளது அது ஒரு Solid  stone  லிங்கம் அல்ல .ஒரு பொன்னிறமான சூட்சும அலைகளால் ஒருவான லிங்கம் .ஒரு சூட்சும வெற்றிட லிங்கம் அண்டசராசரமே ஒரு லிங்க வடிவில் காட்சி அளிக்கிறது .
சிறிது திரும்பி பார்க்கிறேன் ,பல கோடி  உயிர்கள், புல்,பூண்டு ,செடி,கொடி, தாவரங்கள்,அனைத்தும் அங்கே அந்தரத்தில் இந்த லிங்கத்தை மையமாக வைத்து,தொட,தொட்டுக்கொண்டு, மிதந்து கொண்டிருக்கிறது.பார்க்கவே மிக பிரமிப்பாக இருக்கிறது.நாம் வாழும் பூமி ,இங்கே இது மிகப்பெரிது  ,ஆனால் அங்கே அந்த சூட்சும லிங்கத்திற்குமுன் இது ஒரு தூசி .இந்த பூமியிலிருந்து  நாம் எதனை பார்த்தாலும் பூமியை மையமாக வைத்து தான் பார்க்கின்றோம் .ஆனால் அங்கே ,இந்த பூமி,இந்த சூரிய மண்டலம் எல்லாம், அந்த சூட்சும வெற்றிட லிங்கம் போன்ற உள்ள வெளியை மையமாக வைத்து,தொட்டுகொண்டிருகிறது .சூட்சும லிங்கம் அண்டசராசரத்தை தன்அகத்தே ஈர்த்துக்கொண்டிருக்கிறது.
அது மகாலிங்கம், அதிலிருந்து சுந்தரமகாலிங்கம் ...அங்கே அகத்தியர், மஹா அகத்தியர். அதிலிருந்து மகாலிங்கம். சுந்தர மகாலிங்கம்.

யாம்  தொட்டது அகத்திய மகான் ,அவருள்ளே சுந்தரமகாலிங்கம் ..சுந்தரமகாலிங்கம் என்பது ஆதி..பரப்பிரம்மம் ...அண்டசராசரத்தை உள் அடக்கியது .அங்கே முதலும் இல்லை ..முடிவும் இல்லை,பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை .தானே உருவாகி ,தானே தன்னை காத்து ,தானே தன்னை அழித்து,தானே அதுவாகிறது . எல்லாமே அதுவே.

சுந்தரமகாலிங்கம், அகத்திய மகான்  எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையவர்கள்.யாரையும் பிரிக்க முடியாது.அகத்தியம்,இது ஈசனின் அரவணைப்பு.அகத்தியர்,இவர் ஈசனின் அன்பு பிரியர்.அகத்தியம் தொட்டால் அங்கே ஈசனை தொடலாம். அகத்தீஸ்வரர்....அகத்தே ஈஸ்வரர் அவர் .ஈஸ்வரனை அகமாக கொண்டவர்.ஸ்ரீ மஹா அகத்தீஸ்வரர், உள்ளம் உருகி அன்பால் தன்னை தேடும் இதயங்களுக்கு ,அகம் மகிழ அரவணைக்க நிச்சயம்  வருவார்.
                              இது சத்தியம் !! உண்மை ..!! உண்மை ..!! உண்மை ..!!

            அகத்தியம் ...இது  அன்பின் ஆழம் ..!! அறிவின் ஞானம்..!!
                        பேரொளியின் இன்பம்..!! தலையாய முனிவனே .!!
             தவபுதல்வனே..!! மஹாஞாநியே ..!! மஹாஜோதியே ..!!
                         என் இறைவனே ..!! நீ அருள்கவே..!! நீ அருள்கவே ..!!
                        
மீண்டும் விரைவில் சந்திக்கிறேன்.....

வாழ்க வளமுடன்
செந்தில்மாணிக்கம்

1 comment:

  1. நீட்டான ஃபோட்டோஸ்.. தெளிவான லே அவுட்.. யதார்த்த எழுத்து நடை

    ReplyDelete